தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை — மணிமேகலை 30

மணிமேகலை அறவண அடிகள் முன்னால் அமர்ந்திருந்தாள். மணிமேகலையின் நெஞ்சுரம் அறவண அடிகளை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு சின்ன பூனைக்குட்டியைப்போல தாயார் முந்தானையைப் பற்றிக்கொண்டு சுற்றிய மணிமேகலையா இவள்? ஒரு பெண் புலிக்கு உண்டான ஆற்றலும் திறமையும் ஒருங்கே கைவரப்பெற்று, தான் சொன்ன இடங்களுக்கெல்லாம் சென்று, உடலாலும் மனதாலும் அறிவாலும் தன்னை மேம்படுத்திக்கொண்டு தன் எதிரில் நிற்கும் அவளைக் காண அறவண அடிகளுக்குப் பெருமையாக இருந்தது. இதுபோன்று நூறு சன்யாசிகள் இருந்தால் புத்தமதம் பாரெங்கும் கோல் ஓச்சுமே!

“உங்களுக்குப் புகார் நகரைக் கடல் கொள்ளப் போவது முன்னமே தெரியுமா?” என்று கேட்டாள் சுதமதி.

“அறவண அடிகள் முக்காலமும் அறிந்தவர் சுதமதி. அதனால்தான் நம் இருவரையும் அழைத்துக்கொண்டு இங்கே வந்துவிட்டார்.” என்றாள் மாதவி.

“சோழமன்னன் வெண்வேற்கிள்ளியைக் கடிமணம் புரிந்த பீலிவளை தனது நாடான மணிபல்லவத்திலிருந்து தனது குழந்தையை ஒரு நாவாயில் ஏற்றிச் சோழநாடு அனுப்பினாள். ஆனால், அந்தக் குழந்தை புகார் நகரம் வந்து சேராததால் கவலையுற்ற சோழன் அதனைத் தேடும் பணியில் மும்முமரமாகி இந்திரனுக்கு வருடம் தோறும் எடுக்கும் விழாவை எடுக்க மறந்தான்.  விளைவு! கடல்கோள்தான்! இந்திரன் மற்றும் மணிமேகலா தெய்வத்தின் கோபத்திற்கு ஆளாகி முன்பே ஒருமுறை புகாரைக் கடல்கொண்டது உனக்குத் தெரியுமா, மணிமேகலை?” என்ற கேள்வி பிறந்தது அறவண அடிகளிடமிருந்து.

“கேள்விபட்டிருக்கிறோம், ஐயனே!”

“அதேபோல உன் தந்தை கோவலனின் குலத்தில் நெடுங்காலம்முன்பு பிறந்த ஒரு வணிகன் கடலில் பயணம்செய்து வாணிபம்செய்யப் போனான். இந்திரனின் சிங்காதனத்தில் இருக்கும் வெண்கம்பளம் ஆடும் அளவிற்கு தர்மகாரியங்கள் புரிபவன். அவன் சென்ற கப்பல் புயலில் சிக்கித் தவித்து ஏழு நாட்கள் திக்குத்திசை தெரியாது கடலில் தத்தளித்தது.. இரத்தினக் கம்பளத்தில் விழுந்த ஊசி போலானது. இந்திரன் அவன்மேல் இரக்கம்கொண்டு மணிமேகலா தெய்வத்தை ஏவ, அது அவனைப் பாதுகாப்பாகக் கரைசேர்த்தது. உன் தந்தை உனக்கு மணிமேகலை என்று பெயர் வைத்ததுகூடத் தனது குலமுதல்வனை மணிமேகலா தெய்வம் காப்பாற்றியதால்தான். தன் மகள் இந்த பூலோகத்தையே காப்பாற்றப் போகிறாள் என்று அன்று உன் தந்தைக்குத் தெரிய நியாயமில்லை,“ என்று கூறிவிட்டு மணிமேகலையைப் பார்த்துச் சிரித்தார்.

“இந்தப் புகழுரைக்கு நான் ஏற்றவள் அல்ல ஐயா,“ என்று அடக்கத்துடன் பணிந்த மணிமேகலை, “இதே விஷயத்தை எனக்கு மணிமேகலா தெய்வமும் முன்பே கூறி இருப்பதால் எனக்கு வியப்பூட்டவில்லை என்றாலும் எங்களுக்கு எப்போதும் உறுதுணையாக நீங்கள் இருப்பது எங்களது பூர்வ ஜன்மத்தில் நாங்கள் செய்த புண்ணியம். வஞ்சி நகரம் சென்று வந்தேன், ஐயா. வஞ்சியும் புகாரைப்போல நன்கு கட்டமைக்கப்பட்டுள்ள நகரம். சமயவாதிகள் ஏராளமானோரைச் சந்தித்தேன். ஐவகைச் சமயத்தினர் என்னுடன் வாதம்புரிந்தனர். அவர்கள் சமயத்தின்பால் எனக்கு நம்பிக்கை இல்லாததால் அவர்கள் கூறியது என் செவிகளில் புகவில்லை. தருமநெறிகளைப் போதிக்க உங்களைத் தவிர எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. உபதேசித்து அருளவேண்டும்!“ என்று கேட்டாள்.

Image result for manimekalai and aravana adigalஆதியில் சினேந்திரன் என்ற சிறப்புப் பெயருடன் தோன்றிய புத்தபெருமான் அருளிச் சென்ற அளவைகள் இரண்டே இரண்டு ஆகும். அவை பிரத்தியம், கருத்து என்பவை. கண்ணில் காண்பவற்றைப் பிரத்தியம் என்றும்,  பிறர் சொல்லக் கேட்டவற்றைக் கருத்து என்றும் கொள்ளலாம். பெயர், சாதி, குணம் இவற்றைக்கொண்டு ஒரு பொருளை அளக்கும்போது அது பிரயத்தம் எனப்படாது அனுமானம் (கருத்து) என்று அறியப்படும்.

அனுமானங்களில் காரண அனுமாமனம், காரிய அனுமானம், சாமானிய அனுமானம் ஆகிய மூன்றும் பொதுவாகப் பார்க்கும்போது உண்மையறிவதற்கு உதவாமல் பிழை ஏற்படுத்துவதும் உண்டு. கனலும் புகையும்போலக் காரிய அனுமானம் ஒன்றே ஆகும். ஆகம அனுமானம் போன்ற ஏனைய அனுமானங்கள் பிழையாகும். காட்டில் கேட்ட யானையின் பிளிறல் அந்த யானையின் இருப்பிடத்தைக் காட்டாததால் அது பிழையாகும். கரிய மேகங்கள் கண்ட இடத்தில் மழைபொழியும் என்பதில் காரண அனுமானமான கரிய மேகங்கள் வரவால் மழை நிச்சயம் பெய்யும் என்று அடித்துக் கூறமுடியாததால் அது பிழையாகும்.

கருத்தளவை என்று அறியப்படும் அனுமானத்திற்கு மொத்தம் ஐந்து உறுப்புகள். அவை மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு, உபநயம், நிகமனம் ஆகும்.

மேற்கோள் என்பது இந்த மலையில் நெருப்பு உள்ளது என்று கூறுவதாகும். அதற்குக் காரணம் (ஏது) புகை இருப்பதைக் கூறுவது. எடுத்துகாட்டு என்பது புகையிருந்தால் நெருப்பிருக்கும் என்பதை அடுக்களையை எடுத்து காட்டிக் கூறுவதாகும். உபநயம் என்பது இந்த மலையிலும் புகை உண்டு என்று கூறுவதாகும். நிகமனம் என்பது புகை இருப்பதால் நெருப்பு இருக்கிறது என்று உறுதி செய்வது.

எந்தப் பொருள் நெருப்பு இல்லையோ அந்தப் பொருளில் புகையும் இல்லை நீரைப்போல. இப்படிப் பொருளை விளக்கும் மேற்கோளின் மூலம் எதிர்மறையான பொருளை விளக்குவதற்கு வைதன்மிய திட்டாந்தம் என்று பெயர்.

குற்றமில்லாத காரிய ஏதுவின் குணத்தை ஆராய்ந்தால் அது பக்க தன்மவசனம் என்று அறியப்படும். இதனை ஒலி அநித்தம் என்று கூறி  அது எழுப்பப்டுவதால் என்று ஏது கூறும்போது அது பக்க தன்மவசனமாகும்.

எந்த ஒன்று செய்யப்படுகிறதோ அது அநித்தமாகும் மண்குடம்போல. இதனைச் சபக்கத் தொடர்ச்சி என்பார்கள். எந்த ஒன்று பண்ணப்பாடாமல் அதுவே இருக்கிறதோ அது அநித்தம் இல்லாதது அந்த ஆகாயம்போல.இதனை விபக்கத் தொடர்ச்சி என்று கூறுவர்.

அநந்நுவய அனுமானம் என்பதனால் பொருளை அறியும் திறனை இந்த இடத்தில் குடம் இல்லை என்று கூறுவதாகும். இது நல்ல பக்க மொழியாகும். தோன்றாமையால் என்பது தன்மபக்க வசனமாகும். எந்த ஒன்று பளிச்சென்று கண்ணுக்குப் புலனாவதில்லையோ அது பக்கதன்ம வசனமாகும். முயல் கொம்புபோல. எந்த ஒன்று பளிச்சென்று தெரிகிறதோ அது உள்ளங்கை நெல்லிக்கனிபோல என்பது அதற்கேற்ற விபக்க தொடர்ச்சி விளக்கமாகும்..

சாதனமாகக் கூறப்பட்டுள்ள ஏதுக்கள் மேலே சொன்னபடி பொருள்களின் இருப்பைச் சாதிப்பவை. விளைவான புகையே இங்கே விளைவித்த நெருப்பைச் சாதித்தது. எப்படி என்றால் புகை உள்ள இடத்தில் நெருப்பு உண்டு என்ற உடன்பாட்டு நிகழ்ச்சியால் நிறுவப்படும். அந்நுவய அனுமானத்தாலும் அங்கே புகை இல்லை எனவே நெருப்பில்லை என்று நிறுவப்படும். இங்கே புகை என்ற ஏதுதான்  அங்கு இல்லாமலும் நெருப்பைச் சாதித்தது. அது எப்படி என்றால் புகையின் தன்மையாகிய மேல்நோக்கிச் செல்லும் ஊர்த்தச் சாமமும், வளைந்து படரும் தன்மையான கௌடிலச் சாமமும் காரணமான நெருப்பில் தோன்றும் செய்கைகளாகும். மேல்நோக்கிச் சென்று கருமையாகப் படர்வதும் அல்லது  கருமையாகத் திசையெங்கும் பரவியிருப்பதும் காரணமான் நெருப்பை நிறுவுவதற்கான செயல்களாகும். உடன்பாட்டு நிகழ்ச்சிக்குப் பொருளான அநுவயத்தால் பொருண்மை நிறுவப்படுமேயானால் ஒரு உதாரணம்மூலம் விளக்குவோம்.

ஒருவன் கழுதை ஒன்றையும், கணிகை ஒருத்தியையும் ஒன்றாகச் சேர்ந்து பார்க்கிறான். சிலநாள் சென்று அவன் கழுதையை மட்டும் பார்க்கும்போது அங்கே கணிகையும் வந்திருப்பாள்  என்ற அனுமானத்திற்கு வரமுடியுமா? முடியாது. ஏனென்றால் நெருப்பு இல்லாத இடத்தில் புகையில்லை என்று மேற்கோள் காட்ட்டப்படும் அந்த எதிர்மறை உடன்நிகழ்ச்சியாகிய வெதிரேகம் (வியதிரேகம்) பொருளின் இருப்பைச் சாதிக்கும் என்றால் நாய்வால் இல்லாத கழுதையின் பிடரி மயிரைக் கண்டவன் அது நாய்வாலோ அல்லது நரி வாலோ என்று மயங்குகிறான். அங்கு இரண்டுமே இல்லை என்று தெளிகிறான். அவனே வேறொரு இடத்தில் வால் ஒன்றைக் கண்டு இது நாய்வால் இல்லை என்று துணிந்தால் நரிவாலும் இல்லை என்று துணியலாமா? கூடாது. எனவே கருத்தளவைக்கு மற்றவர் கூறும் காரியமும், அந்நுவயமும், வெதிரேகமும் பிழையானவை என்பது தெளிவாகிறது.

கருத்தளவையின் ஐந்து உறுப்புகள் மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு, உபநயம், நிகமனம் என்று முன்பே பார்த்தோம். இவற்றில் கடைசி இரண்டு உறுப்புக்களான உபநயமும், நிகமனமும் பிறமதத்தைச் சேர்ந்த தர்க்கவாதிகளால் கணக்கில் சேர்க்கப்பட்டன. திருஷ்டாந்தம் என்ற எடுத்துக்காட்டில் இவை இரண்டும் அடங்கிவிடுவதால் புத்தசமயத்தில் அவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. பக்கமும், ஏதுவும், திருட்டந்தமும் ஆகிய மூன்றில் குற்றமும் உள்ளன குற்றமில்லாதவையும் உள்ளன.

நல்ல பக்கம் (இங்கே பக்கம் என்றால் மேற்கோள் என்பதை நினைவில் கொள்க) என்பது  வெளிப்படையாகத் தெரியும் தன்மையைத் தன்னிடத்தில் கொண்டது. இவ்வாறு வெளிப்படையாகத் தோன்றும் சாத்தியத் தன்மத் திறம் வேறு ஒரு பொருளுடனும் மாறுபடும் வேறுபாட்டையும் தன்னிடம் கொண்டது மேற்கோளின் தன்மையாகும் என்று நிறுவவேண்டும். சத்தம் நித்தம் என்றோ அல்லது சத்தம் அநித்தம் என்றோ ஒன்றை மேற்கோள் காட்டி நிறுவவேண்டும். ஏது என்ற உறுப்பு திருட்டாந்தங்களால் நிறுவப்படுவது.

நல்ல பக்கத்துக்கு (மேற்கோளுக்கு) பக்க தன்மவசனமாய் விளங்கும் நல்ல ஏது மூன்றாய்  விளங்கும். சொல்லப்பட்ட பக்கப் பொருளில் நிலைத்து நிற்கும் தன்மை ஒன்று; சபக்கப் பொருளின் கண் இருத்தல் இரண்டு; பக்கத்தின் மீட்சியான விபக்கப் பொருளில் சுத்தமாக இல்லை என்ற மூன்று என்று நல்லேது மூன்றாக விளங்குகிறது.

எழுப்பப்படுவதால் ஒலி நிலையற்றது என்ற பக்கத் தன்மவசனத்தைத் தொடர்ந்து, செய்யப்படுவதால் என்ற ஒன்றையே பக்கப்பொருளாக நிறுத்தி பிறபொருள்களின் நிலையற்ற தன்மையைச் சாதித்தல் சபக்கத் தொடர்ச்சியாகும்.

சாதிக்கப்பட்ட நிலையற்றப் பொருள்களுக்கு மறுதலையாகிய (opposite)  நிலையான பொருளைப் பக்கப்பொருளாகக் (மேற்கோள்) கொண்டு  செய்யப்படாதனவற்றை மறுதலை ஏது(காரணம்)வாக்கி சரியான எடுத்துக்காட்டோடு சாதிக்கும் தன்மையால் விபக்கத் தொடர்ச்சி எனப்படுகிறது. இந்த விபக்க்கத் தொடர்ச்சி பக்கத் தன்மவசனத்தின் மறுதலையாவதால் மீட்சிமொழி எனவும் கூறப்படும். இதுவே வெதிரேக வசனம் எனப்படும்.

குற்றமுடைய பக்கம் குற்றமுடைய ஏது, குற்றமுடைய திட்டந்தமும் (எடுத்துக்காட்டும்) முறையே பக்கப்போலி, ஏதுபோலி, திருட்டாந்தப்போலி என்று வழங்கப்படும். இந்த மூன்றில் பக்கப்போலி என்பது ஒன்பது வகைப்படும். அவை பிரத்தியக்க விருத்தம், அனுமான விருத்தம், சுவசன விருத்தம், உலோக விருத்தம், ஆகம விருத்தம், அப்பிரசித்தவிசேடம், அப்பிரசித்த விசேடி, அப்பிரசித்தி உபயம், அப்பிரசித்தி சம்பந்தம் ஆகியவையாகும்.

மேலேசொன்ன பக்கப்போலியின் ஒன்பது வகைகளுள் முதலாவதான பிரத்தியக்க விருத்தம் என்பது கண் முதலிய பொறிகளால் தெளிவாகக் கண்டுணர்ந்து பின் அதற்கு நேர்மாறானதைக்கொண்டு கூறுவதாகும்.. இதற்கு உதாரணம் சத்தம் (ஒலி) காதுக்குப் புலப்படுவது கிடையாது என்று கூறுவதாகும்.

அனுமான விருத்தம் கருத்தளவையால் நிறுவப்பட்ட பொருள் ஒன்றை முற்றிலும் வேறு ஒரு பொருளாகக் கூறுவதாகும். அநித்தியமான குடத்தை நித்தியமானது என்று கூறுவது இதற்கு உதாரணம்.

சுவசன விருத்தம் என்பது தான்  சொல்லும்  வார்த்தைகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் கூறுவதாகும். உதாரணமாக “என் தாய் மலடி“ என்று கூறுவதைப்போல.

உலக விருத்தம் எனப்படும் போலி உலகவழக்கிற்கு மாறான ஒன்றைக் கூறுவது. இரவு நேரத்தில் வானில் அதிகப் பிரகாசமாக இருக்கும் பொருளை மதி என்று வழங்குவது உலக வழக்கு. மதி என்ற சொல் சந்திரனைக் குறிக்கவில்லை என்று கூறுவதைப்போல.

ஆகம விருத்தம் எனப்படும் போலியானது ஒருவன் தனது சமய நூல்கள் நிறுவிய ஒன்றிற்கு மாறாகக் கூறுவது. ஒரு வைசேடிக சமயம் சத்தத்தை அநித்தம் என்று கொள்ளும்.. அதற்கு மாறாக ஒரு வைசேடிகவாதி சத்தம் நிலையானது என்று வாதிடுவது ஆகம விருத்தத்திற்கு உதாரணம்.

அப்பிரசித்த விசேடணம் என்ற போலியை இப்படி விளக்குவோம்.  இது கொஞ்சம் சுற்றி வளைத்துப் புரிந்து கொள்ளவேண்டிய கோட்பாடு. ஒரு சபையில் வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன. ஒரு பொருளை வாதிப்பதற்காக உள்ளவன் வாதி. அதை மறுப்பவன் பிரதிவாதி என்னும் பட்சத்தில் ஒரு வாதிக்குத் தான் வாதத்தில் நிறுவ உள்ள பொருள் பிரதிவாதி அறியாமல் போவது . பொதுவாக ஒரு பௌத்தன் ஒலி அநித்தம் என்பான். பிரதிவாதி ஒரு சாங்கியன் என்றால் சாங்கியன் ஒலி நித்தம் என்ற கொள்கையை உடையவன். எனவே நிறுவப்படவேண்டிய பொருளான அநித்தத்துவம் அப்பிரசித்தமாய்க் குற்றம் என்றாகும். எனவே அப்பிரசித்தம் என்பது பிரதிவாதிக்கு தான் நிறுவவேண்டிய பொருளின் உறுதித் தன்மையைத் தெளிவாகப் புரிவிக்காமல் விளக்குவதாகும்.

அடுத்து அப்பிரசித்த  உபயம் என்ற போலியை விளக்குவோம். வாதி தனது வாதத்தை எடுத்துவைக்கும்போது பிரதிவாதிக்கு வாதி கூற்றும் பொருளும், அதற்கு மேற்கோள் காட்டப்படும் எடுத்துக்காட்டும் விளங்காமல் போவதாகும். இங்கே வாதி ஒரு வைசேடிகன். பிரதிவாதி ஒரு பௌத்தன். வைசேஷிகன் வாதிடும்போது  இன்பம் முதலிய பொருள்களுக்கெல்லாம் காரணமாக விளங்குவது ஆன்மா (உயிர்) என்று வாதிடுகிறான். ஆனால் பௌத்தர்கள் ஆன்மா என்பதைத் தன்மி என்றும், சுகம் முதலியவற்றை அதன் தன்மம் என்று பௌத்தர்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ளவதில்லை. எனவே தன்மியாகிய விசேடியும், தன்மைமாகிய விசேடணமும் இங்கே பிழையாகும்.

பிழையான ஏதுவை இப்படி  விளக்கலாம் . பிழையான ஏது மூன்று வகைப்படும். அவை அசித்தம், அநைகாந்திகம், விருத்தம் என்ற மூன்றாகும். இவற்றுள் அசித்தம் மேலும் நான்கு உட்பிரிவுகளாகப் பிரிந்து உபயாசித்தம், அன்னியதா சித்தம், சித்தா சித்தம், ஆசிரயாசித்தம் எனப்படும். இவற்றுள் உபாயசித்தம் என்னும் சாதன ஏது மேற்கோளை நிறுவுவதற்காகக் கூறப்பட்ட ஏதுவாகும்.வாதி  பிரதிவாதி இருவருக்கும் ஏதுவாக ஆகாமல்  பயனில்லாத சொல்லாகப் போய்விடும் . உதாரணமாக ஒலி கண்களுக்குத் தெரிகிறது. எனவே அது  நிலையானது அல்ல என்று கூறுவதாகும். இப்படி ஒரு உதாரணத்தை வாதி பிரதிவாதி இருவருமே பயன்படுத்த முடியாது.

வாதி  வாதம் செய்யம்போது ஒரு ஏதுவாய் முன்வைக்கிறான். தான் முன்வைக்கும் ஏது பிரதிவாதிக்கும் ஏதுவாக  அமையும் என்று எண்ணி வாதி முன்வைத்த ஏது அவ்வாறு ஆகாமல் போவது அன்னியதாசித்தமாகும். ஒரு பௌத்தன் தனக்குப் பிரதிவாதியாக விளங்கும் சாங்கியன் ஒருவனிடம் ஒலி அநித்தம் ஏன் எனில் அது செயற்கையாக எழுப்பப்படுகிறது என்று கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம் . சாங்கியனைப் பொறுத்தவரை மூலக்கூறிலிருந்தே ஒலி முதலியன தோன்றும் என்ற நம்பிக்கை கொண்டவன். அவனிடம் ஒலி செயலினால் தோன்றுவது என்று கூறினால் அந்த ஏது அவனுக்கு ஏற்புடையதாக ஆகாமல் போய்விடும்.

சித்தா சித்தம் என்னும் ஏது போலி என்னவென்றால் ஒரு வாதி தான் ஒரு பொருளை நிறுவுவதற்காக எடுத்துக்கொண்ட ஏதுவின் மீது தானே ஐயம் கொண்ட வேளையில் அதனை வைத்துப் பொருளை நிறுவமுற்படுவது. பனிப்புகை  வரும்போது அது பனிப் புகைதான என்று உறுதி செய்து கொள்ளாமல் புகை இருப்பதால் அங்கு நெருப்பு உள்ளது என்று நிறுவ முற்படுவது இதற்கு உதாரணம்.

ஆசிரயாசித்தம் என்பதை இவ்வாறு பார்க்கலாம். ஏது எப்போதும் சரியான மேற்கோளுடன் எடுத்துரைக்கப்படவேண்டும் அப்போதுதான் பொருளை நிறுவ முடியும். வாதி தன்னுடன் மாறுபடும் பிரதிவாதியை வாதத்தில் வெற்றி கொள்ள எண்ணும்போது பொருத்தமான மேற்கோள் இல்லாத ஏதுவைக் கூறி நிறுவ முற்படுவதாகும். ஆகாயம் ஒலியுடையது என்பதால் ஆகாயம் பொருளாகும் என்று ஆகாயத்தைப் பொருளாக ஏற்றுக் கொள்ளாத ஒரு பிரதிவாதியிடம் வாதி  சாதிக்க நினைப்பது இதற்கு உதாரணமாகும்.

இதுவரை அசித்த போலியின்  வகைகளைப் பார்த்தோம். இனி அநைககாந்திகம்  என்ற ஏது போலியின் வகைகளைப் பார்ப்போம். இந்த அநைககாந்திகம்   ஏது போலி சாதாரண ஏது போலி, அசாதாரண ஏதுபோலி, சபக்க ஏகதேச விருத்தி விபக்க வியாபி ஏதுபோலி, விபக்க ஏகதேச விருத்தி சபைக்க வியாபி ஏதுபோலி, உபய ஏகதேச விருத்தி ஏதுபோலி,  விருத்தி வியபசாரி  ஏதுபோலி என்று ஆறுவகைப்படும்.

அநைககாந்திக சாதாரண ஏது போலி என்பது வாதி சாதிப்பதற்கு எடுத்துக் கொண்ட மேற்கோளுக்கும், பிரதிவாதியின் மேற்கோளுக்கும் பொதுவாக இருப்பதாகும். சத்தம் அநித்தம் என்பதை நிறுவ அறியப்படுவதால் என்று கூறுவது. அறியப்படுதல் என்ற ஏது நித்தம் அநித்தம் இரண்டிற்கும் பொதுவான ஏது . கடம் போல் அநித்தம் என்றும் அறியலாம் ஆகாயம் போல் நித்தம் என்றும் அறியலாம் .

அசாதாரணம் என்னும் அநைககாந்திக ஏது போலியானது தன் மேற்கோளுக்கு என்று ஏற்பட்ட ஏதுவானது தன மேற்கோளுக்கும்  மறுதலை மேற்கோளுக்கும் செல்லாததாக ஆகும்போது அசாதாரண ஏது எனப்படும். ஒரு வாதி ஒலி நிலையானது ஏன் எனில் அது கேட்கப்படும் பொருள் என்பதால் என்று கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம். பிரதிவாதிக்கு  இப்படி ஐயம் எழலாம். கேட்கப்படுவதால் ஒலி நித்தம் என்றால் வேறு  என்ன என்ன பொருள்கள் கேட்கப்படும் என்ற ஐயம் அது.

அடுத்து சபக்கைக தேசவிருத்தி விபக்க வியாபி எனப்படும் அனைககாந்தி ஏது போலியைப் பற்றிப் பார்ப்போம். சபக்கப் பொருட்கள் ஏதாவது ஒன்றில் பொருந்தி ஏனைய மறுதலை விபக்கப் பொருட்கள் அனைத்திலும் பொருந்தி வருவது இந்தப் போலியாகும். இவ்வாறு  விளக்கலாம். சத்தம் செயலிடைத் தோன்றாது ஏன் என்றால் அது அநித்தம் என்று வாதி தனது ஏதுவாய் முன்வைக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். ஒலி மின்னும்போது ஆகாயத்திலிருந்து கேட்கிறது. இங்கே மின்னல் செய்கை. ஒலி அதிலிருந்து பிறக்கிறது. ஆனால் ஆகாயம் நித்தம் . எனவே இது பொருந்தாது. மின்னலிடத்தே காணப்பட்டு  ஆகாயத்தின்கண் காணாததால் இது சபக்கைக தேசவிருத்தி விபக்க வியாபி ஏது போலி  எனப்படுகிறது. இந்தப் போலி குடம் செயலில் அழிந்து  பிறப்பது போல் தோன்றுமோ அல்லது மின் போல் அழிந்து செயலில் தோன்றாதோ என்ற ஐயத்தையும் அளிக்கிறது.

அடுத்து சென்ற போலியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட போலி இந்த விபக்கைக தேச விருத்த சபக்க வியாபி என்னும் ஏது போலி. மேற்கோளை நிறுவுவதற்காக எடுத்துக் கூறப்படும் ஏதுவானது மறுதலை மேற்கோளின் ஓரிடத்தில் மட்டும்  காணப்பட்டுச் சபைக்க மேற்கோளின் அனைத்துப் பக்கங்களிலும் காணப்படும் போலியாகும். ஒலி செயலின்கண் தோன்றும் என்று கூறுவதற்கு அது நிலையற்றது என்பதால் என்று என்ற ஏதுவை முன்வைக்கும்போது எதிர்மறை மேற்கோளாகிய ஆகாயம் மின்னல் ஆகியவற்றில் மின்னலின் கண் மட்டும் பொருந்துவதும், கடம் போன்ற பொருள்களின் அனைத்திலும் பொருந்தி வரும் என்பதால் மின்னல்போல நித்த பொருள் செயலின் கண் தோன்றாமல் போய்விடுமோ என்றும், கடம் போன்ற அநித்த பொருள் செயலிடைத் தோன்றுமோ என்று மயங்குதல் காரணமாக அது விபக்கைக தேச விருத்த சபக்க வியாபி என்னும் ஏது போலியாகும்.

அடுத்து  உபயைக தேச விருத்தி ஏது போலியைப் பார்ப்போம். சுபக்கம் எனப்படும் தனது பக்கத்திலும், விபக்கம் எனப்படும் எதிர்மறை பக்கத்திலும் ஒவ்வொன்றிலும் ஒரே ஓர் இடத்தில் மட்டும் பொருந்தி வருவது இந்தப் போலியாகும். ஒலி நிலையானது ஏன் என்றால் அது உருவமில்லாதது என்று கூறும்போது நிலைத்திருத்தல் என்பதற்குத் தன் பக்கமான ஆகாயம், பரமாணு ஆகிய இரண்டில் மூர்த்தமாகிய பரமாணுவிற்குப் பொருந்தாமல் உள்ளது. இனி எதிர்மறைப் பக்கத்தில் கடம் இன்பம் இரண்டு மேற்கோள்களை எடுத்துக் கொள்வோம். சுகம் நிலையற்றது ஏன் எனில் அது உருவமற்றது என்று கூறும்போது அது உருவமற்ற சுகத்திற்குப் பொருந்தி வந்து உருவமுடைய குடத்திற்குப் பொருந்தாமல் போய்விடுகிறது. இவ்வாறு சபக்க விபக்கங்களில் ஒவ்வொரு இடத்தில்  பொருந்தி வருவது முறையன்று. ஏன் எனில் உருவமற்ற ஆகாயத்தைப்போல நிலைத்து இருக்கும் தன்மையைக் காட்டுவதா? அல்லது உருவமற்ற இன்பத்தைப்போல நிலையற்று இருக்கும் தன்மையைக் காட்டுவதா என்று ஐயம் நேரிடும்.

அடுத்து விருத்த வியபிசாரி என்னும் அநைககாந்திக ஏது போலியைப் பார்ப்போம். ஒரு வாதி தான் நிரூபிக்கவேண்டிய பொருளுக்கு எடுத்துக்காட்டாக ஓர் ஏதுவை முன்வைக்கும்போது அது நன்கு திருத்தப்பட்ட ஏதுவாக இருக்கவேண்டும். அல்லாமல் திருத்தப்படாத ஏதுவாக இருந்தால் அது தானே முன்வந்து பிரதிவாதிக்கு மாறுபட்ட ஏதுவாய் எடுத்துக் கூறுவதற்கு வகை வைத்துவிடும். ஒலி நிலையானது என்பதனை கூறுவதற்கு அது செயலின்கண் பிறப்பதால் என்று நிறுவ வரும் வாதி அதற்கு ஏதுவாகக் குடம் முதலிய தெரிந்த ஏதுக்களைக் கூறாமல் சத்தம் நித்தமுடையது ஏன் எனில் அது கேட்கப்படுவதால் என ஏது கூறி ஒலித்தன்மைபோல என்று கூறுகிறான் என்று வைத்துக் கொள்வோம் .ஒலித்தன்மை என்பது வாதியின் சபக்கத்திற்கு மட்டும் பொருந்தும். எதிர்மறை பக்கத்திற்குப் பொருந்தாது.  இத்தகைய போலி விருத்த வியபிசாரி என்னும் அநைககாந்திக ஏது போலி எனப்படும்.

இனி  விருத்தம் என்ற போலியின்  வைகைகளைக் காணலாம். அவை தன்மச் சொரூப விபரீத சாதனம், தன்மவிசேட விபரீத சாதனம், தன்மி சொரூப விபரீத சாதனம், தன்மி விசேட விபரீத சாதனம் என்ற நான்கு வகையாகும்.

தன்ம சொரூப விபரீத போலியைப் பற்றிப் பார்ப்போம். ஒரு வாதி தான் நிரூபிக்க எடுத்துக் கொண்ட ஏதுவானது தான் நிறுவவேண்டிய பொருளின் சிறப்புத் தன்மைக்கு ஊறு விளைவிக்கும் என்றால் அது தன்ம சொரூப விபரீத போலியாகும். ஒலி நிலையானது என்று கூறவரும் வாதி அதற்கு ஏதுவாகப் செய்யப்படுவதால் என்று கூறுகிறான் என்றால் செய்யப்படுவது அனைத்தும் அநித்தம் என்பதால் வாதி எடுத்துக் கொண்ட போலி தன்மசொரூபவிபரீத போலி  என்றாயிற்று.

தன்ம விசேட விபரீத சாதனம் என்ற ஏதுபோலியானது நிறுவப்படவேண்டிய பொருளின் விசேடத் தன்மை கெடும்வண்ணம் நிரூபிப்பதாகும். இதனைக்  கொஞ்சம்  விரிவாக  விளக்குவோம். பொருள்களை  அறிவதற்கு அல்லது  உணர்வதற்கு நமக்குக் கண் முதலிய ஐம்புலன்கள் உள்ளன. இந்த ஐம்புலன்களும் ஆத்மாவிற்குப்  பயன்படும்  வகையில் தொக்கு நிற்றலால் அதாவது சேர்ந்து நிற்றலால் என்ற ஏதுவைக் குறிப்பிட்டு  சயன ஆசனங்களைப்போல என்ற எடுத்துக்காட்டுடன் கூறுவோம். சயன ஆசனங்கள் தமக்குப் பயன் படாமல் பிறருக்குப் பயன்படும் தன்மை உடையவை. சந்தனம்போலப் பிறருக்கு மணத்தல், குங்கிலியம்போலப் பிறருக்கு  வாசனை  அளித்தால் என்ற உதாரணங்களை நினைவு கொள்ளுவோம். எவ்வாறு கண் முதலிய கருவிகள் தமக்குப் பயன்படாமல் ஆன்மாவிற்குப் பயன்படுகிறது தமக்குப் பயன்படாமல் சயன ஆசனங்கள் பிறர்க்குப் பயன்படுவதைப்போல என்று கூறும்போது கண் முதலிய பொறிகள் சயன ஆசனத்திற்கும், ஆன்மா சயன ஆசனத்தைப் பயன் படுத்தும் புருஷனுக்கும் எடுத்துக் காட்டாகிறது. ஆன்மா அரூபன். ஆனால் இங்கே எடுத்துகாட்டுக் கூறப்படும் புருஷன் உருவமுடையவன்.ஆன்மா அரூபி என்பது சாங்கியனின் விசேடக்கொள்கை. எனவே அந்தச் சிறப்பு இயல்பைக் கெடுக்கும்வண்ணம் அமைந்துள்ளதால் இது தன்ம விசேட விபரீத சாதன ஏதுபோலி என்றழைக்கப்படுகிறது.

அடுத்து தன்மிச் சொரூப விபரீத சாதனம் என்ற விருத்தவேது போலி குறித்துப் பார்ப்போம். தன்மி என்றால் சாதிக்கப்படவேண்டிய பொருள் என்பதை முதலில் நினைவில் கொள்வோம். ஒரு பொருளைச் சாதிக்க வருகின்ற ஏதுவே அந்தப் பொருளின் இயல்பை வேறுபடுத்திக் காட்டுவது தன்மிச் சொரூப விபரீத சாதனம் என்ற விருத்தவேது போலியாகும். இதையும் சற்று விளக்கமாகப் பார்ப்போம். ஒருவாதி பாவம் என்றால் என்ன என்று சாதிக்க  வருகிறான் என்று வைத்துக் கொள்ளலாம். பாவம்(bhaavam)  என்பது இருப்பது. அபாவம் என்பது இல்லாதது பாவம் என்பது பொருளுமன்று, தொழிலுமன்று குணமுமன்று ஏன் என்றால் எல்லாப் பொருள், தொழில், குணம் ஆகியவற்றிலுள்ள உண்மைத் தன்மைக்கு மாறாகப் பொதுவான உண்மைத்தன்மை இருப்பதால் சாமானியமும் விசேடமும்போல என்று ஒரு வைசேடிகவாதி தனது வாதத்தை முன்வைக்கிறான் என்னும்போது சாமானியமும், விசேஷமும் அல்லாது  வேறு ஒரு பொதுத்தன்மை சாதிக்கப்படும் பக்கத் தன்மியாகிய பாவத்திற்குக் கிடையாது என்பதால் உண்மை என்று  நிறுவப்படவேண்டிய பொருள் வேறு ஏது இல்லாமல் அபாவம் என்று தன்மியின் இயல்பைக் கெடுப்பதால் இது தன்மிச் சொரூப விபரீத சாதனம் என்ற விருத்தவேது போலி என்றாயிற்று.

அடுத்து தன்மி விசேட விபரீத சாதனம் என்ற விருத்தவேது போலி குறித்துப் பார்ப்போம். இப்போது ஓரளவுக்குப்  பெயரிலிருந்தே அதன் அர்த்தத்தை  அறிந்துகொள்ளும் தன்மைக்கு  வந்திருக்கிறோம். தன்மி விசேட விபரீத சாதனம் என்ற விருத்தேவேது போலி தன்மியின் சிறப்பு இயல்பான பாவத்தை அபாவமாக சாதிப்பது.(பொருளின் இருத்தலை இன்மையாக சாதிப்பது) போன விளக்கத்தில் கூறப்பட்ட ஏதுவையே எடுத்துக் கொள்வோம். இந்த ஏதுவைக்கொண்டு வாதம் செய்யும் கர்த்தாவான வாதியின் தொழிலும்,  குணமும் அதனை விருத்தமாக்கியது தன்மியின் விசெடத்தைக் கெடுத்ததால் இது தன்மி விசேட விபரீத சாதனம் என்ற விருத்தவேது போலியாகும்.

அடுத்தப் பிரிவான தீய எடுத்துக்காட்டு  எனப்படும் திட்டாந்த (த்ருஷ்ட்டாந்த) போலியின் வகைகளைப் பார்ப்போம். அவை சாதன்மிய திட்டாந்தப் போலி எனவும், வைதன்மின் திட்டாந்தப் போலி என்றும் இரண்டு வகைப்படும். இவற்றுள் சாதன்மிய திட்டாந்தப் போலி என்பது சாதன தன்ம விகலம் சாத்திய தன்ம விகலம் உபய தன்ம விகலம் அநந்நுவயம், விபரீதாந்துவயம் என்று ஐந்து உட்பிரிவுகளைக் கொண்டது.  வைதன்மின் திட்டாந்தப் போலி எனப்படுவது சாத்தியா வியாவிருத்தி  என்றும், சாதனா வியாவிருத்தி யென்றும்,உபயா வியாவிருத்தியென்றும் அவ்வெதிரேகமென்றும், விபரீத வெதிரேக மென்றும் ஐந்து வகையான  உட்பிரிவுகளைக் கொண்டது.

இவற்றுள் சாதன தன்ம விகலம் என்னும் திட்டாந்த போலி குறித்துப் பார்ப்போம். திட்டாந்தத்தில் (உதாரணத்தில்) வாதி கூறும் ஏதுவாகிய (மேற்கோள்) சாதனம் பொருந்தாமல் ஒழிவது சாதனத் தன்ம விகலம் என்னும் திட்டாந்தப் போலியாகும்.

ஒலி நிலையானது அருவமானது என்பதால் என்று வாதி பக்கவசனம் (மேற்கோள் கூறுதல்), ஏது  இரண்டையும் கூறி எவையெல்லாம் அருவமோ அவையெல்லாம் நிலையானது என்று கூறிவிட்டு, இதற்கு உதாரணம் (திட்டாந்தம்) பரமாணுவில்  காணப்படுகிறது என்று வாதிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பரமாணு நிலையானது, அதே நேரம் உருவமுடையது, எனவே வாதி சாதிக்க நினைத்த தன்மைமாகிய நிலையானது என்பது பொருந்தி  வருகிறது. என்றாலும் ஏதுவில் கூறப்பட்ட அருவத்தன்மை பரமகாணுவிற்குப் பொருந்தி  வரவில்லை என்பதால் சாதன தன்ம விகலாம் என்னும் திட்டாந்தப் போலி எனப்படும்.

அடுத்து சாத்திய தன்ம விகாலம் என்னும் திட்டாந்தப் போலி குறித்துப் பார்ப்போம். வாதி தன்னுடைய பக்க வசனத்தை (தான் கூற வந்த விஷயத்தை) ஏதுவோடு (ஏது-காரணம்) கூறி சாதிக்க நினைக்கும்போது, தான் எடுத்துக் கொண்ட திட்டாந்தத்தின்கண் எந்தப் பொருளைச் சாதிக்க நினைத்தானோ அந்தப் பொருளுக்குத் துணியும் தன்மம் (தன்மி) இல்லாது போவது சாத்திய தன்ம விகலம் என்னும் திட்டாந்தப் போலியாகும்.

ஒலி நிலையானது அருவமானது என்பதால் என்ற மேற்கோளுடன் வாதி ஒருவன் வாதிக்க முன் வரும்போது, எவையெல்லாம் அருவமோ அவையெல்லாம் நிலையானது என்று ஏதுவைக் கூறி புத்திபோல என்ற திட்டாந்தத்தை முன்வைக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அருவமானது என்ற அளவில் புத்தி என்ற திட்டாந்தம் அவன் சொன்ன ஏதுவுடன் பொருந்துகிறது. ஆனால் சாதிக்க  நினைத்த ஒலி நிலையானது அருவமானதால் என்ற வாக்கியமானது அதன் பக்க தன்மி பிழையுறும் வண்ணம் புத்தி என்ற உதாரணம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது, புத்தி  மழுங்கும் தன்மை உடையது என்பதால்.

அடுத்து உபயதன்ம விகலம் என்னும் திட்டாந்தப் போலி குறித்துப் பார்ப்போம். வாதி தான் துணிய நினைக்கும் சபக்க வசனத்தில் எடுத்துக் காட்டிய திட்டாந்தத்தில் (உதாரணத்தில்)   சாத்தியம், சாதனம் இரண்டும் குறைந்து காணப்படுவது உபயதன்ம விகலம் என்னும் திட்டாந்தப் போலி என்னும் போலியாகும். அந்தப் போலி இரண்டு வகைப்படும்.

  1. சன்னாவுள்ள உபயதன்ம விகலம்.
  2. அசன்னாவுள்ள உபயதன்ம விகலம்.

அடுத்து சன்னாவுள்ள உபயதன்ம விகலம் குறித்துப்  பார்ப்போம். உபய தன்மம் என்றால் உபயதர்மம் ஆகும். இந்த உபய தர்மம் சாத்திய உபயதர்மம், மற்றும் சாதன உபயதர்மம் என்று இரண்டு வகைப்படும். தூய தமிழில் சாத்திய தன்மம், சாதன தன்மம் என்று வழங்கப்படுகிறது. விகலம் என்பது இவ்விரண்டும் ஒழிந்து போவதாகும். சத், அசத் என்ற பேதத்தால் இவை இரண்டு வகைப்படும். அவை சதுபயதர்ம விகல்பம், அசதுபயதர்ம விகல்பம் என்ற இரண்டு. இவையே தூய தமிழில் சன்னாவுள்ள உபயதன்ம விக்கலாம் மற்றும் சன்னாயுள்ள உபயதன்ம விகல்பம் என்று அழைக்கப்படுகின்றன.

சன்னாவுள்ள உபயதன்ம விகலம் என்னும் திட்டாந்தப் போலி என்பது திட்டாந்தமாகக் காட்டப்பட்ட உள்பொருளில் சாத்திய தர்மமும், சாதன தர்மமும் பொருந்தாமல் போகும்போது அது  மேற்கண்ட திட்டாந்த போலியாகிறது. சத்தம் அதாவது ஒலி நிலையானது பக்க வசனமும், அருவமானதால் என்ற பக்க தன்மை வசனமும், எவை எவை அருவமோ அவை நிலையானது என்ற வியாத்தி வசனமும் கூறும்போது திட்டாந்தமாகக் குடம்போல என்று கூறினால் சாத்திய தன்மமான நிலைத்தன்மையும், சாதனமாய் இருக்கும் அருவமும் பிழையாகும்.

அசன்னாவுள்ள உபயதன்ம போலி குறித்துப் பார்ப்போம். இதுவும் திட்டந்தப் போலியாகும். வாதி ஒருவன் பிரதிவாதிக்கு இல்லா பொருளைச் சாதிக்க முனையும்போது சாத்திய தன்மமும், சாதன தன்மமும் பிழையாகப் போவது அசன்னாவுள்ள உபயதன்ம திருட்டாந்தப் போலியாகும். ஒலி அநித்தம் என்ற சாத்திய வசனம் கூறும்போது உருவமுடையாதால் என்ற பக்க வசனம் கூறி, எவையெல்லாம் உருவமுடையவையோ அவையெல்லாம் அநித்தம் என்ற வியாத்தி  வசனமும் கூறி ஆகாயம்போல என்று ஆகாயத்தைத் திருட்டாந்தமாகக் கூறுகிறான். மேற்கண்ட கூற்றில் சாத்திய தன்மமாகிய நிலையற்ற தன்மையும், சாதன தண்மமாகிய உருவமும் ஆகாயம் என்ற திட்டாந்தத்தின் காரணமாக(ஏன் எனில் ஆகாயம் அருவமானது மேலும் நிலையானது) இரண்டும் பிழையாகிப் போனது. எனவே ஆகாயம்  நிலையானது இல்லாதது என்று நம்பும் வாதிக்கு அதனை மூர்த்தத்திற்கும், நிலையற்றத் தனமைக்கும் திட்டாந்தமாகக் கூறும்போது பிழையாகும்.

அன்னுவயம் என்ற சொல்லிற்கு ஒரு முறையான அகராதி உடன் நிகழ்ச்சி என்றே பொருள் கூறுகிறது.. நெருப்பு என்றதும் அதன் உடன்நிகழ்ச்சி புகையாகும். புகை இங்கு சாதிக்க வந்த நெருப்பின் அன்னுவயமாகும். அனன்னுவயம் என்றால் அன்னுவயம் அல்லாதது  என்று பொருள். உடன் நிகழ்ச்சி இல்லை  என்று வைத்துக் கொள்ளலாம்.

அனன்னுவயம் என்ற திருட்டாந்தப் போலியைக் குறித்துப் பார்ப்போம்.  அநன்னுவயம் என்னும் திருட்டாந்தப் போலி சாதன சாத்தியங்களின் உடன் நிகழ்ச்சியைச் சொல்லிக் காட்டாமல்  இரண்டும் பொருந்தியிருக்கக் கூடிய திருட்டாந்தத்தை (உதாரணம்) மட்டும் கூறுவது. சத்தம் அநித்தம் என்பது சாத்திய வசனம். அதாவது ஒலி நிலையற்றது என்பதனைக் கூறி  அதனைச் சாதிக்கவேண்டும் . எனவே இது சாத்திய வசனம். இதற்க்குச் சாதன (ஏது-காரணம்) வசனமும்வேண்டுமல்லவா? எனவே செய்யப்படுவதால் (செய்யப்படுதல் என்பது மனிதச் செயல்) என்னும் சாதன வசனமும் சொல்லுவதாக வைத்துக் கொள்வோம்.ஆனால் எவையெல்லாம் செய்யப்படுகிறதோ அவையெல்லாம் அநித்தம் என்ற வியாத்தி வசனம் சொல்லாமல் குடத்தின்கண் சாதன சாத்திய தன்மைகள் கானப்படுவதென்று கூறினால் உடன் நிகழ்ச்சியாகிய வியாத்தி தெரியாமல் போய்விடுவதால் இது அநன்னுவையம் என்னும் திட்டாந்தப் போலியாகும். ஒலி அநித்தம் குடம் போலே என்று மொட்டையாகக் கூறினால் செய்யப்படுவதால்  குடம் எப்படி அநித்தாமோ அதைப்போல ஒலியும் செய்யப்படுவதால் அநித்தம் உடன் நிகழ்ச்சியான செய்யப்படுவது கூறப்படாததால் இது அநன்னுவயம் என்னும் திட்டந்தப் போலியாகும்.

அடுத்து வைதன்மிய திட்டாந்தத்து சாத்தியா வியாவிருத்தி  என்னும் திட்டாந்தப் போலி  எதுவென்று பார்ப்போம். இவை எல்லாமே உதாரணங்களின்  மூலம்  பிழை எவ்வாறு நேருகிறது என்பதை விளக்கும் பகுதிகளாகும். இந்தப் போலியைப் புரிந்து கொள்வதற்கு முன்னால் இதனை விளக்கச் சீத்தலை சாத்தனார் கூறும் வாக்கியத்தைப் பார்ப்போம். ஒலி நிலையானது அருவமாக இருப்பதால் ; எவையெல்லாம் நிலையானவையில்லையோ அவையெல்லாம் அருவமுமில்லை பரமாணுவைப்போல என்ற வைதன்மிய திட்டாந்தம் காட்டுகிறார். இதில் எவையெல்லாம் உருவமின்மை உள்ளனவோ அவையெல்லாம் நித்தம் அதாவது நிலையானது என்பது நேர்மறை கூற்று. இதற்கு எதிர்மறை கூற்று இப்படி அமையும். எவையெல்லாம் நிலையானது இல்லையோ அவையெல்லாம் அருவமின்மை உடையவையும் அல்ல என்பதாகும். குடம் என்பதை எடுத்துக் கொள்வோம். அது நிலையானது இல்லை. எனவே அது அருவமின்மை உடையது அன்று. அதாவது உருவமுடையது. (கொஞ்சம் மூக்கை நேராகத் தொடுவதற்குப் பதில் கரத்தால் சிரத்தைச் சுற்றித் தொடும் விதம்) . சாத்தியதன்மம் அதாவது எதனை நிறுவவேண்டுமோ அது இங்கே நிலையானது என்பது சாத்தியதர்மம். அதற்கான மேற்கோள் (எடுத்துகாட்டு) துணைக் காரணம் இங்கே சாதன தர்மம். அருவமின்மை இங்கே சாதன தர்மம். ஆனால் இங்கே பரமாணுவைப்போல என்ற உதாரணம் பற்றி ஆராய்வோம். நிறுவப்படவேண்டிய  ஒலியின் தர்மம் நிலையானது . இதன் மீட்சி அதாவது எதிர்மறை கூற்று நிலையற்ற தன்மை. அதேபோலச் சாதனமாகிய உருவமற்றது என்பதன் மீட்சியின் எதிர்மறை கூற்று அருவமற்ற தன்மையற்றது என்பதாகும். இதனுடைய வைதன்மிய திட்டாந்தம் பரமாணுப்போல  என்பதாகும். இதன்மூலம் ஒலியின் தர்மத்திற்கு எதிர்மறையாக உருவமின்மை, சாதனமாகிய அருவத்திற்கு மீட்சியாக அதாவது எதிர்மறையாக அருவமற்றதன்மையின்மையும்  பரமாணு என்ற திட்டாந்தம் பிழையாக விளக்குவதால் இது வைதன்மிய திட்டாந்த போலியாகும்.

அடுத்து சாதனா வியா விருத்தி என்னும் திட்டாந்த போலி குறித்துப் பார்ப்போம். சாத்தியப் பொருளின் அதாவது சாதிக்கப்படவேண்டிய பொருளின் தன்மை மீள அதாவது எதிர்மறையாக, சாதனமாகிய ஏதுவின்  தன்மை எதிர்மறையாகப் போகாமல் பிழைபடுதல் வைதன்மிய திட்டாந்தப் போலியாகும். ஒலி நிலையானது என்பது சாத்திய கூற்று என்று வைத்துக் கொள்வோம். அருவமானது என்பதால் என்ற சாதன கூற்றையும் கூறி, எவையெல்லாம் நிலையானதது இல்லையோ அவை அருவமும் அற்றவை என்ற எதிர்மறைக்குரிய வியாத்திக் கூற்றையும் கூறி, கன்மம்(கருமம், செயல்)போல என்று திட்டாந்தமும் காட்டுகிறான்  வாதி என்று வைத்துக் கொள்வோம்.இந்தத் திட்டாந்தம் எதிர்மறை தன்மைக்குக் காட்டப்பட்ட திட்டாந்தம். கருமம் அதாவது செயல் என்பது அருவமானது ஆனால் சாத்திய தன்மையான நிலையானது என்ற கூற்றிற்கு எதிர்மறை கூற்றான அருவமமும் அற்றவை என்பதின்படி உருவமுடையது என்று பிழையாக ஆகிவிடுவதால் இது சாதனா வியா விருத்தி  என்னும் திட்டாந்தப் போலியாகும்.

அடுத்து உபயா விருத்தி என்றால் என்னவென்று பார்ப்போம். ஓரளவு வைதன்மிய திட்டாந்தம் என்பது என்னவென்று விளங்கியிருக்கும் என்று நம்புகிறேன். அதாவது ஒரு பொருளை அதன் எதிர்மறை தன்மைகளிலிருந்து விளக்குவது வைதன்மியமாகும். இதில் உபயாவிருத்தி என்பது ஒரு வாதி நிறுவும் பொருளை எதிர்மறை முறையில் சாதிக்க நினைக்கும்பொது அவன் காட்டும் வைதன்மிய திட்டாந்தமானது சாதன சாத்தியங்களின் எதிர்மறை தன்மை பொருந்தாமல் போகும்போது பிழையாகி விடும். இதுவே உபயா விருத்தி  எனப்படும். மேலும் இது உள்பொருளாகிய திட்டாந்தத்தின்கண் மேற்சொன்ன இரண்டு தன்மங்களின் எதிர்மறை பொருந்தாமல் போய் உண்மையின் உபயாவிருத்தி எனவும், இல்பொருளான திட்டாந்தத்தின்கண் இரு தன்மங்களின் எதிர்மறை பொருந்தாமல் பிழையாகும்போது இன்மையின் உபயாவிருத்தி என்று இருவகைப்படும்.

இவற்றில் உண்மையின் உபயாவிருத்தி எனப்படும் திட்டாந்தப் போலி குறித்துப் பார்ப்போம். உள்ள ஒரு பொருளில் சாத்திய சாதன தன்மைகளின் எதிர்மறைத் தன்மைகள் பொருந்தாமல் ஒரு வைதன்மிய திட்டாந்தத்தைக் காட்டுவது உண்மையின் உபயாவிருத்தி எனப்படும் போலியாகும். ஒலி நிலையானது ஏனெனில் அருவமாகி இருப்பதால் என்று வாதி கூறிவிட்டு, எவையெல்லாம் நிலையானது இல்லையோ அவையெல்லாம் அருவமில்லாதது என்று விபக்கத் தொடர்ச்சியின் எதிர்மறையைக் கூறி ஏதுவாக ஆகாயம் என்று கூறினால் ஆகாயம் நிலையானதும், அருவமற்றதும் ஆகும். எனவே சாத்திய தன்மையான நிலைபேறும், சாதன தன்மையாகிய அருவமும் பொருந்தவில்லை. எனவே இது உண்மையின் உபயாவிருத்தி என்னும் திட்டாந்தப் போலியாகும்.

இன்மையின் உபயாவிருத்தி என்றால் என்னவென்று பார்க்கலாம். இதுவும் வைதன்மிய திட்டாந்த போலி. அதாவது எதிர்மறை கூற்றுக்குக் கூறப்படும் திட்டாந்தம்.இதிலும் அதே பழைய சாத்திய வசனம். ஒலி நிலையற்றது உருவமுடையது என்பதால் என்ற கூற்றை எடுத்துக் கொள்வோம். இதைக் கூறிவிட்டு எவை எவை நிலையற்றதன்மையுடையது இல்லையோ அவை அவை உருவமற்றவை என்ற விபக்க தொடர்ச்சிக்கு எதிர்மறை வசனம் கூறி, ஆகாயம்போல என்ற திட்டாந்தம் கூறப்படுமானால் ஆகாயத்தைப் பொருள் இல்லை என்று நம்பும் வாதிக்கு இங்கே ஆகாசம் உள்பொருள் கிடையாது;எனவே சாத்திய தன்மையான நிலையற்ற தன்மையும், சாதன தன்மையாகிய உருவமும் எதிர்மறையிலும், நேர்மறையிலும் பிழையாகப் போவதால் இது இன்மையின் உபயாவிருத்தி என்னும் வைதன்மியத் திட்டாந்தப் போலி என்றழைக்கப்படுகிறது.

அடுத்து அவ் வெதிரேகமென்னும் வைதன்மியத் திட்டாந்தப் போலி குறித்து  பார்ப்போம்.சாத்திய தன்மை இல்லாத இடங்களில் சாதனதன்மையும் இருக்காது என்று சொல்லாமல் விடுவது இந்தப் போலியாகும்.. இங்கே வெதிரேகம் என்றால் எதிர்மறை என்று பொருள் இதனை ஏற்கனவே மீட்சி என்ற பொருளில் வைதன்மியத் திட்டாந்தத்தில் பார்த்தோம். சாத்தியத்தன்மை இல்லாத இடத்தில் சாதனதன்மை இல்லாமை சொல்வது வெதிரேக வியாத்தி வசனமாகும். இதனை விளக்கமாக எடுத்து உரைத்த பின்பே காட்டவேண்டும். அவ்வாறு கூறாமல் காட்டுவது பிழையாகும். அதனால் இதற்கு அவ் வெதிரேகம் என்ற பெயர் ஏற்பட்டது. இனி எப்படி சாத்திய தன்மை இல்லாதபோது சாதனாதன்மையும் கிடையாது என்பதனைக் கூறாமல் விடும்போது பிழையாகும் என்று பார்ப்போம். ஒலி நிலையானது செய்யப்படுவது இல்லை என்பதால் என்று  வாதி கூறும் கூற்றெனக் கொள்வோம். எந்தப் பொருள் நிலையானது இல்லையோ அது செய்யப்படுவது இல்லாததும் அன்று என்ற வெதிரேகக் கூற்றைத் தெரியும்படி சொல்லாமல் குடமாகிய திட்டாந்தத்தின்கண் செயல்படும் தன்மையும், நிலையற்றதன்மையும் கண்டிருக்கிறோம் என்று சொன்னால் குடத்தினிடம் சாத்தியதன்மையாகிய நிலையானதன்மை இல்லை என்பதால் செய்யப்படுதலின்மை இல்லாதது என்ற வெதிரேக வியாத்தி தெளிவாக விளங்கும்படி கூறப்படாததால் இது அவ் வெதிரேகம் என்னும் திட்டாந்தப் போலியாகும்.

அடுத்து விபரீத வெதிரேகம் என்னும் திட்டாந்தப் போலி குறித்துப் பார்ப்போம். விபக்கத்து வியாதி வசனத்தை அதாவது எதிர்மறையாகச் சொல்லி வாதம் செய்யும் கூற்றைத் தலைதடுமாறச் சொல்லுவது விபரீத வெதிரேகம் என்னும் திட்டாந்தப் போலியாகும். ஒலி நிலையானது உருவமுடையதால் என்ற சாத்திய வசனத்தை வாதி முன்வைக்கிறான். இதற்கு விபக்க வெதிரேக வியாத்தி கூறவேண்டும். அதாவது எதிர்மறை கூற்றைக் கூறவேண்டும்.எந்தப்பொருளில் நிலைபேறு இல்லையோ அந்தப் பொருளுக்கு உருவமும் இல்லை என்று கூறாமல் எந்தப் பொருளிடம் உருவத்தன்மை இல்லையோ அந்தப் பொருளுக்கு நிலைபேறு தன்மையும் இல்லை என்று இடம் மாற்றி (தலை மாற்றிக்) கூறுவது வெதிரேகம் மாறுபட்டுப் பிழையாகக் கருதப்படும்.

ஆசான் தான் வைத்திருந்த ஓலைச் சுவடிகளை மூடி வைத்துவிட்டு ஒருமுறை கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்தார்.

பிறகு கண்களைத் திறந்து மணிமேகலையை நோக்கினார்.

“தெளிவு பெற்றாயா?” என்றார்.

மணிமேகலை விடை எதுவும் கூறாமல் அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினாள். நீர்த் துளி கடலுடன் இனைய்ம்போது அதுவும் கடல் என்று அழைக்கப்படுவதைப்போல அந்தக் கருணைக்கடலின் அருகில் தானும் ஒரு துளியாகிக் கலந்ததை எண்ணியதால் அவளுக்கு வாய்வார்த்தை எழவில்லை.

அந்த நாட்களில் தமிழகத்தில் பௌத்தரிடையே நிலவிய பக்கப்போலி ஒன்பது, ஏதுபோலி பதினான்கு மற்றும் திட்டாந்தப்போலி பத்து ஆகமொத்தம் முப்பத்துமூன்று  போலிகள் குறித்து அறவண அடிகள் கூறிய விளக்கங்களைக் காதால் கேட்டும் குறுக்கோலைகளில் குறிப்புகள் எடுத்தும் மணிமேகலை அறிவில் தெளிவுபெற்றாள்.

[தொடரும்]

2 Replies to “தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை — மணிமேகலை 30”

  1. புாிந்து கொள்ள பலமுறை படிக்க வேண்டும் போல் உள்ளது. இன்னும் சற்று விாிவாக எழுதினால்தான படிக்க முடியும். என்தாய் மலடி போல ” உதாரணங்கள் அனைத்து அருஞ்சொற்களுக்கும் அளிக்க வேண்டும்.

  2. இங்கு சீத்தலைச் சாத்தனார் புத்தபிரான் விளக்குவதாக எழுதப்பட்டது “தத்துவபோதம்” என்னும் நூலில் உள்ளது. இதற்கு தவத்திரு தயானந்த சரஸ்வதி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய விளக்கவுரை தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

    இங்கு பேசப்படும் பலதத்துவங்கள் பிரஸ்’நொபநிஷத்திலும் காணப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *