ஆனைமுகனும் தமிழ்ப்பண்பாடும்

முனைவர் ஜி.சங்கரநாராயணன்

”நேரடியான கணபதியின் குறிப்பு முதன் முதலாக மானவ க்ருஹ்ய ஸூத்ரத்தில் இடம் பெறுகிறது. பொயுமு** ஐந்திலிருந்து நான்காகக் காலம் கணிக்கப்பெறும் இந்த ஸூத்ரங்களில் கணபதியை வணங்காதவன் தகுதியுடையவனாயினும் அரசனாக மாட்டான். பெண்களுக்கு வரன் அமையாது என்று பல குறிப்புக்கள் தரப்பெற்றுள்ளன. இவை புராண காலத்து கணபதியின் இயல்புகளோடு ஒத்திசைந்துள்ளமை அறியத்தக்கது”  (** பொயுமு: பொதுயுகத்திற்கு முன், BCE).

இவ்வாறு முனைவர் சங்கர நாராயணன் (சம்ஸ்கிருத பேராசியர், ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹாவித்யாலய பல்கலைக் கழகம், காஞ்சிபுரம்)  தமது ஃபேஸ்புக் பதிவில் சொல்கிறார்.

மிக முக்கியமான அருமையான தரவு இது. குறிப்பாக பெண்களுக்கு வரன் அமையாது என்பது.

சங்க இலக்கியத்தில் பரிபாடலில் கன்னிமை அடைந்த பெண்கள் திருமணம் நடக்க கோவில் யானைக்கு பூஜைகள் செய்வது விவரிக்கப்பட்டுள்ளது.

கன்னிமை கனிந்தாரும் மணமான மகளிரும் தாம் செய்யும் பூசையில் யானையின் மிச்சிலை உண்ணுதல்

நின யானைச் சென்னிநிறம் குங்குமத்தால்
புனையா, பூநீர் ஊட்டி, புனை கவரி சார்த்தா,
பொற்பவழப் பூங்காம்பின் பொற்குடை ஏற்றி,
மலிவுடை உள்ளத்தான் வந்துசெய் வேள்வியுள்;
பல்மணம் மன்னு பின் இருங் கூந்தலர்.
கன்னிமை கனிந்த காலத்தார், நின்
கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில்
மறு அற்ற மைந்தர் தோள் எய்தார்; மணந்தார்
முறுவல் தலையளி எய்தார் – நின் குன்றம்
குறுகிச் சிறப்பு உணாக்கால்…

திருப்பரங்குன்ற காட்சி இது. இங்கு முருகனின் கோவிலில் யானை உள்ளது. அந்த யானையை மகளிர் பூசிக்கின்றனர். இந்த யானைப் பூசையில் நடக்கும் செயல்கள் கூறப்பட்டுள்ளன. அதன் மத்தகத்தில் குங்குமம் சார்த்தப்படும். அதன் மேல் பூநீர் சொரியப்படும். செவிகளில் வெண்சாமரம் வைக்கப்பட்டு அதன் மேல் பவள பொற்குடை எடுக்கப்படும். அது திருக்கோவிலை வலம் வரும். அந்த யானைக்கு சோற்றுக் கவளம் அளிக்கப்படும். அது உண்டு மீந்த பின்னர் பிரசாதமாக மகளிரால் உண்ணப்படும். இப்பூசனை செய்யாவிடில் மகளிர்தம் காதலரையும் அவர் அன்பையையும் அடையார் என கூறுகிறது பரிபாடல். இப்பாடலுக்கு அடுத்த பாடலில் வள்ளியம்மையார் பேசப்படுகிறார். ‘குறப்பிணாக் கொடியைக் கூடியோய்!’

பெண்கள் மட்டுமா கணபதியை காதல் கைக் கூட வணங்குகிறார்கள்? அந்த திருப்பரங்குன்ற முருகனே காதல் கைக் கூட கணபதியிடம் அல்லவா சரண் புகுந்தார்! அருணகிரிநாதர் நம் அனைவருக்கும் அதனை அழகு இசைத் தமிழில் அளித்துவிட்டார்.

