அறவணர் தொழுத காதை: மணிமேகலை – 13

மாதவி, சுதமதி, மணிமேகலை மூவரும் அறவண அடிகள் இருக்குமிடத்தை விசாரித்துக்கொண்டு அவருடைய குடிலை அடைந்தனர். அறவண அடிகளை வலம்வந்து அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினர்.Image result for aravana adigal

அறவண அடிகள் அவர்களைப் பார்த்து புன்னகைத்தார்.

“என்னால் ஆகக்கூடிய காரியம் ஏதாவது உள்ளதா?” என்றார், மணிமேகலையைப் பார்த்து.

“ஆம்,“ என்றாள் மணிமேகலை.

“நீ யார், எதற்காக வந்திருக்கிறாய் என்பதனைச் முதலில் சுருக்கமாகக் கூறு,“ என்றார்.

தானும் சுதமதியும் மலர்வனத்தில் மலர்மாலை தொடுப்பதற்குத் தேவையான பூக்களைப் பறிக்க மலர்வனம் சென்றதையும், அப்போது உதயகுமாரன் அவளைப் பின்தொடர்ந்து வந்ததையும், சுதமதி தன்னைப் பளிங்கு மண்டபத்தில் வைத்ததையும், உதயகுமாரன் சூளுரைத்ததையும், சக்கரவாளக் கோட்டம் சென்றதையும், மணிமேகலாதெய்வம் அவளை வான்வழியே மணிபல்லவத் தீவில்கொண்டு வைத்ததையும், பத்மபீடத்தின் முன்னின்று முற்பிறப்பின் இரகசியம் உணர்ந்ததையும், முற்பிறவியில் தனது சகோதரிகளான தாரையும், வீரையும் இப்பிறவியில் மாதவியும், சுதமதியுமாகப் பிறப்பெடுத்ததையும், இராகுலன் உதயகுமாரனாகப் பிறந்துள்ளதைப் பற்றி அறிந்துகொண்டதைப்பற்றியும் கூறினாள் மணிமேகலை.

மேலும், மணிமேகலாதெய்வம் தனக்கு அருளிய மந்திரங்களையும்,  ஆபுத்திரனிடமிருந்த அட்சயபாத்திரமான அமுதசுரபியை மணிபல்லவத்தீவின் காவல்தெய்வம் தீவதிலகை தனக்களித்தது குறித்தும், அதன் வரலாறை அறவண அடிகளிடம் தெரிந்துகொள்ளுமாறு அந்தக்  காவல்தெய்வம் கூறியதையும் தெரிவிர்த்துவிட்டு மீண்டும் ஒருமுறை அவரை வணங்கினாள்

இதைக்கேட்டு மகிழ்ந்த அறவண அடிகள் மனம் மகிழ்ந்தார். அந்த உவகை அவர் முகத்தில் புன்னகையாக மலர்ந்தது.

“நல்லது பெண்ணே. பொன்வளையல்களுடன் பொலிகின்ற உனக்கு இவர்களின் வரலாற்றைக் கூறுவேன், கேள்!“ என்றார்.

“அறவழி காத்துநின்ற புத்தபெருமானின் பாதகமலங்களை மனதில்நிறுத்தி மேலும் சிலவற்றைக் கூறுகிறேன், கேள். ஒரு சமயம் புத்தரின் பாதச்சுவடுகள் தாங்கிய பாதபங்கய மலையில் நான் சென்றுகொண்டிருந்தபோது கச்சய நகரை ஆண்டுகொண்டிருந்த துச்சயன் என்ற மன்னனை ஒரு பூவனத்தில் கண்டேன். பெரிய படையினை உடைய மன்னவனே! நீயும் உன் தேவிமார்கள் இருவரும் நலமா? என்று விசாரித்தேன்.

“மன்னன் முகம் மிகவும் வாடியிருந்தது. தாங்கமுடியாத சோகத்துடன் கூறினான். ‘அரண்மனைக்கு ஒரு புதிய யானையை வாங்கியிருந்தோம், அய்யனே! அன்று வீரை மதுவருந்திய களிப்பில் இருந்தாள். எனவே எவ்வித முன்னெச்சரிக்கை, பாதுகாப்பின்றி அந்தப் பழகாத யானை அருகில் போய்விட்டாள். யானை அவளைத் தனது துதிக்கையால் காலில் போட்டு மிதித்துவிட்டது. ஒருநொடிப் பொழுதில் வீரை உயிரை இழந்தாள். உங்களுக்குதான் தெரியுமே, தாரை தனது சகோதரிமேல் உயிருக்கு உயிராக இருந்தாள் என்று. யானை மிதிபட்டுத் வீரை உயிரிழந்தாள் என்பதைக் கேள்விப்பட்ட மறுவினாடியே தாரை துக்கத்தில் உயிர் இழந்தாள். என்னுடைய இரண்டு தேவிகளையும் இழந்து நான் வாடுகிறேன். என்றான். அவனுடைய முற்பிறவியின் பயன் அது என்று அவனைச் சமாதானம் செய்துவிட்டு வந்தேன். நாடகத்தில் காட்சி முடிந்ததும் நடிப்பவர்கள் வேடம் கலைத்துவிட்டு வருவதுபோலிருக்கிறது நீங்கள்  மூவரும் இங்கு வந்திருப்பது.” என்றார்.

மணிமேகலை சட்டென்று திரும்பி, மற்ற இரு பெண்களையும் பார்த்து, ‘பார்த்தீர்களா! நான் சொன்னது சரிதானே?” என்பதுபோலப் பார்த்தாள். மாதவியின் முகத்தில் பேரமைதி தவழ்ந்தது.

“என் முன்னே சற்று நேரம் அமர்கிறீர்களா?” என்றார் அறவண அடிகள்.

“எங்களுக்கு அதைத் தவிர வேறு என்ன பேறு இருக்கப்போகிறது?” என்றாள் மாதவி.

மூவரும் அறவண அடிகளின் முன்பு அமர்ந்தனர்.

“முற்பிறவி குறித்தும் நல்லறங்கள் குறித்தும் மணிபல்லவத்தீவிலிருந்து அறிந்து வந்திருக்கும் பெண்ணே! நான் சொல்வதைக் களிப்புடன் கேட்பாய்.  புத்தபெருமான்கூறிய அறநெறிகள் நம்மை நிருவாணம் என்னும் நற்கதியில் கொண்டுவிடும். ஆனால் இங்கே காண்பதென்ன? அந்த வழியை அருகம்புல்லும் நெருஞ்சிமுள்ளும் அடைத்துக்கொண்டிருக்கின்றன. பனி மூடிக்கொண்டிருக்கும்போது கதிரவன் பனிமூட்டத்தின் பின்னால் இருக்கிறான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.  அந்தக் கதிரவன் பனிமூட்டத்தின் பின்னால் இருப்பதுபோல புத்தர் காட்டும் நற்கதியும் மறைந்து காணப்படுகிறது. துளைபோடப்பட்ட பாசிமணியின் வழியாகக் கடல்நீர் புகமுடியாது என்றாலும், அந்தத் துளை வழியாகச் சிறிதளவு நீராவது கசியும். அதைப்போல நான் புத்தரின் அறநெறிகள் முழுவதையும் கூற இயலாது என்றாலும் நான் கூறுவதில் ஒருதுளியாவது உங்களைச் சென்றடையட்டும்.” என்றார்.

மேலும் தொடர்ந்தார்.

“ஒருமுறை சக்கரவாளக் கோட்டத்திலுள்ள தேவர்கள் அனைவரும் தங்களில் சிறந்தவனான பிரபாபாலன் என்ற தேவனின் கால்களில்விழுந்து வணங்கி, இறைஞ்சி, பூமியில் அவன் அவதரிக்க வேண்டும் என்று  கேட்டுக்கொண்டனர். அவர்கள் கோரிக்கையை ஏற்றான்.

இருள்மூடிக் கிடக்கும் பூமண்டலத்தில் விரிந்த கதிர்களைப் பரப்பி ஆதவன் ஒளியுடன் தோன்றுவது போல இன்றிலிருந்து ஆயிரத்து நூற்றுப் பதினாறு வருடங்கள் கழித்து புத்தர் பெருமான் இந்தப் பூமண்டலத்தில் பிறப்பார். அறநெறிகளை இந்த உலக மாந்தர்களுக்குப் அவர் போதிப்பார். பெரிய ஏரியில் நிறைந்த நீரானது,  சிறிய மதகின் மூலம் பாய்ந்து வயல்களுக்குச் செல்வதுபோல அந்தப்பெருமானின் அறநெறிகள் மானிடர்களின் சிறிய செவிகளில் புகுந்து அவர்களுக்கு நன்மை விளைவிக்கும். என்றான்.

“கதிரவன் காலைவேளையில் ஒளியுடன் தோன்றுவான். அந்த ஒளியைத் தனக்குள் வாங்கிக் கொள்ளும் சூரியகாந்தக் கல் அதனை மீண்டும் பிரதிபலிக்கும் தன்மைகொண்டது. அதைப்போல மக்களின் அறியாமையாகிய இருளை அகற்ற புத்தபெருமான் ஓர் ஆதவனைப்போல இந்தப் பூமியில் தோன்றினார். அவர்  தோன்றும் சமயம் சூரியனும் சந்திரனும் தத்தம் மண்டலங்களில் பொருந்தியிருக்கும், நகரும் தன்மையுள்ள விண்மீன்கள் சரியான பாதையில் செல்லும். பருவம் தவறாது மழை பொழிந்து வளம்பெருகும். உயிர்கள் வருந்தாவண்ணம் காற்றுமண்டலம் இடம் வலமாகச் சுழலும். திசைகள் சிறந்துவிளங்கும். பெரிய கடலானது முத்து, பவளம்போன்ற செல்வங்களை அள்ளிவழங்கும். ஆநிரைகள் தனது  கன்றுகளுக்கு வழங்கியதுபோக வழங்கும் பாலானது கலங்கள் நிறைந்து காணப்பெறும். உணவு உறைவிடம் மிகுந்து காணப்படுவதால், பறவைவகைகள் தங்களது இருப்பிடம்விட்டு அகலாது இருக்கும். விலங்கினமும் மக்கள் இனமும் பொதுவாகத் தங்கள் நடுவில்  நிலவும் பகைமைநீங்கிக் காணப்படும். மனக்கலக்கத்திற்குக் காரணமான துன்பத்தை மானிடர்களையும் பேய்களையும் விட்டொழியும். கூன் உருவம், குள்ள உருவம், செவிடு ஊமை போன்ற பிறப்பில் தோன்றும் குறைபாடுகள் எதுவுமின்றி மானிட உயிர்கள் தோன்றும். சூரிய ஒளியைச் சூரியகாந்தக்கல் வெளிப்படுத்துவதுபோல புத்தபெருமானின் ஒளியை திங்கள் முதலியவை நன்கு விளங்கச்செய்யும். புத்தரின் அறநெறிகளைக் கேட்டவர்கள் பிறவியெனும் பெருங்கடலை எளிதில் கடக்கவல்லவர்கள். எனவே போதிமரத்தின் அடியில் அமர்ந்தவரின் சிறந்த  பாதங்களைப் போற்றிப் பாடுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன், பெண்ணே. அதனை எப்பிறவியிலும் மறக்கமாட்டேன். உன்னுடைய வருகைக்குப் பின்னால் இந்த நகரத்தில் நிறைய வினைகள் நடைபெற வேண்டியுள்ளன. அவை முடிந்தபின்னர் மீண்டும் என்னிடம் வந்து அறவுரைகளைக் கேட்பாய்!“ என்றார்.

“இவர்களின் கதி?” என்று மணிமேகலை வினவினாள்.

“வருந்தாதே. இவர்கள் இருவரும் ஆதிமுதல்வனின் அவதாரமான புத்தபெருமானின் பாதச்சுவடுகள் உள்ள பாதபங்கய மலையை வணங்கிய இவர்கள். வாழ்வில் நற்கதி அடைவார்கள்.

“இந்த உலகத்திலுள்ள உயிர்கலெல்லாம் உய்யுமாறு நீ அமுதசுரபி என்னும் அட்சய பாத்திரத்தைக் கைகளில் கொண்டிருக்கிறாய். மானிடர்களுக்கும், தேவர்களுக்கும் பொதுவான் அறம் ஒன்றைக் கூறுகிறேன். ஆருயிர்களின் பசிப்பிணியைப் போக்குவதே அறங்களிலெல்லாம் சிறந்த அறமாகும்,” என்றதும் மணிமேகலை தனது கைகளில் எடுத்தாள்.

பின்குறிப்பு: புத்த நூல்கள் சில கூறுவதுபோல பிரபாபாலன்  என்ற தேவர்களின் தலைவனே மீண்டும் புத்தராக அவதரித்தான் என்ற கூற்று எடுத்தாளப்பட்டுள்ளது.

[தொடரும்]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *