பாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்

பலவகையிலும் பாரதி சொல்லவருவது மனித வாழ்க்கை புன்மை, பொய், தீது, நலிவுகள் நீங்கி தேவ வாழ்வு எய்தல் வேண்டும். அதற்கு நம்மிடம் வேண்டியது நன்கு அறிவு முதிர்ந்த மனப் பூர்வமான சரணாகதி.

சரணாகதி செய்ய வேண்டியது பரம்பொருளிடம். அந்தப் பரம்பொருள் பலவடிவங்கள் பெயர்கள் தாங்கி மனித குலத்தின் பல்வேறு மாந்தருக்கும் அருள் புரியக் காத்திருக்கிறது. இந்தச் செய்தியை மிகத் திண்மையாக உரைப்பதால், விளக்கமாகப் பல்வகையிலும் காட்டி நிற்பதால் ஹிந்துமதம் என்பது மனித குலத்தின் உன்னத ஆன்மிக மார்க்கம்.

இந்த உலக வாழ்க்கையில் உழலுங்கால் முதலில் வேண்டியது மனித மனம் திண்மை அழியாமல் நின்று நிதானிக்க வேண்டும். அதற்கு என்ன வழி? இரட்டைகள், இன்ப துன்பங்கள், நல்லது தீது என்று பல அனுபவங்கள் எதிருறும்போது நிதானமாக அவற்றை ஓர்ந்து நன்கு கவனம் கொண்டு இடம் பொருள் ஏவல் பொருந்த ஆள்வது என்பது ஒவ்வொரு மனிதரும் தம்வாழ்வில் கற்க வேண்டிய பாடம்.

இந்தப் பாடத்தைக் கற்க வேண்டுமானால் ஒரே சரணம் கண்ணன் திருவடி என்கிறார் பாரதி. ஸ்தித ப்ரக்ஞ நிலையைப் பற்றி உரைத்த கண்ணன் அல்லால் ஏது புகல்?

கண்ணன் திருவடி
எண்ணுக மனமே
திண்ணம் அழியா
வண்ணம் தருமே.

தடுமாட்டம் அடையாத மனம் தன் புற வாழ்வை, சமுதாய வாழ்வை, கூட்டு வாழ்வைச் செம்மையாக நடத்த வேண்டியது நிதி. நிதியை ஈட்டும் போது பெருமையைத் தொலைத்துவிடாமல் இருக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் நல்வழியில் ஈட்டிய நிதியால் பெருமையும் சேர வேண்டும். நிதியும், பெருமையும் இயக்கமில்லாத நன்மைகள். அவற்றை இயக்கிச் சமுதாய்த்திற்கும் தனக்கும் பெருநன்மை, தொடர்நன்மை விளைவிக்க வேண்டுமெனில் அந்த நிதியை அதன் சுழற்சியில் செம்மையுற ஆள வேண்டும்.

இதற்கு திருவள்ளுவர் ஓர் அருமையான உதாரணம் காட்டுகிறார். அறிவுடையவர், நன்கு அறிவு சான்றவர் ஒருவரிடம் செல்வம் சேர்ந்தது என்றால் அது எதைப் போல்? வீட்டுக் கிணற்றில் நீர் நிரம்பி இருந்தால் நன்றுதான். ஒரு நிறுவனம் சார்ந்த கிணற்றில் நீர் நிரம்பி இருந்தால் இன்னும் நன்மை. அதைவிட எல்லாம் சிறந்தது ஊர்ப்பொது கிணற்றில், ஊர்ப்பொது நீர்நிலையில் நீரானது நிரம்பி இருந்தால் எவ்வளவு உயிரினங்கள் வாழும்! ஊர்வன, பறப்பன, திரிவன, நடப்பன என்று அனைத்தும் வாழ்ந்து போகும். ‘ஊருணி நீர்நிறைந்தற்று பேரறிவாளன் திரு’.

அதைப்போல் நிதி பெருமை எல்லாம் அதை நன்கு அனைவருடைய நல் எழுச்சி, நலமிக்க வாழ்ச்சிக்காகப் பயன்படுத்தும் போது அதனால் வருவது புகழ். கண்ணன் திருவடிகளைச் சரணடைந்தால், கண்ணன் என்னும் பெரும் தத்துவத்தை நன்கு புரிந்துகொண்டால் நிதி பெருமை புகழ் என்று அனைத்தும் அவன் தானே தருகின்றான். அவை தன்னடையே வந்து சேருகின்றன என்கிறார் பாரதி.

தருமே நிதியும்
பெருமை புகழும்
கருமா மேனிப்
பெருமா னிங்கே.

புற வாழ்வை நன்கு செம்மையுற அமைத்துக் கொண்டால் அகவாழ்வு தடையில்லாமல் மலர பெருவாய்ப்பு ஏற்படுகிறது. இங்கும் நமக்கு வேண்டியது கண்ணன் திருவடி. இல்லையென்றால் புற வாழ்வின் செழுமை அக வாழ்வின் வெறுமையாக, ஆன்மிக வறுமையாக விடம்பனம் ஆகிவிடும் அபாயம் உண்டு. ஆனால் கண்ணன் திருவடி எண்ணும் மனத்தில் அந்த அபாயம் நீக்கப் படுகிறது.

பின் என்ன நடக்கிறது? வாழ்க்கை என்பது அமரர் சங்கமாக ஆகிவிடுகிறது. ‘சார்! அவருக்கு ஏகப்பட்ட காசுபணம் சேர்ந்தது சார்! பாவம் நல்ல மனிதராக இருந்தார். ஆனால் பணம் வந்து கொட்ட ஆரம்பித்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் தலைகால் தெரியாமல் தாறுமாறாக வாழ்வு போய் எல்லாம் கெட்டுப் போய்விட்டது’ – இந்தக் குற்றச் சாட்டை எவ்வளவு சுலபமாகப் பார்க்கிறோம். ஆனால் கண்ணன் திருவடி எண்ணும் மனத்தில் என்ன நடக்கிறது? கண்ணனுக்கே சரணாகதி செய்த வாழ்க்கையில் என்ன ஏற்படுகிறது? நன்மைக்கான அத்தனை ஊக்கங்களும் முகாம் இடுகின்றன.

நன்மைக்கான ஊக்கங்களைத்தான் அமரர் என்று சொல்வது. அமரர் சங்கமே அல்லவா நிரந்தர போர்டு போட்டுக் கொண்டு அங்கு கால்கோள் நாட்டிவிடுகிறது. சிறப்பான திட்டங்கள், அவை செயலாக்கங்கள், அதனால் ஏற்பட்ட பெரும் ஆக்க பூர்வமான விளைவுகள், அதனால் பெரும் சமுதாயமே நன்மையின் வழியில் உற்சாகப் பட்டுப் பயணிக்கும் பெரும் மங்களம், ஆன்மிக ஈடுபாடுகள் செழிக்கும் நிரந்தர அமைப்புகள், அவற்றின் தடைப்படா சாதனைகள் – ஆம் அமரர் சங்கமே அங்கு வேலை செய்யும் போது வாழ்க்கையில் தீமை என்பது இல்லாமலே போகிறது. இதைத்தான் ஹிந்துமத சாத்திரங்கள் ‘நிச்ரேயஸம்~அப்யுதயம்’, ’ஆன்மிக நன்மை, அதற்குத் துணையாக புற வாழ்வின் செழிப்பு’ என்று இலட்சியப் பொருள்வரைவு செய்தன.

இங்கே அமரர்
சங்கம் தோன்றும்
மங்கும் தீமை
பொங்கும் நலமே.

புலவர்கள் என்போர் நலம் என்பதை மட்டுமே விரும்பிப் பாடும் சொல்லேர் உழவர்கள் என்கிறார் பாரதி. நலமோ தீதோ என்று பார்க்காமல் பாடுவது எப்படிப் புலமையுடன் சேரும்?

அத்தகைய நலம் ஒன்றையே விரும்பிப் பாடும் புலவர்களே நீங்கள் அவ்வாறு விரும்பினால் ஒன்று செய்யுங்கள் – நிலமாமகளின் தலைவன் புகழைப் பாடுங்கள். அதாவது விண்ணின் சிறப்பையும், மண்ணின் சிறப்பையும் ஒருக்காலும் பிரிக்காதீர்கள். அப்யுதயம் – இவ்வுலக நன்மை என்பதையும், நிச்ரேயஸம் – ஆன்மிக நன்மை என்பதையும் ஒருக்காலும் துண்டுபடுத்தாதீர்கள். இருபிளவு செய்யாதீர்கள்.

நிலமாமகளின் தலைவனாகக் கண்ணனைப் பாடுங்கள். திருமகள், நிலமகள், ஆயர்குலமகள் என்று அறிவின் ஆக்கம், நிலத்தின் ஆக்கம், உயிர்க்குல ஆக்கம் என்று முவ்வித ஆக்கங்களுடன் திகழ்வதுதான் பேருயிர்த் தத்துவம். இதில் உங்கள் போதாமையால் குறைவுபடப் பாடி அதனால் குறைகள் நேராவண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்!

நலமே நாடில்
புலவீர் பாடீர்
நிலமா மகளின்
தலைவன் புகழே.

அவ்வாறு நீங்கள் பாடுங்கால் ஒன்றை நன்கு கவனியுங்கள். தெய்வ வலிமை இல்லாத காலத்தில் ஒரு சின்ன தீமையும் மனித யத்தனத்தினால் தீர்க்க முயலும் போது போனால்போல் இருந்து பின்னர் ஒரு புதுத்தீமையை உண்டாக்கி ஒரு சங்கிலி எஃபெக்டை ஏற்படுத்தும். வாலு போச்சு கத்திவந்தது டும் டும் என்ற வேடிக்கை வேதனை ஆகும். ஆனால் கண்ணன் திருவடி எண்ணி நீங்கள் தேவ வலிமைக்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ளும்போது ஒன்று நடக்கும். அது என்னவெனில் தீமைக் கூட்டங்கள் ஆகிய அசுரப் பகை ஒன்று அல்ல இரண்டு அல்ல தொகை தொகையாய் கண்ணன் தீர்க்கத் திரும்பிவராமல் தொலைந்து போகும். அதற்கு நீங்கள் தகைசேர் அமரராக ஆகவேண்டும். அந்தச் சிறப்பை நன்கு கவனித்துப் பாடுங்கள் –

புகழ்வீர் கண்ணன்
தகைசேர் அமரர்
தொகையோடு அசுரப்
பகைதீர்ப்பதையே.

ஒன்று நிச்சயம். கண்ணன் என்பவன் கலிதீர்ப்பவன். இருள் கடி ஞாயிறு. அக இருள் போக்கும் ஞான பாநு. அவன் கலி தீர்க்கும் விளைவாக அமரர்களின் ஆர்ப்பரிப்பு கேட்கும்.

நன்மைக்கான ஊக்கங்கள் பொங்குவதையே அமரர் ஆர்ப்பரிப்பு என்கிறார் பாரதி.

இது எப்பொழுது நடக்கும்? எப்பொழுது இதை நாம் பார்ப்போம்? என்று கேட்டால் பார்க்க விழையும் பக்தர்களின் தவம்தான் இதன் கணக்கு.

தீர்ப்பான் இருளைப்
பேர்ப்பான் கலியை
ஆர்ப்பார் அமரர்
பார்ப்பார் தவமே.

எல்லாம் சரிதான் பாரதியாரே. ஒரு சமயம் சுப்ரமணியன் என்கிறீர். இன்னொரு சமயம் சக்தி சக்தீ என்கிறீர். இப்பொழுது கண்ணன் என்கிறீர். ஏதாவது ஒன்றை மாற்றாமல் உறுதியாகச் சொல்லுமே!

அடடா! இதுதான் குழப்பமா? தவறாமல் ஒன்றை உணர்வீர்களாக இந்தப் புவியில் உள்ள மக்களே! திருமாலாய் இருக்கட்டும், சிவனாய் இருக்கட்டும் அல்லது வானோர் எவராக இருக்கட்டும். அவர்கள் அனைவரும் ஒன்றே. ஒன்றே ஆன பரம்பொருள் பலவாய் நின்று ஒரே சக்திதான் பல உருவங்களில் அருள் புரிந்து திகழ்ந்துகொண்டிருக்கிறது. இதை நன்கு மனத்தில் நீங்கள் ஓர்ந்துகொண்டால் ஒளி ஒரு நாளும் நம்மிடை குன்றாது.

தவறா துணர்வீர்
புவியீர் மாலும்
சிவனும் வானோர்
எவரும் ஒன்றே.

ஒன்றே பலவாய்
நின்றோர் சக்தி
என்றும் திகழும்
குன்றா ஒளியே.

பாரதியாரின் ஆன்மிகம், ஹிந்துமத போதம் என்பது ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகாநந்தர் என்னும் பேரொளி விளக்கத்தில் வேர்கொண்டு எழுவது என்பதை உணரலாம்.

*****

2 Replies to “பாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்”

  1. பாரதியார் பற்றிய முற்றிலும் புதுமையான ஒரு படைப்பு.பாரதியாரின்
    அளுமை யின் புதிய விளக்கம். நன்றி

  2. எங்கெங்கு காணினும் சக்தியடா என்றான் பாரதி. ஒரே சக்தி தான் இந்த பிரபஞ்சம் முழுவதும் பல்வேறு தோற்றங்களை பெற்று மிளிர்கிறது என்பதே அறிவியலும் நமக்கு கூறும் உண்மை. பஞ்ச பூதங்களும் பல்வேறு அணுத்துகள்களின் வித்தியாசமான கலவை தான். எங்குமே எலெக்ட்ரான், புரோட்டான், ந்யூட்ரான் ஆகியவற்றின் எண்ணிக்கை வித்தியாசம் தான். இந்த வெற்றிடம் என்ற ஒன்றை மட்டும் இன்னமும் விஞ்ஞானிகளால் என்னவென்று கூற இயலவில்லை. அதனை ஆகாசம் என்று நம் முன்னோர் கூறினார்கள். இந்த சக்திகளின் தோற்றம் வேறு வேறு ஆனால் அவற்றுக்கு ஒன்றுடன் ஒன்று தொடர்பு உண்டு. அந்த தொடர்பு யாதெனின் ஒன்று இன்னொன்றாக மாறக்கூடியது என்பது தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *