பெங்களூர் அசோகமித்திரன் நினைவுக் கூட்டம்: பதிவுகள்

கடந்த மார்ச்-23, 2017 அன்று மாபெரும் நவீனத் தமிழிலக்கிய எழுத்தாளரான அசோகமித்திரன் மறைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பெங்களூர் வாசக வட்டம்  சார்பாக, ஏப்ரல் 2, ஞாயிறு 10 மணிக்குத் தொடங்கி ஒரு நினைவுக் கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். 20க்கும் குறைவான பேர்களே கலந்து கொண்டாலும் உரைகளும், கலந்துரையாடலும் இலக்கியத் தரத்துடன் சிறப்பாக அமைந்தன. அக்கூட்டத்தின் வீடியோ பதிவுகள் கீழே.

உரையாற்றியோர் (இடமிருந்து வலம்) – என். சொக்கன், ரமேஷ் கல்யாண், டாக்டர் ப.கிருஷ்ணசாமி, ஜடாயு

பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் ப.கிருஷ்ணசாமி அசோகமித்திரனுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர். சிறந்த இலக்கிய விமர்சகர், ஆய்வாளர். அசோகமித்திரனின் தனித்துவம் மிக்க இலக்கிய ஆளுமை குறித்து சிறப்பாகவும் உள்ளத்தைத் தொடும் வகையிலும் தனது உரையில் எடுத்துரைத்தார்.

கணையாழி, தளம் ஆகிய இலக்கிய இதழ்களில் சிறுகதைகளை எழுதியிருக்கும் ரமேஷ் கல்யாண் அசோகமித்திரனை நினைவுகூர்ந்து ஆற்றிய உரை செறிவாக இருந்தது. அவ்வளாக பிரபலமாக அறிந்திராத அ.மி, சிறுகதைகள் சிலவற்றையும் எடுத்துக் கொண்டு அவற்றின் நுட்பங்களை ரமேஷ் கல்யாண் அழகாக விளக்கினார். அசோகமித்திரனின் நகைச்சுவை உணர்வு குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களையும் அளித்தார்.

அசோகமித்திரனின் கலை எவ்வாறு பெருங்கதையாடல்களைத் தவிர்த்து அதே நேரம் அரசியல், சமூக பிரக்ஞையையும் உள்ளடக்கியதாக இருந்தது என்பதை ஜடாயுவின் உரை தொட்டுச் சென்றது. சென்ற வருடம் வெளிவந்த அசோகமித்திரனின் ’அந்தரங்கமானதொரு தொகுப்பு’ நூல் குறித்தும் அவர் பேசினார்.

என். சொக்கன் தனது உரையை அசோகமித்திரன் படைப்புகளுடனான தனது அறிமுகத்திலிருந்து தொடங்கினார். அ.மி போன்ற ஒரு மகத்தான எழுத்தாளரை அடுத்த தலைமுறைக்கு எப்படி எடுத்துச் செல்ல முடியும் என்பது குறித்ததான சிந்தனைகளையும் முன்வைத்தார்.

உரைகளுக்குப் பிறகு நிகழ்ந்த கலந்துரையாடல் சுவாரஸ்யமாக அமைந்தது. ஏ.வி.மணிகண்டன், ரெங்கசுப்ரமணி, ஸ்ரீ கிருஷ்ணன், லா.ச.ரா சப்தரிஷி, கண்ணன் சக்ரபாணி, தெய்வம் அண்ணாமலை ஆகிய வாசகர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். உரையாற்றியவர்களும் இடையிடையே கலந்துரையாடலில் பங்கு பெற்றனர்.

One Reply to “பெங்களூர் அசோகமித்திரன் நினைவுக் கூட்டம்: பதிவுகள்”

  1. க.ச. கோபாலகிருஷ்ணன் - நிறை இலக்கியவட்டம், துணை ஆசிரியர் நிறை சிற்றிதழ், ஹைதெராபாத் says:

    அன்புடையீர்,
    வணக்கம். பெங்களூரில் அசோக மித்திரன் கூட்டத்தின் கட்டுரையைப் படித்தேன். ஏழு நாவல்கள் மற்றும் ஏராளமான சிறு கதைகளை எழுதி இருக்கும் அசோகமித்திரன் அவர்களை பற்றி துக்லக் இதழில் “இவர் மொழியிலோ மலையாள மொழியிலோ எழுதியிருந்தால் அவரை அவர்கள் கொண்டாடி இருப்பார்கள் … ஞானபீட விருதுக்கு தகுதியானவர் என்று பதிவு செய்து இருந்தார்கள். மிகவும் உண்மை. புதியது படைத்தாலும் நம்மிடம் உள்ள பொக்கிஷங்களை மேலும் செம்மை செய்திட வேண்டும். இவர் போன்ற எழுத்தாளர்களை நாம் என்றும் மறக்க கூடாது. ஆனால் இவர் படைப்புகள் காலத்தை வென்று என்றும் நிலைத்திருக்கும்

    க.ச. கோபாலகிருஷ்ணன் – நிறை இலக்கியவட்டம், துணை ஆசிரியர் நிறை சிற்றிதழ், ஹைதெராபாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *