திருவள்ளுவர் ஜெயந்தி [நாடகம்]

மேல் நிலைப் பள்ளி ஹாஸ்டலில் இரவு நேர வகுப்பு தொடங்குகிறது. நிலவெளி இதமாக உலகைத் தழுவிக்கொண்டிருக்கிறது. ஆசிரியர் வகுப்பறையின் ஜன்னல்களையெல்லாம் ஓங்கி அறைந்து சாத்துகிறார். நிலவொளியையும் வெளிக்காற்றையும் தடுத்துவிட்டு டியூப் லைட்டையும் மின்விசிறியையும் இயக்குகிறார்.

இந்தியப் பண்டிகைகள் பாடத்தில் கேரளத்து ஓணம் பண்டிகை பற்றிய வகுப்பு.

‘மகாபலிச் சக்கரவர்த்திக்கு தான்தான் உலகிலேயே மிகப் பெரியவன் என்று கர்வம். எம்பெருமாளோ அந்த கர்வத்தைப் போக்க குள்ள வடிவில் வாமனராக அவதாரம் எடுத்து வந்தார். மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்று அடி  நிலம் கேட்டார். மகாபலியோ அவருடைய குள்ள உருவத்தைப் பார்த்து நகைத்து மூன்றென்ன மூவாயிரம் அடி கூடத் தருகிறேன் என்று சொன்னான். எம்பெருமாளோ வேண்டாம் மூன்றடி மண்ணே போதும் என்று பணிவுடன் கேட்டார். சக்கரவர்த்தியும் தந்தேன் தானத்தை என்று சொல்லி கமண்டலத்தில் இருந்து நீர் வார்த்தான். எம்பெருமாள் சட்டென்று விஸ்வரூபம் எடுத்தார். முதல் அடியில் இந்தப் பூவுலகம் முழுவதையும் அளந்தார்… சக்கரவர்த்தி அதிர்ச்சியில் உறைந்தான். அடுத்த அடியில் ஆகாசம் முழுவதையும் அளந்தார். மகாபலி  வாய்பிளந்து நின்றான். அவருடைய ஆணவம் அடங்கியது. வந்தது எம் பெருமாள் என்பது தெரியாமல் எள்ளி நகையாடிவிட்டேன். அதோடு நான் தான் உலகிலேயே பெரியவன் என்று கர்வத்தில் இருந்துவிட்டேன். மன்னியுங்கள்… என்று கை கூப்பி வணங்கினார். கொடுத்த வாக்குத் தவற விரும்பவில்லை. மூன்றாவது அடியை  என் தலை மேல் வையுங்கள் என்று சிரம் தாழ்த்தி நின்றார். மண்ணையும் விண்ணையும் அளந்த பெருமாளின் காலடி பட்டால் என்ன ஆகும்? மகாபலி அப்படியே பாதாளலோகத்தில் போய் விழுந்தார்.

தன் பிரஜைகள் மேல் மிகுந்த அக்கறை கொண்டிருந்த மகாபலி பெருமாளிடம் ஒரு வரம் கேட்டார்… என் பிரஜைகளை நான் ஆண்டுக்கு ஒரு தடவையாவது வந்து பார்த்துச் செல்ல அனுமதி தாருங்கள் என்று கேட்டார். உலகளந்த பெருமாளும் நல்கினேன் என்று வரம் அருளினார். அன்றிலிருந்து சிங்க வருடம் திருவோண நட்சத்திர நாளில் மகாபலி வருடா வருடம் வந்து தன் பிரஜைகளைப் பார்த்துச் செல்கிறார். அவருடைய வருகையைத்தான் கேரளாவில் ஓணம் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள். வருடம் முழுவதிலும் என்னதான் சிரமங்கள் இருந்தாலும் சக்கரவர்த்தி வரும் அந்த தினத்தில் புத்தாடை அணிந்து பூக்கோலம் போட்டு நகரையே சொர்க்கமாக்குவார்கள். மக்கள் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து மகாபலி மிகுந்த மன நிறைவுடன் பாதாள உலகம் திரும்புவார். மகாபலியை மகிழ்வித்த மன நிறைவுடன் மக்களும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள்.

அது தப்பில்லையா சார்..?

எது தப்பு… ஏன்..?

வருடத்தின் மீதி நாட்களில் எல்லாம் கஷ்டப்படும் ஒருவர் அன்று மட்டும் சந்தோஷமாக இருப்பதுபோல் நடிப்பது தவறு அல்லவா..?

மகாராஜா வரும்போது நாம் பசியும் பட்டினியுமாக, அலங்கோலமாக இருந்தால் அவர் மனம் வருத்தப்படுமே…

அதெப்படி மக்களின் மீது அக்கறை உள்ள மன்னர் என்றால் அவர்களுடைய உண்மைநிலையைத் தெரிந்துகொள்ளத்தானே விரும்புவார். அப்படியானவரிடம் போய் சந்தோஷமாக இருப்பதுபோல் ஏன் நடிக்கவேண்டும்?

அது சரிதான்… ஆனால், அவருடைய வருகையை ஒட்டி மக்கள் அனைவரும் தமது வேற்றுமைகளை மறந்து வெறுப்பு விருப்புகளைத் துறந்து ஒன்று சேர்வதன் மூலம் மக்களிடையே நல்லுறவு ஏற்படும். அதை அவர் சென்ற பிறகும் தொடர்ந்து பின்பற்றுவது மக்களுக்கு நல்லதாக அமையும்… அந்த வகையில் அந்தக் கொண்டாட்டம் மிக மிக அவசியமானதுதான் இல்லையா.

ஆனால், மக்கள் வருடா வருடம் அவர் வரும்போது ஒற்றுமையாக இருக்கிறார்கள். அவர் போன பிறகு சண்டைபோட்டுக்கொள்கிறார்கள். வேஷம் போட்டு அவரை ஏமாற்றத்தானே செய்கிறார்கள். அப்படியானால் யாரேனும் ஒருவராவது, ”மகா பலிச் சக்கரவர்த்தியே உம்மை மக்கள் ஏமாற்றுகிறார்கள்’ என்று எடுத்துச் சொல்லத்தானே வேண்டும்…

அது சரி… நீ போய் சொல்லு…

நான் நிச்சயம் சொல்வேன். ஆனால், அவருக்குத் தமிழ் தெரியுமா?

தமிழின் கிளை மொழிதானே மலையாளம்… நன்கு புரியும்.

நம் மரபில் ஏன் யாரும் இதுபோல் வந்து பார்த்துச் செல்வதில்லை…

நம் முன்னோர்களில் யாரும் அப்படி பாதாள உலகுக்கு அனுப்பப்படவில்லையே… அதோடு நாம் சந்தோஷமாக இருக்கிறோம் அல்லவா அதனால் யாரும் வருவதில்லை…

அதுவா அல்லது வந்தால் உண்மையை எடுத்துச் சொல்லிவிடும் ஆட்கள் இங்கு உண்டு என்ற பயமா?

அது இருக்கட்டும்… நம் முன்னோரில் யார் அப்படி வந்து நமக்கு நன்மை செய்ய முடியும்?

ராஜ ராஜ சோழர்..?

அவர் இப்போதுதான் போயிருக்கிறார்.

இன்னும் பின்னால் என்றால், சங்க கால மன்னர்கள் யாரேனும்…

வரலாம்… ஆனால்,  மன்னர்களை அழைத்தால் இந்த மக்களாட்சி காலத்தில் எம்.எல்.ஏ. எம்.பிக்களுக்கு கட்டிங் வெட்டாமல் எதையுமே செய்ய முடியாது. அந்தக் கால மன்னர்களுக்கு கையூட்டு கொடுப்பது பிடிக்கவும் செய்யாது.

தேர்தலில் நின்று ஜெயிக்கலாமென்றால் மக்கள் கூட காசு வெட்டாமல் அவருக்கு வோட்டுப்போடமாட்டார்கள்.

ஆமாம்… தலைவர்கள் எவ்வழி.. மக்கள் அவ்வழி..!

அப்படியானால் வேறு யாரை அழைக்கலாம்..? யோசியுங்கள்… யார் வந்தால் நல்லது… யார் சொன்னால் நம் மக்கள் கேட்பார்கள்.

அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லையே…

நாம் ஒன்று செய்வோம்… ந ம்முடைய வாழ்க்கை நிலை இப்போது இருப்பதைவிட நிச்சயம் மேம்பட்டாக வேண்டும். அதற்கு  யார் உதவ முடியும் என்பதை இறைவனையே தீர்மானிக்கச் சொல்லிவிடுவோம். நம் முன்னோர்களில் நம்மைப் பார்த்தாகவேண்டும் என்ற  ஆசையில் இருப்பவர் யாரோ நம்மீது அதிக அக்கறை கொண்டவர் எவரோ அவரை இறைவனே பார்த்து அனுப்பி வைக்கட்டும்.

குழந்தைகளும் ஆசிரியரும் வட்டமாக நின்றுகொண்டு கைகளைக் குவித்து மனமுருகப் பிரார்த்தனை செய்கிறார்கள்.

வெளியே இடி இடிக்கிறது. வகுப்பறையில் எரிந்துகொண்டிருந்த ட்யூப் லைட் பட்டென்று அணைகிறது. எங்கும் இருள் சூழ்கிறது.

யாராவது போய் அலமாரியில் இருந்து அகல் விளக்கும் தீப்பெட்டியும் எடுத்து வா என்கிறார் ஆசிரியர்.

ஒரு சிறுவன் இருளில் தட்டுத் தடுமாறி ஓடிச் சென்று எடுத்துவருகிறான்.

நாலைந்து முறை உரசியபின் பின் தீக்குச்சி பற்றிக்கொள்கிறது… அகல் விளக்கை ஏற்றப்போகிறான். அருகில் யாரோ வருவது தெரிந்ததும் நிமிர்ந்து பார்ப்பவன் அதிர்ச்சியில் உறைகிறான். தீக்குச்சி வெளிச்சத்தில்  ஐயன் வள்ளுவர் இருளில் இருந்து முளைத்து வருகிறார்! அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் சிறுவனின் கையைப் பற்றி தீபம் ஏற்றுகிறார் திருவள்ளுவர். திரியைத் தூண்டிவிட்டுச் சுடரைப் பிரகாசிக்கச் செய்கிறார்.  சிறுவன் அவர் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான். வகுப்பறையில் இருக்கும் அனைவருமே வள்ளுவரைக் கண்டு அதிசயித்து நிற்கிறார்கள். வகுப்பாசிரியர் விரைந்து சென்று அவர் காலில் விழுந்து ஆசி பெறுகிறார். மடமடவென குழந்தைகளும் ஐயனை வணங்கி ஆசி பெறுகின்றன. வள்ளுவர் அவர்களை தலையில் கை வைத்து ஆசீர்வதிக்கிறார். ஒன்றிரண்டு பெரிய வகுப்பு மாணவர்கள் மட்டும் கைகளைக் கட்டியபடி தள்ளி நின்று பார்க்கிறார்கள்.

ஆசிரியர் அவர்களை வந்து வணங்கும்படி கடிந்துகொள்கிறார்.

நாங்கள் யாரையும் வணங்கமாட்டோம் என்கிறார்கள்.

ஆசிரியர் : வள்ளுவர் நம் ஆசான்… ஆசானை வணங்குதலே நம் மரபு.

உங்களை மாதிரி ஒரு வாத்தி தான இவரு…

ஆசிரியர் சினந்து அவர்களை நெருங்குகிறார்.

வள்ளுவர் : இருக்கட்டும்… சீடர்களுக்கு நான் ஆசான்… மற்றவர்களுக்கு நான் நண்பன் என்று சொல்லி அந்த மாணவர்களின் தோளில் கை போட்டு அரவணைக்கிறார். அந்த மாணவர்கள் முகம் மலர்கிறது.

வணங்கத் தகுந்ததாக இவ்வுலகில் எதுவுமே இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை ஐயனே.

வெறுக்கத் தகுந்ததாகவும் எதுவும் இல்லை என்பதையும் நீங்கள் கற்றுத் தேர்ந்தால் அதுவே மிகப் பெரிய கல்வி .

மாணவன் :  ஐயனே நீங்கள் ஏன் இப்படி திருநீறும் குங்குமமுமாக வந்திருக்கிறீர்கள்?

எம் குல வழக்கம் அது…

நீங்கள் கடவுள் நம்பிக்கை உடையவரா..?

கற்றதனால் ஆய பயனென்கொல் என்று என் முதல் பாக்களே கடவுளைப் பற்றியதுதானே குழந்தாய்.

அது ஒரு சம்பிரதாயத் தொடக்கம்தானே ஐயனே…

ஆசிரியர் : இறை நம்பிக்கை உண்டு என்பது ஏராளமான குறள்களில் தெரிகிறது. ஆனால், நீங்கள் சிவனடியாரா ஐயனே… மனித குலத்தின் பொதுச் சொத்து அல்லவா நீங்கள்… எப்படி சைவ அடையாளத்துடன் இருக்கிறீர்கள்?

விண்ணில் கிளைபரப்பும் மரமென்றாலும் மண்ணில் வேரூன்றியிருப்பதில் என்ன தவறு… சொல்லப்போனால் இந்த மண்ணில் வேரூன்றியிருந்தால் தானே விண்ணில் கிளையே பரப்ப முடியும்?

ஏன் பஞ்சகச்சம் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?

நீங்கள் ஆரியரா… அவர்கள் தான் குதிரையில் ஏறுவதற்கு ஏற்றவகையில் தங்கள் வேட்டியை இப்படித் தார்பாய்ச்சிக் கட்டிக் கொள்வார்கள் என்று சொல்வார்களே…

வள்ளுவர் மெள்ளச் சிரிக்கிறார்.

பக்கத்தில் இருக்கும் இன்னொரு மாணவர்: குமரி முனையில் இருக்கும் ஐயனின் சிலை கூட இந்த பாணியில்தானே வேட்டி கட்டியிருக்கிறது?

அதனால்தான் கேட்கிறேன்.

அதை அமைத்தது திராவிடர் என்று சொல்லிக்கொள்ளும் அரசு அல்லவா..? இந்தக் கட்டு ஆரிய பாணி என்றால் வள்ளுவருக்கு ஏன் ஆரிய பாணியில் வேட்டி கட்டிவிட்டிருக்கிறார்கள்?

இதுதான் என் உடை குழந்தாய்.

ஏன் காவி மேலுடை…

இந்து, பௌத்தம், சமணம் என இந்திய வாழ்வியலின் மங்கலப் புனித நிறம் காவிதானே என்கிறது இன்னொரு குழந்தை.

வள்ளுவர் அந்த பதில்களைக் கேட்டு மெள்ளப் புன்முறுவல் பூக்கிறார்.

வள்ளுவரின் கையில் இருக்கும் நாக கங்கணத்தை ஒரு சிறுவன் தொட்டுப் பார்க்கிறான்.

நாகத்தின் கண்ணில் ரத்தினக் கல் மின்னுகிறது.

ஐயனே ஒரு செல்ஃபி…

செஃபியா… அப்படியென்றால்?

தன்னைத் தானே எடுத்துக்கொள்ளும் படம். அதாவது ”தன் படம்’

படமா அது எதற்கு?

பொதுவாக சாதனையாளர்களைப் புகைப்படம் எடுத்து உலகுக்குத் தெரியப்படுத்த பத்திரிகைகளில் அச்சிட அதைப் பயன்படுத்துவார்கள்.

நீங்கள் என்ன சாதனை செய்தீர்கள் இந்த செல்ஃபி எடுக்க?

கையில் ஒரு போனும் உடம்பில் ஒரு தலையும் இருந்தலே போதும் இந்த செல்ஃபிக்கு…

இது சாதனையா..?

ஆமாம் இதை மட்டுமே சாதிக்க முடிந்தவர்களுடைய படமும் எடுக்கப்படவேண்டுமல்லவா.

நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் மாலை போன்றது. அதாவது தம்பட்டப் படம் அப்படித்தானே.

ஐயனே… அதிகம் யோசிப்பது நல்லதல்ல… இப்போது நீங்கள் மிகப் பெரிய பிரபலம்… எனவே, உங்கள் அருகில் நிற்க வாய்ப்பு கிடைப்பது பெரும் பாக்கியம் . அது பெரிய சாதனைதானே… அதனால் இது தம்பட்டப் படம் அல்ல…

வள்ளுவர் அருகில் ஒவ்வொருவராக வந்து செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள்.

சரி இது இருக்கட்டும். சொல்லுங்கள் எப்படி இருக்கிறீர்கள்… என்னை எப்போதாவது நினைக்கிறீர்களா?

ஆசிரியர் : ஐயனே இது என்ன கேள்வி? தமிழன்  ஐயனை மறந்துவிட்டான் என்றால் மூச்சுவிட மறந்துவிட்டான் என்று அர்த்தம்…  நும் புகழை உலகம் முழுவதற்கும் பரப்பும் அரும் பணியில் தமிழன் அயராது பாடுபட்டுவருகிறான். ஊருக்கு மட்டுமா உலகுக்கே ஒளியூட்டும் ஒப்புயர்வற்ற விளக்கை அல்லவா நீங்கள் தந்து சென்றிருக்கிறீர்கள்.

மகிழ்ச்சி…

(ஒரு சிறுவன் அருகில் இருக்கும் நண்பனிடம் திரும்பி, கபாலி படம் பார்த்திருக்கார் போல இருக்குடா)

ஆசிரியர் அந்த மாணவனை செல்லமாக அதட்டிவிட்டு, ஐயனே நீங்கள் வரும் விஷயம் தெரிந்திருந்தால் வண்ண வண்ண மலர் தோரணங்களாலும் மாவிலை வாழைத் தோரணங்களாலும் அலங்கரித்திருப்போமே ஐயனே…

சரி… இனி ஆண்டு தோறும் என் பிறந்த நாளில் வருவேன்…

நல்லது ஐயனே… நல்வரவாகுக… தென் கடல் முனையில்  133 அடி உயரத்தில் நுமக்குக் கல்லில் ஓர் காவியம் படைத்து வைத்திருக்கிறோம். அதை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்.

நிஜமாகவா…

அப்போது வாசலில் இருந்து ஒரு குரல் : மே ஐ கமின் சார்…

வள்ளுவர் திகைக்கிறார். ஒரு சிறுமி உள்ளே நுழைகிறது.

உன் பெயர் என்ன குழந்தாய்…

மை நேம் ஈஸ் சுகன்யா… ஐ ஆம் ஸ்டடியிங் இன் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட். மை பாதர் நேம் ஈஸ் என சிறுமி டேப் ரிக்கார்டர் போல் ஒப்பிக்க ஆரம்பிக்கிறது.

இது என்ன மொழி..?

இதுதான் இன்றைய உலகின் மொழி.

அப்படியானால் நம் தாய் மொழி…

அதையும் கற்றுத் தருகிறோம்.

அதையும் கற்றுத் தருகிறீர்களா..? அதிலேயே கற்றுத் தருவதில்லையா..?

இல்லை ஐயனே…

ஏன்?

ஊரோடு ஒட்ட ஒழுகல் கல்லாதவர் பல கற்றும் கல்லார் என்று சொல்லியிருக்கிறீர்களே… அதனால் உலகமே ஓடும் திசையில் நாங்களும் ஓடுகிறோம். உலகின் அனைத்து மொழிச் செல்வங்களும் இன்று ஆங்கிலத்தில் சென்று சேகரமாகின்றன. ஆங்கிலம் ஒன்றைப் படிப்பதன் மூலம் உலக மொழிகள் அனைத்திலும் இருக்கும் அறிவுச் சுரங்கத்துக்கு எளிதில் சென்றுவிட முடிகிறது.

அதற்கு ஆங்கிலத்தைப் படித்தால் போதாதா… ஆங்கிலத்திலேயே படிக்க வேண்டுமா என்ன? அதுசரி… அப்படியானால் என் குறள்… அதையும் ஆங்கிலத்திலா படிக்கிறீர்கள்?

இல்லை ஐயனே. நும் தமிழ் எங்கள் மூச்சில் எங்கள் ரத்தத்தில் கலந்திருக்கிறது ஐயனே… உமக்குக் கூட எழுதியவை மறந்திருக்கக்கூடும். 1330 அல்லவா… எமக்கு அவை மனதில் பதிந்த கல்வெட்டுகள்.

ஆசிரியர் சொல்வதை நம்பாததுபோல் வள்ளுவரின் முகம் சற்று சுருங்குகிறது.

நிரூபிக்கிறோம் ஐயனே…

பக்கத்தில் இருக்கும் ஒரு மாணவனைக் கூப்பிட்டு, உழவு என்கிறார் ஆசிரியர்.

மாணவன் அந்த அத்தியாயத்தில் இருந்து மள மளவென ஒப்பிக்கிறான்.

வள்ளுவர் முகம் மெள்ள மலர்கிறது.

ஆசிரியர் : 444 வது குறள் என்ன…

மாணவன் : பெரியாதைத் துணைக்கோடல்… தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை.

879 வது குறள்

இளையதாக முள்மரம் கொல்க களையுநர் கைக்கொல்லும் காழ்த்தவிடத்து.

வள்ளுவருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை…

அந்தக் குழந்தையை உச்சி முகர்ந்து ஆசியளிக்கிறார்.  அந்தக் குழந்தைக்கு ஒரு பரிசு கொடுக்கிறார்.

1330 குறள்களும் எங்களுக்கு மனப்பாடம் ஐயனே என்று குழந்தைகள் உற்சாகத்தில் சொல்கின்றன. வள்ளுவர் அனைவருக்கும் பூக்கள், இனிப்புகள், பொம்மைகள் என பரிசுகள் தருகிறார்.

முதலில் காலில் விழுந்து வணங்காத மாணவன் மட்டும் எதிலும் ஆர்வமில்லாமல் இருக்கிறான். வள்ளுவர் அவனை அருகில் அழைத்து என்ன உன் மனக்குறை என்கிறார்.

உங்கள் குறள்களில் பல சந்தேகங்கள் ஐயனே…

ஏன்.? நான் வாழ்க்கையின் எளிய அடிப்படை தர்ம நியாயங்களைத்தானே சொல்லியிருக்கிறேன்.

ஆசிரியர் : எது.. நீங்கள் சொன்னவையா..? இரும்புக் கவசங்களும் 100 கிலோ எடையுள்ள வாளும் வீரர்களுக்கு தூக்கிச் சுழற்றுவது எளிது… நாங்கள் புல் தடுக்கினாலே கீழே விழுந்துவிடும் பயில்வான்கள். சோளகொல்லை பொம்மைபோல் வைக்கோல் நிரப்பிப் பெரிதாக்கிய உருவங்கள்… துடப்பக்கட்டையைத் தூக்குவதற்கே இரண்டு கை வேண்டும்.

மாணவர் : அது இல்லை ஆசிரியரே… பிறப்பால் வரும் உயர்வு பற்றி நிறையச் சொல்லியிருக்கிறீர்கள். நண்பனைத் தேர்ந்தெடுக்கும்போது நல்ல குடியில் பிறந்தவரா என்று பார்க்கவேண்டும். தூதனைத் தேர்ந்தெடுப்பதில் கூடக் குடிப் பிறப்பைப் பார்க்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறீர்கள். குடிமை, பண்புடமை, குடி செயல்வகைஎன பல அதிகாரங்களில் உயர் குடிப் பிறப்பாளர்களின் குணம் என்றும் உயர்வு என்றும்  எழுதியிருக்கிறீர்கள்.

உயர் குடிகளில் பிறந்தவர்கள் நற்குணங்களுடன் திகழவேண்டும் என்பதைத்தான் நற்குணங்களுடன் இருந்தால் தான் உயர் குடி என்று சொல்லியிருக்கிறேன்.

பிறப்பின் அடிப்படையில் ஒருவரை மதிப்பிடுவது தவறு அல்லவா ஐயனே? ஒருவன் எந்தக் குடியில் பிறந்தாலும் அவனுடைய நடத்தையின் மூலம் தானே மதிக்கப்படவேண்டும்.அந்த வகையில் குணப் பெருமை பற்றி மட்டும்தானே பேசியிருக்கவேண்டும். குடிப் பெருமை பற்றி ஏன் பேசவேண்டும்?

அதையும் சொல்லியிருக்கிறேனே… பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா  செய்தொழில் வேற்றுமையான்  என்றுதானே சொல்லியிருக்கிறேன்.

குண கர்ம விபாசக  என்று யாதவக் கோன் சொன்னதுபோல்…

ஆமாம்.

ஆனால் ஒரு இடத்தில் அப்படிச் சொன்ன நீங்கள் பல இடங்களில்  உயர் குடியின் பெருமை, உயர் குடியில் பிறந்தவர்களின் குணம் என்றெல்லாம் சொல்வதன் காரணம் என்ன..?

நற்குணங்கள் கொண்டவர்களை மட்டுமே உயர் குடியாகக் கருத வேண்டும். பிறப்பாலேயே மட்டுமே அதை உயர் குடி என்று சொல்லக்கூடாதுஎன்று சொல்லிவிட்டுத்தானே சொல்லியிருக்கிறேன். படிக்காத மேல் வகுப்பினனைவிட படித்த கீழ் வகுப்பினன் மேல் என்றும் சொல்லியிருக்கிறேனே.

ஆனல், அந்தத் தெளிவுகள் வேறு பல குறட்களில் இல்லையே. பிறப்புக்கே முக்கியத்துவம் கொடுத்ததுபோல் தெரிகிறது ஐயனே…

ஒருவருடைய குண நலன்கள், திறமைகளைத் தீர்மானிப்பதில் பல காரணிகள் பங்கு வகிக்கின்றன. பிறப்பும் ஒரு காரணி. அதை இல்லையென்று எப்படிச் சொல்ல முடியும்? அதோடு எங்கள் காலத்தில் குடிகளும் குலங்களுமே நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டும் சக்திகளாக இருந்தன. ஆனால் அன்றுமே கூட நான் பிறப்பின் அடிப்படையில் மட்டுமே மதிப்பிடுவதுதான் தவறு என்று பல இடங்களில் சொல்லியிருக்கிறேனே.

அதுசரிதான். ஆனால்,  முற்பகல், பிற்பகல் , ஏழு பிறப்புகள் என்றெல்லாம் சொல்லியிருக்கிறீர்களே?

ஆமாம். அதையும் நம்புகிறேன்.

அதெப்படி… என் இன்றைய நன்மை தீமைகளுக்கு முந்தின ஜென்மத்தில் செய்தவைதான் காரணமென்றால் என்னுடைய இந்த ஜென்மத்தின் செயல்களுக்கு அடுத்த ஜென்மத்தில்தான் பலன் கிடைக்குமென்றால் அதை எப்படி ஏற்பது? ஒரு ஜென்மத்தின் பலன்கள், தண்டனைகள், பரிசுகள் அந்த ஜென்மத்துக்குள்ளேயே கிடைத்துவிடுவதுதானே சரி… பிறவிகள் மாறும்போது உடம்பும் மாறிவிடுகிறதல்லவா..?

ஆமாம். ஆனால், முன்பு சொன்ன அதே பதில்தான் இதற்கும்.முன் ஜென்ம விஷயங்களும் இந்த ஜென்மத்தை பாதிக்கும் என்றுதான் சொல்லியிருக்கிறேன். அதுமட்டுமே பாதிக்கும் என்று சொல்லவில்லையே. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா(து) உஞற்றுபவர் என்றும் எழுதியிருக்கிறேனே.

ஆனால், அதே கையால் ஊழின் பெருவழி யாவுள என்றும் வகுத்தான் வகுத்த வகையல்லால் என்றும் ஆகூழால் தோன்றும் அசைவின்மை என்றும் வரிசை கட்டி அடித்திருக்கிறீர்களே…

இரண்டுமே உலக நியதிதான் குழந்தாய்… முற்பகல் செய்தவற்றின் தாக்கத்தை மீற முடியாமல் போகிறவர்களும் இப்பூவுலகில் உண்டு. அவற்றை மீறிச் செல்பவர்களும் உண்டு. நான் இரண்டையும் பதிவு செய்திருக்கிறேன். ஒவ்வொரு நபரும் தத்தமது உள்ளார்ந்த தன்மைக்கு ஏற்ப செயல்படுவார்கள். மல்லிகை விதை மல்லிகைகளைப் பூத்துக் குலுங்கும். சாமந்தி விதை சாமந்திப் பூக்களைப் பூத்துக் குலுக்கும். நான் மலர்களின் இயல்பைப் பதிவு செய்திருக்கிறேன்.

ஆசிரியர் : ஆனால், ஐயனே தண்டனைகளைப் பற்றிப் பேசாத ஒரே நீதி நூல் அல்லவா தாங்கள் எழுதியது. அது ஒன்றே போதுமே காலங்கடந்து  நிற்க வேண்டிய ஆக்கம் அது என்பதை உணர்த்த.

மாணவன் : கொலைத்தொழில் செய்யும் தீயவர்களை களை எடுப்பதுபோல் அரசன் ஒழிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே. நாசூக்கான மரண தண்டனைதானே அது.

ஆமாம். ஒருவகையில் அது தவறுதான். பயிரைக் காத்தல் என்ற அடிப்படையில் அதைச் செய்யலாம் என்று சொன்னேன்.

ஆனால், நீங்கள் தவறு செய்தவர்களை சிறைச்சாலைகளில் அடைத்து நல்வழிப்படுத்தச் சொல்லியிருக்கவேண்டும். நல்ல கல்லில் சிலை வடிக்கவேண்டும். அல்லாத கல்லை அந்தச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவிலுக்குப் படியாக அமைக்கவேண்டும் என்பதுபோல் சொல்லியிருக்கவேண்டும்.

யானையை விட்டு தலையை மிதித்துக் கொன்ற மன்னர்களும், தலையை வாளால் வெட்டிக் கொன்ற மன்னர்களும் நிறைந்த காலகட்டத்தில் களையை எடுப்பதுபோல் வலிக்காமல் தண்டனை தரவேண்டும் என்று சொல்ல முயன்றிருக்கிறேன். ஆனால், அது இன்றைய நிலையில் தவறுதான்.

அதுபோல் மனைவி சொல்வதை கேட்காதே என்று ஒரு அத்தியாயமே எழுதி வைத்திருக்கிறீர்கள்… பெண் மேல் ஏன் இந்த ஒரு கோபம்?

இல்லறம், வாழ்க்கைத் துணை நலம் போன்ற அதிகாரங்களில் மனைவியின் அவசியம் பற்றியும் சொல்லியிருக்கிறேனே. பத்தினிப் பெண் பெய் என்று சொன்னால் மழை பெய்யும் என்றும் கூறியிருக்கிறேனே…

ஆனால், இப்படி முரணாகப் பேசுவது சரியில்லையே… அதுபோல் வரைவின் மகளிர் பற்றி ஒரு அதிகாரமே முழுக்க எழுதித் திட்டியிருக்கிறீர்கள். அது புரியவே இல்லை. ஏனென்றால் சங்க காலத்தில் இருந்த பரத்தையர்கள், அதற்கு இணையான தாசி வாழ்க்கை என்பதெல்லாம் சகல மேன்மைகளையும் நலிவுறச் செய்துவரும் எங்கள் காலகட்ட விபச்சாரம் போலா இருந்தன? அப்படியென்றால் அதில் பெண்கள் தள்ளப்படும் துயரத்தையும், ஈடுபடும் ஆண்கள் மீதான விமர்சனத்தையும் அதில் பார்க்கவே முடியவில்லை.

ஆசிரியர்  (இடைமறித்து) இப்படியெல்லாம் கேட்பது சரியில்லை…

வள்ளுவர் சிரித்தபடியே, இருக்கட்டும் . கேள்வி கேட்பதே கற்றலுக்கான சரியான வழிமுறை. மேலும் அவையகத்து அஞ்சாமை என்று எழுதிவிட்டு நானே அதை மறுதலிக்கலாமா என்ன?

இல்லை ஐயனே… என் சந்தேகம் என்னவென்றால் 1200 குறள்களில் உயரிய அறம் இடம்பெற்றிருக்க 100 குறள்களில் முரணாகத் தோன்றும் விஷயங்கள் இடம் பெற்றுள்ளனவே… அவை இடைச்செருகலாக இருக்குமோ என்ற சந்தேகம்தான் ஐயனே…

நான் எழுதியவற்றை நானே நியாயப்படுத்திப் பேசுவது ஒருவகையில் தவறுதான். இன்னொருவகையில் நான் தானே அதற்கு பதில் சொல்லியாகவேண்டும்.  குறளில் இரண்டுவகை அறங்கள் பேசப்படுகின்றன. ஒன்று காலம், தேசம் கடந்த பொது அறங்கள். இன்னொன்று இடம், காலம் சார்ந்தவை… ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒவ்வொரு விதமான அறங்கள், சமூக மதிப்பீடுகள் இருக்கும்.  நான் 90 விழுக்காடு உலகம் தழுவிய காலம் கடந்த அறம் பற்றிப் பேசியிருக்கிறேன். பத்து சதவிகித அறங்கள் கால, இட வரையறைகளுக்கு உட்பட்டவை. அதுபோல், ஒரு தொழில் சார்ந்த அறங்கள் வேறொரு தொழிலுடன் முரண்படக்கூடும். கொல்லாமை என்று ஒரு அதிகாரத்தில் சொல்லியிருப்பேன். இன்னொரு அதிகாரத்தில் படை மாட்சிபற்றி பேசியிருப்பேன். ஒரு அதிகாரத்தில் மனைவி சொல்வதைக் கேட்கக்கூடாதென்று சொல்லியிருப்பேன். இன்னொன்றில் வாழ்க்கைத் துணை நலம் என்று மனைவியின் அருமை பற்றிப் பேசியிருப்பேன். ஏனென்றால் உலகில் இரண்டு வகையான மனைவிகளும் உண்டு. இருவருடைய நடத்தையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. எனவே இருவருக்கான மரியாதையும் ஒரே மாதிரி இருக்க வாய்ப்பில்லை.

ஆனால், இப்படி முரண்படுவது பெரும் குழப்பத்தைத் தருகின்றன.

விஷயம் இதுதான். இந்த முரண் என்பவை வாழ்க்கையின், உயிர்களின், உலகின் ஆதார அம்சம். மானுக்குப் புலி முரண்… பூவுக்கு முள் முரண்…நீருக்கு நெருப்பு முரண்… இரவுக்குப் பகல் முரண்… சூரியனுக்கு நிலவு முரண்… உலகம் பெரும் ஒத்திசைவால் ஆனது… அதுபோலவே முரண்களாலும் ஆனது… அறங்கள் முரண்படவில்லை… இரவையும் பகலையும் போல் இணை பாதையில் செல்கின்றன அருகருகே அகலாது அணுகாது…

நல்லது ஐயனே… இப்போது லேசாகப் புரிகிறது.

அவரவர் இயல்புக்கேற்ற அறங்களைப் பின்பற்றி உயர்ந்து அடுத்த கட்டத்துக்குச் சென்று உலகு தழுவிய அறங்களுக்கு முன்னேறவேண்டும். அதுவே என் விருப்பம். அவரவருக்கு இயன்ற அறத்தின் வழி நடந்தால் போதும். ஏனெனில் அறத்தின் பாதைகள் பலவென்றாலும் இலக்கு ஒன்றே.

இது வேறொரு பிரச்னை ஐயனே…

இதில் என்ன பிரச்னை…

உலகம் பூராவும் குறள் போய் சேர்ந்துவிட்டது. ஆனால், ஒருவரிடம் கூட உம் குரல் போய்ச் சேரவில்லை.

என்ன சொல்கிறாய்?

1330 குறள்களும் கூட மனப்பாடமாகியிருக்கின்றன… ஆனால் ஒரே ஒரு குறளின்படியாவது நடக்கிறார்களா என்று கேளுங்கள் ஐயனே…

இதென்ன… ஒரு விஷயத்தைப் படித்திருந்தால் அதன் படி நடக்கவும் ஆரம்பிக்க மாட்டார்களா என்ன..? என்றபடியே ஆசிரியரை வள்ளுவர் பார்க்கிறார். ஆசிரியர் தர்மசங்கடத்தில் நெளிகிறார்.

வள்ளுவரின் முகம் மெள்ள இருளடைகிறது. சொல்லுங்கள்… இந்த மாணவன் சொல்வது சரிதானா… எந்தக் குறள்களின்படியெல்லாம் நடக்கிறீர்கள்  சொல்லுங்கள் என்று கைகளால் எண்ண முற்படுபவர், வேண்டாம் கை விரல்கள் பத்தாது… (இடையில் இருந்து ஓலைச்சுவடியும் எழுதுகோலும் எடுத்துக்கொண்டு) சொல்லுங்கள் என்று ஒவ்வொரு குழந்தையாகச் சென்று கேட்கிறார்.

குழந்தைகள் அவரைப் பார்த்துத் திருதிருவென முழிக்கின்றன.

சொல்லுங்கள் குழந்தைகளே… நீங்கள் எந்தெந்தக்  குறள்களின்படி நடக்கிறீர்கள்… இனியவை கூறுதல், ஈகை, அன்புடமை, விருந்தோம்பல், சுற்றந் தழால் இவற்றில் எவ்வெவற்றின்படி நடக்கிறீர்கள்..?

ஐயனே… அதெல்லாம் தெரியாது… மனப்பாடம் செய்தால் தான் மதிப்பெண் கிடைக்கும்… எனவே, மனப்பாடம் செய்து வைத்திருக்கிறோம். வாழ்க்கையில் அதன் படி நடக்க எங்களுக்கு யாரும் சொல்லவில்லையே?

என்ன சொல்கிறீர்கள்… அன்புடமையோ ஈகையோ ஏன் சுற்றத்தினருடன் மகிழந்து வாழ்வதோ கூடக்கிடையாதா என்ன..?

சுற்றத்தினரா… எங்கள் தாத்தா பாட்டியே எங்களுடன் இல்லை.

என்ன சொல்கிறீர்கள்… அப்படியானால் யாருடன் வாழ்கிறீர்கள்.

ஏன் எங்கள் அப்பா அம்மாவுடன் வாழ்கிறோம்.

என்ன சொல்கிறீர்கள்… குடும்பமே ஒன்றாக இல்லையா?

குறள் நீங்கலாக வேறு மறை நூல்கள் ஏதேனும் படித்து அதன்படி நடக்கிறீர்களா… யார் எழுதிய மறை நூல் என்பதா முக்கியம்… சொல்லப்படும் விஷயம்தானே முக்கியம். சொல்லுங்கள் எதன்படி நடக்கிறீர்கள்.

12-ம் வகுப்பில் ஆயிரக்கணக்கில் மதிப்பெண் பெற வேண்டும்… அதைவைத்து நல்ல கல்லூரியில் இடம்… அதை வைத்து நல்ல வேலை… இதுதான் எங்கள் வேதம்… இலக்கு ஐயனே…

புதிதாக இருக்கிறதே… வேலைக்கான கல்வி என்பதும் தேவைதான். ஆனால் அந்த வேலையை எப்படி அறமுடன் செய்யவேண்டும் என்ற கல்வி அல்லவா எல்லாவற்றுக்கும் அடிப்படை… பள்ளியில் அதை அல்லவா கற்றுக்கொள்ளவேண்டும். அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக்கடை… கற்றுத் தரும் ஆசிரியர்களும் கற்று முடிந்த பெரியவர்களும் இந்த சமூகத்தின் தலைவர்களும் முக்கியமானவர்களும் அதன்படி நடந்து வழிகாட்டுவதில்லையா?

ஐயனே நீங்கள் ஒரு குழந்தை ஐயனே..

என்ன சொல்கிறாய்..?

அறியாமையில் இருக்கிறீர்கள் என்று சொல்ல என் மனம் இடம் கொடுக்கவில்லை ஐயனே..

என்ன அறியாமை..?

ஆம் ஐயனே… உங்களைப் போன்ற ஞானிகள் நிலவைக் கை காட்டிப் பார்க்கச் சொன்னால் நாங்கள் உங்கள் கை விரலையே பார்த்து  புளகாங்கிதமடைந்து உங்களைப் புனிதபடுத்தி, நிலவை நோக்கிக் கைகாட்டும் போஸில் சிலை வடித்து, இருண்ட அறையில் உங்களை தெய்வமாக்கித் தொழத் தொடங்கிவிடுவோம்.

அப்படியானால் நான் காட்டும் ஒளியை யாரும் பார்க்க மாட்டார்களா..?

அது எதற்கு?

அது எதற்கா… என் வருகையே அதற்காக நிகழ்ந்ததுதானே… நான் வார்த்தைகளில் வடித்த வாழ்க்கைத் தரிசனம் ஆளற்ற கானகத்தில் பொழியும் நிலவு போலா வீணாகிறது? நான் எழுதியவற்றில் ஒன்று கூடவா உங்களுக்கு வழிகாட்டவில்லை…

இல்லை ஐயனே…

வள்ளுவர் சோர்ந்து உட்காருகிறார்.

நான் சொன்ன அறங்களின் ஒன்றைக்கூட நீங்கள் பின்பற்றுவதில்லையா..? குரலில் மேலும் சோகம் கவிகிறது. புலால் உண்ணாமையைக்கூடப் பின்பற்றுவதில்லையா…

கற்பனை அறங்கள் கற்றுக்கொள்ள மட்டுமே… பின்பற்ற அல்ல…

ஒரு உயிரைக் கொன்று தின்பவர்களா என் தமிழ் மக்கள்…

பசுவையும் கூட.

வள்ளுவர் அதிர்ந்து காதைப் பொத்திக்கொள்கிறார்.

கள்ளுண்ணாமலாவது இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

மது இல்லாமல் இம் மண் இல்லை…

வள்ளுவர் தலையில் கைவைத்து அமர்கிறார்.

அரசே மக்களுக்கு தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத்  திறந்து விளம்பரப் பலகைகள் எல்லாம் வைத்து ஆற்றுப்படுத்துகிறது.

என் புகழை உலகறியச் செய்திருக்கிறீர்கள் என்று சொன்னீர்கள்… உலகத்தோர் நீங்கள் மது அருந்துவது குறித்து பழிச்சொல் கூற மாட்டார்களா..?  மனதறிந்து குற்றம் செய்பவர்கள் துறவி போல் வேடமிட்டாலும் யாரும் மதிக்கவே மாட்டார்களே.

உலகம் மதிக்க வேண்டும் என்று யார் விரும்புகிறார்கள். தடித்தடியாக புத்தகம் அடித்து உலகம் பூராவும் ஏற்றுமதி செய்துவிட்டால் எங்கள் கடமை முடிந்தது. அதில் நல்ல லாபமும் கிடைக்கும்… மது விற்பனைக்கு இணையாக… குறள் விற்றுக் கிடைத்த காசைக் கொண்டு குடித்தால் போதை ஏறாதா என்ன..?

ஐய்யகோ…

விளக்கின் ஒளியில் இருந்து ஐயன் விலகிச் செல்கிறார்.

மாணவர்களில் ஒருவன் : பார்… நீ தாறுமாறாகப் பேசியதால்தான் ஐயன் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார். எத்தனையோ வருடங்கள் கழித்து வந்தவரை இப்படியா துயரில் ஆழ்த்துவது. நாலு நல்ல வார்த்தைகள் சொல்லி மகிழ்வித்து அனுப்பியிருக்கலாம் அல்லவா?

நான் உள்ளதைச் சொன்னேன். என் உள்ளத்தை சொன்னேன். அது தவறா?

தவறுதான். நீ இப்படிப் பேசினால் இனிமேல் ஐயன் திரும்ப வராமலேயே இருந்துவிடுவார்.

போ… போய் ஐயனிடம் நீ சொன்னவை எல்லாம் பொய் என்று சொல்லி அழைத்துவா…

ஆசிரியர் : பொய்மையும் வாய்மை இடத்து…

இருளில் ஏதோ ஒரு சலனம் கேட்கிறது.

அனைவரும் அந்த மாணவனை அனுப்பி வள்ளுவரை சமாதானப்படுத்தி அழைத்து வரச் சொல்கிறார்கள். அவனும் தயங்கியபடியே இருளுக்குள் செல்கிறான். அங்கே மங்கலான வெளிச்சத்தில் வள்ளுவரின் கண்கள் கலங்கி இருப்பது தெரிகிறது. இரவின் குளிர் காற்று முழுவதும் குவிந்து அதிகாலையில் பனித்துளியாகத் திரண்டு நிற்பதுபோல் காலகாலமான சோகம் கண்ணீராகத் திரண்டு நின்றது.

மன்னியுங்கள் ஐயனே… நான் அப்படிப் பேசியிருக்கக்கூடாது. கூற்றத்தைக் கையால்  விளித்தது போல் ஆற்றுவாருக்கு இன்னா செய்துவிட்டேன் ஐயனே…

வள்ளுவர் பெருமூசெறிந்து நிற்கிறார்: உன் மீது பிழையில்லை குழந்தாய்… நோய்க்கு மருந்து கண்டுபிடித்த மருத்துவன் அதோடு உலகில் நோய் தீர்ந்துவிட்டதாக எண்ணுவது எவ்வளவு பெரிய பேதமை என்பது புரிகிறது.

வழி காட்டிப் பலகைகளால் வழியைக் காட்டத்தான் முடியும். அவ்வழி யாரும் போகாததில் அவற்றுக்கு எந்தப் பழியும் இல்லையே ஐயனே…

என் மீது தவறா தவறில்லையா என்பது அல்ல பிரச்னை. நான் தந்து சென்ற நல் வழி காட்டும் பலகை புழுதி படர்ந்து போய்விட்டதே… ஆழ்கடல் மூழ்கி நான் எடுத்த முத்துக்களால் கோர்த்த மாலை மண்ணில் வீசப்பட்டுவிட்டதே…

என்ன செய்வது ஐயனே…  வாருங்கள் வந்து மீண்டும் நல்லுபதேசம் செய்யுங்கள். வறண்டு காய்ந்த நிலத்தில் வான் மழையாகப் பொழியுங்கள்… வீரிய விதைகள் துளிர்க்கட்டும்.

ஐயன் தயக்கத்துடன் அவனைப் பார்க்கிறார். பிறகு தள்ளி நின்று கொண்டிருப்பவர்களைப் பார்க்கிறார்.

சரி… ஐயனே… அவர்களிடம் சென்று பேசுகிறேன். தம் தவறை ஒப்புக்கொள்ளச்செய்கிறேன். திருந்துவதாக உறுதி எடுக்கச் சொல்கிறேன் என்று சொல்லியபடியே அவரை அங்கே இருக்கச் சொல்லிவிட்டு வருகிறான். ஆசிரியரும் மாணவர்களும்  போனவன் மட்டும் தனியே வருவதைப் பார்த்து என்ன நடந்தது என்று கேட்கிறார்கள்.

ஐயன் வரவேண்டுமென்றால் நாம் மாறவேண்டும் என்கிறார்.

பெரும் மவுனம் கவிழ்கிறது.

மாமிசம் இல்லாமல் நாம் எப்படி வாழ..?

கொன்று தின்ன வேண்டாம்… இறப்பதைத் தின்று கொள்வோம்.

தமிழில் பாடம் எடுக்கச் சொல்வோம்… இல்லையென்றால் படிக்கமாட்டோம் என்று சொல்வோம்.

ஊர் களுக்குத் திரும்புவோம்… உழவுக்குத் திரும்புவோம்..

காய் கறி, தானியக் கடைகளில் உழவர் உண்டியல் அமைப்போம்.

தந்தையிடம் கேள்வி கேட்போம் இந்தப் பணம் எப்படி சம்பாதித்தீர் என்று… நல் வழியென்றால் ஏற்றுக்கொள்வோம். அல் வழியென்றால் அறப்போரை வீட்டில் இருந்து தொடங்குவோம்.

நல்ல மதிப்பெண் பெற்று நல்ல வேலை கிடைக்கப்பெறுபவர்கள், பின் தங்கிப்  போகும் நண்பனுக்குக் கை கொடுப்போம் (முதல் கட்டமாக).

திருவள்ளுவர் வாரம் கொண்டாடுவோம்… அன்றைய தினங்களில் அவரவருக்கான குறள் படி வாழ்ந்துகாட்டுவோம்.

அதன் பின் வாரங்கள் மாதங்களாகட்டும், மாதங்கள் வருடங்களாகட்டும்… வருடங்கள் வாழ்க்கையாகட்டும்.

வாருங்கள்… சிவன் தாள் பணியவும் சிவனருள் தேவையல்லவா… ஐயன் வழி நடக்க ஐயன் ஆசியைப் பெறுவோம்.

அனைவரும் சென்று இருளில் அழும் ஐயனைத் தேற்றி அழைத்து வருகிறார்கள்.

ஐயன் முன் உறுதிப் பிரமாணம் எடுக்கிறார்கள்.

மீண்டும் காலில் விழுந்து வணங்குகிறார்கள்.

மின்சாரம் வருகிறது. மின் விசிறியில் இருந்து வீசும் காற்று அகல் விளக்கை அணைக்கப் பார்க்கிறது. மாணவர்கள் பாய்ந்து சென்று சுடரைக் காப்பாற்றுகிறார்கள். ஆசிரியர் மின்விசிறியை அணைத்துவிட்டு ஜன்னல் கதவுகளைத் திறக்கிறார். இதமான இயற்கைக் காற்றுடன் நிலவொளியும் வகுப்பறைக்குள் நுழைகிறது.

வள்ளுவர் நம்பிக்கையுடன் விடை பெற்றுச் செல்கிறார்.

********

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *