நீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 3

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி…

அரசுப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்

தற்போதைக்கு நல்ல கல்வி நிறுவனங்களை அமைக்க முடியாதவர்களுக்கு இருக்கும் ஒரே தேர்வு அரசு பள்ளிகள் மட்டும் கல்லூரிகள் தான். அரசு கல்விநிறுவனங்கள் என்றாலே பலரும் முகம் சுளிப்பார்கள். ஆனால் நாம் மற்றொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பலரும் தனியார் பள்ளிகளில், அதிலும் கோழிப்பண்ணை பாணி பள்ளிகளில் பல் லகரங்கள் கொடுத்து தாங்களும் கஷ்டப்பட்டு தங்கள் குழந்தைகளையும் கொடுமைப்படுத்துவது அரசு பொறியியல் கல்லூரி அல்லது அரசு மருத்துவ கல்லூரியில் தங்கள் குழந்தைகள் சேர வேண்டும் என்பதால் தான். அரசால் நடத்தப்படும் உயர்கல்வி நிறுவனங்கள் என்றல்ல; மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பல பெற்றோர்களும் அதி ஆர்வமாக உள்ளனர். முன்னர் எம்பிக்களுக்கு எதோ கோட்டா இருந்ததாக நினைவு. அந்த கோட்டாவை பயன்படுத்திக்கொள்ள பலரும் அலைந்து திரிவார்கள். ஆக, அரசால் ஓரளவிற்கு தரமான கல்வி நிறுவனங்களை உருவாக்கவும் நடத்தவும் முடியும் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விஷயம். அத்தகைய நிறுவனங்களில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதில் பெற்றோர்களுக்கும் பிரச்சனை இல்லை. ஏன் கேந்த்ரா வித்யாலயா நன்றாக இருக்கிறது? ஏன் அரசு பள்ளிகளில் அந்த அளவிற்கு தரம் இல்லை? என்று நாம் யோசிக்கவேண்டும். கேவிக்கள் எந்த விதமான நுழைவுத் தேர்வு / தரவரிசை பட்டியலும் இல்லாமல் தான் மாணவர்களை சேர்க்கின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை. மத்திய அரசு ஊழியர் என்றால் அடிமட்ட ஊழியர்களில் இருந்து இந்திய ஆட்சி பணி அதிகாரி அனைவரும் அடக்கம். ஆகவே அவர்கள் நன்றாக படிக்கும், வசதியான மாணவர்களை மட்டும் தேடிப்பிடித்து எடுக்கவில்லை என்பது தெளிவு. மத்திய அரசின் பள்ளிகளுக்கும் மாநில அரசின் பள்ளிகளுக்கும் இடையே உள்ள பெரிய இடைவெளியை சீர் செய்ய வேண்டியது அவசியம்.

நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மாநில அரசு பள்ளிகளுக்கான பொற்காலங்களும் இருந்தன. உதாரணத்திற்கு நாகர்கோவில் எஸ் எல் பி பள்ளியில் ஆறாம் வகுப்பில் மட்டும் 10 பிரிவுகள் இருந்தகாலம் இருந்தது. இருபது வருடங்களுக்கு முன், அங்கே, மாணவர்கள், ஆறாம் வகுப்பில் சேர நுழைவு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று தர வரிசை பட்டியலில் வரவேண்டும். அந்த நுழைவு தேர்விற்கென்று தனி பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் இருந்தனர். ஒருஆறாம் வகுப்பு சீட்டிற்காக முதல்வர் அலுவலுகத்தில் இருந்து சிபாரிசு வந்த கதையை எல்லாம் அப்பள்ளியின் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் என்னிடம் கூறி உள்ளார். நான் இன்று குறிப்பிடுவது ஒரு உதாரணம் மட்டும் தான். இது போல தமிழகம் எங்கும் கொடிகட்டி பறந்த அரசு பள்ளிகள் இருந்தன. இன்றோ, எப்படியாவது குறைந்தபக்ஷ எண்ணிக்கை மாணவர்களை கணக்கில் காட்டி இட மாறுதலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதே பல தமிழகத்தில் உள்ள பல அரசு பள்ளி ஆசிரியர்களின் கவலை.

பிரச்சனை எங்கிருந்து தொடங்கியது?

1) தமிழகம் எங்கும் காளான்களை போல முளைத்த தனியார் ஆசிரியர் கல்லூரிகள்

2) அவற்றில் பெரும் பணம் கொடுத்து படித்து மேலும் பணம் கொடுத்து வேலை, இடமாற்றம் ஆகியவற்றை வாங்க தயாராக உருவான ஒரு தலைமுறை

3) வகுப்பில் மிகச்சிறந்த மாணவன் ஆசிரியர் பணிக்கு போவான் என்ற நிலை மாறி வகுப்பில் படிக்கவே படிக்காத சோம்பேறிக்கான வேலை ஆசிரியர் வேலை என்ற எண்ணம்

4) வலுவான ஆசிரியர் சங்கங்கள் ஏறத்தாழ ஒரு சிண்டிகேட் போல செயல்பட தொடங்கியதில் விளைவு

5) தேர்தல் பணியில் ஈடுபடும் இவர்களை பகைப்பது ஆபத்து என்ற எண்ணம் கொண்ட அரசுகள்.

இந்த பிரச்னைகளை ஒரே நாளில் சரி செய்து விட முடியாது. முதலில் ஆசிரியர் பணிக்கு லைசென்சிங் முறையை கொண்டு வர வேண்டும். அரசு பள்ளியோ தனியார் பள்ளியோ, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை, கற்பித்தல் தொடர்பான பாடங்கள், அவர்களது சிறப்பு தகுதி பாடங்கள் இவற்றில் பரீட்சை எழுதி தேர்ச்சி அடைந்தால் மட்டுமே அடுத்த மூன்று வருடங்களுக்கு பாடம் எடுக்க முடியும் என்பதை சட்டமாக்க வேண்டும். வருடத்தில் ஒருமுறை மனநல பரிக்ஷையும் செய்ய வேண்டும். இது பாதி பிரச்னையை தீர்த்து விடும். முகநூல் போராளிகள் தங்கள் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள பெற்றோர் ஆசிரியர் கழகம் வழியாக எதாவது நல்ல காரியத்தில் ஈடு பட முடியுமா என்று பார்க்கலாம். பைசா செலவு இல்லாத சில காரியங்கள் உண்டு. உதாரணத்திற்கு, ஒழுங்காக பள்ளிக்கு வராத ஆசிரியர்களை குறித்து மாவட்ட ஆட்சி தலைவருக்கு புகார் கடிதம் அளிக்கலாம். மேலும்,ஆசிரியர்களுக்கு கற்றல்,கற்பித்தல் அல்லாத வேறு எந்த பணியிலும் ஈடு படுத்தக்கூடாது. மூன்று வருடங்களுக்கு மேல் அவர்களை நிர்வாக பணிக்கு அனுப்பக்கூடாது.

****

சில வேளைகளில், பள்ளி கல்வியை சரி செய்கிறேன் என்று இறங்கும் அதிகாரிகள் அதனை இன்னும் சீரழிகின்றனர். சிலபல திரைப்படங்களை பார்த்துவிட்டோ, விளம்பர ஆசையாலோ ஆழமற்ற, முதிரா ஆதர்சங்களை கையோடு கொண்டு வரும் அதிகாரிகளை போல கல்வி துறையை சீரழிப்பவர்கள் யாரும் இல்லை. தமிழகத்தில் சில கல்வி துறை அதிகாரிகளும், இந்தியா ஆட்சி பணி அதிகாரிகளும் இத்தகைய கேடுகளை செய்வது மட்டும் இல்லாமல் அதனை ஒரு சாதனையாகவும் கருதுவார்கள். கல்வி குறித்து எந்த அடிப்படை தெளிவும் இல்லாத திருவாளர் பொதுஜனமும் இவர்களுக்கு பேனர் வைத்து கொண்டாடுவார்கள்.

அரசியல் ரீதியாக சரியாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் உண்மை என்னவென்றால் ஒரு சாதாரண வகுப்பில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சியடைய மாட்டார்கள் என்பது தான். 100 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவன் ஒருவனாவது இருப்பான். அதே போல 30 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவன் ஒருவனும் இருப்பான். மாணவர்களுக்கு பிரச்சனை புரிந்து கொள்வதில் என்றால், அதனை ஓரளவிற்கு தான் வகுப்பறையில் வைத்து சரி செய்ய முடியும். மெல்ல படிக்கும் மாணவன் (slow learner) எனில் வீட்டில் பெற்றோர்கள் அக்கறை எடுத்து ஓரளவிற்கு இதனை சீர் செய்யலாம். இல்லாவிட்டால் கூட ஒருவருடம் ஆகத்தான் செய்யும். இதில் பெரிய தவறு ஏதும் இல்லை. இத்தகைய மாணவர்களை சராசரி மாணவர்களின் வேகத்தில் படிக்க சொல்வது மிகப்பெரிய கொடுமை. இதனை பெற்றோர்களும் அதிகாரிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆசிரியர் பாடம் ஒழுங்காக எடுக்காமல் இருந்தால் அவர் மேல் கடும் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் தேர்ச்சி விகிதத்தை வைத்து ஒரு ஆசிரியரின் மேல் நடவடிக்கை எடுப்பது என்பது மிகப்பெரிய தவறு. இந்த விகிதத்தை கையில் எடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர்களும் ஆசிரியர்களை தொல்லை செய்யத் தொடங்கும் போது அவர்களும் சில பல குறுக்கு வழிகளில் ஈடுபட தொடங்குவார்கள். திறன் என்பதை கை கழுவி விட்டு தேர்ச்சி என்பதற்கு முழு முக்கியத்துவம் கொடுக்க தொடங்குவர். உதாரணத்திற்கு ஒரு பத்தியை மூன்றில் ஒரு பங்காக சுருக்கும் வினா இருக்கும். அவ்வாறு சுருக்கும் திறன் எத்தனை முக்கியம் என்பது நமக்கு தெரியும். ஆசிரியர்களுக்கும் தெரியும். ஆனால் மதிப்பெண் மட்டுமே முக்கியம் என்னும் நிலை வந்தால் திறனை கைகழுவி விட்டு குறுக்கு வழியை காட்டி கொடுத்துவிடுவார்கள். ஒரு வரிக்கு ஒரு வரியை விட்டு எழுத சொல்லிக்கொடுப்பார்கள். கதை முடிந்தது. ஒரு வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் அந்த திறன் இல்லாமல் போகும். இது ஒரு சிறு உதாரணம் தான். எத்தனையோ சொல்லலாம். பள்ளியாக இருந்தாலும் கல்லூரியாக இருந்தாலும் target வைத்தால் நிலவரம் இது தான். பெற்றோர்களும், அதிகார வர்க்கத்தினரும் இதனை புரிந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் 100 மதிப்பெண், அனைவரும் தேர்ச்சி பெறுதல் என்பது நடைமுறையில் பெருங்கேடு.

உயர் கல்வியை பொறுத்தவரையில் நான் மீதும் மீண்டும் கூறும் விஷயம் என்னவென்றால் ஒரு மாணவன் விருப்பப்படுவதை படிப்பதற்கான வழியை காட்டுங்கள் என்பது தான். அத்தனை பேரும் மருத்துவம் படிக்க விருப்பப்பட்டால் அதனை செய்ய முடியுமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உண்மைதான். இன்று அத்தனை மாணாக்கர்களும் ஒன்று மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க ஆசைப்படுகிறார்கள்! ஆனால் இந்த ஆசை இயல்பாக, அவர்களது அடிப்படை ஆர்வம் சார்ந்து உருவானது அல்ல. சற்று விளக்குகிறேன். இருபது வருடங்களுக்கு முன்பு கூட ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆறாம் வகுப்பு அல்லது ஏழாம் வகுப்பு மாணவ மாணவியரிடம் சென்று உங்கள் எதிர்கால லக்ஷியம் என்னவென்று கேட்டால், அதற்கான பதிலில் மருத்துவம், பொறியியல், சட்டம், காவல்துறை, ராணுவம், ஆசிரியப்பணி என்று ஏராளமான பதில்கள் கிடைக்கும். அனால் இன்று அதே கேள்வியை கேட்டால் பொறியியல் அல்லது மருத்துவம் என்ற இரண்டு பதில்கள் மட்டும் தான் கிடைக்கும். ஆசிரியர் பணி போன்றவற்றை எந்த குழந்தையும் பதிலாக கூறாது. காரணம் என்ன? சமூகம் மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகியவற்றை மட்டுமே சிறப்பான தொழில்களாக காண்கிறது. இதன் காரணமாக ஏனைய துறைகளில் ஆர்வம் உடைய குழந்தைகள் கூட இந்த இரண்டு துறைகளை நோக்கி பயணப்பட வேண்டி உள்ளது. இத்துறைகளால் நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே ஆசிரியர்களாகவோ, செவிலியர்களாகவோ வருவார்கள் எனில் அது சமூகத்திற்கும் நல்லது இல்லை. எனவே பொருளாதார அடிப்படைகளை கணக்கில் கொள்ளாமல், சமூக மதிப்பை பற்றி கவலைப்படாமல் ஒரு குழந்தை தனது ஆர்வத்தை மட்டுமே கணக்கில் கொண்டு தனக்கான பாதையை உருவாக்க நாம் வழி செய்ய வேண்டும்.

ஒரு தமிழ் கவிஞர் தனது நினைவு குறிப்புகளில் எழுதி இருந்தார்: +2 வில் நல்ல மதிப்பெண் பெற்ற அவர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுக்க முயன்றபோது அதற்க்கு தடையாக இருந்தது வேறு யாரும் இல்லை; அக்கல்லூரியின் முதல்வர் தான். வலுக்கட்டாயமாக அவரது “மதிப்பெண்களுக்கு ஏற்ற” ஒரு விஞ்ஞான பாடப்ப்பிரிவில் சேர்க்கப்பட்டார். கன்னட எழுத்தாளர் பைரப்பாவிற்கு இது போன்ற ஒரு அனுபவம் ஐம்பது வருடங்களுக்கு முன் ஏற்பட்டுள்ளது. அவர் தத்துவத்தில் இளங்கலை சேர செல்லும் பொது அத்துறையின் தலைவரே தத்துவ படிப்பு வயிற்றை நிரப்ப உதவாது என்று கூறி அவரை ஊக்கமறுக்க முயல்கிறார். அன்று “வயிற்றை நிரப்ப எனக்கு ஆயிரம் வழிகள் தெரியும். வாழ்வு, மரணம் போன்றவற்றின் பொருளை அறியவே தத்துவம் கற்க வந்துள்ளேன்” என பைரப்பா பதிலுரைத்தார். விடாப்பிடியாக தத்துவம் கற்றதால் அவருக்கு மட்டும் அல்ல, இந்திய இலக்கிய உலகிற்கும் பல நன்மைகள் வந்தன. ஒரு நிமிடம் யோசித்து சொல்லுங்கள். உங்களுக்கு தெரிந்த வட்டத்தில் இளங்கலை தத்துவம் படிக்க வேண்டும் என்று கூறும் +2 மாணவர்கள் யாரவது உண்டா? (இளங்கலை தத்துவம் தமிழகத்தில் சில கல்லூரிகளில் உண்டு. அங்கு சில மாணவர்களை எப்படியோ பிடித்துவந்து வகுப்புக்களையும் நடத்துகிறார்கள்). தத்துவ படிப்பில் ஈடுபாடுடைய பதின்ம வயதினர் இல்லை என்றல்ல இதற்கு பொருள்.அத்தகைய விருப்பத்தை கூறுபவர்களை நாம் மனநல விடுதிக்கு அனுப்ப தயாராக இருக்கிறோம் என்பதால் யாரும் இது போன்ற ஆர்வங்களை உரத்து சொல்வதில்லை. அதன் விளைவு பெரும் கேடு. ஆர்வம் எத்துறையில் இருப்பது என்பதை எப்படி கண்டுபிடிக்க என்ன வழி?

அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் வருடத்திற்கு ஒருமுறை மாணவர்களின் பெற்றோர்கள் (அவர்கள் இரண்டாம் வகுப்போ மூன்றாம் வகுப்போ படிக்கும் போது) வகுப்பறைக்கு ஒவ்வொருவராக வந்து தங்கள் வேலையைக் குறித்து மாணவர்களுடன் உரையாட ஊக்குவிக்கப் படுகிறார்கள். இதில் உயர்ந்த வேலை தாழ்ந்த வேலை என்ற பாகுபாடு கிடையாது. இந்த உரையாடல்கள் வாயிலாக குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ஒரு பல்வேறு துறைகளை குறித்த ஒரு சித்திரம் கிடைக்கிறது. பிறகு ஒரு Standardized Career Aptitude Test ஒன்பதாம் வகுப்பிலோ பத்தாம் வகுப்பிலோ நடத்தப்படுகிறது. Career counselor உதவியுடன் ஒவ்வொரு மாணவனும் ஒரு துறையை தேர்ந்தெடுக்கிறான். இந்திய சூழ்நிலை வேறு. பெற்றோர்கள் உற்றோர் உறவினர் ஆசிரியர்கள் தெருவில் போகிறவர்கள் உட்பட அனைவரும் ஒரு பள்ளி மாணவனுக்கு எத்துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உபதேசம் செய்கிறார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில் Career counselor தவிர அனைவரும் புகுந்து விளையாடுகின்றனர். முதலில் இந்த அராஜகத்தை நிறுத்த வேண்டும். இந்த ஆலோசனைகள் அனைத்தும் எந்த துறையில் அதிகம் வேலைவாய்ப்பு உள்ளது அல்லது பணம் பண்ண வழி உள்ளது என்பதை மையமாக வைத்துதான் வரும். இப்படி பணத்தை அடிப்படையாக கொண்டு வழிகாட்டினால், பணம் சம்பாதிப்பதை மட்டுமே லட்சியமாக கொண்டு மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் நுழைந்தால், பிறகு ஒரு கிட்னியை அல்ல இரண்டு கிட்னியையும் திருட என்ன வழி என்று யோசிக்கும் மருத்துவர்களே நகரெங்கிலும் நிறைந்திருப்பார்கள். அதனை வைத்து படம் எடுத்து பணம் சம்பாதிக்கும் நடிகனாலோ, இயக்குனராலோ அடிப்படையை சரி செய்ய முடியாது. பொருளாதார நலன்களை அடைவதற்கான வழியாக கல்வியை நினைக்கவே கூடாது. ஆனால் இன்று அரசாங்கம் தொடங்கி பொது ஜனம் வரைக்கும் அனைவரும் வருமானம் தரும் கல்வி வேண்டும் என்கிறார்கள். இது மிகப்பெரிய அற வீழ்ச்சி மட்டும் அல்ல சமூக சமநிலையை குலைக்கும் செயலும் கூட. அறம், தத்துவம் என்றெல்லாம் பேசினால் நம்மவர்கள் நமுட்டு சிரிப்பை காட்டி சென்று விடுவார்கள். எனவே அவர்களுக்கு புரியும் மொழியிலேயே சொல்லுகிறேன். உங்கள் சக இந்தியர்களும் உங்கள் அளவிற்கு புத்திசாலிகளாகவோ அல்லது முட்டாள்களாகவோ தான் இருப்பார்கள். எனவே அவர்களும் வருமானம் தரும் கல்வியை தான் தங்கள் குழந்தைகளுக்கு தேர்ந்தெடுப்பார்கள். இப்படி அனைவரும் ஓரிரு படிப்புகளில் சென்று குவிவதால் லாபம் அடைவது கல்வித் தந்தைகள் மட்டுமே. கூட்டம் அதிகமாக அதிகமாக தரம் குறையும். வேலை சந்தையில் Saturation ஏற்பட்டு கூட்டதோடு பிச்சை எடுக்க வேண்டியது தான். அதனையும் ஒருவன் வேலை இல்லா பட்டதாரி என்று படம் எடுத்து பணம் பண்ணுவான்.

இயற்கை அதன் வசம் ஒரு சமன்பாட்டினை வைத்துள்ளது. இவ்வுலகிற்கு தேவையான திறன் உள்ளவர்களை அத்துறைகளில் ஆர்வம் உள்ளவர்களாக அது சமமாக படைத்தது வருகிறது. அதில் புகுந்து குழப்பம் ஏற்படுத்தினால் அனைவருக்கும் கஷ்டம் தான். இந்த சமன்பாட்டை அற்ப மானிட அறிவைக்கொண்டு வளைக்க முயன்றதின் விளைவைத்தான் இன்று பார்க்கிறோம். வங்கி குமாஸ்தா வேலைக்கு பொறியியல் பட்டதாரிகள் போட்டி இடுகிறார்கள். நீதிமன்றத்தில் உதவியாளர் பணிக்கு முனைவர் பட்டம் படித்தவர்கள் மல்லுக்கட்டுகிறார்கள். முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு வரக்கூடாது என்பதல்ல நமது வாதம். கல்வியையும் பிழைப்பையும் பொருளாதார அடிப்படையில் தொடர்புபடுத்தி. முடிவெடுக்க கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். இங்கு இத்தகைய நபர்களை சுட்டிக்காட்ட காரணம் என்னவென்றால் பணம் ஒன்றை மட்டுமே குறியாக வைத்து செயல்படுவது எத்தகைய விளைவை தரும் என்றுகூறத்தான். இந்த நபர்கள் எந்த வித ஈடுபாடும் இல்லாமல், அறமும் இல்லாமல் பணிக்கு வருவதால் அதனை உருப்படியாக செய்யவும் மாட்டார்கள்.

மருத்துவர்களின் கதியும் இது தான். மருத்துவ தொழில் தரும் பணம், சமூக மதிப்பு ஆகியவற்றால் உந்தப்பட்டு, அடிப்படை ஆர்வம் இல்லாமல், “ராணுவ ஒழுங்குடன்” ஒரு நாளைக்கு 19 மணி நேரம் படித்து +2 தேர்வு,நுழைவு தேர்வு, மருத்துவ கல்லூரி தேர்வு போன்றவற்றில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தவர்கள் பலர் இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள். மருத்துவ மேற்படிப்பில் நுழைய வேண்டும் எனில் இவர்கள் பாணியில் ஒரு நாளைக்கு 26 மணிநேரம் படிக்க வேண்டும். சொந்தமாக தொழில் செய்யும் திறமையும் இல்லை. தனியார் மருத்துவமனையில் சென்றால் மாதம் 10,000 என்று பேரத்தை தொடங்குவார்கள். வேண்டா வெறுப்பாக அரசு மருத்துவ துறையில் இணைதல் மட்டுமே இவர்களுடைய விதியாக ஒருகாலத்தில் இருந்தது. இப்போது மற்றொரு வழியையும் கண்டுபிடித்துள்ளனர். பழைய பாணியில் மனப்பாடம் செய்து இந்திய ஆட்சிப் பணியில் சேருதல் என்பது தான் அந்த புதிய வழி. மிச்சம் இருப்பவர்கள் மருத்துவ கொள்ளைக்கு தயாராகின்றனர். (கோடி கணக்கில் கொடுத்து சேர்ப்பவர்கள் தனி. அவர்களை குறித்து நாம் பேசவில்லை. கொள்ளை அடிப்பது அவர்களுக்கு “கல்லாமல் பாகம் படும்”). கொள்ளை அடிக்கும் துணிவு இல்லாத சிலர் தங்களை தாங்களே திருமணம் எந்த பெயரில் விற்றுக் கொள்கின்றனர். இதற்கு நேர் மாறாக, ஆர்வத்துடன், ஆர்வத்தின் காரணத்தினால் மட்டும் மருத்துவர் ஆனவர்கள் நோய் நீக்குதல் தரும் ஆனந்தத்தினால் இந்திய திபெத் எல்லை கிராமத்தில் கூட மகிழ்ச்சியோடு வசிக்கின்றனர். ஒவ்வொரு நாளையும் ஆர்வமாக எதிர்கொள்கின்றனர். ஒவ்வொரு நொடியும் புதிதாக எதையாவது கற்று கொள்ள முயல்கின்றனர். இவர்கள் கசப்படைவதில்லை. இவர்களுக்கு பொது மக்கள் இடையிலும் தனியார் மருத்துவமனைகள் இடையிலும் கூட நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீபத்தில் ஒரு நண்பரின் மகள் என்னை காண வந்தார். அந்த மாணவிக்கு மருத்துவம் படிக்க விருப்பம். தந்தையும் படிக்க வைக்க தயார் தான். ஆனால் இருவருக்கும் ஒரு சந்தேகம் .மருத்துவம் படிப்பதற்கான அடிப்படை பண்பு உள்ளதா என்று. அன்று தான் டாக்டர் ரோஹிணி கிருஷ்ணனின் ஒரு பதிவை பார்த்தேன். அவர் கண் மருத்துவர். அவருடைய மருத்துமனைக்கு அவர் OP பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு நபரை கொண்டு வந்திருக்கின்றனர். அவர் அருகில் இருந்த லாரி ஒன்றின் டயர் வெடித்துள்ளது. அதில் நூற்றுக்கணக்கான துகள்கள் அவரது கண்ணில் பாய்ந்துள்ளது. மரு. ரோஹிணி காத்திருந்த OP நோயாளிகளை போகச்சொல்லி விட்டு சுமார் எட்டு மணிநேரம் முயன்று 98 சிறு துகள்களை அவரது ஒரு கண்ணில் இருந்து மட்டும் நீக்கியுள்ளார். மிகக் கடினமான Foreign Object Removal. லக்ஷங்கள் போகட்டும், ஆயிரம் ரூபாய் கூட அந்த நபரிடம் இருந்து வராது என்று தெரிந்தே செய்தார். OP வருமானம் நஷ்டம். கட்டாயம் கடும் முதுகு வலியும், கழுத்து வலியும் ஏற்பட்டிருக்கும். ஒரு நபரின் பார்வையை காப்பாற்றி விட்டோம் என்ற திருப்தி மட்டுமே மிச்சம். நான் இந்த பதிவை அந்த பெண்ணிற்கு வாசிக்க கொடுத்தேன். பணம், சமூக மரியாதை ஆகியவற்றை விட அந்த திருப்தி முக்கியம் என்ற எண்ணம் அவளுக்கு இருக்கிறது எனில் மருத்துவம் படிக்கலாம் என்பது என் கருத்து என்று கூறினேன்.

***

இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கிறது. ஆனால் தொடர பொறுமை இல்லை. இத்துடன் இப்போதைக்கு முற்றும் போட்டு விடலாம் என்று இருக்கிறேன்.

1) பொருளாதார வளத்தையும் கல்வியையும் இணைத்து பார்காதீர். ஏமாற்றமே மிஞ்சும்.இந்த வருடம் வாழைக்காய்க்கு அமோக விலை என்று எண்ணி அனைத்து விவசாயிகளும் வாழை விவசாயத்தில் இறங்கினால் அடுத்த வருடம் வாழைக்காய்களை / பழங்களை ரோட்டில் தான் கொட்ட வேண்டும். இதே கதை தான் கல்விக்கும்.

2) மாறாக ஒவ்வொரு மாணவனுக்கும் எதில் விருப்பமும் திறமையும் இருக்கிறதோ அதனை தேர்ந்து எடுக்க ஊக்குவியுங்கள். விருப்பம் என்பது ஆழ்மனதில் இருந்து வரவேண்டும். புறக்காரணிகளால் வரக்கூடாது.

3) விருப்பப்பட்ட கல்வியை கற்பதற்காக ஒன்றிரண்டு ஆண்டுகள் காக்க வேண்டி இருந்தாலும் பதற்றப்படக் கூடாது. மூன்று கலை மற்றும் அறிவியல் துறைகளில் முதுகலை பட்டமும், ஒரு துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்று ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் போது தான் பால் கலாநிதி மருத்துவம் கற்க முடிவு செய்கிறார். அதன் பிறகு Yale பல்கலைக்கழகத்தில் வெற்றிகரமாக மருத்துவ படிப்பில் சேர்ந்து உயர் மதிப்பெண்களுடன் 30 வயதில் அதனை முடிக்கிறார். பிறகு நரம்பியலில் சிறப்பு பட்டமும் பெறுகிறார். இத்தகைய ஒரு சூழல் இந்தியாவில் வர வேண்டும். பல்கலைக்கழகங்களும் மருத்துவ கல்வி போன்றவற்றிற்கு வயது வரம்பு வைப்பதை நிறுத்த வேண்டும்.

4) மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ மாணவியர் படித்தால் MBBS இல்லாவிட்டால் சுடுகாடு என்ற எண்ணத்தை விடவேண்டும். நோய் தீர்த்தல் உங்கள் லட்சியமாக இருக்கும் எனில் ஆயுர்வேதம், சித்தமருத்துவம் போன்றவற்றை தேர்வு செய்ய தயக்கம் என்ன? என் நினைவு சரி எனில் அந்த படிப்புகளுக்கு வயது உச்ச விரும்பும் கிடையாது.

5) பெற்றோர்களுக்கு : உங்கள் குழந்தைகளை கோழிப்பண்ணை பள்ளிகளுக்கு அனுப்பி அவர்கள் மூளையை மழுங்கடிக்க செய்வதின் மூலம் நீங்கள் உங்கள் வம்சத்திற்கும் இந்திய திரு நாட்டிற்கும் பெரும் கேட்டினை செய்கிறீர்கள். இத்தகைய மாணாக்கர் பலருக்கு critical thinking ability இருப்பதில்லை. அதனாலேயே அறம், அரசியல் நிலைப்பாடு என்று அனைத்தும் அவர்களிடம் இல்லாமல் போகிறது.

6) மருத்துவர் ஆவதற்கான அடிப்படை திறமை மற்றும் மனநிலை இல்லாதவர்கள் மருத்துவர் ஆனால் மக்கள் தொகை குறையுமே தவிர்த்து வேறு பயன்கள் ஏதும் இராது.

7) அரசு கடும் சட்ட விதிகளுடன், தக்க பாதுகாப்பு பிரிவுகளுடன் RMP முறையை கொண்டுவருவதை குறித்து யோசிக்க வேண்டும்.

8) நீட் மட்டும் போதாது. மருத்துவ கல்லூரியில் break முறை, (அதாவது ஒரு தாளில் தோல்வியடைந்தாலும் அடுத்த வருடத்திற்கு செல்ல முடியாது ), இளங்கலை மருத்துவ கல்வி முடித்தவுடனே மருத்துவராக தொழில் செய்வதற்கு தகுதி தேர்வு மற்றும் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பதிவு உரிமம் புதுப்பித்தலுக்கான தேர்வு ஆகியவற்றையும் கொண்டு வர வேண்டும்.

9) ஆரிய சதி, பார்ப்பனர் சதி, காவி சதி என்றெல்லாம் கூறி கோஷம் இடுவதின் மூலம் நீங்கள் உங்களையே ஏமாற்றி கொள்கிறீர்கள். சில வருடங்களுக்கு முன் அரசு தரப்பில் இளங்கலை பொறியியல் கல்வியில் சேருவதற்கான குறைந்த பக்ஷ +2 மதிப்பெண்ணை 35% என்று மாற்ற முயற்சி செய்தார்கள். அதற்கு எதிராக ஒரு வழக்கு நடந்ததாக நினைவு. உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் மாணவர் நன்மைக்காக தான் இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறினார். அதற்கு நீதிபதி “மாணவர் நன்மைக்காக என்று தோன்றவில்லை; ஒருவேளை கல்லூரி உரிமையாளர் நன்மைக்காக இருக்கலாம்” என்று கூறியதாக செய்தி ஒன்றை வாசித்த நினைவு இருக்கிறது. இன்றும் நடப்பது ஏறத்தாழ அதே விஷயம் தான். நீட் இல்லாவிட்டால் தடையற்ற வியாபாரம் நடக்கும். நீட் இருந்தால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையும். இது தான் விஷயம். எடுத்ததிற்கு எல்லாம் இல்லுமினாட்டி சதி முதல் ஆரிய சதி வரை அனைத்தையும் கூறும் அறிவு ஜீவிகள் இந்த எளிய உண்மையை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். அவர்களுக்கு வேறு கட்டாயங்கள் இருக்கலாம். ஆனால் நாம் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

10) “நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்”என்கிறார் திருவள்ளுவர். இந்த தொடர் பதிவுகள் அதற்கான முயற்சியே. அடிப்படையில் ஒரு மாநிலத்தின் பள்ளி கல்வி என்பது ஆசிரியர்கள் வசம் உள்ளது. பாட திட்டத்தை தயாரித்தல், வகுப்பு எடுத்தல், வினாத்தாள்களை தயார் செய்தல், விடைத்தாள்களை மதிப்பிடுதல் அனைத்தும் அவர்கள் வசம் உள்ளது. அவர்களது தரம் என்பது மிக முக்கியமான ஓன்று. ஆனால் TET தகுதித்தேர்வுகளை கண்டு மிரளும் ஆசிரியர்களால் NEET தேர்வை எதிர்கொள்ளும் மனநிலை கொண்ட மாணவர்களை வளர்த்தெடுக்க முடியுமா? எனவே அங்கும் சில சீரமைப்பு வேலைகளை செய்ய வேண்டும். தகுதி தேர்வு மற்றும் கற்பித்தல் உரிமம் புதுப்பித்தல் தேர்வு ஆகியவற்றை பள்ளி ஆசிரியர்களுக்கு கொண்டுவர வேண்டும்.அவர்களை வேறு பணியில் ஈடுபடுத்த கூடாது. ரோடு இருக்கிறதோ இல்லையோ அரசு பள்ளியும் நூலகமும் நன்றாக இருக்க வேண்டும். சரி, தரமான பள்ளி ஆசிரியர்கள் உருவாக வேண்டும் எனில் எது இன்றியமையாதது? தரமான கல்லூரி ஆசிரியர்கள் தான். கல்லூரி ஆசிரியர் பணி இடங்கள் முழுவதும் திறமை அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும். அங்கும் கற்பித்தல் உரிமம் முறையை கொண்டு வர வேண்டும். தேசிய தகுதி தேர்வுகளை அடிப்படையாக கொண்டு நியமனம் நடக்க வேண்டும். இப்போது இருக்கும் vicious circle of incompetence உடைக்கப்பட வேண்டும். சுருக்கமாக கூற வேண்டும் எனில் நீட் தேர்வு தொடர்பாக தமிழகம் இன்று எதிர் கொள்ளும் பிரச்சனைகள் ஒரு நீண்ட கால கொடு நோயின் இறுதி குறி (terminal symptom) இப்போதாவது நாம் தக்க நடவடிக்கை எடுத்து நமது கல்வி அமைப்பை காப்பாற்ற முயல வேண்டும்.

(முற்றும்)

கட்டுரையாசிரியர் அனிஷ் கிருஷ்ணன் நாயர் தீவிர இலக்கிய வாசகர், சிந்தனையாளர்.  தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *