சிறைவிடு காதை – மணிமேகலை 24

அரண்மனை முழுவதும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. நறுமணப்புகை மூட்டுவோர் வாளாதிருந்தனர். கடவுளர் இருப்பிடங்கள் பூசனைகளை இழந்து நின்றன. அந்தப்புரங்கள் ஆடல் பாடல் எதுவுமின்றிப் பேரமைதியைக்கொண்டிருந்தன. இராஜமாதேவியைக் காணவரும் பெண்களின் ஒப்பாரிதான் கூரையைப் பிளப்பதாக இருந்தது. மகன் இழந்த சோகம் ஒருபுறம்; பிறபெண்களின் தலையைப் பிளக்கும் ஒப்பாரி ஒருபுறம். செய்வதறியாது திகைத்து நின்றபோதுதான் சேடிப்பெண் வந்து நின்றாள்.

“மகாராணி!. வாசலில் தங்களைக் காண வாசவதத்தை என்ற ஒரு மூதாட்டி வந்திருக்கிறார்.”

“ஒ! வாசவதத்தை அம்மையாரா? வரச் சொல். மற்ற பெண்டிரை அப்புறப்படுத்து “ என்று மகாராணி சேடிக்கு உத்தரவிட்டாள்.

வாசவதத்தை தான் கற்றவற்றில் உள்ள நல்ல தகவல்களை அழகான மொழியில், இதுபோன்ற இக்கட்டான தருணங்களில் அரசருக்கும், அவருடைய தேவிமார்களுக்கும் கேட்பவர்கள் அமைதியுறும் வண்ணம் கூறுவதில் வல்லவள். அந்த மஎனவே, அந்த மூதாட்டி இளவரசன் இறந்த செய்தியைக் கேட்டதும் அரசியாரைத் தேற்றவேண்டும் என்று அரண்மனைக்கு விரைந்து கிளம்பிவந்திருந்தாள்.

மகனை இழந்து நிற்கும் மகாராணியைப் பார்த்ததும் மற்ற பெண்களைப்போல அழுது பிலாக்கணம் பாடாமல் அமைதியாக வாசவதத்தை வந்துநின்ற தோற்றமே அரசியைச் சற்று ஆசுவாசப்படுத்தியது.

“வாருங்கள் மூதாட்டியே!“ என்று இராசமாதேவி வாசவதத்தையை வரவேற்று, வணங்கி, உரிய ஆசனம் கொடுத்து உபசரித்தாள்.

“குடிகளைக் காப்பாற்றி, பகைவர்களை வென்று, அடிபணியாதவ்ர்களை வீழ்த்தி அவர்தம் நாட்டினைத் தம்முடன் இணைத்து வாழும் வீரவாழ்வை வாழ்ந்த மன்னர் முதுமையில் இறக்கும்போது, அவரை தர்ப்பைப் புல்லில் கிடத்தி ஈமக் கிரியைகள் செய்து வீரசுவர்க்கம் அனுப்புவது வழக்கம். அத்தகைய மரணமா உன் மகனுக்கு நேர்ந்துள்ளது? சொல்லவே வாய் கூசும்படியாக ஒரு மரணம். தனது தேசத்தைக் காப்பதற்குச் சென்றோ அல்லது பிற தேசத்தைக் கவர்ந்து வெற்றிகொள்ளச் சென்றோ உன் மகன் இறக்கவில்லை. பிறகு எதற்காக வருத்தப்படுகிறாய்? நில்லாது கண்ணீர் மழை பொழிகிறாய்? நீ இப்படிக் கலங்கி நிற்பதைக் கண்டால் அரசாளும் மன்னரும் கலந்குவாரே!“ என்று பல ஆறுதல் மொழிகளைக் கூறினாள்.

மூதாட்டியின் ஆறுதல் மொழிகள் செவிகளில் நுழைந்து இராஜமாதேவியை அமைதிபடுத்துவதற்குப் பதில் அவள் நெஞ்சத்தில் ஆற்றாமைத் தீயை கனிய வைத்தது.

மணிமேகலை தன் மகனின் சாவுக்குக் காரணம் என்ற நினைப்பை அவளால் நீக்கவே முடியவில்லை. படுக்கையில் புரண்டாள்.ஆற்றாது அங்குமிங்கும் அலைந்தாள். நாழிகை சென்றதே தவிர நாடி அமைதியுறவில்லை. எப்படியும் மணிமேகலையைப் பழிவாங்கத் துடித்தாள்.

‘அரசு அதிகாரத்தைக் காட்டி மணிமேகலையைப் பழிவாங்க முடியாது. நியாயம் அவள்பக்கம் இருப்பதால் எளிதில் தப்பிவிடுவாள். அப்படியே அவளைப் பழிவாங்கினாலும் சோழப் பேரரசுக்கு அவப்பெயர் வந்துசேரும். எனவே அவளை வஞ்சத்தால்தான் வெல்லவேண்டும்,’ என்று அரசியின் சிந்தை அவளுக்குத் துர்போதனை  செய்தது. அப்படியொரு நாளுக்காக அரசி காத்திருந்தாள்.

அந்தப்புரம் வந்துநின்ற மன்னவனை அழைத்தாள்.

“சொல், கீர்த்தி!“ என்றார், மன்னவர் மாவண்கிள்ளி.

“தகாத செயல் புரிந்ததால்தானே இளவரசன் மாண்டான்?.”

“ஊரறிந்த சேதி இது, தேவி “

“அப்படியிருக்க மணிமேகலையை எதற்காகச் சிறை பிடித்து இருக்கிறீர்கள்?”

மன்னர் வியப்புடன் மகாராணியின் முகத்தை நோக்கினார். எவ்வித பாவனையும் இல்லாமல், உள்ளத்திலுள்ள கையறுநிலையை வெளிக்காட்டாமல் முகத்தைச் சலனமற்று வைத்துக்கொண்டிருந்ததால் மன்னர் அவளை அப்படியே நம்பினார்.  வியந்தார்.

“அரச முறைமை தவறவில்லை, தேவி. விசாரணைக்கு மணிமேகலையைச் சிறைப்பிடித்து   வைத்துள்ளேன்.”

“பாவம், அறியாப்பெண் அவள். அவளை விட்டு விடுங்கள்”

“ஒரு மன்னவனுக்கு அவனுடைய புதல்வர்கள் சிறந்தவர்களாக விளங்கவேண்டும். அப்படி அமையாமல் போகுமேயானால் அந்தப் புதல்வர்கள் வெறுக்கத்தக்கவர்,“ என்று அரசன் நெடுமூச்சு விட்டான்.

“அதனால்தான் சொல்கிறேன். குற்றம் செய்தவன் நம் மகன். மணிமேகலை எதற்காகத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்?”

“நல்லது. யாரங்கே?“

மன்னர் உத்தரவு கேட்டு பணியாள் ஒருவன் வந்தான்.

தனது கையொப்பமிட்ட குறுக்கோலையை மன்னர் அவனிடம் கொடுத்து, ”சிறைக்காவல் அதிகாரியைப் பார்த்து, சமீபத்தில் சிறையில் அடைத்துவைக்கபட்டிருக்கும் மணிமேகலை என்ற புத்த துறவியைச் சிறையிலிருந்து விடுவித்து இங்கே அழைத்துவரச் சொல்,“ என்றார்.

மணிமேகலை அழைத்து வரப்பட்டாள்.

இராசமாதேவி மணிமேகலையை ஆசுவாசபடுத்தி, உணவளித்துப் போற்றிய பின்பு, ”மேகலா! உன் மனம் என்ன சொல்கிறதோ அதைச் செய். ஒன்று, என்னுடன் இந்த அரண்மனையில் இருக்கலாம். இல்லை, உலக மக்களுக்குச் சேவை புரியவேண்டும் என்று ஊர் ஊராக உன்னுடைய அமுதசுரபியுடன் திரியவேண்டும் என்று கூறினாலும் சரி. முடிவு உன் கையில்.“ என்ற அரசியின் முகத்தை மணிமேகலை ஏறிட்டாள்.

 ‘சரியென்று சொல், பெண்ணே. பிறகு இருக்கிறது எனக்கு வேலை. உன் மூளை கலங்கும் வண்ணம் மயக்கமருந்து கொடுத்து, உன்னைப் பிச்சியாக்கி, இந்த நகரில் உலவவைப்பேன். ஊரே உன்னைப் பைத்தியம் என்று கூறி விரட்டுவதை நான் என் கண்களால் காணவேண்டும்!‘ என்று கருவியபடியே மகராணி மணிமேகலையின் பதிலுக்குக் காத்திருந்தாள்.

மறுபிறப்பின் இரகசியம் அறிந்த மணிமேகலைக்கு அரசியின் எண்ணத்தைப் புரிந்துகொள்வது ஒன்றும் பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. எனவே, அரசியுடன் அரண்மனையில் தங்குவதற்குச் சம்மதித்தாள்.

ஒருநாள் மகாராணி ‘வனப்பும், மிடுக்கும், இளமையும் வாலிபமும் நிறைந்த ஒரு முரட்டு முட்டாள் இளைஞனை அழைத்து வாருங்கள்“ என்று தனது அதிகாரிகளுக்குக் கட்டளை இட்டாள்.

அவர்களும் வாலிபமும், இளமைத் துடிப்பும் மிக்க ஒரு முட்டாள் இளைஞனை இழுத்து வந்தனர்.

“கும்புடறேன், மவராணி!“ என்று அந்த இளைஞன் அரசியின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினான்.

“உன்னை எதற்காக இந்த அரண்மனைக்கு அழைத்தேன் என்று தெரியுமா?” எட்ன்று கேட்டாள்.

“அம்புட்டு அறிவு இருந்துச்சுன்னா நான் ஏன் மவாராணி ஆடு மாடு மேய்க்கணும்?” என்று கேட்டான் அந்த அப்பாவி முரட்டு இளைஞன்.

அரசமாதேவி நகைத்தாள்.

“நான் சொல்வதை கவனமாகக் கேள். என்னுடைய அந்தபுரத்தில் மணிமேகலை என்ற பெண் ஒருத்தி இருக்கிறாள். உன்னை ஒருவருக்கும் தெரியாமல் அவள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச்செல்லச் சொல்கிறேன். நீ அங்குள்ள அந்தப்புர மகளிரின் கண்களில் பட்டுக்கொண்டிருப்பதுதான் உன் வேலை. பிறகு நல்ல சமயம் பார்த்து, ‘மணிமேகலை கண்சாடை காட்டித் தன்னுடைய இளம் முலைகள் இரண்டையும் உன்னுடைய அழகிய மார்பில் பொருந்தும்படி என்னுடன் கூடினாள்’ என்று மற்றவர்களிடம் கூறவேண்டும். இதற்கு வெகுமதி ஒரு கிழி நிறை பொன் கழஞ்சு. இது அரச கட்டளை.  செய்ய மறுத்தால் தண்டிக்கப்படுவாய்.“ என்றாள்.

கரும்பு தின்னக் கூலியா? அந்த முரட்டு முட்டாள் இளைஞன் இராணி அனுப்பிய காவலனுடன் அந்தப்புரம்நோக்கிச் சென்றான்.

அரசியின் திட்டத்தை நன்குணர்ந்த மணிமேகலை என்னசெய்து தப்பிக்கலாம் என்று சிந்தனை செய்துகொண்டிருந்தாள். மணிபல்லவத் தீவில் மணிமேகலா தெய்வம் தன்னிடம் கூறியிருந்த மந்திரங்களின் நினைவு வந்தது.

அந்த மந்திரங்களில் ஒன்றை உச்சரித்தாள்.

என்ன ஆச்சரியம்! ஓர் அழகிய வாலிபனாக உருமாறினாள்.

அரசி அனுப்பிய அந்த முட்டாள் இளைஞன் மணிமேகலையை அங்கே காணாமல் தவித்தான்.

“கடவுளே இது அரசியாரின் அந்தப்புரம். நான் தேடிவந்த பெண்ணோ இங்கே இல்லை. வேற்று ஆடவர் இங்கு இருப்பது அரசருக்குத் தெரிந்தால் என் கதை முடிந்துவிடும். இது ஏதடா வம்பு?” என்று அங்கிருந்து தலைதெறிக்க ஓடினான்.

மணிமேகலை இந்தச் சூழ்ச்சியிலிருந்து தப்பிவிட்டாள் என்ற சேதி அரசியின் காதுகளுக்குச் சென்றது.

அரசி மணிமேகலை இருக்கும் இடத்திற்குச் சென்றாள்.

ஆதரவுடன் அவளுடைய கூந்தலைத் தடவிக்கொடுத்து, ”என்னுடன் சிறிது நேரம் வா.” என்று அழைத்தாள்..

மணிமேகலை அரசியுடன் சென்றாள்.

அரசி பல அடுக்குகளைக் கடந்து ஒரு பாழடைந்த இடத்திற்கு அவளை அழைத்துச்சென்றாள். விளக்குகளின் வெளிச்சம் எதுவுமில்லாமல் ஒரு அறையின் கதவைத் திறந்தாள். உள்ளே வௌவால்களின் புழுக்கைநெடி மூக்கைத் துளைத்தது.

“எத்தனையோ முறை மன்னரிடம் சொல்லிவிட்டேன். ஓலைச்சுவடிகளை வேறு ஓர் இடத்தில் வைக்கச் சொல்கிறார். தன் கையால் செய்யவேண்டிய காரியம் என்பதால் இன்னும் செய்யாமல் இருக்கிறார். மணிமேகலா, வா! வந்து இந்தப் பெட்டியை எடுக்க உதவிசெய். இதற்குள்தான் பழைய ஓலைச் சுவடிகள் ஏராளம் உள்ளன.” என்று அரசி அவளை உள்ளே அழைத்தாள்.

மணிமேகலை உள்ளே வந்ததும், அரசி தந்திரமாக வெளியில் வந்து அறையின் கதவை பூட்டினாள்.

மணிமேகலைக்கு முதலில் திக் என்றது. அறையில் வெளிச்சம் காற்று இரண்டும் இல்லை. சுவாசம் பிராணவயுவிற்கு ஏங்கியது.

வெளியில் அரசி யாரிடமோ கூறிக்கொண்டிருப்பது காதில் கேட்டது.

“என்னவென்று தெரியவில்லை சாப்பிடு சாப்பிடு என்று எவ்வளவு முறைதான் சொல்வது? ஒரே அடம். மணிமேகலை உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம்கொண்டவள்போல உணவு உண்ண மறுக்கிறாள். அரண்மனை மருத்துவர்தான் இப்படி ஒரு புழுக்கரையில் போட்டு அடைத்தால் சரியாகிவிடும் என்றார்.” என்று கூறிக்கொண்டிருந்தாள்.

அரசியின் சூழ்ச்சி குறித்து மணிமேகலை தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

தான் கற்ற தவத்தின்மூலம் நெடுநேரம் மணிமேகலை அந்த அறையில் எவ்வித சிரமுமின்றி இருந்தாள். மீண்டும் கதவு திறக்கபட்டால் ஒன்று தான் இறந்திருப்போம் என்ற மகிழ்ச்சியில் அரசி கதவைத் திறக்கவேண்டும். தான்  நெடுநேரம் அந்தப் புழுக்கறையில் இருந்தபடி உயிருடன் இருப்பது அரசியின் உள்ளத்தை மாற்றினாலும் வியப்படைவதற்கில்லை என்று நினைத்துக்கொண்டாள்.

அறையின் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. மணிமேகலை எழுந்துசென்று கதவைத் திறந்தாள். எதிரில் இராசமாதேவி கண்களில் நீர்மல்க நின்றுகொண்டிருந்தாள். மெய்யாகவே வருத்தம் தோய்ந்த அரசியாரின் முகம் அவருடைய மனமாற்றத்தையே காட்டியது.

“என் சிறுமதி காரணமாக என் மகனின் கொடிய மரணத்திற்கு நீயும் ஒருவிதத்தில் காரணம் என்பதால் கெட்டபுத்தியுடன் உனக்கு இடையூறுகள் செய்தேன். நீ நல்லவள், மணிமேகலை. உன்னுடைய நற்பண்பின்முன் நான் தோற்றுவிட்டேன். பிழை பொறுத்தருள்க.” என்ற அரசியின் கூற்றை மணிமேகலை கேட்டாள்.

“என்ன இது மகாராணி? நான் யார், பிழை பொறுத்தருள? உங்கள் நிலையில் நான் இருந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பேன். நாம் அனைவரும் மனிதப்பிறவிகள்தானே?“ என்றாள்.

அரசி மறுமொழி கூறாமல் நின்றாள்.

ஆனால் அவள் கண்களில் வழிந்த கண்ணீர் நிற்கவில்லை. வழிந்துகொண்டிருந்தது.

“அழ வேண்டாம், அரசியாரே! இளவரசன் உதயகுமாரன் முற்பிறப்பில் இராகுலன் என்ற பெயருடன் உங்களுப்பிறந்தான். அவனைத் திட்டிவிடம் என்ற பாம்பு தீண்டி உயிர் நீத்தபோது நீங்கள் ஏன் அழவில்லை? பிறப்பும் இறப்பும் தொடர்ந்துகொண்டே இருக்கும். உங்கள் மகனின் உடலுக்குக் கண்ணீர்விட்டீர்களே உங்கள் மகனுக்கு எரியூட்டியவ்ர்களை என்னவென்று சொல்வது? அவர்கள் என்ன நிலையாக இருக்கப்போகிறவர்களா? உங்கள் மகனின் உயிர் அடுத்தபிறவியில் எங்கு தோன்றும் என்பது ஒருவருக்கும் தெரியாது. அந்த உயிரின்  அன்பிற்காகக் கண்ணீர்சிந்தினீர்கள் என்றால் உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தின் மீதும் அன்பு செலுத்துவதுதானே முறைமை?” என்றாள்.

தன்னைவிட வயதில் மிக இளையவள்தான் மணிமேகலை. ஆனால் மனதில்பதியுமாறு இப்படிப் பேசுகிறாளே என்று அரசியார் மாய்ந்துபோனார்.

‘நீங்கள் அந்தக் கயவனை அனுப்பியது தெரிந்ததும், நான் ஆணாக உருமாறும் மந்திரத்தை உச்சரித்துத் தப்பினேன். புழுக்கறையில் என்னை வைத்துப் பூட்டியபோது பசியடக்கும் மந்திரத்தை உச்சரித்துப் பசியில்லாமல் நெடுநேரம் உள்ளே இருந்து தப்பித்தேன்.’ என்றாள்.

மனிமேகலைக்குத் தனது திறமைகளைப் பட்டியல் இடவேண்டும் என்பது நோக்கமன்று. இருப்பினும் காரியங்களின் காரணங்களைக் கூறும்போது அவளது திறன்கள் அனைத்தும் வரிசையில் சேர்ந்துகொண்டன. மேலும் முந்தைய பிறவியில் தனது கணவனாக இருந்த  இராகுலனை இந்தப்பிறவியில் ஈன்றவள் என்பதால், அரசி மேலும் குற்றங்கள் செய்துவிடக் கூடாது என்பதில் மணிமேகலை கவனமாக இருந்தாள்.

“அரசியாரே! தங்கள் தடுமாற்றதிற்குக் காரணமானவற்றைக் கூறுகிறேன். கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள். நாட்டை ஆளும் மன்னவர்கள் குடிமக்களுக்குக் காவலர்களாக இருக்கவேண்டும். அவர்களை அச்சப்படுத்துபவர்களாக இருக்கக்கூடாது”

“பிறகு, நிகழும் விபரீதங்களுக்கு அரசர்களேதானே பொறுப்பு?”

“ஆமாம்,“ என்று ஆமோதித்த மணிமேகலை, ” அப்படியொரு கொடிய விபரீதம் ஒன்று நேரிட்டது.” என்றாள்.

“விளக்கமாகச் சொல் “ என்றார் அரசி.

“ஒரு தேசத்தை ஆண்ட மன்னன் தனது கொடுங்கோன்மையால் மக்களை வெருட்டிக்கொண்டிருந்தான். அந்த நாட்டில் ஒரு பெண். அவளுக்கு ஒரு கைக்குழந்தை வேறு. மன்னன்தான் சரியில்லை கனவனாவது நேரும் கூறுமாக இருக்கக் கூடாதா? அவனும் சரியில்லாமல் போகவே, வெறுத்துப் போன அந்தப்பெண் வாழ வழியின்றித் தனது குழந்தையைக் கோவில் ஒன்றில் விட்டுவிட்டு வேறு ஓர் ஊருக்குச் சென்று, வரைவில்மகளிர் வாழும் வாழ்வை மேற்கொண்டாள்.  அந்தக் குழந்தையை ஓர் அந்தணன் எடுத்து வளர்த்துவந்தான். உரிய பருவத்தில் முப்புரிநூல் அணிவித்து வேதம் கற்றுக்கொடுத்தான். அந்தச் சிறுவனும் வளர்ந்து வாலிபப்பருவம் எய்தினான். ஒருமுறை அவன் வெளியூர் சென்றபோது அங்கு பரத்தையர் வாழும் பகுதிக்குச் சென்றான். பல வேசிகளின் நடுவில் அவன் இன்பம் துய்க்க தேர்வுசெய்த வேசை அவனைப்பெற்ற தாய் என்பது தெரியாது. அந்த அந்தண வாலிபன் கிளம்பும் நேரம் வேசை சும்மா இல்லாமல் அவனுடைய ஊரின் பெயரைக் கேட்டாள். அவன் சொன்னதும் அவளும் சிறுவயதில் தனக்கு நிகழ்ந்ததைக் கூறினாள்.  அவள் சொன்ன தகவல்களின் அடிப்படையில் அவள் தனது தாய் என்பதை அவன் அறிந்தான். அவளிடம் சொல்லாமல் வெளியேறினான். தன்னுடைய ஈனத்தனமான செயலை எண்ணியெண்ணிக் கூசினான். அவமானம் தாளமுடியாமல் ஆத்மஹத்தி செய்துகொண்டான்.”

“கடவுளே!“ என்று அரசியார் காதுகளைப் பொத்திக்கொண்டாள்.

“அரசியாரே. இன்னொரு கதை கூறுகிறேன்.  ஒரு காட்டில் நிறைசூலியான ஒரு பெண்மான் தாகம்மிக்குற ஒரு சிற்றோடையில் நீர் குடித்துக்கொண்டிருந்தது. அது நீர் அருந்தும் ஓசை ஒரு வேடுவன் காதுகளில் விழுந்தது. வேடுவன் மறைந்திருந்ததால் மானை நேரில் பார்க்கமுடியவில்லை. வில்லை வளைத்தான். அம்பைக் குறிவைத்து ஒலிவந்த திசையில் செலுத்தினான். அவன் கணைவிடுவதில் படுசமர்த்தன் என்பதால் அந்த அம்பு மானின் வயிற்றில் ஒரு புறம் குத்தி மறுபுறமாக வெளிவந்தது. வயிற்றினில் மான் குட்டியைச் சுமந்துகொண்டிருந்த தாய் மான் தனக்கு நேர்ந்த கொடுமையைத் தாங்கமுடியாமல் அலறியது. பதறிப்போன வேடுவன் போய்ப்பர்க்கும்போது ஒரு நிறைமாத பெண்மானைக் கொன்றுவிட்டது தெரிந்தது. அதனை மிகப்பெரிய குற்றமாகக் கருதிய வேடன் தனது அம்பினால் தன்னைக் குத்திக்கொண்டு இறந்தான். இது உங்களுக்குத் தெரியுமா, தேவி?” என்றாள்.

“நன்கு கற்றவள் நீ. கூறு, கேட்கிறேன்.”

“புத்தி மயக்குற கள்ளை அருந்தும் மூடர்கள் அந்தக் கள் ஏற்படுத்தும் களிப்பில் எதிரில் வருவது கூரிய தந்தங்களையுடைய யானை என்பதுகூடத் தெரியாமல் அசட்டுத்துணிச்சலுடன் முன்சென்று நின்று அதன் மிரட்டலுக்கு அஞ்சாமல் அந்த யானையின் கால்களில் மிதியுண்டு இறந்து போனவர்களைப் பற்றி நீங்கள் கேள்வி பட்டதுண்டோ? பொய் பேசி வாழ்வதே வாழ்வு என்ற எண்ணம்கொண்டவர்களால் வாழ்வில் துன்பம் என்ற பெருங்கடலிலிருந்து தப்பிக்க இயலும் என்று நம்புகிறீர்களா?”

“இல்லை,“ என்றார் அரசியார்.

“களவை ஏராகக்கொண்டு உழுது பிழைக்கும் கள்வர்கள் வாழ்வில் நிம்மதியாக வாழமுடியும் என்று நம்புவீரோ, மென்மையான இளம் மூங்கில் போன்ற தோள்களையுடைய தேவி?”

“நிச்சயம் இல்லை,“ என்றார் இராசமாதேவி.

“இந்தப் பரந்த பூமியில் வாழ்பவர்கள் துன்பம் கொடுக்கக் கூடிய காமம் போன்ற ஐந்து குற்றங்களைத் தவிர்க்கவேண்டும்” என்றாள்.

“மேலும் சொல்!”

“கல்வி கற்பதால் மட்டும் உண்மைப் பொருளை அறியமுடியாது, தேவி. மனதால கூடக் கோபமின்றி இருப்பவன்தான் உண்மையான ஞானி. வறியவர்களுக்கு வேண்டியதை வழங்குபவர்களே இந்த உலகில் வாழ்பவர்கள். பசி என்று வாயிலில் வந்து நிற்பவர்களுக்கு வேண்டிய உணவை அளிப்பவர்களே இறந்த பிறகு தாங்கள் செல்லும் இடம் சொர்கமா நரகமா என்பதை அறிந்தவர்களாவர். உயிர்கள் அனைத்தின்மீதும் அன்பு செலுத்துபவர்களுக்குதான் துன்பம் தீரும் வழி தெரியும்.”

இதுபோன்று ஞானம் என்ற பயிரினை வளர்க்கும் போதனை என்ற நீரைத் தெளித்தாள் மணிமேகலை. அந்த போதனை நன்னீர் அரசமாதேவியின் செவிகளின் உள்ளே வழிந்து அவள் இதயத்தில் மகனின் கொடிய மரணத்தால் எரிந்துகொண்டிருந்த ஆற்றாமை என்ற தீயைத் தணிக்கத் தொடங்கியது.

அரசியின் கண்களில் நீர்மல்கத் தொடங்கியது. தனக்கும் மணிமேகலைக்கும் வயது, செல்வாக்கு இவற்றில்தான் வேறுபாடு. மணிமேகலையின் ஞானத்தின்முன்பு தான் ஒரு பெரிய பூஜ்ஜியம் என்பதை உணர்ந்தார். இவளிடமா தான் பகைமைபாராட்டினோம் என்று எண்ணி வெட்கித் தலைகுனிந்தார்.

“பிழை பொறு, மணிமேகலா!“ என்று தனது இருகரம் குவித்தார்.

பதறிப் போனாள் மணிமேகலை.

“மகாராணியாரே! என்ன இது? நீங்கள் என்னிடம் பிழைபொறுக்கச்சொல்லிக் கேட்பதா? தாங்கள் யாரென்று எண்ணினீர்கள்? சோழமண்டலத்தை ஆட்சிபுரியும் மன்னவரின் பட்டமகிஷி “

“இப்படி ஒரு அறிவும் ஞானமும் நல்லொழுக்கமும்கொண்ட பெண் துறவியின் முன்னால் நிற்கத் தகுதியில்லாதவள் நான்.”

“அப்படிச் சொல்லக் கூடாது. நீங்கள் யார் தெரியுமா? சொல்லட்டுமா?

“சொல்”

“இந்தப் பெண்துறவியின் முந்தைய பிறவியின் கணவனாக வாய்க்கப் பெற்றவரை இந்தப் பிறவியில் மகனாகப் பெற்றதால் எனக்கு நீங்கள் மாமி முறையாகவேண்டும். தெரிகிறதா?” என்று கூறி சிரித்தாள்.

இராஜமாதேவியும் அந்தச் சிரிப்பில் கலந்துகொண்டாள்.

பின்குறிப்பு: ஆதிரை,  விசாகை, தாயைப் பெண்டாள நினைத்த புதல்வன், நிறைசூலி மானைக் கொன்றதற்காக உயிர் நீத்த வேடுவன் என்று மணிமேகலையில் அங்கும் இங்கும் வரும் உபகதைகள் ஆய்வுக்குரியன.

[தொடரும்]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *