உதயகுமாரன் அம்பலம் புக்க காதை — மணிமேகலை 19

மாளிகை முழுவதும் தீப்பற்றிக்கொண்டதுபோலப் பதட்டம் நிலவியது. நடனம் பயிலும் கணிகையரின் கவனம் தாளத்தில் இல்லாமல் போனது. நடன ஆசிரியர்களிடம் ஒருவித அச்சமும் விதிர்ப்பும் ஏற்பட்டு மாணவிகள்மீது எரிந்து விழுந்தனர். நறுமணப் புகையைத் தூபம் போடுபவர்கள் ஒவ்வொரு அறையாகச் சென்று அச்சத்துடன் புகைபோட்டபடி சென்றனர். இரவு முழுவதும் விழித்திருந்து கவரிவீசிய அடிமைகள் தங்கள் உறைவிடங்களுக்குச் சென்று துயில்வதற்குத் அனுமதி எதிர்பார்த்துக் காத்திருந்தனர். குவியல் குவியலாகக் கொட்டிவைத்திருந்த மலர்களைத் தொடுக்கும் பணிப்பெண்கள் எந்த நேரமும் புயல் கிளம்பலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஓரொரு சமயங்களில் அவர்கள் சித்திராபதியிடம் வசைச்சொல்லாகவும், காயமாகவும், இழிச்செயலாகவும் பெற்ற அவமானங்கள் நினைவில் எழுந்து வலி ஏற்படுத்தின.

“யாரடி இங்கே?”

சித்திராபதியின் குரல் கூடத்தில் இடியென முழங்கியது.

சேடிப்பெண்கள் அடிமேல் அடிவைத்து, கூடத்திற்குள் நுழைந்தனர்.

“இது என்ன?” ஒரு கொத்து தலைமுடியைக் கைகளில் தூக்கிப் பிடித்தபடி சித்திராபதி நின்றிருந்தாள். அறுபது வயதை எட்டும் அகவை என்றாலும் அவளுடைய உடல் உறுதிக்கும், நாவன்மைக்கும் வேறு ஒருவராக இருந்தால் இத்தனை பெரிய கணிகையர் கூடத்தைக் கட்டிக்காப்பாற்ற முடியாமல் ஓடிப்போயிருப்பார்கள்.

“இது என்ன சத்திரமா, கண்ட நாய்களுக்கும் இலவசமாகச் சோறுபோட? பல அரசரர்களும், அதிகாரிகளும், நிலக்கிழார்களும் வந்துபோகும் இடம். ஒரு பை நிறையப் பொன் கழஞ்சு இல்லையென்றால் இங்கு நுழைய ஒருவருக்கும் அனுமதிகிடையாது என்பது தெரியுமில்லையா?”

சேடிப்பெண்கள் மெளனமாகத் தலையை ஆட்டினார்கள்.

“பிச்சை எடுப்பவன் கொண்டுவரும் மாட்டினைப்போல நன்றாகத் தலையை மட்டும் ஆட்டுங்கள். பெரும் செல்வந்தர்கள் வந்துபோகும் மாளிகையிலுள்ள இக்கூடத்தை இவ்வளவு அலங்கோலமாகவா வைத்திருப்பீர்கள்?”

“மேலைக் காற்றின் தாக்கம் நேற்று அதிகம் இருந்ததம்மா, அதனால்தான்…” ஒரு பணிப்பெண் இழுத்தாள்.

“எவளடி எதிர்பேச்சு பேசியது?” சித்திராபதி உறுமினாள்.

“வடிவுடை நங்கை” என்று குரல் எழும்பியது.

நங்கை முன்னால் சென்றாள். சித்திராபதி நங்கையின் மயிற்கற்றையைத் தனது கரங்களில் பற்றினாள். அவள் பேச்சு மட்டுமல்லாமல் செயலும் அநாகரீகமாகவே இருக்கும்.

“மேலைக்காற்று என்று காற்றின்மேல் பழிபோடத்தெரிகிறது அல்லவா? காற்று பொழுதுக்கும் வீசிக்கொண்டிருக்குமா? காலையில் எழுந்தவுடன் இருக்கும் இடம் தூய்மையாக இருக்கிறதா என்று பார்க்கும் எண்ணம் வேண்டாம்?”

“நேற்று இரவு ஆடல் பாடல் என்று கேளிக்கைகள் வெகுநேரம்சென்றது தாயே. சற்றுக் கண் அசந்து விட்டோம்”

“பார், மீண்டும் எதிர்ப்பேச்சு. இந்தக் கூடத்திற்குத் தலைவி யாரடி?”

ஒரு பெண் நடுங்கியபடி முன்னால் வந்தாள்.

“கேட்டுக் கொள். இந்த வடிவுடை நங்கை இன்று இரவு முழுவதும் கண் விழித்திருக்க வேண்டும். நீ பார்த்துக் கொள்வாயோ, அல்லது வேறு எவளிடம் பொறுப்பை ஒப்படைப்பாயோ தெரியாது. இந்த நங்கை இன்றிரவு உறங்கிவிட்டாள் என்பது தெரிந்தால் நாளை உன்னைக் கவனித்துக் கொள்வேன். ஹ்ம்” இடியென முழங்கினாள்.

“நல்லா கேட்டுக்குங்கடி. கோவலன் இறந்தபின்னர் மாதவி இங்கேதான் திருப்பிவருவாள் என்று நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால் அவள் மதிகெட்டுப்போய் அந்தப் புத்தத்துறவி அறவண அடிகள் தங்கியிருக்கும் புத்தமடத்திற்குச் சென்றுவிட்டாள். என்ன ஆயிற்று? ஊர் முழுவதும் சிரிப்பாய்ச் சிரித்தாயிற்று. ஒரு நகரம் என்றால் கல்விச் சாலைகள், பண்டக அங்காடிகள், கடவுள் கோட்டங்கள் போன்றவைகளோடு கணிகையர் இல்லங்களும் அவசியமானது என்று எண்ணும் பெரியவர்களின் எண்ணத்திற்கு ஊறு விளைவிப்பது போலாயிற்று, மாதவியின் செயல். கணவன் இறந்துவிட்டால் அந்தப் பிரிவு தாங்காமல் அவனுடன் உடன்கட்டை ஏறவோ அன்றி அவன் இறந்த பின்பு கைம்மைக்கோலம் பூண்டு ஒழுகவோ மாதவி என்ன பத்தினிப்பெண்டிர் வாழும் இல்லத்தில் பிறந்தவளா? நாம் அனைவரும் கணிகையர் இல்லத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். சோற்றுக்குப் பலபேருடைய கையைச் எதிர்பார்த்துக்கிடப்பவர்கள். பாணன் செத்துப் போனால் அவன் கையில் இருக்கும் வீணையும் செத்தாபோகும்? சொல்லுடி!” என்றாள் நங்கையைப் பார்த்து.

நங்கை பதில் பேசாமல் நின்றாள்.

“இல்லைதானே? அது மாதிரிதாண்டி ஒவ்வொரு நடனக்காரியும். ஒருத்தன்பின்னாடி போற வேலையை விட்டுடுங்க. பொன்னும் பொருளும் அள்ளி வழங்கும் வரையில்தான் ஒருத்தன்பின்னால போகணும். தேன் குடிச்சிட்டு அடுத்த மலருக்குத் தாவும் வண்டு மாதிரி காசில்லாதவனை உதறித்தள்ளிகிட்டே போயிடணும். காதல், கலியாணம் போன்ற கருமாதிங்க நமக்கு வரவே கூடாது. நல்வினை இல்லாமல் போகும்போது திருமகள் ஒரு ஆண்மகனைவிட்டு விலகுவதுபோலக் காசு இல்லை என்றால் ஓர் ஆடவனை உதறித் தள்ளவேண்டும். அதைவிட்டுவிட்டுத் துறவிவேடம் போட்டால் ஊர் சிரிக்காமல் என்ன செய்யும்?”

இப்பொழுதுதான் அங்கிருந்த நடன மன்கையருக்குச் சித்திராபதியின் கோபத்தின் காரணம் புரிந்தது.

“வசந்த மாலை,” சித்திராபதி அழைத்ததும், வசந்தமாலை முன்வந்து பணிவுடன் நின்றாள்.

“ஆயக்குடிக் கோவிந்தனைக் கூப்பிட்டு பொன்தேர் கட்டச் சொல். நான் மன்னர் மாளிகைவரை செல்ல வேண்டும்”

“உத்தரவு, தாயே!”

வசந்தமாலை அகன்றாள்.

“மணிமேகலை யாரு? மாதவி என்ற பேரிளங்கொடிக்குப் பிறந்த துவண்டுவிழும் கொடி. பூத்துக்குலுங்கும் மலர். போதவிழ்ந்து தேன்சிந்தும் மலர். மலரில் தேன் வடிகிறதென்றால் வண்டு மொய்க்காதா என்ன? மணிமேகலையைச் சாதாரண வண்டா மொய்த்தது? உலகாளும் அரசவண்டு. நான் பார்த்துக்கொண்டு வாளாதிருப்பேனா? அந்த வண்டு தேன்பருகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவேன். அமுதசுரபியாம் அமுதசுரபி! பிச்சைப் பாத்திரம்! அந்தத் திருவோட்டை மணிமேகலை கைகளிலிருந்து பிடுங்கி அந்தப் பிச்சைக்கரகள் முகத்தில் விட்டெறிந்துவிட்டு அவளை என்னுடன் பொன்தேரில் ஏற்றிக்கொண்டு வருகிறேனா இல்லையா, பார்!” என்று முழங்கினாள்.

“சின்னப் பெண் அம்மா மணிமேகலை” என்றாள் ஒருத்தி.

”சின்னப்பெண்! அவளா சின்னப்பெண்? நாலு சாத்துசாத்தி தலையில் செங்கற்களைச் சுமையாக அடுக்கி இந்தக் கணிகையர் மாளிகையை மூன்றுமுறை வலம் வரவைத்து, இடுப்பையும் கால்களையும் ஒடித்தால் தெரியும் சின்னப்பிள்ளை யாரென்று?”

வசந்தமாலை மீண்டும் வந்தாள்.

“பொற்றேர் ஆயத்தமாகிவிட்டதா?” என்றாள் அவளிடம்.

“அம்மா, ஆயக்குடிக் கோவிந்தன் இன்று வரவில்லையாம். தேர்க்காவலன் சொன்னான்.”

“விடு, நான் நடந்தே போகிறேன்,” என்று அத்தனை பெரிய கணிகையர் மாளிகையின் தலைவி சித்திராபதி விடுவிடுவென்று இறங்கி வீதியில் நடக்கத்தொடங்கினாள்.

மிருதுவான மணல் பரப்பிய முன்றில்மீது வண்டினங்கள் நறுமணம் வீசும் தாதுக்களைப் பரப்பிக்கொண்டிருந்தன. அரசிளங்குமரனின் மாளிகையைச் சுற்றி அழகான நந்தவனம் அமைக்கப்பட்டிருந்தது. மாளிகையின் தூண்களையும் சுவர்களையும் பார்த்து சித்திராபதி வியந்துநின்றாள். தூண்கள் முழுவதும் பவளக் கற்களால் இழைக்கப்பட்டிருந்தன. பசும்பொன்னினால் சுவர்கள் வேயப்பட்டு மின்னிக்கொண்டிருந்தன. விதானத்தின் மேலே வண்ணவண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டு முத்து வரிசைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அரசகுமாரன் அமரும் மண்டபம் ஒளிவீசிக்கொண்டிருந்தது. மண்டபத்தின் நடுவில் நறுமணம்வீசும் மிருதுவான மெத்தைகொண்ட பள்ளியறை. அரசிளங்குமரன் பள்ளியில் அமர்ந்திருக்க இரண்டு இளம்பெண்கள் அவன் இருபுறமும் நின்று சாமரம் வீசிக்கொண்டிருந்தனர்.

இளவரசன் உதயகுமாரன் வேகவேகமாக வந்த சித்ராபதியை ஓர் ஆசனத்தில் அமரச்சொன்னான்.

“சித்திராபதி! இப்படி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க எதற்கு அவசரமாக வந்தாய்? சொல்லியிருந்தால் நான் தேர் அனுப்பியிருப்பேனே? புத்த பிக்குணியான உன் பெயர்த்தி மணிமேகலை எப்படி இருக்கிறாள் சரி என்ன பருகுகிறாய்? சில்லென்று பழச்சாறு கொண்டுவரச் சொல்லட்டுமா? யாரங்கே?” என்றான் உதயகுமாரன்.

“மன்னா! நான் வரும்வழியில் நன்கு ஓங்கி வளர்ந்த திருமணிக் காஞ்சிமரத்தைப் பார்த்தேன். அந்த மரத்தின் கிளைகளில் குருகு ஒன்று கூடுகட்டி முட்டையிட்டுள்ளது. பாடல்பெறும் அளவிற்கு ஓங்கிய பரதத்தில் நாடகம் (நாடு+அகம்) போற்றும்வண்ணம் நலன்கள் நிறைந்த, பலரும் ஆசைப்படும் வண்ண மலர் ஒன்று தன் இதழ்விரித்தது. எதற்காக? உதயகுமாரன் என்ற வண்டு ஒன்று அதன்மீது அமர்ந்து அளாவி அதன் தேனைப் பருகுவதற்காக. அந்த மலர் எங்கே என்று கேட்கிறீர்களா? ஊர்ப்புறத்தே உள்ள உலக அறவி என்ற அம்பலத்தில்தான் உள்ளது. கூரியவாள் பொருந்திய அரசிளங்குமரனே! உன்னுடைய தலையில் உள்ள மலர் மாலை வாழ்க!”

சித்திராபதி குருகு என்றது, குருகத்திப் பறவை என்று அழைக்கப்படும் மாதவியை, மணிக்காஞ்சி என்றது மணிமேகலையை என்பதனை உதயகுமாரன் குறிப்பால் உணர்ந்துகொண்டான். கடலில் கப்பல்கவிழ்ந்து வீழ்ந்தவனுக்குச் சிறிய தெப்பம் கிடைத்ததுபோல இருந்தது.

“உவவனத்தில் பளிங்கு மண்டபத்தின் உள்ளே சித்திரப்பாவையைப்போலுள்ள மணிமேகலையை ஒருமுறை கண்டேன். ஓவியப்பாவை என்று தவறாக எண்ணி சுவர் முழுவதும் ஆசை அடங்காமல் தழுவி வந்தேன். அவளுடைய இரண்டு கரங்களும் இறைவனைத் தொழும்பொருட்டு மேலே குவிக்கப்பட்டபோது அவளுடைய அழகிய இளமுலைகள் இரண்டும் நெரியக் கண்டேன். இதழ்கள் இரண்டும் பவளம்போல் இருந்தன. முத்துக்கள் என்று ஐயப்படும் அளவிற்கு அழகிய பல்வரிசையின் நடுவில் அவளது வாயமுதம் ஊறியவண்ணம் இருந்தது. அந்த இதழ் அமுதத்தால்தான் என் உயிர் உயிர்க்கும் என்பதால் அவள் இதழ்களில் புன்னகை பூத்தது.”

சிந்தை முழுவதும் மணிமேகலையின் மேல் இருக்க, உதயகுமாரன் பிதற்றத் தொடங்கினான். சித்திராபதி உள்ளூர சிரித்துக்கொண்டாள்.

“அவள் கண்களைச் சொல்ல வேண்டும். கண்களா அவை? வேல்களை வெற்றி கொள்பவை என்று பார்த்தால், கருங்குவளை மலர்களுக்கும் சவால் விடுக்கும் கயல்விழிகள். சும்மா இருக்குமா அந்தக் கயல்விழிகள்? மணிமேகலை சிந்தை மாறுபட்டாள் என்ற சேதியைக் காதுவரைநீண்டு கூறிக்கொண்டிருந்தன. அப்படிப்பட்ட மணிமேகலை எனது உயிருக்கு புன்முறுவல் மூலம் அபயம் அளித்துவிட்டு என் நெஞ்சைத் தன்னுடன் கொண்டுசென்றுவிட்டாள். நான் இங்கே உறக்கம வராமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறேன்”, என்றான்.

“இன்னும் என்ன மன்னர்குமாரா? உன் தேரில் சென்று அவளை மீட்டுவந்து உன் அவா அடங்கும்வரை தேனை அள்ளிப்பருகு,” என்றாள் மணிமேகலையின் தாய்வழிப் பாட்டி.

“நானும் அப்படித்தான் எண்ணியிருந்தேன். ஆனால் பார். பொன்மகளோ என்று என்னும் வண்ணம் ஒரு பெண்தெய்வம் என்முன் தோன்றி, நெறிதவறாத செங்கோலைக் காட்டி, மணிமேகலையின்மீது நான்கொண்ட மையலை ஒழித்துவிடச் சொன்னாள். அது தெய்வம்தானா, அல்லது தெய்வத்தன்மை பொருந்திய பெண்ணா என்று எனக்குத் தெரியவில்லை. ஹும்! அன்றிலிருந்து நெஞ்சில் ஆசைக்கனல் எரிய, மணிமேகலையை நெருங்கமுடியாமல் தவிக்கிறேன்” என்றான்.

‘இப்படிப் போகிறதா கதை. தன் பெயர்த்திக்கு மாதவிதான் காவல் இருக்கிறாள் என்று நினைத்தால், ஊரில் உள்ள அத்தனை பெண்தெய்வங்கள் இவள் பின்னால் சுற்றுகின்றனவா? பார்த்துக் கொள்கிறேன்!’ சித்ராபதி உள்ளுக்குள் கறுவிக்கொண்டாள்.

“கனவில் தோன்றி பெண்தெய்வம் பிதற்றிய பிதற்றல் என்று அதனை விடுங்கள் மன்னர்கொழுந்தே! ஆமாம், இந்தத் தேவர்கள் இலட்சணம் தெரியாதா என்ன? அவர்கள் ஆடிய காமவிளையாட்டுகளும், அதற்கு அவர்கள் பட்ட பாடுகளும் ஓராயிரம் உண்டே.” என்றாள்.

கதை கேட்கும் ஆவலில் உதயகுமாரன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

“முனிவர் கெளதமரின் மனைவி அகலிகையை அடைவதற்கு இந்திரன் எத்தனை தந்திரம் செய்தான்? பூனையாக வந்தான். தனது குற்றத்திற்காகத் தன் மேனி எங்கும் ஆயிரம் கண்களைப் பெற்றானே! அவன் கதையை விடுங்கள்.  அக்னிதேவன் ஒருமுறை தர்ப்பைக் காட்டில் சென்றுகொண்டிருந்தபோது ஏழு முனிவர்களின் அழகிய தர்மபத்தினிகள்மேல் தீராத மோகம்கொண்டான். அவன் சிந்தையை அறிந்துகொண்ட அவன் மனைவி சுவாகா, அந்த ஏழு மகளிரில் அருந்ததி தவிர ஏனைய அறுவரின் உருவினை அடைந்து, தன் கணவனின் அவாவை நிறைவேற்றினாள் என்பது தெரியாதா? தேவர்களின் கதையை என்னிடம் கூறாதீர்கள், மன்னர்குமாரா!” என்ற சித்திராபதி, மேலும் தொடர்ந்தாள்.

“ தருமணம் ஆகும்வரை பெண்ணுக்குக் கண்ணித்தன்மை காவல் — திருமணத்திற்குப்பின் கணவன் காவல் — கணவன் இறந்தால் மரணமே காவலாகவும்கொண்டு வாழ மணிமேகலை உயர்குலப் பத்தினி பெண்கள் பிறந்த குலத்திலா பிறந்திருக்கிறாள்? கழுதை. கணிகையர் குலத்தில் பிறந்தவள் அவள்.” என்றாள்.

உதயகுமாரன் மனதில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. பள்ளியிலிருந்து துள்ளி எழுந்தான்.

“யாரங்கே! சித்திராபதிக்கு வேண்டிய வெகுமதியை அளித்து, உரியமுறையில் தேரில் அவள் இல்லத்தில் கொண்டுவிடுங்கள்” என்று தனது அந்தரங்க அறைக்குள் புகுந்தான்.

அலங்காரமாக அணி புனைந்தான். குழற்கற்றைகளைச் சுருட்டிவிட்டுக்கொண்டான். கண்ணுக்கு கரிய மைதீட்டிக்கொண்டான். நெற்றியில் சிந்தூரம் இட்டுக்கொண்டான். மெல்லிய ஆடைகளை அணிந்துகொண்டான். வாசனைத் தைலங்களை உடலெங்கும் பூசிக்கொண்டான். மார்பில் சந்தனமும் புனுகும் பூசிக்கொண்டான்.

“என் அழகு ராஜா! கண்ணேறு பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மணிமேகலை உங்களுக்குதான்!” என்று சித்திராபதி தனது விரல்களைத் தலையில் நெறியும்வண்ணம் சொடுக்கிக்கொண்டாள்.

உதயகுமாரன் பொற்றேர் ஒன்றில் ஏறியமர்ந்து விரைவாகக் குதிரைகளைச் செலுத்தி உலக அறவி நோக்கிச் சென்றான் பசிப்பிணியுடன் வரிசையில் நின்ற வறியவர்களுக்கு மணிமேகலை உணவளித்துக்கொண்டிருந்தது சுடுகாட்டில் காவல் இருக்கும் பெண்தெய்வம் பேய்களுக்கு உணவு அளிக்கும் காட்சியை உதயகுமாரனுக்கு நினைவுபடுத்தியது.

மணிமேகலை அவனைத் தொலைவில் கண்டுவிட்டாள். உதயணனின் தோற்றமும் இளமையும் பொலிவும் அவளிடம் சிறிது சலனத்தை ஏற்படுத்தின. அவளும் யௌவனம் நிரம்பிய சிறு பெண்தானே? பருவத்தில் எழும் ஆசைகளை உருவத்தை மறைக்கும் துறவியின் உடுப்பால் மறைக்க முடியுமா என்ன? ப்ச் என்ன இது இப்படி ஒரு சலனம். அவன் என் முற்பிறப்பின் கணவன் என்ற நினைவு என்னுள் எழும் காம உணர்வுகளுக்கு ஒரு சமாதானம் மட்டுமா? அவன் அருகில் வந்து என் வளைந்த இடுப்பைப் பற்றி என் வளைக்கரம் பிடித்தால் அவனை முந்தைய பிறவியின் கணவன் என்ற முறைமையில் தடுக்காமல் இடம்கொடுத்துவிடுவேனோ?

மணிமேகலையின் நெஞ்சம் பதறியது. இனி வருந்துவதற்கோ அழுவதற்கோ நேரமில்லை. அவன் வருவதற்குள் ஏதாவது செய்தாகவேண்டும்.

மன்னர்மகன் மன்றம் ஏறிவந்தான். அவனுக்கு உரிய ஆசனம் அளிக்கப்பட்டது. அனைவர் அறியும் வண்ணம் இவன் தன்னைத் தொடர்வது யார் செய்த பாவம்?

manimekalai-uthayakumaranமணிமேகலை தொண்டையைக் கனைத்துக்கொண்டாள்.

“மன்னா நல்ல தர்மசிந்தனை நிரம்பிய மொழிகளைக் கேட்டுக்கேட்டு உனது செவிகள் இரண்டும் துளைக்கப்பட்டிருந்தால் நான் இதனை உங்களுக்குக் கூறுவேன். இந்த உடல் என்ற கலமானது பிறத்தல், வளர்தல், மூப்பு, பிணி போன்ற பலவற்றிற்கு ஆளானது. இதனை நான் நன்கு அறிந்ததால்தான் என்னால் இயன்ற தருமத்தைச் செய்துவருகிறேன். ஒரு பெரும்போரில் எதிரிகளை அழிக்கும் பொருட்டு முன்னேறிச்செல்லும் ஆண்யானையைப் போன்ற கம்பீரமான ஆண்களுக்குப் பெண்கள் என்ன புத்திமதி கூற இயலும்? சொல்லுங்கள். பார்த்து நடந்துகொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றாள்.

கூர்ச்சரர்கள் பாணியில் எழுப்பப்பட்டிருந்த சம்பாதிகோவிலுக்குள் நுழைந்தாள். மனம் எதிலும் நிலையாக நிற்கவில்லை. சை! இந்த ஆண்களின் செயலை எப்படிப் புரிந்துகொள்வது? இதைவிட அவனிடம் வேறு எப்படி எடுத்துரைக்க முடியும்? எனக்கு ஒரு நல்லவழி காட்டம்மா என்று கூறி சம்பாதியை வணங்கினாள்.

மனதில் ஒரு பொறி தட்டியது. மணிமேகலாதெய்வம் மணிபல்லவத் தீவில் தனக்கு ஓதிய மாயவிஞ்சை மந்திரம் ஒன்று நினைவில் எழுந்தது.

கண்களை மூடிக்கொண்டாள். தான் வணங்கும் தெய்வத்தை மனதில்நிறுத்தி அந்த மாய மந்திரத்தை மனதிற்குள் ஓதினாள். என்ன விந்தை! மணிமேகலை தனது உருவத்தை இழந்து, காயசண்டிகையின் உருவத்தைப் பெற்றாள்.

அவ்வுருவத்துடன் கோவிலிலிருந்து வெளியில் வந்தாள்.

அங்கும் உதயகுமாரன் வந்துநின்றான். காயசண்டிகை உருவில் மணிமேகலை மாறினாலும் அவள் கையில் உள்ள திருவோட்டினைப் பார்த்து, சம்பாதி தெய்வத்தை வணங்கி, ”மாய உருக்கொண்ட மணிமேகலை இங்குள்ள பெண்களில் எவருடைய உருவத்தை அடைந்தாள் என்று எனக்குத் தெரியவில்லை. சம்பாதி தெய்வமே! நீ மனம் உவந்து எனக்கு மணிமேகலையை அடையாளம் காட்டித்தந்தால் நான் காலம் பூராவும் உனக்குக் கட்டுப்பட்டவனாக இருப்பேன். உன் கோவிலுக்குத் தகுந்த கொடைகள் அளிப்பேன்“ என்று வேண்டினான்.

“இன்னும் கேட்பாய், தேவர்களின் தலைவியாக விளங்கும் சம்பாதிப் பாவையே! பவளம்போன்ற இதழ்களில் ஒளிபொருந்திய வாளைப்போல் மின்னும் புன்னைகையையும், மைதீட்டி எழுதப்படாத நீண்ட செங்கயல் விழிகளையும், வளைந்து ஈற்றுப் பகுதி நெறியுமாறு தோற்றம் உடைய வில்லினைப்போல வளைந்த புருவம் உடையவளும், தான் கற்ற கல்வியைத் தனக்குக் காவலாகக்கொண்டு, நல்ல அறிவுரைகளைக் கூறிவந்தவளுமான மணிமேகலை — வேடுவர்கள் துரத்தி வந்த யானையானது கோட்டதிற்குள் அகப்பட்டுக்கொண்டதுபோல உன்னுடைய கோவிலுக்குள் தஞ்சம் புகுந்துவிட்டாள். அவளை அடையாமல் இந்த இடத்தைவிட்டு அகல்வதாக இல்லை” என்ற உறுதியுடன் நின்றான்.

பின்குறிப்பு: கணிகையரின் வாழ்க்கை முறை இந்தக் காதையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மைஇல்

யாழ்இனம் போலும் இயல்பினம் அன்றியும்

என்ற அருமையான உவமை மூலம் இதனை சீத்தலை சாத்தனார் விளக்குகிறார்.

மேலும் அந்தப் பதியில்லாத கணிகையர்கள் தவறு செய்தால் அவர்கள் தலையில் ஏழு செங்கற்களை ஏற்றி அவர்களை அரங்கத்தைச் சுற்றி வரச் செய்வதையும் குறிப்பிடுகிறார்.

[தொடரும்]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *