அரசியலும் மேற்கோள் திரிபுகளும்: ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ,

நலமா?

நீங்கள் சமீபத்தில் எழுதியிருந்த ’ அரசியலும் மேற்கோள்திரிபுகளும்’ என்ற பதிவை இப்போது தான் பார்க்க நேர்ந்தது. இதுகுறித்து நான் சிலது சொல்ல வேண்டியிருக்கிறது என்பதனால் இக்கடிதம்.

இப்பதிவில் பேசப்படும் அம்பேத்கர் பற்றி அ.நீ எழுதிய கட்டுரை ஸ்வராஜ்யா இதழில் வந்தது ஏப்ரல்-14 அன்று. அதற்கு ஸ்க்ரோல் தளத்தில் கேசவ குகா எதிர்வினை எழுதியது ஏப்ரல்-19 அன்று. உங்களிடம் கேள்வி கேட்கும் அந்த வாசகர் இந்த இரண்டையும் வாசித்திருக்கிறார் என்பதை அவரே தனது கடிதத்தில் சொல்லியிருக்கிறார். ஆனால், உடனடியாக ஏப்ரல்-20 அன்று அந்த எதிர்வினைக்கு ஒரு பதிலை அ.நீ அதே ஸ்வராஜ்யா இதழில் எழுதியிருந்தார். இவ்வளவு தூரம் நீட்டி முழக்கிக் கடிதம் எழுதும் ஊக்கமும் முனைப்பும் கொண்ட அந்த வாசகர் அ.நீயின் அந்த எதிர்வினையைப் பற்றி தனது கடிதத்தில் வாயே திறக்கவில்லை. அவர் அதைப் படித்தாரா என்று கூடத் தெரியவில்லை. ஆனாலும், அதீத நம்பிக்கையுடன் ‘புளுகுமூட்டைக் கட்டுரை’, ‘தில்லாலங்கடி வேலைகள்’ என்று சரமாரியாக அ.நீ மீது வசைகளை அள்ளிவீசுகிறார். “சிறுநூல் படித்தோரே கிழித்துத் தோரணங்கட்டி அம்பலப்படுத்திவிடுமளவுக்கு அசட்டையான செயல். பச்சையான திரிபுகளும், பலவற்றைத் தன்சார்புக்கேற்ப out of contextஇல் எடுத்துப் பயன்படுத்துவதுமுமாக ஒரு கட்டுரை” என்றெல்லாம் எடுத்து விடுகிறார். குறைந்தபட்ச அறிவுசார் நேர்மை (intellectual honesty), அறிவுசார் உழைப்பு (intellectual rigor) கூட இல்லாமல் எழுதப்பட்ட அவதூறு கடிதம் அது.

துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் அதை அப்படியே ஆமோதிக்கிறீர்கள். “அது அம்பேத்கர் இஸ்லாம் குறித்துச் சொன்ன மிகக்கடுமையான விமர்சனங்களை, நிராகரிப்புகளை எடுத்து தொகுத்து முன்வைக்கிறது. கிறித்தவத்தின் நிறுவன அமைப்பு குறித்த அவருடைய விமர்சனங்களை தொகுக்கிறது. அவற்றின் விவாதச்சூழலில் இருந்து வெட்டி மேற்கோள்களாக எடுக்கிறது. அதாவது முதல் தரப்பு செய்த அதே செயல்களை அதே பாணியில் இவர்களும் செய்கிறார்கள்.” என்று தடாலடியாக தீர்ப்பு வழங்குகிறீர்கள். என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

’உங்களுக்கு சொல்லப்படாத அம்பேத்கர்’ என்ற தனது கட்டுரையில் உணமையில் எந்த *முடிவுகளையும்* அ.நீ கூறவில்லை. அம்பேத்கர் எழுத்துத் தொகுப்புகளிலிருந்து அதிகம் அறியப்படாத கீழ்க்கண்ட தரவுகளைத் தான் அவர் முன்வைக்கிறார். அவை மிகவும் முக்கியமானவை.

1. உபநிஷதங்களின் மகாவாக்கியங்களை ஜனநாயகத்தின் ஆன்மிக அடிப்படையாக அம்பேத்கார் முன்வைத்தார் என்கிறார் அ.நீ. இதற்கு இரண்டு நூல்களை காட்டுகிறார். ஒன்று, சாதி ஒழிப்பு குறித்த ‘Annihilation of Caste’ நூல். இந்நூலில் அம்பேத்கர் ‘உபநிஷதங்கள் மூலம் நீங்கள் இதை, (அதாவது ஜனநாயகத்தின் ஆன்மீக அடிப்படைகளை நிறுவுவதை) செய்யலாம் என கேள்விப்படுகிறேன்’ என்று கூறுவதைக் குறிப்பிடுகிறார். இரண்டாவது ‘இந்து மதத்தின் புதிர்கள்’ (Riddles of Hinduism) என்கிற நூல். இந்துமதக் கூறுகளையும் நம்பிக்கைகளையும் கடுமையாக விமர்சித்து அம்பேத்கர் எழுதியது இந்த நூல் (அம்பேத்கரைப் பெருமளவு மதித்தாலும் கூட, பல இடங்களில் ஈவே.ரா பாணி ”பகுத்தறிவு”க்கு ஈடாக அவரது கருத்துக்கள் இதில் அமைந்துள்ளதால் இந்தக் குறிப்பிட்ட நூலை நான் உட்பட பல இந்துமத அபிமானிகள் முற்றாக நிராகரிக்கிறோம்). ஆனால் இந்த நூலில் கூட, ”ஜனநாயகம் ஐரோப்பாவிற்கு முன்னரே இந்தியாவில் இருந்தது; அதன் ஆன்மிக அடிப்படையாக நாமெல்லாம் இறைவனின் குழந்தைகள் என்பதைக் காட்டிலும் நாமெல்லாம் பிரம்மத்தின் பகுதி என்பதே சிறப்பாக இருக்கும்” என்கிறார் அம்பேத்கர். ’சர்வம் கல்விதம் பிரம்ம’, ‘அகம் பிரம்மாஸ்மி’ ‘தத் த்வமஸி’ ஆகிய மகா வாக்கியங்களையும் இப்பகுதியில் அம்பேத்கர் குறிப்பிட்டு தம் தரப்பை நிறுவுகிறார். இப்படி, ‘சாதி ஒழிப்பு’ நூலில் ஒரு தொடக்க ஊகமாக சொல்லப்பட்ட விஷயத்தை பின்னர் ஒரு கோட்பாடாகவே அவர் வளர்த்தெடுக்கிறார் என்பதை அநீ அம்பேத்கரது நேரடி மேற்கோள்கள் வழியாகவே தெளிவாக நிறுவுகிறார்.

ஆனால், குகா தன் எதிர்வினையில் அம்பேத்கர் இப்படியெல்லாம் சொல்லவில்லை. அவர் வெறும் எளிய ஊகமாக ஐயத்துடன் மட்டுமே உபநிஷதத்தை முன்வைத்தார் என்கிறார். அவர் ‘சாதி ஒழிப்பு’ நூலைக் குறித்து மட்டுமே பேசுகிறாரே ஒழிய, அநீ அடுத்ததாகக் கூறிய ‘ரிடில்ஸ்’ நூலில் அம்பேத்கர் மகாவாக்கியங்களை நேரடியாகவே குறிப்பிட்டு இப்படி எழுதியிருப்பதைப் பேசவே இல்லை. இதிலிருந்தே மேற்கோள் இருட்டடிப்பு செய்வது யார் என்பது விளங்கும். இத்தனைக்கும் ’ரிடில்ஸ்’ ஒரு அபூர்வமான நூலெல்லாம் அல்ல. உண்மையில் இந்து விரோதிகளால் ”அம்பேத்கரின் கருத்துக்கள்” என்று பக்கம் பக்கமாக காட்டப்படுவது அந்த நூல் தான். ஆனால் அதற்குள்ளும் இப்படி ஒரு அருமையான கருத்தை அம்பேத்கர் வைத்திருந்திருக்கிறார் என்பது தான் அநீ வெளிக்கொண்டு வரும் விஷயம். இதை அவர் 2012லேயே எழுதியிருக்கிறார்.

2. பொது சிவில் சட்டத்துக்கான முதல் படி இந்து சிவில் சட்டம் என்றும் அது இந்து தர்ம சாஸ்திரங்களின் மிகச் சிறந்த தன்மைகளை உள்ளடக்கியது என்றும் 11 ஜனவரி 1950 அன்று அம்பேத்கர் பேட்டி கொடுத்ததை அநீ சொல்கிறார். இதற்கு குகாவிடமிருந்து எவ்வித எதிர்வினையும் இல்லை.

3. சிந்து நதி நீர் ஒப்பந்த பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பிலான குழுவில் அம்பேத்கர் இருந்தார். சிந்து நதியில் இந்திய விவசாயிகளுக்கே முதல் உரிமை என்று பாகிஸ்தான் ஒத்துக் கொள்ளாதவரை, பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதை அவர் வலியுறுத்தினார். இது அம்பேத்கரிடம் இயல்பாக அமைந்திருந்த தேசபக்திக்கும் தொலை நோக்குப் பார்வைக்கும் உதாரணம் என்பதை அடுத்ததாக அநீ முன்வைக்கிறார். இதற்கும் குகாவிடமிருந்து எதிர்வினை இல்லை.

4. இந்தியாவின் தேசிய மொழியாக சம்ஸ்கிருதம் இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் கூறுகிறார். 2014 போல இல்லாமல், இப்போது இது எல்லாருக்கும் தெரிந்த விஷயமாக ஆகிவிட்டது. இதை சொல்ல ஒரு அநீ தேவை இல்லை. ஆனால் இதற்கும் குகாவிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை.

5. இந்திய ராணுவத்தில் இந்தியா மீது கசப்பும் வெறுப்பும் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது நல்லதல்ல என அம்பேத்கர் எச்சரிப்பதை அநீ கூறுகிறார். உண்மையில் பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு அம்பேத்கர் கூறியது இது தான் – ”ராணுவத்தில் முஸ்லீம்கள் அதிகம் இருப்பது நம் நாட்டு எல்லைப் பாதுகாப்புக்கு நல்லதல்ல”. ஆனால் அம்பேத்கரின் வார்த்தைகளை அவை தவறாகப் புரிந்துகொள்ளப்படக் கூடாது என்ற கவனத்துடன், இன்றைய சூழலுக்கு ஏற்ப மதச்சார்பற்ற ஒரு பார்வையாக்கி தருகிறார் அநீ. இதற்கும் குகாவிடமிருந்து எதிர்வினை இல்லை.

6. தலித் இயக்கங்களின் செயல்பாட்டில் மிஷினரிகளின் பங்கை அம்பேத்கர் ஐயத்துடன் பார்த்தார் என்று அநீ கூறுகிறார். இதற்கு அநீ இரண்டு ஆதாரங்கள் தருகிறார். 1) லக்ஷ்மி நரசு எழுதிய நூலுக்கான முன்னுரையில், மிஷினரிகளின் சமூக சீர்திருத்த ஆதரவு ஒரு கட்டத்துடன் நின்றுவிடுகிறது. ஏனென்றால் சமூக சீர்திருத்தத்தால் மதமாற்றம் ஏற்படுவதில்லை என்கிறார் அம்பேத்கர் 2) இது அம்பேத்கருடையது அல்ல, பாபு ஜகஜீவன் ராம் அம்பேத்கருக்கு எழுதிய கடிதம். இதில் தலித் இயக்கத்தை நடத்தும் ஒருவர் மிஷினரி ஆதரவாளர் என்றும் அவரது இயக்கங்களில் பங்கெடுக்க வேண்டாமென்றும் எழுதுகிறார். ஆனால் கடிதமோ பிரிட்டிஷ் சிஐடி ஆவணங்களில் போய் சேர்கிறது. இவை இரண்டுமே இதுவரை பெரிதும் பேசப்படாத தரவுகள். இவை முக்கியமானவை – ஏனென்றால், அன்றைய தலித் அமைப்புகளில் மிஷினரிகளின் ஊடுருவல் இருந்தது; அதற்கு பிரிட்டிஷ் அரசின் மறைமுக ஆதரவு இருந்தது; இது அன்றைய உண்மையான தலித் தலைவர்களுக்கு சங்கடம் அளித்தது; இது குறித்து அவர்கள் ஜாக்கிரதையாகவும் எச்சரிக்கையாகவும் இருந்தனர் என்று பல விஷயங்களை இவை காட்டுகின்றன. இந்த நேரடியான தரவுகளுக்கு குகாவின் எதிர்வினை என்ன என்றால், சம்பந்தமே இல்லாமல் அம்பேத்கரின் நூல்களிலிருந்து வழக்கமான இந்து எதிர்ப்பு மேற்கோள்களைக் காட்டுவதுதான்.

7. சாதி அடிப்படையில் இல்லாத ஒரு பூசகர்கள் சேவை அமைப்பை இந்திய அரசே நடத்த வேண்டும் என்று அம்பேத்கர் கூறியதை அ.நீ சொல்கிறார். அதற்கான சரியான முயற்சிகளை பாஜக அரசுகள் செய்வதாகவும், இதை செய்வது நல்லது என்கிறார் . இதற்கு குகாவின் எதிர்வினை – ஆனால் பூசகர்களே இல்லாத நிலையையே நான் விரும்புகிறேன் என அம்பேத்கர் கூறியிருக்கிறாரே என்பது. இது அபத்தமானது. எங்கே அப்படி கூறியிருக்கிறார்? அம்பேத்கர் மார்க்ஸோ ஈவேராவோ அல்ல, மதம் மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு கருவி என்றெல்லாம் அவர் எண்ணவில்லை. மாறாக, மதம் மனித சமூக வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாதது; ஆனால் அதில் சமத்துவம் இருக்கவேண்டும் என்று தான் அவர் கருதினார்.

அநீ அம்பேத்கர் குறித்து எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து அவரிடம் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். இந்த விஷயத்தில் எங்களிடம் ஒருசில கருத்து வேறுபாடுகளும் உண்டு. உண்மையில் அம்பேத்கரின் கிறிஸ்தவ இஸ்லாம் எதிர்ப்பை முன்வைப்பதை விட அம்பேட்கர் எப்படி ஒரு யதார்த்தமான முழுமையான தேசியவாதி என்பதையே அ.நீ முன்வைக்கிறார். சாதி ஒழிப்பில் அம்பேத்கரின் முக்கிய தோழர்களாக விளங்கிய ஜெயகர், சுவாமி சிரத்தானந்தர், நாராயண கரே போன்றவர்கள் இந்து மகாசபை காரர்கள் என்பதை அ.நீ நினைவுபடுத்துகிறார். ஸ்மிருதி அடிப்படையிலான இந்து மதத்தின் மீதே அம்பேத்கருக்கு விலகலும் கடும் விமர்சனமும் இருந்தது, ஆனால் அவரது தேசபக்தி கேள்விகளுக்கு அப்பாலானது என்பதுதான் அ.நீயின் நிலைப்பாடு. எனக்கு தெரிந்து அவர் திண்ணையில் எழுத வந்த காலம் முதலே இதை அவர் வலியுறுத்தி வருகிறார். கறாரான ஆதாரங்களுடன் தான் எழுதுகிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. குறிப்பாக, அவரது இக்கட்டுரையில், மூர்க்கத்தனம் எதுவும் நிச்சயமாக இல்லை.

நீங்கள் அநீயின் முதல் கட்டுரையை படித்தீர்களா என்றே எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது. அல்லது படித்துவிட்டும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் காரணமாக இப்படி எல்லாம் எழுதுபவர் அல்ல நீங்கள் என்றே நம்ப விரும்புகிறேன்.

குகாவின் இந்த மேலோட்டமான எதிர்வினையை வைத்துக் கொண்டு அநீ மீது வசைகளை வீசும் வாசகர்களுக்கு அறிவுரை கூறாவிட்டாலும் அவர்களை நீங்கள் ஊக்குவிக்காமலாவது இருக்கலாம் என்பது எனது பணிவான எண்ணம்.

அன்புடன்,
ஜடாயு

பி.கு: இக்கடிதத்தின் பிரதியை தமிழ்ஹிந்து இணையதளத்திற்கும் அனுப்புகிறேன்.

ஒரு  பின்குறிப்பு:
அம்பேத்கர் பூசகர்களே வேண்டாம் என்ற ரீதியிலும் கூறியிருக்கிறார் என்பதை நான் அறிவேன். உடனே இதோ சொல்லியிருக்கிறார் என எடுத்து நீட்டவேண்டாம். அதனை ஒரு ideal condition ஆக, ஒருவித religious utopia என்பது போலத் தான் சொல்லியிருக்கிறார்.   இதைக் குறித்து, அம்பேத்கரின் அளவுகோல்களுக்கு பொருந்தும் அளவுக்கு உலகில் எந்த மதமும் வர முடியாது என காந்தியே  விமர்சித்திருக்கிறார்.  நான் சொல்லவந்தது – ஏதோ இந்து பூசகர்களை மட்டும் ஒழிக்க வேண்டுமென்று அம்பேத்கர் சொன்னதை போல குகா கூறுவதைத்தான்.

சுட்டிகள்:

அநீயின் முதல் கட்டுரை
https://swarajyamag.com/ideas/the-ambedkar-they-dont-want-you-to-know-about

கேசவ குகாவின் எதிர்வினை
https://scroll.in/article/834960/the-ambedkar-they-dont-want-you-to-know-about-is-a-man-who-never-actually-existed

குகாவின் எதிர்வினைக்கு அநீயின் பதில்
https://swarajyamag.com/ideas/what-they-still-dont-understand-about-ambedkar-and-hinduism

2012ல் இக்கருத்துக்களை முன்வைத்து அ.நீ எழுதிய தமிழ்க் கட்டுரை:
https://tamilhindu.com/2012/12/bodhisatvas-hindutuva-1/

7 Replies to “அரசியலும் மேற்கோள் திரிபுகளும்: ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்”

  1. அம்பேத்கார் படித்து என்ன, எனக்குள் ஒரு வெறுப்பு வந்ததுதான் என்று எழுதியவரின் பின்னூட்டத்தில் ஆ நீ அப்படி இல்லை என்று ஒரு சலிப்புடன்தான் பதில் இருந்தது . ஆக அம்பத்தகார் முழுவதும் படித்தவர் எல்லாம் ஒரு சலிப்புடன்தான் இருக்க வேண்டியிருக்கும் போல ..

  2. எனது நேற்றைய கடிதம் இன்று ஜெயமோகன் வலைப்பதிவில் அவரது எதிர்வினையுடன் வந்துள்ளது.

    மேற்கோள்திரிபு,அம்பேத்கர், அரவிந்தன் நீலகண்டன் – https://www.jeyamohan.in/100435

    அந்த எதிர்வினைக்கான எனது கீழ்க்கண்ட பதிலையும் அவருக்கு அனுப்பியிருக்கிறேன்.

    அன்புள்ள ஜெ,

    உங்கள் பதில் பார்த்தேன்.

    // அந்த அம்சத்தை அவர் இந்துத்துவ அரசியலுக்கும் சாதகமானவர் என நீட்டிக்கொள்வதற்கான மேற்கோள்பயிற்சியே அரவிந்தனின் முதற்கட்டுரை. அதை மேற்கோள்களால் குகா மறுக்கையில் மேலும் மேற்கோள்களால் அதை நிறுவ மீண்டும் முயல்கிறது மேலதிகக் கட்டுரை. //

    என்பது சரியல்ல. உண்மையில் அம்பேத்கர் இந்துத்துவ இணைப்பு என்பது வெறும் மேற்கோள்களுடன் நின்றுவிடுவதல்ல. அதற்கு விரிவான பின்னணி உண்டு. அதையும் அ.நீ தனது கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.
    ஆரிய சமாஜம், இந்து மகாசபா, ஆர் எஸ் எஸ் ஆகிய இந்துத்துவ இயக்கங்களைச் சார்ந்தவர்களில் பலர் (உதா: ஜெயகர், சுவாமி சிரத்தானந்தர், N.B.கரே என்கிற நாராயண் பாஸ்கர் கரே, பாலாசாகிப் தேவரஸ்) சாதிய ஒழிப்பு என்ற கொள்கை ரீதியாகவும் தனிப்பட்ட அளவிலும் அம்பேத்கருடன் நெருங்கிய நட்பு பூண்டவர்களாக இருந்தனர். ஆர்.எஸ்.எஸ், அம்பேத்கரிய இயக்கம் இரண்டும் நாகபுரி நகரையே மையம் கொண்டு வளர்ந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம். வீர சாவர்க்கரின் சமுதாய சமத்துவ நடவடிக்கைகளைப் பாராட்டி அம்பேத்கர் ‘புத்தருக்கு ஒப்பான பெரியவர்’ என்று தனது ஜனதா பத்திரிகையில் அவரைக் குறித்து எழுதினார். அம்பேத்கர் புத்தமதத்தைத் தழுவியதை இந்துத்துவ இயக்கங்கள் கண்டிக்கவில்லை, மாறாக வரவேற்றன. “அம்பேத்கர் இப்போது உறுதியாக இந்து அரவணைப்புக்குள் தாவியிருக்கிறார்’ என்று வீரசாவர்க்கர் எழுதினார். அம்பேத்கர், சாவர்க்கர் இருவரது அதிகாரபூர்வ வாழ்க்கை வரலாறுகளையும் எழுதியிருக்கும் தனஞ்சய் கீர் இந்துத்துவ சிந்தனைப் பள்ளியைச் சார்ந்தவர் தான். இருவரும் வாழும் காலத்திலேயே அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கான அனுமதியையும் பெற்றவர். இந்துத்துவ இயக்கங்களை (ஆர் எஸ் எஸ், இந்துமகாசபை) ராம்ராஜ்ய பரிஷத் போன்ற இந்து ‘சனாதனி’களின் கட்சிகள் தீவிரமாக எதிர்த்து வந்ததை அம்பேத்கர் கவனிக்க மறக்கவில்லை. எனவே, முன்னவற்றை இந்துமதத்திற்குள்ளேயே செயல்படும் சாதிய ஒழிப்பு, சமூக சீர்திருத்த அணியாகவே அவர் கருதினார். அந்த அணி வெற்றி பெறுமா என்பது குறித்துத் தான் அவரது சந்தேகங்கள் இருந்தனவே ஒழிய, அந்த அணியின் சமத்துவ கொள்கைகளைக் குறித்து அல்ல. ஏனென்றால் ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் தலித் சமுதாயத்தினர் எந்த பாகுபாடுகளுமின்றி அனைவருடனும் கலந்து பழகுவதையும் உணவுண்பதையும் அம்பேத்கர் நேரிலேயே கண்டு, அதைப் பாராட்டியுமிருந்தார்.

    தமிழ்நாட்டின் தலித் கட்சிகளும் இயக்கங்களும் கடும் இந்துமத, இந்துத்துவ வெறுப்பை உமிழ்ந்து வருவது தெரியும். ஆனால், அம்பேத்கரிய சிந்தனைகளை நேரடியாகவ கற்றுணர்ந்த நாம்தேவ் தஷால், சாந்தாராம் நந்தகாவ்கர் போன்ற பிரபல மகாராஷ்டிர தலித் தலைவர்கள் ஆர் எஸ் எஸ் நிகச்சிகளில் கலந்து கொண்டு இந்துத்துவ அமைப்புகளுடன் உரையாடியும் வருகிறார்கள். இது ஏன் என்று யோசிக்க வேண்டும்.

    இவை குறித்த பல தரவுகள் மராத்தியிலும் ஹிந்தியிலும் ஏற்கனவே எழுதப் பட்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, இந்துத்துவ இயக்கங்கள் அவற்றை ஆங்கிலத்திலும் மற்ற இந்திய மொழிகளிலும் இன்னும் கொண்டுவரவில்லை. உண்மையில், மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் ரமேஷ் பதங்கே அவர்களது நூலை வாசித்து, பின்பு அவரை 2013ல் சந்தித்து உரையாடிய பின்பு தான் எனக்கே இது பற்றிய ஒரு முழுமையான புரிதல் ஏற்பட்டது. ‘ஆர்.எஸ்.எஸ், மனு, அம்பேத்கர்’ என்ற கட்டுரையில் அது குறித்து எழுதியிருக்கிறேன் – https://tamilhindu.com/2013/12/rssambed/
    உண்மையில், காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் 1991ல் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவிற்குப் பின்னர் தான் அவரைப் பெரிய அளவில் முன்னெடுக்கத் தொடங்கினர். ஆனால் இந்துத்துவ இயக்கங்கள் அதற்கும் முன்பிருந்தே அவரைத் தங்களது ஆதர்சங்களில் ஒன்றாக ஏற்றிருந்தனர். ஆர்.எஸ்.எஸ் ஏகாத்மதா ஸ்தோத்திரத்தின் முதல் வடிவத்திலேயே நாராயணகுருவுடன் சேர்த்து ‘பீமராவஸ்ச’என்று அவர் பெயர் இடம்பெற்று விட்டிருந்தது.

    அன்புடன்,
    ஜடாயு

  3. ஹிந்து என்ற சொல்லும் ஹிந்துத்வம் என்ற சொல்லும் இந்த சம்வாதங்களினூடே **முனைப்பாக** குழப்பத்துக்குள்ளாக்கப்படுகிறது / இழிக்கப்படுகிறது.

    அந்த ஒரு புள்ளியில் மட்டிலும் சில கருத்துக்கள் :-

    ஹிந்து என்ற சொல் ஆகட்டும் ஹிந்துத்வம் என்ற சொல்லாகட்டும் இரண்டிற்கும் அடிப்படை பன்மை பாராட்டுதல்.

    ஹிந்துஸ்தானத்தின் அரசியல் சாஸனம், மேலும் ஹிந்துஸ்தானத்து சட்டங்கள் ***ஹிந்து*** என்ற சொல்லை விளக்குகின்றன.

    அரசியல் சாஸனத்தின் ஷரத்து 25 2 b

    Article 25(2)(b) in The Constitution Of India 1949
    (b) providing for social welfare and reform or the throwing open of Hindu religious institutions of a public character to all classes and sections of Hindus Explanation I The wearing and carrying of kirpans shall be deemed to be included in the profession of the Sikh religion Explanation II In sub clause (b) of clause reference to Hindus shall be construed as including a reference to persons professing the Sikh, Jaina or Buddhist religion, and the reference to Hindu religious institutions shall be construed accordingly

    The Hindu Marriage Act of 1955 goes in greater detail to define this �legal Hindu�, by stipulating in Section 2 that the Act applies:

    �(a) to any person who is a Hindu by religion in any of its forms and developments, including a Virashaiva, a Lingayat or a follower of the Brahmo, Prarthana or Arya Samaj,

    �(b) to any person who is a Buddhist, Jain or Sikh by religion, and

    �(c) to any other person domiciled in the territories to which this Act extends who is not a Muslim, Christian, Parsi or Jew by religion

    முஸ்லிம், யஹூதி, க்றைஸ்தவர், ஃபார்ஸி……….. இந்த மதத்தைச் சார்ந்தவர்களை மட்டிலும் ஹிந்துஸ்தான சட்டங்கள் ***ஹிந்து*** என்று ஏற்பதில்லை. *******இவர்களைத்தவிர ஏனைய அனைவரையும் ஹிந்துஸ்தான சட்டங்கள் ஹிந்து என்றே ஏற்கின்றன*******. சங்கபரிவார / ஹிந்துத்வ இயக்கங்களும் தங்களது கொள்கைகளின் படி….. தங்களது செயல்பாடுகளின் பாற்பட்டு ****ஒரு கட்டத்தில்***** அவ்வாறே கருதுகின்றன.

    ஒருபடி மேலே சென்று சட்டம் ***ஹிந்து*** என்ற சொல்லிலிருந்து விலக்க முயலும் மதத்தைச் சார்ந்தவர்களைக் கூட ………… அவர்கள் பரந்து விரிந்த ஹிந்துஸ்தானத்தின் ….. அந்தந்த ப்ராந்திய பண்பாட்டு விழுமியங்களை ஏற்கையில்…… அவர்களையும் ***ஹிந்து*** என்றே அடையாளப்படுத்த விழைகின்றன சங்க பரிவார இயக்கங்கள்.

    அதற்கு வண்டி வண்டியாக நிறைய சான்றுகளையும் சொல்ல முடியும்.

    சங்கபரிவார / ஹிந்துத்வ இயக்கங்களுக்கு வெளியே உள்ள ஹிந்து இயக்கங்களான ***ஹிந்து மஹா சபை*** ***சிவசேனை*** போன்ற இயக்கங்கள் **ஹிந்து** என்ற சொல்லின் மூலம் ***வைதிக ஸனாதன ஹிந்துக்களை*** மட்டும் சுட்டும் போக்கினை………… அறியாமையின் பாற்பட்டது என்றும் ஹிந்துஸ்தானத்தின் அரசியல் சாஸனம் மற்றும் அதன் சட்டங்கள் விதிக்கும் விளக்கங்களுக்கு அப்பாற்பட்டது என்று புறந்தள்ளிப்போகலாம்.

    *****ஹிந்துத்வ எழுத்தாளர்கள் **** ஹிந்து என்ற சொல்லிலிருந்து பௌத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் போன்றவர்களை விலக்கும் வண்ணம் இந்த சொல்லைக் கையாளுவதும் ***வைதிக ஸனாதன ஹிந்துக்களை*** மட்டிலும் ஹிந்து என்று குறிப்பிடும் வண்ணமும் தங்கள் சம்வாதங்களை முன்வைப்பதும் மிகவும் வருத்தத்தைத் தரும் விஷயம் மட்டிலுமல்ல.

    ஹிந்துஸ்தானத்தின் அரசியல் சாஸனத்தையும் ஹிந்துஸ்தானத்தின் சட்டங்களின் விளக்கங்களையும்………… எல்லாவற்றுக்கும் மேலாக ***ஹிந்து*** என்ற சொல் சுட்டும் பன்மைத்துவத்தையும் இழிவு செய்யும் படிக்கானது அப்படிப்பட்ட ஒரு சம்வாதம். இதை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல விழைகிறேன்.

    மாறாக *****ஆசாரவாத ஹிந்துக்கள்**** என்று *****ஹிந்துத்வ எழுத்தாளர்கள்**** சுட்டும்/பழிக்கும் “ஹிந்துக்கள்” பௌத்தம் மற்றும் சமண சமயத்தின் போதிசத்வர்களை மற்றும் யக்ஷிகளை தமது உபாஸனா பத்ததியிலிருந்து விலக்குவதில்லை என்பது மேலும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்பட வேண்டிய விஷயம்.

    ஒரு புறம் ****பிற்போக்கு*** என்று பழிக்கப்படும் ஆசாரவாத ஹிந்துக்கள் ஜைன பௌத்தர்களையோ அவர்களது சமயத்தையோ முற்று முழுதாக நிராகரிப்பதில்லை. ஆனால் ****முற்போக்கு*** என்ற கொடிபிடிக்கும் ***ஹிந்துத்வர்கள்*** தங்கள் சொல்லாக்கங்களில் ****ஹிந்து*** என்ற சொல்லின் பன்மைத்துவத்தை பரிகசிக்கும் வண்ணம் கையாளுகிறார்கள் என்று சொன்னால் நிச்சயமாக மிகையாகாது.

    *******ஒற்றைமத – ஒற்றைப்பண்பாட்டுத் தேசியத்துக்கு****** என்று ஸ்ரீ ஜெயமோஹன்

    ஹிந்து மதத்தையும் ஹிந்துத்வ பண்பாட்டையும் முனைந்து பழிக்க முனைவதை கவனிக்க நேர்ந்தது.

    ஹிந்து என்ற சொல் ஆகட்டும் அதனின்று கரந்துரையப்படும் பண்பாட்டு விழுமியங்களடங்கிய ***ஹிந்துத்வம்*** என்ற கோட்பாடு ஆகட்டும் …………. அது ஒரு மிகப்பெரிய பன்முக சமயம் சார்ந்த கோடிக்கணக்கான ஜனத்திரள்களையும்…… பற்பல சமயக்கோட்பாடுகளின் …. பற்பல பண்பாட்டு விழுமியங்களின் தொகுப்பே ஆகும். அப்படித்தான் சங்க பரிவார இயக்கங்களும் / ஹிந்துத்வ இயக்கங்களும் அச்சொல்லை அக்கோட்பாட்டை முன்வைக்க முயலுகின்றன.

    சங்க ப்ரார்த்தனா……… ப்ராதஸ்மரணம் / ஏகாத்மதா ஸ்தோத்ரம்……….ஏகாத்மதா மந்த்ரம் ………… போன்ற ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் செயற்பாட்டை ப்ரதிபலிக்கும் செய்யுட்கள் அப்படித்தான் பறைசாற்றுகின்றன.

    ஒற்றைமதம் என்று ***அறிவுஜீவிகள்*** முனைந்து ******கருத்துத் திரிபு****** செய்ய விழையும் *****பன்மை மதமாகிய ஹிந்து மதமே*****………… பன்மைத்துவம் போற்றும் ஹிந்துக்களுமே………பன்மைத்துவம் கொண்டாடும் ஹிந்துவக் கோட்பாடுகளுமே………… பன்மைத்துவம் போற்றும் அப்படிப்பட்ட ஒரு ஹிந்து வாழ்க்கை முறையே……………

    மதசார்பின்மை……….. என்ற கோட்பாடு கூட அறிமுகமாகாத காலத்திலே………. உலகமுழுமையும் விரட்டியடிக்கப்பட்ட ஜனத்திரள்களான யஹூதிகள் மற்றும் ஃபார்ஸிகளுக்கு ஹிந்துஸ்தானத்தில் புகலிடம் அளித்து இன்று வரை அச்சமூஹ மக்கள் ஸ்வதந்த்ரமாகவும் வளமுடனும் தேசத்தில் வாழ வழிவகுத்துள்ளது என்பதை சரித்ரம் பகருகிறது.

    ஹிந்து மதத்தையும் ஹிந்துத்வத்தையும்……….. ஒற்றை மதம் என்றும் ஒற்றைபண்பாடு என்றும் இழித்துப்பழிப்பது……… யதார்த்தத்தின் பாற்பட்டது அன்று………. மாறாக அறியாமையின் பாற்பட்டது …………… அல்லது காழ்ப்பு / வெறுப்பின் பாற்பட்டது …………. அல்லது வேறு ஏதோ சொல்லவியலாத காரணியின் பாற்பட்டது என்று சொல்ல வேண்டும்.

  4. The two part article on Aravindan Neelakantan and Jeyamohan’s views on Ambedkar take him for a pan-Indian phenomenon – whether as a nationalist or a critic of Hindu religion or caste leader. Whereas Jatayu juxtaposes such a phenomenon with Tamil political and social scene of today Tamil dalit politics – a general habit with all.

    This is a defective view. Ambedkar is used by dalits of all States – meaning dalit politicians of all States – for various purposes. When they do so, only a few of them concern about what Ambedkar stood for – i.e like Jeyamohan, Jatayu, or Aravindan Neelakantan do here. It’s for intellectuals. Dalit politicians aren’t intellectuals but under them there may be intellectuals like Ravikumar but aren’t important.

    Thus, Ambedkar is a mere poster boy. Making too much of this poster boy in viewing Tamil political scene gives a misleading picture. Ambedkar should be laid to rest by Tamil dalit politicians in order to search for a suitable leader from within their own community of Tamils, past or present.

  5. // Ambedkar & MKG should be remembered always inspite of a few blunder committed by them. Tamilians mind is polluted with dirty advises of EVR and that is to be erased first & foremost. For that first step to remove his begger like statues in front of temples & step by step his name to be laid rest by all Tamils including Dalits. Then only Tamils will have Nationalistic mentality which was present during independence struggle.

  6. அம்பேத்கார் பற்றிய பதிவுகள் அருமை. இங்குள்ள தலித் தலைவர்களுக்கு கொடுக்கும் இரட்டை சூடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *