தேசத்தின் கண்கள் மகதம் நோக்கி..

Ashoka samrat
பேரரசர் அசோகர்

இந்திய அரசியல் வரலாற்றில் மகதம் பேரிடம் வகித்து வந்திருக்கிறது. நாட்டை ஒருங்கிணைத்த அரசியல் பேரரசு முதலில் அமைந்த இடம் மகதம். அதன் தலைநகரான பாடலிபுத்திரம் தான் பொதுயுகத்திற்கு முந்தைய 300 ஆண்டுகள் முன்னிருந்து சுமார்  ஆயிரம் ஆண்டுகளுக்கு பாரத தேசத்தின் அரசியல் மையமாக இருந்தது. அங்குதான் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் உருவானது.

அதுவெல்லாம் பழைய கதை. அன்றைய மகதம் தான் இன்றைய பிகார். இன்றைய அரசியலிலும் பிகார் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஆனால், குப்தப் பேரரசு, மௌரியப் பேரரசு உள்ளிட்ட மாபெரும் அரசுகள் உருவான கழனியான பிகார் இன்னமும் நோஞ்சான் மாநிலமாகத் தான் இருக்கிறது. நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பொருளாதார நிலை, கல்வி, சமூக விழிப்புணர்வு, அமைதியான வாழ்க்கை எனப் பல அம்சங்களிலும் பிகார் கடைக்கோடியில் இருக்கிறது.

இதற்கு அடிப்படைக் காரணம், அங்கு இதுவரை ஆட்சியில் இருந்த அரசுகளின் செயலற்ற தன்மை தான் எனில் மிகையில்லை. கல்வியறிவு வளர்ச்சியின்மை, ஜாதிய ஏற்றத் தாழ்வுகள், ஜாதி அடிப்படையிலான அரசியல், ஊழல், தொழில்வளமின்மை எனப் பல காரணங்கள் பிகாரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளன. இவற்றை மீறி மக்களை நல்லமுறையில் ஆளும் திறன் கொண்டவர்கள் பிகாரில் உருவாகும் தருணம் இதுவரை வாய்க்கவில்லை.

Lalu and Rabri
காட்டாட்சி நாயகர்கள் ராப்ரி, லாலு

குறிப்பாக கடந்த 25 ஆண்டுகால மாநில அரசியல் முந்தைய பிகாரின் வளர்ச்சியையும் கடாசிவிட்டது. அதிலும் லாலு பிரசாத் யாதவ் தலைமையில் உருவான யாதவ்- முஸ்லிம் வாக்கு வங்கி, மாநிலத்தின் தலையெழுத்தைத் தீர்மானித்த பிறகு, பிகாரின் முகமே அலங்கோலமாகவிட்டது. ஆள்கடத்தல், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுதல், மதரீதியான பயங்கரக் கலவரங்கள்,.. என பிகாரின் வீழ்ச்சி பாதாளம் நொக்கி விரைந்தது.

அந்த சமயத்தில் தான் வாரது வந்த மாமணியாக உருவெடுத்தார் நிதிஷ்குமார். முந்தைய ஜனதாதளத்தில் இருந்த அவர் லாலுவுடன் முரண்பட்டு, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் வழிகாட்டுதலில் ஐக்கிய ஜனதாதளம் அமைத்த பிறகு, அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமானார். அது அவரது வாழ்விலும் பிகாரின் அரசியலிலும் ஒரு திருப்புமுனை.

தனது அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்தபோது அவரது தலைமைப்பண்பை புரிந்துகொண்ட வாஜ்பாய், 2000-இல் அவரை பிகார் மாநில முதல்வராக்கினார். அப்போது உருவான ஐ.ஜ.தளம்- பாஜக கூட்டணி மாநில அரசியல் களத்தையே மாற்றி அமைத்தது.

nithish and sushil modi
நிம்மதி தந்த கூட்டணி – நிதிஷும் சுஷீலும்

மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சியை இழந்தபோதும், பிகாரின் இந்தக் கூட்டணி நிதிஷ் தலைமையில் வீறு கொண்டது. கால்நடைத் தீவன ஊழலில் ஆட்சியை இழந்த லாலு, அவரது பினாமியான மனைவி ராப்ரிதேவி ஆகியோரின் காட்டாட்சியில் நொந்திருந்த மக்களுக்கு நிதிஷின் வரவு புத்துணர்ச்சி அளித்தது. 2005 தேர்தலில் வென்று, மாநில முதல்வராக நிதிஷ்குமாரும், துணை முதல்வராக சுஷீல்குமார் மோடியும் பதவியேற்றனர்.

இந்த இரட்டைக்குழல் துப்பாக்கியின் நிர்வாகத்திறனால், பிகாரின் சரிவு மட்டுப்படுத்தப்பட்டு, வளர்ச்சியை நோக்கிய பயணம் துவங்கியது. அதன் விளைவாக 2010 தேர்தலிலும் ஐ.ஜ.தளம்- பாஜக கூட்டணி வென்றது.

அதேநேரத்தில் தேசத்தின் மற்றொரு மூலையான குஜராத்தில் ஆர்ப்பாட்டமின்றி சாதித்து, தேசிய அரசியலின் மையமாக உருவாகி வந்தார் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி. அவரை நிதிஷுக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. மோடியின் அபரிமித வளர்ச்சியால் மனத்துக்குள் புழுங்கிய நிதிஷ், அவரை தனது எதிரியாகவே வரித்துக் கொண்டார். சில நேரங்களில் இப்படித்தான் சரித்திரம் திசை திரும்பி விடுகிறது. மகாத்மா காந்தியும் நேதாஜியும் ஓரணியில் இருக்க முடியாததன் காரணம் என்ன என்று சரித்திரமே அறியும்.

மோடியை நிதிஷ் வெறுத்த காரணம் என்ன?
மோடியை நிதிஷ் வெறுத்த காரணம் என்ன?

நல்லோர் சகவாசம் நன்மை விளைவிக்கும்; தீயோர் சகவாசம் தீமையையே விளைவிக்கும். அதற்கான பொருத்தமான உதாரணமாகிப் போனார் நிதிஷ். நரேந்திர மோடி மீதான காழ்ப்புணர்வால், தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு விலகிய அவர், பாஜகவின் எதிரிகளுடன் குலாவத் துவங்கினார். மோடியை பிரதமர் பதவிக்குரிய வேட்பாளராக பாஜக தீர்மானித்ததை நிதிஷால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று, நரேந்திர மோடி பிரதமர் ஆனவுடன், அரசியல் சந்யாசம் போல மாநில முதல்வர் பதவிலிருந்து விலகினார் நிதிஷ். தனது எடுபிடியாக இருப்பார் என்று தான் நம்பிய ஜிதன்ராம் மாஞ்சியை முதல்வராக அமரவைத்துவிட்டு, பின்னிருந்து இயக்கினார் அவர்.

இந்த ஜிதன்ராம் மாஞ்சி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். தான் சொன்னபடி பொம்மை போல தலையாட்டுவார் என்று எண்ணியிருந்த நிதிஷுக்கு, அவரது தன்னிச்சையான ஆட்சி அதிர்ச்சியைத் தர, உடனடியாக அவரை நீக்கிவிட்டு மீண்டும் முதல்வரானார் நிதிஷ். இப்போது மீண்டும் அங்கு மாநில சட்டசபைத் தேர்தல் நிகழ உள்ள நிலையில் அவர் தான் முதல்வராகக் காட்சி தருகிறார்.

நாடகமே உலகம்- லாலுவுடன் நிதிஷ்
நாடகமே உலகம்- லாலுவுடன் நிதிஷ்

இப்போது, தனது இருப்பையும் செல்வாக்கையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிதிஷ், அதற்காக இதுவரை ஜென்மவைரியாக இருந்த லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், சோனியாவின் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி கண்டிருக்கிறார். நிதிஷை விரும்பாவைட்டாலும், பாஜகவின் எழுச்சியால் காணாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் லாலு, அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டிருக்கிறார். “பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க நான் விஷத்தைக் குடிக்கவும் தயாராக இருக்கிறேன்” என்ற அவரது வாக்குமூலமே, நிதிஷை அவர் உள்ளூற அவர் எந்த அளவுக்கு வெறுக்கிறார் என்பதைப் புலப்படுத்ததும்.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற தானோ, தனது பினாமி மனைவியோ இனி மாநில முதல்வர் பதவிக்கு ஏங்குவது பகல்கனவே என்பதை லாலு புரிந்துகொண்டு விட்டார். தவிர இனிமேல் பாஜகவை தனியொரு ஆளாக எதிர்ப்பது துர்லபம் என்பதையும் அவர் உணர்ந்துவிட்டார். மாநிலத்தில் கைவிடப்பட்ட குழந்தையாக திக்குத் தெரியாமல் தவிக்கும் காங்கிரஸின் நிலைமையோ சொல்லவே வேண்டாம். அங்கு ஒருகாலத்தில் அசுர பலத்துடன் ஆண்ட காங்கிரஸ் இப்போது 4 தொகுதிகளில் வெல்வதே பேரதிசயமாகி இருக்கிறது. எனவே எதிரிக்கு எதிரி நண்பன்  என்ற கோட்பாட்டுடன் கைகோர்த்துள்ளன, ஐ.ஜ.தளம், ரா.ஜ.அதளம், காங்கிரஸ் கட்சிகள்.

நிர்பந்தக் கூட்டணி
நிர்பந்தக் கூட்டணி

பாஜகவை எதிர்க்க வலுவான மதச்சார்பற்ற கூட்டணி அமைப்பதாக முழங்கிக்கொண்டு  ‘ஜனதா பரிவார்’ என்ற பெயரில் புதிய அணியை உருவாக்கவும் முயற்சி நடைபெற்றது. ஆனால், தேர்தலில் தொகுதிகள் ஒதுக்குவதில் பாரபட்சமாக நடந்துகொண்ட நிதிஷைக் கண்டு வெகுண்டு ஜனதா பரிவாரிலிருந்து விலகிக் கொண்டுவிட்டார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்.

அதேபோல, பிகாரின் தேசியவாத காங்கிரஸும் இந்தக் கூட்டணியால் லாபமில்லை என்று கழன்றுகொண்டது. இப்போது மொத்தமுள்ள 247 தொகுதிகளில் நிதிஷ் கட்சி- 100, லாலு கட்சி- 100, காங்கிரஸ்- 40 என்ற அளவில் பேரம் பேசி கூட்டணி அமைந்திருக்கிறது. தேர்தலுக்குப் பின் இந்தக் கட்சிகள் எப்படி சிண்டைப் பிடிக்குமோ, தெரியவில்லை.

நிதிஷின் நிலைமை தற்காப்பு நிலை என்றால், பாஜகவின் நிலையோ கௌரவப் பிரச்னையாகி இருக்கிறது. மாநிலத்தில் சுமார் 9 ஆண்டுகள் கூட்டணி ஆட்சியில் இருந்த பாஜக, தனது இருப்பால் நிதிஷின் ஆட்சியில் நல்ல பணிகளையும் செய்த பாஜக, இப்போது தனித்து அல்லது கூட்டணியாக ஆட்சியைப் பிடிக்கத் தயாராகிறது. தவிர, மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு மீதான மக்களின் கருத்துக் கணிப்பாகவும் ஊடகங்களால் இத்தேர்தல் முன்னிறுத்தப்படுகிறது.

இயல்பான கூட்டணி
இயல்பான கூட்டணி

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி பிகாரில் பெரும் வெற்றி பெற்றது. அப்போதுமுதல் ராம் விலாஸ் பஸ்வானின் லோக்சக்தி, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக சமதா கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளன. நிதிஷால் அவமானப்படுத்தப்பட்ட முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவும் பாஜகவின் கூட்டணித் தோழனாகிவிட்டது. இக்கட்சிகள் அனைத்துமே பெரிய அளவில் பலம் இல்லாதவை. மாநிலத்தின் சில பகுதிகளில் மட்டுமே இக்கட்சிகளுக்கு சிறிது பலம் உள்ளது. ஆனால், பஸ்வான், மாஞ்சி ஆகியோரால் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள் கிடைக்கும் என்பது பாஜகவின் எதிர்பார்ப்பு. மொத்தத்தில் நரேந்திர மோடி என்ற மந்திரத்தை மட்டுமே நம்பி களமிறங்குகிறது பாஜக.

பாஜக கூட்டணியில் பாஜக-160, லோக்ஜனசக்தி-40, ராஷ்ட்ரீய லோக சமதா- 23, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா- 20 என தொகுதிப் பங்கீடு நடைபெற்றுள்ளது. இப்போது இருதரப்பிலும் பிரசாரம் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது.

மோடிகள் சாதிப்பார்களா?
மோடிகள் சாதிப்பார்களா?

மோடியே பாஜகவின் ஆணிவேர் என்பதை நன்கு உணர்ந்துள்ள எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் என்னவாயின என்று கேட்டு மோடியை விளாசி வருகின்றன. அதேசமயம்,, கடந்த 15 மாதங்களில் அவரது அரசு சத்தமின்றி நிகழ்த்தியுள்ள பல சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்கின்றனர் பாஜக தொண்டர்கள்.

நிதிஷுக்கு எதிராக, மாநில அளவில் முதல்வர் வேட்பாளர் இவர் தான் என்று ஒருவரை அறிவிக்காதது பாஜகவின் பலவீனம் தான். எனினும், முன்னாள் துணை முதல்வர் சுஷீல்குமார் மோடி தான் முதல்வர் வேட்பாளர் என்பதே பரவலான கருத்தாக உள்ளது. அவருக்கு நல்ல மனிதர் என்ற நற்பெயரும் நல்ல நிர்வாகி என்ற மதிப்பீடும் மக்களிடையே உள்ளது.

இப்போது தேசத்தின் கண்கள் முழுவதும் மகதம்- அதாவது பிகார் நோக்கி. இப்போது 5 கட்டமாக பிகார் மாநில சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. அக்டோபர் 12 முதல் நவம்பர் 5 வரை நிகழ உள்ள பிகார் மாநிலத் தேர்தல் முடிவுகளை நாடு ஆர்வமாகக் கவனிக்கிறது.

இந்த தேர்தலில் யார் வெல்வார்கள் என்ற கருத்துக் கணிப்புகள் வெளியாகத் துவங்கிவிட்டன.  பிரசாரத்தில் அனல் தெறிக்கிறது. போர்க்களத்தின் இடையே ஒட்டமெடுத்த  ராகுலால் நிதிஷ், லாலு கூட்டணி நிம்மதி அடைந்திருப்பதாகத் தகவல். காங்கிரஸுடன் ஒரே மேடையில் ஏறுவதை அவர்கள் உண்மையில் விரும்பவில்லை என்பதே தகவல்.

மக்கள் யார் பக்கம்?
மக்கள் யார் பக்கம்?

ஜாதி வாக்குகளை மட்டுமே நம்பி களமிறங்கும் லாலு குழுவினர் இப்போதே இட ஒதுக்கீட்டை மையமாகவைத்து பிரசாரத்தை நடத்திவருகின்றனர்.இதில் முரண்நகை என்னவென்றால், குஜராத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராடிய ஹர்திக் படேல், நிதிஷை ஆதரித்து பிகாரில் பிரசாரம் செய்யப்போவதாகக் கூறியிருப்பது தான்.

கடைசிநேரத் திருப்பங்களுக்கு காரணமாகும் கணக்கீடுகள் யாவை? அடுத்த பிகார் முதல்வராகும் வாய்ப்பு யாருக்கு? எனப் பல கேள்விகளுக்கு அடுத்து வரும் நாட்களில் நிகழும் பிரசாரமும், வாக்காளர்களைத் திரட்டும் பணிகளும் தான் தீர்மானிக்கும்.

இப்போதைக்கு முதல் செட்டில் பாஜக கூட்டணி முந்திச் செல்கிறது. இதே நிலை நீடித்தால் 140 தொகுதிகளில் வெற்றியுடன் பாஜகவின் சுஷீல்குமார் மோடி முதல்வராக வாய்ப்புள்ளது. மத்தியில் ஒரு மோடி- மாநிலத்திலும் ஒரு மோடி என்ற நிலையை பிகார் மக்கள் உருவாக்குவார்களா? தேசம் காத்திருக்கிறது.

.

6 Replies to “தேசத்தின் கண்கள் மகதம் நோக்கி..”

  1. பாஜக கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு மேலே அதிக இடங்களைப் பெற்று பெரும் வெற்றி பெற்று பீகாரில் ஆட்சி அமைக்கும். லல்லூவின் அரசியல் அத்தியாயம் முடிவடையும். நிதீஷ் மிகவும் வருந்துவார்.

  2. ஒரு மாநிலத்தின் வளர்ச்சி அந்த மாநில மக்களின் எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது ஆனால் வளர்ச்சி பரவலாக இருக்கவேண்டும் ஆனால் அப்படி இல்லை ஒதுக்கப்பட்டவர் ஒதுங்கியே உள்ளநேர் அவர்கள் பொது நீரோட்டத்தில் பங்கு கொள்ளாதவரை திட்டத்தின் பயன் ஜீரோ தான். அரசியலிலும் இட ஒதீகீடு தேவை முதல்வர் பதவி பிரிநித்வ முறை தேவை

  3. பீஹாருக்கும் நாட்டுக்கும் நல்லது நடக்கட்டும்.

  4. இம்மாநிலத்தை பொருத்தமட்டில் அனைவரும் வளர்ச்சியைவிட ஜாதிக்கு தான் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். பாஜகவுக்கு மஹாதலித் என்று சொல்லக்கூடிய தாழ்த்தப்பட்டோரிலேயே மிகவும் பின்தங்கியுள்ள வர்கமானதின் தலைவரான மஞ்சி ஆதரவு அளித்து வருகிறார். அதேப்போல் அதே சமூகத்தில் பிற உட்பிரிவுகளை காட்டிலும் சற்று முன்னேறிய பாசிகளின் தலைவர் பஸ்வானும் தன்னுடைய ஆதரவை அளித்துள்ளார். சென்ற வாரம் ஆர்எஸ்எஸ்சின் தலைவர் மோஹன் பாகவத் இட ஒதுக்கீட்டு முறையை மறுஆய்வு செய்ய வேண்டியதற்கான அவசியத்தை சுத்திக்காட்டியதற்கு விளைவாக அதை திசைத்திருப்பி ஆர்எஸ்எஸ்சை ஒட்டுமொத்த தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் எதிரிகளாக ஒரளவுக்கு வெற்றிகரமாக சித்தரித்துள்ளார் லாலு. இதனுடைய தாக்கத்தை தேர்தல் முடிவுகள் தான் சொல்லும்.

Leave a Reply

Your email address will not be published.