காவிரி அனைவருக்கும் பொதுவானது!

 

தலைக்காவிரி

காவிரி விவகாரம் தொடர்பாக அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, ஒருவகையில் தமிழகத்தின் காவிரி நீர்ப் பயன்பாட்டு அளவைக் குறைத்துவிட்ட போதும், நாடு முழுவதற்குமான ஓர் அடிப்படை நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

காவிரி நதி நீரில் உரிமை கொண்டாட எந்த ஒரு தனிப்பட்ட மாநிலத்துக்கும் உரிமை இல்லை என்ற தீர்ப்பின் அம்சம், அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது. பல்வேறு மாநிலங்களிடையே நதிநீர்ப் பங்கீடுகளில் முரண்பாடுகள் எழுந்துவரும் தற்போதைய சூழலில் இத் தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

குறிப்பாக, தேசிய அளவில் நதிகளை இணைக்க மோடி அரசு முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில், அதற்கு உறுதுணையாகவே இத் தீர்ப்பை கருதலாம்.

தவிர, குறிப்பிட்ட காலத்துக்குள் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு, இனிமேலும் தமிழக நலனை யாரும் காவு கொடுக்க முடியாது என்ற சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. இது தமிழகத்துக்கு மிகவும் ஆதரவான நிலைப்பாடு.

நதிநீர்ப் பங்கீடு, என்பது மாநிலங்களிடையிலான விவகாரம் மட்டுமல்ல. ஒரே மாநிலத்தினில் பாயும் நதிநீரைப் பயன்படுத்துவதிலும் கூட, பாசன சபைகளிடையே சச்சரவு தோன்றுவதை நாம் கண்டு வருகிறோம். ஏனெனில், விவசாயத்துக்கு தண்ணீரின் தேவை அத்தியாவசியம் என்பதால், நதி நீரைப் பயன்படுத்துவதில் போட்டி நேரிடுகிறது. இதற்கு பவானி நீரைப் பயன்படுத்தும் ஈரோடு மாவட்ட விவசாயிகளிடம் நிலவும் போட்டி மனப்பான்மையையே உதாரணமாகக் கூறலாம்.

ஒரே மாநில விவசாயிகளிடையிலேயே முரண்பாடுகள் தோன்றுகையில், பல்வேறு மாநிலங்களுக்கு உரிமையுடைய காவிரி நீர்ப் பங்கீட்டில் சுமுகமான நிலையை எதிர்பார்க்க இயலாது. இங்கு தான் சட்டத்தின் ஆட்சி தேவையாகிறது.

காவிரி நதிநீருக்காகவே மன்னர்களிடையே போர் நடந்ததை வரலாறு பதிவு செய்துள்ளது. ஜனநாயக யுகத்தில், ஒன்றுபட்ட தேசத்தில் அத்தகைய போர்களுக்கு இடமில்லை. நீருக்கான பூசல் வாழ்வாதாரத்துடன் பிணைக்கப்பட்டுள்ளதால், இவ்விஷயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன், நடுநிலையான பார்வை அவசியமாகிறது. அதேசமயம், அரசியல் லாப- நஷ்ட கணக்குகள் இவ்விவகாரத்தில் நுழையும்போது, தீர்வுகளை அடைவது சிக்கலாகிறது.

காவிரி விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே நிலவிவரும் சிக்கல், தங்கள் மாநிலத்தில் தோன்றும் காவிரி நதியைப் பயன்படுத்தும் முற்றுரிமையும் தங்களுக்கே என்று கர்நாடக மக்கள் கருதுவதுதான். இது அடிப்படையிலேயே தவறானது. கர்நாடகமும்கூட அண்டை மாநிலமான மஹாராஷ்டிரத்துடன் மகதாயி நதிநீர் தாவாவில் ஈடுபட்டிருப்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

எந்த ஒரு நதியும் உற்பத்தி ஸ்தானத்திலிருந்து தாழ்வான பகுதியை நோக்கி பாயும். வழியில் பல துணை ஆறுகளின் நீரையும் சேர்த்துக் கொண்டு, பல கிளை ஆறுகளில் பாய்ந்து, இறுதியில் கடலில் சங்கமிக்கும். உற்பத்தியாகும் இடம் தங்களுடையது என்பதால், வெள்ளக் காலத்தில் காவிரி நதிநீரை தமிழகம் வழியாக வெளியேறுவதை கர்நாடகம் தடுக்க முடியுமா?

தவிர, பல்லாண்டு காலமாக காவிரி நதியை நம்பி நடைபெற்றுவரும் விவசாயப் பாசனத்தை, புதிய அணைக்கட்டுகளால் குலைக்க முடியுமா? ஆனால், இதையே கர்நாடகம் பல ஆண்டுகளாக செய்து வருகிறது. குடகுப் பகுதியில் உற்பத்தியாகும் காவிரியின் பாசனப் பகுதிகள் பல பத்தாண்டுகளாகவே விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதற்கு உள்மாநில அரசியல் கண்ணோட்டங்களே காரணம்.

மாறாக, தமிழகத்திலோ, காவிரி பாசனப் பகுதிகள் சிறுகச் சிறுகக் குறைந்து வருகின்றன. நெல் விளையும் பூமியான தஞ்சைத் தரணி தற்போது அதன் சிறப்பை இழந்திருக்கிறது. ஏனெனில், தமிழகம், கர்நாடகத்தின் காவிரி வடிநிலமாக மாற்றப்பட்டு விட்டது.

இவ்வாறு நடைபெறும் என்பதை உத்தேசித்தே நதிநீர் நடுவர் மன்றங்களை அமைக்க நமது அரசியல் சாஸனம் வழி வகுத்திருக்கிறது. அதன்படி அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பும் கர்நாடக அரசால் முழுமையாக நிறைவேற்றப்பட்டதில்லை.

நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்காமல் இருந்தாலே மாநில சட்டசபைத் தேர்தலில் வென்று விடலாம் என்பதுதான் அம்மாநில அரசியல் கட்சிகளின் எண்ணமாக உள்ளது. இதில் காங்கிரஸ், பாஜக, ஜனதாதளம் ஆகிய கட்சிகளில் எந்த வேறுபாடும் இல்லை. பாஜக சார்பில் எட்டியூரப்பா முதல்வராக இருந்தபோது மட்டுமே காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிடுவதில் ஓரளவு இணக்கம் காணப்பட்டது. அதேபோல, 1998-இல் ஜனதாதளம் சார்பில் முதல்வராக இருந்த ஜே.எச்.பாட்டீலும், அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் அறிவுரைப்படி காவிரிநீரை தமிழகத்துக்குத் திறந்துவிட்டார்.

காங்கிரஸ் அங்கு ஆளும் காலங்களில் தமிழக விரோதப் போக்கு அதீதமாக விசிறிவிடப்படுவது வழக்கமாகவே உள்ளது. அதற்கென சில அமைப்புகளும் உள்ளன. இதனை அக்கட்சியின் தேசியத் தலைமை கண்டிப்பதில்லை. காவிரிப் பங்கீட்டில் நடுநிலை பேணி, அரசியல் செல்வாக்கு இல்லாத தமிழகத்துக்கு பரிந்து பேசி, கர்நாடகத்தில் ஆட்சியை இழக்க காங்கிரஸ் தயாராக இல்லை.

இது குறுகிய தேர்தல் கண்ணோட்டமே என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே, அம்மாநிலத்தை மத்திய அரசு கண்டித்தால் தனது அரசியல் லாபம் பாதிக்கப்பட்டு விடுமே என்று பாஜகவும் அஞ்சுகிறது. காங்கிரஸ் தோற்றால் அங்கு ஆட்சி அமைக்கும் கட்சி பாஜக தான்.

இத்தகைய நிலையில், உச்ச நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு, மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசுக்கு காவிரி விவகாரத்தில் நேர்வழியைக் காட்டி இருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தும் கடமையை மோடி அரசு நிறைவேற்றும்போது, யாரும் குறைகாண முடியாது. இதைக் காட்டி பாஜகவை கர்நாடக எதிரியாக காங்கிரஸ் கட்சியால் சித்தரிக்க முடியாது. எனவே, மிக விரைவில் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்படும் என்று நம்பலாம்.

காவிரி நதி நீர் ஆணையம் என்பது, காவிரி நீரில் உரிமை உள்ள கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களின் பிரதிநிதிகளும், மத்திய அரசின் பிரதிநிதிகளும்,  நதி நீர்ப் பங்கீட்டு வல்லுநர்களும் கொண்டதாக இருக்கும். இனிவரும் காலங்களில், காவிரி மற்றும் அதன் துணை நதிகளில் உள்ள அனைத்து அணைகளும் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வரும் என்பதால், தண்ணீருக்காக கர்நாடக அரசிடம் தமிழகம் கையேந்தி இறைஞ்ச வேண்டிய தேவை எழாது.

எனவேதான், காவிரி ஆணையம் அமைப்பதை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை அக்கட்சி எவ்வாறு மதிக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். அக்கட்சியின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் மத்திய அரசு நேர்மையாகச் செயல்பட்டால், குறுகிய கால நஷ்டம் பாஜகவுக்கு நேரிடலாம். ஆனால், தேசிய ஒருமைப்பாடு என்னும் மாபெரும் விருட்சத்தின் வேரில் நீர் வார்ப்பது போலாகும்.

புதிய முறையில், காவிரியின் துணை நதிகளான அமராவதி, பவானி, நொய்யல் போன்ற நதிகளின் நீர் ஆதாரமும் ஆணையத்தால் கருத்தில் கொள்ளப்படும். கர்நாடகத்திலும் ஹேமாவதி, கபினி, ஹேரங்கி, சொர்ணவதி போன்ற துணை நதிகளின் நீர் இருப்பும், அவற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் நீர் இருப்பும் கவனத்தில் கொள்ளப்படும். இந்த அணைகளின் கட்டுப்பாட்டு அதிகாரம் காவிரி நதி நீர் ஆணையத்துக்கு கிடைப்பதால், அரசியல் சிந்தனையில்லாமல, பாசனத் தேவைக்கு ஏற்ப செயல்பட முடியும். பாரதம் போன்ற கூட்டாட்சி ஜனநாயகம் உள்ள நாட்டுக்கு இந்த ஏற்பாடு எவ்வளவு உசிதமானது என்பது போகப்போகத தான் புரியும்.

அதேபோல, நமது அணைகள் பல்லாண்டுகளாக தூர் வாரப்படாமல் உள்ளன. அவற்றைத் தூர் வாருவதன் அவசியம் இப்போது உணரப்பட்டுள்ளது. அதன்மூலம், வெள்ளக் காலத்தில் அதிகப்படியான நீரை நமது அணைகளால் தேக்கி வைக்க முடியும்.

வெள்ளக் காலங்களில் நதிநீர்ப் பங்கீட்டுக்கான கட்டாயங்கள் ஏற்படுவதில்லை. வறட்சிக் காலத்தில்தான் நதிநீருக்காக சச்சரவுகள் தோன்றுகின்றன. எனவே, ஒவ்வொரு மாநிலமும் எந்த அளவுக்கு பாசனப் பகுதியை விஸ்தரிக்கலாம் என்பதற்கு கட்டுப்பாடு விதிப்பது தேவையாகிறது. புதிய அணைகளைக் கட்ட நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்திருப்பதும் நல்லதொரு அம்சம்.

அதேபோல, குடிநீருக்காக நதிகளை நம்புவது அதிகரித்து வருகிறது. கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் இப்போதைய காலகட்டத்தில் தவிர்க்க இயலாதவை. இதைக் காரணமாக காட்டியே- கர்நாடக தலைநகரான பெங்களூருக்கு குடிநீர் வழங்குவதைச் சுட்டிக்காட்டியே- தமிழகத்தின் பங்கு குறைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமே தமிழகத்துக்கு பாதகமான அமசம். ஆயினும், மீதமுள்ள தீர்ப்பின் அமசங்களை கர்நாடக அரசு நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தச் சூழலை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அளித்துள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கியமான அம்சம், நிலத்தடி நீரின் பயன்பாடு தொடர்பானது. உத்தேச மதிப்பீட்டில் 20 டிஎம்சி நிலத்தடி நீர் தமிழகத்தால் பயன்படுத்தப்படுவதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிடுள்ளது. இது புதிய அணுகுமுறையாகும். வருங்காலத்தில் நிலத்தடி நீரின் பயன்பாட்டை முறைப்படுத்துவதன் அவசியம் இதன்மூலம் உணர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் எந்த கட்டுப்பாடும் இன்று நிலத்தடி நீரை உறிஞ்சி வர்த்தகம் செய்து வருகின்றன. அவை கொள்ளை லாபம் அடித்து வருகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்துவது கட்டாயமாகி உள்ளது.

இத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது என்ற அறிவிப்பு, இனிமேலும் இவ்விவகாரம் ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் திணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், எவர் ஒருவரையும் எந்த தீர்ப்பும் முழுமையாக திருப்திப்படுத்த முடியாது. எனவே, இருக்கும் வாய்ப்பில் நல்லதைத் தேர்வதே முறை. அந்த வகையில், தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதாகவே, காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

இந்த்த் தீர்ப்பை விரைவில் நடைமுறைப்படுத்துமாறு மத்திய அரசை நிர்பந்திப்பதும், காவிரி விவகாரத்தில் இரட்டைவேடம் போடும் கட்சிகளை அடையாளம் கண்டு ஒதுக்குவதும்தான் தற்போதைய தேவை.

 

காவிரி நீர்ப் பங்கீட்டு வழக்கு: இதுவரை…

காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில், தமிழகம் – கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. காவிரி வழக்கு பற்றிய, துவக்கம் முதல் இதுவரையிலான முக்கியமான சில தகவல்கள்:

*  கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் காவிரி நதி,  தமிழகம் வழியாக பூம்புகாரில் வங்கக்கடலில் கலக்கிறது. காவிரிப் படுகையில் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியும் அமைந்துள்ளன.

* கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரம் கடந்த 125 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இது தொடர்பாக மதராஸ் மாகாணம் – மைசூரு மாகாணங்களுக்கு இடையே கடந்த 1892-ம் ஆண்டு முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து 1924-ம் ஆண்டு மீண்டும் 50 ஆண்டுகளுக்கு புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டது.

* இந்த ஒப்பந்த்தின் படி, காவிரி மற்றும் அதன் துணை நதிகளின் குறுக்கே மாநில அரசுகள் அணை கட்டும்போது, சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களின் ஒப்புதல் பெறுவது அவசியமானது. அதன்படியே, தமிழகம், கர்நாடகத்தில் பல அனைகள் கட்டப்பட்டன.

* அதன் பிறகு நதிநீரைப் பங்கிடுவதில் ஏற்பட்ட பிரச்னையைத் தீர்க்க 1990-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய அரசு, காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. தமிழகத்துக்கு ஆண்டுக்கு 205 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என 1991-ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.  பிறகு 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கியது. அதில், கர்நாடகா, தமிழகத்துக்கு 10 மாத கால இடைவெளியில் 192 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

* இதை எதிர்த்து, 192 டிஎம்சி நீர் போதாது என்பதால் கூடுதலாக 72 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மேல்முறையீடு செய்தது. அதேவேளையில் கர்நாடகா, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை 132 டிஎம்சியாக குறைத்து உத்தரவிடக் கோரி மேல்முறையீடு செய்தது. இதே போல கேரளாவும், புதுச்சேரியும் கூடுதல் நீரை திறந்துவிடக்கோரி மேல்முறையீடு செய்தன.

*  முன்னர் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்து, தமிழகத்துக்கு ஆண்டுக்கு 419 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என 2007-ஆம் ஆண்டு இறுதித் தீர்ப்பு வழங்கியது காவிரி நடுவர் மன்றம். அதனை ஏற்க மறுத்த கர்நாடகா, ஒவ்வோர் ஆண்டும் 10 மாதத் தவணையில் தமிழகத்துக்கு 192 டிஎம்சி மட்டுமே திறந்துவிட முடியும் என திட்டவட்டமாகத் தெரிவித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, 2013-ஆம் ஆண்டு கர்நாடகாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.

*  2007 -ஆம் ஆண்டுக்கு முன் 562 டிஎம்சி தண்ணீர் வேண்டும் என தமிழகம் கேட்டிருந்தது. ஆனால் கர்நாடகா 465 டிஎம்சி  மட்டுமே திறந்துவிட முடியும் என்று கூறியது.

*  இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, கர்நாடக நீர் ஆதாரங்களில் இருந்து 50.0052 டிஎம்சி காவிரி நீரைத் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என தமிழகம் சார்பில் கேட்கப்பட்டது. ஆனால், போதிய மழை பெய்யாததால் கர்நாடக அணைகளில் குறைவாகவே தண்ணீர் இருப்பதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா பிடிவாதமாகக் கூறியது.

*  தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு விநாடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என 2016 -ஆம் ஆண்டு செப்.  5 -ஆம் தேதி உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அன்றைய தினமே கர்நாடகாவின் மாண்டியா, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடந்தது;  கலவரமும் வெடித்தது. கர்நாடகா முதல்வர் சித்தராமைய்யா கூறுகையில், கனத்த இதயத்துடனேயே நாங்கள் தண்ணீர் திறந்து விடுகிறோம். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மனுதாக்கல் செய்யப்படும் எனவும் கூறி இருந்தார்.

* காவிரி விவகாரத்தில் இறுதித் தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்திருந்த நிலையில், 2007 -ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரள அரசுகள் சார்பில் 2016, செப். 20 -இல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்து, மீண்டும் விசாரணையைத் துவக்கியது.

*  தமிழகத்துக்கு உடனடியாக 7 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகா முதல்வர் சித்தராமைய்யாவுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இந்த ஆண்டு ஜனவரி மாதம் கடிதம் எழுதினார். அப்போதும் தண்ணீர் திறக்க கர்நாடகா மறுத்து விட்டது.

* காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் கடந்த 20 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வந்தன. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 16-இல் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை அளித்துள்ளது.

* காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், அமிதவ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. நிலத்தடி நீரையும் கணக்கில் கொண்டு வைத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

* இதன்மூலம் கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். எற்கெனவே நடுவர் மன்ற வழங்கிய அளவில் இருந்து தற்போது தமிழகத்துக்கு வழங்கப்படக் கூடிய தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், காவிரி நதி நீரில் உரிமை கொண்டாட எந்த ஒரு தனிப்பட்ட மாநிலத்துக்கும் உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கருத்து உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

* காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய முடியாது எனவும், இத்தீர்ப்பு 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும், உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

One Reply to “காவிரி அனைவருக்கும் பொதுவானது!”

  1. நடுநிலையிலிருந்து எழுதப்பட்ட கட்டுரை. எல்லா மாநிலங்களிலும் ஜனத்தொகை பெருகிவருகிறது; நீரின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.எனவே எந்த மாநிலமும் எவ்வளவு நீர் வந்தாலும் திருப்தியடையாது. இந்த நிலையில் இப்போதைக்கு ஒரு வழியை உச்ச நீதிமன்றம் காட்டியிருக்கிறது.
    நீர்ப்பங்கீட்டின் அளவு இப்போதைக்கு எப்படியிருந்தாலும், எந்த மாநிலமும் நதிக்கு தனியுரிமை கொண்டாட முடியாது என்பதுதான் இந்தத் தீர்ப்பின் ஜிவநாடி.ஆனால் இதைச் செயல்படுத்துவது எளிதாக இருக்குமென்று தோன்றவில்லை.
    காவிரி நதி நீர் ஆணையம் விரைவில் அமைக்கப்பட்டு, உடனே செயல்படத் தொடங்குமா என்பதும் சந்தேகமே.இது கர்நாடகாவில் தேர்தல் ஆண்டு;
    கர்நாடகாவில் எல்லா கட்சிகளும் இதை எதிர்க்கும். அதையும் மீறி மோடி அரசு செயல்படுமா எனபதைப் பார்க்கவேண்டும்.
    கர்நாடகா உப நதிகளில் கட்டிய அணைகளால் காவிரிக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. . குடகிலும் காடுகளும் மரங்களும் பெருமளவில் அழிக்கப்பட்டுவருவதால், காவிரி தோன்றும் பிரதேசத்திலேயே மழையின் அளவும் குறைந்து வருகிறது. இதை எப்படி சமாளிப்பார்களோ தெரியவில்லை.
    நிற்க. இதில் பொதிந்துள்ள ஒரு பேராபத்தைச் சுட்டிக்காட்ட விழைகிறேன். ஏறத்தாழ நூறு ஆண்டுகளாக காவிரி நதி சீராகப் பாயவில்லை. அதனால் அதன் படுகையிலுள்ள அனைத்து இடங்களிலும் நிலத்தடி நீரின் அளவு குறைந்தே வந்திருக்கிறது. இருக்கும் நீரையும் ஆழ்துளைக்கிணறுகளின் மூலம் உறிஞ்சிவிடுகிறோம். இது இப்படியே நீடித்தால், தஞ்சாவூர் பகுதி மட்டுமல்லாமல் தமிழ் நாட்டில் காவிரி பாயும் பிற பகுதிகளும் வறண்டுதான் போகும். பல பகுதிகளில் கடல் நீர் உள்ளே ஊடுருவவும் கூடும்.இது சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட மிகப்பெரிய அபாயம். இதை யாரும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.
    இதற்கெல்லாம் ஒரே தீர்வு, இருக்கும் அணைகளைத் தகர்த்தெறிந்து, நதியை அதன் போக்கில் சுதந்திரமாக விடுவதுதான்! வெள்ளம் வரும் காலங்களில், உபரி நீரைத்திருப்பி, ஏரிகளில் சேமித்து அவற்றை இணைக்க வேண்டும். உண்மையில் காவிரியாற்றில் அணைகள் கட்டப்படுமுன் இருந்த நிலை இதுதான். தஞ்சாவூர் சீமையின் செழிப்புக்கு இதுவே காரணம். இதை அக்காலத்திய ஆங்கிலேய அதிகாரிகளும் பொறியியலாரும் வியந்து எழுதியிருக்கிறார்கள்.
    இது காட்டுத்தனமான யோசனையாகத் தோன்றலாம். ஆனால் இன்று விஞ்ஞானிகள் பெரிய அணைகளை எதிர்த்து வருகிறார்கள்.அமெரிக்காவில் பல அணைகள் தகர்க்கப்பட்டு வருகின்றன. நாமும் தொலை நோக்குடன் செயல்பட வேண்டும். 19ம் நூற்றாண்டு அணுகுமுறைகளை மாற்றவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *