ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 3

<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

தொடர்ச்சி…

கட்டுரையின் மங்கல வாழ்த்து

கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும்

கொண்டானை அல்லால் அறியாக்குலமகள் போல்

விண்தோய் மதிள்புடைசூழ் வித்துவக்கோட்டு அம்மாநீ

கொண்டாளாயாகிலும் உன்குரைகழலே கூறுவனே

– பெருமாள்திருமொழி -5-2

பொருள் : – ஆகாயத்தை எட்டும்படியான மதிள்கள் சூழ்ந்த திருவித்துவக்கோடு என்னும் திருத்தலத்து எம்பெருமானே! காண்பவர் எல்லாரும் இகழும்படியான செயல்களையே, தன் கணவனானவன் செய்தாலும், தன்னை மணம்புரிந்த அவனையன்றி வேறொருவரை மனத்தாலும் நினையாக் குலத்துதித்த மேலான கற்பரசிபோல், என்னை அடிமை  கொண்ட நீ, என்னை அலட்சியம் செய்து காக்கவில்லையானாலும், உன்திருவடிகளையே புகலாக அடைந்திருப்பேன்.

Image result for வைணவர்  என்றிவ்வாறு நிபந்தனையற்ற-பக்தி அல்லது பாரதந்தர்யத்தினை விளக்கலாம். இத்தன்மை பிராட்டியிடம் உளது என நிச்சயிப்பது இக்கட்டுரையின் நோக்கமாம். மறந்தும் புறந்தொழா மாண்பு என்பது வைணவ லக்ஷணம். இந்த தத்துவத்தினை அறியாது பலர் ஏளனஞ்செய்கின்றனர். எள்ளி நகையாடுகின்றனர். அந்த லக்ஷணத்திற்கு விளக்கமளிப்பதாக இக்கட்டுரை அமைந்துளது. பாரதந்த்ர்யத்தினை விளக்கும் இந்த பாகம், ஆங்காங்கு தர்க்கபாஷை  கொண்டு எழுதப்படுவதால் வாசிக்க சிறிது கடினமாகவே இருக்கும். எனவே வாசகர்களை, பொறுத்து அருளும்படி கோருகின்றேன். இதில் அஷ்டாக்ஷரத்தின் முதல் பதமான  ஓங்காரத்தின் பொருளானது விளக்கப்படும். தர்க சாஸ்திரத்தின் பெருமை மற்றும் பயன்களும் கூறப்பட்டுள்ளன.

திருவிழாக்களில் பந்தல் அமைக்கும்பொழுது, விதானம் தாங்கவென, கீழே பல மூங்கில் கம்புகளை நடுவதை நாம் கண்டிருக்கலாம். அங்ஙனம் நட்டபின்பு

அது நன்றாக ஊன்றியுள்ளதா என்று சோதிக்க, நட்டகம்பினை பலங்கொண்டு அசைத்து பார்ப்பர். இதனை “ஸ்தூணானி கனன ந்யாயம்” என்பர் வடமொழி நூலார்.

பரமனும் அநாதிகாலமாய் சம்சாரத்தில் அழுந்திய நமக்கு பக்தியை ஊட்டுகின்றான்.

நீர் பாய்ச்சி, களையெடுத்து, உரமிட்டு காக்கின்றான். அவ்வாறு பக்திப்பயிர் நன்கு விளைய அவ்வப்பொழுது செய்யினை(நிலம்,வயல்) நீரின்றி காயவிடுகின்றான். அதாவது சோதிக்கின்றான். பிறகே நம்மை ஆட்செய்து, நலமந்தமில்லதோர் நாட்டிற்கு அழைத்துச் செல்கின்றான். அவ்வாறு நடுவில் அனுபவிக்கும் சோதனைக் காலத்திலும் “புறந்தொழாதவர்” அதாவது “உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்” என்று ஐஸ்வர்ய, கைவல்யங்களில் நசையற்று இருப்பவர் அவனடியாராவர். இத்தன்மைதான் வைணவ லக்ஷணமாகும்.  இக்கருத்தினை “சிறையிருந்தவள் ஏற்றம்” என்னும் சொற்றொடருக்கும் பின்வருமாறு பொருத்தலாம். பிராட்டியானவள் ஜீவாத்மனுக்கு ப்ரதிநிதியாவாள். அவள் பெருமாளைப் பிரிந்து சிறையிருந்தது, அவள் அனுபவித்த சோதனாவஸ்தை ஆகும். அந்த சோதனைக் காலத்திலும் அவள் எம்பெருமானுக்கு பாரதந்த்ர்யமாய் நடந்தாள்.

சிறை என்பது அவள் மற்றிருமுறை பிரிந்ததற்கும் உபலக்ஷணம். இவ்வாறு காட்டிய அவளுடைய மாண்புதான்  “ஏற்றம்” ஆகும். அதாவது “மறந்தும் புறந்தொழாமை” = “சிறையிருந்தவள் ஏற்றம்” என்று பொருத்தலாம்.

வ்யாப்தி :

இப்பொழுது வ்யாப்தி என்றால் என்னவென்று பார்ப்போம்.

Image result for fire with smoke       எங்கெல்லாம் புகையுண்டோ அங்கெல்லாம் நெருப்புண்டு என்பது அன்வய  வ்யாப்தி (நேர்மறை அறிவு) ஆகும். எங்கெல்லாம் நெருப்பில்லையோ அங்கெல்லாம் புகையில்லை என்பது வ்யதிரேக வ்யாப்தி (எதிர்மறை அறிவு) ஆகும். இங்கே புகையானது காரியம் (அ) வ்யாப்யம் (அ) விளைவு ஆகும். நெருப்பானது

காரணம் (அ) வ்யாபகம்(அ) விளைநிலம் ஆகும். வ்யாப்தி என்றால் “ஸாஹசர்ய நியமம்” அல்லது “ஏகாந்திக நியமம்” என்பர் தார்க்கிகர்கள். ஸாஹசர்ய என்றால் ஸஹ+சரதி = கூடவே இணைபிரியாமல் செல்வது என்று பொருள். புகையையும் நெருப்பையும் இரு ஆசாமிகளாக வைத்துக்கொள்வோம். நெருப்பு எப்படிச் சொல்வானோ அதன்படியே புகையும் நடந்துகொள்வான். அவனுக்குப் புறம்பாக ஒருபோதும் நடக்கமாட்டான். அவனை விட்டுப் பிரிவதுமில்லை. மேற்கூறியபடி புகையின் நடத்தையால் நாம் அறிவது என்னவென்றால், “தன்னை உருவாக்கும் நெருப்பின் விருப்பத்திற்கு ஏற்ப புகை நடந்துகொள்கிறது” என்பதாகும். இதுவே ஸாஹசர்ய நியமம் ஆகும். அந்திகம் என்றால் நியமிக்கப்படுவது என்று பொருள். நெருப்பு இங்கே நியந்தா (நியமிப்பவன்) ஆவான். புகையானவன் அந்திகம் (நியமிக்கப்படுபவன்) ஆவான். நெருப்பு எப்படி நியமிக்குமோ அப்படியே நடப்பது ஏக+அந்திகம் =ஏகாந்திகம் எனப்படும்.

இன்னொரு ஆசாமியாக நீரினை வைத்துக்கொள்வோம். நீரானது நெருப்பிற்கு எதிரி அல்லது அபாவம் ஆவான். நீர் இருக்கும் அதிகரணத்தில்/இடத்தில்  நெருப்பானவன்  இருக்க மாட்டான். நெருப்பு இருக்கும் இடத்தில் நீரும் இராது ஒழிவான். எனவே நீரிலே புகை இருக்காது. அப்படி இருந்தால் அதனை வ்யபிசாரம் அல்லது அநைகாந்திகம் என்பர். வி+அபி+சரதி = வ்யபிசாரம் மற்றும் ந+ஏக+அந்திகம் =அநைகாந்திகம் ஆகும்.    அதாவது அவ்வாறு நடந்தால், காரணத்திற்கு புறம்பாக காரியம்  நடந்துகொள்கிறது என்றாகும். இது கானல் நீர் போன்ற பொய்யான அறிவாகும். இதனை ஆபாச ஹேது என்பர்.

சமயலறையில் நிச்சயம் நெருப்பிருக்கும். இதனை ப்ரத்யக்ஷமாக பலமுறை கண்டிருப்போம். எனவே அது ஸபக்ஷம் ஆகும். ஏரி, ஆறு, கடல் பொன்றவற்றில் நெருப்பு நிச்சயமாக கிடையாது. இவை விபக்ஷங்கள். மலையில் நெருப்பின் இருப்பு என்பது சந்தேகத்திற்கு இடமானது. ஆங்கே, ஹேதுவான புகையிருந்தால் மட்டுமே அதனை அறிகின்றோம். எனவே அது பக்ஷமாகும். தர்கபாஷையில் உத்தேசம் (பெயரைச் சொல்வது) என்பதன் பலன் பக்ஷ ஞானத்தை (பொருளின் அறிவு) தருவது. லக்ஷணம் (இலக்கு) சொல்வதன் பலன்  மற்றைய பொருட்களிலிருந்து பிறித்து அறிவதாகும்.  பரீக்ஷை(தேர்வு) என்பதன் பலன் லக்ஷணத்திலுள்ள குற்றங்களை களைதல் என்கிறது “பதக்ருத்யம்” என்னும் நூல்.

மேலும் வ்யாப்தி என்பது காலத்தால்,தேசத்தால் பெரிய பரிமாணமுள்ள தத்துவம் (அ ) பொருளானது அதைவிட சிறிய வஸ்துவை சூழ்ந்திருத்தலாகும். பெரிய தத்துவத்தின் ஒரு  பகுதி /ஏகதேசம் தன்னைவிட சிறிய தத்துவமாக மாற்றத்தை  அடையும். இதுவே காரணமானது  காரியமாதலாம்.  சில பொருட்கள்

முழுதுமாகவும் மாற்றத்தை அடையலாம். அதனை வ்யாப்தி என்று கூறாமல் பரிணாமம் (பரி+நமனம் இதி பரிணாமம்) என்பர். நிலத்தை கடல் வியாபித்துள்ளது. இவ்விரண்டையும் வளிமண்டலம்   வியாபித்துள்ளது. வளிமண்டலமானது  ஆகாசத்திற்கு வ்யாப்பியம் ஆனது. ஆகாசமோ அஹங்காரத்தால் வியாபகம் ஆனது. அஹங்காரம் மஹத்துக்கு காரியம். மஹத் தத்துவமோ ப்ரக்ருதிக்கு காரியம். ஜட ப்ரக்ருதியோ அஜடனான (ஞானமுள்ள) பரமனின் உடலில் ஒரு பகுதி/ஏகதேசத்தால் தாங்கப்படுகின்றது. இதை  யஜுர்வேதம் தைத்திரிய   சம்ஹிதையில்-“ஆத்மன ஆகாச சம்பூத: | ஆகாசாத் வாயு 😐 வாயோரக்னி: | அக்னேர் ஆப: | அத்ப்ய ப்ருதிவீ” என்று விளக்கப்பட்டுள்ளது. பரமனானவன் காது வழியே நுழைந்து அடியார்தம் இதயத்தில்  அமர்கின்றான். இவ்வாறு பரமனைவிட, அவனை வ்யாபித்த அடியார் தாம் பெரியவர் என

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து, எத்தனை

      நலந்தா னிலாதசண் டாளசண் டாளர்க ளாகிலும்,

      வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் காளென்றுள்

      கலந்தார், அடியார் தம்மடி யாரெம் மடிகளே.

.திருவாய்மொழி-3.7.9

இப்படியாக, அன்னவரைப் பாராட்டுகின்றார் நம்மாழ்வார்.

இவ்வாறான நாமறியாத வழக்கமான ந்யாய சாஸ்திர எடுத்துக்காட்டுகளை விடுத்து, நாமறிந்த   திருக்குறளின், முதல் குறள் கொண்டு சிறிது விவரிப்போம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

          பகவன் முதற்றே உலகு.

என்கிறார் ஓதாமல் உணர்ந்த வள்ளுவர்பெருமான்.

இக்குறளில் அவர் சொன்ன பதார்த்தங்களை   ந்யாய பாஷையினால்  சிறிது விரிக்கலாம். இக்குறளில் உவமையணி பயின்று வந்துள்ளது. “எழுத்தெல்லாம் அகர முதல” என்பது முன்னடியில் சொன்ன உபமானம் ஆகும். அதில் அகாரம் என்னும் சப்தம் வ்யாபகம் (அ) காரணம் ஆகும்.

யோக நூல்களில் நம் மனத்தில்  உருவாகும் சிந்தனை(அ) எண்ணத்தை “வாக்” என்பர்.  இந்த வாக்கானது பரா, பஸ்யந்தீ, மத்யமா, வைகரீ என நான்கு வகைப்படும். இந்த வாக்கானது மூலாதாரத்தில் பரா என்று உருவாகும். வெளியிலே மநுஷ்யர் காதுபடக் கேட்கிற ‘வைகரீ’ என்ற சப்தத்துக்கு ஆதாரமாக உள்ளே ‘பரா’ என்ற சப்தம் இருக்கிறது. ‘வைகரீ’ வாயில், உதட்டில் வருவது. ‘பரா’ என்ற மூல ரூபம்தான் மூலாதாரத்தில் நாபிக்குக் கீழே இருக்கிற சப்தம். அது வைகரியாக வாய் வழியே வருவதற்கு முன் பச்யந்தி, மத்யமா என்ற இரண்டு நிலைகள் இருக்கின்றன. யோக சித்தியில் மேலே போகப் போகத்தான் படிப்படியாக பச்யந்தி, மத்யமா, பரா முதலிய சப்தங்களை கேட்க முடியும். யோகேச்வரர்களான ரிஷிகள் பரா வாக்கையே கேட்கக் கூடியவர்கள். சிந்தனையானது சொல்(அ) வாக்கிய வடிவில் விளங்குவது வைகரீ. பேச்சாக வெளியே வருவது ஸ்தூல வைகரீ. வெறுமனே மனத்தில் இருப்பது ஸ்தூல வைகரீ. இந்த வைகரீயின் வ்யாபகம் மத்யமா. சொல் வடிவம் பெறாத எண்ணக்கூறு மத்யமா. மத்யமா பஸ்யந்தியின் காரியம். பஸ்யந்திக்கு வ்யாபகம் /காரணம் பரா ஆகும். தன்னையொழிந்த அனைத்தெழுத்திற்கும் அகாரமானது வ்யாபகம் /காரணம் என்கிறது இக்குறட்பா.

பரா -> பஸ்யந்தீ -> மத்யமா -> வைகரீ

காரணம் என்று சொன்னாலே அதன் எதிர்பதமான காரியம் என்னும் பிரதியோகி பற்றிய ஆர்வம் உண்டாகும். தந்தை என்னும் சொல், இவனுக்கு மகனுளன் என்று சொல்லாமலேயே தெரிவிக்கும். கணவன் என்றால் மனைவியுண்டு    என்று சொல்லாமலேயே அறியலாம். படித்தவன் என்றால் என்ன படித்திருக்கிறான் என்னும் ஆர்வம் பிறக்கின்றது. பிரதியோகி என்பது கொடுக்கப்பட்ட ஒரு பண்பின்  எதிர்பண்புக்கு  பாத்திரம் ஆகும். அவ்வாறே அகாரம் என்று சொன்னபொழுது அதனைத் தவிர்ந்த ஏனைய அனைத்து எழுத்துக்கள்(சப்தங்கள்) பற்றிய சிந்தனை பிரதியோகியாக வரும். பிரதியோகியை நிரூபிப்பது அனுயோகியாம். இந்த அனுயோகிக்கு ஆஸ்ரயம் அபாவம். அதற்கும் ஆஸ்ரயம் மூலாதாரமாம் .

அகாரத்தையொழிந்த அனைத்தெழுத்துக்களும் வ்யாப்பியங்கள் (அ) காரியங்கள் ஆவனவாம். அதாவது எந்த ஒரு எழுத்தை உச்சரிப்பதாயினும், அகாரத்தின் துணையில்லாமல்  முடியாது. அகாரம்தான் ஏனைய எழுத்துக்களுக்கு சமவாய, அசமவாய மற்றும் நிமித்த காரணங்களாகும் என்பர் தார்கிகர்கள். ஆனால் உபாதானம், ஸஹகாரி, நிமித்தம் = அம்மூன்று காரணங்களாவன  என்று வேறுவகையாக சொல்பவர்  வேதாந்திகள் ஆவர். குறட்பாவில் “முதற் றுலகு என்று எழுதாமல்  முதற்றே  உலகு என்று எழுதியமை காணீர். ஏகாரம் == மட்டும்/ மாத்திரம்  என்னும் பொருளில் வந்து தேற்றேகாரம் காட்டுகின்றது. இரண்டாமடியில் சொன்ன ஏகாரம் முதலடிக்கும் உபலக்ஷணம்/பொருத்தம் ஆகும். ஏகாரம் இங்கு ஏகாந்திகம் அல்லது சாஹசர்ய நியமத்தை சுட்டுகின்றது. “எழுத்தெல்லாமே  அகர முதல” (அ) “எழுத்தெல்லாம்   அகர முதலவே”  என்று இங்கு பொருள்கொள்ளலாம். “அர்ஜுனனே  வில்லாளி”  என்று ஏகாரத்தினை நடுவில் கூட்டினால் அர்ஜுனன் மட்டும்தான் வில்லாளி என்பதாகும். இதனை “அயோக வ்யவச்சேதம்”  என்பர். இது அகாரம் மட்டுமே தன்னையொழிந்த எழுத்துக்களனைத்திற்கும்  காரணம்/வ்யாபகம் என்று விரியும். “அர்ஜுனன்   வில்லாளியே” என்று பின்னால் ஏகாரத்தினை சேர்த்தால் அர்ஜுனனுக்கு வில்வித்தை மட்டும்தான் தெரியும் என்றும் பொருள் கூடும். இதனை “அன்யயோக வ்யவச்சேதம்” என்பர். இது தன்னையொழிந்த எழுத்துக்களனைத்தும்  அகாரத்திற்கு  மட்டுமே காரியம் / வ்யாப்பியம் /அந்திகம் என்று விரியும்.

Image result for lord narayanan     அவ்வாறே இரண்டாமடியில் ஆதிபகவன் என்னும் ஸ்ரீமந் நாராயணனே (திருவுடன் கூடிய மால்)  வ்யாபகம் (அ) காரணம் ஆகிறார். பிரதியோகிகளான, அவனை ஒழிந்த ஏனைய அனைத்து உயிருள்ள, உயிரற்ற பொருள்கள் வ்யாப்பியங்கள் (அ) காரியங்கள் ஆவனவாம். இதையே பின்னடியில் “உலகு => ஆதி பகவன் முதற்றே” என்று உபமேயத்தில் முடிக்கின்றார். இங்கு சொன்ன “அகாரம்” மற்றும் “ஆதிபகவன்” என்னும் பதங்கள் ப்ரணவத்தில் பயின்று வரும் அகாரத்தைச் சுட்டுகின்றன.

பகவத் ப்தத்தின் விளக்கம்:

பகவான் என்னும் சொல்லின் விளக்கம் விஷ்ணு புராணம் – 6ஆம் அம்சத்தில் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

ஐஶ்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய தர்மஸ்ய யஶஸ ஶ்ரிய: |

க்ஞாந வைராக்யயோஶ்சைவ ஷண்ணாம் பக இதீரணா ||

வஸந்தி தத்ர பூதாநி பூதாத்மந் யகிலாத்மநி |

ஸ ச பூதேஷ்வஶேஷேஷு வகாரார்தஸ் ததோவ்யய: ||

 விஷ்ணு புராணம்- 6-5-74 & 75

பொருள் :    அனைத்துச் செல்வங்கள், அறம், புகழ், திருவுடைமை, ஞானம், வைராக்யம் -இவை ஆறுக்கும் “பக” என்று பெயர். இந்த ஆறு குணங்களும் எவரிடத்தில் பொருந்தி இருக்கின்றனவோ, எவரிடத்தில் உயிர்களனைத்தும் அடங்கியிருக்கின்றனவோ, எவர் உயிர்களனைத்தினுள்ளும் பரவி நிற்கின்றாரோ, அவரே பகவான் ஆவார்.

ஏவமேஷ மஹாந்ஶப்தோ மைத்ரேய பகவாந் இதி |

பரப்ரஹ்ம பூதஸ்ய வாஸுதேவஸ்ய ந அன்யக: ||

தத்ர பூஜ்ய பதார்தோக்தி பரிபாஷா ஸமன்வித: |

ஶப்தோ அயம் நோபசாரேண து அன்யத்ர ஹி உபசாரத:||

— விஷ்ணு புராணம்-6-5-76 &77

பொருள் : மைத்ரேயரே!  இச்சொல் பரம்பொருளான “வாசுதேவன்” ஒருவருக்குத்தான் பொருந்துமே ஒழிய வேறொருவருக்கும் அன்று. பூஜிக்கத்தகுந்தவர்களையும் குறிக்கப் பயன்படுத்தும் இந்த “பகவான்” என்னும் சொல்லானது, வாசுதேவனை முக்யமாக குறிக்க ப்ரயோகம் (நிரூபாதிகமாக / இயற்கையாக) செய்யப்படுகின்றது. மற்றவர்களை குறித்தோவெனில் உபசாரமாக(கௌணமாக, ஔபாதிகமாக, பரிபாஷையில்) செய்யப்படுகின்றது. [எடுத்துக்காட்டாக :-  வஶிஷ்ட பகவான், மநு பகவான், வியாழ பகவான்] என்றிவ்வாறு பராஶர மஹரிஷியானவர் தனது சீடரான மைத்ரேயருக்கு- வாஸுதேவனே-> “பகவான்” என்னும் ஶப்தத்திற்கு உரியவன் என்று உபதேசிக்கின்றார்.

ஆகவே அகாரத்தினால் சொல்லப்படுபவன் திருவுடன் கூடிய மால் ஆவான். “எழுத்தெல்லாம் ”மற்றும் “உலகு” என்னும் பதங்கள் ப்ரணவத்தில் பயின்று வரும் மகாரத்தைச் சுட்டும். மகாரத்தினால் சொல்லப்படுபவன் ஜீவன் ஆவான். ஜீவர்களின் பன்மையை எழுத்துக்களின் பன்மை விளக்குகின்றது. எனவே ஜீவாத்மாக்கள் பலராவர். ஏகாரம் ப்ரணவத்தில் சொல்லப்படும் உகாரத்தைச் சுட்டும். அதாவது ஜீவாத்மா பரமாத்மாவினால் மட்டுமே உருவாக்கப்பட்டவன். (ஜீவனுக்கு ஒரு உடலுடன் சேர்த்தியே படைப்பு ஆகும். அவ்வுடல் விழுதலே லயம் ஆகும்.)   எனவே அவ்வாறு தன்னை உருவாக்கிய  பரமனுக்கு மட்டுமே ஜீவனாவன்  தொண்டன் / அடிமை / பாரதந்தர்யன்  ஆகிறான். தன் இஷ்டப்படி ஸ்வதந்த்ரன் அல்லன் என்பது ப்ரணவம் சொல்லும் விவரங்களில் ஒன்றாகும். ( பிரணவத்தை விரித்தால் அது முழு வேதத்திற்கும்  பொருளாகும், இப்பிரபஞ்சத்தினையும்  சுட்டும் என்கிறது சாந்தோக்ய உபநிஷத்.  எனவே நமது கட்டுரை பொருளுக்கு உரிய விவரங்களை மட்டும் பார்ப்போம். விரித்தால் மஹாபாரதமாம்.). அதாவது உலகிற்கு திருமால் ஒருவனே அனைத்துவித காரணமாவான் என்றும் திருமாலுக்கு மட்டுமே  இந்த உலகு அடிமைப்பட்டது என்றும் விரியும். இதைத்தான்

அவ்வானவருக்கு மவ்வானவர் எல்லாம்

உவ்வானவர் அடிமை என்றுரைத்தார் – இவ்வாறு

கேட்டிருப்பார்க்கு ஆளென்று கண்டிருப்பார் மீட்சியிலா

நாட்டிருப்பார் என்றிருப்பன் நான்.

– பிரமேயஸாரம் -1

  என்று அருளிச் செய்தார் அருளாளப் பெருமாள் எம்பெருமானார்.

அகாரம் == ஸ்ரீமந் நாராயணன் ; மகாரம் ==ஜீவன் ; உகாரம் == மட்டும்; இங்கு லுப்த சதுர்த்தி மறைந்துள்ளது என்கிறது  வடமொழி சந்தி இலக்கணம். அதனை தமிழில் “கு” என்னும் நான்காம் வேற்றுமை உருபு என்பர் பெரியோர். எனவே ஜீவனானவன் பரமனுக்கு மட்டுமே 1)விஶேஷ்யம், 2)ரக்ஷிக்கப்படுபவன்,

3)தொண்டன், 4)பார்யா,5)அறியப்படுபவன், 6)சொத்து,7)ஶரீரம், 8)தாங்கப்படுபவன், 9)போகப்பொருள் என்கிறது ஸ்வாமி.பிள்ளைலோகாசார்யர் அருளிய “நவவித சம்பந்தம்” என்னும் நூல். அகாரம் ஏனைய அனைத்து அக்ஷரங்களையும் வ்யாபிப்பது போல விஷ்ணு என்றால் அனைத்து உயிருள்ள, உயிரற்ற வஸ்துக்களை வ்யாபித்தவன் என்று பொருளாகும். இங்கு வ்யாபகம் என்றால் சமவாயி,அசமவாயி, நிமித்த காரணமாகும். எனவே ஒரு ஜீவன் தனக்கு அநாதி காலமாய் வந்த ஸ்வாதந்தர்யத்தினை விட்டு, தன்  உடல், பொருள், ஆவி இவற்றை  தனக்களித்த

பரமனின் உகப்புக்காக மட்டுமே  பயன்படுத்துதல்  பாரதந்தர்யமாகும். அந்த பரமனானவன் தன்னை துன்புறுத்தி, வாளாவிருந்தாலும் அதனை சோதனைகளாக அறிந்து அவனுக்கே அற்றுத்  தீர்வது அப்ரதிபந்தக   பாரதந்தர்யமாகும். தன்னிச்சைப்படி நடக்கும் ஸ்வாதந்தர்யம் என்பது வ்யபிசாரம்/அநைகாந்திகம் ஆகும். அதற்கு தண்டனையாக பாப, புண்ணியங்கள் என்னும் தளைகள் ஸம்ஸ்கார வடிவில் ஜீவனை ஸம்ஸாரத்தில்  அழுத்துகின்றன.

ஆனால் பாரதந்தர்யம் என்னும் தொண்டுள்ளம் வ்யாப்தி அறிவால் விளைவதாகும்.

இதற்கு பலனாக மோக்ஷம் (அ) கர்மங்களிலிருந்து விடுதலை கிட்டும்.

[குறிப்பு : ஓம் என்பது வடமொழி சப்தமாகும். இதனை ஒரு மாத்திரை(ரிக்), இரு மாத்திரை(யஜுஸ்) அல்லது மூன்று மாத்திரை(ஸாமம்) அளவுகளில் உச்சரிப்பர். இதனை பிரெஞ்சிலும், பார்சியிலும்,ஜப்பாநீஸிலும் கூட  உச்சரிக்கலாம். ஆனால் அதன் முழு தாத்பர்யத்தினை  வேதம் மற்றும் அதன் ஆறங்கங்கள், உபாங்கங்கள் கொண்டு மட்டுமே அறிய முடியும். தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடத்தினாலல்ல. இவ்வாறு சொல்வது மற்றைய மொழிகளுக்கு குறையுமல்ல. இரவியானவன்    கிழக்கில் உதித்தால் வடக்கிற்கு ஒரு கேடுமில்லை என்பது போல. தாவர செல்லினை எலக்ட்ரான் மைக்ராஸ்கோப்   கொண்டு அறிதலும், வெறும் கண் கொண்டு ஆராய்தலும் ஒன்றல்ல.]

பின்குறிப்புமறந்தும் புறந்தொழாமை

அயோத்யாகாண்டத்தில் “ரூப ஔதார்ய குணை: பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணம்” என்பது வெகு அற்புதமான ஸ்லோகம். ஶ்ரீராமர் வடிவழகு முதலிய குணங்களால் எல்லாருடைய கண்ணையும், நெஞ்சையும் கவருபவன் என்று சொல்லவேண்டியிருக்க, மஹரிஷி அப்படிச் சொல்லாமல் “பும்ஸாம்” என்று விஶேஷித்துக் கூறியுள்ளார். (பும்ஸாம் = ஆண்களுக்கு என்றபடி) ஆண்களுக்கு தான் அவன் மநோஹரனேயொழிய பெண்களுக்கு மநோஹரனல்லன் போலும் என்று நினைப்பர். அது பிசகு. வடமொழி நூலார் “தண்ட அபூபிகா ந்யாயம்” என்றொரு ந்யாயம் சொல்வர். தண்டம் = தடி; அபூபம் = வடை. அதாவது ஒரு கிழவர் தம்முடைய தடியொன்றில் வடையை மாட்டி வைத்து இரவில் உறங்கினாராம். காலையிலெழுந்து வடையை உண்பதற்காக தடியைத் தேடினாராம். தடி எலியினால் உட்கொள்ளப்பட்டது என்றறிந்து அதனைத் தமது மனைவியிடம் சொன்னார். அது கேட்ட மனைவி –“தடி போனால் போகிறது! வடை இருக்கிறதா?”- என்று கேட்டாராம். அதற்கு கிழவர் விடையிறுத்தார் –“அடி மூடமே! தடியே எலியினால் விழுங்கப்பட்டது என்றால் வடை எம்மாத்திரம்” என்று. மேற்கூறிய ஸ்லோகம் இந்த நகைச்சுவை நிகழ்ச்சியையும், தண்ட அபூபிகா ந்யாயத்தையும் நினைப்பூட்டுகின்றது.

இப்பொழுது “மறந்தும் புறந்தொழாமை” என்னும் லக்ஷணத்திற்கு வருவோம். திருமால் சோதிக்கும் காலத்தில், தன் பக்தர்களை மறந்துபோனது போல அலட்சியம் செய்தாலும், புறந்தொழாதவர்கள், அவன் அனுக்ரஹிக்கும் காலத்திலா புறந்தொழுவார்கள் ? மாட்டார்கள். அவ்வாறே சிறையிருந்தும், பிரிந்தும் பெருமாளைப் பிரிந்த அவஸ்தையிலேயே பாரதந்த்ர்யம் அனுஷ்டித்தவள், சேர்ந்திருக்கும் காலத்திலும் வாசியற அவ்வாறே பாரதந்த்ர்யம் அனுஷ்டித்து இருந்தாள் என்று மஹரிஷி தன் இதிஹாஸத்தில் காட்டுகின்றார்.

தர்க்கத்தின் இன்றியமையாமை : இக்கட்டுரையில் பயின்றுவரும் பல தர்க்கபதங்கள், அரிய பொருள்கள் தருபவை என்பதை உணர்ந்துள்ளேன். பல சொற்கள் விளக்கப்படவில்லை. விரிவுக்கஞ்சி விடப்பட்டன. வாசகர்களின் ஆதரவு இருக்குமாயின், “தர்கசங்க்ரஹம்” என்னும் நூலினை, தமிழில் பிற்பாடு எழுதுகின்றேன். அங்கு எல்லா விவரங்க்களும் பெறலாம். மானுடர்களுக்கு SYNESTHESIA என்றொரு அவஸ்தையுண்டு. மூளையில் “நிறம்” அறியும் பாகமும், “எண்களை” அறியும் பாகமும் சில ந்யூரான்களால் இணைகப்பட்டிருத்தலே SYNESTHESIA ஆகும். இது கோடியில் ஒருவருக்கு நிகழும் கொடையாகும். அவர்கள் எண்களை கண்டால் கூடவே நிறமும் தெரியும். எடுத்துக்காட்டாக எழுத்துக்கள்  கரும்பலகையிலோ (அ) வெண்பலகையிலோ (அ) வேறெங்கிலோ(TELEPHONE DIRECTORY), அவை எந்த நிறத்தில் காணப்பட்டாலும், 5 ஐ நீலமாகவே, 2 ஐ சிகப்பாகவே, 7 ஐ மஞ்சளாகவே  காண்பது, என்றிவ்வாறு இருவித அனுபவம் பெறுவர். பல சிற்பிகள், ஓவியர், கவிஞர், அறிஞர் பெருமக்களுக்கு அவர்தம் மூளையில் அந்தந்த பாகங்களில் ஏற்படும், கூடுதல் ந்யூரான்களின் இணைப்பு, அந்தந்த திறங்களை, பிறப்பிலேயே வந்த கொடையாக, இந்த SYNESTHESIA தான் சாத்தியப்படுத்துகின்றது. ந்யூரான்-இணைப்பு என்னும் வ்யாஜத்தில், நமக்கும் அவர்களுக்கும் பாரிய வேறுபாடுண்டு. விலங்குகளுக்கு பலவண்ண நிறங்காணும் கண்ணில்லை(மூளையில்லை). அவற்றுக்கு பார்வையே கருப்பு-வெள்ளைதான் (GRAY VISION). இவ்வாறெல்லாம் நமது புலனறிவு சுருங்கவும் விரியவும் நமது கர்மங்களே

காரணங்களாகின்றன.

அவ்வாறே இறைவனைப் பற்றி வெறும் வார்த்தைகளால் அறிவது என்பது சர்க்கரை என்று வாசித்து அறிவது போன்றதாம். சர்க்கரையினை நாக்கில் வைத்து  சுவைத்தாலன்றி அதன் முழு அனுபவம் கிட்டாது. மத்திய ஐரோப்பா, மத்திய ஆப்பிரிக்கா நாட்டில் வசிக்கும், ஒருவன் கடலையே பார்த்தறியாது இருப்பதாக எடுத்துக்கொள்வோம்(சினிமா/வீடியோ இல்லாத காலம்). அவன் விமானம் ஏறி கடற்கரை அமைந்த நாட்டிற்கு வர வேண்டும்(உதாரணம்-தமிழகம்-சென்னை). பின்பு கடற்கரை உள்ள பகுதிக்கு வர வேண்டும்(மெரினா). பின்பு மணலில் நடந்து அதன் அருகாமையில் சென்றால்தான், கடல் பற்றிய ப்ரமிப்பு உருவாகும். அதன் எல்லையற்ற பரப்பு, எல்லையற்ற நீளம், எல்லையற்ற ஆழம், எல்லையற்ற நீரின்கொள்ளளவு, அதில் வசிக்கும் எல்லையற்ற ப்ராணிகள், அதில் உண்டாகும் எல்லையற்ற  செல்வங்கள் –முத்து, பவழம், உப்பு போன்றன என்று அதன் முடிவின்மை பற்றிய அனுபவம் கிட்டும்.

வடமொழி பயிலுங்கள்:          ஒரு ராக்கெட்டில் ஏறி விண்வெளியில், ஒரு குறிப்பிட்ட திசையில் செல்பவன்,அவன் ஆயுளுக்கும், அதே திசையில் பறந்தாலும், (DEAD END,PLEASE GO BACK) =முட்டு சந்து! எனவே, வந்த வழியே திரும்பி செல்க! என்றொரு பலகை-குறிப்பு கிட்டாது.   அப்பொழுதுதான் அவனுக்கு முடிவின்மை பற்றிய அனுபவம் கிட்டும். இவ்வாறான பலவிதமான முடிவின்மை பரிமாணமுள்ளவன் எம்பெருமான். அவனுடைய முடிவின்மையை பாணினி மஹரிஷி அளித்த  வ்யாகரணம், கௌதம மஹரிஷி கொடுத்த தர்க்கம், ஜைமினி மஹரிஷி அளித்த பூர்வமீமாம்சை மற்றும் வேதவ்யாச மஹரிஷி அருளிய உத்தரமீமாம்சை என்னும் பரிமாணங்கள் கொண்டு அறியும் பொழுது பிறக்கும் வியப்பு/அனுபவம் மிகவும் அலாதியானது. இவ்வாறான பல்வேறு ஆந்த்ரபுலனறிவு வழிகளை திறந்தபின்னர் ஆழ்வார்கள் பாசுரங்களுக்கு ஆசார்யர்கள் அருளிய வ்யாக்யானங்களை பயின்றால் “ஆஹா! …என்னே அந்த பிறவியின் பலன்!!!அப்பொழுது புரியும் நமது தாய்மொழியாம்

 தமிழின் அருமையும் சுவையும்.

“இறைவனை முழுமையாக அறிய முடியாது” என்பவன்தான் அவனை முழுக்க அறிந்தவனாவான். “இறைவனை முழுமையாக ஸ்தோத்கரிக்க முடியாது” என்றறிந்தவன்தான் அவனை முழுக்கப் புகழ்ந்தவனாவான்-என்கிறது கேன உபநிஷத். எனவே ஆன்மீக வாசகர்கள் அவசியம் வடமொழியைக் கற்க வேண்டுமென்று அன்புடன் கோருகின்றேன்.

[தொடரும்]

<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>

2 Replies to “ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 3”

  1. CUT & PASTE தவறு ஏற்பட்டுள்ளது.
    “வெறுமனே மனத்தில் இருப்பது ஸ்தூல வைகரீ” என்னும் சொற்றொடரை “வெறுமனே மனத்தில் இருப்பது ஸூக்ஷ்ம வைகரீ” என்று படிக்கவும்.

  2. ஐயா ,
    மன்னிக்கவும் !
    /**“இறைவனை முழுமையாக ஸ்தோத்கரிக்க முடியாது” என்றறிந்தவன்தான் அவனை முழுக்கப் புகழ்ந்தவனாவான் .**/
    இந்த வரியானது “இறைவனை முழுமையாக ஸ்தோத்கரிக்க முடியாது” என்று கவி எழுதியவன் அல்லது ஸ்லாகித்தவன் தான் அவனை முழுக்கப் புகழ்ந்தவனாவான்” என்று வர வேண்டும் .

    நன்றி ,
    கெணேசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *