கையாலாகாதவனாகிப் போனேன்! — 5

இப்படி ஒரு தண்டனையா?

பாபா அணு ஆராய்ச்சிக்கழக [பி.ஏ.ஆர்.சி] நேர்முகத்தேர்வுக்காக பம்பாய் [இன்றைய மும்பாய்] வந்து தேர்வில் தோல்வியடைந்த என்னை, “நீ உடனே திரும்பிப்போய் என்ன கிழிக்கப்போகிறாய்?  தமிழ்நாட்டிலதான் வேலைகிடைப்பது ரொம்பக் கஷ்டமாக – அதுவும் அனுபவம் இல்லாத எஞ்சினீயர்களுக்கு வேலையென்பது குதிரைக்கொம்பா இருக்கே!  இங்கேயே ஒண்ணு-ரெண்டு மாசம் இருந்து வேலை கிடைக்கிறதான்னுதான் பாரேன்!”  என்று எனது சிறிய பாட்டனார் அன்புக்கட்டளை இட்டதாலும், வேறு எந்த வேலையும் என்னைத் தமிழ்நாட்டில் எதிர்கொள்ளாததாலும், பம்பாயில் எனது வயதொத்த எனது மாமனுடனும்[சிறியபாட்டனாரின் மகன்], அவனது தோழர்களுடனும் சுற்றுவது பிடித்திருந்ததாலும், இரண்டு மாதங்கள் அங்கேயே தங்கி எனது அதிர்ஷ்டத்தைச் சோதித்துப்பார்க்க முடிவுசெய்தேன்.

முதல் வேலையாக என் சிறியபாட்டனாரின் வீடு இருந்த வில்லிபார்லாவிலிருந்து சர்ச்கேட்டுக்கு சீசன் டிக்கெட் வாங்கிவைத்துக்கொண்டேன்.

காலையில் எழுந்து குளித்து ப்ரெஞ்ச் [சும்மா சொல்கிறேன், ப்ரெஞ்சாவது ஒன்றாவது, ஒன்பது மணிக்கே மதிய உணவு ரெடியாகிவிடும்] சாப்பிட்டுவிட்டு எலெக்ட்ரிக் டிரைய்னைப் பிடித்து சர்ச்கேட்டுக்குப் பயணமாகிவிடுவேன்.  எனது சிறியபாட்டனாரின் நண்பர் ராமனின் அலுவலத்திற்குச் சென்று, டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் வேலைவாய்ப்பு பகுதியைக் கண்ணில் விளக்கெண்ணை போட்டுக்கொண்டு அலசி, முன்னனுபவம் தேவையில்லாத எஞ்சினீரிங் பட்டதாரிகள் தேவை என்ற விளம்பரங்களைப் பேனாவால் வட்டம்போடுவேன்.

ராமன் அவர்களுக்கு வேலை மனுக்களை சைக்ளோஸ்டைல்செய்து வைத்துக்கொண்டு, முகவரியைமட்டும் டைப்படித்து அனுப்பவது பிடிக்கவேபிடிக்காது.

“நீ இப்படிச் செஞ்சா, தன்னை நூறோட நூத்தொண்ணா நினைக்கறேன்னுதான் எம்ப்ளாயர் நினைச்சுப்பான்.  உடனே, உன்னைக் கொறச்சு எடைபோட்டு, உன் அப்ளிகேஷனைக் குப்பையிலே தூக்கிப் போட்டுடுவான்.  அது ஒனக்கு வேணுமா?  என் ஆபீஸுலயோ நல்ல ரெமிங்டன் டைப்ரைட்டர் சும்மா தூங்கறது.  உனக்கோ டைப்ரைட்டிங் தெரியும்.  ஸோ, ஒரொரு அப்ளிகேஷனையும் அப்பப்ப புதுசா போட்டிருக்கற வேலைக்குத் தகுந்தமாதிரி டைப்படிச்சு அனுப்பு, என்ன நான் சொல்றது?” என்று அவர் தன் பரிவுரையைத் திருவாய் மலர்ந்தருளியது என் சிறியபாட்டனாருக்கு மிகவும் சரியாகப்பட்டது.

உடனே அவர், “நம்ம ராமனே சொல்லிட்டாரேடா!  நீயும் சும்மா ஒக்காந்திருக்கறதுக்குப் பதிலா, இவர் ஆபீஸுக்குப் போயி, பேப்பரைப்பார்த்து, அன்னன்னிக்கே அப்ளிகேஷனை டைப்படிச்சு அனுப்பிடு.” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

எனவே, அன்றாடம் பார்த்த வேலைவாய்ப்புகளுக்குக ஏற்ப, கையொடிய டைப்படித்து, ராமன் அவர்கள் அப்ரூவலையும் வாங்கி, அவர் ஏதாவது திருத்தினால், மீண்டும் டைப் அடித்து, அஞ்சலில் சேர்த்துவிட்டுத் திரும்பிவருவதற்குள் மணி நான்காகிவிடும்.

ஐந்து மணிக்கு என் மாமனும் வந்துவிடுவான்.  டிபன் சாப்பிட்டுவிட்டு அவனுடன் சுற்றக்கிளம்பிவிடுவேன்.

திரும்பிவருவதற்குள் இரவு எட்டு மணி ஆகிவிடும்.

வந்தவுடன் என்னென்ன கம்பெனிகளுக்கு மனுச்செய்தேன் என்று கவனமாக விசாரிப்பார் என் சிறியபாட்டனார்.

இப்படியே பத்துப்பதினைந்து நாள்கள் கழிந்தன.

காலை சென்று மாலையில் ஆவலுடன் திரும்பிவந்து மனுவிற்கு ஏதாவது பதில்வந்திருக்கிறதா என்று கேட்பேன்.

பெரும்பாலும் இல்லையென்றுதான் வீட்டில் சொல்வார்கள்.

மேலும் ஓரிரு வாரங்கள் சென்றதும், ஓரிரு கடிதங்கள் என் மனுவைக் கண்டதாகவும், ஆனால், வேலைக்கு எடுக்க இயலாமைக்கு வருந்துவதாகவும், என் திறமைக்கு நிச்சயம் எங்காவது வேலைகிடைக்கும் என்ற ஒரேமாதிரி சொற்றொடர்களைத் தாங்கிவந்திருக்கும்.  காற்றுப்போன பலூன்மாதிரி எனது உற்சாகம் பறந்துபோய்விடும்.  சிறியபாட்டனார் ஆறுதல்சொல்லி உற்சாகப்படுத்த முனைவார்.

இப்படிப்பட்ட பதில்களையே பார்த்துச் சலித்த நான், என் மாமனையோ, அல்லது என் சிறியபாட்டனாரையோ வந்திருக்கும் பதில்களைப் படித்துச் சோல்லும்படி சொல்லிவிடுவேன், அவர்கள்மூலமாகவாவது அதிர்ஷ்டம் வரட்டுமே என்ற நப்பாசையினால்.

இப்படித் தண்டமாக சிறியபாட்டனார் வீட்டில் இருப்பதைவிட, தமிழ்நாட்டிற்கே திரும்பிச்சென்றுவிடலாமா என்றும் தோன்றும்.  வேலையுடன்தான் திரும்புவேன் என்று ஜம்பமாக என்வீட்டில் சொல்லிவிட்டுக் கிளம்பியதும் என்னைத் துன்புறுத்தும்.

கடைசியில் இன்னும் பத்துநாள்களுக்குள் சாதகமான பதில் வராவிட்டால் திரும்பிச்சென்றுவிடுவது என்ற முடிவுக்குவந்தேன்.

எட்டுநாள்கள் ஏமாற்றத்தையே எனக்குத் தந்தன. இதில் எனக்கு வேலை கிடையாது என்று மூன்று கடிதங்கள் வேறு.

ஒன்பதாம் நாள் ஒரு கடிதம் வந்தது. வேண்டாவெறுப்பாக அதையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

என்னிடமிருந்து அதைப்பிடுங்கி, திறந்து படித்துப்பார்த்த என் மாமன் என் கையைக் குலுக்கினான்.

“உன்னை வேலைக்கு வரச்சொல்லி வந்திருக்கு.  நாளண்ணிக்குச் சம்பள விஷயமா நேரில பேச வரச்சொல்லியிருக்கா.”

அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு கனவுபோலத்தான் இருந்தது.

“நன்னா டீக்கா டிரஸ் பண்ணின்டு போ.  என்ன சம்பளம் வேணும்னு கேட்டா, என் தகுதிக்கு என்ன கொடுக்கணும்னு நீங்க நினைக்கறேளோ அதைக் கொடுங்கோன்னு சொல்லு.  இப்ப இங்கேகூட வேலைகிடைக்கறது இவ்வளவு கஷ்டம்னு தெரிஞ்சதுக்கப்பற்மும் ரொம்ப பேரம்பண்ணறது நல்லதில்லே,” என்று எந்து சிறியபாட்டனார் அறிவுரைவழங்கினார்.

நான் பூம்பூம் மாடுமாதிரி தலையை ஆட்டிவைத்தேன்.

குறிப்பிட்ட நாளன்று வேலைக்கழைத்த கம்பெனியைநோக்கி விரைந்தேன்.

செம்பூரில் ஆர்.கே. ஸ்டூடியோ பஸ் ஸ்டாப்பில் இறங்கிச் செல்லவேண்டும்.

அங்கு இறங்கிய நான், நான் செல்லவேண்டிய இடத்திற்கு நடக்கத்துவங்கினேன். முச்சந்தியில் வலதுபக்கம் திரும்பவேண்டும்.

எதிரில் ஜோப்படா பட்டி என்று சொல்லப்படும் அனுமதியில்லாக் குடிசைகள் இருந்தன.  ஆள் நடமாட்டமே இல்லை.

முச்சந்தியிலிருந்த ஒரு குடிசையில் ஒரு சிறுவன் கயிற்றில் தொங்கிக்கொண்டு ஊஞ்சலாடுவது தெரிந்தது.  ஒரு பெண் –அவன் தாயோ — இடதுபக்கம் நின்று ஏதோ கையை ஆட்டியபடி இருந்ததும், ஒரு ஆண் — தந்தையாக இருக்கக்கூடும் – மறுபக்கம் நிற்பதும் என் கண்ணில்பட்டது.

பள்ளிசெல்லும் நேரத்தில் இந்தப்பையன் ஏன் ஊஞ்சலாடுகிறான், அதை ஏன் அவனது பெற்றோர்கள் இரசிக்கிறார்கள் என்ற கேள்வி என்னுள் எழுந்தாலும், அதை அருகில்சென்று ஒருகணமாவது பார்க்கவேண்டும் என்ற உந்துதல் என் மனதில் எழுந்தது.

“நஹி, நஹி, வோ பச்சா ஹை! [வேண்டாம், வேண்டாம், அவன் சிறுவன்!] என்று அப்பெண்மணி அழும்குரல் என் காதில் விழுந்ததும் நான் திடுக்கிட்டேன்.  ஒருவேளை அந்த ஆண் சிறுவனை மிகவும் வேகமாக ஆட்டுகிறாரோ என்று நினைத்தேன்.

மேலும் ஐந்தாறடிகள் எடுத்துவைத்தவுடன் என் இரத்தமே உறைந்துபோனது.

அச்சிறுவனின் கைகள் இரண்டையும் ஒன்றுசேர்க்கப்பட்டுத் தாம்புக்கயிற்றால் மணிக்கட்டில் கட்டி. குடிசையின் உத்திரக் கம்பில் அவன் தொங்கவிடப்பட்டிருந்தான்.  அவனது வாய் ஒரு துணியால் கட்டப்பட்டிருந்தது.  கால்களிரண்டும் கணுக்கால்களுக்குமேல் மற்றொரு கயிற்றால் ஒன்றாகக் கட்டப்பட்டிருந்தன.  தரைக்குமேல் ஓரிரண்டங்குலம் உயர்த்தி அவன் தொங்கவிடப்பட்டிருந்தான்.

அந்த ஆண், “திருட்டுப்பயலுக்கு வக்காலத்துவாங்கினால், உன்னையும் கட்டித் தொங்கவிட்டு அடிப்பேன்!” என்று இந்தியில் உரக்கக் கத்தியதும் என் காதுகளில் விழுந்தது.

அவன் தன் கையிலிருந்த சுருட்டிய துணிச்சாட்டையால் அச்சிறுவனைத் தொடையிலும், முழங்காலுக்குக் கீழும் மாறிமாறி வெறியுடன் வெளுத்தான்.

என்னால் பொறுக்கமுடியவில்லை.

“ரோக்கோஜி. ஆப் க்யா கர் ரஹே ஹைங் [நிறுத்துங்க. என்ன செய்யறீங்க?]” என்று நான் சற்று உரக்கவே கேட்டவுடன் அந்த ஆண் என்பக்கம் திரும்பி ஏதோ சொல்ல வாயெடுத்தவன்.  சிலகணங்கள் என்னையும், என் உடுப்பையும் உற்றுப்பார்த்தான்.

செக்கச்சிவந்த கண்கள், ஒருவாரம் வளர்ந்த முடி முகத்தில் வளர்ந்திருந்தது.  குப்பென்று மதுவின் நெடி..

அந்தப்பெண்களின் கண்களில் தெரிந்தது நன்றியா, பயமா?

சிறுவனின் கண்கள் மூடிமூடித் திறந்தன.

“நீ யாரய்யா என்னைக் கேட்க?”  பதில் உறுமலாகத்தான் இருந்தது.

“ஒரு சின்னப்பையனைப் இப்படியா கண்மண் தெரியாமல் அடிப்பது? படாத இடத்தில் பட்டு ஏதாவது ஆனால்?  இப்படி அடிக்க இவன் என்னதான் செய்தான்?”  எனக்குள் இவ்வளவு துணிச்சல் எப்படி வந்தது என்று எண்ணினால் இப்பொழுதும் வியப்பாகத்தான் இருக்கிறது.

“அஞ்சு ரூபாயைத் திருடி மட்கா [சூதாட்டம்] ஆடி விட்டுட்டான்.  மட்கா ஆடுற வயசா இது?” கோபத்துடன் சாட்டையை ஒரு வீசு வீசினான்.

சிறுவன் தொங்கியபடியே துடிதுடித்துத் தட்டாமாலை ஆடிவந்தான்.

“நிறுத்து.  வேணும்னா நான் அந்த ஐந்து ரூபாயைக் கொடுத்துடறேன்.  உனக்குப் புண்ணியாமாப் போகும்.  மாட்டைவிட மோசமா இப்படிப்பையனை அடிக்காதே!”

என்னை ஏளனமாகப் பார்த்துச் சிரித்தபடியே அவன் கேட்டான்: “அஞ்சு பைசாகூட வேண்டாம்.  பையனை அவுத்து விட்டுடறேன்.  பையனையும், இந்தப் பொம்பளையையும் நீயே கூட்டிட்டுப்போயிடு. நீயே இவனை வளர்த்துக்கோ.  இவளையும் வச்சுக்கோ!  சரியா?”

நான் அதிர்ந்துபோய்விட்டேன்.

சில கணங்கள் அமைதியானேன்.

கடகடவென்று சிரித்தான் அவன்.

“முடியாதுல்ல.  உன்னால இந்தப்பயலையும், இந்தப் பொம்பளையும் கூட்டிக்கிட்டுப் போகமுடியாதுல்ல?”

கேட்டுவிட்டு மீண்டும் சிரித்தான் அவன்.

நான் வாயடைத்து நின்றேன்.

“நீ கோட்டும் சூட்டும் போட்டு ஆபீசுலே வேலை பார்க்கற சாப்.  உன் உலகம் வேற. நான் ஒரு தற்குறி.  மூட்டைதூக்கிப் பொழப்பு நடத்துறவன்.  ரெண்டு வருசம் முன்னால குடிச்சுட்டுப் இவளைப் போட்டு அடிச்ச இவ புருசனை நீ கேட்டமாதிரி ஏண்டா அடிக்கறேன்னு கேட்டேன்.  அவனும் நான் உங்கிட்ட சொன்னமாதிரி, அடிக்கறத நிறுத்தறேன்.  தில் இருந்தா இவளையும், இவ புள்ளையையும் கூட்டிக்கிட்டுப்போடான்னான். பாவப்பட்டு இவ புருசன் கிட்டேந்து இவளையும், இவ பிள்ளையும் நான் சேர்த்துகிட்டேன்.  என்னால அப்படிச் செய்யமுடியும்.  என் உலகம் அப்படி.  உன்னால முடியாது.  எங்க வாழ்க்கை ஒனக்குப் புரியவும் புரியாது.  இவனை இப்படி நான் தண்டிக்கலேன்னா, இவன் அப்பன்மாதிரி இவனும் ஒரு தெருப்பொறுக்கியா, கேப்மாரியா, திருட்டுப்பயலாத்தான் அலைவான். போலீசு இவன்பின்னாலே சுத்தும்.  ஜெயில்தான் இவனுக்கு மாமியா வூடாகிப்போகும். உனக்குச் சொன்னப்புரியாது.  நீ உன் வேலையைப் பார்த்துக்கிட்டுப் போ.”

சாட்டையால் அச்சிறுவனை மேலும் இரண்டடிவைத்தான் அவன்.

அதற்குமேலும், அந்த அவலக் காட்சியை என்னால் காணச் சகிக்கமுடியவில்லை.  நம்மால் இதற்குமேல் என்ன செய்யமுடியும் என்ற கையாலாகாத்தனமும் சேர்ந்துகொண்டது.  அத்துடன், வேலைக்குக் கூப்பிட்டிருக்கும் கம்பெனிக்கு நேரத்தில் செல்லவேண்டும் என்ற எண்ணமும் என்னை உந்தியது.  திரும்பிப்பார்க்காமல் நடந்தேன்.

படித்துப் பண்புபெற்றிருக்கிறாம் என்று மார்தட்டும் நம்மிடம் எவ்வளவு கையாலாகத்தனம் இருக்கிறது, படிக்காதவர்கள் என்று நாம் முகம்சுளிப்பவர்களிடம் எவ்வளவு துணிச்சல் இருக்கிறது என்று அந்த நிகழ்ச்சி எனக்கு உணர்த்தியது.

இப்பொழுதும் யாராவது சிறுவர்களை அடித்தால் கயிற்றில் தொங்கித்துடித்த அச்சிறுவனும், எனது கையாலாகாத்தனமுமே என் மனக்கண்முன் அக்குடிசையின் உத்திரக்கம்பிலிருந்து ஊசலாடுகின்றன.

{கையாலாகாத்தனம் தொடரும்}

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *