காஷ்மீர்: இதுவே சரியான பாதை

kashmir3
காஷ்மீர் விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டம்

 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தொடரும் வன்முறைகள் தொடர்பாக ஆக. 12-இல் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டம் மிகச் சரியான, தீர்மானமான முடிவை எடுத்திருக்கிறது. இங்கு தொடர்ந்து பயங்கரவாதத்தை விசிறி வரும் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு அதன் மொழியிலேயே பதில் கொடுக்கப்பட்டது இதுவே முதல்முறை.

நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்தே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், குறிப்பாக காஷ்மீர்ப் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் பிரிவினை கோஷங்கள் ஒலித்து வருகின்றன. சில நேரங்களில் அதன் சத்தம் குறைவாகவும், சில நேரங்களில் மிகவும் இரைச்சலாகவும் இருப்பது வழக்கம். அதனை ஆராய்ந்தால், பின்புலத்தில் இரு அம்சங்கள் இருப்பது புலப்படும்.

முதலாவதாக, பாகிஸ்தானில் எப்போதெல்லாம் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் காஷ்மீரில் ஊடுருவலைக் கட்டவிழ்த்துவிட்டு, உள்ளூர் மக்களைத் தூண்டிவிட்டு கலவரத்தில் ஈடுபடச் செய்வது அந்நாட்டு அரசியல்வாதிகளின் கடமையாக இருந்து வருகிறது. அதேபோல, இந்தியாவில், குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் அமைதியான வாழ்க்கைக்கு மக்கள் தயாராகி வருவதைக் கண்டாலும் பிரிவினைவாதிகளுக்குப் பொறுக்காது. உடனே வன்முறை தூண்டிவிடப்படும். 2016-இல் இங்கு நிகழும் வன்முறைகளுக்கு இவ்விரு காரணங்களுமே பொருந்தும்.

kashmir1
பாதுகாப்புப்படை வீரரைத் தாக்கும் பிரிவினைவாதி

இப்போதும்கூட, “காஷ்மீரி மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு தொடர்ந்து முழு ஆதரவை பாக். அரசு வழங்கும்” என்று அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளியுறவு ஆலோசகர் குறிப்பிட்டிருக்கிறார். அநாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு (ஆக. 14), காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதி பர்ஹான் வானியின் படத்துடனும், காஷ்மீர வன்முறைக் காட்சிகளுடனும் சிறப்புக் கண்காட்சி ரயிலை பாக். அரசு இயக்கியுள்ளது. இத்தனைக்குப் பிறகும், பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகளை ஆதரிக்கும் நம் ஊர் மனித உரிமைவாதிகளை எப்படி வர்ணிப்பது?

பாகிஸ்தானில் தற்போது உள்நாட்டுப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பலுசிஸ்தான், பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள மக்கள் – அவர்களும் இஸ்லாமியர்கள் தான் – பாகிஸ்தான் அரசின் பாரபட்சமான போக்கை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். அங்கு அரச வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. அதேசமயம், இந்தியாவின் ஜம்மு காஷ்மீரிலோ, யாரும் கனவிலும் கண்டிராத வகையில், மக்கள் ஜனநாயகக் கட்சி- பாஜக கூட்டணி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. இந்த அரசு ஆக்கப்பூர்வமான மாற்றங்களை நிகழ்த்திவிட்டால், பிரிவினைவாதிகளின் சொல் எடுபடாமல் போய்விடும் என்பதை பாக். அரசு உணர்ந்திருக்கிறது. எனவே தன், உள்நாட்டு பிரச்னைகளிலிருந்து பாக். மக்களின் கவனத்தை திசை திருப்பவும், ஜம்மு காஷ்மீரில் மக்களாட்சி நிலைகொள்வதைத் தடுக்கவும், எல்லைக்கு அப்பாலிருந்து பிரிவினைவாதிகளைத் தூண்டிவிடுவதுடன், அவ்வப்போது ஆயுதங்களுடன் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்கிறது.

ஆனால், முந்தைய அரசுகள் போலல்லாது, மத்திய பாஜக கூட்டணி அரசு பிரிவினைவாதிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரிவினைவாதிகளுக்கு ஆதரவான கட்சியாக இருந்த ம.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்ததால் அதன் நிலைப்பாடு நீர்த்துப்போகும் என்று மனப்பால் குடித்தவர்களுக்கு ஏமாற்றம். மாறாக, ம.ஜ.க. தேசிய நீரோட்டத்தில் இணைய முற்பட்டிருக்கிறது.

இதைக் குலைக்கவே, காஷ்மீரில் சி.ஆர்பி.எஃப். படையின் வாகன அணிவகுப்பின் மீது 2015 ஆகஸ்டில் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரு வீரர்கள் கொல்லப்பட்டனர். எனினும் அப்போது, முகமது நவேத் என்ற லஷ்கர் எ தொய்பா அமைப்பைச் சார்ந்த பாக். பயங்கரவாதி ஒருவன் உயிருடன் பிடிபட்டான். அவனிடம் கிடைத்த தகவல்கள் மூலமாக பாதுகாப்புப் படையின் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டன.

kashmir2
ராணுவத்துக்கு எதிரான கல்லெறி யுத்தம்

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் தொடர்ச்சியாக பாதுகாப்புப் படையினர் தாக்கப்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னணியில் இருந்தவர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் பயங்கரவாதியான பர்ஹான் வானி எனத் தெரியவந்ததை அடுத்து, அவரை அனந்தநாக் மாவட்டத்தில் அவரது மறைவிடத்திலேயே புகுந்து ராணுவம் சுட்டுக் கொன்றது (ஜூலை8).

அந்தத் தாக்குதல் மிகவும் சரியான பதிலடி என்பது, அதைத் தொடர்ந்து நடந்துவரும் வன்முறைகளிலிருந்து உறுதியாகிறது. வன்முறையின் மூலாதார வேரான பர்ஹான் வானி கொல்லப்பட்டதை பாகிஸ்தானாலோ, உள்ளூர் பிரிவினைவாதிகளாலோ நம்ப முடியவில்லை. எனவேதான், அரசை எதிர்த்து அமளியைத் துவக்கினர்.

சிறுவர்கள் துவங்கி, இளம்பெண்கள் வரை பலரும் கைகளில் கற்களை ஏந்தி பாதுகாப்புப் படையினர் மீது கொத்துக் கொத்தாக வீசுவதும், தனியாக சிக்கும் ராணுவ வீரரை கொடூரமாகத் தாக்குவதும் என, அவர்களது போராட்டம் வன்முறையின் உச்சத்தைத் தொட்டபோது, ஆபத்தில்லாத வகையில் பெல்லட் துப்பாக்கி பிரயோகத்துக்கு ராணுவம் உத்தரவிட்டது. ஆனால், அதனால் ஆபத்தில்லை என்ற துணிவில் மிகவும் நெருக்கமாக வந்து கலவரக்கார்ர்கள் வன்முறையில் ஈடுபட்டபோது, ராணுவத்தின் துப்பாக்கிச்சூடுகளில் பலர் உயிரிழந்தனர். ராணுவம் தற்காப்புக்காகவே சுட வேண்டி வந்த்து என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் (முழு மாநிலத்திலும் அல்ல) நடைபெற்ற க்லவரங்களால் அங்கு ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது. இதுவரை 50-க்கு மேற்பட்டோர் ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்; 5,000 பேர் காயம் அடைந்துள்ளனர். அதேசமயம், வன்முறையாளர்களிடம் சிக்கி 4,500 வீரர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தான், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்று ம.பி.யில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “மனிதநேயம், ஜனநாயகம், காஷ்மீரியம் (காஷ்மீர் கலாசார மதிப்பீடுகள்) ஆகியவற்றின் அடைப்படையில், அடல் பிகாரி வாஜ்பாயின் பாதையில், மத்திய அரசு செயல்படும்” என்று அறிவித்தார்.

தவிர, நாடாளுமன்றத்தில் காஷ்மீர் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. காஷ்மீரில் அமைதி திரும்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்ப்பட்டது. இந்த விவாத்த்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், “ம.ஜ.க.- பாஜக ஆட்சி அமைந்ததே காஷ்மீர் வன்முறைக்குக் காரணம்” என்றார். அரசியல் லாவணி பாடும் நோக்குடன் அவர் இதைக் குறிப்பிட்டாலும், அது உண்மைதான். இந்த ஆட்சி நல்லாட்சியாகத் தொடரக் கூடாது என்பதில் பயங்கரவாதிகளைவிட காங்கிரஸுக்கு ஆர்வம் அதிகம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

Balochistan
பாகிஸ்தானின் அரசு வன்முறைக்கு எதிராக பலுசிஸ்தானில் நடக்கும் மக்கள் போராட்டம்

அடுத்து, காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு தில்லியில் கூட்டியது. இதில் தேசிய மாநாட்டுக் கட்சி தவிர்த்து அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். அதில் எடுக்கப்பட்ட இரு முடிவுகள் முக்கியமானவை.

அதில் மிகவும் முக்கியமானது, பாக். பிரதமரின் புகாரை ஏற்று ஜம்மு காஷ்மீருக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் ஆய்வுக்கு வர அனுமதி கோரியதற்கு ஏக மனதாகத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு. மாறாக, தேசிய மனித உரிமை ஆணையம் ஜம்மு காஷ்மீரில் ஆய்வு நடத்தலாம் என்று சந்தில் சிந்து பாடினார் மார்க்சிஸ்டின் யெச்சூரி. ஆயினும், ஐ.நா. தலையீட்டுக்கு அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் எதிர்ப்பை பதிவு செய்தன.

அதேபோல, இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  “இன்றைக்கு நாம் காஷ்மீரைப்பற்றி பேசுகிறோம் என்றால், நாம் ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய 4  பகுதிகளைப் பற்றியும் பேசித்தான் ஆக வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட ஒட்டுமொத்த காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான். நாம் காஷ்மீர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அனைத்துத் தரப்பினரிடமும் பேச வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்,  காஷ்மீரின் ஒரு பகுதிதான். உலகின் பல்வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்துள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களிடமும் பேச வேண்டும்” என்றார். “அரசியல் சாசன அடிப்படையில் காஷ்மீர் பிரச்னைக்கு மத்திய அரசு நிரந்தரமான, அமைதியான தீர்வு காண உறுதி கொண்டுள்ளது. அதேசமயம், நாட்டின் ஒருமைப்பாட்டில் எந்த சமரசமும் செய்துகொள்ளப்பட மாட்டாது. காஷ்மீரைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அமைதியை விரும்புகின்றனர். ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை வைத்துள்ளனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அணுகுமுறை இதுவரை இருந்த அரசுகள் மேற்கொள்ளாததாகும். பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் பலுசிஸ்தானிலும் பாக். அரசை எதிர்ப்பவர்கள் கொடூரமாக ஒடுக்கப்படுகின்றனர். அவர்கள் வெளிப்படையாகவே இந்தியாவுடன் இணைய விரும்புவதாக பேசத் துவங்கி உள்ளனர். இந்த சமயத்தில், இந்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்திருக்கிறார் பிரதமர். அதுமட்டுமல்ல, இந்திய வெளியுறவு அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து, பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்களின் தற்போதைய நிலையை அறிந்து அது குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் பரிசீலிக்கும்” என்றும் மோடி அறிவித்தார்.

சொந்த மக்களை விமானத்திலிருந்து குண்டுவீசிக் கொல்லும் பாக் அரசு, காஷ்மீரிலும் பிரிவினையைத் தூண்டுகிறது. விரைவில், பலுசிஸ்தானிலும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் பாகிஸ்தான் அரசு நடத்திய மனித உரிமை மீறல்களுக்காக உலக அரங்கில் பதில் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

நமது அரசின் அணுகுமுறைகளில் தெரியும் மாற்றம் இந்தியாவின் குழப்பமற்ற உறுதிப்பாட்டையும், தெளிவான சிந்தனையையும் வெளிப்படுத்துகிறது. அரசைக் குறை கூறுவோர் கூறிக்கொண்டுதான் இருப்பார்கள். அதுதான் அவர்களின் அரசியல் பிழைப்பு. ஆனால், நீண்ட தொலைநோக்குத் திட்டத்துடனும், தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் வகையிலும் மத்திய அரசு செயல்பட வேண்டியுள்ளது. அந்த வகையில், மோடி அரசு செல்லும் திசை சரியானதாகவும் கச்சிதமானதாகவும் உள்ளது.

 

 

 

4 Replies to “காஷ்மீர்: இதுவே சரியான பாதை”

  1. இன்று திரு.மாலன் அவர்கள் தினமணியில் பலுசிஸ்தான் குறித்து சில பதிவுகளைச் செய்துள்ளாா். இப்படி ஒரு கதை இருப்பதே அநேகருக்கு தொியாது. எனக்கும் தொியாது. இது குறித்தும் தற்சமயம் அங்கு இருக்கும் பாக்கிஸ்தான் எதிாப்பு குரலுக்கு இருக்கும் நியாயங்கள் குறித்தும் அறிய வேண்டும்.அனைவருக்கும் தொிவிக்க வேண்டும். தொிவிப்பீா்களா ? அறிந்து கொள்வோம் பலுசிஸ்தானை – தொடரட்டும்

  2. பாகிஸ்தான் பிரிவினையின் போதே பலுசிஸ்தான் இந்தியாவும் இணைய விருப்பியதா? ஏன் பாகிஸ்தான் இருபக்கம் பிரித்து கொடுக்கப்பட்டது? பின் ஏன் பங்களாதேஷ் தனியா உருவானது? எல்லாமே கேள்வியாக தான் உள்ளது?

  3. காஸ்மீர் பிரச்சனை இந்த அளவு மோசமானதிற்கு முந்தைய காங்கிரஸ் அரசே காரணம். இப்பொழுதுதான் சரியான பாதைக்கு வந்துள்ளோம். குறைகூறும் சில புல்லுருவிகள் (கம்முனிஸ்ட்,) பற்றி கவலைகொள்ளாது பணி தொடரட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *