பசங்க-2: பார்க்க வேண்டிய படம்

Pasanga 2

பசங்க– 2 பாரு தம்பி… நல்லா இருக்கு. குழந்தைகளுக்கான படம்” என்றார் நண்பர் ஒருவர்.

திரைப்பட ரசிகனான எனக்கு குழந்தைகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். இரண்டையும் இணைத்து ஒரு படம் என்றால் கேட்க வேண்டுமா? ஆனால், நண்பர் சொல்லும் போது எனக்கு அவ்வளவு உவப்பாக இல்லை.

சிறுவர்கள் நடித்து, அண்மைக் காலங்களில் வெளிவந்த பெரும்பாலான படங்களில், மார்க்சியப் புலம்பல்களும் பிரசார நெடிகளும் கலந்து ரசிகர்களை நெளிய வைத்த படங்களாக இருந்ததே எனது தயக்கத்துக்கு காரணம். இருந்தாலும், நண்பர் சொன்னாரே… எதற்கும் போய்ப் பார்ப்போம் என்ற எண்ணத்தில் படம் பார்க்கக் கிளம்பினேன்.

படம் தொடங்கிய உடனேயே கவின் என்ற மாணவனையும், நயனா என்ற மாணவியையும் படத்தில் மாறி, மாறி காண்பிக்கிறார்கள். நகரத்தில் வாழும் அவர்கள் இருவரும் செம சுட்டி. எந்நேரமும், வால்தனம்தான் அவர்களுக்கு. ஆனால், படிப்பில் படு சுமார். அதனால், வணிக நோக்கத்தில் இயங்கும் பள்ளிகள் அனைத்தும் குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கின்றன. அலறித் துடிக்கும் பெற்றோர், குழந்தைகள் மனநல மருத்துவர்களை அணுகுகின்றனர். மருத்துவர்களும் தங்கள் பங்குக்கு  ‘ஹைப்பர் ஆக்டிவிட்டி டிஸ் ஆர்டர் ’ என்று மிரட்டுகின்றனர். அந்தக் குழந்தைகள்தான், பாவம்…

ஒருபக்கம் பெற்றோரின் நெருக்குதல்களாலும், மறுபுறம் பள்ளிகளில் மட்டம் தட்டுவதாலும், குழந்தைகள் இரண்டும் மனம் பாதிக்கப்படுகின்றன. பள்ளிக்கு வசதி என்று இருவரின் பெற்றோரும் ஒரே குடியிருப்பில் குடியேறுகிறார்கள். கவினுக்கும், நயனாவுக்கும் இடையே நட்பு மலருகிறது.

இரண்டு குடும்பங்களும் வசிக்கும் அதே குடியிருப்பில் வசிக்கும் குழந்தைகள் மனநல மருத்துவர் தமிழ்நாடனும் (சூர்யா), மாற்றுக் கல்வித் திட்டத்தை அமல்படுத்தும் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரியும் வெண்பாவும் (அமலா பால்) அறிமுகமாகிறார்கள்.

இதற்கிடையில், கவினையும், வெண்பாவையும் அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்கள் வெளியேற்றி விட, விடுதியுடன் கூடிய பள்ளி ஒன்றில் இருவரும் சேர்க்கப்படுகின்றனர். அங்கும் அவர்களது சுட்டித்தனம் தொடர, உடனடியாக வெளியேற்றப்படுகிறார்கள்.

வேறு வழியில்லாமல், வெண்பா பணியாற்றும் மாற்றுப் பள்ளியில் கவினையும், நயனாவையும் பெற்றோர் சேர்க்கிறார்கள். அதே நேரத்தில், டாக்டர் தமிழ்நாடனும், குழந்தைகளின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டு, இருவரையும் அரவணைக்கிறார். குழந்தைகளின் மனநிலைக்கேற்ற கல்விமுறையால் அவர்களிடம் இருக்கும் திறமைகள் எப்படி வெளிப்படுகின்றன என்பதுதான் படத்தின் முடிவு.

pasanga 2 still
தீராத விளையாட்டுப் பிள்ளைகள்…

சூர்யா, அமலா பால் போன்ற நட்சத்திரங்களும், குழந்தை நடிகர்களும் இணைந்து நடித்த இந்தப் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. கட்டுரையின் தொடக்கத்தில் நாம் சொன்னதைப் போன்ற (ஏ)மாற்றுத் திரைப்படங்களின் வரிசையில், நல்ல வேளையாக  ‘பசங்க-2’ இணையவில்லை.

படத்தின் கதை ஓட்டத்தை பல்வேறு கோணங்களில் அலச முடியும். படத்தின் தொடக்கத்திலேயே, இரண்டு குழந்தைகளுக்கும் மன வியாதி இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதை எப்படி முடிவு கட்டுகிறார்கள் என்பது பற்றி படத்தில் பேசப்படவில்லை. தங்களுக்கு நோயாளிகள் வர வேண்டும் என்று இல்லாத வியாதிகளைத் திணிக்கும் வணிகவியல் ரீதியான மருத்துவர்கள் பெருகிவிட்ட காலம் இது. படத்தின் ஓட்டத்திலும், குழந்தைகளுக்கு மன வியாதி இருப்பதாகத் தெரியவில்லை. சிறுமி நயனாவின் தந்தையாக நடித்திருக்கும் நடிகர் கார்த்திக் குமாரும், “எத்தனையோ டாக்டர் கிட்ட காண்பிச்சு, பணத்தை செலவழிச்சாச்சு… இந்த டாக்டரையும் பார்த்துருவோமே” என்று ஒரு காட்சியில் சொல்கிறார்.

இந்த ஆண்டு தங்களது பள்ளிக்கு 100 சதம் கிடைக்க வேண்டும் என்று பாடுபடும் பள்ளிகளுக்கு ஏனோ குழந்தைகளுக்கு பாரம்பரியம் பற்றியும் கற்பிக்க வேண்டும் என்பது பெரும்பாலும் தோன்றுவதில்லை. யோகா போன்ற பயிற்சிகளுக்கு உலகளாவிய வரவேற்பு கிடைத்து வரும் கூட, ஆன்மிக இயக்கங்கள் நடத்தும் சில பள்ளிகளும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் ஊக்கம் பெற்ற வித்யாபாரதி இயக்கமும் நடத்தும் பள்ளிகளும்தான் யோகாவும், பாரம்பரிய விளையாட்டுகளும், பாரம்பரிய இசையும் கல்வித் திட்டத்தில் ஒரு பகுதி என்பதை ஒப்புக்கொள்ளவே செய்கின்றன.

அதேபோல், சுட்டித்தனத்துக்கு அருமருந்து, குடும்பங்களும் இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையும்தான் என்பதும் படத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது. “குழந்தைகள் என்ன சார் பண்ணுவாங்க… நம்ம காலத்துல ஊர்கள்ல விளையாட இடமும் இருந்தது. ஆட்களும் இருந்தாங்க. இன்னைக்கு பெரிய அபார்ட்மென்ட்களில் விளையாட ஆளில்லை” என்று ஒரு வசனம்.

தோப்புக்கரணம் போடுவது தண்டனையல்ல. உடல் ஆரோக்கியத்துக்கான யோகா என்கிறது ஒரு காட்சி. “குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதில்லை; கேட்ட வார்த்தையைத் தான் பேசுகிறார்கள்” என்று ஒரு வசனம். இப்படி நறுக்குத் தெறித்தது போல பல வசனங்கள். ஒவ்வொரு காட்சியிலும் சமூக சிந்தனையும் தெளிவான பார்வையும் இழையோடுகின்றன.

குழந்தைகள் மனநல மருத்துவராக சூர்யாவின் பாத்திரம் வந்தாலும், குழந்தை வளர்ப்பில் பாரம்பரியத்தைக் கைவிடவில்லை. அமலா பால் கர்ப்ப காலத்தில் யோகா பயிற்சி செய்வது, குழந்தை வயிற்றில் இருக்கும் போது நல்ல இசைகளைக் கேட்பது, அவர்களில் வளர்ப்பதில் குடும்பங்களுக்கு இருக்கும் பங்கை உணர்த்துவது என,  படம் முழுக்கவே, சராசரி ஹிந்துக்களின் வாழ்க்கை முறைதான்.

படத்தில் சொல்ல வேண்டிய கருத்துக்களை, உற்சாக மனப்பான்மையோடும், அறிவுரைகளைக் கலக்காமல் இயல்பான உரையாடல்களோடும் கூறியிருக்கும் இயக்குநர் பாண்டிராஜுக்கும், நல்லதொரு படத்தைத் தயாரித்துள்ள நடிகர் சூர்யாவுக்கும் பாராட்டுக்கள்.

மாற்றுத் திரைப்படம் என்ற பெயரில் தேவையற்ற சிந்தனைகளையும், வெற்று புலம்பல்களையும் கலக்காமல், நாட்டு மக்களுக்குத் தேவையான நல்ல சிந்தனைகளைத் தந்திருக்கும் ‘பசங்க-2’தான் உண்மையான மாற்றுத் திரைப்படம்.

 

.

2 Replies to “பசங்க-2: பார்க்க வேண்டிய படம்”

  1. லெபனான் கவிஞன் கலீல் ஜிப்ரான் “குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து வரவில்லை பெற்றோர்கள் வழியாக வருகிறார்கள்” என்று இதைத்தான் கூறினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *