சோ: சில நினைவுகள் – 1

நாடகாசிரியர், நடிகர், துக்ளக் பத்திரிகை ஆசிரியர், வழக்குரைஞர், அரசியல் ஆலோசகர் போன்ற பல துறைகளில் பன்முகத் தன்மை கொண்ட பண்பாளர் சோ ராமசாமி உடல்நலக் குறைவால் சென்னையில் 2016 டிசம்பர்-7 அன்று அதிகாலை தனது 83ம் வயதில் காலமானார்.

தமிழ்நாட்டின் மனசாட்சி மறைந்து விட்டார். எதற்கும் அஞ்சாமல், தான் சரி என்று நினைப்பதை தைரியமாக தனது பத்திரிகையில் எழுதியவர். தனது நேர்மையை என்றும் அடகு வைக்காதவர். அவரது மறைவுக்கு தமிழ்ஹிந்து தனது ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறது. அவரது சிந்தனைகளால் உந்தப் பட்ட கோடிக் கணக்கான இந்தியர்களின் அஞ்சலிகளுடன் இணைந்து,  அன்னாரின்  ஜீவன் நற்கதியடையப் பிரார்த்திக்கிறோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

– ஆசிரியர் குழு

cho-ramaswamy

ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து அடுத்த நாள் டிசம்பர்-7 காலை சோ மறைவு குறித்த செய்தி வந்தது. ஜெயலலிதா சோவை மருத்துவமனையில் சந்தித்துப் பேசும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப் பட்டது. அதைப் பார்த்தவுடன் கண் கலங்கி விட்டேன். கிட்டத்தட்ட 46 வருடங்களாக என்னுடன் தொடர்ந்து நெருக்கமாக வருபவர் சோ. என் சிந்தனைகளை கருத்துக்களை ஆளுமையை இன்று நான் எழுதுவதை அனைத்தையுமே ஆக்ரமித்தவர் சோ. தனிப்பட்ட முறையிலும் கூட அவரது வாழ்க்கையின் ஒரு முக்கியமான தருணத்தில் அவருடன் உடன் நிற்க நேரிட்டது என் வாழ்விலும் மறக்க முடியாத தருணம். அப்பேர்ப்பட்ட கம்பீரமான கலகலப்பான சோவை அந்த நிலையில் காணும் பொழுது மனம் கலங்கியது. தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான ஆளுமை சோ ராமசாமி.

அறுபதுகளின் பிற்பகுதியில் நான் தமிழ் சினிமாக்கள் பார்க்கத் துவங்கியிருந்த காலங்களில் சோ ஒரு காமெடி நடிகராக பிரபலமாகி எனக்கும் ஒரு நடிகராக மட்டுமே அறிமுகமாகியிருந்தார். 70ம் வருட பாராளுமன்றத் தேர்தலின் பொழுது சட்டசபையில் பிரிந்திருந்த காமராஜரும் ராஜாஜியும் ஒன்று சேர்ந்திருந்தார்கள். அப்பொழுது காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் பழைய காங்கிரஸ் என்றும் சிண்டிகேட் காங்கிரஸ் என்றும் அழைக்கப் பட்டது. இந்திராவை எதிர்த்துப் பிரிந்திருந்த தலைவர்களால் சிண்டிகேட் ஆரம்பிக்கப் பட்டது. அப்பொழுது இந்திரா காங்கிரஸுக்கு பசுவும் கன்றும் சின்னம். கை சின்னம் பின்னால் வந்தது. காமராஜரின் பழைய காங்கிரஸும் ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் ஒரு கூட்டணியாகப் போட்டியிட்டன. எதிர்த்து இந்திரா காங்கிரஸ் அப்பொழுது பிரியாத எம் ஜி ஆரால் செல்வாக்கின் உச்சத்தில் இருந்த தி மு க வுடனும் கம்னியுஸ்டுகளுடன் சேர்ந்தும் கூட்டணி அமைத்துத் தமிழ் நாட்டில் போட்டியிட்டார்கள். நாகர்கோவிலில் மட்டும் காமராஜர் ஒருவர் மட்டும் ஜெயிக்க மீதமுள்ள 38 தொகுதிகளிலும் இந்திரா காங்கிரஸ் தி மு க கூட்டணி  வெற்றி பெற்றது.

cho-ramaswamy-youngஅப்பொழுது நாங்கள் குடியிருந்த தெரு முக்கில் ஒரு தேர்தல் கூட்டம் நடைபெற்றது. அதில் காமராரஜர், ராஜாஜியுடன் பேசிய முக்கியமான பேச்சாளர் சினிமா நடிகர் சோ. அப்பொழுது சுருட்டை முடியும் பெரிய முட்டைக் கண்களுமாக அழகாக இருப்பார். அந்தத் தேர்தல் பிரசாரத்தில் மக்களை வெகுவாக சோவின் பேச்சுக்கள் கவர்ந்தன. எலக்‌ஷன் பிரசாரத்தில் தோன்றிய சிவாஜி கணேசனை பார்க்கக் கூடிய கூட்டத்தை விட சோவின் பேச்சைக் கேட்கக் கூடிய கூட்டங்கள் அதிகரித்தன.

சோவின் பேச்சை கேட்டு விட்டு வந்த கையோடு என் அப்பா தவறாமல் துக்ளக் பத்திரிகையை வாங்க ஆரம்பித்தார். அந்த வழக்கம் இன்று வரை தொடர்கிறது. ஊருக்குப் போகும் பொழுது நான் படிக்க விரும்புவேன் என்று ஒரு வருட துக்ளக் பத்திரிகைகளை இன்றும் என் அப்பா சேர்த்து வைக்கிறார். இப்பொழுது துக்ளக் படிப்பதில் ஆர்வம் போய் விட்டது. சோ என்ன எழுதுவார் என்ன சொல்லுவார் என்பது எப்பொழுதுமே தெரிந்திருப்பதினால் ஆர்வம் குறைந்து விடுகிறது. 1971ம் வருடத்தில் இருந்து தொடர்ந்து படிக்க ஆரம்பித்த துக்ளக்கும் சோவின் கருத்துக்களும் ஆழமாக மனதில் பதிய ஆரம்பித்து எனது சிந்தனையின் ஒரு பகுதியாக ஆனது. இப்பொழுது நான் எழுதுவது எவையும் சோவின் கட்டுரைகள் போலத் தோற்றம் அளித்தால் அதன் முக்கிய காரணம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தொடர்ந்து துக்ளக் வாசித்ததினால் விளைந்த பழக்கமாக ஆகியிருக்கலாம்.

1970ல் சோ துக்ளக்கைத் துவங்கியதில் இருந்து தமிழ் நாட்டு அரசியலிலும் இந்திய அரசியலிலும் இந்திய வரலாற்றின் மிக முக்கியமான சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தன. அப்பொழுது துக்கள் மாதமிருமுறை வந்து கொண்டிருந்தது. ஃபார்ட்னைட்லி என்ற வார்த்தையை முதன் முதலாக துக்ளக் அட்டையில்தான் படித்தேன். ஆணவத்திலும் அதிகாரத்திலும் உச்சத்தில் இருந்த கருணாநிதியின் கோபத்துக்குத் துக்ளக் பல முறை ஆளானது. துக்ளக் அலுவலகம் தாக்கப் பட்டது. பத்திரிகைகள் பிடுங்கி எரிக்கப் பட்டன. ஈ வெ ராமசாமி நாயக்கர் சேலத்தில் விநாயகர் சிலைகளையும் ராமர் சிலைகளையும் செருப்பாலும் விளக்குமாற்றாலும் அடித்து ஊர்வலம் சென்றதை படம் எடுத்து வெளியிட்ட ஒரே பத்திரிகை. அப்பொழுது கருணாநிதிக்கு எதிராக தினமணி, நவசக்தி போன்ற ஒரு சில பத்திரிகைகளே எழுதின. .குமுதத்தின் எஸ் ஏ பி இந்திரா காங்கிரஸின் எடுபிடியாக இருந்தவர். விகடனுக்கு தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் எது நடந்தாலும் பொருட்டல்ல. ஒரு அனைத்து பத்திரிகைகளும் அப்படி சுயநலமாகவே இயங்கின. இந்திரா காங்கிரஸின் கட்சிப் பத்திரிகையாகவே குமுதம் செயல் பட்டது. இந்துக் கடவுள்களை எரிக்கத் துணிந்த தி க வுக்கும் ஈ வெ ராவுக்கும் அதை வெளியிட்ட துக்ளக்கை அனுமதிக்கத் துணியவில்லை. வன்முறையால் அந்த துக்ளக் பத்திரிகை கடைகளுக்குச் செல்வதற்கு முன்பாகவே அபகரிக்கப் பட்டுக் கொளுத்தப் பட்டன. அந்தப் படங்களை துக்ளக் வெளியிடுவதற்கு அரசு தடை போட்டது. பின்னர் அதே இதழில்  அந்த்ப் படங்களை நீக்கி விட்டு வெறுமையாக அந்த இடங்களை விட்டு விட்டு துக்ளக் வந்தது. அந்த படங்கள் இல்லாத பிரதிதான் எங்களுக்குக் கிட்டியது.

சோ.

ரோல் மாடல் என்று இருந்த ஒரே எழுத்து.

கருத்தில் நிலைப்பாடுடைமை என்பது முழுமையாக இருந்த ஒரே எழுத்து.

நடு நிலை என்பது இருகருத்துக்கும் நடுவில் இருப்பது அல்ல என்பதைப் புரியவைத்த ஒரே எழுத்து.

அரசியல் என்றால் கடவுளைத் திட்டுவது அல்ல என்று உணர்த்திய ஒரே எழுத்து.

அடுக்கு மொழியில் எழுதுவது மட்டும் தமிழ் அல்ல என்று உணர்த்திய ஒரே எழுத்து.

எந்த பிர்ச்சனைக்கும் முழங்கால்-அதிர்வு தீர்வு உதவாது என்று உணர்த்திய ஒரே எழுத்து.

கருத்து சுதந்திரம் என்பது பொறுப்புகளிலிருந்து விடுதலை என்பதல்ல என்று நடந்துகாட்டிய ஒரே எழுத்து.

இன்வெஸ்டிகேட்டிங் ஜர்னலிஸம் என்பது ரகசியக்காமிரா வைத்து படுக்கையறை நிகழ்ச்சிகளைப் படமெடுத்தல் அல்ல என்று உணர்த்திய ஒரே எழுத்து.

முதுகெலும்பு என்பது என்ன என்று எமர்ஜென்ஸியின் போது உணர்த்திய ஒரே எழுத்து.

பிரேதத்தின் பொம்மலாட்டம் என்று கம்யூனிஸத்தை தோலுரித்து எடுத்துச்சொன்ன ஒரே எழுத்து.

மகாபாரதம் காவியமல்ல சரித்திரம் என்று புரியவைத்த ஒரே எழுத்து.

பேட்டி எடுப்பது , எடுக்கப்படுபவரின் கருத்தைச் சொல்வதற்கு மட்டுமே, எடுப்பவரின் அறிவைக்காட்டுவதற்கு அல்ல என்று புரிய வைத்த ஒரே எழுத்து.

–  திருச்செந்துறை ராமமூர்த்தி சங்கர், ஃபேஸ்புக்கில்.

சோ மத்தியில் ஆளும் இந்திரா காங்கிரசையும் மாநிலத்தில் ஆளும் தி மு க வையும் தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வந்தார். குடமுருட்டி குண்டு, திருச்சி க்ளைவ் ஹாஸ்டலில் மாணவர்கள் தாக்கப் பட்டது, கூவத்தில் ஊழல் என்று தி மு க வின் அனைத்து அராஜகங்களும்  துக்ளக்கில் மட்டுமே விரிவாக வெளி வந்தன. அப்பொழுது துக்ளக் அளவு பிரபலமான அரசியல் பத்திரிகைகள் எவையும் கிடையாது. பின்னர் 80களிலேயே ஜூனியர் விகடன், தராசு போன்ற பத்திரிகைகள் வர ஆரம்பித்துக் காலப் போக்கில் அவை யாவும் மஞ்சள் பத்திரிகைகளாக மாறிப் போயின. துக்ளக் பத்திரிகை ஒன்று மட்டுமே அதன் நேர்மையையும் தரத்தையும் தொடர்ந்து வந்தது.

வடநாட்டுச் செய்திகளை டெல்லியில் இருந்து கே.ஸ்ரீநிவாசன் எழுதுவார். துக்ளக் பத்திரிகை மூலமாகவே எனக்கு இளம் துருக்கியர்களும், பிலு மோடிகளும், ராஜ் நாராயணன்களும், ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ்களும், ஹெக்டேக்களும், வாஜ்பாய் அத்வானிகளும் அறிமுகமானார்கள். அரசியல் கட்டுரைகள் தவிர்த்து ஜெயகாந்தன், கண்ணதாசன் போன்ற பிரபலங்களும் பின்னர் ஜெயலலிதா, தமிழருவி மணியன், நெல்லை ஜெபமணி ஆகியோர்களும் தொடர் கட்டுரைகள் எழுதி வந்தனர். தொடர் கதைகளாக சோ எழுதும் நையாண்டி கட்டுரைகளே வந்து கொண்டிருந்தன. ஆரம்ப காலங்களில் அவர் எழுதிய வாஷிங்டனில் நல்லதம்பி போன்ற தொடர்கள் தி மு க வின் முட்டாள்களையும் ஊழல்களையும் கிழிப்பவையாக இருந்தன. வட்டம், மாவட்டம் என்று தோளில் ஆட்டுக்கள்ளன் துண்டுடன் இரண்டு தலைக்குப் பதிலாக மூளையில்லாத தலைகளைக் குறிக்கும் வகையில் இரண்டு வெறும் முட்டைகளுடன் கார்ட்டூன்கள் வரும். ஆரம்ப இதழ் துவங்கி கழுதை துக்ளக்கில் அட்டைப் படம் முதல் உள்ளே உள்ள கார்ட்டூன்கள் வரையிலும் இடம் பெறும்.எமர்ஜென்சி காலத்தில் கருணாநிதியை விமர்சிக்க சோ மறுத்து விட்டார். என்று இந்திராவை விமர்சிக்கும் சுதந்திரம் எனக்கு கிடைக்கிறதோ அன்று நான் கருணாநிதியையும் விமர்சிப்பேன் என்று சொல்லி விட்டார்.

thuglak-wrapper-emergencyஎமர்ஜென்சியின் பொழுது துக்ளக் கடும் சென்சாருக்கு உள்ளானது. அட்டைப் படத்தை கருப்பாக வெளியிட்டார். இருந்தாலும் சென்சார்களை ஏமாற்றி பல கட்டுரைகளை நுழைத்து விடுவார். சென்சார் செய்யப் பட்ட பகுதிகளை வெறுமையாக விடுவார். அதில் ஒன்று எம் ஜி ஆர் நடித்த பழைய சினிமாவான சர்வாதிகாரி சினிமாவுக்கான விமர்சனம். பின்னர் அந்தப் படம் தூசி தட்டப் பட்டு தியேட்டர்களில் ஓடின. துக்ளக்கும் சோவும் தொடர்ந்து கண்காணிக்கப் பட்டாலும் சோ கைது செய்யப் படவில்லை. இந்திராவுக்கு சோ மீது ஒரு வித மரியாதை இருந்திருக்க வேண்டும். சோவுக்கு ஒரு பேட்டியும் இந்திரா அளித்திருக்கிறார். பின்னர் ஆட்சிக்கு வந்த பொழுது அவர் செய்த க்வோ எண்ணெய் பேர ஊழலை கண்டித்து தேசீயக் கொடி மீது இந்திரா ஆயிலைக் கொட்டுவது போல அட்டைப் படம் போட்டு அவர் மீது வழக்குத் தொடர்ந்து பின்னர் வாபஸ் வாங்கினார்கள். இந்தியாவை எப்படி ரஷ்யா ஏமாற்றி தனது காயலாங்கடைச் சரக்குகளை இந்தியாவின் தலையில் கட்டுகிறது என்பதை விளக்கி இந்தியாவின் தலைநகரம் டெல்லி (என்பதை அடித்து விட்டு) மாஸ்கோ என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் வெளியிட்டார்.

திமுகவில் எம் ஜி ஆர் இருந்த பொழுது சினிமாவிலும் சோவுக்கு தன் செல்வாக்கால் சிரமங்களை அளித்தார். முகமது பின் துக்ளக் வெளீயாவதற்கு பல தடைகளை எம் ஜி ஆர் ஏற்படுத்தினார். பின்னர் எம் ஜி ஆர் தி மு க வில் இருந்து பிரிந்து வந்த பொழுதும் சோ ஆதரவு எதையும் தரவில்லை. அவரது அண்ணாயிசம் போன்ற காமெடிகளை எல்லாம் கேலி செய்து தங்கப் பதக்கம் சினிமாவில் அப்பாயிசம் என்று காமெடி சீன் வைத்தார் சோ. எம் ஜி ஆரின் குறைபாடுகளையும் பல திட்டங்களையும் சோ கடுமையாக எதிர்த்தே வந்தார்.

எமர்ஜென்சி காலத்தில் சோ மூலமாகவே தமிழ் நாட்டுக்கு மொரார்ஜி முதல் வாஜ்பாய் வரை அறிமுகமானார்கள். மொரார்ஜியின் அரசுக்கு பெரும் ஆதரவை சோ கொடுத்து வந்தார். அப்பொழுது தமிழ் நாட்டில் நெல்லை ஜெபமணி அவர்களுக்கு சோ தனது ஆதரவைத் தொடர்ந்து வழங்கினார். அவர் திருச்செந்தூர் இடைத்தேர்தலில் நின்ற பொழுது அங்கு சென்று பிரசாரம் செய்தார். பின்னர் நெல்லை ஜெபமணி எழுதிய தொடர் கட்டுரையான கண்டு கொள்வோம் கழகங்களை வெளி வந்தது. திராவிடக் கட்சிகளின் உண்மை முகங்களை வெளிக் கொணர்ந்த முக்கியமான கட்டுரைத் தொடர் அது.  பின்னர் ஒரு பயங்கரமான நள்ளிரவில் சோவிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தவரும் தியாகி நெல்லை ஜெபமணி அவர்கள்தான்.

எண்பதுகளில் இலங்கைப் பிரச்சினை பூதாகரமாக ஆன பொழுது சோ மட்டுமே விடுதலைப் புலிகளைக் கடுமையாக எதிர்த்து வந்தார். தமிழ் நாடே பற்றி எரிந்த பொழுதும் கூட துக்ளக்கின் வாசகர்கள் மட்டுமே புலிகளுக்கு ஆதரவு அளிக்காத நிலைப்பாட்டை எடுத்தார்கள். தீப்பந்த போராட்டம் ஊர்வலம் என்று தமிழ் நாட்டையே கொதி நிலையில் கொண்டு வைத்திருந்த பொழுது அந்த மூடர் கூட்டத்தின் நடுவே புலிகளினால் இலங்கைத் தமிழர்களுக்கு பெரும் அழிவே ஏற்படும் முதிர்ச்சியான தமிழர் தலைவர்கள் மூலமும் இந்திய அரசின் அழுத்தங்கள் மூலமுமே தீர்வு காண முடியும் என்பதை கடும் எதிர்ப்பிற்கு நடுவிலும் உரக்கச் சொன்ன ஒரே குரல் சோவின் குரல் மட்டுமே.

 (தொடரும்)

அடுத்த பகுதி >>

6 Replies to “சோ: சில நினைவுகள் – 1”

  1. மறக்க முடியாத, மறக்கக்கூடாத ஒரு மாமனிதரைப் பற்றி மனதைத் தொடும் விதமாகக் கட்டுரை இருக்கிறது.60களில் சோ நாடகத்துறையில் புகழ் பெற்று வந்தார், சினிமாவிலும் வந்தார். நையாண்டியும் நகைச்சுவையும் அவர் கையாண்ட ஆயுதங்கள்- இவை இயற்கையாகவே இவருக்கு வந்தன.உடனே சிரிக்கவைத்தாலும், நாளடைவில் சிந்திக்க வைத்தன. ஆனால் துகளக் பத்திரிகை தொடங்கியபிறகு புதிய சோவைக் கண்டோம்.
    இங்கு இவரை ராஜாஜியுடன் ஒப்பிடத்தோன்றுகிறது. 1954 ஆவடி காங்கிரஸ் தொடங்கி நேருவின் டப்பா சோஷலிசக் கொள்கையை [Socialistic pattern of society] தீவிரமாக எதிர்க்கத் தொடங்கினார். ஒவ்வொரு வாரமும் “ஸ்வராஜ்யா” ஆங்கிலப் பத்திரிகையில் அயராது விளக்கமாக எழுதிவந்தார்.80வயது தாண்டிய நிலையில் சுதந்திராக் கட்சியைத் தொடங்கினார். இந்த சோஷலிசம் நமது சுதந்திரத்தைப் பறிக்கும், பொருளாதாரத்தை நாசம் செய்யும் என்று எழுதினார். பர்மிட்-லைசென்ஸ்- கோட்டா அரசுதான் மிஞ்சியது என்று விளக்கினார்.அதன் விளைவான லஞ்ச-ஊழலைச் சாடினார். ஆனால் இதை அன்று யாரும் லட்சியம் செய்யவில்லை.சோஷலிச மோக மாயை அனைவரையும் ஆட்கொண்டிருந்தது. எமெர்ஜென்சிக்குப் பிறகுதான் ஜயபிரகாஷ் நாராயண், ஆசார்ய க்ருபலானி போன்ற தலைவர்களும் இதை உணர்ந்தனர். 1991ல் ஏற்பட்ட நமது பொருளாதர சீர்குலைவிற்குப் பிறகுதான் நேருவின் சோஷலிசம் செய்த தீமையை நாடு உணரத் தலைப்பட்டது.

    இதற்கிடையில் ராஜாஜி தமிழ் நாட்டு அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார்.60களில் காங்கிரசுக்கு எதிராக தி.மு.க வை ஆதரித்தார். இன, மொழி துவேஷம் தவிர வேறு எந்தவித ஆக்கபூர்வமான கொள்கையும் இல்லாத, தேசீயப் பண்பாட்டை எதிர்த்த, வெறும் வாய்ஜாலம் பேசிய ஒரு கும்பலை ராஜாஜி ஆதரித்ததைப் புரிந்து கொள்ள முடியவில்லை.ஜீரணிக்கவும் இயலவில்லை. ஒருமுறை பதவியிலிருந்து இறங்கினால் காங்கிரஸ் ஆணவம் நீங்கி மீண்டும் நல்ல நிலைக்கு வரும் என்று நினைத்தார் போலும்!ஆனால், ஹிந்தி எதிர்ப்பு தீவிரப்பட்டு, இளைய தலைமுறை முற்றும் தி.மு.க பக்கம் சாய்ந்தது. அன்று படுத்த காங்கிரஸ் மீண்டும் எழவே இல்லை! ராஜாஜியின் ஆதரவு தேசீயச் சார்புடைய படித்த, நடுத்தர வர்கத்தினரிடையேயும் தி.மு.க விற்கு அனுதாபத்தைத் தோற்றுவித்தது. ஆனால், பதவிக்கு வந்தபிறகும் தி.மு.கவும். திராவிட முத்திரை தாங்கிய பிற அமைப்புக்களும் தங்கள் தேசிய விரோத, துவேஷப் போக்குகளை மாற்றிக்கொள்ள வில்லை.

    1960 முதல் 1972 டிசம்பர் (ராஜாஜி மறைவு) வரை’ஸ்வராஜ்யா’ வைத்தொடர்ந்து படித்து வந்தவன் நான். இந்த சிந்தனைப்போக்கும், கருத்தாழமும் தமிழில் எந்த பத்திரிகையிலும் இல்லை. எந்த விஷயத்தைப் பற்றியும் தீவிரமாகத் தெரிந்துகொள்ள ஆங்கிலப் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் நாடவேண்டிய நிலை. இதை மாற்றியது சோவின் ‘துக்ளக்’.முக்கிய விஷயங்களைப் பற்றி மிகத் தெளிவாக, ஒரு புதிய, எளிய நடையில் சோ எழுதினார். ஆங்கிலப் பத்திரிகையிலும் காணாத விளக்கங்களையும் பரிமாணங்களையும் சோவின் எழுத்தில் கண்டோம். திராவிடக் கட்சிகளின் கெடுபிடி தாளாமல் எல்லா பழைய பத்திரிகைகளும் அவர்களுக்கு தாளம் போடத் தொடங்கிய நிலையில், தி.மு.க பதவி வெறியின் உச்சம் காணும் நிலையில். ‘துக்ளக்’ இதழைத் தொடங்கி தனி ஒருவராக நின்று திராவிட இயக்கங்களின் அனைத்துக் கொள்கைகளையும் ஆணித்தரமாக எதிர்த்தார். இலங்கையில் தீவிரவாதம், தமிழ் ஈழம், தமிழ் மொழி-எழுத்து சீர்திருத்தம், ஹிந்து மத எதிர்ப்பு, பிராமண=பிராமணீய எதிர்ப்பு என்ற எல்லா நிலைகளையும் தாக்கினார். காஞ்சி மடாதிபதியை கைதுசெய்து அதை ஹிந்து மதத்திற்கு எதிரான பிரச்சாரமாக மாற்றிவந்தவேளையில், “ஹிந்து மஹா சமுத்திரம்” என்று துணிச்சலாக ஒரு தொடரைத் தொடங்கி எழுதினார்! திருஞானசம்பந்தர் பல பெண்களைக் கெடுத்தார் என்று சில திராவிடப் பதர்கள் கூசாமல் பொய் பிரச்சாரம் செய்த சமயம், எல்லோரும் வாய்மூடி இருந்த சமயம், தமிழ் அறிஞர்களைக் கொண்டே அதை எதிர்த்து துக்ளக்கில் எழுதினார். ஹிந்து மத நூல்களை தமிழில் தொடர்ந்து வெளியிட்டார்.தேசீயம், ஹிந்து பண்பாடு-பாரம்பரியம் இவற்றை தற்காலத்திற் கேற்றபடி விளக்கினார். ஒரு அரசியல் பத்திரிகையில் இவற்றைச் செய்தது, ” மெய்ஞ்ஞானத் துணிவினை மற்றாங்கு இழிபடு போர், கொலை, தண்டம் பின்னியே கிடக்கும் அரசியலதனில் பிணைத்திடத் துணிந்தனை” என்று பாரதியார் அன்று எழுதியதை நமக்கு நினைவூட்டுகிறது!

    திராவிடக் கட்சிகளே மாறிமாறி ஆட்சியமைத்த நிலையில், எதிர்கட்சி என்ற நிலையை உண்மையில் தரித்தது துக்கக் தான்! திராவிட மாயையை தனி ஒருவராக நின்று எதிர்தவர் சோ தான். அரசியலில் தேசியக் குரல் கொடுத்தவர் சோ தான்.பொது வாழ்வில் பண்பாடு வேண்டும் என வலியுறுத்தியவர் சோ தான். ராஜாஜி தவறுதலாக ஆதரித்த தீயை அணைக்க 45 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து செயல்பட்ட சோ ஒரு தனி மனிதரல்ல; தன்னேரில்லாச் சீரிய அமைப்பாகும். இவர் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இவருக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலி செய்வோம்.

  2. Deep condolence,

    Cho, the single word popular man, guided us to truth and good. while whole magazine world in sensational news, Thukluk is the only magazine gave us insight of each policy of political parties. To my understanding Tukluk is the only magazine survived while government and political parties rally against it.

    It is rare to get another Cho, my prayerful condolence to his family and friends.

  3. /**அன்னாரின் ஜீவன் நற்கதியடையப் பிரார்த்திக்கிறோம்.
    ஓம் சாந்தி சாந்தி சாந்தி.**/

    துக்ளக் இதழினை வாரந் தவறாது வாசித்த வாசகர்களில் அடியேனும் ஒருவன் என்று சொல்வதில் பெருமைப் படுகின்றேன் .சோ ராமஸ்வாமி அவர்களை ஒரு சிந்தனைச் சிற்பி என்னலாம் .”1.)நினைத்தேன் எழுதுகிறேன்”,”2.)துக்ளக் தலையங்கம்”,”3.)கேள்வி பதில் “, “4.)ஒண்ணரை பக்க நாளேடு ” போன்ற பகுதிகள் புகழ் பெற்றவை .அவர் எழுதிய “காமராஜரும் நானும் ” என்னும் நூலையும் வாசித்ததுண்டு .

    வால்மீகி ராமாயணத்தினை பாராயணம் செய்தவர் அவர். அவர் அரசியல் ,நாடகம் ,சினிமா ,பத்திரிக்கை ,வழக்குரைஞர்,எழுத்தாளர் என்று பலதுறை மன்னர் .
    அவர் தயாரிப்பான “நீலகிரி எக்ஸ்பிரஸ்” என்னும் படத்தில் “திருத்தணி முருகா ” என்று தன் குலதெய்வத்தையும் புகழ்ந்து ஒரு பாடல் வைத்திட்டார் . அவர் சிறந்த ஆஸ்திகர் .

    அவர் சிறந்த ராம பக்தர் ஆவார் . வேளுக்குடி கிருஷ்ணன் ச்வாமி அவர்கள் அயோத்தி தொடங்கி திருப்புல்லாணி வரை -“ராம அனுயாத்திரை ” சென்று வந்த பின்னர் அவரை, விஜய் டீவிக்காக , பக்தி சிரத்தையுடன் வணங்கி பேட்டியும் கண்டவர் .
    எனவே நம்முடைய நற்கதிக்கு அவர் சிபாரிசு செய்யலாமே ஒழிய ,அவர் நற்கதிக்கு நம் போன்றோர் சிபாரிசு செய்வது மரபு அன்று .நிச்சயம் அவருக்கு “எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் ” நற்கதியே கிட்டும் .

    ஸ்ரீராம ஸாலோகம் அடைந்திட்ட அவரை ,சிரந்தாழ்ந்து வணங்குகின்றேன் ,
    கணேசு

  4. கட்டுரையில் சேலத்தில் நடந்த கடவுள் அவமதிப்பு ஊர்வலம் பற்றிய செய்தியில் இன்னும் சில சம்பவங்கள் விடுப்பட்டுள்ளன. ஈவே ராமசாமி நாயக்கர் நடத்திய ஊர்வலத்திற்கு தலைமை தாங்கியவர், சேலம் அரசு கல்லூரி பேரராசிரியர் டி.வி.சொக்கப்பா என்பவர். ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்றைய பாரதிய ஜனசங்கம் மிகப் பெரிய ஆர்பாட்டத்தை நடத்தினார்கள். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள்ஈ போராட்டக்காரர்கள் மீது செருப்புக்களை வீசி தங்களின் நாகரீகத்தை காட்டினார்கள். துக்ளக் பத்திரிக்கையில் படத்தை வெளியிட்டமைக்காக அவர் மீது சேலம் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. மேலும், துக்ளக் வெளியிட்ட அதே படத்தை ஆங்கில பத்திரிக்கையான இல்லஸ்ட்ரட் வீக்லி வெளியிட்டு, தமிழக அரசின் கோபத்திற்கு ஆளானது மட்டுமில்லாமல், வழக்கிலும் மாட்டிக் கொண்டது.

  5. அருமையாக எழுதியிருக்கின்றார் ஸ்ரீ திருமலை. அமரர் சோ துக்ளக்கில் எழுதியவற்றை தனது நினைவில் வைத்து ஆறு தசாப்தங்களில் தமிழகம், பாரதம், உலக அரசியல் ஆகியவற்றின் வரலாற்றையே சோவின் பார்வையில் பார்கமுடியும் என்பதாக இந்தக்கட்டுரையை வாசிக்கும் போது தோன்றுகின்றது. சோ.ராமசாமி பாரம்பரியப்பழமையோடு நவீனத்துவம் கலந்த ஒரு கலவை சிந்தனையாளர்தான். பழமையில் பூத்து நவீனத்தில் காய்த்துப்பழுத்த அரசியல் விமர்சகர் சோ. சோவை முழுமையாக ஏற்பதோ அல்லது நிராகரிப்பதோ அவசியம் இல்லை. ஆனால் பாரதப்பண்பாடு, அதன் தனிச்சிறப்பு ஆகியவற்றில் ஸ்ரீ சோ அவர்களுக்கு இருந்த அலாதியான ஈடுபாடு பக்தி ஆகியவை போற்றிப்பின்பற்றத்தக்கவை. ஸ்ரீ சோ அவர்களுக்கு நற்கதி அருள உலகெலாம் ஓதற்கரிய ஆடல்வல்லானை ஏத்துகின்றேன்.

  6. /*பேட்டி எடுப்பது , எடுக்கப்படுபவரின் கருத்தைச் சொல்வதற்கு மட்டுமே, எடுப்பவரின் அறிவைக்காட்டுவதற்கு அல்ல என்று புரிய வைத்த ஒரே எழுத்து.*/

    உண்மை. இன்றய பத்திரிகையாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *