பாரதியின் பாடல்களில் வேதத்தின் ஆளுமை

ஒரு யுகக்கவிஞன் என்ற அடையாளத்திற்குள் அடங்கும் பாரதி இறந்தகாலக் காட்சித்தெளிவும், நிகழ்கால முரண்பாடுகளின் சாரமும் அறிந்தவன் என்பதால் எதிர்காலத்தை உணர்ந்தவனாகிறான்.  மனிதவர்க்கத்தின் வரலாற்றில் இந்த நூற்றாண்டைப்போல வேறு எப்போதும் சமுதாய உணர்வு இவ்வளவு ஆழமும்,அகலமும் பெற்றிருந்ததில்லை.  புதுமை, சமுதாய உணர்வு, விரிவு, தீர்க்கமான பார்வை என பாரதியின் பார்வை தனிப்பட்டு அமைந்திருக்கிறது. இயற்கை, சமுதாயம்,மனம் என்று மூன்று பிரிவாக வாழ்க்கையைக் கண்ட பாரதி, தனக்கே உரிய முறையில் அவைகளுக்கு விளக்கம் கண்டு வாழமுயன்றதன் விளைவு – கலை, இலக்கியத் தத்துவங்கள்,,கோட்பாடுகள் அவன்வசம் வளைந்தன.  அதனால் உருவம், உள்ளடக்கம் இரண்டும் அவனுக்கெனத் தனியானது.

உயர்ந்த சிந்தனைகள் உலகப் பொதுவானவை.  அவற்றில் ஆழ்ந்துபோனவர்களுடைய கருத்தில் அவை நிலையாகத் தங்கி, அவர்களின் படைப்புகளில் அப்படியே  சிலசமயங்களில் சிலகருத்துக்கள் சிறிதும் வேறுபாடில்லாமல் வெளிப்படுகின்றன.  இதுவே ஆளுமையாகிறது. இவ்வகையில் ஆன்மீகம் சார்ந்த தேசியத்தை வலியுறுத்திய பாரதியின் படைப்புகளில் வேதத்தின் ஆளுமை மிக இயல்பாகவே இருக்கிறது. அதனால்தான் “பாரத சக்தி யாகத்தில் மந்திரங்களைத் தமிழில் பாடிய வேதக்கவி பாரதியே,” ”என்று சுத்தானந்த பாரதியின் பாராட்டு அமைகிறது.

வித்” என்பதை வேர்ச்சொல்லாகக்கொண்ட வேதம் என்பதற்கு ’அறிதல்’ என்று பொருளாகும்.  ’பரம்பொருளைக் குறித்த மெய்ஞ்ஞானம்’ என்று இதனை விளக்கிச் சொல்லமுடியும். அழிவில்லாத வேதம் காதால் கேட்டறியப்படுவது ஒவ்வொரு வேதமும் ஸம்ஹிதை, பிராமனம் என்ற இரண்டு பகுதிகளைக் கொண்டது.  ஸம்ஹிதை மந்திரங்களின் தொகுதியாகவும், பிராமணம் மந்திரங்களின் பொருளையும், பயன்படுத்தும் விதத்தையும் விரித்துச் சொல்வதாகும்.

ஆரண்யகங்கள் பொது வழிபாட்டுமுறைகளின்  குறியீட்டு விளக்கவுரைகள்மீதான தவம் இயற்றுவதைக் குறிப்பிடுவதாகும். உபநிடதங்கள் வாழ்க்கையின் இறுதிலட்சியத்தைத் தத்துவமாகக் காட்டுபவை. வரம்பில்லாத விரிவுடைய வேதம் மானுடத்தின் பண்பாடு, செம்மை, நல்லொழுக்கம் ஆகிய அனைத்தையும் உன்னதப்படுத்துவதாகும். முறைப்படுத்திக் கடைப்பிடித்தால பிரம்மத்தை உணரமுடியும் என்பது அடிப்படைத் த்த்துவம்.

          ’இந்த ஆன்மாவே பிரம்மம்’”

          ’அது நீயாக இருக்கிறாய் ”

          ’உன் விழிப்பே பிரம்மம்’”

          ’பிரம்மம் நானே’

இவை வேதத்தின் அடிப்படை நிலைகளாகும்.  வேதரிஷிகள் காலத்தில் விக்கிரக ஆராதனை, சந்நியாசம் போன்றவைகள் இல்லை.  பக்தி மட்டுமே உண்டு. ’இந்திரன் ,அக்னி, வாயு. வருணன் என்ற பெயர்கள் பரமாத்மாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.  தவிர, சூரியன், கடல் ஒளி, வானம், பனி, வைகறை  என இயற்கையைத்தான் வேதம் போற்றியிருக்கிறது

பாரதி பன்மொழிக் கவிஞன்.  அவனுக்கு ஓரளவு வடமொழித் தொடர்பு இருந்ததெனினும்  புதுவையில் அரவிந்தரோடு ஏற்பட்ட நட்பு வேதத்தின்மீது நெருக்கம் கொள்ளக்     காரணமாயிருந்தது.  வடமொழி   இலக்கியத்தில் இருவருக்கும் இருந்த புலமை,அடிக்கடி வேதக் கருத்துகளை விவாதித்த தன்மை,ஆகியவை பாரதியின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை வேதத்தின் மீது ஏற்படுத்தியது.

பாரதி அத்வைத்வத்தில் பெரும் நம்பிக்கைகொண்டவன்.  அதுதான் அவனது வேதப்பாடல்களின் அடிப்படை.’ தன்னை உணர்வதுதான்’ இந்தத் தத்துவத்தின் உச்சக்கட்டம் என்பதை அவன் பாடல்கள் காட்டுகின்றன.

இயல்பில் வேத இலக்கியம் குறியீடு சார்ந்தது.  வேதமொழியில் ’காடு ”என்பது உள்ளத்தையும், வானம் என்பது ”ஞானத்தையும்’,’ ஆர்வம்” என்பது ’சித்தத் துணிவு ”என்பதையும் வெளிப்படுத்துவதாகக்  குறிப்புகள் உண்டு,.’ அக்னி பகவான்’ கவிதையில் வேதரிஷிகள் தீயின்மீது நெய்யூற்றி அக்னியைப் போற்றுகின்றனர்.

     தீ வளர்த்திடுவோம்—பெருந்தீ

     வளர்த்திடுவோம்

     சித்தத் துணிவினை மானுடக் கேள்வனைத்

     தீமை அழிப்பவனை-நன்மை

     சேர்த்துக் கொடுப்பவனைப்—பல சீர்களுடையவனை”

போற்றுவதாக பாரதியின் பாடல் அமைகிறது.  சில  பாடல்கள் வேதத்துடன் நேரடியான தொடர்புகொண்டவையாக உள்ளன. வேள்விப்பாட்டு இதற்குச் சான்றாகும்.

     “அச்சம், துயரம் என்ற இரண்டு

       அசுரர்கள் வந்து இங்கு எம்மை

       சூழ்ந்து நின்றார்“

என்று தேவர்கள் சொல்வதாக அறிமுகம் செய்துவிட்டு அசுரர் செய்யும் துயரங்களைப் பட்டியலிடுகிறான்.  பின்பு,

             “”பாடிநின்று உனைப் புகழ்வோம்—

             எங்கள் பகைவரை அழித்தெமைக் காத்திடுவாய்””

என்று வேள்விப்பாட்டில் வேண்டுகிறான் .துன்பம் தரக்கூடிய அச்சம், கவலை ஆகியவை மனித அழிவுக்குக் காரணம்.  இந்த உணர்வுகள் மனித உயிருக்குள் புகுந்து அறியாமையை வளர்க்கின்றன.  மனிதனை ஞானம் பெறவிடாமல் தடுக்கின்றன. அக்னிக்குஞ்சு என்ற சித்தத் துணிவு ஞானத்தை வளர்க்கிறது என்று குறியீட்டு நிலையில் கவிதை அமைகிறது.

’அக்னி தோமம் என்ற கவிதை, தேவர்கள்—அசுரர்கள்  இடையே நடக்கும் உரையாடல்போன்ற கவிதைப் பாங்கில் அமைகிறது. அசுரர்களை வெற்றிகொண்டவர்களாக ரிஷிகள் அக்னியைப் போற்ற, அசுரர்கள் தங்கள் தோல்வியை நினத்துப் புலம்புவதாக அமையும் இக்கவிதை மிகச் சிறந்த கவிதையாக மதிப்பிடப்படுகிறது. இது வேதக்கவிதைத் தன்மையில் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

    ரிஷிகள்:   வானை நோக்கிக் கைகள்தூக்கி

                  வளருதே தீ! தீ!— இந்நேரம்

               ஞானமேனி உதயகன்னி

                  நண்ணி விட்டாளே –இந்நேரம்

    அசுரர்:     வலியிலாதார் மாந்தரென்று

                 மகிழ்ந்து வாழ்ந்தோமே

              கலியைவென்றோர் வேதவுண்மை

                 கண்டு கொண்டாரே –அம்மாவோ

வேத அனுபவத்தின் வெளிப்பாடாக ,வேத ஆளுமைக்குட்பட்ட தன்மைக்குச் சான்றாக உள்ள பகுதி இதுவாகும்.

கலைமகளை வேண்டுதலில் “எம்மை வேதங்களாக்கிடுவீர்” எனவும் ,இன்று தேவர்களை அழைக்கிறோம் எம்மை ரிஷிகளாக்கும் பொருட்டு” எனவும் அமைகிற வேண்டுதல் வேதங்களின்மீது அவருக்கிருந்த அளவற்ற பற்றைக் காட்டுகிறது. மண்ணில் விண்ணைக் காணத் தூண்டும் இயல்புடையது வேதம் என்பதால் அதன் பொருளை அறிந்துகொண்டு வேதத்தை நம்பவேண்டுகிறார். எல்லாப் பொருளையும் ஒன்றாகக் காணும் நிலைதான் வேதரகசியம் என்றும்அது ஏற்பட்டுவிட்டால் துன்பமில்லை எனவும் வழிநடத்துகிறார். பாரதியின் கவிதைகளில் வேதம் என்ற பழமறை, பாடல் வரிகளாக வருகிற இடங்கள் கணக்கற்றவையாகும்.

                       ’வேதப்பயிர் செய்து”

                       “வேதவாழ்வினைக் கடைப்பிடித்தோம் “

                       “வேதங்கள் பாடுவாள் காணீர்”

என்று சில சான்றுகள் காட்டலாம்.  வேதவழியில் பஞ்சபூதங்களை உள்ளடக்கி, அதற்குத் தலைமைதந்து, வேதமே நாதம்; அதுவே இயக்கு சக்தி என்று பாரதி கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.”

சுருதிகள் பயந்தனை சாத்திரம் கோடி சொல்லரும் மாண்பினை ஈன்றனை ”என்று பாரமாதாவைப் பெருமைப்படுத்தி வேதத்தை சாசுவதப் படுத்துகிறார். ஆத்திச்சூடியில் ”தெய்வம் நீ என்றுணர்” [நீ அதுவாகவே இருக்கிறாய்] என்று சொல்வதும் குறிப்பிடத்தக்கது.” மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்” என்று பேசும்விதத்தை உணர்த்துகிறான்.

அவன் சிந்தனையில் கர்மயோகம்தான் உலகைக் காக்கும் வேதமாகிறது. தன்னை வெல்பவனுக்கு எதுவும் சாத்தியமாகுமென்று வேதம் கூறியதாகக் காட்டிவிடுவதோடு நின்றுவிடாமல் ”மெய்ம்மைகொண்ட நூலை அன்போடு வேதமென்று போற்ற வா ”என்று புதிய பாரதத்தை அழைக்கிறான்.

வேதங்களில் அக்னிக்கான சிறப்பு வழிபாட்டுமுறைகள் சொல்லப்பட்டுள்ளன.  ரிக் வேதமும், சாம வேதமும் அக்னியைப்பற்றி விவரிக்கும் போது அக்னியி லிருந்து சுபிட்சமும், சூரியனிடமிருந்து ஆரோக்கியமும் கிடைக்கும் என்கின்றன.

சூழ்நிலையைச் சுத்தப்படுத்துவதில் அக்னியின் பங்கு மிகப் பெரியது என்று இன்றைய விஞ்ஞானத்திலும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.  மனிதனின் பரிணாம வளர்ச்சியில்  அவனுக்கு அறிவையும், நாகரிகத்தையும் ஊட்ட நெருப்பு பயன்பட்டுவந்திருக்கிறது. ” சக்தியைத் தூண்டுபவனும், தெய்வீக முதல்வனுமாகிய அக்னியை வணங்குகிறேன்” என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதைப் போல “தீயே நின்னைப் போலவே  எமதுள்ளம் சுடர் விடுக,”” என்று வேண்டுகிறான்.

தீ வளர்த்தல் என்பது ஒரு சடங்கு மட்டுமல்ல. அன்பு, அறிவு ,அருள், இன்பம் ஆகியவை வேண்டும் கனலாகும் அக்னி தத்துவத்தில் அவனுக்கு பெருமதிப்பு இருந்ததால்தான் வழிபாட்டு அம்சங்களில் மட்டுமின்றி, கவிதைநயம் வெளிப்படும் இடங்களிலெல்லாம்  தீ, நெருப்புச்சுவை, சுடர் சோதி, கனல், அக்னிக்குஞ்சு போன்ற சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறான்.

அக்னியின் பல்வேறு வடிவங்கள் குறியீடுகளாகவும், நேர்முகக் கருத்துக்களாகவும், அமைகின்றன. அறியாமை உறக்கத்திலிருந்து ஆத்மாவை எழுப்பும் விடியலாக வைகறை வேதங்களில் காட்டப்படுகிறாள்.

வைகறை மலராகச் சிரித்து தேனாக இனிப்பதாக் பாரதியின் சிந்தனை வளர்கிறது.  ரிக் வேதம் சூரியனைத் “தெய்வீக ஒளி”’ என்று வர்ணிக்க பாரதி “நீ ஒளி  நீ காட்சி நீ விளக்கம்,”” என்று போற்றுகிறான்.

வேதம் என்ற சொல் ஏறக்குறைய ஐம்பது இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது .

வேதத்தில் பேணப்படும் பெண்ணுரிமைக்கு பாரதி தலைவணங்குகிறான். அதனால்தான் அவனுடைய புதுமைபெண் “வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் வேண்டி வந்தோம்,””என்று கும்மி அடிக்கிறாள்..’ வேதம் பொன்னுருக்கன்னியாகியே” என வேதத்திற்கு பெண்மைக்கோலம் தந்து மரியாதைப்படுத்த பாரதியால்முடிகிறது.

இயற்கையுடன் இணைந்து வாழக் கற்றுக்கொண்டுவிட்டால் தனிமை உணர்ச்சிகளுக்கு இடமில்லை, .வாழ்க்கை வாழ்வதற்கே என்ற எண்ணத்தை இது ஏற்படுத்தும்.

வீரமான இவ்வுணர்வுகளுக்குமுன்னால் தோல்வி பெரிதாகத் தெரிவதில்லை .இரக்க உணர்வு, தர்மசிந்தனை, கோபமின்மை, புண்படுத்தாத சொற்கள், மனிதாபிமானம் ஆகியவற்றை பக்தி தருகிறது. பக்தி வேதம் சார்ந்தது.  வாழ்க்கையை மாயையாகக் காட்டி மண்ணாவது உறுதி என்று பேச பாரதி தயாராக இல்லை.

எனவேதான் “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் வாழ்வில், இறைவா! இறைவா!!“ எனப் பரம்பொருளைக் கேட்டுமகிழ்கிறான்.”  நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவே ஆகிறாய் ”என்ற மரபில் உலகத்தை வழிநடத்துவதே அவன் குறிக்கோளாகிறது.  தவிர வேதம், உபநிடதம், புராணங்கள் ஆகியவற்றை இன்றைய தேசமொழிகளில் மொழிபெயர்க்கவேண்டும் எனவும், புத்தகம், இதழ்கள், சொற்பொழிவுகள்மூலம் எங்கும் வேதம் பரப்பப்படவேண்டும் என்பதும் அவன் விருப்பமாகிறது.

சர்வசமய சமரச ஞானியான அவன் மனிதசமூக மனசாட்சியின் குரலாக ஏதோ ஒரு கணத்தில்மட்டும் ஒலிக்காமல், தனது வாழ்க்கை முழுவதிலும் அத்தகைய குரலை ஒலிக்கச்செய்தவன்வே  தங்கள்மீதுகொண்ட விருப்பம்தான் “வானமிங்கு தென்படவேண்டும்”,”என்றும்”, மண்ணில் தெரியும் வானம்” என்றும் அவனைச்  சொல்லவைத்திருக்கிறது. ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பான பாரதியை கூட்டுமேதை ”என ஜீவா பாராட்டியிருப்பது பொருத்தமானதே.

***   ***   ***

 

3 Replies to “பாரதியின் பாடல்களில் வேதத்தின் ஆளுமை”

  1. மிக அருமையான விளக்கங்கள். பாரதியை, அவன் சிந்தனைப்போக்கை, இவ்வாறு வேதங்களின் துணைகொண்டு ஆராய்ந்தது இக்கட்டுரையே என எண்ணுகிறேன். பாரதியார் தமது கொள்கைகளில் மிக ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார் என்பதனையும் இக்கட்டுரை தெளிவாக்குகிறது.

    கட்டுரையாளர் திருமதி மீனாவுக்கு வாழ்த்துக்கள்

  2. பாரதியின் இன்னுமொரு பரிமாணத்தை கட்டுரை ஆசிரியர் சுவைபட எடுத்துக் காட்டியுள்ளார்.

  3. //வித்” என்பதை வேர்ச்சொல்லாகக்கொண்ட வேதம் என்பதற்கு ’அறிதல்’ என்று பொருளாகும்.// Please explain more from original sources. Thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *