தேவிக்குகந்த நவராத்திரி — 5

மீனாட்சி பாலகணேஷ்

9.  தேவியின் தாம்பூல மகிமை!

       அன்னை பராசக்தி தனது ஊஞ்சலில் விச்ராந்தியாக அமர்ந்துகொண்டு தாம்பூலம் தரித்துக்கொண்டிருக்கிறாள்.  சந்திரனைப் போல் வெண்மையான பச்சைக் கற்பூரத்துடன் கூடிய தாம்பூலம் அது.  அப்போது அவளைக் காண தேவசேனாபதியான சுப்பிரமணியன், தேவர்களின் தலைவனான இந்திரன், உபேந்திரனாகிய விஷ்ணு முதலானோர் வருகைபுரிகின்றனர்.  தேவாசுர யுத்தத்தில் அசுரர்களை வென்று வெற்றிபெற்றதை அன்னையிடம், தேவியிடம் கூற ஒடோடி வந்துள்ளான் அருமைமைந்தன்.  நேராக யுத்தகளத்திலிருந்து வருவதால், கவசம் தலைப்பாகை முதலியன தரித்திருந்தவன், தலைப்பாகையை மரியாதையின் நிமித்தம் கழற்றிவிட்டு அன்னையிடம் வந்து வணங்குகிறான்.  மைந்தனின் வெற்றிச்செய்தி அன்னைக்கு மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.  தான் பாதி சுவைத்திருந்த தாம்பூலத்தை அவனுக்கு (அவர்கள் அனைவருக்குமே) பிரசாதமாகக் கொடுக்கிறாள் தேவி.

இக்காட்சியினைக் கண்டு களிக்கலாம்.

ரணே ஜித்வா தைத்யா-னபஹ்ருத-சிரஸ்த்ரை: கவசிபி:

        நிவ்ருத்தைச் சண்டாம்ச-த்ரிபுரஹர-நிர்மால்ய-விமுகை:

        விசாகேந்த்ரோபேந்த்ரை: சசிவிசத-கர்ப்பூரசகலா

        விலீயந்தே மாதஸ்தவ வதன-தாம்பூல-கபலா:

—  (சௌந்தர்யலஹரி- 65)

10.  அம்மையும் அத்தனும் ஆடிய சொக்கட்டான்!

       பழைய கல்கி தீபாவளி இதழ் அட்டைப்படத்தில்  காலம்சென்ற திரு. மணியம் அவர்களின் சிவபெருமானும் பார்வதியும் சொக்கட்டான் விளையாட்டு ஓவியம் இடம்பெற்றிருந்தது.

ஜகந்நாத பண்டிதர் என்பவரால் கற்பனை செய்து இயற்றப்பட்ட ஒரு வடமொழி சுலோகத்தின் பிரதிபலிப்பே அந்தப்படம்.  அதனை உருவமைக்க அவா எழுந்தது.

 சிவனும் பார்வதியும் சொக்கட்டான் விளையாடுகின்றனர்.  பார்வதிக்கே எல்லா ஆட்டத்திலும் வெற்றிமேல் வெற்றி.  சிவனுடைய உடுக்கை, சிவகணங்கள், நந்திதேவர், முதலான அத்தனை பொக்கிஷங்களும் அவளிடம்-  சடைமுடியில் அமர்ந்த பிறைச்சந்திரனையும் விட்டுவைக்கவில்லை அவள்.  முகத்தில் பெருமிதம்பொங்க, “அடுத்து என்ன?” என்கிறாள்.  சிவன் இனித்தன்னையே பணயம் வைக்கவேண்டியதுதான் என எண்ணுகிறார்!  அப்போது அவரது சடைமுடியில் இருக்கும் கங்கை பொங்கி எழுந்து, “நான் இருக்கிறேன், என்னைப் பணயம் வையுங்கள்,” என அறிவிக்கிறாளாம்!

சிவனின் முகத்துக் குழப்பத்தையும் பார்வதியின் முகத்தில் வெற்றிப் பெருமிதத்தினையும் தெளிவாகக் காணலாம்.

       —

  • சுப்பிரமணியனுக்கு அழகிய வேல் ஒன்று சரியான அளவில் வாங்கக் கிடைத்தது மனதிற்கு மிகுந்த நிறைவைத் தந்தது.
  • பார்வதிக்கும் ஒரு அழகான குஜராத்தி ஊஞ்சல் அமைந்தது. ஒருகாலை உதைத்த உல்லாசமான நிலையில் மகனைக் கண்டு பாசம் பொங்கும் புன்சிரிப்புடன் அவளை அமர்த்த முடிந்தது.
  • சொக்கட்டான் காட்சியில் பார்வதியின் தலைக் கொண்டையில் இடம்பிடித்துள்ள பிறைச்சந்திரனைப் பார்க்கத்தவறாதீர்கள்!
  • மிகச்சிறிய பஞ்சலோக தெய்வங்கள் சொக்கட்டான் காய்களாகக் கிடைத்தனர். வீட்டிலிருந்த மினியேச்சர் வெள்ளி, விளையாடல் சாமான்கள் பார்வதியின் பொக்கிஷமாயின.

                        ***

 

Leave a Reply

Your email address will not be published.