அத்துயர் அது கொடு சுப்பிரமணி படும் அப்புனம்
அதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கணம் மணம் அருள் பெருமாளே

இங்கு இபமாகி குறமகளை முருகனுக்கு மணம் முடித்த விநாயகப் பெருமான் பரிபாடலில் கஜமாகவே இக வாழ்வை மகளிர் மனம் குளிர அளித்திருக்கிறார். பரிபாடலில் பூசனை செய்யப்படும் யானைக்கு செவிகளில் கவரி செய்யும் ஒப்பனையை அப்படியே கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகள் நம் விநாயகருக்கு அளிப்பதை காணலாம். தெளிவாக கணபதி வழிபாடு ஒரு பெரும் பாரத மரபின் தொடர்ச்சி. தமிழகத்திலும் அதன் தொடர்ச்சி என்றும் விட்டுப் போகவில்லை:

மெய்ச்செவிக் கவரி தூங்க வேழமா முகங்கொண்டுற்ற
கச்சியின் விகட சக்கரக் கணபதிக் கன்பு செய்வாம்.

– கந்தபுராணம், கச்சியப்ப சிவாச்சாரியார். 

கச்சியப்ப சிவாச்சாரியார் விகட சக்கரக் கணபதியை வேண்டுவதில் ஒரு அழகு இருக்கிறது. ’திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என ஆரம்பித்த கந்த புராண அரங்கேற்றம் நிகழ ஒரு தடையை ஏற்படுத்தி பின் அதை நீக்கியவரல்லவா பிள்ளையார்!

ஆக, சங்க காலத்திலேயே விநாயகப் பெருமானின் வழிபாடு அதன் முன்னோடி வடிவில் தமிழகத்தில் இருந்திருப்பதையும் அதன் உட்பொருளும் சடங்கியல் நோக்கமும் மாறாமல் அது இன்றும் நம் பிள்ளையார் வழிபாட்டில் தொடர்வதையும் நம்மால் காண முடிகிறது.

இங்கு ஒரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். சிவ குடும்பத்தில் அனைத்துமே சிவனே. கணபதியும் அவனே. சுகுமாரி பட்டாச்சார்ஜி என்பவரின் ஆராய்ச்சித் தாள் ‘வேதங்களிலும் மகாபாரதத்திலும் ருத்ரன் ‘ என்பது. பண்டார்க்கர் ஆராய்ச்சி மையத்தால் வெளியிடப்பட்டது. (‘Rudra from the Vedas to the Mahãbhãratha’, Annals of the Bhandarkar Oriental Research Institute, Vol. 41, No. 1/4 (1960), pp. 85-128) இதிலே ஒரு சுவாரஸ்யமான குறிப்பு வருகிறது:

“While in the RV., Rudra was generally associatad with rivers, earth, water, trees and mountains, (RV. 10 : 64 : 8); he now has a particular habitat in the Mūjavat Hill ( SYV 3 : 61 ). For his special attendant Rudra has now a mouse. He now becomes the god of architects, councillors and merchants.”

மிகத் தெளிவாக விநாயகர் அம்சங்களின் தொடக்க வேர்களை சிவதத்துவத்துடன் இணைப்பவை இவை. விக்கினங்களை நீக்கும் மூஷிக வாகனனை தொழில் தொடங்குவோரும் வியாபாரிகளும் இன்றும் முதன்மையாக வழிபடுகிறார்கள்.

இப்போது ஒரு பிரச்சனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ரொம்ப ஆன்மிக மணம் கமழ்வது போலவும் இலக்கியத் தரமாகவும் ஒரு பிரச்சாரம். யானைகளை கோவிலில் வைத்திருக்கக் கூடாதாம். உலகில் எனக்கு தெரிந்து வேறெந்த பண்பாடும் யானையை போல ஒரு பிரம்மாண்ட விலங்கை தன்னகப்படுத்தியதில்லை. தன்னை விட மிகப் பெரிதாக இருக்கும் சாது விலங்குகளை வெள்ளைக்காரர்கள் சென்ற இடங்களிலெல்லாம் கொன்று குவித்து வேட்டையாடியிருக்கிறார்களே ஒழிய அதை வீட்டு விலங்காகப் பேணும் தன்மையை நாம் கண்டதில்லை.

அதை செய்த ஒரே பண்பாடு நம்முடையதுதான். யானையும் பாகனுமாக ஒரு rare sacred eco-system இங்கு பரிணமித்துள்ளது. இன்றைக்கு மதச்சார்பற்ற இந்தியாவின் கேடு கெட்ட அரசு இயந்திரம்,  ஊழல் பிடித்த நேருவிய அரசியல் அதிகாரிகள் ஆகியவர்களால் கோவில் யானைகள் பிச்சைக்கார விலங்குகளாக மாற்றப்பட்டுள்ளன.  அவை கோவில்களைச் சுற்றி ஏற்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பு நெரிசல்களில்,  நகரங்களின் கேவல பீடைகளால் நோயுற்று சித்திரவதைப்படுகின்றன. இது மிகவும் வருத்தமான அவமானகரமான உண்மை. ஆனால் அதை வைத்து இந்து பண்பாட்டுக்கே உரிய ஒரு சிறப்புத்தன்மை கொண்ட உயிரியல்-பண்பாட்டு அம்சம் இந்த கும்பல்களால் குறி வைத்து தாக்கப்படுகிறது.

யானைக்கு வர்மப்புள்ளிகளைக் கூட கணித்த பண்பாடு கோவில் யானைகளை பராமரிக்க சரிவான தீர்வை அளிக்காதா? அதை செய்யாமல் நம் பண்பாட்டின் உயர் உச்சமொன்றை முழுமையாக ஒழித்துக் கட்டுவதில் காட்டும் கரிசனம் இருக்கிறதே… சரி, அது வேறு கதை. கேட்டால் கோவில் யானையை தேவதாசி அமைப்புடன் ஒப்பிடக் கூட தயங்க மாட்டார்கள் இவர்கள்.

யானைகளை கோவில்களில் வளர்ப்பது அவசியம். கோவில்கள் யானைகள் விரும்பி உறையும் சூழல் கொண்ட பசுமைத் தலங்களாகவும் , நம் பாகன்கள் அவர்களின் பாரம்பரிய அறிவை நவீன அறிவியலுக்கு கொடையளித்து கொடை பெற்று ஒரு அறிவு சார் இறைமை-இயற்கை மானுடம் ஆகியவற்றுக்கான ஒரு உறவுப்பாலமாக ஆவதும் அவசியம்.

(அரவிந்தன் நீலகண்டன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது) 

4 Replies to “ஆனைமுகனும் தமிழ்ப்பண்பாடும்”

  1. யானையை கோவிலில் வளர்க்கக்கூடாது என்பது சரியான ஒரு
    முடிவு கிடையாது . ஆனால் அதை முறைப்படுத்தி, கோவிலிலே யானை
    வளர்ப்பை சீர் படுத்தி அனுமதி வழங்கவேண்டும்.குழந்தையின் சிரிப்பு,
    நீல கடல், கருத்த யானை,ஆகியவை பார்க்க பார்க்க அலுப்பு தட்டாதவை என்று யாரோ சொன்னது நினைவிற்கு வருகிறது. நல்லது,
    மேலும் விநாயகர் வழிபாடு என்பது அறிவை வெளிப்படுத்தும் முன்
    ஒரு அறிவிற்கு செயல் வடிவம் கொடுக்கும் முன், அந்த அறிவையும்
    செயலையும் சரியானவிகிதத்தில் இணைக்க வேண்டும் அந்த இணைப்பை செம்மை படுத்தும் சக்திதான் விநாயகர் வழிபாடு.உலகில் முதன் முதலாக
    ஒலியாகவும், மொழியாகவும், இருந்த மனித உணர்வுகளை, எண்ணங்களை,
    எழுத்து வடிவத்தில் உலகத்திற்கு கொடுத்தவர் விநாயகரே.ஒலிக்கும்,
    மொழிக்கும்,முதன் முதலாக எழுத்து வடிவம் கொடுத்ததால்தான் அனைத்து
    செயல் செய்யும் முன் முதல் கடவுளாக விநாயகரை வணங்குகிறோம்.
    வியாஸபகவான் ஒலியாக இருந்த வேதத்தையும், தன அறிவையும்,
    அனுபவத்தையும் பின் வரும் மனித இனத்திற்கு வழங்குவதற்கு
    வினாயகப்பெருமானை வேண்டியபொழுது அவரும் வியாஸபகவான்
    சொல்ல சொல்ல பாரதக்கதையை விநாயகர் எழுதியதன் மூலம் உலகில்
    முதல் எழுத்தாளர் விநாயகர்தான்.எழுத்தை அறிவித்தவன் இறைவன்
    என்ற வகையில் அனைத்து செயல்களையும் செய்யும் முன் விநாயகப்பெருமானை வணங்கி வெற்றி பெறுவோம் .

  2. சித்திரத்தை வார்த்தைகளால் வடிக்கும் இன்னொரு திருப்புகழமுதத்துளியும் நினைவுக்கு வருகிறது.

    \\ அப்புனம்
    அதனிடை இபமாகி
    அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
    அக்கணம் மணம் அருள் பெருமாளே \\

    இன்னொரு திருப்புகழமுதத் துளி

    வேளை தனக்குசிதமாக வேழமழைத்த பெருமாளே

  3. அன்புள்ள அரவிந்தன் நீலகண்டன் அவா்களுக்கு,
    தாங்கள் தங்கள் வாழ்வின் கல்வியறிவை, அனுபவ உணா்வை, கருத்துக் கணிப்பை மிக இயல்பாக, இதமாக, இனிமையாகக் குழைத்து, இழைத்துத் துல்லியமாக வரையும் விதம் மிக்கப் புத்துணா்ச்சி, மனமலா்ச்சி, மகிழ்ச்சி தருவதாக உள்ளது.
    இதற்கும் கூடுதலாகத் தாங்கள் தங்கள் தமிழுரைகளில் நமது அனைவரதும், நற்சான்றோா் வாழ்ந்ததும் ஆகிய நம்நாடாம் நன்னாடாம் பாரதவா்ஷத்தின் தொன்மை, தூய்மை, வாய்மை நிரம்பிய ஸம்க்ருத நூற்களிருந்தும் உவமையுரைகள் மற்றும் சான்றுரைகளையும் சோ்த்துக் கொள்ளுமாறு மிகுந்த ஆதங்கத்துடன், ஆா்வத்துடன், ஆவலுடன் விண்ணப்பித்துக் கொள்கிறேன். தமிழ் மற்றும் ஸம்க்ருதக் குறிப்புரைகள் கூடவே, அவையவற்றின் பதவுரை மற்றும் பொருளுரையும் சோ்த்து வழங்கவும் கேட்டுக் கொள்கிறேன்.
    ஏனென்றால், ஞானம் என்பது எல்லாவிதமும், எல்லாவிடமும், எல்லாக்காலமும், எல்லாாிடமும் பரவவேண்டும், பயக்கவேண்டும், பலிக்கவேண்டும். அப்படித்தானல்லவோ நமது தொன்மை, பன்மை, ஒருமை, ஒற்றுமை நிறைந்த நாட்டின் நான்கு திக்குகளிலும், முக்காலங்களிலும்– அதாவது, கடந்த-, நிகழும்-, வரப்போகும்- காலச் சந்ததியினாிடையே– நமது மண்ணின் மரபு, பண்பாடு, கலாச்சாரம் பரவிப் படா்ந்து ஒருங்கிணைந்து தழைத்து ஓங்குவது சாத்தியம்?
    இல்லாவிட்டால் பாருங்களேன், ஓா் உவமைக்காகச் சொல்கிறேன், தற்போதுள்ள– இந்துக் கலாச்சார வெறுப்புக் காட்டம், தமிழ் மொழியினவெறியாட்டம், மதமாற்றுப் பிரச்சாரக் கொட்டம் போன்றவை காட்டாற்று வெள்ளமாய்ப் பொங்கிப் பெருகிப் பாய்ந்தோடும்– காலக்கட்டத்தில் என்ன மாதிாியெல்லாம் பெயா்கள், பதங்கள் (சொற்கள்), பாிமாற்றுரைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவை ஊடகங்கள் மூலமாகவோ, வேறெவ்வழியாகவோ பொதுப் புழக்கத்தில் புகுந்து, பெருகி, நிரம்பி வழியப் பதிலுக்கு முன்னமே நிலைத்திருந்தவை பெயா்ந்து, இழிந்து, அழிந்து, ஒழிந்து போனவாறு இருக்கின்றன!
    தற்காலப் பெயா்கள்: ஹித்தேஷ், முக்கேஷ், தீப்ஷிதா, ஜோத்திகா, பூமிகா, தேவிகா: எல்லாம் வடநாட்டவை, அண்மையவை, பலவும் தவறானவைகூட!
    தற்காலப் பதங்கள்/சொற்கள்: வாழ விழையும் வல்லமை ஆண்: ‘பேஜாராப் போச்சு’, ‘உ(த்)தாரு/வு(த்)தாரு வுடறான்’, ‘ஜூட்!’, ‘கில்ஃபா குடு’, ‘லந்தா?’, ‘சவாலா?’, ‘பைசல் பண்ணு’, ‘கல்த்தாக் குடு’, ‘பலானது’, ‘தில்’, ‘தம்’, ‘ஜோரு’, ‘தமாஷ்’, ‘ஸண்டாஸ்’, ‘பூபி’, ‘மராமத்து’, ‘ஃபுள்ளாக் குச்சிட்டாடறியா?’, ‘என் வளி தனி வலி’, ‘பனமத்த வாய்க்கை’: பலவும் பழையவை, ஸம்க்ருத மல்லாமல் உருது/இஸ்லாம் தழுவியவை, குறிப்பாகச் ‘சென்னை பாஷை’யில்– படிப்போ வேலையோ இல்லாமல், வெற்றுப் பொழுது போக்கும், புரட்சிக் கொடிக் காட்டும், போா்க் கூட்டம் கூட்டும், ஆனால் அதே சமயம், வெள்ளை வெளோ்-பப்ளிமாஸ்-‘மாடா்ன்’-‘டாப் க்ளாஸ்’-படிப்பு, பணம், பதவி படைத்த-தனிச்சைகொண்ட-கறுப்பானவனையே நாடுகின்ற- ‘ஹீரோயின்’ஐத் தேடிக் கண்டு பிடித்துத் தாவித் தட்டிப் பறித்து எப்படியாவது கவா்ந்து கொள்ளும் ‘ஹீரோ’வின் பேச்சில்– மிளிா்பவை!
    தற்காலப் பதங்கள்/சொற்கள்: புதுமமைப் பதுமைப் பெண்: ‘ஹாய்!’, ‘உஆவ்/வுவாவ்!’, ‘ஊஊஹ்!’, ‘சூப்பா்!’, ‘கான்ஷியஸ் வந்திடிச்சி’, ‘டென்ஷன் ஆயிட்டா!’, ‘நாண் ஆனையிட்டாள் அது நடந்துவிட்டாள்’, ‘காளை வேளை’, ‘புள்ளாிப்பு’: அநேகமாய், ‘ஹீரோயின்-ஸ்ட்டஃப்’, ‘மாடா்ன் கோ்ள்’ பாிபாஷை, வழக்கமான பிழையற்றத் தமிழல்லாது புதுமை, விடுதலைப் பாய்ச்சல் பாயும் ஆங்கிலம்/கிருத்துவம் தழுவியது!
    தற்காலப் பாிமாற்றுரைகள், பழக்கவழக்கங்கள்: ‘டைனமிக் மேரேஜ்’, ஒருதலைக் கலப்புத் திருமணம் மற்றும் அதன் விளம்பரம், ‘திரைகடல் ஓடியும் துரோகம் தேடு’, ‘நாட்டுக்கு நல்லதானதைக் கண்ணால் பாா்த்துவிடாதே, காதால் கேட்டுவிடாதே, வாயால் பேசிவிடாதே’, ‘அக்கம் பக்கம் பாா்த்திடாதே, நம்ம நாட்டு ஆளுன்னுக் கண்டிண்டு மயங்கிடாதே’, ‘நான் ஏன் பிறந்தேனோ, இந்து மத நாடு என்னைப் போன்றோா்க்கு நலமென்ன புாிந்ததோ?’, ‘நான் சிாித்தால் தீபாவளி, அலறினால் நாடு பூராச் சூறாவளி’, ‘ராக்கி, பூணூல் பண்டிகை– இந்து மத ஆதிக்கம், கொடுமை! ‘வேலன்ட்டைன், நியூ இயா்’ கொண்டாட்டம்– மனிதாபிமானப் பேருண்மைப் பெட்டகம்!’, ‘இந்து நெறி: கொடுங்கோல் சாதி/மத/இன வெறி! நாத்திகம்: இந்து வல்லாதோா் நோக்கு, நட்பு, நாடல், அணுகுமுறை, அலுவல்முறை– முதலில் நீ இதனை அறி!’
    ஆதலால், முடிவாகச் சொல்கிறேன், ஓா் உயா் இலக்கே உணராமல், தகுந்த திசைக்காட்டியே கொள்ளாமல், ஏகும் நற்பாதையே புலராமல், தம் உடலுறுப்புகளையே, உடனுறவுகளையே, ஊா்மக்களையே துறந்து, தம் முக்காலச் சாித்திராதாரத் தளத்தையே மறந்து, அயலோா் ஏவற்களிலேயே பறந்து, பயனே இல்லாமல் ஓடியாடியலைந்து திாிந்து, பன்னூற்றாண்டுகளாக மாற்றாா் மாண்பையே இசைத்துத் தத்தம் புலனாட்சியும் மனச்சாட்சியுமே இழந்து, அரைகுறையான, பழுதடைந்த, துருப் பிடித்த இயந்திரங்களாய் இயங்கிவரும் இக்காலத் தலைமுறைகளின் அடையாளமற்ற அவல நிலை, அச்சமூட்டுவதாகத் திகழ்கிறது.

  4. “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.”பாரதியார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *