அஞ்சலி: அஷோக் சிங்கல்

வாழ்நாள் முழுவதும் இந்து தர்ம எழுச்சிக்காக அயராது உழைத்த அகில உலக விஸ்வஹிந்து பரிஷத்தின் செயலாளர் திரு அசோக் சிங்கல் அவர்கள்  நவம்பர்-17 அன்று, தமது 89ம் வயதில் காலமானார். அவருக்கு நமது இதயபூர்வமான அஞ்சலி.  ஓம் சாந்தி.

1926ம் ஆண்டு ஆக்ராவில் பிறந்த சிங்கல், பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் உலோகவியல் பொறியாளராகப் பட்டம் பெற்றபின்,  ஆர் எஸ் எஸ் அமைப்பில் முழுநேர பிரசாரகராக சேர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் பணியாற்றத் தொடங்கி விட்டார்.  1981ல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மீனாட்சிபுரம் மதமாற்ற சம்பவத்தின் போது தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அவர் சமூக சேவையில் ஈடுபட்டிருக்கிறார்.

singhalபின்னர் அயோத்தி ராமஜன்ம பூமி இயக்கம் தேசிய அளவில் மையம் கொண்டது முதல், தன்னை முழுமையாக அதனுடன் பிணைத்துக் கொண்டார் அசோக் சிங்கல்.  1990ல் முலாயம் தலைமையிலான உ.பி மாநில அரசு  அமைதியாக கரசேவையில் ஈடுபட்டிருந்த ராம பக்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போது,  களத்தில் இறங்கி தொண்டர்களுடன்  நின்று போராடியவர்.  முகத்தில் வழியும் ரத்தத்தைத் துடைத்துக் கொண்டு கரசேவர்களுடன் அவர் நிற்கும் புகைப்படம்  வரலாற்றில் அழியாத இடம் பெற்று விட்டது.

பாஜக தலைவர் சூரஜ் பான் மனுஸ்மிருதி போன்ற சில பழைய சாஸ்திர நூல்களில்  சாதிரீதியாக ஒரு சாராரை இழிவு செய்யும்  வெறுப்புணர்வு வாசகங்கள் நீக்கப் படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த போது,   பல சம்பிரதாய வாதிகளும் ஆசாரவாதிகளும்  சாஸ்திரங்களில் தவறானதாக ஏதும் இல்லை, எனவே இதற்கு அவசியமும் இல்லை என்றும் கருத்துக் கூறினர். ஆனால், வி.ஹி.பவின் தலைமைப் பொறுப்பில் இருந்த அசோக் சிங்கல் அந்தக் கோரிக்கையை முற்றிலுமாக ஆதரித்தார்.

ashok-singhal

“மனுஸ்மிருதியின் சாதிய கருத்துக்களை வி.ஹி.ப நிராகரிக்கிறது.  பண்பாடும் கலாசாரமும் கொண்ட ஒரு சமூகத்தில் அத்தகைய கருத்துக்களுக்கு  எந்த இடமும் அளிக்கப் படக்கூடாது.  நமது ஆதி மனுஸ்மிருதி  என்றால் அது  ஸ்ரீமத்பகவத்கீதை தான். பகவான் ஸ்ரீகிருஷ்ணரே  கீதையின் நான்காம் அத்தியாத்தில் அர்ஜுனனுக்கு அதை எடுத்துரைக்கிறார்…  ” என்று கருத்துக் கூறினார்.  அதன் படியே,  தலித்கள் உட்பட அனைத்து சாதி இந்துக்களுக்களும் அர்ச்சகராகும் உரிமைகளையும்,   வேதக் கல்விக்கான வாய்ப்புக்களையும்  வி.ஹி.ப வலியுறுத்தி வந்திருக்கிறது.   தலித் பூசாரிகளுக்கான பயிற்சி முகாம்களையும் நடத்தி வருகிறது. இத்தகைய  செயல்பாடுகளே 2008ம் ஆண்டு  பீகாரின் புகழ்பெற்ற ஜகன்னாதர் ஆலயத்தின் பூசாரியாக தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அர்ச்சகர் நியமிக்கப் படவும்,  மற்றும் பல கோயில்கள்  அதைப் பின்பற்றவும் வழிவகுத்தது.

நீதி நெறியாளர்கள் நிந்திக்கட்டும் அல்லது புகழட்டும்.
செல்வம் வந்தாலும் வரட்டும் அல்லது வராமலும் போகட்டும்.
மரணமானது இன்றோ அல்லது நூறு வருடம் கழித்தோ எப்போது வேண்டுமானாலும் வரட்டும்
தான் மேற்கொண்ட கொள்கைப் பாதையினின்றும்
மயிரிழையேனும் பிறழாதிருப்பவர் எவரோ
அவரே தீரர்.

– பர்த்ருஹரி, நீதி சதகம்

மேற்கண்ட வாசகத்திற்கு முழு இலக்கணமாக வாழ்ந்த கர்மயோகி அசோக் சிங்கல். அவரது நினைவும் ஆதர்சமும் என்றும் நம்மை வழிநடத்தும்.

One Reply to “அஞ்சலி: அஷோக் சிங்கல்”

  1. மானனீய ஸ்ரீ அஷோக் சிங்கல் அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். விச்வ ஹிந்து பரிஷத்தில் அவர் தான் வாழ்நாள் முழுதும் பணியாற்றி ஹிந்து ஒற்றுமைக்குப் பாடுபட்டது மட்டிலும் அல்லாமல் ………….. சங்கம், பாஜக, விஹிப ……….. போன்ற சங்க பரிவார இயக்கங்களுக்கு மத்தியில் ஒரு உறுதியான பாலம் போல இயங்கி இவற்றின் ஒருங்கிணைப்பிற்கும் பாடுபட்டார் என்பதனையும் இங்கு நினைவு கூற வேண்டும். சங்க பரிவார இயக்கங்கள் தன்னந்தனியாக வளர்வது என்பது சாத்தியமில்லை. ஒன்றாக அனைத்து இயக்கங்களும்……… ஹிந்து ஒற்றுமை என்ற சூத்திரத்தில் பிணைக்கப்பட்டு ………ஒரு சேர முன்னகர்வது………. ஒட்டு மொத்த சங்கபரிவார இயக்கங்களும் விரைவில் தேச வளர்ச்சி மற்றும் ஹிந்து ஒற்றுமை என்ற இரண்டு இலக்கையும் அடைய வழிவகுக்கும். ஸ்ரீ சிங்கல் ஜீ அவர்களது உதாஹரண பூர்வமான சங்க பரிவார இயக்கங்களிடையேயான பணி அனைத்து இயக்கங்களுக்கும் வழிகாட்ட ஸாகேத ராமனை இறைஞ்சுகிறேன்.

    வேலும் மயிலும் சேவலும் துணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *