அமெரிக்க[அதிபர்] அரசியல் — 2

3.  ஆயுதமேந்தும் உரிமை

மக்கள் ஏன் ஆயுதமேந்தும் உரிமைபெறவேண்டும், அனைவரும் ஆயுதமேந்துவதால் எத்தனை கெட்டவிளைவுகள், கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள் நடக்கின்றன, ஆகவே ஆயுதமேந்துவதை மட்டுப்படுத்துவதைவிட்டுவிட்டு, ஒவ்வொருவரின் கையிலும் ஆயுதத்தைக் கொடுத்தால், நாடே ரணகளமாகிவிடாதா என்ற கேள்வி அனைவரின் மனத்திலும், முக்கியமாக இந்தியா, பிரிட்டன் போன்ற – ஆயுத உரிமையைக் கட்டுப்படுத்தும் நாடுகளில் இருப்பவர்களின் மனதில் எழக்கூடிய நியாயமான ஒன்றுதான். நகம் இருந்தால்தானே பிராண்டமுடியும்?  நகத்தை வெட்டிவிட்டால் பிராண்டமுடியுமா, அல்லது, விஷப்பல்லைப் பிடுங்கிவிட்டால், விஷக்கடிதான் விளையுமா?

அதற்கு அமெரிக்க ஒருங்கிணைந்த மாநிலங்களின் [United States of America] விடுதலை வரலாற்றைக் கண்ணுறுவோம்.

இன்றைய அமெரிக்கா முன்பு பிரிட்டனின் ஒரு பகுதியாக, அதன் ஆளுமைக்கு உட்பட்டிருந்தது.  முடியாட்சியே அங்கு நடந்தது.  குடிமக்கள் ஆங்கில அரசுக்கு வரிசெலுத்திவந்தார்கள்.  ஆயினும், வரிசெலுத்தும் அமெரிக்க மக்களுக்கு சார்பாளர்[பிரதிநிதி] உரிமை அளிக்கப்படவில்லை. அமெரிக்கர்[ஒன்பது அமெரிக்கக் காலனிகளிடமிருந்து பிரிட்டன் செல்லும் வரிப்பணம் ஆங்கில அரசாங்கத்தின் விருப்பப்படிதான் செலவுசெய்யப்பட்டது.  இதைத்தான் “சார்பாளரற்ற வரிவிதிப்பு” [taxation without representation] என்று சொல்வார்கள்.  பொது ஆண்டு 1765, மே மாதத்தில் வர்ஜீனியா மாநிலத்தைச் சேர்ந்த பாட்ரிக் ஹென்றி [Patrick Henry] வர்ஜீனியா தீர்மானங்களில் எழுதினார்[1].

ஜேம்ஸ் ஓட்டிஸ் [James Otis] என்ற நாவன்மைமிக்க வழக்கறிஞர், “சார்பாளரில்லாத வரிவிதிப்பு கொடுங்கோன்மைக்கு நிகர்” [“Taxation without representation is tyranny”]  என்று பலவிடங்களிலும் பேசி, அச்சொற்களை உலகெங்கும் புகழடையச் செய்தார்[2].

ஆங்கில அரசு அமெரிக்கக் குடியிருப்புகளின் இக்கூற்றை ஒப்புக்கொள்ளவில்லை.  அவர்களின்மீது தனது அடக்குமுறையை அவிழ்த்துவிட்டது

அப்பொழுது அமெரிக்க்க்குடியிருப்புகளுக்கென்று இராணுவமோ, படைகளோ இருக்கவில்லை.  ஆகையால், அமெரிக்கத் தந்தைகள், விடுதலைப் பிரகடனம் செய்து, ஆங்கில அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்ள மக்களுக்கு அறைகூவல் விடுத்தனர். மக்கள்படை திரண்டது.  படைகளுக்குத் தலைமைதாங்கிய ஜார்ஜ் வாஷிங்டன் {George Washinton], வலிமைமிகுந்த ஆங்கில இராணுவத்துடன் நேரில்மோதி வெற்றிபெற இயலாது என்பதை நன்கறிந்து கொரில்லாமுறைத் தாக்குதலைத் துவங்கி, ஆங்கில இராணுவத்தைப் புறங்கண்டு, அமெரிக்கக் காலனிகளை ஆங்கில அரசின் பிடியிலிருந்து மீட்டார்.  அவரை முதல் அமெரிக்க அதிபராக்கி அமெரிக்க மக்கள் சிறப்பித்தனர்.

அதனால், அமெரிக்க நாட்டை ஆதிக்கத்திலிருந்து விடுவித்தது அறைகூவல் விடுத்தவுடன் மக்கள் ஆயுதமேந்தி படைதிரண்டதே காரணம் என்ற்றிநத அமெரிக்கத் தந்தைகள், அமெரிக்க அரசு மீண்டும் அடக்குமுறையில் ஈடுபட்டால் எதிர்த்துப்போராட — அடக்குமுறையைக் கையாளும் அரசைப் பதவியிலிருந்து தூக்கியெறியும் உரிமையைப் பெற – மீண்டும் அமெரிக்க ஒருங்கிணைந்த மாநிலங்களுக்கு ஊறுவந்தால் எதிர்த்துநிற்க — மக்கள்படை மிகமுக்கியம் என்றறிந்து “ஆயுதமேந்தும் உரிமை”க்கான இரண்டாம் திருத்தத்தைக் கொணர்ந்தார்கள்.

இரண்டாம் திருத்தம் என்ன சொல்கிறது?

நன்கு கட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பினால் உருவாக்கப்பட்ட படை சுதந்திரமான நாட்டிற்குத்[மாநிலங்களுக்குத்] தேவையென்பதால் மக்களின் ஆயுதங்களை வைத்திருக்கும், ஏந்தும் உரிமை மீறப்படமாட்டாது.[3]

தங்களுக்குக் கிடைத்த இந்த உரிமையைப் பாதுகாக்கத்தான் அமெரிக்கமக்கள் இன்றுவைரை போர்க்குரல் எழுப்பிவருகிறார்கள்.  மற்றும்பலர், “ஆயுதம் ஏந்தும் உரிமை இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தேவைப்பட்டது. இப்பொழுது அப்படிப்பட்ட அவசியமில்லை.  எனவே, ஆயுதமேந்தும் உரிமையைக் கட்டுப்படுத்தவேண்டும்,” என்று எதிர்க்குரல் கொடுக்கிறார்கள்.

இப்பொழுது அதைப்பற்றி மேலும் ஆராயாமல், அமெரிக்கத் தந்தையர் இந்த அளவுக்கு மக்களுக்கு உரிமையை ஏன் அளித்தார்கள் என்பதை அறிந்துகொள்வதற்கே இத்தகவல் கொடுக்கப்பட்டது

தேவையானால் சுதந்திரத்திற்காகப் போராட மாற்றார்களையோ, அல்லது அட்க்குமுறைசெய்யும் அரசையே எதிர்த்துப்போராடும் உரிமைய நல்கிய அமெரிக்கத் தந்தையர் தனியொரு மனிதரிடம் அதிகாரம் குவியும்வண்ணம் விட்டுவிடமாட்டார்கள் என்பதை எடுத்துக்காட்டவே இரண்டாம் திருத்தம்பற்றி எழுதப்பட்டது.

அடுத்து, அதை எப்படி அமெரிக்கத் தந்தையர் அரசியல் அமைப்பில் எழுதிவைத்தார்கள் என்று நோக்குவோம்.

4.  தடைகளும், சமப்படுத்துதலும் [Checks and Balances]

ஒருவரிடமோ, அல்லது ஒரு துறையிடமோ அதிகாரம் குவிந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த அமெரிக்கத்தந்தையர், அதிகாரத்தை மூன்றாகப் பங்கிட்டனர். அத்துடன் நிற்காது, அந்த மூன்று பிரிவுகளும் தங்கள் மனம்போனபோக்கில் நடந்துகொள்ளாமலிருக்க, தடைகளையும், சமப்படுத்துதலையும் [Checks and Balances] செய்யும்வண்ணம் அரசியல் அமைப்பை எழுதிவைத்தார்கள்.

பிரிக்கப்பட்ட மூன்று பிரிவுகள்:  செயலாட்சித்துறை [Executive Branch], சட்டத்துறை [Legislative Branch],, நீதித்துறை [Judicial Branch] ஆகியவை.

ஒவ்வொரு துறைக்கும் அதிகாரங்கள் உண்டு;  ஆயினும், அவை தத்தம் விருப்பப்படி செயலாற்றமுடியாதபடி ஒருதுறையின் உரிமைமீறலைத் தடுக்க மற்றொரு துறைக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டன.  ஆகவே, மூன்று துறைகளுக்கும் சம்மான அதிகாரங்களும், மற்றதுறை அதற்குரிய அதிகாரத்தை மீறும்போது அதைத்தடுக்கவும் உரிமைகள் வழங்கப்பட்டன.

செயலாட்சித்துறைஇதன் தலைவர் அமெரிக்க அதிபர்[President] ஆவார். சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்க அதிபர் ஒருங்கிணைந்த அரசின் [Federal Government] சட்டங்களைச் செயல்படுத்துகிறார்.  புதிய சட்டங்கள் இயற்றும்படி பரிந்துரைக்கிறார்; நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டுறவு பொறுப்பை ஏற்கிறார்;  இவரே,. நாட்டின் சடங்குமுறைமைகளையும் செய்கிறார்.

அரசை வழிநடத்துவது, அமெரிக்கப் படைகளின் தலைமைத்தளபதிப் பொறுப்பை ஏற்று அவைகளுக்கு ஆணையிடுவது, வெளிநாட்டு அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, தலைமை சட்ட ஒழுங்கு அதிகாரியாகச் செயலாற்றுவது, சட்டத்துறை இயற்றி அனுப்பும் எந்தவொரு சட்டத்தையும் ஏற்கும், அல்லது நிராகரிக்கும் உரிமை ஆகியவை இவருடைய அதிகாரங்கள்.

எனினும், இவரால் தன்னிச்சையாகச் செயல்பட இயலாது. இவர் என்னென்ன செய்யலாம் என்பதை சட்டப்பேரவையே தீர்மானிக்கிறது.

இதைப் படித்ததும் நம்மனதில் குழப்பம் வருவதை நம்மால் தவிர்க்கமுடியாது.  சட்டப்பேரவை இயற்றும் எல்லாச் சட்டங்களையும்  ஏற்கமறுக்கும் உரிமை இவருக்கு ஏன் வழங்கப்பட்டது, இது சர்வாதிகாரத்திற்கு ஒப்பாகாதா என்னும் கேள்வி எழுவது இயற்கையே.  அதனைப் பின்னர் பார்க்கலாம்.

சட்டத்துறைசட்டப்பேரவை[Congress]யால் தலைமைதாங்கப்படும் இத்துறை, பிரதிநிதிசபை[House of Representatives], ஆட்சிமன்றம்[Senate] என்னும் இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.  இதற்கும் ஒரு முக்கியமான காரணம் உள்ளது.  இந்த இரு அவைகளின் பெரும்பணியே மக்களுக்குத் தேவையான சட்டங்களை இயற்றுவதுதான்.  சட்டம் இயற்றுவது, பட்ஜெட் மசோதாக்களைத் துவங்குவது காங்கிரசின்[பிரதிநிதிசபை] உரிமைகள்; அதிகாரிகளைக் குற்றம்சாட்டுவது, ஒப்பந்தகளை அங்கீகரிப்பது இவையெல்லாம் செனட்[ஆட்சிமன்றம்]டின் உரிமைகள்.

இறுதிப்பெரும்பான்மை, அதாவது மூன்றில் இரண்டுபங்கு பெரும்பான்மையுடன் இயற்றப்படும் எந்தச் சட்டத்தையும் அமெரிக்க அதிபரால் மறுக்கவியலாது. இந்த உரிமையின்மூலம், அதிபர் சர்வாதிகாரியாகச் செயல்படுவது மட்டுப்படுத்தப்ப்டுகிறது. அதேசமயம், நாட்டுநலனில் அக்கறையில்லாமல் கட்சிக்காகமட்டும் இயற்றப்படும் சட்டங்ககளை மறுக்கவும் அதிபருக்கு உரிமைவழங்கப்பட்டுள்ளதால், ஒற்றுமையுடனும், அனுசரித்தும் செயல்படவேண்டிய கட்டாயம் இரு துறைகளுக்கும் ஏற்படுகிறது.

நீதித்துறைஇத்துறை உச்சநீதிமன்றத்தால் வழிநடத்தப்படுகிறது. அரசியல் அமைப்பின் உட்பொருளை உணர்ந்து தீர்ப்பு வழங்குவது, சட்டங்களை சீராய்வது, மாநிலங்களின் உரிமைபற்றிய வழக்குகளை விசாரித்து முடிவுசெய்வது இத்துறையின் பொறுப்புகளாக அமைகின்றன.

ஜார்ஜ் புஷ் – அல் கோர்

இத்துறைக்கு இவ்வித உரிமையை – அதிகாரத்தை வழங்குவதின்மூலம் சட்டப்பேரவை அரசியல் அமைக்குப் புறம்பான, தனிமனித உரிமையைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை இயற்றிச் செயலாக்குவது தடுக்கப்படுகிறது.  பொது ஆண்டு 2000ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் [ஜார்ஜ் புஷ்/அல் கோர்] ஃபுளோரிடா [Florida] மாநிலத்தில் நடந்த ஓட்டு எண்ணிக்கைக் குழப்பம் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாலேயே தீர்த்துவைக்கப்பட்டது[4].

உச்சநீதிமன்றத்தின் இத்தலையீடு, அதன் தீர்ப்பு சரியில்லை என்று வாதிடுவோரும் உள்ளனர்[5].  அரசியல் அமைப்பின் பதினான்காம் திருத்தம் மீறப்பட்டது என்பதாலேயே உச்சநீதிமன்றம் இவ்வழக்கில் தன்னை நுழைத்துக்கொண்டது, ஆனால் அந்தத் திருத்தம் மீறப்படவில்லை என்பது அவர்கள் வாதம்.

பில் க்லின்ட்டன்

எது எப்படியிருப்பினும், ஜார்ஜ் புஷ்[George Bush]ஷைவிடப் பத்துலட்சம் வாக்குகள் அதிகம்பெற்ற அல் கோர் [Al Gore] அமெரிக்க அதிபர் ஆகவில்லை.  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினால் ஜார்ஜ் புஷ்ஷே அதிபர் ஆனார்.  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அந்நாள் அதிபர் பில் கிலின்ட்டன் [Bill Clinton] மதித்தார். அரசவையைக் கலைக்கவில்லை.  தன் துணை அதிபரே தேர்தலில் வென்றார் என்று அறிக்கையும் விடவில்லை.

இதற்குமுன் இன்னொருமுறை இப்படி நடந்திருக்கிறது.

அதிபர் இன்றி நாடு செயல்பட இயலாது, குழப்பம்விளையும் என்றறிந்த அல் கோர் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்தார்.  ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபர் ஆனார்.

அடுத்து அமெரிக்காவின் அதிபர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று பார்ப்போம்.

***   ***   ***

[1]    https://blog.constitutioncenter.org/2015/10/250-years-ago-today-no-taxation-without-representation/

In May 1765, Virginia’s Patrick Henry wrote the Virginia Resolves, which made clear the “taxation without representation” argument.

[2]  A phrase, generally attributed to James Otis about 1761, that reflected the resentment of American colonists at being taxed by a British Parliament to which they elected no representatives and became an anti-British slogan before the American Revolution; in full, “Taxation without representation is tyranny.”

https://www.dictionary.com/browse/taxation-without-representation

[3]  A well regulated Militia, being necessary to the security of a free State, the right of the people to keep and bear Arms, shall not be infringed.

[4]   https://www.dummies.com/how-to/content/supreme-court-case-study-bush-v-gore.html

Florida electors were unable to commit themselves to either Bush or Gore owing to the closeness of the vote. ..  Recounts were started, then stopped as Republicans and Democrats wrangled over what standards to apply…  The Supreme Court actually interposed itself into the election contest three times.

வாக்கு எண்ணிக்கையின் வித்தியாசம் மிகவும் குறைவானதால் [இருபது இலட்சத்தில் இருநூற்றைம்பது] ஃபுளோரிடா தேர்வாளர்கள் [வாக்காளர்கள் அல்லர்} ஜார்ஜ் புஷ்ஷுக்கோ, அல்லது அல் கோருக்கோ ஆதரவு தரவியலாத நிலை ஏற்பட்ட்து…  மறு எண்ணிக்கை துவங்கியது, ஆயினும் எவ்வித அலகீட்டினைக் கைக்கொள்வது என்பதில் ரிப்ப்ளிக்கர்களும், டெமொகிராடிக்கட்சிக்கார்ர்களும் சச்சரவிட்ட்தால் எண்ணிக்கை நிறுத்தப்பட்டது… உச்சநீதிமன்றம் இந்த தேர்தல் போட்டியில் மூன்றுமுறை தலையிட்டது

[5]   https://www.swarthmore.edu/writing/a-supremely-bad-decision-majority-ruling-bush-v-gore

The Court majority intervened in Bush v. Gore because it perceived a violation of the Fourteenth Amendment’s equal protection clause in the manual recounts that had been ordered in Florida (Bush v. Gore [2000]).  There is no disagreement that Art. II, § 1, cl. 2† of the Federal Constitution clearly specifies that it is the sole right and responsibility of the state legislatures to provide for the selection of Presidential electors.

[தொடரும்]

One Reply to “அமெரிக்க[அதிபர்] அரசியல் — 2”

  1. அருமையான கட்டுரை . தொடரட்டும் உங்கள் பணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *