அன்னையர் தினம்

 காலை நேரம். சுப்ரபாதம் யார் வீட்டிலிருந்தோ காற்றில் மிதந்து வந்துகொண்டிருந்தது. தங்கம் பொதிகையில் காலைநிகழ்ச்சிகளைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“அம்மா! ஒங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு’’ என்ற சத்தம் கேட்டது. யாரென்று தெரியவில்லை.

‘எங்களுக்கென்ன பார்சல் வரப்போறது? அதுவும் இந்த நேரத்தில்! போஸ்ட்மேன் பத்துமணிக்குமேல்தான் வருவார். என்ன பார்சல்? பார்சல் என்றாலே இப்போதெல்லாம் பயம்மா இருக்கே. தபாலில் குண்டுகூட வருகிறதாமே!’ குழப்பத்துடன் வாசலுக்கு வந்தாள் தங்கம்.

 வாசலில் ஒரு ஆட்டோ டிரைவர், கையில் ஒரு பெரிய பிரம்புக்கூடை, பொக்கே சகிதம் நின்றுகொண்டிருந்தார். கூடை பெரிய பிடியுடன் மிக நேர்த்தியாக ‘பாக்’செய்யப்பட்டு நீலநிற ரிப்பனால் அலங்கரிக்கப்பட்டிருந்தது, பலவித மலர்களுடன்கூடிய பொக்கே. தங்கத்துக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்னப்பா அது?’’

”மங்களத்தம்மா வீடுதானே இது?”

“ஆமாம்”

“அப்ப இந்த பொக்கேயும் பழக்கூடையும் ஒங்களுக்குத்தான்.

தங்கத்துக்கு இப்பவும் ஒண்ணும் புரியவில்லை. ஆனால் பெயர் விலாசம் எல்லாம் சரியாச் சொல்ல றானே? “ஏம்பா, இது எங்கேயிருந்து வந்திருக்கு? ஒனக்குத் தெரியுமா?

“தெரியாதும்மா.

இதற்குள் ‘வாசல்ல யாரு” என்று கேட்டபடியே தங்கத்தின் அம்மா வந்தாள்.

‘அம்மா, ஒங்களுக்குத்தான் பொக்கேயும் கூடையும்”

“என்னடி அதிசயமாயிருக்கு! கல்யாணப் பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும்தான் பொக்கே குடுப்பா. எனக்கு எதுக்கு பொக்கே?’

தங்கம் இதற்குள் பழக்கூடையையும் பொக்கேயையும் நன்கு கவனித்துப்பார்த்தாள். ‘அம்மா, ஒங்களுக்குத்தான் ரகு அனுப்பியிருக்கான். இன்னிக்கு மதர்ஸ் டே. அதுக்காக ஒங்களுக்கு அனுப்பி ஒங்களோட ஆசீர்வாதம் வேணும்னு எழுதியிருக்கான்.’

அம்மாவின் முகத்தில் பெருமையும் ஆச்சரியமும் ஒருசேர மிளிர்ந்தது. அதே சமயம் உண்ர்ச்சிமேலிட்டு அழுகையே வந்துவிட்டது. குரல் தழுதழுக்க, ”அவனுக்குத்தான் இப்படியெல்லாம் செய்யணும்னு தோணும்,” என்றாள்.

பழக்கூடையில் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, மாம்பழம், சப்போட்டா  என்று பலவகைப்பழங்கள். சிங்கப்பூரிலிருந்து எப்படி அனுப்பினான் என்று அம்மா ஆச்சரியப்பட்டாள். ஆட்டோக்காரர் இதற்குள் மாயமாய் மறைந்துவிட்டார்!

மத்தியானம் 12 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து ரகு போனில் கூப்பிட்டான். “என்ன,பார்சலும் பொக்கேயும் வந்ததா?’’ என்றான்.

அம்மா போனிலேயே அழுதுவிட்டாள். “ரகு, எப்படிடா கரெக்டா அனுப்பினே?  இங்கெல்லாம் யாரும் அவ்வளவா மதர்ஸ் டே எல்லாம் நெனவு வெச்சுக்கறதில்லை. இப்பத்தான் புதுசுபுதுசா வெட்டிங் டே, பர்த் டே, மதர்ஸ் டே எல்லாம் கொண்டாடறா. எனக்கு ரொம்பவே சந்தோஷமாயிருக்கு. என்பிள்ளை நெனவு வெச்சிண்டு அனுப்பியிருக்கானேன்னு ரொம்பப் பெருமையாயிருக்கு” என்றாள்.

”போன வருஷமே அனுப்பியிருக்கணும். எதிர்பாராமல் வியட்நாம் போயிட்டேன். அதனால  இந்த வருஷம் என் ஃப்ரண்ட் ராஜாமணிகிட்ட சொல்லி ஏற்பாடுபண்ணிட்டேன்’’ என்றான்.

ஒவ்வொரு அன்னையும் தனுடைய குழந்தைகளைக் கண்ணுக்குக் கண்ணாகத்தான் வளர்க்கிறாள். வசதிக்கு மீறித்தான் படிக்கவைக்கிறாள். கடனோ உடனோ வாங்கியும் நகைகளை விற்றோ அடமானம் வைத்தோகூடப் படிக்கவைக்கிறாள். ஆனால் இவர்கள் தங்கள் ஆவி, உடல், பொருள் அனைத்தையும் தியாகம்செய்து காப்பாற்றுவதுபோல் அந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் ஏன் பெற்றோர்களைக் காப்பாற்ற முன்வரமாட்டேன் என்கிறார்கள்?

ஒருதாய் எட்டு குழந்தைகளைக் காப்பாற்றுவாள். ஆனால் அந்த எட்டுக் குழந்தைகளும் சேர்ந்துகூட அந்தத் தாயைக் காப்பாற்றமாட்டார்களாம்.  முன்பெல்லாம் மதர்ஸ் டே என்ற ஒன்றைப்பற்றிக் கேள்விப்பட்டதேயில்லை. இப்பொழுது வருஷம் 365 நாட்களுமே ஏதாவது ஒரு டே கொண்டாடப்பட்டு வருகிறது.  ஒருபக்கம் மீடியாவில் ‘மதர்ஸ் டே’ ஆரவாரமாகப் பேசப்பட்டாலும் மறுபக்கம் முதியோர் இல்லங்கள்! மதர்ஸ் டேயில் அக்கறையும் ஆர்வமும் நம்பிக்கையும் இருந்தால் முதியோர் இல்லங்கள் ஏன்?

வருஷத்தில் ஒரே ஒருநாள் மட்டும் அன்னையர் தினம் கொண்டாடிவிட்டால் போதுமா? கறவை மாடுகள் பால் வற்றிவிட்டதும் அதைத் துரத்திவிடுவதைப்போல அன்னையர்கள் முதுமை அடைந்ததும் ‘கிழட்டு மாட்டைக் கொட்டிலில் தள்ளு’ என்பதைப்போல முதியோர் இல்லங்களுக்கு ஏன் விரட்டப்படுகிறார்கள்? இப்படிப் பலவிதமான யோஜனையில் ஈடுபட்டிருந்த தங்கத்தை அம்மாவின் குரல் இழுத்தது.

https://www.dreamstime.com/stock-images-gossip-silhouette-image26147964”தங்கம், போன வருஷமே பார்வதி மாமி சொன்னா. அமெரிக்காவிலேந்து மதர்ஸ் டேக்கு அருணா கிஃப்ட் அனுப்பியிருந்தாளாம். மாமி அந்த வைரமோதிரத்தப்போட்டுண்டு காட்டினாள். மாமிக்கு ரொம்பப் பெருமை!’’

’’மாமிக்கு அவ பொண் அனுப்பறதில என்ன பெருமை?”  தங்கம் சூள் கொட்டினாள்.

’’ஒனக்குத் தெரியாதா? அருணாமாமியோட பெத்த பொண் இல்லை. வளர்த்த பொண்ணாக்கும்”

“என்னம்மா புதுக்கதையாயிருக்கே!

“ஆமாம், அப்ப நீ ரொம்பச் சின்னவள்.”

“அப்படீன்னா அருணாவோட நெஜ அம்மா அப்பா யாரு? அருணா அடாப்டட் சைல்டா?”

“அப்படியும் இல்லை. சொல்லறேன் கேளு.  பார்வதிமாமி-சுந்தரம் தம்பதிக்கு ரொம்பநாளா கொழந்தைப்பாக்கியம் கிட்டவேயில்லை. எவ்வளவோ பரிகாரங்கள், பூஜைகள், க்ஷேத்ராடனங்கள்னு எல்லாமே பார்த்தா. மணி மந்த்ர ஔஷதன்ம்னு எல்லாமே பார்த்தா. மாமி ரொம்ப நன்னா கைவேலையெல்லாம் செய்வாள். ஊரிலேயே அவாத்து கொலு ரொம்பப் பிரசித்தம். மாமி கையாலேயே பூம்பல்லாக்குப் பண்ணி, அதில ஸ்வாமியும் அம்பாளையும் வெச்சு நவராத்திரி கொலுவில வெச்சிருப்பாள். அதப்பாக்கவே கூட்டம் வரும். நவராத்திரி ஒம்பதுநாளும் தாம்பாளத்தில முத்தாலத்தி போட்டுவெச்சிருப்பாள். இன்னிக்கெல்லாம் பார்த்துண்டேயிருக்கலாம்போல அவ்வளவு அழகாயிருக்கும். அவா வீடும் பெரிய ரெட்டை வீடு.

“அதுல ஒரு வீட்டுக்குப் புவனாவும் நீலகண்டனும் புதுசா கல்யாணமாகிக் குடிவந்தா. நீலகண்டனுக்கு இஞ்சினீயர் வேலை. அடிக்கடி காம்ப் போகவேண்டியிருக்கும். அப்பல்லாம் புவனா, மாமி கூடவேயிருந்து லேஸ்பின்ன, கூடை முடைய, பாசிவேலைகளெல்லாம் கத்துண்டா. புவனாவுக்கு அம்மா இல்லை. புவனா உண்டாகியிருந்தபோது மாமிதான் அவளுக்குத் தாயாயிருந்து வாய்க்கு ருசியா வேண்டி யதையெல்லாம் செஞ்சு குடுத்தா. சீமந்தம் கழிஞ்சு பிரசவத்துக்குப் போகக்கூட புவனாவுக்கு மனசேயில்லை. புவனாவின் சிறியதாயார் ரொம்பவும் வற்புறுத்தினதால ஒருமட்டும் போகச்சம்மதிச்சா. ஆனா அவா வந்து அழைச்சிண்டு

போறதுக்கு முன்னாலேயே புவனாவுக்கு வலியெடுத்துவிட்டது. பிரஷர் அதிகமாகவே எவ்வளவோ முயற்சி பண்ணியும் புவனாவக் காப்பாத்த முடியலை.

”மாமி, நான்தான் தாயில்லாப் பொண்ணாயிட்டேன்.  எனக்கு ஏதாவது ஆச்சுன்னா என் கொழந்தையப் பாத்துப்பேளா,”ன்னு கேட்டாளாம். அதிலேந்து பார்வதிமாமிதான் அருணாவை வளர்த்தாள். அருணாவுக்கு ரெண்டுவயசு வரைக்கும் நீலகண்டன் இங்க இருந்தார். அப்பறம் அவருக்கும் மாத்தலாயிடுத்து. அவர் அம்மா அப்பா கட்டாயப்படுத்தி இன்னொரு கல்யாணமும் பண்ணிவெச்சுட்டா. அருணா, மாமிகூடவே இருந்துட்டா. நீலகண்டனுக்கும் மூணு கொழந்தைகள் பொறந்துட்டா.”

”பார்வதி மாமியும் மாமாவும்தான் அருணாவைப் படிக்கவெச்சு பெரிய எடத்தில கல்யாணமும் செஞ்சு குடுத்தா. மாமி தன்னோட நகைகளையெல்லாம் அழிச்சு, பார்த்துப்பார்த்து, புதுசுபுதுசாப் பண்ணினா.”

“ஏம்மா, அருணாவுக்கு இதெல்லாம் தெரியுமா?”

“அவ கல்யாணம் வரை தெரியாது.  கல்யாணத்தில யார் மனையிலிருந்து தாரைவார்த்துக் கொடுக்கவேண்டும் என்ற பிரச்சனை வந்தபோதுதான் தெரியும்.

”நான் அன்னிக்கே என் கொழந்தையை அவா கையில ஒப்படைச்சாச்சு. அன்னிக்கே அவாளுக்குத் தாரைவார்த்துக் குடுத்தாச்சு,”ன்னு நீலகண்டன் ரொம்ப அழுதாராம் மேலும் பொறந்த அன்னிலேந்து அவாதானே வளக்கறா? அதனால அவாளே கல்யானம் பண்ணிக் குடுக்கட்டும்,”னு தீர்மானம்செஞ்சு, மாமாவும் மாமியும்தான் கல்யாணம் பண்ணிக்கொடுத்தார்கள். அருணாவுக்கும் இதில சந்தோஷம்தான்.

“அருணாவுக்கு ஒரு கொழந்தை பொறந்ததைப் பார்த்துட்டுத்தான் சுந்தரமாமா காலமானார். அருணாவின் கணவர்தான் சுந்தரமாமாவுக்கு எல்லாக் காரியமும் செஞ்சார். இப்ப, மூணுவருஷ காண்ட்ராக்டில அமெரிக்கா போயிருக்கா. அநேகமா அடுத்த வருஷம் திரும்பவந்து மாமியைக் கூட்டிண்டுபோகப் போறா,’’ என்றாள் அம்மா.

பெற்றெடுத்த அன்னை தேவகியைவிட வளர்த்த அன்னை யசோதையின் பெருமையைத்தானே உலகம் புகழ்கிறது? அன்னையர் தினத்தன்று மாமிக்கு அருணா பரிசு அனுப்பியதில் வியப்பேது?

 ***   ***   ***

3 Replies to “அன்னையர் தினம்”

  1. ॐ வணக்கம்
    ​வளர்ப்பு சரியாக இருந்தால், முதியோரும் மருமகளை மகளுக்குமேலாக பாசத்தோடு நடத்தினால், ​முதியோரும் கொஞ்சம் வாயடக்கினால் / நாவடக்கினால், முதியோரில்லங்கள் மூடப்படும்.
    ​​​​​
    கோபால க்ருஷ்ணன். ஹ.

    துன்பங்களுக்கு மருந்து காலம் / மெளனம்.

  2. இப்படியும் இருக்காங்க தான். அதே போல் ரகுவைப் போலும் இருக்காங்க தான். ஆனால் நாடு நாடாகச் சுற்றும் ரகு தன் தாயை எங்கே கொண்டு வைச்சுப்பார்? அதையும் யோசிக்கணும். அதோடு இல்லாமல் பெரும்பாலான பெற்றோர்கள் இப்போதெல்லாம் தனியாக இருக்கவே விரும்புகின்றனர். குழந்தைகளோடு சேர்ந்து இருக்க விரும்புவதில்லை. குழந்தைகளுக்கும் ஒத்துப் போவதில்லை. ஆகவே முடிந்தவரை தனியாக வாழ்க்கை நடத்திவிட்டு முடியாது போனால் முதியோர் இல்லம் செல்கிறார்கள். அதிலும் பிரச்னைகள் இருக்கத் தான்செய்கிறது. ஓய்வூதியம் வாங்குகிறவர்கள் முதியோர் இல்லத்தின் நிர்வாகிகள் மூலமாகவே வாங்க வேண்டும் என்று ஒரு சில முதியோர் இல்லங்கள் வற்புறுத்துகின்றன. 🙁 அதோடு மருத்துவச் செலவுகள் எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்னு சொன்னாலும் செலவுகள் முதியோர் இல்லம் மூலமாப் போனால் அதிகம் தான் ஆகிறது. இம்மாதிரிப் பிரச்னைகள் இல்லாத முதியோர் இல்லங்களாகத் தேடிப் பிடித்துத் தான் போக வேண்டும். வெளிநாட்டில் போய் வசிக்கப் பிடிக்காத/இயலாத பெற்றோருக்குக் கவனிக்க ஆள் இல்லை எனில் முதியோர் இல்லம் தான் கதி! நன்மை, தீமை இரண்டும் கலந்தே இருக்கிறது. ஆனால் இந்த அன்னையர் தினம், காதலர் தினம், பெண்கள் தினம் என்று கொண்டாடுவதில் எனக்கும் விருப்பம் இல்லை. 🙂

  3. குபுத்ரோ ஜாயதே குமாதா ந பவதி என்பது ஒருவடமொழி வழக்கு. தீயவனாக ஒரு பிள்ளை பிறக்கக் கூடும், ஒரு தாய் தீயவளாக இருப்பதில்லை என்பது அதன் பொருள்.
    எல்லாவற்றிற்கும் ஒரு தினம் கொண்டாடும் புது வழக்கம் ஒரு ஸமூக நோய். தஞ்சை மாவட்டத்தில் ஒரு பழமொழி உண்டு “அம்மா அம்மணமாய் இருக்கிறாள் பிள்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்தானாம்”(சொல் வழக்கில் கொச்சையாய் சொல்வதை நாகரிகம் கருதி சற்று மாற்றியுள்ளேன்) முதியோர் இல்லத்தில் தாயை விட்டுவிட்டு பணம் கொடுத்துவிட்டு முடிந்த போது (மனைவி அனுமதித்தால்) பார்த்து விட்டு வந்தால் போதும் என்கிற நாகரிகம் பெருமளவில் பரவியுள்ளது. அதே நேரத்தில் முதியோரும் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவ்வாறிருக்கும் சிலரை “விட்டேற்றி”யாய் இருக்கிறார்கள் என்று குறை சொல்லும் மனிதர்களும் உள்ளனர். என்னை ஒரு வார்த்தைக் கேட்டால் என்ன என்று சொல்லும் முதியோரிடம் கோபிக்காமல் ஒரு பாவனையாகவாவது நடந்தால் இளைய தலைமுறையின் சுதந்திரம் ஒன்றும் பறிபோகாது என்பதையும் புரிந்து கொள்வது நல்லது. மொத்தத்தில் மனிதாபிமானத்துடன் நடந்தால் பிரச்னைகளில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *