அனைத்துயிரும் ஆகி… – யோகாசனங்களின் உணர்வு நிலைகள்

இன்று ஜூன்-21. அனைவருக்கும் இனிய சர்வதேச யோக தின வாழ்த்துக்கள் !

யோகம் பயில்வோம். நிறைவாழ்வு பெறுவோம்.

யோகாசனங்கள் எப்படி உருவாயின என்பது பற்றிய கேள்வி ஆசனங்களைப் பயிற்சி செய்யும் பலருக்கும் தோன்றியிருக்கும். “இலக்கியத்திற்குப் பின் இலக்கணம்” எனப்து போல, யோகத்தின் முதல் நூல் என்று கருதப் படும் பதஞ்சலி யோக சூத்திரங்கள் வரையறுக்கப் படுவதற்கு முன்பே யோகம் பற்றிய பல நுட்பங்கள் அறியப் பட்டிருந்திருக்க வேண்டும் என்றே யோக அறிஞர்கள் பலரும் கருதுகிறார்கள். இந்த நூலில் ஆசனம் பற்றி ஒரே ஒரு சூத்திரம் தான் உள்ளது: “உறுதியானதும், சுகமாயிருப்பதும் ஆன நிலை ஆசனம்”. ஏதாவது ஒரு ஆசனம் செய்யும்போது யாருக்காவது உடல் வலியால் முகம் சுளிப்பது போல் ஆனால் “ஸ்திரம் சுகம் ஆசனம்” என்று எங்கள் யோக ஆசிரியர் இந்த சூத்திரத்தைச் சொல்லி நினைவூட்டிக் கொண்டே இருப்பார்!

Women Practicing Yoga at Bhangarh

பதஞ்சலிக்குப் பின்னர் வந்த “ஹடயோக ப்ரதீபிகா” போன்ற நூல்களில் இன்று மிகப் பிரபலமாகி நாம் பயின்று வரும் பல ஆசனங்களின் பெயர்களும், அந்த ஆசனத்தில் உடலின் தோற்றம் (posture) எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றிய சித்திரங்களும் கிடைக்கின்றன. படங்கள் போன்ற குறியீடுகளைப் பயன்படுத்தாமல் சொற்கள் மூலமே விளக்கினாலும் ஆசனங்களுக்கான தெளிவான கையேடாக இந்த நூல் விளங்கி வந்திருக்கிறது. இது தவிர, வழிவழியாக வந்துள்ள தொடர்ச்சியான குரு சிஷ்ய மரபுகளும் இந்த ஆசனங்களில் உள்ள கலை நுணுக்கத்தை சரியான முறையில் இன்று வரை எடுத்து வந்துள்ளன.

ஆசனங்கள் வெளி உறுப்புக்களையும், தசைகளையும் மட்டுமல்ல, உடலின் பல உள் உறுப்புக்களையும், நாடி நரம்புகளையும் உறுதியாக்குகின்றன. பல யோகாசனங்கள் பார்ப்பதற்குக் கடினமாகத் தோன்றினாலும், பயிற்சி செய்பவர்களுக்கு இவை மிக இயல்பானதாகவே தெரியும். பயிற்சி இதற்குக் காரணம் என்றாலும், யோக ஆசனங்களின் தன்மையே அப்படிப் பட்டதாயிருக்கிறது. 2-3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வளரும் பருவத்தில் தாங்களாகவே பல ஆசனங்கள் போடுவதைப் பார்க்கலாம். உட்காருவதற்கு வந்து நிற்கத் தொடங்கும் சமயம் பல குழந்தைகளுக்கு வஜ்ராசனம் தானாக வரும். தவழ்வதற்காக அமரும் தோற்றமே ஒரு ஆசனம் தான்! ஆசனங்களின் இந்த இயற்கைத் தன்மை அவற்றுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது.

மனித உடலின் இயக்கம் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவு பெற்றிருந்தனர் பண்டைக் கால யோகிகள். காட்டில் விலங்குகள், பறவைகள் இவற்றின் வாழ்வைக் கூர்ந்து கவனித்த அவர்கள் அவை எப்போது அமைதியடைகின்றன, ஆக்ரோஷம் கொள்கின்றன இவற்றையெல்லாம் ஆராய்ந்து பல ஆசனங்களை உருவாக்கியிருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது.

புகழ்பெற்ற யோக குரு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களிடம் இந்தக் கேள்வி கேட்கப் பட்ட போது அவர் கூறினார் – “யோகத்தின் ஒரு உயர்ந்த நிலையில் செல்லும்போது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் ஆன்மாவை யோகிகள் உணர்ந்தார்கள். அந்த உணர்ச்சியின் வெளிப்பாடாக அவர்கள் உடல் தானாகவே பல விதமான தோற்றங்கள் கொண்டது. இப்படித் தான் ஆசனங்கள் தோன்றின. பின்னர் அவை ஆய்வுக்கு உட்பட்டு நெறிப்படுத்தப் பட்டன. பிராணாயாம முறைகள் தோன்றியதும் இப்படித் தான்.” ஸ்ரீஸ்ரீ அவர்களது உருவாக்கம் என்று கருதப் படும் புகழ்பெற்ற “சுதர்ஷன் க்ரியா” என்ற பிராணாயாம முறையும் பரிசோதனைகளாலோ, புறவயப் பட்ட முயற்சிகளாலோ தோன்றவில்லை. மாறாக, ஆழ்ந்த தியானத்தின் போது தானாகவே அது சித்தித்ததாக அவர் பலமுறை கூறியுள்ளார். உலகெங்கும் உள்ள யோக ஆசிரியர்கள் அடிப்படை யோகப் பயிற்சிகளில் புதிய புதிய பரிமாணங்களை இன்றும் ஆக்கம் செய்து வருகிறார்கள். இவற்றில் எத்தனை முயற்சிகள் அகவயப் பட்டவை என்பது கேள்விக்குரியது. இருந்தாலும் யோகம் என்பது “கணந்தோறும் புதிதாகத் தோன்றும்” ஒரு வாழும் கலை என்பதில் ஐயமில்லை.

யோகாசனங்கள் உருவாக்கும் உடல் தோற்றத்தோடு, அவை தரும் உணர்வு நிலையையும் கருத்தில் கொண்டு பின்னர் பெயர்கள் இடப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி
பல் மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி
வல் அசுரராகி முனிவராய்த் தேவராய்
கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்!”

என்று திருவாசகம் கூறும் அதீத அனுபவம் பரிணாம அறிவியல் கூறும் வளர்ச்சிப் படிநிலைகளை மட்டுமல்ல, அனைத்து உயிர்களாகவும் ஆகும் ஆன்மாவின் தன்மையையும் குறிக்கிறது. எண்ணிப் பார்த்தால், இந்தப் பேரனுபவத்தின் வெளிப் பாட்டை மனித உடலின் மொழியில் பாடும் அழகிய கவிதைகள் யோகாசனங்கள்!

அசையாப் பொருள்கள் மற்றும் விலங்குகள், பறவைகள் இவற்றின் தோற்றத்தில் பல ஆசனங்கள் உள்ளன.

  • பர்வதாசனம் (மலை), நாவாசனம் (படகு), விருட்சாசனம் (மரம்).
  • புஜங்காசனம் (பாம்பு), சலபாசனம் (வெட்டுக் கிளி), மத்ஸ்யாசனம் (மீன்).
  • ஊர்த்துவ முக / அதோமுக ஸ்வானாசனம் (மேல் / கீழ் நோக்கும் நாய்), சிம்ஹாசனம் (சிங்கம்).
  • மயூராசனம் (மயில்), குக்குடாசனம் (சேவல்), கபோடாசனம் (புறா).
விருட்சாசனத்தில் கட்டுரையாசிரியர்
விருட்சாசனத்தில் கட்டுரையாசிரியர்

கருவில் இருக்கும் சிசுவாக கர்ப்ப பிண்டாசனம்.

எல்லா செய்கையும் அடங்கிய பிணமாக சவாசனம்.

முனிவர்களின் பெயரால் பரத்வாஜாசனம், மத்ஸ்யேந்திராசனம்.

தெய்வ சக்திகளாக வீரபத்ராசனம், நடராஜாசனம்.

இதயக் கமலத்தில் உறையும் ஆன்ம சக்தியின் உருவகமாகவும், ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை என்று ராஜயோகம் கூறும் சக்தி பீடமான சக்கரத்தின் உருவகமாகவும் விளங்கும் அற்புதமான பத்மாசனம்.

இப்படி ஆசனங்களிலேயே அனைத்துயிர்களின் உணர்வு நிலைகளும் தோன்றும் படி யோகிகள் இவற்றை வடிவமைத்து பெயரும் இட்டார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது!

ஆமே அனைத்துயிர் ஆகிய அம்மையும்
தாமே சகலமும் ஈன்றஅத் தையலும்
ஆமே அவளடி போற்றி வணங்கிடில்
போமே வினைகளும் புண்ணிய னாகுமே.

– திருமந்திரம் 4.13.23

அடுத்த முறை விருட்சாசனம் செய்யும்போது, சில கணங்கள் கண்களை மூடிக் கொண்டு நீங்கள் மரமாகவே ஆகிவிட்டதாக உணருங்கள். அற்புதமான உணர்வு அது!

(டிசம்பர் 28, 2006 அன்று ஜடாயு தனது வலைப்பதிவில் எழுதிய கட்டுரையின் மீள்பதிவு)

6 Replies to “அனைத்துயிரும் ஆகி… – யோகாசனங்களின் உணர்வு நிலைகள்”

  1. சமயத்தில் வந்த அருமையான கட்டுரை,
    இந்திய யோகம் சர்வதேச அங்கீகாரம் பெற்றுவிட்டதற்காக ஒரு பக்கம் மகிழலாம். ஆனால், சில விஷயங்கள் பெரிதாகப் பரவி வியாபார நோக்கம் பெறும்போது, பல நுண் உண்மைகள் அடிபட்டுப் போகின்றன.

    இன்று, யோகம் என்பது பெரும்பாலும் ஹடயோகத்தையே குறிக்கிறது. உடலைப் பேணிக்காக்க இது அவசியமானது. சரீரத்தை வைத்துத்தான் எந்த தர்மமும் செய்யவியலும்: சரீர மாத்யம் கலு தர்ம சாதனம் என்பார்கள். உடலை முன்னம் இழுக்கென் றிருந்தேன்; ஆனால் அந்த ஊனுக்குள் ஈசன் உறைவது கண்டு, உடம்பை வளர்த்தேன், உயிர்வளர்த்தேனே என்று பாடினார் திருமூல நாயனார்.

    இருந்தாலும், உடம்பை வளர்ப்பதே குறியாகிவிடக்கூடாது! இந்த உடல் இன்னும் உயர்ந்த சாதனைக்குப் பயன்படவேண்டும்.இதை நமக்கு நினைவூட்டினார் அருணகிரி நாதர்.

    காட்டிற் குறத்தி பிரான்பதத்தே கருத்தைப் புகட்டின்
    வீட்டிற் புகுதல் மிக எளிதே- விழி நாசி வைத்து
    மூட்டிக் கபால மூலாதாரண்ட நேரண்ட மூச்சை யுள்ளே
    ஓட்டிப் பிடித்தெங்கும் ஓடாமல் சாதிக்கும் யோகிகளே

    என்று அலங்காரத்தில் பாடினார்.

    60 ஆண்டுகளுக்குமுன் என் பள்ளிக்காலத்தில் எனக்கு யோகாசனம் கற்றுத்தந்த பெரியவர் யோகாசார்யா ஸ்ரீ பெங்களூர் சுந்தரத்திடம் நேரடியாகப் பயின்றவர். அவர் கூறிய சில அடிப்படை அறிவுரைகள்::

    1. யோகம் என்பது ஹிந்து சமய-ஆன்மீகத்தின் ஒர் வெளிப்பாடு. (வேதாந்தம் போல) இதில் ஹடயோகம் ஒரு அங்கம்தான். அதுவே அனைத்து யோகமு மாகிவிடாது. அதன் ஆன்மீக அடிப்படையை மறக்கக் கூடாது.
    2. மற்ற ஆன்மிகப் பயிற்சிகள் போன்று. யோகத்திற்கும் அடிப்படைத் தகுதிகள் உண்டு. யமம்-நியமம் என்பவற்றைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
    3.யோகாசனங்கள் உடலை உரப்படுத்தும். அதற்குத் தகுந்தபடி நாம் மனதையும் கட்டுப்படுத்தவேண்டும். நற்பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். மனவடக்கமின்றி உடல்வலுவடைவது மிருகபலமாகும். இதனால் தனக்கும் சமூகத்திற்கும் கேடு தான் விளையும்.
    4. ஆசனப் பயிற்சிகள் செய்யும்போது, அததற்கான உள் உறுப்புக்களில் கவனம் செலுத்தவேண்டும்.அவற்றை சில விநாடிகள் மனதில் இருத்தி த்யானிக்கவேண்டும்.இதுவே ஆசனத்தின் ஜீவனாடி.
    இப் பயிற்சிகள் நாளமில்லாச் சுரப்பிகளை (பிட்யூட்டரி, தைராய்டு போன்றவை ) ஊக்குவிக்கும். இவற்றில் சில ஒரு வயதுக்குப் பிறகுதான் செயலாக்கம் பெறும்; அதனால் அவற்றை முன் கூட்டியே ஊக்குவிப்பது தவறாகும் எனவே, சில ஆசனங்களை வயது வருமுன் (21 வயதிற்கு முன்) செய்யக்கூடாது!

    சாத்வீக உணவு முறைகளும் சாந்தமான மன இயல்பும் யோகப்பயிற்சிக்கு அவசியமாகும். ஆயுர்வேதத்தில் வாதம், பித்தம், கபம் என்று உடலியல்பை முவ்விதமாகப் பிரிப்பார்கள். சிலருக்கு உடல் இயல்பிலேயே உஷ்ணமயமானதாக இருக்கும். இத்தகையவர்கள் ஆசனம் செய்தால் உஷ்ணக்கோளாறுகள் வரலாம்- பைல்ஸ்=மூல நோய் போன்று. அத்தகைய வர்கள் பசும் பால், நெய், தயிர் என்று அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும்..[ குறிப்பு: பசும்பால் தான்- ஏதொ பாகெட் பால் அல்ல]

    ஸ்ரீ சுந்தரம் எழுதிய “ஆனந்த ரகசியம் அல்லது யோகாசனப் பயிற்சி” என்ற பழைய புத்தகத்தில் இந்த விஷயங்களை விளக்கியிருக்கிறார்.

    யோகம் உயந்த விஷயம். கவனத்துடன் அணுகவேண்டும். இதைப் போற்றிப் பாதுகாத்து நமக்களிக்கும் ஆசிரியர்களுக்கு நமது நன்றி உரித்தாகும்.

  2. அனைவருக்கும் உலக யோகா திரு நாள் வாழ்த்துக்கள்.
    யோகத்தைப்பற்றி ஒரு அருமையான முன்னுரையை ஸ்ரீ ஜடாயு வழங்கியுள்ளார். அவருக்கு நன்றிகள் பாராட்டுக்கள். அனைவருக்கும் யோகமும், ஞானமும், பக்தியும் சித்திக்க யோகேஸ்வரன், ஞானதாதா, பரமேஸ்வரன் அருள் கூடட்டும்.
    “செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்!”
    ஐயா அடுத்த அடிகளையும் சேர்த்து சொன்னால் இன்னும் அருமையாக இருக்கும். அதற்காகத்தான் முன்னே பலவற்றையும் மணிவாசகப்பெருமான் சொன்னார்.
    “மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே”
    எவ்வளவு அழகாக இறையனுபவத்தை சொல்லுகிறார் மணிவாசகப்பெருமான்.
    ஓம்காரமான மெய்யை அதன் திருவடியை உணர்தலே ஞானம் மோக்ஷம். அதற்கான வழிகளே பக்தியும் யோகமும்.
    சிவசிவா

  3. அனைவருக்கும் யோக தின நல்வாழ்த்துக்கள்.

    பாரத மத்ய சர்க்கார் வெகு தெளிவாக யோக தினத்தில் பங்கு பெறுதல் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்று கருத்துப் பகிர்ந்த பின்னரும் செய்தி ஊடகங்களில் பல இந்த நிகழ்வைப் பற்றி புளுகுமூட்டைகளை உதிர்த்துக்கொண்டிருக்கின்றன. காங்க்ரஸ் கட்சியின் காசுக்கு விலை போன என் டி டி வி செய்தி ஸ்தாபனத்தார் …………..இந்த நிகழ்வுக்கு பாரத சர்க்கார் கோடி கோடியாக செலவு செய்வதா? யோகத்தை காவி மயமாக்குதல் தகுமா என்றெல்லாம் புலம்பித் தள்ளியிருக்கிறது.

    பீஹாரில் ஊழல் புகழ் லாலுயாதவுடன் கூட்டணி அமைத்துள்ள முக்யமந்த்ரி நிதீஸ்குமார் அவர்களது மாகாண சர்க்கார் …………… யோக தினம் என்பது ஐக்ய நாடுகள் சபை உலக முழுதுக்குமாக அறிவித்துள்ள ஒரு நாள் என்பதையும் மறந்து அதை மோதியின் தலை மீது ஏற்றி …………. இந்த நிகழ்வை புறக்கணித்துள்ளது.

    உலக நாடுகளே கொண்டாடினாலும் சரி……….. ஏதாவது ஒரு நிகழ்வு மோதியுடன் சம்பந்தப்பட்டிருந்தால்………… அதைப் புறக்கணி………. இதற்குப் பெயர்………… முற்போக்கு………….

    இப்படியெல்லாம் கூத்துக்கள் ஒரு புறம் நிகழ்ந்து கொண்டிருக்கையில் உ.பி யின் ஹாத்ரஸ் ஜில்லாவில் உள்ள அலைபூர் சுர்ஸேன் க்ராமத்தில் உள்ள மஸ்ஜிதில் நம் முஸல்மாணிய சஹோதரர்கள் இந்த தினத்தன்று யோகாப்யாசம் செய்து யோக தினத்தை கோலாஹலமாகக் கொண்டாடி இருக்கின்றனர். கீழே உள்ள உரலில் ஹிந்தியில் இது பற்றிய செய்தி பகிரப்பட்டுள்ளது

    https://hindutva.info/muslims-come-out-to-celebrate-yoga-day-despite-directive-from-aimpl/

    ஹிந்தி வாசிக்க இயலாத அன்பர்களுக்காக பகிரப்பட்ட செய்தி கீழே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    ஆல் இந்தியா முஸ்லீம் பர்ஸனல் லா போர்ட் ஸ்தாபனத்தார் யோக தினத்தைப் புறக்கணிக்குமாறு முஸல்மாணியருக்கு ஃபத்வா விதித்துள்ளது. ஆயினும் பல முஸ்லீம் சஹோதரர்கள் இந்த ஃபத்வாவைப் புறக்கணித்து மோதியின் அறிவுரையை ஏற்று யோகதினத்தைக் கொண்டாடி இருக்கின்றனர்.

    உ.பி யின் ஜில்லா ஹாத்ரஸைச் சார்ந்த அலைபூர் சுர்ஸேன் க்ராமத்தில் உள்ள மஸ்ஜிதில் இஸ்லாமிய சஹோதரர்கள் யோகாப்யாசம் செய்து யோக தினத்தைக் கோலஹலமாகக் கொண்டாடி இருக்கின்றனர். மேலும் யோகாப்யாசம் என்பது எந்த ஒரு மதத்துடனும் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது என உலக முஸ்லீம்களுக்கு இதன் மூலம் தெளிவு படுத்தியுள்ளனர். அவரவர் உடலை பேணிப்பாதுகாக்க விழைபவர்களுக்கு யோகாப்யாசம் ஒரு சாதனம் என்று தெரிவிக்கின்றனர்.

    மஸ்ஜிதில் இளைஞர்கள் மட்டுமின்றி வயோவ்ருத்தர்களும் கூட யோகாப்யாச நிகழ்வுகளில் பங்கு பெற்றனர். யோகாப்யாசம் செய்வதில் எல்லாருக்கும் முன்னால் ஒரு ஆதர்சமாக செயல்பட்டவர் மஸ்ஜிதின் மௌலானா ஆகிய டாக்டர் வலீ மொஹம்மத் சாஹேப் அவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

    யோகத்திற்கு எந்த ஒரு மதத்துடனும் எந்த சம்பந்தமும் கிடையாது என அவர் கருத்துப்பகிர்ந்துள்ளார். மதத்துடன் இதை சம்பந்தப்படுத்துவது தவறு என்று அவர் கூறியுள்ளார். உடலைப் பேணிப்பாதுகாப்பதற்கான ஒரு சாதனம் யோகம் என்று அவர் கருதுகிறார். சூர்ய நமஸ்காரம் மற்றும் ஓம் என்ற சொல்லாடல்களில் இருந்து இதை மதத்துடன் சம்பந்தப்படுத்த விழைகின்றனர். ஓம் என்று சொல்ல இஷ்டப்படாதவர்கள் அதைச் சொல்லாமல் இருக்கலாம். அல்லது ஓம் என்று சொல்லிக்கொள்வதற்குப் பதிலாக அல்லா என்று சொல்லிக்கொள்ளலாம். யோகாப்யாசம் செய்வதால் ………….சூரியனை நோக்கி யோகம் செய்வதில் ……..உடலுக்கு சக்தி கிடைக்கிறது. ரத்த ஓட்டம் சீரடைகிறது. கைகால்கள் வலுப்பெறுகின்றன. வயிறு சம்பந்தமான நோய்கள் குணமடைகின்றன எனப் பலன் கள் கிட்டுகின்றன என்று கருத்துப்பகிர்ந்துள்ளார்.

  4. Sorry Shri Krishnakumar, I do not agree with you or our Muslim friends that Yoga has no religion. As you very well know, Yoga is one of the Asthika dharsana of Sanatana Dharma. Let us not divide it parts to satisfy Muslims and Christians. Already digestion is taking place in the form Christian Yoga. By disowning the very Dharmic Hindu roots of Yoga is courting disaster. In Gita bhagavn Krishna gives us the technique of yoga and ask us to meditate on the Self. Aum is pranava mantrim and is Hindu to the core. As you very well know that Aum represents three stages of consciousness and represents the creation and the destruction cycle of the Universe which are all anathema to the Abrahamic religions. Yoga is not a cafeteria where one chooses what one wants. As a practiciner at least one should prescribe to the basic tenets of our Dharma, that we are all born divine and try to connect to our Ishwara in various Dharmic Ways. If Christians subscribe to the dogma of original sin, then Yoga is not for them. They can get fit by going to the Gym. Same thing applies to our Muslim friends if they believe that a male Allah God is the only the true one and Prophet Mohamed is the only way to reach Him.
    We Hindus should stand up for our practices and should never dilute it to appease other religions. Dalai Lama is a good examples. He always stands up for His religion.

  5. Aum is not equivalent to Allah. If we Hindus accept this uncritically, then even Lord Krishna will not be able to save us.

  6. முதலில் யோகக் கலைஉலக மக்களிடையே பரவட்டும்.மக்கள் நன்மையை அறுவடை செய்யட்டும். ஒரு போதும் இந்தியாவின் கலை என்ற அடையாளத்தை யாராலும் பறிக்க முடியாது ரூசி கண்டபின் மக்கள் இந்து வேதங்களையும் யோகியா்களையும் தாராளமாகப் படிப்பாா்கள். மனமாற்றம் ஏற்படும்.நிச்சயம்.

    வலைக்கு முன் கல் வீச வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *