ஆதிரை பிச்சை இட்ட காதை – மணிமேகலை 17

manimekalaisமணிமேகலை ஆதிரையின் இல்லத்தின் முன்பு நின்றாள்.

கூரை வேயப்பட்டுச் சுட்டமண்ணில் சுவர் எழுப்பி, போவோர் வருவோர் அமர ஏதுவாக வாசலில் திண்ணை அமையப் பெற்ற இல்லம்.

ஆதிரைகுறித்து அறவண அடிகள் கூறியது மணிமேகலையின் மனதில் நிழலாக அசைந்தது…

…ஆதிரையின் கணவன் சாதுகன் என்ற பெயரையுடைய வணிகன். இனிய மனையறம் காக்கும் மங்கல மங்கை ஆதிரை இருக்க, புலன்செல்லும் வழிகளில் சென்று, ஒரு கணிகையின் இல்லத்தில் குடிபுகுந்தான். சாதுகன் அங்கும் சும்மா இருக்கவில்லை. பகடை விளையாட்டிலும், சூதாட்டத்திலும் தான் சேர்த்துவைத்திருந்த மிகுதியான செல்வத்தைத் தீயில் வார்க்கும் நெய்யெனப் பெய்தான். கையில் இருந்த பொருள் தீர்ந்ததும் கணிகையிடம் கொடுக்க எதுவுமில்லை. கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவைச் சார்த்தும் கணிகையர் இல்லங்கள், சாதுகன் நல்லவன் என்று அவனுக்கு மட்டும் கதவைத் திறந்துவைக்குமா என்ன?

சாதுகன் யோசித்தான். பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை என்பது புரிந்தது. கடல்கடந்து வணிகம்செய்யச் செல்லும் வணிகர்களுடன் தானும் சென்று பொருள் ஈட்ட முடிவுசெய்தான்.

“சாதுகா,“ வாசலில் குரல் கேட்டு சாதுகன் வெளியில் வந்தான். எவரென்று தெரியாத ஒருவன் நின்றுகொண்டிருந்தான். வந்தவனுக்கு அகவை நாற்பதைத் தாண்டியிருக்கும். நல்ல முறுக்கேறிய உடல்.

“வாருங்கள் ஐயா,“ என்று சாதுகன் அவனை உள்ளே அழைத்தான்.

“உள்ளே வேண்டாம். இந்தத் திண்ணையில் அமர்ந்து பேசலாம்,” என்றான் வந்தவன்.

“சாதுகா! என் பெயர் கடல்மாறன். என்னிடம் சொந்தமாக மரக்கலங்கள் உள்ளன. பல யோசனை தூரம் கப்பலில் சென்று பண்டமாற்று முறையில் வாணிபம் செய்பவன். நேற்று நீ கடற்கரைச் சாலையில் வந்து விசாரித்ததாகத் தகவல் கிடைத்தது.”

“ஆம் ஐயா. உங்களைத் தேடியே வந்தேன். ஆள் அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே. அமருங்கள். எதன்பொருட்டு என்னைத்தேடி வந்தீர்கள்?” என்று வினவினான் சாதுகன்.

“சூதில் உன் செல்வத்தை இழந்ததாக ஊரில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நீயும் கடல்கடந்து வாணிபம் செய்ய அவாவுருகிறாய் என்று நினைக்கிறேன்”

“என்ன செய்வது? கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்பார்களே, அது போல் ஆயிற்று என் நிலை.”

“இருப்பினும் ஒரு வணிகனின் மனம் என்றும் மாறாதது அல்லவா?”

“அஃது என்னவோ மெய்தான்.”

“நாளை மறுநாளன்று என்னுடைய கப்பல் வாணிபம் செய்யக் கிழக்கு நோக்கிப் பல யோசனை தூரம் பயணிக்க உள்ளது. நெல்மூட்டைகளையும், தானியமூட்டைகளையும் சுமந்துசெல்ல உள்ளது. பணம் கொடுத்து அவற்றைப் பெறமுடியும் என்றால் பெற்றுக்கொள். நீயும் என்னுடன் கிளம்பி வா. அல்லது பொதியறைக் காவலனாக இருந்துகொண்டு உன் உழைப்பை முன்பணமாகக் கொடு. உன் வாணிபத்திறனால் மூட்டைகளை நல்லவிலைக்கு விற்றுக் கொடு.“

சாதுகன் வாய்மொழியவில்லை.

“சம்மதம்தானே?“

‘’தூர தேசம் செல்லும்போது அவர்களின் பாஷையைக் கணக்கில் கொள்ள வேண்டாமா?” என்று கேட்டான் சாதுகன்.

“நீ ஒரு பன்மொழி வித்தகன் என்று கேள்வி பட்டேனே?” என்றான் கடல்மாறன்.

‘பரவாயில்லை, இவன் அனைத்தையும் அறிந்துதான் வந்திருக்கிறான். இல்லையென்றால் கடல் கடந்து வாணிபம் செய்வது எங்கனம்?’ என்று நினைத்த சாதுகன், “எந்தத் திசையில் செல்கிறோம் எந்தத் தேசம் செல்கிறோம் என்பது தெரிந்தால்தானே எனக்கு அந்தத் தேசத்து பாஷை தெரியுமா இல்லையா என்பதைக் கூற முடியும்?”

“சாரணர்களின் பாஷை உனக்குத் தெரியும்தானே?”

“ நக்கசாரணர்கள்தானே?”

“அது என்ன நக்கசாரணர்கள்?”

“நாவலந்தீவில் மட்டுமின்றி அதற்கும் கீழ் திசைகளில் பரவியிருந்தது நமது தமிழ் சமூகம். நாகர்கள் என்று அறியப்பட்டவர்களே இந்தப் பூர்வப் பழங்குடியினர். நாகருக்கும் நக்கருக்கும் உள்ள தொடர்பை மொழிகுறித்து ஆய்வுசெய்யும் சான்றோர்கள் மேற்கொண்டால் தமிழன் இந்த நாவலந்தீவின் ஆதித் தொல்குடி என்பது விளங்கும். எனக்கு அந்த நக்கசாரணர்களின் பாஷை ஓரளவு பேசவரும்.”

“அது போதாதா? நாளை அதிகாலையில் தயாராக இரு. ஒரு மாதத்திற்கு வேண்டிய பொருட்களுடன் ஆயத்தமாக இரு. உன்னைத் துறைமுகம்வரை அழைத்துப்போகக் குதிரைவண்டி வரும். போகலாம்.”

“ஒருவாய் அமுது உண்டுவிட்டுச் செல்லலாமே. ஆதிரை!”

ஆதிரை என்ற பத்தினிப் பெண் வெளியில் வந்தாள்.

கடல்மாறன் அவள் தோற்றத்தின் தூய்மை கண்டு எழுந்துநின்று வணங்கினான்.

“தெய்வம் மனித வடிவம் என்பார்கள். அதற்குச் சாட்சியாக இதோ கடல்மாறன். நாளை இவருடன் நெடுந்தொலைவு வாணிபம் மேற்கொள்ளக் கடலில்செல்ல உள்ளேன். இவர் உண்பதற்குப் பலகாரங்கள்கொண்டுவா” என்று பணித்தான்.

“அட, அட! இது ஏது அன்புத் தொல்லை? நாளை எனக்கும் சேர்த்து உணவுகொண்டுவா. தாயே, நான் வருகிறேன்” என்று கடல்மாறன் நகர்ந்து சென்றான்.

மறுநாள் விடிவதற்குள் சாதுகன் நீராடி தனது பயணத்திற்கு ஆயத்தமாக நின்றான். அவனைப் பிரியப்போகும் வேதனை ஆதிரைக்கு இருந்தது என்றாலும் பொருள் ஈட்டுதல் பொருட்டுச் செல்வதால் ஆதிரை அவனை மலர்ந்த முகத்துடன் வழியனுப்பிவைத்தாள். கடல்மாறனும், சாதுகனும் கடற்பயணம் மேற்கொண்டனர்.

ஆதியில் மிக்க இனிமையாக அமைந்த பயணம் நாட்செல்லசெல்லத் துன்பம் தருவதாக மாறியது. கடலின் காற்று சீராக இல்லை. காற்றின் சீற்றதிற்குத் தக்கவாறு பாய்மரம் விரிப்பதும் சுருட்டுவதுமாகப் பயணம்சென்றது. ஒரு சமயம் பெரும் புயற்காற்று வீசத் தொடங்கியது. முன்னறிவிப்பின்றி வீசிய அந்தக் கடல் காற்றின் மொழியறியாத பிரயாணிகள் தடுமாறினார்கள்.

காற்றின் வீச்சில் பாய்மரம் முறிந்தது. கப்பல் நிலை தடுமாறியது. சாதுகன் தூக்கி எறியப்பட்டான். கடலில் வீழ்ந்த சாதுகன் உடைந்த பாய்மரத்தைப் பற்றிக்கொண்டான். மற்ற அனைவரும் இறந்துபோக, எஞ்சிய பயணிகள் உடைந்த கப்பலுடன் புகார் நகரை வந்து சேர்ந்தனர். தப்பிப் பிழைத்தவர்களில் கடல்மாறனும் ஒருவன்

“என்ன பெண்ணப்பா இந்த ஆதிரை? கணவன் உயிருடன் இருந்தவரையில் அவன் கணிகையர் பின் சென்று அவளுக்கு இன்பம் அளிக்கவில்லை. இப்போது பொருள் ஈட்டச்சென்ற அவள் கணவன் கடல்வாணிபம் மேற்கொண்டு கடலில் மூழ்கிவிட்டானாம். பாவம் என்ன செய்யப் போகிறாளோ?” என்று புகார் நகரமே ஆதிரைக்காக வருந்தியது.

பத்தினிப் பெண்களுக்கு உள்ள தொல்பழக்கத்தையே ஆதிரை மேற்கொள்ளத் துணிந்தாள். நெருப்புக்குழி ஒன்றை ஏற்படுத்தி அதனுள் இறங்கத் துணிந்தாள்.

பெற்றோரும் உற்றோரும் மறுத்தும் எவருக்கும் செவிமடுக்காமல் ஆதிரை இடுகாட்டுப் பகுதியின் அருகில் சிதைக்குழி ஒன்றை அமைக்க ஏவினாள். இடுகாட்டுப் பகுதியில் உள்ளவர்கள் நிலத்தில் உரிய அளவுகளுடன் நன்கு ஆழமான பள்ளம் ஒன்றைப் பறித்தனர். அதன் உள்ளே விறகுகளையும் எளிதில் தீ பற்றிக் கொள்ளும் சுள்ளிகளையும் சருகுகளையும் இட்டு நிரப்பினர். பெரிய கலன்களில் பசுமாட்டிலிருந்து பெறப்பட்ட நெய்யானது வார்க்கப்பட்டது. பின்னர் அந்தத் சிதைக்குழி தீயூட்டப்பட்டது.

தீக்குழியில் ஆதிரை இறங்கி உயிரை மாய்த்துக்கொள்ளப்போகிறாள் என்பதைக் கேள்விப்பட்டுப் புகார் நகரமே அங்கு திரண்டுவிட்டது.

ஆதிரை தூய நீராடி இறைவனையும் தாய் தந்தையர் மற்றும் மாமன் மாமியாரை வணங்கிவிட்டு கடலோடுசென்ற தனது கணவனை மனதில் எண்ணியபடி பூக்குழியை மும்முறை வலம் வந்து வணங்கினாள். ஏதோ நீர்ப்பள்ளத்தில் குதிப்பது போலத் தீக்குழியில் இறங்கினாள்.

சுற்றியிருந்த மக்கள் கூச்சலிட்டனர். ஆதிரை சற்று ஆச்சரியப்பட்டுப்போனாள்.

பத்தினிப்பெண்டிர் கணவனை இழந்ததும் தீ வளர்த்து அதனுள் இறங்குவதும், அந்தத் தீயானது அவர்களைத் தழுவிக்கொண்டு உயிரைப் பருகவது குறித்துக் கேள்வி பட்டிருக்கிறாள். ஆனால் இப்படி உக்கிரமாக எரியும் தணலின் நடுவில் தான் சென்று அமர்ந்தும் இந்தத் தீயின் வெப்பம் தன்னை எதுவும் செய்யவில்லை என்பதை அறிந்தபோது, அவளுக்குத் தான் தனது கணவனுக்கு உரிய சேவைகளைச் செய்து அவர் பெற்றோரைப் பேணி, வந்த விருந்தினரை ஓம்பி முன்னோர்களுக்குப் பித்ரு காரியங்கள் செய்வித்து வந்ததில் ஏதேனும் பிழையோ என்ற ஐயம் ஏற்பட்டது.

இட்டுக்கொண்ட நெற்றிக் குங்குமம் தீயில் நிறம் மாறவில்லை; சூடிக்கொண்ட மலர் தீயின் வெப்பத்தில் நிறம் கருகவில்லை; கட்டிய சேலையும் தீப்பற்றிக் கொள்ளவில்லை. நாற்புறமும் தீயின் ஜுவாலைகள் பற்றி எரிய அந்தப் பூக்குழியானது ஒரு தாமரைமலர் போலவும், ஆதிரை அந்தத் தாமரைமலரில் வீற்றிருந்த திருமகளைப் போலவும் தோன்றினாள்.

“முறையற்ற தன்மையுடையவளாகி விட்டேனே! நெருப்பின்மீது அமர்ந்தும் அது என்னை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க நான்செய்த பாவம்தான் என்ன? என் கற்புநெறி சிறந்தது இல்லையா? நான் ஒரு கீழ் மகளா?” என்று கண்ணீர்விட்டான்ள்.

“ஆதிரை! ஆதிரை!” என்று ஒரு குரல் கேட்டது.

“ஆதிரை! நீ தீக்குளிக்க வேண்டாம். கடல் பயணத்தின்போது உன் கணவன் இறக்கவில்லை. நக்கசாரணர் வசிக்கும் நாகர்மலைப் பகுதியில் கரை சேர்ந்துள்ளான். அங்கே அவன் அதிகநாட்கள் இருக்கமாட்டான். சந்திரதத்தன் என்ற வாணிகன் ஒருவனுடன் மீண்டும் புகார் நகரை அடைவான். தாயே, போதும்! நெருப்பிலிருந்து மீண்டு வாருங்கள்.”

கேட்ட குரலாக இருக்கிறதே என்று கூட்டத்தில் தன் பார்வையை ஆதிரை ஓடவிட்டாள். அவள்கேட்ட விஷயத்தைச் சொல்லிவிட்டு, கடல்மாறன், திரும்பிச் சென்றுகொண்டிருந்தான்.

ஊர் மக்கள் வியந்துநின்றனர். ஆதிரையின் கற்பின் திண்மையைப் போற்றினர்.

தன் கணவன் இறந்துவிட்டான் என்று எண்ணி அழுது அழுது சிவந்த கண்களைத் ஆதிரை துடைத்துக்கொண்டாள்.

கூடியிருந்த மக்களுக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி ஒரு புண்ணிய தீர்த்தத்தில் நீராடிவிட்டு, தன் இல்லம் புகுந்தாள். ஊரில் உள்ள மற்ற பத்தினிப்பெண்டிர் ஆதிரையின் கற்பின் பெருமையைப் பற்றி நாள்தோறும் பேசும் அளவிற்குக் அவள் கற்பின் திறன் போற்றப்பட்டது.

சாதுகனை கடலலைகள் ஒரு தீவில்கொண்டு தள்ளின. நெடும் போராட்டதிற்குப் பின்பு கரைசேர்ந்த அசதியில் சாதுகன் ஒரு மரநிழலில் அசந்து உறங்கிவிட்டான்.

தன்னைச் சுற்றிப் பேரிரைச்சல் எழவே, சாதுகன் கண்களைத் திறந்து பார்த்தான். முற்றிலும் வேறுவடிவில், வேற நிறத்திலுள்ள் சில மனிதர்கள் அவனைச் சூழ்ந்துகொண்டு வேறு மொழியில் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. சிறிது நேரம்சென்றதும்தான் சாதுகனுக்கு அவர்கள் பேசுவது தனக்கு நன்கு பரிச்சயமான நக்கசாரணர் பாஷை என்பது புரிந்தது. படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான்.

“ அடேய்! இவன் நல்ல வாட்டசாட்டமா இருக்கான். அடிச்சுத் தின்னோமுன்னா இன்னிக்கு ஒருநா பொழுதுக்கு நல்ல உணவுடா நமக்கு” என்றான் ஒருவன்.

ஆமாம் ஆமாம் என்று மற்றவர் குரல் எழுப்பினார்கள்.

“நக்கசாரணரோ நீங்கள்? இது நாகர் வாழும் பகுதியோ?” என்று அவர்கள் பாஷையில் சாதுகன் வினவினான். மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றக் கருவியாக இல்லாமல் ஓர் அன்பின், பாசத்தின் பிணைப்பாகவும் இருக்கிறது என்பதைச் சாதுகன் உடனே உணர்ந்தான்.

“அட, இவன் நம்மாளுப்பா,” என்றான் முதலில் கூறியவன்.

ஆமாம் ஆமாம் என்று மற்றவர் குரல் எழுப்பினர்.

“வாங்கைய்யா! ஊர்ப் பெரியவரு இருக்காரு. அவரு உங்களைப் பாத்தா மகிழ்ச்சி அடைவாரு. வாங்க, எங்களோட,” என்று சாதுகனை அவர்கள் தலைவனிடம் இட்டுச்சென்றனர்.

ஊர்ப் பெரியவர் என்றதும் சாதுகனுக்கு ஒரு தோற்றம் எழுந்தது. ஆனால் அவனுடைய எண்ணத்திற்கு முற்றிலும் வேறாக இருந்தது அங்கே அவன் கண்ட காட்சி.

கள் நிரப்பிவைக்கப்பட்ட பானைகளும், குடங்களும் அடுக்கிவைக்கபட்டிருந்தன. ஒருபுறம் நாற்றம் அடிக்கும் இறைச்சித் துண்டங்கள் குவித்துவைக்கபட்டிருந்தன. வெண்மை நிறமுடைய எலும்புத் துண்டுகள் வெயிலில் உலர்த்திவைக்கபட்டிருந்தன. இவற்றின் நடுவில் ஓர் இருக்கை இடப்பட்டு அவர்கள் கூறிய ஊர்ப் பெரியவர் என்று கூறப்பட்டவன், கரியநிறக் கரடி தனது பேடையுடன் அமர்ந்திருப்பதுபோலத் தனது மனைவியுடன் வீற்றிருந்தான்.

 யாருப்பா இது?” என்று நாகர் மொழியில் வினவினான்.

“அய்யா, என்பெயர் சாதுகன். மேற்கில் காவிரிபூம்பட்டிணம் அப்பிடிங்கிற இடம்தான் என் ஊருங்க. நமக்குப் பொளப்பு வாணிபம் செய்யுறதுங்க கடல்ல போயிட்டிருந்தப்ப பலத்த காத்து வீசி பாய்மரம் முறிஞ்சு கீள விளுந்திருச்சுங்க. நான் அந்தப் பாய்மரக் கட்டையைப் புடிச்சுகிட்டு இந்த எடத்துக்கு வந்துசேர்ந்துட்டேனுங்க..” என்றான் நாகர் மொழியில்.

“அட தொலவிலருந்து வந்தாலும் அம்மூறு பாஷை பேசுறியே. வாய்யா வா, என் பக்கத்தில் வந்து குந்து.” என்று அவனுக்கு ஓர் இருக்கையைக் கொடுத்தான்.

“நீ ஆரு? எந்த ஊரைச் சேர்ந்தவன்? இங்கன எப்படி வந்த?” என்று நாகர் தலைவன் கேட்டதற்குச் சாதுகன் அவர்கள் பாஷையில் பதில் கூறினான்.

“அடேய், பயலுவளா! இவனைப் பார்த்தா பசியால வாடிக்கிடப்பது மாதிரி இருக்கு. பசியாற உணவும், கேளிக்கையா இருக்க ஒரு பொட்டப்புள்ளையையும் கொடுங்கப்பா” என்று அடுத்து இருந்தோருக்கு ஆணையிட்டான்.

“நல்ல கறி சோறு கொடுங்கப்பா. அதேபோல மொந்தை மொந்தையாய் தென்னங்கள்ளு நிறையக்கொண்டு வந்து கொடுங்க. குடிச்சுபுட்டு பொம்பளையோட உல்லாசமா இருக்கட்டும்.” என்றான் நாகர் தலைவன்.

“ஓ! என்ன கொடுமையான வார்த்தைகள். எனக்குக் கள்ளும் பெண்ணும் வேண்டாம்,” என்று சாதுகன் மறுத்தான்.

“என்னாது? கள்ளும் பொண்ணும் வேணாமா? உனக்குக் கிறுக்குப் புடிச்சிருக்கா? கள்ளையும் பொம்பளையும் தவிர இன்பம் தர்ற பொருளுங்க இந்தப் பூமில இருக்கா என்னா? அப்படி இருந்தாச் சொல்லு, பாப்போம். அது என்னன்னு நாங்களும் தெரிஞ்சுக்கிறோம். எங்களை என்ன மடையர்கள்னு நினைச்சிட்டியா?“ நாகர் தலைவனின் குரலில் சீற்றம் கூடியிருந்தது.

“மயக்கம் தரும் கள்ளையும், நாம் உயிர் வாழ வேண்டிப் பிற உயிர்களைக் கொன்று, அவற்றின் புலாலை உண்பதையும் மெத்தப் படித்த சான்றோர்கள் அறவே வெறுத்து வந்துள்ளனர். உலகில் பிறந்தவர்கள் இறப்பதும், இறந்தவர்கள் பிறப்பதும், உறங்கியவர் விழித்தலும் விழித்தவர் உறங்குவது போலும் நடைபெறும் விஷயங்களாகும். அதே போலத்தான் நல்ல செய்கைகளைப் புரிந்தவர் நற்கதியை அடைவதும், தீய செயல்கள் புரிந்தவர்கள் மறு பிறவியில் துன்பம் அடைதலும் உண்மை என்பதால் சான்றோர்கள் மதுவையும், மாதுவையும் ஒதுக்கினார்கள்.”

“என்னா சொல்ல வர்ற? செத்துப் போறவங்க மறுபடி பொறப்பாங்கன்னு  சொல்றியா? அது எப்படி ஒரு உடம்பிலருந்து கிளம்பிப் போகும் உசுரு இன்னொரு பிறவி எடுக்கும்? புரியற மாதிரி சொல்லு. சரியா விளக்கம் கொடுக்கலைன்னு வெய்யி, நீ இந்தத் தீவைவிட்டு வெளிய போக மாட்ட”

சாதுகன் நாகர் தலைவனைப் பார்த்தான். அவன் நிதானம் இழந்தது போலத் தான் இழக்கக் கூடாது என்று அமைதியாகக் கூற ஆரம்பித்தான்.

“உயிர் ஓர் உடலுக்குள் இருப்பதை உணருமா உணராதா?” என்று கேட்டான் நாகர் தலைவனிடம்.

“அது எப்புடி உணரும்?” என்று நாகர் தலைவன் திருப்பிக் கேட்டான்.

“உங்களுக்குக் காலில் முள் குத்தினால் என்ன பண்ணுவீங்க?”

“ஆன்னு கத்துவேன். முல்லைள்ளைப் புடுங்கி எறிவேன்”

“நன்கு சமைத்த உணவைப் பார்த்தால் என்ன தோன்றும்?

“வாயில எச்சி ஊறும்”

“உணவாக்கிய மீன்களின் நாற்றம் எப்படி இருக்கும்?”

நாகர் தலைவன் மூச்சை இழுத்துவிட்டு, ”அம்சமா இருக்கும்” என்றான்.

“இவ்வளவும் உங்கள் உடம்பில் ஏன் நடக்கின்றது என்று ஒருநாளாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?” என்றான்.

“இல்லை” என்றான் நாகர் தலைவன்.

“ஏன் இப்படி நடக்குதுன்னு இப்பொழுது கேட்கிறேன். பதில் சொல்லுங்கள்”

நாகர் தலைவன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

“தெரிலப்பா. நீயே சொல்லு”

“உங்கள் உடம்பில் உயிர் இருப்பதால்’”

“அட, ஆமாம்”

“அதே சமயம் நீங்க செத்துப் பிணமாக இருப்பதாகவைத்துக் கொள்வோம்…”

சாதுகன் முடிப்பதற்குள் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், ”ஏய் என்னா பேச்சு பேசுற நீ?” என்று சாதுகனை அடிப்பதற்கு ஓடிவந்தனர்.

நாகர் தலைவன் அவர்களைத் தடுத்தான்.

“நீ சொல்லுப்பா” என்று சாதுகனிடம் கூறினான்.

“உடல் பிணமாகிக் கீழேகிடந்தபின் அதன் மீது கொள்ளிக் கட்டையைவைத்துச் சுட்டாலும் அந்த உயிர் உணருமா?”

“உணராது”

“இந்த உண்மை உங்களுக்கும் மட்டுமன்று இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும் அல்லவா? அதேபோல வெளியில் கிளம்பிய உயிரானது மீண்டும் ஓர் உடலை அடையும் என்பதும் உண்மை. இதனை நீங்கள் உங்களது கனவுகளில் கண்டு தெளியலாம். அப்படி நெடுந்தூரம் செல்லும் உயிரானது முற்பிறவியில் செய்த வினைகளின் பயனை அடையக்கூடிய ஓர் உடலைத் தேர்ந்தெடுக்கும்.”

சாதுகன் மேலும் பல தத்துவங்களை எடுத்து விளக்கினான்.

நாகர் தலைவன் சாதுகனின் கால்களில் வீழ்ந்து வணங்கினான்.

“இதுக்குதான் மெத்த படிச்சவங்க கூடப் பழக்கம் வச்சுக்கணுனும்னு சொல்லுவாங்க. நான் யாரு? கள்ளும் கறிசோறும் துன்றவன். எனக்கு எப்படி இந்த உடம்புக்குள்ள இருக்கும் உயிரை நல்லா வச்சிக்கத் தெரியும், சொல்லு. உனக்குத் தெரிந்த வழியில் நல்ல விஷயங்களைச் சொல்லிகிட்டே இரு. நானும் சாவுற வரைக்கும் கேட்டுகிட்டே இருக்கேன்.”

“நல்லது. நான் சொல்வதைக் கேள். கடலில் பயணம் செய்யும்போது கடல் சீற்றத்தால் கலம் கவிழ்ந்து கரைசேரும் மானிடர்களைக் கொல்லும் வழக்கத்தை நீயும் உன் கூட்டத்தினரும் விட்டுவிடுங்கள். இறந்த விலங்குகளின் ஊனைத் தவிர மற்ற விலங்குகளைத் துன்புறுத்திக் கொன்று தின்னும் வழக்கத்தைக் கைவிடுங்கள். இது போதும்”

“எங்களுக்கு வேண்டிய அறத்தைச் சொல்லிட்டீங்க. உங்களுக்கு இந்தத் தீவிலிருந்து என்ன வேணுமோ, கேளுங்க. இதுக்கு முன்னால் இங்க கரை ஒதுங்கும் கப்பல்களைக் கொள்ளையடித்து அதில் உள்ள மக்களை அடித்துக் கொன்று சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.அப்படி அவர்கள் கொண்டுவந்த பொருள்கள் மூட்டை மூட்டையாக இங்கே குவிஞ்சு கெடக்கு.  எவ்வளவு வேணுமின்னாலும் எடுத்துகிட்டுப் போங்க.” என்றான் நாகர் தலைவன்.

நாகர் தலைவன் சொன்னதோடு நில்லாமல் ஒரு கப்பல் முழுவதற்கும் வேண்டிய பொன்னையும் பொருளையும் மூட்டைகளாகக் கொண்டுவந்து அடுக்கினான்.

சாதுகன் கடல்பயணம் முடிந்து ஓய்வெடுக்கவந்த சந்திரத்தத்தன் என்ற வாணிகனுடன் அவன் கப்பலில் தானும் ஏறி, நாகர் தலைவன் தனக்கு வெகுமதியாக அளித்த மூட்டைகளையும் ஏற்றிக்கொண்டு காவிரிப்பூம்பட்டிணம் நோக்கிப் பயணமானான்.

சாதுகனுக்கு என்று இருக்கும் மனமானது அவனை இடித்துரைத்தது. தான் மிகவும் நல்லவன்போல நக்கசாரணர்களின் தலைவனிடம் பேசியது தவறோ என்று பட்டது. தனக்கு என்ன தகுதியிருக்கிறது என்று தோன்றியது.

தனது பழைய தீயகுணங்களை விடுத்து, தானதர்மங்கள் செய்து, ஆதிரையுடன் இல்லறம் என்னும் நல்லறம் ஓம்புவதுதான் அதற்குச் சரியான மாற்றாக இருக்கும் என்று கருதினான்…

“பெண்ணே!” விளிக்கும் குரல் கேட்டு மணிமேகலை சிந்தை கலைந்து நின்றாள்.

கற்பிற்குப் புது விளக்கம் அளிக்கும்வண்ணம் கண்களில் கருணையும் அன்பும் வழியத் தோற்றமளித்த ஆதிரை, தீட்டப்படாத ஓவியப்பாவை போல விளங்கும் மணிமேகலையைக் கண்டாள்.

“தாயே! உங்களது கற்பின் பெருமையைப்பற்றிக் கேள்விப்பட்டேன். என் பெயர் மணிமேகலை. மணிபல்லவத் தீவினில் ஆபுத்திரன் என்பவன் விட்டுச்சென்ற அமுதசுரபிதான் என் கைகளில் உள்ள அட்சயபாத்திரம். உங்கள் கைகளினால் பெறப்படும் முதல் பிச்சைச் சோற்றினால்தான் இந்தப் பாத்திரம் தான் இழந்த திறனை மீண்டும் பெறும் என்பதால் உங்களிடம் பிச்சை கேட்டு வந்துள்ளேன்.”

“இதோ ஒரு நொடியில் வருகிறேன்,” என்று ஆதிரை உள்ளே சென்று, அன்று சமைத்த உணவுப் பதார்த்தங்களைப் பாத்திரங்களில் ஏந்தி வந்தாள்.

மணிமேகலை ஏந்திய அமுதசுரபியில் இட்டு நிரப்பினாள். அன்று தொடங்கி அந்த அமுதசுரபி வற்றாமல் சுரந்து உணவில்லை என்று வரும் வறியவர்களின் பசிப்பிணி போக்கும் அருமருந்தாக மாறியது.

பின்குறிப்பு: மூல நூலில் ஆதிரை எரியூட்டி உயிரை மாய்க்க நேரும்போது, அவள் கணவன் கடல் பயணத்தில் இறக்கவில்லை என்றும் சந்திரத்தத்தன் என்ற வணிகனுடன் திரும்புவான் என்றும் அசரீரி சொன்னதாகக் கூறியிருக்கிறார். நான் கொஞ்சம் மாற்றிக் கடல்மாறன் என்ற கற்பனைப்பாத்திரத்தை உருவாக்கி, அவன்மூலம் சேதிவந்ததாகக் கூறியிருக்கிறேன்.

[தொடரும்]

3 Replies to “ஆதிரை பிச்சை இட்ட காதை – மணிமேகலை 17”

  1. அளவுடன் உள்ளது… ஆதிரை பற்றி மேலும் தகவல் எங்கள் கிடைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *