இருளும் வெளியும் – 1

இருள் ஒரு பொருளா?

தருக்க சங்கிரக தீபிகை என்னும் தருக்க நூல் இருள் ஒரு பொருளா என ஆராய்கின்றது.

“இருள்கரு வடிவினதாக உள்ளது, இருள் பரவுகின்றது; இருள் நீங்கியது”    என்று கூறும் வழக்கு உள்ளது. கருமை நிறப்பண்பு. பரவுதல். நீங்குதல் எய்துதல்அல்லது தொழில்.

பண்பும் தொழிலும் உள்பொருளுக்கே உண்டு. இல்பொருளுக்கில்லை. எனவே கருமைப்பண்பும் இயங்கும் தொழிலும் உடைமையால் இருள் ஒரு திரவியம் (பொருள்) என்பர்.

மேலும், பொருள்களை பிருதிவி,அப்பு, தேயூ, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம் எனும் ஒன்பதாக தருக்க சங்கிரக தீபிகை வகைசெய்கிறது. அவ்வொன்பது திரவியங்களுள்,

  1. ஆகாயம், வடிவம் இல்லாதது. இருள் வடிவம் உடையது. ஆதலால் இருள் ஆகாயத்தில் அடங்குவதில்லை.
  2. நீர், தண்மை உடையது. வடிவம் இல்லாதது. இருள் குளிர்ச்சியுடையதன்று; கருமையான வடிவம் உடையது. ஆதலின் இருள் நீரில் அடங்குவதில்லை.
  3. இருளுக்கு வெம்மை இன்மையால், வெம்மைத்தன்மையுடைய தீயில் இருள் அடங்குவதில்லை.
  4. வாயு வடிவமற்றது. இடையறாது இயங்குவது. இருள் கரு வடிவமுடையது. இடையறாது இயங்குதல் இலாதது. ஆதலால் இருள் வாயுவில் அடங்குதலில்லை.
  5. மண் நாற்றம் உடையது. உற்றறியும் நிலையினது. நாற்றம் உடைகை, உற்றறியும் நிலைமை ஆகிய இரண்டு தன்மையும் இருளுக்கு இல்லை. ஆதலால் இருள் மண்ணில் அடங்குதல் இல்லை.

காலம், திக்கு, ஆன்மா, மனம் என்னும் நான்கினும் இருள் அடங்கும் பொருளன்று என்பது வெளிப்படை. இவ்வாறு ஒன்பது திரவியங்களுள் இருள் ஒன்றிலும் அடங்குவதில்லை. எனவே, இருள் இவ்வொன்பதில் சேராத ‘ஒரு தனிப்பொருள்’ எனக் கருதுகின்றனர், சிலர்.

தீபிகையார் மறுப்பு           

தருக்க சங்கிரக தீபிகை என்னும் தருக்க நூல் இருள் ஒருபொருள் என்பதை மறுக்கின்றது.

கரிய வடிவமும் பரவுதலாகிய தொழிலும் உண்மையில் இருளுக்கில்லை. அவற்றை இருளுடையதாகக் கருதுதல் வெறும் மயக்க உணர்ச்சியேயாகும்.

இருள் வடிவுடைப் பொருளன்று. மேலும், ஒளியோடு கூடாத விழிக்கே இருள் விடயமாதலால் (காட்சிப்படலால்) ‘ஒளியின்மையே இருள்’ எனப்படும். அதாவது, ‘ஆலோலத்தின் அபாவமே இருளாகும்’.

வடிவுடைப் பொருள்களைக் கண் காண்பதற்குப் புறத்து ஒளியே காரணம். ஆதலால், ஞாயிறு, நெருப்பு முதலியவற்றின் இன்மையே இருள். (தேயுப் பொதுமையின் அபாவமே அந்தகாரம்). ஆதலால், ‘இருள் ஒரு பொருளன்று’ என்பதே தீபிகையாரின் முடிபு.

சைவசித்தாந்தத்தில் இருள்பற்றிய ஆய்வு

சைவ ஆகமங்களிலும் பிற சாத்திர நூல்களிலும் ஒளியிருள்பற்றிய ஆய்வுகள் உயிரின் ஞான-அஞ்ஞானங்களின் விளக்கமாக நிகழ்த்தப்படுகின்றன.

இந்தியத் தத்துவங்களிலே சைவசித்தாந்தம் ஒன்று மட்டுமே உயிரின் அறியாமைக்கு ஆணவமலமே காரணம் என்றுகொள்கின்றது. அறியாமையே வடிவாகிய ஆணவமலம் உயிரறிவோடு கலந்துநின்று, உயிர்களின் விழைவு அறிவுச் செயல்களை (இச்சா ஞான கிரியைகளை) நிகழ்வொட்டாமல் மறைக்கின்றது. அதனால், ஞானசாத்திரங்கள் ஆணவமலத்தை இருள்மலம் என்றழைத்துக் கண்ணுக்குப் பொருளை மறைத்துநிற்கும் இருளை உவமித்துக் கூறுகின்றன.

புறத்தே காணப்படும் பூதவிருள் உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களையும் தன்னகத்தே மறைத்துக்கொண்டு தானொரு பொருளாய் நின்றாற்போல,  ஆணவமலமும் எல்லாஉயிர்களையும் தன்னுள் மறைத்துக்கொண்டு எல்லாந்தானேயாய் நிற்குந் தன்மையது என்று உவமை விளக்கப்படும்.

பௌதிக இருளைக்காட்டிலும் ஆணவ இருள் ஆற்றல்வாய்ந்தது எனக் காட்டவந்த உமாபதிசிவம்,

 

“ஒருபொருளுங் காட்டா திருளுருவங் காட்டும்

இருபொருளுங் காட்டா திது” (திருவருட்பயன் 23)

என்றார்.

[உலகத்தில் காணப்படும் புறவிருள் தனக்குளகப்பட்ட பொருளெதையும் அதனுருவம், தன்மை முதலியவற்றைக் காட்டாமல் மறைத்துநிற்கும். ஆனால், தான் இருள் என்பதைக் காட்டி நிற்கும். இவ்வாணவ மலமாகிய அகவிருள், (உயிருணர்வில் கலந்து அதன் அறிவு இச்சை செயல்களை மறைத்து நிற்கும்) தன்னையும் காட்டாது. தன்னால் மறைக்கப்பட்ட பொருளையும் காட்டாது. ஆதலினால், புறவிருளைக் காட்டிலும் அகவிருளாகிய ஆணவம் மிகவும் வலியது, கொடியது எனப்படும்.]

 

ஆணவமலம் உயிரோடுகலந்து உயிரறிவை மறைத்துநிற்கும். ஆனால் பூதவிருள் கண்ணுடன்கலந்து கண்ணொளியை மறைப்பதில்லை. புறத்தே நின்று தன்னைக் காட்டி, பொருள்களை மட்டும் கண்ணுக்குத் தெரியாமல் மறைக்கின்றது. பொருளை மறைப்பதோடு தன்னையும் மறைத்துக்கொள்ளும் ஆணவ இருள். தன்னை மறைத்துக்கொள்ளும் ஆற்றலில்லாத பூதவிருளைக் காட்டிலும் பொருளை மறைப்பதோடு தன்னையும் புலப்படாது மறைத்துக்கொள்ளும் ஆணவவிருள்  மிகக்கொடிது என்கிறார், உமாபதி சிவம்.

சைவசித்தாந்த சாத்திரங்கள்,

ஞாயிறுசிவனுக்கும்

ஞாயிற்றினொளிசிவசத்தி அல்லது திருவருளுக்கும்

கண்ஆன்மாவிற்கும்

கண்ணொளிஆன்ம அறிவிற்கும்

விளக்குமாயைக்கும்

இருள்ஆணவ மலத்திற்கும்

உவமையாகக்கொண்டு  சித்தாந்தத்தை விளக்குகின்றன.

இறைவனின் உபகாரம்        

உயிர்கள் பிறப்புக்குமுன் ஆணவமலத்தால் உளதாகிய கருவறையில் உணர்ச்சியற்ற, கண்பார்வையற்ற குழந்தைபோல் கட்டுண்டிருந்தது. முதலில் அதற்கு உணர்ச்சி வரவைக்கவேண்டும்; பின் பார்வை வரவைத்துப் பொருள்களைக் காட்டவேண்டும்

உணர்ச்சியற்றுக் கிடக்கும் உயிருக்கு இறைவன் மாயை என்னும் முதற் காரணத்திலிருந்து மாயாகாரியங்களாகிய முப்பத்தாறு தத்துவங்களாலாகிய உடல், உடலில் உள்ள அறிகருவிகள், செயற்கருவிகள் — உலகம், உலகமாகிய இடத்தில் இருந்துகொண்டு உயிர்கள் உடலில் உள்ள கருவிகளால் அடையும் அனுபவங்களாகிய போகம் அனைத்தையும் படைத்துத்தருகின்றான்.  (தத்துவங்களின் விருத்தி பரிணாமம் முதலியன தனிக்கட்டுரைக்கு உரியன. இங்குக் கூறினால் மற்றொன்று விரித்தலாகும்)

 

கலை என்னும் வித்தியாதத்துவத்திலிருந்து மூலப்பிரகிருதி அல்லது பிரகிருதி மாயை எனும் தத்துவம் தோன்றும். இது குணம்முதல் பிருதிவி (மண்) ஈறாக உள்ள தத்துவங்கள் தோன்றுவதற்கு மூலமாக மூலப் பிரகிருதி எனப்படும். (சாங்கியம், மூலப்பிரகிருதியை 24ஆவது தத்துவமாகவும் இத்தத்துவங்களோடு கூடிய ஆன்மாவைப் புருஷன் என்னும் தத்துவமாகக்கொண்டு இருபத்தைந்து தத்துவங்களைக் கூறும். சைவசித்தாந்தத்தினைத் தவிர, ஏனைய இந்திய தத்துவநெறிகள் இந்த இருபத்தைந்தின் அடிப்படையிலேயே தத்தம் தத்துவ ஞானங்களை விளக்கின.)

இது பிரகிருதி மாயை, மான், மகத், அவ்வியத்தம் எனப் பலபெயர்களால் சாத்திரங்களில் வழங்கப்படுகிறது.

இதற்கு அவ்வியத்தம் என்பதே சரியான பெயர். அவ்வியத்தம் என்றால் ‘வெளிப்படாது நிற்பது’  என்பது பொருள். அவ்வியத்தத்தில் சத்துவம் இராசதம் தாமசம் எனும் முக்குணங்களும் வெளிப்படாது சூக்குமமாக இருக்கும்.

இம்மூன்றும் சத்துவத்தில் சத்துவம், சத்துவத்தில் இராசதம், சத்துவத்தில் தாமசம் என்றும் இராசதத்தில் இராசதம், இராசதத்தில் சத்துவம், இராசதத்தில் தாமசம் என்றும் தாமதசத்தில் தாமசம், தாமசத்தில் சத்துவம், தாமசத்தில் இராசதம் ஒவ்வொன்றும் மும்மூன்று ஆகப் பிரிந்து தூலமாய்  உயிருக்குப் பந்தமாய் இருக்கும்.

குணதத்துவத்திலிருந்து தோன்றுவது புத்தி தத்துவம். இதில் சத்துவகுணம் மிக்கிருக்கும். ஆங்காரம் என்னும் தத்துவம் புத்திதத்துவத்திலிருந்து தோன்றும். புத்திதத்துவம் ஆன்மாவின் ஞானசத்திக்குக் கருவியாகப் பொருள்களைப் பெயர், சாதி முதலிய வகையில் நிச்சயிக்கும்; ஆன்மாவுக்கு ஞானமாய் (அறிவாகி) அனுபவத்தைத் தரும். ஆங்காரம், ஆன்மா ஒரு விடயத்தை இன்னதென்று அறிதற்கு ஊக்கம் தரும். இதனால் யான் எனது என்னும் உணர்வுகள் பிறக்கும். இந்தத் தத்துவம் இல்லையெனில் ஆன்மாவுக்கு எந்தப் பொருளையும் அறிவதில் ஊக்கம் செல்லாது.

கண்ணுக்கு ஒளியின் உபகாரம்.

Image result for கண்ணும் ஒளியும்கங்கார தத்துவம் முக்குணங்களின் கலப்பினால் மூவகைப்படும். அவையாவன தைசத அகங்காரம், வைகாரி அகங்காரம், பூதாதி அகங்காரம் என்பன.

சாத்துவிகக் கூறு மிக்கு ஏனைய இரண்டும் குறைந்தது, தைசத அகங்காரம். இராசதம் மிக்கு ஏனைய இரண்டும் குறைந்தது வைகாரி அகங்காரம்.தாமதம் மிக்கு ஏனைய இரண்டும் குறைந்தது, பூதாதி அகங்காரம்.

இவற்றுள்,

  1. தைசத அகங்காரத்தில் மனம் தோன்றியபின்னர் செவி, தோல், கண், நாக்கு, மூக்கு என்னும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் தோன்றும்.
  2. வைகாரி அகங்காரத்தில் வாக்கு (பேச்சு), பாதம்(கால்), பாணி (கை), பாயு (எருவாய்), உபத்தம் (கருவாய்) என்னும் கன்மேந்திரியங்கள் ஐந்தும் தோன்றும்.
  3. பூதாதி அகங்காரத்தில் சத்தம் (ஓசை), ஸ்பரிசம் (ஊறு), ரூபம் (ஒளி), ரசம் (சுவை) , கந்தம் (மணம்) என்னும் பூத தன்மாத்திரைகள் ஐந்தும் தோன்றும்.

அகங்காரத்தில் சாத்துவிக குணத்தின் கூறு மிகுந்து பரிணமித்தாலன்றி இஃது இன்னதென்று ‘துணிந்தறிய’ வியலாது.

அகங்காரத்தில் இராசதக் கூறு மிக்குப் பரிணமித்தாலன்றி இஃதின்னதென்று துணிந்தறிவோமென்று ஒருப்பட்டெழுதல் நிகழாது.

அறிதலுக்குச் சாத்துவிகமும் அறிய முற்படும் தொழிலுக்கு இராசதமும் இன்றியமையாது வேண்டப்படும்.

கண்ணிந்திரியத்தின் தனித்தன்மை

ஞானேந்திரியங்களில் கண்ணிந்திரியம் தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தது. செவி முதலிய இந்திரியங்களும் சாத்துவிக அகங்காரத்தில் தோன்றியனவேயாயினும் அவை கண்ணிந்திரியத்தைக் காட்டிலும் சத்துவகுணத்தால் குறைந்தனவேயாகும்.

ஞாயிறு ,திங்கள், விளக்கு முதலிய ஒளியுடைப் பொருள்களின் ஒளிகள் அப்பொருள்களினின்றும் விரிந்து வேறிடங்களுக்குச் செல்லுகின்றன. அதுபோல, சத்துவகுணத்தால் பரிணமித்த கண்ணிந்திரியத்தின் கண்ணொளியும், சூக்கும ஒளியுடைமையால், கண்ணிலிருந்து விரிந்து வேறிடங்களுக்குச் செல்லும். செல்லும்போது அந்த ஒளி எந்தப் பொருள்கள் மீது பொருந்துகின்றதோ அந்தப் பொருள்களைக் கண்ணிந்திரியம் அறியும். அதனால் கண்ணிந்திரியம் தனது புலனை (விடயத்தை)ச் சென்று இயைந்து விரிந்து காணும்.

எனவே,சாத்துவிக குணத்தால் மிக்க கண்ணிந்திரியம் சென்றியைந்து விடயங்களைப் பற்ற, செவி முதலிய பிற ஞானேந்திரியங்கள் தம்மிடத்து வந்த விடயங்களோடு இயைந்து அறியும் இயல்புடையன என்பது தெளிவு.

இவ்வாறு சாத்துவிக அகங்காரத்திலிருந்து தோன்றிய ஏனைய இந்திரியங்களைக் காட்டிலும் சிறந்த சத்துவ குண மாத்திரையாய்ப் பரிணமித்த கண்ணிந்திரியத்தின் காண்டல் தொழில் நிகழ்வதற்கு ஞாயிறு அல்லது விளக்கு போன்ற வேறொரு ஒளியின் துணை இன்றியமையாது வேண்டப்படும். கண்ணொளியின் தொழிற்பாட்டுக்குப் பிறிதோர் ஒளியின் இன்றியமையாமைக்குக் காரணம் பின் வருமாறு விளக்கப்படுகின்றது.

சத்துவகுணசாரம் மிக்குக் கண்ணிந்திரியம் பரிணமித்தபோது, அப்பகுதியின் எஞ்சி நின்ற தமோகுண சாரம் இருளெனப் பரிணமித்துக் குற்றச் சகசமாய்க் கண்ணொளியைத் தடைசெய்து நின்றது. அக்குற்றச் சகசத்தை நீக்கிவிடயத்தைக் காட்டுதற்குத் தமோகுணமிக்கு ஏனைய இரண்டு குணங்களும் குறைந்து பரிணமித்த கூறாகிய தாமத அகங்காரத்திலிருந்து பரிணமித்துத் தோன்றிய சத்துவகுணசாரமாகிய பூதவொளிஅதற்கு இன்றியமையாத உபகாரமாகின்றது.

சாத்துவிக அகங்காரத்திலிருந்து எஞ்சிநின்ற தமோகுணக் கூறின் பரிணாமமாகிய இருளுக்குத் தாமத அகங்காரத்திலிருந்து சத்துவகுண மாத்திரையாய்ப் பரிணமித்த பூதவொளியே மறுதலைப் பொருள். ஆகவே, கண்ணின் குற்றச் சகசமாகிய இருளை நீக்கி, அதனோடு உடன்தோன்றிய சத்துவகுண சாரமாகிய கண்ணொளிக்குத் துணையாய் நின்று தாமத அகங்கார சத்துவகுணசாரமாகிய பூதவொளி பொருளைக் காட்டும் என்பது பொருந்தும்.

இவ்வாறு கண்ணொளிக்குப் பிறிதொரு ஒளி உபகாரமாக நிற்றல் குறித்தே, உணர்த்த உணரும் அறிவினதாகிய உயிருக்குக் கண் உவமானமாயிற்று. சாத்திரங்களில் உயிருக்குக் கண்ணுவமையே பெரிதும் காட்டப்படுவதாயிற்று.

இருள் ஒருபொருளா?

காணும் கண்ணுக்கும் காணப்படும் பொருளுக்கும் இடையில் திரைபோன்ற ஒருபொருள் இருந்தால் கண் காணும் ஆற்றல் பெற்றிருந்தும் திரைக்குப் பின்னால் இருக்கும் பொருளைக் காண முடிவதில்லை. கண்ணின் பார்வையை அத்திரையாகிய பொருள் மறைக்கின்றது. கண்ணின் பார்வையை மறைக்கும் திரை ஒருபொருள் போலக் கண்ணின் பார்வையை மறைக்கும் இருள் ஒரு பொருளா? இதுவே ஆய்வுப் பொருள்.

கண்ணிந்திரியத்தின் ஒளியை மறைக்கும் இருள் ஒரு உள்பொருளே. இருளும் ஒளியும் ஒன்றனுக்கொன்று மறுதலைப்பட்ட இருவேறு உள்பொருள்கள். இரண்டும் உள்பொருள்கள்.  ஒளியின் இன்மை இருளாவதோ, இருளின் இன்மை ஒளியாவதோ இல்லை. அதாவது ஒன்றன் இன்மை மற்றொன்றாவதில்லை.

இருள், ஒளி என்னும் இவ்விருவகை உணர்வுகளும் ஒன்றையொன்று சார்ந்தன்றித் தனித்தனியே நிகழ்கின்றன. அதாவது, ஒளியின்மையின் வேறாய் இருள் என்னும் உணர்வும்,  இருள் இன்மைக்கு வேறாய் ஒளி என்னும் உணர்வும் நிகழ்கின்றன. ‘இருள்’ வேறு; ‘ஒளியின்மை’ வேறு. அவ்வாறே ‘ஒளி வேறு’. ‘ஒளியின்மை’ வேறு என அறிதல்வேண்டும்.

இந்திரியங்கள் விடயங்களோடு (பொருள்களுடன்) பொருந்தி இயைந்து அவற்றை அறிவனவேயன்றி இயையாமல் அறிவதில்லை. இருக்கும் பொருளோடுதான் இந்திரியம் இயையவியலும். இல்லாத பொருளோடு இந்திரியம் இயையகவியலாது. இல்லாத பொருளை இந்திரியம் அறியாது. முயற்கொம்பு இல்லாதபொருள். அதனைக் கண் எவ்வாறு காணும்? இருள் இல்பொருள் என்றால், இல்லாத இருள் எவ்வாறு கண்ணொளியைத் தடைசெய்ய முடியும்?

இல்லாதவொன்றால் செய்யக்கூடியதொன்றும் இல்லை, எனவே, கண்ணொளியைத் தடைசெய்து நிற்பதாகிய இருள் உள்பொருளே; இருள் இல்பொருளன்று. அந்தகாரம் பாவமே; அபாவமன்று.

இருள்மயக்கவுணர்ச்சி

விழித்த கண்ணுக்குக் காணப்படுவது எதுவோ அதுவே காட்சிப்பொருள். கண்விழித்தபொழுது தோன்றும் இருளே, கண்மூடிய வழியும் ஒருபடித்தாகத் தோன்றுகிறது. வடிவப் பொருள் கண்மூடியபொழுது கண்ணுக்கு விடயமாவதில்லை. விடயமாகத் தோன்றினால் அது கானலில் நீர் தோன்றுவது போன்றதொரு மயக்க உணர்வே.

அவ்வாறெ, விழித்துழியும் இருள் காட்சிப்பொருள் போலத் தோன்றுவது ஒரு மயக்க உணர்வே. அது கண்ணுக்கு விடயமாகும் இருளின் தோற்றமன்று. இதனை அனுபவத்தில் கண்டுகொள்க என்பது சிவஞானமாபாடியம்.

ஒருபொருளும் காட்டாது இருளுருவங் காட்டும் என்னும் திருவருட்பயன் (23) தொடருக்குப் பிறரெல்லாம் பூத இருள் வேறுபொருள்களையெல்லாம் மறைத்தும், மறைத்துநிற்பதாகிய தன்னுருவத்தைக் காட்டிநிற்கும் எனப் பொருள்கூறினர்

ஆனால், சிவஞான முனிவர், “ஒருபொருளும் காட்டாது இருள் உருவங் காட்டும்என்பதற்கு, ‘இருள் காட்சிப்பொருளாம் என்பது பொருளன்று; உடனாய் மறைந்து நிற்புழியும் பாரிசேட அளவையால் அறியப்படும் இயல்பினதே என்னும் பொருளாம்என்றனர்.  

ஆக சிவஞான மாபாடியம் கூறுவ்து,

1.ஒளியின்மையே இருள் என்னும் தருக்க நூலார்கொள்கை                                                                                தவறு.

  1. இருள் உள்பொருளே.
  2. இருள் உள்பொருளெனினும் காட்சிப்பொருளன்று.
  3. இருள் பாரிசேட அளவையால் உணரப்படும் பொருள்.
  4. இருள் கண்ணுக்குப் புலனாகத் தோன்றுவது மயக்கவுணர்வே அன்றி, இருளின் தோற்றம் அன்று.

கண்ணுக்குப் புலனாகாத இருளின் உண்மையை எவ்வாறு அறிவது?

கண்ணுக்குக் காட்டும் ஒளியில்லாத திறந்தவெளியில் கண்ணை அகலத் திறந்து விழித்து நோக்கியபோதும் மறைத்தற்தொழில் நிகழ்தல்பற்றிப் பாரிசேட அளவையால் இருளுண்மை அறியப்படும்.

பாரிசேட அளவையாவது யாது?  ஆயிரம் யானையின் பலமுடையவர்கள் சல்லியன், சராசந்தன், கீசகன், பீமன் எனும் நால்வர். இவர்களில் கீசகனைக் கொன்றவன் யார்? கீசகன் இறந்து கிடக்கின்றான். அவ்விடத்தில் சல்லியனும் இல்லை, சராசந்தனும் இல்லை. ஒழிந்து நிற்பது அஞ்ஞாதவாசியாகிய பீமனே என நிச்சயிப்பது. இதனை ஒழிபு அளவை எனவும் கூறுவர். கழிந்தனபோக எஞ்சி நிற்பது பாரிசேடம்.

கண்ணுக்கும் பொருளுக்கும் இடையில் வேறொரு மறைப்பு இருந்தால், அந்தப் பொருள் கண்ணுக்குப் புலனாகாது. எனவே, திறந்தவெளியில் கண்ணை அலரவிழித்து நோக்கியபோதும் பொருள் கண்ணுக்குக் காட்சிப்படவில்லையெனில், விடயத்தைக் கண்ணுக்குக் காட்சிப்படாமல் மறைத்துநிற்கும் பொருள் ஒன்று உளது என்பதைப் பாரிசேட அளவையால் நிச்சயிக்கவேண்டும். அதாவது, இருள்மட்டுமே உள்ளது; கண்ணைமறைக்கும் பொருள் வேறு இல்லை. ஆனால் பொருள் யாதும் கண்ணுக்குப் புலப்படவில்லை. மறைக்கும்பொருள் வேறின்மையால், பாரிசேட அளவையால் விடயத்தைக் கண்ணுக்கு மறைக்கும் பொருள் இருளே எனத் துணியப்படும்.

இருள் விடயத்தைக் கண்ணுக்குப் பொருளாகாமல் மறைத்துநிற்பதோடு, தானும் காட்சிக்கு அகப்படுவதன்று என்பது சிவஞான முனிவர் கருத்து. இருளில் கண்விரித்து அகலநோக்கினாலும் கண்ணை மூடிக்கொண்டாலும் காட்சிப்படுவது ஒருதன்மைத்தாகவே உள்ளது. கண்ணை மூடியபோது தோன்றிய கருமையே விழித்தபோதும் தோன்றுவதால் இருள் கருமையாகத் தோன்றுவது ஒரு மயக்க உணர்வே என்றார். சிவஞான முனிவர்.  (இவ்வாறு கூறுவதற்குக் காரணம், ஆணவ மல-இருள் பொருளை மறைப்பதன்றித் தன்னையும் மறைத்துக்கொள்ளும் என மலத்தின் இலக்கணம் கூறியதாற் போலும்)

பாம்பன் சுவாமிகளின் ஆய்வு

Image result for பாம்பன் சுவாமிகள்
பாம்பன் சுவாமிகள்

ஒளியின்மையே இருள்; அஃது ஒரு பொருளன்று எனும் தருக்க சங்கிரகத்தின் கருத்தை முழுவதும் மறுத்தும், சிவஞானபாடியக் கருத்தை ஒருபுடை மறுத்தும்

பாம்பன் அடிகள்,

  1. இருள் ஒரு பொருளே.
  2. அஃது கண் இந்திரியத்தின் ஒளியை மறைப்பதன்று.
  3. இவ்விருள் மக்கள் கண்ணிற்கும் மக்கள் கண்போன்ற பிறகண்களுக்கும் புறவொளியில்லாதபோது காணப்படுவதே.

எனும் இக்கருத்துக்களைப் பலவித ஏதுக்களால் வலியுறுத்துகிறார்.

தாயுமான சுவாமிகள், சுவானுபூதியில், இருளான பொருள்கண் டதல்லாற் கண்டஎன்னையுங் கண்டிலே னென்னேடி தோழி என்று உரைத்தமையால் இருள் ஒரு பொருளே என்றும் அது காட்சிப்படுவதொன்று என்பதும் அவர் கருத்தாகத் தெரிகின்றது.

நாம் சூரியவொளி உள்ள காலத்தைப் பகலென்றும், அஃதில்லாத காலத்தை இரவென்றும் கூறுகின்றோம். இப்பகலிரவு எனும் பொழுதுகளைப் பூனையின் கண்களும் அக்கண்களைப் போன்ற பிறகண்களும் ஒருபடித்தாகவே காண்கின்றன. இவ்வகைக்கண்கள் புறவொளியை வேண்டாமலேயே காண்கின்றன. இத்தகைய கண்களையுடையவை இருளென்பதையே அறியா. பின் பகலிரவென்பதை எவ்வாறறியுமெனில், ஞாயிற்றின் வெப்பத்தால் பகலையும், அஃதின்மையால் இரவையும் அறியும் எனலாம்.

கூகை (ஆந்தை)யின் கண்போன்ற மற்றொருவகைக் கண்கள் பகற்காலத்தில் காணா இயல்பும், இரவிற் காணும் இயல்பும் உடையன. இவ்வகைக் கண்கள் சூரியனின் ஒளியையே இருளாகக் காண்பன.

ஒருவகைக் கண்கள் பகலிற் காணாமைக்கும், ஒருவகைக் கண்கள் பகலிரவென்பதனை அறியாமல் இரவிலும் காணும் ஆற்றலுடைமைக்கும் அவற்றின் கண்ணமைப்பே காரணமாகும்.

ஞாயிற்றின் ஒளிமுன் கூகையின் விழி குருடுபடும்; அதாவது ஞாயிற்றின் ஒளியையே இருளாகக் காணுமாறு கூகையின் விழிகள் அமைந்துள்ளன.

அவ்வாறே, வெளியினையே இருளாகக் காணுமாறு அமைக்கப்பட்டது மக்களின் கண் எனலாம். அதாவது, மக்களின் கண்ணிற்கும் அஃதனைய பிறகண்களுக்கும் ஒளியில்லாதபோது காணப்படும் ‘இருள்’ , ஒளி, இருள் என்பவற்றுள் ஒன்றுமல்லா ஓரியல்புடைய வெளியே (space) யன்றிப் பிறிதொரு பொருளன்று, என்பர் பாம்பன் சுவாமிகள்.

இருளிற் காணும் ஆற்றலற்ற மக்களின் கண் வெளியையே இருளாகக் காணும் என்னும் கூற்று எவ்வாறு பொருந்தும் எனும் வினா எழலாம்.

ஒளியில் நின்றுகொண்டிருப்பவனது கண் அவனுக்கருகில் உள்ள மரத்தின் நிழலை இருளாகக் காண்பதனால் அவ்வாறு கூறுதல் பொருந்தும் என்பர்.

ஒளி தடைபடும்போதே நிழல் உண்டாவதால், ஒளியின்மையே இருளெனலாமோவெனில், ஒளியிலா நிலைக்களம் (space) வெறுஞ் சூனியமன்று. அது வெளியெனும் பூதமேயாகும். வெளியாம் பூதத்திற்கு வேறாக இருள்எனவொன்று இருக்கும் என்பது பொருத்தமுடைத்தன்று என்பார், பாம்பனடிகள்.

மேலும், கூகையின் விழிக்கு ஞாயிற்றின் ஒளியே இருளாகக் காணப்படுகின்றதெனும் உண்மைகொண்டு, ‘ஒளியின்மை இருள்’ எனுங் கூற்று மறுக்கப்படும். ஒளியில்லாதபொழுதும் பூனையின் கண்கள் நன்கு காண்கின்றது.

’ஒளியின்மையே இருள்’ எனும் கூற்று ஏற்புடையதன்று. விழியை மூடிக்கொண்டாரின் கண்ணுக்குள் தோன்றும் கருமை வெறும் மயக்க உணர்வே எனும் கூற்றை, இது வெளியில் உள்ள இருள் மூடிய கண்ணுக்குள் வந்து தங்கிவிட்டதெனக் கூறுவதை யொக்கும் என அடிகள் ஒதுக்குவர்.

நீண்ட ஆகாயமாகிய வெளி நீலநிறமாகக் காணப்படுவ்து, வெளிதானே இருளாகக் காணப்படுகிறது என்னும் கொள்கையை வலியுறுத்தும். ஒளிபெற்றும் பார்வை செயலற்று நின்றுவிட்ட நிலைக்கள வெளிமட்டுமே நீலநிறமாகக் காணப்படுகின்றதெனக் கொள்ளலாம். கானலே கானல்நீர் எனும் பெயருடைப் பொருளாகவும், இருளே நிழலுடைப் பொருளாகவும் வேறுவேறு பெயருடன் வழங்கிக் கிடத்தலைப் போல இயற்கை வெளிதானே இருளென்னும் பெயருடைப் பொருளாகவும் வழங்குவதாயிற்று.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *