மணிமேகலை 29 — கச்சி மாநகர் புக்க காதை

மணிமேகலைக்குத் தனது தாயார் மாதவி, தோழி சுதமதி மற்றும் தனது ஆன்மீக குருவான அறவண அடிகளையும் வஞ்சி நகரில் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. பூம்புகார் நகரத்தைக்  கடல் கொள்ளப்போவதை முன்கூட்டியே அறிந்து அறவண அடிகள் இருவரையும் அழைத்துக்கொண்டு வஞ்சி நகர் வந்திருப்பதை அறிந்து அவள் தனது சமயவாதங்களை முடித்துக்கொண்டு வஞ்சி நகருக்குள் பிரவேசித்தாள்.

வஞ்சி நகரின் அமைப்பு அவளை வியப்பிற்குள் ஆழ்த்தியது. சரியான திட்டமிடலுடன் ஒரு நகரம் எவ்வாறு நிர்மாணிக்கப்படவேண்டுமோ அவ்வாறு அந்த நகரம் அமைக்கப்பட்டிருந்தது.

எங்கும் உயர்ந்த மாடங்களை உடைய இல்லங்கள் காணப்பட்டன. ஒவ்வொரு இல்லத்திலும் அங்கு வாழும் கரிய கூந்தலை உடைய மகளிர் தங்கள் கூந்தலைப் பராமரிக்கும் வண்ணம் நறுஞ்சாந்து தடவி கழுவிய நீர் வெளியில் சென்று சாக்கடையில் கலப்பதற்கு ஏதுவாகக் குழாய்கள் அமையப் பெற்றிருந்தன.  இளைஞர்களும் யுவதிகளும் தத்தம் போக்கில் தனித்தனியே நீராடும்வண்ணம் இயந்திரங்களுடன் கூடிய கிணறுகள் அமையப்பெற்றிருந்தன. அவர்கள் அங்கே நறுமணப் பொருள்களை உடலில் பூசிக்கொண்டு குளித்துக்கொண்டிருந்தனர். அந்த நீரானது கால்வாயில் சென்று கலந்தது.

மணிமேகலை சென்ற அன்று மன்னனின் பிறந்தநாளாகவும் இருந்ததால் மக்கள் ஒருவருக்கு ஒருவர் நறுமணம் கமழும் நன்னீரை சிவிறி மற்றும் கொம்பு என்ற நீர்வீசும் கருவிகளைக்கொண்டு வீசி மகிழ்ந்துகொண்டிருந்தனர்.

பௌத்த இல்லறவாசிகள் ஐந்துவகையான ஒழுக்கத்தைப் பின்பற்றும் புத்தபிக்குகளின் பாதங்களை நறுமண நீரால்  கழுவிக்கொண்டிருந்தனர்.

இல்லறத்தினர் வீடுதோறும் பந்தல்கள் இட்டு நறுமணப் புகைமூட்டி தண்ணீர்ப் பானைகளில் ஊற்றும் தண்ணீர் — நேர்கட்டி, செந்தேன், நிரியாசம், பச்சிலை, சந்தனம், அகில் போன்ற அறுவகைப் பொருட்களைச் சேர்த்து புகையில் போடுவதற்கு வாசனைப்பொடி தயாரிப்போர் இல்லங்களில் அரைக்கும் கலவையைக் கழுவி ஊற்றிய நீர் –. இத்தகைய நறுமணம் வீசும் நீரே அங்குள்ள கால்வாய்களில் கலப்பதால் கராம், இடங்கர் என்று அறியப்பட்ட முதலையினங்களும் மீன் இனங்களும் தம்மீது இருக்கும் புலால் நாற்றம் மாறி நறுமணம் வீசிக்கொண்டிருந்தன.

அகழிகள் எங்கும் தாமரை, குவளை, ஆம்பல், செங்கழுநீர் போன்ற மலர்கள் பூத்துக் குலுங்கியபடி காட்சியளித்தன. இந்திரனின் வில்லைப்போல பொலிவுடன் விளங்கிய வானவில்  என்ற வண்ணம் இலங்கும் ஆடையை அந்த அகழி அணிந்திருந்தது.

பகைவர் தாக்கும்போது திருப்பித் தாக்குவதற்கு ஏதுவாக எந்திரங்கள்மூலம் ஆயுதங்களை எறியும்பொருட்டு அமைக்கப்பட்டிருந்த உயர்ந்த மதில் அகழியைச் சுற்றி இருந்தது. மதிலைச் சுற்றிலும் அரணாகக் காவல் காடுகள் அமையப்பெற்றிருந்தன. உயர்ந்த வாயிலின் மேலே வெண்ணிலவைப்போல வெண்மையான சுண்ணாம்பினால் சுதைகள் அமையப்பட்டிருந்தன.

கோட்டைச் சுவரின் உட்புறம் விரிந்த வஞ்சி மாநகரம் மணிமேகலையை மேலும் வியப்பில் ஆழ்த்தியது. அகன்ற வீதிகள் — அந்த வீதிகளுக்குக் காவல் புரிய காவலாளர்கள் வீதியின் முனைகளில் இருந்தனர். அகன்ற வீதிகள் எங்கும் பல்வேறு பண்டங்களை விற்பவர்கள் கூடியிருந்தனர். பலவகை மீன்களை விற்பவர்கள், வெண்ணிற உப்பை விற்பவர்கள், கள்விற்கும் வலைச்சியார், பிட்டு விற்பவர்கள், அப்பம் விற்பவர்கள் என்று பலரும் கூவி கூவி தங்கள் பொருள்களை விற்றுக்கொண்டிருந்தனர். மக்கள் நெருக்கம் அதிகம் இருந்த வீதியாக இருந்ததால் மணிமேகலை அவர்களை விலக்கிக்கொண்டு சென்றாள்.

வேறொரு சிறிய வீதியில் நுழைந்தாள்.

அங்கே பச்சை இறைச்சி விற்போரும், பஞ்சவாசம் விற்போரும் (பஞ்சவாசம் என்பது இப்போது விற்கப்படும் பீடா போன்ற தாம்பூலம்) கூடியிருந்தனர்.

மற்றொரு வீதியில் பெரிய பெரிய மண்பானைகளை விற்பவர்களும், செப்புப் பாத்திரங்கள் விற்பவரும், வெண்கலக் கலங்கள் விற்கும் கன்னாரர்களும், பொன்னால் அணிகலன்கள் செய்பவர்களும், பொன் தட்டர்களும், மரத் தச்சர்களும், கடவுளின் உருவம் செய்யும் சிற்பிகளும், வரம் தரும் கடவுளின் படங்களைத் துணிகளில் எழுதும் ஓவியர்களும் தோலைப் பதனிட்டு உரைகள் முதலிய தோல் பொருள்களைச் செய்பவர்களும், தையல்வேலை புரியும் செம்மார்களும்,  மாலை தொடுப்பவர்களும், காலக் கணக்கிட்டு சோதிடம் பார்ப்போரும்  நன்மைபயக்கும் யாழ் போன்ற இசைக்கருவிகளை மீட்டி வலிவு, மெலிவு, உச்சரிப்பு ஆகிய தொனிகளைச் சரியாக உச்சரித்து பண்களைப் பாடும் திறன்பெற்ற பாணர்களும் நிறைந்த வீதிகளையும், சங்குகளை அரத்தால் அறுத்து வளையல்கள் செய்வோர் ஒரு புறம்; முத்துக்களை நரம்புகளில் கோர்த்து மாலைகள் தயாரித்து விற்பவர்கள் ஒருபுறம்;. இவர்கள் செய்த நகைகளை அணிந்து நடனமும் ஆடி பொது, வேத்தியல் என்று இரண்டுவித கூத்துகளை ஆடும் கணிகையர் இருக்கும் வீதிகளின் வழியாகவும், தானியங்களை எட்டுப் பிரிவாகக் குவித்து தானியம் விற்கும் கூல வணிகர்கள் மிகுந்த வாணிபத் தெருவும், அரசன் முன்பாக நின்றும் இருந்தும் துதி பாடும் சூதரும், மாகதரும் வைதாளிகரும் இருக்கும் வீதியையும், இன்பத்தைக் காசுக்கு விற்கும் பரத்தையர் வீதியையும், கண்களின் பார்வைக்கு அகப்படாத அரிய மெல்லிய நூல்களினால் வண்ணமேற்றி ஆடை நெய்பவர்கள் இருக்கும் வீதியையும் கடந்து சென்றாள்.

மணிமேகலைக்குக் வஞ்சி மாநகரத்தின் தோற்றமும், வகையும், சிறப்பும் அதன் மீது ஒருவித பற்றுதலை ஏற்படுத்தியது. மேலும் இதுபோல எத்தனை வீதிகள் உள்ளன என்பதை அறிய ஆவலானது.

பொற்கொல்லர்கள் நிறைந்த வீதி, மாணிக்கம், ரத்தினம் போன்ற பல்வகை மணிகளை விற்போர் நிறைந்த வீதி, தங்களுக்குரிய முத்தீ வளர்த்து யாகங்களும், வேள்விகளும் புரியும் அந்தணர் வீதி, அரசு அதிகாரிகளும், அரசில் உயர் பதவிகளில் இருக்கும் தானைத் தலைவர்கள் போன்றோர் வாழும் இல்லங்கள் மிகுந்த தெருவும், மன்றங்களும்,. ஊருக்குப் பொதுவான அம்பலங்களும்,முச்சந்திகள், நாற்சந்திகள் போன்றவற்றையும், சில வீதிகள் கூடும் இடங்களில் சதுக்கங்களையும் பார்வையிட்டாள்.

புதியதாகத் தருவிக்கப்பட்ட  யானைகள், பொன்மாலைகள் அணிந்த குதிரைகள் முதலியவற்றைப் பயிற்றுவிப்போர் நிறைந்த வீதி, உயரமான பகுதியிலிருந்து நீரானது அருவி போல விழுமாறு அமைக்கப்பட்ட குன்றுகள், ஆவலைத் தூண்டும் வண்ணம் நறுமண மலர்களை உடைய மரங்கள் மிகுந்த சோலை, வானவர்கள் தாங்கள் வசிக்கும் தேவ உலகை மறந்து வந்து தங்குவதற்கு ஏதுவாக குளிர்ந்தநீர் வழியும் தடாகங்கள்,  மக்கள் கூடும் அறக்கோட்டங்கள், பொன்னால் வேயப்பட்ட பொது மன்றங்கள், பௌத்த சமயத்தின் நிதானவகைகளை விளக்கும்வண்ணம் பலவித சித்திரங்களை எழுதிவைக்கப்பட்ட சாலைகள் இவற்றைக் கண்டு களித்தாள், மணிமேகலை.

வான்வழி செல்வோர் வந்து தங்குவதற்கு ஏதுவான இந்திர விகாரம் என்று மக்களால் புகழப்படும், புத்தபிக்குகள் உறையும் புத்தவிகாரம் ஒன்றினுள் நுழைந்தாள்.

தனது மகன் கோவலன் மதுரையில் கொலையுண்டு இறந்த செய்தியைக் கேளப்பொறாமல் அனைத்து போகங்களையும் துறந்து சன்னியாச வாழ்க்கை வாழும் கோவலனின் தந்தை மாசாத்து வாணிகனின் இடத்திற்குச் சென்று அவரை வணங்கினாள்.

“புத்த பெருமான் கருணை உன்மீது படட்டும். யாரப்பா நீ?“ என்று அவர் வினவினார்.

மணிமேகலை தனது வேடத்தைக் களைந்து விட்டு, “தாத்தா! நான் மணிமேகலை,“ என்று அறிமுகப்படுத்திக்கொண்டாள்.

முற்றும் துறந்தாலும் இந்தப் பிறவியில் பற்றும் பாசமும் ஏதோ ஒருவகையில் வெளிப்படாமல்  இருக்குமா? தனது குலத்தின் கொழுந்தாக விளங்கும் மணிமேகலையைக் கண்டதும் மனதில் ஏதேதோ சிந்தனைகள் ஓட நீண்ட பெருமூச்சுவிட்டார்.

“எப்படியம்மா இருக்கிறாய்? மாதவியை அறவண அடிகளுடன் சந்தித்தேன். நீ எங்கோ மணிபல்லவத் தீவிற்கு சென்றதாகக் கூறினாள்.”

மணிபல்லவத்தீவில் நடந்தவற்றையும், ஆபுத்திரன் புண்ணியராசன் என்ற மன்னனாக நாகபுரியில் ஆட்சி செய்வதையும், புகார்நகரைக் கடல்கொண்டதையும், அதற்கு முன்னரே அறவண அடிகளுடன் மாதவியும், சுதமதியும் வஞ்சி நகரம் வந்ததையும், தான் ஆண்வேடம் தரித்து வஞ்சி நகரில் பல்வேறு சமயத்தினரின் வாதங்களைக் கேட்டதையும்  சுருக்கமாகக் கூறினாள்.

“தாத்தா, உங்களை நான் சந்தித்தது என்னுடைய பூர்வ ஜன்ம நல்வினையின் பயனாகும். எப்படி இருக்கிறீர்கள்?“

“உன்னுடைய தந்தையும் தாயும் முன்வினைப்பயன் காரணமாக இறந்து விட்டனர் என்பதை அறிந்துகொண்டேன். சொல்லமுடியாத வேதனை. ஒரே சமயத்தில் மகனையும், மருமகளையும் காவுகொடுப்பது என் போன்ற முதியோனுக்குத் தகுமா? சிறிதுகாலம் வேதனையில் உழன்றேன். அதன்பின்புதான் நிலையாமை என்னும் நல்லறத்தைச் போதிக்கும் புத்தபெருமானின் அருளுக்கு பாத்தியமானேன். இல்லறவாழ்வில் பயனேதும் இல்லை என்று தெளிந்தேன். உடலும் போகமும் நிலையற்றது என்பதை உணர்ந்தேன்.. புத்தநெறிக்கு மாறினேன். துறவறம் பூண்டேன். எங்கு செல்வது என்று பலவாறு சிந்தித்தேன்.”

“எப்படி வஞ்சி நகரம் வர எண்ணினீர்கள்?“

“குடநாட்டவர் என்றொரு அரச பரம்பரையில் திறன் மிக்க தலைவன் ஒருவன் மலைச் சிகரத்தின் சரிவில் தனது வில்லின் உருவத்தைப் பொறித்தான். அவன் குடக்கோச் சேரலாதன் என்று அறியப்பட்டவன். அவன் ஒருநாள் அந்தப்புர மகளிரோடு இங்குள்ள ஒரு சோலையில் தங்கி இன்பம் துய்த்துக்கொண்டிருந்தான். அப்போது இலங்கையில் உள்ள சம்னொளி என்ற மலையைச் சென்று வணங்கிவிட்டு வரும் சாரணர்கள் சிலரும், நற்பண்புடையோர் சிலரும், வான்வழி செல்லும் திறன் படைத்தவர் சிலரும் அரசன் செய்த நல்வினைப்பயன் காரணமாக அந்தச் சோலையில் சில காலம் தங்கியிருந்தனர். அரசன் அவர்களை முறையாக வணங்கி வரவேற்று அவர்களுக்கு நான்கு வகையான உணவுகளை அளித்தான். பிறப்பினால் வரும் துன்பமும், பிறவாமையால் நேரிடும் இன்பமும், புத்தபெருமான் அருளிச் செய்த நால்வகை மெய்மைப் பொருளையும் அவனுக்கு அருளினார்கள்.”

“தாத்தா இந்தக் குடக்கோச் சேரலாதன் என்பவன் யார்?“

“உன் தந்தை கோவலனுக்கு ஒன்பது தலைமுறைகளுக்கு முன்னால் அதே கோவலன் என்ற பெயருடைய ஒரு வணிகன் இருந்தான். அந்தக் கோவலனுக்கு இந்தக் குடநாட்டுச் சேரலாதன் நண்பனாக இருந்தான்.  அவன் புத்தமதக் கொள்கைகளைப் பரப்பும் சாரணர்களின் அறவுரைகளைக் கேட்டு ஒரேநாளில் தனது செல்வத்தையும், அரசபதவியையும் துறந்து புத்த சந்நியாசி ஆனான். தனது செல்வம் முழுவதையும் தான தர்மங்கள் செய்து தீர்த்துவிட்டான். அவன்தான் புத்தபெருமானுக்கு ஒரு குன்றின் உச்சியில் கோவில் ஒன்றை கட்டினான். அந்தக் கோவிலைக் காண்பதற்கு என்றுதான் இந்த நகரத்திற்கு வந்தேன். அப்போதுதான் இங்குள்ள தவம் மேற்கொள்ளும் பெரியோர்கள் காவிரிப் பூம்பட்டிணத்தைக் கடல்கொள்ளும் என்று கூறினார்கள்.”

“ஓ! அதனால்தான் புகார் செல்லாமல் இங்கேயே தங்கி விட்டீர்களா தாத்தா? “ என்றாள் மணிமேகலை.

“இன்னும் கேளு. தீவினைப் பயன் காரணமாக கோவலனும் கண்ணகியும் மதுரையம்பதியில் மாண்டனர் பிறகு அவர்கள் செய்த நல்வினை காரணமாக வானோர் வாழ்வினைப் பெற்றனர். இருவரும் கபிலை நகருக்குச் சென்று நன்னெறியாளன் புத்தனின் அறவுரைகளைக் கேட்டு அதன் காரணமாக பிறவிகளற்ற வீடு பேற்றினை எய்தினர் என்றும் அறிந்துகொண்டேன்.” என்றார்.

மணிமேகலை அவர் முகத்தைப் பார்த்த வண்ணம் இருந்தாள்.

அவர் தொடர்ந்தார்.

“நானும் அந்த நேரம் புத்த பெருமானின் அறவுரைகளைக் கேட்பேன். உன்னுடைய அடுத்த பிறவிகள் குறித்துக் கந்தக்கடவுள் கூறியதாமே. எனக்கு இது பற்றி அறவண அடிகள் கூறினார். உன்னுடைய தவவாழ்வின் முக்கிய நிகழ்ச்சி அந்தக் காஞ்சி நகரில் நடைபெற உள்ளது என்பதை அறவண அடிகள் அறிவார். அதனால்தான் அவரும் உன் தாயாரும் அங்கு சென்றுள்ளனர். ஆனால்  அந்தக் காஞ்சிநகரம் முந்தைய பொலிவுடன் இப்போது இல்லை.“ என்றார்.

“காஞ்சி நகரம் ஏன் பொலிவிழந்து காணப்படுகிறது?“.

“அதை ஏன் கேட்கிறாய் மணிமேகலை? பொன்னால் இழைக்கப்பட்ட மதிலுடன் பொலிவுடன் விளங்கிய காஞ்சிநகரில் பல ஆண்டுகளாக மழைவளம் குன்றிப் போய்விட்டது. இதன் காரணமாக உயிர்கள் அனைத்தும் பசிக்கொடுமையால் வாடுகின்றன. அறவோர்களின் பசிதீர்க்க ஒருவரும் முன்வரவில்லை. எனவே வறண்ட நிலத்தின்மேல் தோன்றிய கார்முகில்போல நீ இருப்பதால் அங்குள்ளவர்களின் பசிப்பிணியைப் போக்க வேண்டியது உன்னுடைய கடமையம்மா!” என்றார் மாசாத்துவன்.

மணிமேகலை மாசாத்துவனை வணங்கி விட்டு அமுதசுரபி பாத்திரத்தை ஏந்தி, வான்வழி செல்லும் மந்திரத்தைச் சிந்தையில் உச்சரித்து வான்வழியே காஞ்சி நோக்கிப் பயப்பபட்டாள்.

இந்திரனின் வானுலகே கிழ்வந்து இலங்கியதோ என்ற காட்சி மயக்கம் அளிக்கும் வளம் கொழிக்கும் காஞ்சி மாநகரம் மழையின்றி வாடிய புல்லைப்போல பொலிவிழந்து கிடப்பதைக் கண்டாள்.

தொடுகழற்கிள்ளி என்ற மன்னனின் இளவலான இளங்கிள்ளி என்ற மன்னவன் புத்ததேவருக்கு எழுப்பிய விஹாரத்தை வலம்வந்து வணங்கி, தென்மேற்கு திசையில் மரங்கள் அடர்ந்த குளிர்ந்த சோலை ஒன்றை அடைந்தாள்.

இதனை அறிந்த அரசாங்க அதிகாரி கஞ்சுகன் மன்னனிடம் சென்று, “மணிமேகலை காஞ்சி நகரின் சோலையில் வான்வழியே வந்து இறங்கியதைக் கண்டேன்.” என்று தகவல் கூறினான்.

உடனே மன்னவன் அவளை அந்தச் சோலையில் சென்று சந்திக்கக் கிளம்பினான்.

பரிவாரங்களுடன் வந்த மன்னவனை மணிமேகலை வரவேற்றாள்.

மன்னன் அவளைச் சிறந்த முறையில் உபசரித்தான். மன்னனின் முகத்தில் இருந்த வாட்டத்தைக் கண்டு மணிமேகலை காரணம் வினவினாள்.

“மணிமேகலை! உன் வரவு இந்த நகருக்கு நல்வரவாகுக. என்னுடைய செங்கோல் தனது நேர்மையை இழந்தாதா? இங்குள்ள முற்றும் துறந்த முனிவர்களின் தவங்கள் நெறி இழந்ததோ? கரிய கூந்தலை உடைய மகளிரின் கற்புநெறி பிறழ்ந்ததோ? எதுவென்று அறியேன். இந்த நகரில் வறுமை தாண்டவமாடுகிறது. என்னசெய்வது என்று தெரியாமல் நான் தவித்த நேரம் ஒரு பெருந்தெய்வம் என் முன்தோன்றி ‘வருத்தமுற வேண்டாம் மன்னா. உன்னுடைய நல்ல தவத்தின் பயனாக இங்கே ஒரு பெண்மணி வந்து தோன்றுவாள். இங்குள்ள மக்களின் பசிப்பிணியைப் போக்கும் அருமருந்து உணவு வடிவில் வற்றாமல் அந்தப் பாத்திரத்தில் சுரக்கும் என்று சமாதானம் கூறியது. அவளது அருளினால் இந்திரலோகத்திலிருந்து குன்றாத மழைவளம் கிட்டும்,’ என்றும் கூறியது. அந்தத் தெய்வம் அவ்வாறு கூறிச் சென்றபின்னர் மணிபல்லவத் தீவில் கோமுகிப் பொய்கையும், சோலையும் எங்கனம் இருந்ததோ அதே போல இங்கும் அமைக்கப்படவேண்டும் என்று உத்தரவிட்டேன். என் ஆணையின்படி எழுப்பப்பட்டதே இந்தச் சோலையும், பொய்கையும்!“ என்று மன்னவன் பகர்ந்தான்.

மணிமேகலை, “மணிபல்லவத் தீவைப் போல இந்தச் சோலை விளங்குகிறது.  அங்கு புத்தபெருமானின் திருவடித் தாமரைகள் பொருந்திய பீடம் ஒன்று உள்ளது. புத் மத நெறிகளின்படி நமது தீவினை, நல்வினைச் செயல்கள் இந்தப் பிறவியோடு நின்றுவிடாமல் மறுபிறவிகளிலும் தொடர்கிறது. பிறவி என்னும் பெரும் துன்பத்தைத் தவிர்க்க புத்தபெருமானின் பாதங்களில் சரணாகதி அடைவதைத் தவிர வேறு வழியில்லை.”

“புத்தரின் பாதக்கமலங்களுக்கு அத்தனை மகிமையா?“

“பிறவிப்பெருங்கடலைக் கடக்க உதவும் தோணிதான் அவருடைய பாதக் கமலங்கள்”

“அப்படி என்றால் எனக்கு ஒரு சிந்தனை வருகிறது.  இந்தச் சோலையில் மணிபல்லவத் தீவில் இருப்பதுபோல புத்த பெருமானின் பாதங்களுடன் பத்மபீடம் அமைப்போம். அந்தப் பத்மபீடம் பொலிவுடன் விளங்க அழகான புத்தவிகாரம் ஒன்றையும் எழுப்புவோம். சரியா? “

தனது வேலை எளிதில் முடிந்தது கண்டு மணிமேகலை மனதிற்குள் மகிழ்ந்துகொண்டாள்.

“நல்லது, மன்னா! சிறந்த சிற்ப வல்லுனர்களைக்கொண்டு ஆகம விதிகளுக்கு ஏற்ப உயர்ந்த விகாரத்தையும், அதற்குள் ஏற்புடைய புத்தரின் பொற்பாதங்கள் தாங்கிய பீடத்தையும்  அமையுங்கள்” என்றாள்.

மன்னவன் அவள் சொன்னதை சிரமேற்கொண்டான். பணிகள் துவக்கப்பட்டன. திறன் மிக்க கட்டிடக்கலை வல்லுனர்களும், ஆகமவிதிகளின்படி இயங்கும் சிற்பக்கலை வல்லுனர்களும் இணைந்து ஓர் அழகிய விகாரத்தையும், அதன் சன்னதியில் புத்தபெருமானின் பாதக் கமலங்களைத் தாங்கிய தாமரை பீடத்தையும் எழுப்பினார்கள்.

மணிமேகலை விகாரம் அமைந்த அந்தச் சோலைக்கு மீண்டும் வருகை புரிந்தாள். ஆலயப் பிரவேசத்தை மணிமேகலைமூலம் தொடங்கவேண்டும் என்று எண்ணியிருந்த மன்னவன் அவளுக்கு உரிய மரியாதையுடன் வரவேற்பு அளித்தான். புத்த சன்னியாசிகள் மந்திரங்களை முழங்க, மணிமேகலை விழாக்கோலம் பூண்டிருந்த அந்த வளாகத்தினில் கம்பீரமாக நின்றுகொண்டிருந்த புத்தபெருமானின் விகாரத்திற்குள் பிரவேசித்தாள். புகார் நகரத்தின்கண் அமையப்பெற்றிருந்த அறக்கோட்டத்தைவிடப் பெரியதாகவும் நீண்ட தர்மசாலை ஒன்று தன்னிடத்தில்கொண்டும் அந்தக் விகாரத்தின் வளாகம் இருந்தது. புத்தபெருமானின் பாதகமலங்களை வணங்கிவிட்டு மணிமேகலை அந்த அறக்கோட்டத்திற்கு வந்தாள்.

மணிமேகலை என்ற பௌத்த சன்யாசினி காஞ்சி மாநகருக்கு வருகை புரிந்திருக்கிறார் என்றதுமே கூடும் மக்களின் எண்ணிக்கையின் அளவு பன்மடங்காக மாறத்தொடங்கியது. இதுநாள் வரையில் நீடித்து வரும் பஞ்சமும், பசியும் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்ற நிம்மதிப் பெருமூச்சு எழுந்தது.

மணிமேகலை அரசாங்க அதிகாரிகளால் முறைப்படுத்தப்பட்டு வரிசையில் நிறுத்தப் பட்டிருந்த மக்களைப் பார்வையிட்டாள். காஞ்சிநகரின் பெருமையை என்னவென்று சொல்வது?  அறிஞர்களும், சான்றோர்களும் நிறைந்திருந்த நகரமல்லவா? தக்ஷசீலத்திற்கும், நாலந்தாவிற்கும் இணையாகப் பல்கலைக்கழகங்கள் அமைத்து கல்வித்தலமாக விளங்கும் நகரமல்லவா? எனவே நீண்டு செல்லும் மக்கள் கூட்டத்தில் பதினெட்டு மொழி பேசும் மக்கள் இருந்தனர். பாஷை பதினெட்டு என்றாலும் அவை சொல்லும் ஒரே பொருள் பசி என்ற அவல ஒலியாகவே இருந்தது. காது கேளாதோர், பார்வையற்றோர், வாய் பேச இயலாதவர்கள், மூப்பில் வருந்துவோர், ஆதரவற்றோர், தவமும், விரதமும்கொண்ட மக்களின் கூட்டம் ஆயிரம் என்றால் பசியால் வாடி வதங்கிக் கிடந்த விலங்கினங்களின் எண்ணிக்கை அதனினும் மிகையாக இருந்தது.

தனது கரங்களில் அமுதசுரபியை ஏந்தி, “வாருங்கள்! பசியாற்ற முடியாதவர்கள் எல்லோரும் வாருங்கள்!“ என்றாள்.

மணிமேகலை ஒரு கவளம் உணவை அமுதசுரபியிலிருந்து எடுத்தாள். என்னே ஆச்சரியம்! பசி என்னும் நோயால் தாக்கபட்டிருக்கும் அத்தனை உயிர்களுக்கும் அருமையான மருந்து என்பது போல அந்த அமுதம் சுரக்கத் தொடங்கியது. நீர், வளமான நிலம், கால அளவு, ஏர் முதலிய கருவிகள் சிறப்பாக அமையப்பெற்றால் விதைக்கப்பட்ட வித்தானது நல்ல விளைச்சலைத் தருவது போல அமுதம் பெருகத் தொடங்கியது. உரிய பருவத்தில் மழை பொழிவதால் ஒருநாட்டில் உள்ள தொழில்கள் அனைத்தும் மேம்படுவது போல அமுதம் சுரக்கத் தொடங்கியது.

அத்தனை மக்களும் தங்களது பசிப்பிணியைப் போக்கிய மணிமேகலை என்ற அந்தப் பெண் துறவியை வாழ்த்தி வணங்கியபடி சென்றனர்.

இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த மாதவியின் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.

“தன்முன் நிற்பது பதின்பருவத்தில் பருவவேறுபாட்டில் ஆண்களின் கோரப் பார்வைக்குத் தப்பி ஓடியொளிந்த ஒரு சாதாரணப் பெண்ணாக விளங்கிய அந்த மணிமேகலையல்லள், இவள் புதியவள், புத்த நெறியில் தன்னைக் கரைத்துக்கொண்டவள், அனைவரும் கைகூப்பித் தொழும் பெண்தெய்வமாக விளங்குபவள்,அவள் மீது கவிந்திருந்த கணிகையின் மகள் என்ற நிழல் முற்றிலும் விலகி புத்தஞாயிறின் கிரணங்கள் பூரணமாகப் பொலியத் தொடங்கிவிட்டது. இனி அவள் என் மகள் இல்லை. நான்தான் மணிமேகலையின் தாய்!” என்று பெருமிதம்கொண்டாள்.

“மணிமேகலை! அனைவருக்கும் உணவு வழங்கியாகி விட்டது. வாருங்கள் உள்ளே செல்லலாம்” என்றாள்

மணிமேகலை தனது தாயாரை ஏறிட்டாள்.

“என்ன புதுப் பழக்கம் எனக்கு உயர்வு நவிற்சி விகுதியா? அம்மா நான் என்றுமே உன் பெண்!“ என்றாள்.

“ஆனால் நீங்கள் இங்குள்ள காஞ்சி மக்கள் அனைவருக்கும் தாயாக மாறிவிட்டீர்கள், மேகலை!“ என்றாள் சுதமதி.

“சுதமதி. நீயுமா?“ என்று மாதவி கூச்சத்தில் நெளிந்தாள்

“பேசக்கூடாது, தெய்வமே!“ என்று சுதமதி கிண்டலாகச் சிரித்தாள்.

“அறவண. அடிகள் எங்கே?“ என்று கேட்டாள் மணிமேகலை.

“உள்ளே அறச்சாலையில் தியானத்தில் இருக்கிறார்.” என்றாள் மாதவி.

மூவரும் அறச்சாலைக்குள் நுழைந்தனர்.

உள்ளே அறவண அடிகள் தியானத்தில் வீற்றிருந்தார். மூவரும் அவர் பாதங்களில் விழுந்து வணங்கினர். தியானம்கலைந்து அவர்களுக்கு ஆசி வழங்கினார். மணிமேகலை அவருடைய பாதகமலங்களை நன்னீர்கொண்டு அபிஷேகம் செய்து ஒரு நல்ல ஆசனத்தில் அமரவைத்தாள். அறுசுவைகொண்ட நால்வகை உணவை அவருக்கு அளித்து, வெற்றிலையும் பலிதம் எனப்படும் வாய் மணக்கும் பச்சை கற்பூரத்தையும் வழங்கினாள்.

“என்ன வேண்டும் மணிமேகலை?“ என்றார் அறவண அடிகள்.

“என் சிந்தையில் உள்ளதை அறிய முடியாதவரா தாங்கள்?“

அறவண அடிகள் பூடகமாகச் சிரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *