மீண்டும் அம்மா: மீளாத தமிழக அரசியல்

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அம்மாவுக்கு மீண்டும் அரியணையைத் தந்துவிட்டன. ஆளுங்கட்சி மீதான அதிருப்தி அலையை மீறி, மீண்டும் வெற்றி பெற்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆறாவது முறையாக முதல்வராகி இருக்கிறார். அதேசமயம், மாற்று அரசியலுக்கான வாய்ப்பு என்ற கருதுகோள் இந்த முடிவுகளில் மிகக் கடுமையாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

election tn1தமிழக அரசியல் களம் திமுக- அதிமுக என்ற இரு திராவிட அரசியல் கழகங்களிடையிலான வேட்டை மைதானமாக மாறி இருக்கிறது. இதை மாற்ற இம்முறை அருமையான வாய்ப்பு உருவாகி இருந்தது. ஆனால், மூன்றாவது அணி என்ற பெயரில் உருவான கோமாளிக் கூட்டணியால் அந்த வாய்ப்பு தகர்க்கப்பட்டுள்ளது. தன்னை அதீதமாக முன்னிறுத்திய அன்புமணி ராமதாஸின் பாமகவுக்கும் இதில் பெரும் பங்குண்டு.

இதில் அதிக லாபம் பெற்றவர் ஜெயலலிதா தான். மூன்றாவது அணியான மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளான மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ, தமாகா, தேமுதிக ஆகிய கட்சிகள் நடத்திய பிரசாரம் அதிமுக அரசை எதிர்த்து இருந்தபோதும், திமுகவின் வெற்றி வாய்ப்பையே அக்கட்சிகள் பாதித்துள்ளன. அதேபோல பாமக, பாஜக பெற்ற வாக்குகளும் இத்தேர்தலில் பல தொகுதிகளின் தலைவிதியில் மாற்றத்தை ஏற்படுத்தின.

இந்தத் தேர்தல் பருவம் துவங்கியபோதே அதிமுக தான் முன்னிலையில் இருந்தது. எனவே தான் தேமுதிக என்ற பழம் திமுக என்னும் பாலில் விழுமா என்று காத்திருந்தார் கருணாநிதி. தேமுதிக, திமுக- காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருந்தால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்திருக்கக் கூடும். ஆனால், மு.க. ஸ்டாலினின் பிடிவாதமும், வைகோவின் தந்திரமும் அவ்வாறு கூட்டணி அமைவதைத் தடுத்துவிட்டன. திமுக கூட்டணி ஆட்சிக்கு உடன்படாது என்ற ஸ்டாலினின் யதார்த்தம் உணராத பேச்சு விஜயகாந்தை திமுகவுக்கு எதிரான நிலையை எடுக்கச் செய்தது. அவர் பாஜக பக்கமும் வராத வகையில் வைகோ குழு செயல்பட்டது. அதன் விளைவாக, இன்று தனது செல்வாக்கை முற்றிலும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் விஜயகாந்த்.

election tn2

எது எப்படியோ, நான்காவது முறையாக அதிமுகவை வெற்றி பெற வைத்திருக்கிறார் அம்மா. ஆளும் கட்சியின் செயல்வேகம், பணபலம், கட்சியினரின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றால் இது சாத்தியமாகி இருக்கிறது. “ஆண்டவனை நம்பி மக்களுடன் கூட்டணி அமைத்தேன். பெரிய கட்சிகளின் கூட்டணி பலமின்றியே இந்த வெற்றியைத் தந்த மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என்று அவர் கூறியிருப்பது முற்றிலும் உண்மை.

ஆயினும், இது வரை இல்லாத வகையில் எதிரணி 98 இடங்களுடன் சட்டசபையில் நுழைகிறது. அதிலும் திமுக மட்டுமே 89 உறுப்பினர்களுடன் இருப்பதால், சட்டசபையில் இனிவரும் நாட்களில் காரசாரமான காட்சிகளைக் காண முடியும். இதுவரை அதிமுக அதீதப் பெரும்பான்மையுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்களை கிள்ளுக்கீரையாக நடத்திய காட்சிகளை இனிமேல் காண முடியாது. ஒரு வகையில் ஜனநாயகத்துக்கு இது மிகவும் நல்லது.

இந்தத் தேர்தலின் முக்கிய தீர்ப்புகள்:

  • மக்கள் நலக் கூட்டணி என்ற மூன்றாவது அணி முயற்சி, எதிர்பார்த்தது போலவே சோபிக்கவில்லை. குறைந்தபட்சம் அது மூன்றாவது இடத்தையும் கூட பிடிக்கவில்லை. பல இடங்களில் பாமக தான் மூன்றாவதாக வந்துள்ளது. வாக்கு சதவிகிதத்தில் அந்த 6 கட்சிகளின் கூட்டணி பெற்ற விகிதம் சுமார் 6 சதவிகிதத்தை நெருங்கி இருக்கிறது. ஆயினும், தனிக் கட்சி என்ற முறையில், அதன் முக்கியமான கட்சியான தேமுதிக ஆறாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதன் மூலமாக இடதுசாரிகளின் கனவுகளும் நிராசையாகிவிட்டன.
  • இந்த சட்டசபையில் தான் இடதுசாரிகள் முற்றிலும் துடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து சட்டசபை சென்ற சிபிஎம், சிபிஐ கட்சிகள் இம்முறை மிகக் கடுமையான தோல்வியைச் சந்தித்துள்ளன. இவர்களை நம்பி கூட்டணி கண்ட கட்சிகளும் இதனால் பலத்த அடி வாங்கியுள்ளன.
  • வளரும் கட்சியாக இருந்த தேமுதிக, அதன் தலைமையின் உறுதியற்ற தன்மையால் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 2006 தேர்தலில் தனித்து நின்றே சுமார் 8 சதவிகித வாக்குகளைப் பெற்ற தேமுதிக, அடுத்து 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 இடங்களில் வென்றதுடன் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் பெற்றது. அடுத்து 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்று, தோல்வியுற்றாலும் மரியாதைக்குரிய வாக்குகளைப் பெற்றது. ஆனால், இம்முறை மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியதுபோல, மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராகக் களம் கண்ட விஜயகாந்துக்கு 2.40 சதவிகிதமாக வாக்குவீதம் குறைந்துவிட்டது. தவிர தான் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டையில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு, டெபாசிட் தொகையையும் அவர் இழந்தார்.
  • பாமகவின் கற்பனை சஞ்சாரத்துக்கும் இத்தேர்தல் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. தானே அடுத்த முதல்வர் என்ற அளவுக்கு ‘மாற்றம் என்றால் அன்புமணி’ என்ற கோஷத்துடன் களமிறங்கிய பாமக, 5 இடங்களில் மட்டுமே இரண்டாமிடம் வகித்து, அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. அதேசமயம், பல தொகுதிகளில் மூன்றாமிடம் பெற்ரு திமுகவின் வெற்றியை பாமக தடுத்துவிட்டது. அன்புமணியே தான் போட்டியிட்ட பென்னாகரத்தில், அத்தொகுதி வன்னியர் ஆதிக்கம் மிகுந்த தொகுதியாக இருந்தும்கூட, தோற்றிருக்கிறார்.
  • இந்தத் தேர்தலில்தான் அளவுக்கதிகமான முதல்வர் வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோருடன் போட்டிக்கு வந்த விஜயகாந்த், அன்புமணி, சீமான் ஆகிய மூவரும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். அவரவர் உயரத்தை அவர்கள் அறிந்துகொள்ள இத்தேர்தல் உதவி இருக்கிறது.
  • இலவச அறிவிப்புகள் இத்தேர்தலில் முக்கிய இடம் வகித்துள்ளன. முதலில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட திமுக, இலவச இணைய வசதி, விவசாயக்கடன் ரத்து ஆகியவற்றை அறிவித்தது. அதற்கு போட்டியாக, பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்க ரூ. 30,000 மானியம், திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம், இலவச செல்போன் ஆகியவற்றை அதிமுக அறிவித்தது. ஆக, தமிழக மக்கள், ஆட்சி நிர்வாகத்தை ஒப்பிட்டு வாக்களிப்பதற்கான சூழல் மாற்றப்பட்டு, இலவசங்களுக்காக கையேந்து பிச்சைக்காரர்களாகவே மாற்றப்பட்டனர். இதனை தமிழகத்தின் தார்மிக வீழ்ச்சியாகவே கருத வேண்டும்.
  • மதுவின் கொடுமைக்கு எதிரான சிந்தனைப் போக்கு தமிழகத்தில் உருவாகி இருப்பதை இந்தத் தேர்தல் களத்தில் காண முடிந்தது. அனைத்து அரசியல் கட்சிகளும் மதுவிலக்கு குறித்த உறுதிமொழியை அளித்திருப்பது ஆரோக்கியமானது. ஆட்சிக்கு வந்துள்ள அதிமுக, ஏற்கனவே உறுதி அளித்ததுபோல, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இதுவே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. தற்போது மதுக்கடைகள் திரக்கும் நேரத்தை காலையில் இரண்டுமணிநேரம் (10.00- 12.00) குறைத்தும், கடைகளின் எண்ணிக்கையில் 500-ஐக் குறைத்தும் ஆணை வெளியிட்டுள்ல முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டுகிறோம். ஆயினும் மிக்கவும் விரவில் பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமலாக உரிய நடவடிக்கைகளை அவர் எடுக்க வேண்டும்.
  • இந்தத் தேர்தலில் இஸ்லாமியக் கட்சிகளின் ஆதிக்கம் குறைந்துள்ளது. குறிப்பாக அதிதீவிர இஸ்லாமிய கட்சியான மமக தோல்வியுற்றிருப்பது நல்ல விஷயம். ஆயினும் திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் உறுப்பினர் ஒருவரும், அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவரும் வென்றுள்ளனர். இஸ்லாமியக் கட்சிகளின் தொலைநோக்கு அரசியலின் வெற்றியாகவே இதைக் காண வேண்டும்.
  • இம்முறை திமுகவுடன் கூட்டணி சேர்ந்துகொண்டு தினமலர், விகடன் போன்ற பத்திரிகைகள் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணைப்பை நடத்தின. திமுக வெல்வது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்க ஊடகங்களில் பெருத்த முயற்சி செய்யப்பட்டும், தமிழக மக்கள் அதைக் கண்டு ஏமாறவில்லை. மக்கள் முட்டாள்கள் எனக் கருதுபவரே முட்டாள் ஆவார் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு விகிதம்:

கட்சிகள்-  2016 சதவிகிதம் 

(அடைப்புக் குறிக்குள் முந்தைய 2011 தேர்த்லில் பெற்ற வாக்குவிகிதம்)

  • அதிமுக- 40.80 ( 38.40 )
  • திமுக- 31.60 ( 22.31)
  • காங்கிரஸ்- 6.50 (9.30)
  • பாமக-  5.30 (5.23)
  • பாஜக- 2.90 (2.22)
  • தேமுதிக-  2.40 (7.88)
  • மதிமுக- 0.90 (—)
  • வி.சி.கட்சி- 0.80 (1.51)
  • சிபிஐ-  0.80 (1.97)
  • சிபிஎம்- 0.70 (2.41)
  • நா.த.க- 1.10 (—)

கட்சிகளுக்கு சில படிப்பினைகள்:

  • முதலாவதாக, ஆட்சியைத் தக்கவைத்த அதிமுகவுக்கு இத்தேர்தலில் முக்கியமான எச்சரிக்கை உள்ளது. சென்ற தேர்தலில் வென்றது போன்ற அதீதப் பெரும்பான்மையை மக்கள் அதிமுகவுக்கு வழங்கவில்லை. அக்கட்சி ஜனநாயகத் தன்மையுடன் இயங்குவது அவசியம். சட்டசபையை அம்மா மன்றமாக இனிமேல் மாற்ற முடியாது என்பதை கழகக் கண்மணிகள் உணர வேண்டும்.
  • எதிரணியில் வலுவான கூட்டணி அமைவதைத் தடுத்தது, மிதமிஞ்சிய பணபலம், வாக்குகளை விலைபேசியது, இரு துருவ அரசியலாக பிரசாரத்தை மாற்றியது, இரட்டை இலை சின்னம், இலவச அறிவிப்புகள் போன்றவற்றால் தான் அதிமுக தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இனிமேல் ஆட்சி நிர்வாகத்தில் அக்கட்சி முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுவது கட்டாயம்.
election tn3
மீண்டும் முதல்வரான ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள்!

 

  •  திமுகவைப் பொருத்த வரை, சென்ற தேர்தலில் இழந்த கௌரவத்தை மீட்டிருக்கிறது. அரசு மீதான அதிருப்தியையும் தனது வாக்கு வங்கியையும் சரிவிகிதத்தில் கலந்து இந்த வெற்றியை திமுக ஈட்டி இருக்கிறது. வெறுப்பு அரசியலிலிருந்து மீண்டு பிரதான எதிர்க்கட்சியாக அக்கட்சி ஆற்ற வேண்டிய பணிகள் பல காத்திருக்கின்றன. வலுவான கூட்டணி இல்லையெனினும், காங்கிரஸ், முஸ்லிம் கட்சிகளுடன் திமுக கொண்ட உறவு ஓரளவுக்கு பயனளித்திருக்கிறது. உண்மையில் மு.க.ஸ்டாலினை கருணாநிதிக்குப் பதிலாக முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால், திமுக கூடுதல் வெற்றி பெற்றிருக்கும். இப்போது பிரதான எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதை முதலிலேயே கருணாநிதி செய்திருக்க வேண்டும்.
  • மூன்றாவது அணியில் விஜயகாந்தின் உளறல்கள், வைகோவின் நடிப்பு, இடதுசாரிகளின் சுயநலம், தமாகாவின் குழப்பமான கடைசிநேரப் பிரவேசம், விடுதலைச் சிறுத்தைகளின் ஜாதி உணர்வால் பிற ஜாதியினரின் அதிருப்தி ஆகியவை தேர்தலில் அதற்கேற்ற விளைவைத் தந்துள்ளன. இனிமேல், இந்தக் கூட்டணி தொடர்வது சந்தேகமே.
  • பாமக இத்தேர்தலில் தனித்துப் பெற்றுள்ள வாக்குகள் (5.30 %) அக்கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது. ஆயினும், அளவு கடந்த நம்பிக்கை, இறுமாப்பு, சுயநலத்தால் நல்ல கூட்டணி அமைவதைத் தடுத்து, தோல்வியின் படுகுழியில் விழுந்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். மதுவிலக்கை இத்தேர்தலில் பிரதானமாக்கியது பாமகவின் உச்சபட்ச சாதனை. எதிர்காலத்தில் அமையும்  அரசியல் கூட்டணிகளில் பாமகவின் பேரம் பேசும் திறனை இத்தேர்தல் முடிவுகள் கூட்டி இருக்கின்றன.
  • தேசிய ஆளுங்கட்சியான பாஜகவுக்கு தமிழகத்தில் நல்லதொரு மாற்றாக தன்னை முன்வைக்க வாய்ப்புகள் இருந்தன. ஆனால், பிற கட்சிகளின் தெளிவின்மை காரணமாக அந்த வாய்ப்பு நழுவிவிட்டது. இதற்கு பிற கட்சியினருடன் பாஜக தலைவர்கள் கொண்டுள்ள நட்புறவு வலுவாக இல்லாததும் காரணம். பாஜக தலைமையில் மாற்று அணி அமையாமல் தடுப்பதில் பணபலமும் விளையாடியுள்ளது. அதை பாஜக தேசியத் தலைமை சரிவரக் கையாண்டிருக்க வேண்டும். வாய்ச்சவடால் அறிக்கைகள மூலமாக அல்லாமல் (தமிழகத்தில் 60 லட்சம் பாஜக உறுப்பினர்கள் இருப்பதாக முழங்கிய மாநிலத் தலைவர் தமிழிசை என்ன சொல்லப் போகிறார்?), பாஜகவை உண்மையாகவே தமிழகத்தில் வலுப்படுத்த வேண்டும் என்பதை இத்தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது.
  • அதேபோல மத்திய அமைச்சர்கள், பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரின் பிரசாரம் மிகவும் கடைசியில் தான் செய்யப்பட்டது. இதனை இரு வாரங்கள் முன்னர் செய்திருந்தால், பாஜக தொண்டர்கள் கூடுதல் உற்சாகத்துடன் இயங்கி இருப்பார்கள். தவிர, பாஜக அனுதாபிகளும் கூட கடைசிநேரத்தில் திமுக ஆட்சிக்கு வருவதைத் தவிர்க்கும் நோக்கில் அதிமுகவுக்கு வாக்களித்துள்ளனர். சரியான ஒருங்கிணைப்பு இல்லாமை, கூட்டணி பலமின்மை ஆகியவை பாஜகவின் பாதக அம்சங்கள். எனினும், பாஜக, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 4 தொகுதிகளில் இரண்டாமிடம் பெற்றுள்ளது; தவிர, 32 தொகுதிகளில் மூன்றாமிடம் பிடித்துள்ளது. தவிர வாக்கு விகிதமும் 2.90 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • நாம் தமிழர் கட்சி, அதன் தலைவர் சீமான் செய்த பிரசார அளவுக்கு தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்யவில்லை. பிரிவினைவாதத்தை வலியுறுத்தும் அக்கட்சியின் தோல்வி தமிழகத்துக்கு நல்லது. இடதுசாரிகளை பின்னுக்குத் தள்ளியது தான் இக்கட்சியின் சாதனை.
  • யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களின் (நோட்டா) தேர்வு இம்முறை 5.5 லட்சமாக உயர்ந்துள்ளது (1.3 %). இது சென்ற தேர்தலைவிட பல மடங்குஅதிகம்.
  • மிகக் குறைந்த வாக்கு வித்யாசத்தில் வேட்பாளர்கள் பலர் வென்றிருக்கும் தேர்தல் இது. பலமுனைப் போட்டியே இதற்குக் காரணம். பணபலம் கோலோச்சிய தேர்தலும் இதுவே. சுமார் ரூ. 150 கோடி கணக்கில்லாத்தால் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டதும், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தலை ஒத்தி வைத்ததும், இத்தேர்தலின் களங்கங்கள். பணபலத்தில் திமுக, அதிமுக இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைக்கவில்லை. இத்தகைய தேர்தல் செயல்பாடுகள் ஜனநாயகத்தின் உறுதிப்பாட்டைக் கேள்விக்குறி ஆக்குகின்றன. தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் எங்குமே பயனளிக்கவில்லை (அதிரடி சோதனையில் சிக்கிய பணத்தின் பெரும்பகுதி வியாபாரிகளுக்கு உரியது. அரசியல்வாதிகளின் பணம் மிகக் குறைவாகவே கைப்பற்றப்பட்டது).

மொத்தத்தில், இத்தேர்தல், அம்மா மீண்டும் வெல்லவும், திமுக இழந்த பலத்தை மீட்கவும், மாற்று அணிக்கான வாய்ப்புகளை நிராகரிக்கவும் உதவியுள்ளது. எதிர்க்கட்சிகள் சுயநலத்துடன் பிரிவுபடுவது ஆளும்கட்சிக்கே சாதகமாகும் என்பதை மீண்டும் இத்தேர்தல் நிரூபித்துள்ளது.

 

 

19 Replies to “மீண்டும் அம்மா: மீளாத தமிழக அரசியல்”

  1. மேலே சொன்ன ஆய்வுக்கருத்துக்களில் ஒன்றே ஒன்றை மட்டும் ஏற்பதற்கு தயக்கம் ஏற்படுகிறது. விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி கண்டு , 2011 ஆம் ஆண்டு தேர்தலில் 29 எம் எல் ஏக்களையும் , எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தையும் பெற்றார் . அதே போல இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சென்ற 2011- தேர்தலில் அதிமுக கூட்டணியில் நின்று தான் 19 எம் எல் ஏக்களைப் பெற்றன.

    இந்த 2016- சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் மற்றும் இரு கம்யூனிஸ்டுகளும் அதிமுகவுடன் கூட்டணி சேராமல் , வேறு கட்சி தொகுப்பில் கூட்டணி சேர்ந்ததால், விஜயகாந்த் , மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரித்த ஓட்டுக்கள் , அதிமுகவுக்கு போகவேண்டிய ஓட்டுக்களே ஆகும். அதாவது அதிமுக இழந்த ஓட்டுக்கள் ஆகும்.

    பாமக சென்ற 2011- தேர்தலில் திமுக அணியில் இருந்த கட்சி. விடுதலை சிறுத்தைகளும் சென்ற 2011- தேர்தலில் திமுக அணியில் இருந்த கட்சி தான். எனவே பாமக, விசி ஆகிய இரு கட்சிகளும் திமுக அணியில் இருந்து விலகி வேறு இடம் சென்றுவிட்டதால் , அவை பெற்ற ஓட்டுக்கள் திமுக இழந்த ஓட்டுக்கள் ஆகும்.

    நமது கண்ணுக்கு தெரிந்து மீடியா முழுவதுமே விஜயகாந்த் அணிக்கு ஒரு பிரம்மாண்ட இமேஜை கிரியேட் பண்ணினார்கள். ஏதோ சுமார் 20 முதல் 30 வரை யிலான சதவீத ஓட்டுக்களை அந்த கூட்டணி பெற்றுவிடும் என்பது போல ஒரு பில்ட் அப் கொடுத்தார்கள்.

    ஆனால் நடந்தது என்னவெனில் விஜயகாந்த் கட்சி தலைமையில் அமைந்த ஆறு பேர் கூட்டணி சுமார் 25 சதவீதத்துக்கு பதிலாக 6 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெறமுடிந்தது.

    தெளிவாக தெரியும் உண்மை என்னவெனில் , விஜயகாந்த், இரு கம்யூனிஸ்டுகள், விசி, ஜி கே வாசன், வைகோ ஆகிய ஆறுகட்சிகளின் ஓட்டுக்களையும் உடைத்து , அதிமுகவும், திமுகவும், பாஜகவும், பாமகவும் சென்ற தேர்தலை விட அதிக சதவீத ஓட்டுக்களை பெற்றுவிட்டன. இதுதான் புள்ளிவிவரம் தெரிவிக்கும் உண்மை.

    தினமலர் ந்யூஸ் 7 சானல் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக அதிக இடம் பெறும் என்று சொன்னது கூட பரவாயில்லை அந்த கருத்து கணிப்பு எவ்வளவு தவறானது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். காரைக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கற்பகத்துக்கு 70 சதவீதத்துக்கு மேல் ஆதரவு இருப்பதாக தெரிவித்து , அதிமுக வெற்றி உறுதி என்று தெரிவித்திருந்தனர். ஆனால் அதிமுக தோற்று , இந்திரா காங்கிரஸ் வேட்பாளர் ராமசாமி அவர்கள் 18,000 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கருத்துக் கணிப்பு என்பது எவ்வளவு வெத்துவேட்டு என்பதற்கு இது ஒரு உதாரணம்.

    லயோலா கல்லூரியில் இருந்து முன்னாள் மாணவர்கள் என்று ஒரு பெயரிலும், இந்நாள் ராஜநாயகம் பெயரிலும் இரண்டு கருத்துக் கணிப்புக்கள் வெளியாகி , திமுக அணி வெற்றிபெறும் என்று தெரிவித்தனர். இதன் பின்னணியில் பாதிரியார்கள் சங்கம் ஒன்று திமுகவுக்கு ஓட்டுப்போடுமாறு கிறித்தவர்களை கேட்டுக்கொண்டது. அதன் விளைவாகவே அவர்கள் நோக்கத்துக்கு தகுந்தமாதிரி கருத்துக்கணிப்புக்களை அவர்கள் உருவாக்கி கொண்டார்கள் என்று அனைவரும் சந்தேகிக்கிறார்கள்.

    டைம்ஸ் நவ், தினத்தந்தி டிவி , ஸ்பிக் ந்யூஸ், குமுதம் ரிப்போர்ட்டர் , இந்திய வாக்காளர் பேரவை ஆகிய 5 கருத்துக் கணிப்புக்களும்,

    டைம்ஸ் நவ், தினத்தந்தி டிவி , ஸ்பிக் ந்யூஸ், குமுதம் ரிப்போர்ட்டர் , ஆகிய நாலு எக்சிட் போலும் மட்டுமே அதிமுக வெற்றியை சரியாக சொல்லின.

    மிக துல்லியம் என்று சொன்னால் ஸ்பிக் ந்யூஸ் துல்லியத்தில் 136 என்று சொல்லி முதல் இடத்தை வென்றது., தினத்தந்தி டிவி இரண்டாம் இடத்தை வென்றது. ஏனெனில் தினத்தந்தி டிவியின் எக்சிட் போலில், 18 தொகுதிகள் இழுபறி என்று முடிவு எடுக்க முடியாமல் உள்ளது என்றனர்.

    மற்றபடி இந்தியா டுடே, என் டி டி வி, டுடேஸ் சாணக்யா, நக்கீரன், தினமலர், ஜூனியர் விகடன் ஆகிய எல்லா கருத்துக் கணிப்புக்களுமே பல்பு வாங்கின.

    ஏறக்குறைய வதந்திகளை திமுக வட்டாரம் தெளிவாக பரப்பி , பதவி ஏற்க அமைச்சரவை பட்டியலைக் கூட தயாரித்ததாகவும், பதவி ஏற்பு திருவள்ளுவர் கோட்டத்தில் என்றும் , ஏராளம் பொய்களை பரப்பி மகிழ்ந்தனர்.

    ஆளுங்கட்சிக்கு எதிரான ANTI -INCUMBANCY என்ற கருத்தை தவிடு பொடியாக்கி அதிமுக மீண்டும் வென்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு ,32 ஆண்டுகளுக்கு பிறகு புதிய சாதனையை செய்து முடித்தது.

    திமுகவினர் இந்திரா காங்கிரஸ் என்ற தீய சக்தியுடன் கொண்ட கூடா நட்பு கூட்டணியால் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுக் கொண்டனர். திமுகவிலேயே யாரோ , கூட இருந்தே , இந்திரா காங்கிரஸ் கூட்டணிக்கு தூபம் – சாம்பிராணி போட்டு, திமுகவை இந்திரா காங்கிரஸ் கூட்டு என்ற புதைகுழிக்குள் தள்ளிவிட்டனர். ரேசில் தோற்றதற்கு அதுவே முக்கியக் காரணம்.

    போதாக் குறைக்கு பொன்னியும் வந்தாளாம் என்பது போல , திமுக பிரச்சாரத்தில் டூ ஜி, பி எஸ் என் எல் , கலைஞர் டிவி, ஏர்செல் மாக்சிஸ் போன்ற பலவேறு ஊழல் வழக்குகளில் தொடர்புடைய முகங்களை பிரச்சாரக் கூட்டங்களில் , பிரச்சார ஊர்தியில் ஏற்றியதால் , திமுகவின் தோல்விக்கு அவர்களே அஸ்திவாரம் போட்டுக் கொண்டார்கள்.

    இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவி சிவிலியன் தமிழர்களை கொத்து எறிகுண்டுகளை வீசி கொன்ற இலங்கை ராணுவத்துக்கு ரகசியமாக பல்வேறு ராணுவ தளவாடங்களை வழங்கி உதவிய , இந்திரா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேரும் எந்த கட்சிக்கும் , தமிழக தேர்தல்களில் 2009- க்கு பிறகு அதோ கதிதான் என்பது மீண்டும் ஒருமுறை தமிழக வாக்காளப் பெருமக்களால் நிரூபிக்கப் பட்டு உள்ளது.

    கூடா நட்பை முறிக்காவிட்டால் இதுவே தொடரும்.

    ஜெ- வின் கரங்கள் மேலும் வலுப்பட்டுள்ளன. ஏனெனில் அவரை 5 வருடம் ஆட்சி நடத்தமுடியாமல் , சுமார் எட்டு மாதங்கள் சிறைச்சாலை, மேல்முறையீடு என்று நீதிமன்றம் தொடர்பான பணிகளால் , அவர் ஆட்சியை நடத்த முடியாத போதும், அவருக்கு மீண்டும் ஆட்சிப்பொறுப்பை மக்கள் அளித்திருப்பது ஜெயலலிதாவுக்கு ஒரு இமாலய வெற்றியே ஆகும்.

    எதிர்வரும் காலத்தில் திமுக குடும்ப வழக்குகளில் தீர்ப்பு விரைவில் வரும் சூழ்நிலை உள்ளது. ஜே- மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவரவுள்ளது.

    உச்ச நீதிமன்ற வழக்கில் ஜே வுக்கு வெற்றி கிடைக்கும். தீர்ப்பு பாதகம் ஆனாலும் தமிழக ஆட்சி அவர் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். திமுக குடும்ப ஊழல் வழக்குகளில் பாதகமான தீர்ப்பு வந்தாலோ, அடுத்து வரும் உள்ளாட்சி , இதர தேர்தல்களிலும் திமுக திணறும்.

  2. இந்திரா குடும்ப கட்சியுடன் கூட்டணி கண்ட கட்சிகள் மண்ணைக் கவ்வின. மேற்கு வங்காளத்தில் இந்திரா குடும்ப கட்சியுடன் கூட்டணி கண்ட கம்யூனிஸ்டுகள் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு, மம்தா பானர்ஜிக்கு மிகப்பெரிய வெற்றியை உருவாக்கி கொடுத்தனர்.

    தமிழகத்தில் இந்திரா குடும்ப கட்சியுடன் கூட்டணி கண்ட திமுக கூடா நட்பின் மூலம் தன்னுடைய தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக் கொண்டது.

    பாண்டிச்சேரியில் மட்டுமே இந்திரா காங்கிரஸ் கூட்டணி மயிரிழையில் வெற்றி கண்டது.

  3. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, ஆளும்கட்சி- எதிர்க்கட்சிகள் என்பதெல்லாம் அர்த்தமற்ற சொற்கள்.. எல்லாமே தேசீய விரோத சக்திகள்.

    தேசீயக் கட்சியாக இருந்த காங்கிரஸ், நேருவின் தலைமையில் சோஷலிசப் போர்வைக்குள் புகுந்து, தேசீயப் பொருளாதாரத்தை நசுக்கும் கட்சியாகியது. பிறகு, இந்திராவின் பிடியில் குடும்ப ஆதிக்கக் கட்சியாகியது. இன்றும் இதே நிலைதான் தொடர்கிறது.மதி, மானமுள்ள பழைய காங்கிரஸ்காரர்கள் அன்றே அக்கட்சியைவிட்டு வெளியேறிவிட்டனர். நரசிம்மராவ் மட்டும் விதிவிலக்காக இருந்த ஒரே காங்கிரஸ் தலைவர். 1991ல் அவரால் நாடு பிழைத்தது.

    கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் நாட்டில் தேசீயவிரோத சக்திகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இனவாதம்,ஜாதி துவேஷம், நாஸ்திக வாதம், பிறமொழி எதிர்ப்பு, ஹிந்துக்கள் எதிர்ப்பு என்பவையே அவற்றின் வேர்கள். கல்வித்துறையைக் கைவசம் கொண்டு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் விஷம் பாய்ச்சி வருகின்றனர். பதவியில் இல்லாத தேசீயவாதிகள் இதை எப்படி எதிர்த்து முறியடிக்க இயலும்?

    இந்த நிலையில் பா.ஜ.க ஒன்றுதான் உண்மையான தேசீயவாதக் கட்சியாக இருக்கிறது. ஆனால் அதுவும் சந்தர்ப்ப வாதியாகி தி.மு.க வுடனும் அதிமுகவுடனும் சேர்ந்தது மாறிமாறி அடிவாங்கியது! காவிரிப் பிரச்சினை என்று வந்தால், அதன் தேசீயத்தன்மை நசித்துவிடுகிறது!

    தமிழ் நாட்டில் தேசீய சக்திகள் வளர சூழ்நிலை ஆதரவாக இல்லை. அத்தகைய சூழ்நிலையை உருவாக்குவதும் எளிதல்ல- ஏன், அது இயலுமா என்பதே சந்தேகம்தான்! 60 ஆண்டுகள் தேசீயம் வளர்த்த காங்கிரஸ், 20 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாட்டில் தாக்குப்பிடிக்க இயலவில்லை! கடந்த 50 ஆண்டுகளாக பிரிவினை-இன வாதிகளே பதவியில் உள்ளனர்.

    நாட்டின் நலனில் உண்மையான அக்கறை இருக்குமானால், தமிழ் நாட்டின் எந்த வட்டாரக் கட்சியுடனும் கூட்டம் கூடிக் கூவிப் பிதற்றுவதை விட்டுவிட்டு, பா.ஜ.க தனித்து நின்று தேசீய வாதத்தை வளர்க்கப் பாடுபடவேண்டும். நல்லவர்களை முன்னிறுத்தி தலைமையைப் பலப்படுத்த வேண்டும்.மக்களுடன் நேரடித் தொடர்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.இதுவே தேசீய வாதிகளின் எதிர்பார்ப்பு. குஜராத்தில் இந்த அணுகுமுறையே அவர்கள் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

  4. குமரி கிறிஸ்தவர்கள் புத்தி சாலித்தனமாக ஒட்டு போட்டதால் தி மு க காங்கிரஸ் கூட்டணி குமரியில் அபார வெற்றி . இதே கன்னியா குமரியில் மட்டுமல்ல இதே போல தமிழ்நாடு முழுவதும் இந்துக்கள் கிறிஸ்தவ முன்னேற்ற முன்னணிக்கும் , ( தி மு க + காங்கிரஸ் கூட்டணி ) பாரதீய ஜனதாவுக்கும் போடாமல் அதிமுகவுக்கு புத்திசாலிதனமாக வாக்களித்திருந்தால் ரிசல்ட் 234/234 . அம்மையார் வென்றிருப்பார். இந்துக்கள் என்றுமே ஜாதி , கட்சி மொழி ரீதியாக பிளவு பட்ட சமூகம் , எனவே மத சிறுபான்மையினரால் ஏமாற்றப்பட்டு கொண்டே இருக்கின்றனர்.தீய சக்தி தி மு கவை தோற்கடிக்கும் வல்லமை உள்ள கட்சியாக பாரதிய ஜனதா உருவெடுக்க வேண்டியது தமிழகத்தின் நீண்ட நாள் ஆசை !

  5. 1997 ஆம் ஆண்டு திரு கருப்பைய மூப்பனாரை இந்திய பிரதமராக்க எல்லாம் கூடி வந்த வேளையில் திருவாளர் திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி தனது மருமகன் முரசொலிமாறன் மூப்பனார் கீழ் வேலை பார்ப்பதா என்ற சின்ன எண்ணத்தால் தந்திரங்கள் பல செய்து திரு மூப்பனார் பிரதமர் ஆகாமல் செய்வதில் வெற்றி பெற்றார் ! பழம் நழுவி பாலில் விழும் வேளையில் பாலை கவிழ்த்தார் ! பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் என்பது போல , வை கோ அவர்கள் கூட்டணி குழப்பங்களை அரங்கேற்றி 6 வது முறை முதல்வராகும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் . இந்த தேர்தலின் கதா நாயகன் வை கோ அவர்களே !

  6. ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய தேர்தல் முடிவுகள். திமுக மற்றும் அதிமுக கட்சிகளை தவிர மற்ற கட்சிகளை முற்றிலும் நிராகரித்திருக்கிறார்கள் என்றால், எல்லா கட்சிகளுமே ஒரு காலத்தில் அவர்களுடன் கூட்டு வைத்ருந்துவிட்டு இப்போது எதோ ஒரு சுயநல காரணத்திற்க்காக அவர்களை தூழிப்பதால்தான். அதுவும் தவிர ஊழல் இல்லாத அல்லது ஊழால் கட்சிக்கு ஆதரவு இல்லாத கட்சி எதுவும் இல்லாததுதான். வெறுப்பில் இரு ஊழல் பிராதான கட்சிகளுக்கே ஒட்டளித்திருப்பத்தின் அர்த்தமே வருங்காலத்திலாவது ஊழல் அற்ற சேவை மனப்பான்மையோடு ஒரு கட்சி உருவாகுமா என்கிற எதிர்ப்பார்பே.

  7. கூட்டணிக்காக பாஜக தேமுதிக பின்னால் அலைந்து பொதுமக்களிடையே கேலிப் பொருளானது தான் மிச்சம். இதற்கு பதில் த மா க வுடன் கூட்டணிக்கு முனைப்பு காட்டி அதை வெற்றி கரமாக செயல் படுத்தியிருந்தால் இரு கட்சிகளுக்குமே கௌரவமாக இருந்திருக்கும்.

  8. மிக ஆழமாக ஹிந்துத்துவ நோக்கில் தமிழக சட்டமன்றத்தேர்தல் நிகழ்வும் முடிவுகளும் அலசப்பட்டிருக்கின்றன. திரு சேக்கிழார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    இனி பாஜக என்ன செய்யவேண்டும் என்பதையும் கட்டுரையாளர் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கவேண்டும்.
    1. விரைவில் வர இருக்கின்ற பஞ்சாயத்து தேர்தலுக்கு வலுவான கூட்டணியை பாஜக அமைக்கவேண்டும். தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகளுக்கு இடையில் நிலவும் கசப்புணர்வை மாற்றி இரண்டையும் தேசிய ஜன நாயகக்கூட்டணியில் கொண்டுவர முயலவேண்டும். நாடாளுமன்றத்தேர்தலுக்கு வலுவான கூட்டணியை அமைப்பதற்கான முயற்சியின் கால்கோளாக இது அமையவேண்டும்.
    2. தமிழகத்தில் உள்ள சங்க குடும்ப அமைப்புகளை வலுப்படுத்தவேண்டும். குறிப்பாக ஷாகாக்கள் எல்லாப்பகுதிகளிலும் அதிகரிக்கப்படவேண்டும். ஏபிவிபியின் செயல்பாடுகள் கல்லூரிதோரும் வலுப்பெறவேண்டும்.
    3. அதிமுக அல்லது திமுக ஆகியவற்றை சார்ந்து தமிழகத்தில் அரசியல் நடத்தலாம் என்ற மனோபாவத்துக்கு பாஜக வந்துவிடக்கூடாது.
    4.ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால் பாஜகவின் ஆதரவாளர்களில் கணிசமான அளவினர் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக அதிமுகவுக்கு வாக்களித்துவிட்டனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அந்த போக்கில் சரிவும், இந்த சட்டமன்றதேர்தலில் மேலும் சரிவு ஏற்பட்டாலும் கூட இன்னமும் பாஜக-மோதிஜி ஆதரவாளர்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை. இந்த விடயத்தில் முக்கிய கவனம் செலுத்தப்படவேண்டும்.
    5. மிஸ்டுகால் மூலம் தமிழகத்தில் பாஜகவில் சேர்ந்தவர்களை முழுமையாக கட்சிக்குள் கொண்டுவந்து விழிப்புணர்வை ஐக்கிய உணர்வை ஏற்படுத்த கட்சி தவறிவிட்டது என்பதும் உண்மை.இதை நாம் சரிசெய்யவேண்டும். பஞ்சாயத்து வாரியாக செயல்வீரர்கள் கூட்டங்களை நடத்தி ஆர்வமுள்ள இளைஞர்களை பாஜகவிலும், சங்க குடும்பத்திலும் இணைக்கவேண்டும்.
    பாரத அன்னைக்கு வெற்றி வெல்க வெல்க

  9. மிக அருமையாக எழுதியுள்ளார் திரு. நஞ்சப்பா அவர்கள். அவர் எழுதியுள்ளது அத்தனையும் உண்மை. மிகவும் வேதனையாய் இருக்கிறது தமிழ்நாட்டின் நிலைமையை நினைத்துப்பார்த்தால்.

  10. Respected Sir,

    It is a massive mandate for AIADMK led to Jayalalitha and a defeat for others. The BJP has been wiped out even in Kanniyakumari District. Instead of doing anti Jayalalitha politics, they (Central Government) must help for TN’s welfare and development.

    S Anand.

  11. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சகுனியும், சாணக்கியனும், திருவாளர் வை.கோ
    அவர்கள்தான்.அந்த நந்தவனத்து ஆண்டி கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தது
    தே.மு.தி.க. என்னும் தோன்டியைத்தான்.

  12. நாடாளுமன்றத்தேர்தலுக்கு வலுவான கூட்டணியை அமைப்பதற்கான முயற்சியின் கால்கோளாக இது அமையவேண்டும்.

  13. “/ It is a massive mandate for AIADMK /”

    ஜெயலலிதாவிற்கு வெற்றி என்று வேண்டுமானால் சொல்லலாம், ஆனால் மிகப்பெரிய வெற்றி என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. அதே மாதிரி, பிஜேபி ஜெயலலிதவை எதிர்த்து அரசியல் செய்யவில்லை. அவர்கள் வளர்ச்சி என்பதைத்தான் முன்னெடுத்து வைத்தார்கள் மக்களின் கவனத்திற்கு. பிஜேபி கண்டிப்பாக மிக வேகமா வளரும் இனி. அதுமட்டுமில்லாமல் ஒரு பலம் வாய்ந்த கட்சியாக உருவாவதற்கும் எல்லா சாத்தியக்கூறுகளும் உள்ளன.

  14. /It is a massive mandate for AIADMK led to Jayalalitha and a defeat for others. The BJP has been wiped out even in Kanniyakumari District. Instead of doing anti Jayalalitha politics, they (Central Government) must help for TN’s welfare and development.//

    மிகப் பெரிய வெற்றி என்றெல்லாம் சொல்ல முடியாது. தான் வெற்றி பெற்ற இடத்திலேயே செல்வி ஜெயலலிதா சட்ட மன்ற தேர்தலை விட வாக்கு குறைவாகப் பெற்றிக்கிறார்.

    BJP ஐப் பொருத்தவரையில் வாக்குகள் கூடி இருக்கின்றன – சிறய ஆறுதல்தான். இருந்தாலும் கூடி உள்ளதை எண்ணி மறுபடி போராட வேண்டியதுதான்.

    பெரியார் இறை மறுப்பு கொள்கையை மீறி தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இறை நம்பிக்கை அதிகமாகத்தான் உள்ளது. காவடி எடுப்பது என்ன, ஐயப்பன் விரதம் என்ன என்று பக்திக்கு குறைவில்லைதான். ஆனால் BJP என்று வரும்போது ‘அய்யோ மத வெறி, மனு நீதி, தந்தையே ! பெரியாரே! காப்பாற்று’ எண்டு ஓடுகிறார்கள். கிராமங்களில் தேர்த்திருவிழா நடக்கும்போது ஒருத்தனுக்கு ஒருத்தன் வெட்டி மடிகிறார்கள். அங்கெல்லாம் BJP யா அதையெல்லாம் செய்கிறது?

    திராவிடக் கசடு என்று வடிகிறதோ அன்றுதான் BJP க்கு தமிழ் நாட்டில் விடிவு காலம்.

  15. ஒரு சட்டசபை தேர்தலில் ஒரு கட்சிக்கு கிடைக்கும் வெற்றியை அந்தக் கட்சி அதற்கு முந்திய சட்டசபை தேர்தலில் பெற்ற வாக்குகளும், பெற்ற எம் எல் ஏக்களும் எவ்வளவு என்பதை வைத்து தான் கணக்கிடவேண்டும்.

    2011- சட்டசபை தேர்தலில் அதிமுக இரு கம்யூனிஸ்டுகள் , விஜயகாந்த், கிருஷ்ணசாமி ஆகியோருடன் கூட்டு சேர்ந்து , 38 சதவீத ஓட்டும் , 150 எம் எல் ஏக்களையும் பெற்றது.

    2016- சட்டசபை தேர்தலில் அதிமுக தனித்தே போட்டியிட்டு, 40.8 % வாக்குகளையும் ,134 எம் எல் ஏக்களையும் பெற்றது. அதாவது வாக்கு இரண்டு சதவீதம்கூடியுள்ளது.எம் எல் ஏக்கள் பதினாறு குறைந்துள்ளது. இன்னமும் தேர்தல் நடைபெற வேண்டியுள்ள தஞ்சை, அரவாக்குரிச்சியில் வெற்றிபெற்றுவிட்டால் , 136 எம் எல் ஏக்கள் என்று ஆகிவிடும்.பதினாலு எம் எல் ஏக்கள் தான் குறையும்.விஜயகாந்த், இரு கம்யூனிஸ்டுகள், கிருஷ்ணசாமி ஆகியோர் வேறு அணிகளுக்கு போய்விட்டதால் இந்த எம் எல் ஏக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே சமயம் ஒரு ஆளும் கட்சி 5 வருடம் பூர்த்தி செய்தபின்னர் மீண்டும் ஆட்சியை பிடிப்பது என்பது தமிழகத்தினை பொறுத்தவரை 32-வருடங்களுக்கு பிறகு செய்யப்பட்டுள்ள பெரிய சாதனை தான். ஏனெனில் ஆளும்கட்சிக்கு ANTI -INCUMBANCY- யால் 5 முதல் 10 சதவீதம் ஒட்டு குறைவது வழக்கம். ஆனால் அதிமுக 2- சதவீதத்துக்கு மேல் கூடுதல் ஓட்டுக்களை வாங்கி வெற்றிபெற்றுள்ளது.

    விஜயகாந்த் அணியில் கம்யூனிஸ்டுகள், திருமா ,ஜி கே வாசன் , வைகோ என்றுஆறு பேர் இருந்தும் அவர்களால் ஒரு நல்ல தலைமையை மக்கள் முன் நிறுத்தமுடியவில்லை. விஜயகாந்த் அவர்களின் பேச்சுக்கள் சரியாக அமையவில்லை. கழகங்கள் ஏராளம் மூட்டைகளை இறக்கின என்பது உண்மை என்றபோதும், ஆர் கே நகரில் ஜெயலலிதா பணம் கொடுக்கவில்லை என்பது மாநிலம் முழுவதும் தெரியும்.

    கருத்து கணிப்பு என்ற பொய்யான பெயரில் மதமாற்றப் பாதிரிகள் சிலர் ஒன்றுகூடி, லயோலா மற்றும் லயோலா முன்னாள் மாணவர்கள் என்ற பெயர்களில் திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்று பொய்ப்பிரச்சாரம் செய்து, கருத்து திணிப்பு செய்தனர். மேலும் எதிர்க்கட்சியின் குடும்ப உறவினர் பல முக்கிய பத்திரிக்கைகளிலும் கோடிகோடியாக கொட்டி , விளம்பரத்திலேயே
    கோடிகளை மறைமுக லஞ்சமாக தந்து , மக்கள் மனதை மாற்ற முயற்சித்தனர்.நமக்கு நாமே என்ற பெயரில் செய்த பிரச்சார சுற்றுப்பயணமும் பெரும் விளைவுகளை உருவாக்கவில்லை. ந்யூஸ் 7- சானலுடன் இனைந்து போட்ட தினமலர் கருத்துக் கணிப்பும் புஸ்வானம் ஆகியது.

    விஜயகாந்த் கட்சியில் இருந்து பிரிந்த மூன்று எம் எல் ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்ததால், திமுக அந்த மூன்று இடங்களிலும் தோற்றுப்போனது. புதியதாக வந்தவனுக்கு டிக்கெட் கொடுக்காமல், முன்னரே கட்சியில் இருந்தவர்களுக்கு அந்த 3-தொகுதிகளில் வாய்ப்பு கொடுத்திருந்தால் , இரண்டாவது திமுக அணிக்கு கிடைத்திருக்கும். 100 – என்ற எண்ணிக்கையை தொட்டிருக்கும். இந்திரா காங்கிரசுடன் கொண்ட கூடா நட்பு திமுகவை அழித்தது.திமுகவின் இந்து விரோத நாடகங்கள் திமுகவை நடுத்தெருவில் நிறுத்த போகின்றன.

  16. BJP could have done better in kanyakumari if only it had projected properly its contribution in getting the fisherman released from srilanka and instead of building cadres andactivly participating in flood relief measures. they were chasing the mirage of vijaya kanth.BJP has to spend more energy and efforts to build up the dedicated cadres like RSS.
    Thiruvengadam

  17. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாவின் வெற்றிக்கு ஒரே காரணம்
    ஜெயலலிதாதான்.ஆனால் தி.மு.க. வின் வெற்றிக்கு தி.மு.க.வை விட அதிகமாக
    வெளி காரணிகளும்,சூழ்ல்நிளைகளுமே காரணமாக அமைந்துவிட்டது.இரு கழகங்களையுமே ஒழிப்பதாக கூறிக்கொண்டு தி.மு.க.வை மட்டுமே பா.ம.க. வும்
    மக்கள் நலக்கூட்டனியும்,பிற உதிரிகட்சிகளும் குறிவைத்து தாக்கியதை மக்கள் அவ்வளவ்வாக ரசிக்கவில்லை மேலும் விஜயகாந்தும்,அன்புமணி ராமதாசும்,
    முதல்வராகும் தகுதியை வளத்துக்கொள்ளமலேய தங்களை முதல்வர் வேட்பாளர் என்று முன்னிலை படுத்தியது மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் செயலாக அமைந்துவிட்டது.அதே நேரத்தில் ஸ்டாலின் முதல்வர் வேட்பாளருக்கு தகுதி
    இருந்தும் தன்னை முன்னிலை படுத்தாமல் கட்சியை முன்னிலை படுத்தி கடுமையாக உழைத்தார்.மேலும் ஜெயலலிதா தி.மு.க.வையே தனது எதிரியாக
    நினைத்து மற்ற கட்சிகளை கண்டுகொள்ளாமல் விட்டதும் தி.மு.க. வெற்றிக்கு
    காரணமாக அமைந்தது.அதே போல் தி.மு.க.வும் அ.தி.மு.க. வை மட்டுமே
    தனது தாக்கும் இலக்காக வைத்தது.தி.மு.க. வெற்றிக்கு பெரிதும் உதவியது .மொத்தத்தில்
    பா.ம.க., மக்கள் நல கூட்டணி,இன்னும் சில கட்சிகள் இரு கழகங்களையும் ஒழிப்பதாக
    கூறி முன்பைவிட இன்னும் பலமான கட்சிகளாக இரு கழகங்களையும் பல்ப்படுதியதே
    இந்த சட்டசபை தேர்தலில் அவர்கள் செய்த அபாரமான அரசியல்.
    இதைத்தான்
    பிள்ளையார் பிடிக்கபோய் குரங்கான கதை என்பார்கள்.

  18. அகில இந்திய பா. ஜ. க. இங்குள்ள அ.இ. அ. தி. மு.க. வுடன் இணக்கமாகவும் , வணக்கமாகவும் செயல்படும் போது , பா . ஜ. க . இங்கு எப்படி வளர முடியும்? தமிழிசையை மட்டும் குறைசொல்வதால் கட்சி வளருமா?

  19. தமிழகத்தில் நடைபெற்ற 2016- சட்டசபை தேர்தலில் அதிமுக வென்றது. இலங்கை தமிழினத்தை கருவறுத்த திமுக கூட்டணி தோற்றது. விஜயகாந்த் அணி காணாமல் போனது.

    தேர்தல் முடிவுகள் மக்கள் அளித்த பரிசு. ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குவோம் என்று சொல்வது மரபு. தோற்றுப்போனவர்கள் இன்னமும் ஐந்து வருடங்கள் கழித்து வரவிருக்கும் தேர்தலில் மீண்டும் கடும் முயற்சி செய்து மக்கள் நம்பிக்கையை பெறமுயல்வது அறிவுடைமை ஆகும்.

    1967- சட்டசபை தேர்தலில் சினிமா மாற்றும் நாடக நடிகர்களால் காமராஜர் தோற்றார். உடனே சொன்னார் மக்கள் தீர்ப்பை ஏற்போம் என்றார்.

    மீண்டும் 1971- சட்டசபை மற்றும் பாராளுமன்ற ஒருங்கிணைந்த தேர்தலிலும் ஆட்சியை மீண்டும் பிடிக்க முயன்று தோற்றார் காமராஜர். அப்போது ரஷ்ய மையினால் தோற்றோம் என்று அவரது கூட்டணியை சேர்ந்த சிலர் சொன்னதை அவர் ஏற்கவில்லை. மக்கள் குரலே மகேசன் குரல் என்றார் பெருந்தலைவர்.
    மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குவோம் என்றார் அவர். அதுதான் ஒரு சிறந்த ஜனநாயகவாதிக்கு அடையாளம்.

    ஆனால் இன்று என்ன நடக்கிறது ? 2011- சட்டசபை தேர்தலில் தொற்றுப்போனவுடனேயே , எம் ஜி ஆர், ரஜினி, அஜீத், விஜய், சரத்குமார், விஜயகாந்த், கார்த்திக் ( நடிகர் முத்துராமனின் மகன் – நாடாளும் மக்கள் கட்சி )- ஆகிய நடிகர்களின் ரசிகர்கள் ஒன்றுகூடி எங்கள் கட்சியை தோற்கடித்து விட்டனர் என்று ஒரு ஜாதிக் கட்சி தலைவர் பேட்டி கொடுத்ததை நாடே அறியும்.

    2016- சட்டசபை தேர்தலில் தோற்றுப்போனவுடன் , பிரதமர் மோடி, தேர்தல் கமிஷன், மத்திய பாஜக அரசு மூன்றும் ஒன்று கூடி திமுகவை தொர்கடித்துவிட்டார்கள் என்று சொல்கிறார் திமுகவின் தலைவர் கருணாநிதி அவர்கள்.

    பிரதமர் மோடி, தேர்தல் கமிஷன், மத்திய பாஜக அரசு மூன்றும் ஒன்று கூடி பீகார்மேற்குவங்காளம், கேரளம், பாண்டிச்சேரி ஆகிய முறையே மாநிலங்களிலும் , யூனியன் பிரதேசத்திலும் நிதீஷ்மம்தா, பினராயில் விஜயன் ,ஆகியோரை தோற்கடிக்க முடியவில்லை. அதே சமயம் திமுகவை மட்டும் பாஜக தோற்கடித்துவிட்டது என்று சொல்கிறார் பெரியவர். இதற்கு என்ன பொருள் ? திமுகவினரிடம் அடிப்படையிலேயே ஏதோ ஒரு கோளாறு உள்ளது என்பதை இவர்களே எங்க அப்பன் குதிருக்குள் மட்டும் இல்லை என்று சொல்லிக்கொண்டு திரிகிறார் திமுக தலைவர்.

    தேர்தல் பிரச்சாராத்தின் போது, பிரச்சார வேனில் டூ ஜி ஊழலில் தொடர்புடைய குடும்ப உறுப்பினர்களை ஏற்றிக்கொண்டு பிரச்சாரம் செய்தால், வாக்காளர்கள் எப்படி இவர்கட்சிக்கு பெரும்பான்மை தருவார்கள் ?

    சோனியாவுடன் சேர்ந்து இலங்கை சிவிலியன் தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்துவிட்டு, தனக்கு மீண்டும் தமிழக வாக்காளர்கள் ஓட்டுப்போட்டு முதல்வர் பதவியில் அமர்த்துவார்கள் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு அறியாமை ?

    கூடா நட்பு கேடாய் முடிந்தது என்ற வசனத்தை சொல்லி இந்திரா குடும்ப கட்சியுடன் கூட்டணியை முறித்து , வெளியே வந்துவிட்டு , பார்லிமென்ட் தேர்தலில் தோற்றபின்னர் மீண்டும் சோனியா காலில் போய்விழுந்தால் எவன் ஓட்டுப்போடுவான் இவர்களுக்கு ?

    லண்டன் சானல் 4- வெளியிட்ட இலங்கை படுகொலை வீடியோக்களை பார்த்த பின்னர் விலகிவந்த இவர் மீண்டும் தன்னுடைய மகளுக்கு ராஜ்ய சபை தேர்தலில் ஆதரவு கேட்டு மீண்டும் சோனியாவிடம் போய் நின்றபோதே , இவர் லட்சணம் எல்லோருக்கும் தெரிந்தவிட்டது.

    திமுக வின் பித்தலாட்டங்களும், குடும்ப ஊழல்களும் எல்லோருக்கும் நன்கு தெரிந்துவிட்டதால் இனி இவர் சொல்லும் கதைகளை எந்த இளிச்சவாயனும் நம்பமாட்டான்.

    டூ ஜி, கலைஞர் டிவி, பி எஸ் என் எல், ஏர் செல் மாக்சிஸ் ,தடை செய்யப்பட பணப்பரிவர்த்தனை சட்டம் என்று எல்லா வழக்குகளின் தீர்ப்புக்களும் வெளிவந்த பின்னர் இந்த கட்சியே காலாவதி ஆகிவிடும்.

    பெரிய பத்திரிகைகளில் கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டி , முழுப்பக்க கலர் விளம்பரங்களை வெளியிட்டு, கருத்துக் கணிப்பு என்ற பெயர்களில் சூட்கேஸ் கணிப்புக்களை வெளியிட மீடியாவில் சில புல்லுருவிகளை பிடித்து, அவர்கள் மூலம் லயோலா கணிப்பு, லயோலா முன்னாள் கணிப்பு என்ற பெயர்களில் கருத்து திணிப்பு செய்து , மக்களை ஏமாற்றி ஓட்டுவாங்க முயற்சித்து மூக்குடை பட்டது தான் மிச்சம் .

    பிரிவினை வாதங்களை கைவிட்டு, அதாவது இனம், மொழி , மதம்ஆகியவை அடிப்படையில் பிரித்தாளும் சூழ்ச்சிகள் நம் நாட்டு மக்களிடம் இந்த நூற்றாண்டில் இனி எடுபடாது. தேசீய நீரோட்டத்தில் இணையுங்கள்.

    தமிழகத்தில்ஒரே ஒரு எம் எல் ஏ தொகுதியில் கூட வெற்றிபெறமுடியாத பாஜக ,98-இடங்களில் வெற்றி பெற்றுவிட்ட இவர் கூட்டணியை தோற்கடித்து விட்டது என்று சொன்னால், எல்லோரும் வழித்துக்கொண்டு சிரிக்கிறார்கள்.எல்லோருக்கும் சிரித்து சிரித்து வயிறு வலி எடுத்துவிட்டது.

    இந்த பம்மாத்து வேலைகள் எல்லாம் இனி தமிழகத்தில் எடுபடாது. திமுக இருக்கும் வரை அதிமுகவின் வெற்றிகளை யாரும் தடுக்கவே முடியாது. குடும்ப அரசியலையும் மக்கள் எவ்வளவு வெறுக்கிறார்கள் , நிலப்பறி கட்சியை எவ்வளவு வெறுக்கிறார்கள் என்பது இவர்களுக்கு புரியாதது போல நடித்தாலும் இனி ஒரு புண்ணியமும் இல்லை.

    காவிரியில் கூடுதல் அணைக்கட்டுக்கள் கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கியது,

    அண்ணாமலை பலகலைமாணவர் உதயகுமார் படுகொலை,

    காமராஜரை தோற்கடிக்க 1971- தேர்தலில் இந்திராவுடன் கைகோர்த்தது ,

    தமிழகத்தில் மதுக்கடைகளை முதன் முதலில் திறந்து தமிழினத்தை அழித்தது

    கச்ச தீவை தானம் வழங்கிய இந்திரா காங்கிரசுடன் 1979-இல் கூட்டு சேர்ந்தது,

    மாவட்ட பெயர்களிலும், போக்குவரத்து கழக பெயர்களிலும் இருந்த அரசியல் கட்சி தலைவர்கள் பெயரை நீக்கிவிட்டு, பல்கலைக் கழகங்களில் உள்ள அரசியல் தலைவர்கள் பெயரை மட்டும் நீக்காமல் அப்படியே விட்டுவிட்டது,

    டூ ஜி ஊழல்,

    டாட்டாவை மிரட்டியது ,

    தா கிருட்டிணனை போட்டு தள்ளியது

    தினகரன் அலுவலகத்தில் மூவர் உயிருடன் எரித்து படுகொலை

    மதுரை சி பி எம் லீலாவதி படுகொலை

    அமைச்சர் கண்முன்னே காவல் துறை அதிகாரி மீது தாக்குதல்

    சட்டக் கல்லூரி மாணவர்கள் போலீசார் கண் முன்னே ஒருவரை ஒருவர் கட்டைகளாலும், இரும்புக் கம்பிகளாலும் தாக்கி கொண்டது ,

    தமிழகத்தை மின்சாரமே இல்லாமல் இருளில் ஆழ்த்தியது

    மத்திய அரசில் இருந்துகொண்டு, தமிழகத்துக்கு வழங்கப்பட்டுவந்த ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் , பாமாயில், சர்க்கரை ஆகியவற்றின் ஒதுக்கீட்டை வேண்டுமென்றே குறைத்தது

    -என்று பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். இடம் போதாது.

    இனியும் இவர் கட்சிக்கு மக்கள் ஆட்சி பொறுப்பை வழங்கமாட்டார்கள். முடிந்த அத்தியாயம் தான் திமுக .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *