சூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா?

“சூத்திரர்கள் எல்லாம் பாபம் செய்தவர்கள் என்று கீதை இனவாதம் பேசுகிறது” என்பது இந்து விரோதக் கருத்தியலைத் தொடர்ந்து பரப்பி வரும் குழுக்களின் ஒரு வாதமாகும்.  இது கீதையின் அந்தக் குறிப்பிட்ட சுலோகத்தை (9.32) குறித்த முற்றிலும் தவறான திரிபுவாதமும் பொய்ப் பிரசாரமும் அன்றி வேறில்லை.

மாம் ஹி பார்த்த2 வ்யபாஶ்ரித்ய 
யேSபி ஸ்யு: பாயயோனய: 
ஸ்த்ரியோ வைஶ்ய: ததா2 ஶூத்ரஸ்-
தேSபி யாந்தி பராம் க3திம். 

(பார்த்த2) பார்த்தா! (ஸ்த்ரிய:) பெண்களும் (வைஶ்யா:) வைசியர்களும் (ததா2) அவ்வாறே (ஶூத்3ரா:) சூத்திரர்களும் (பாயயோனய: யேSபி ஸ்யு:) பாவப்பிறவியினராக எவர்களுண்டோ (தேSபி) அவர்களும் கூட (மாம்) என்னை (வ்யபாஶ்ரித்ய) சரணடைந்து (பராம் க3திம்) உயர்ந்த நிலையை (யாந்தி ஹி) அடைகின்றனர் அன்றோ?

இது உரையாசிரியர் ஸ்ரீ அண்ணா (ராமகிருஷ்ண மடம்) தனது பகவத்கீதை உரையில் கொடுத்துள்ள சொற்பொருள்.

பாவிகளென்னைப் பணிவாராயினும்,
மாதரேனும், வைசியரேனும்,
சூத்திரரும் பரகதி பெறுவார்.

என்பது மகாகவி பாரதியாரின் மொழியாக்கம்.

இதுவே சரியானதும் சம்ஸ்கிருத இலக்கணப்படி துல்லியமானதுமான பொருளாகும். பாவப்பிறவியினர் என்பது முன்னால் சொன்ன ஸ்த்ரீகள், வைசியர், சூத்திரர் ஆகியோருக்கு அடைமொழியாகக் கூறப்பட்டது என்ற வாதம் தவறானது, பொருத்தமற்றது – சம்ஸ்கிருத மொழியின் பன்முகப்பட்ட இலக்கண விதிகளை வைத்து அத்தகைய பொருள் பழைய உரைகளில் எழுதப்பட்டுள்ளது என்ற போதும். இங்கு ‘பாவப்பிறவியினர்’ என்பது தங்கள் தீவினைகளின் காரணமாக கொடிய நோய்களுக்கோ பெரும் துன்பங்களுக்கோ பாதகச் செயல்களுக்கோ ஆட்படும் பலதரப்பட்ட மக்களைக் குறிக்கிறது. அவர்களும் உயர்நிலையை அடைவர் என்பதே சுலோகத்தின் சாரம்.

இதற்கு முந்தைய மூன்று சுலோகங்களில் தான் எல்லா உயிர்களிடத்தும் சமமாக உள்ளேன் என்றும், தீய நடத்தை கொண்டனும் தன்னை அடைந்தால் நன்னெறியில் செல்வான் என்றும், தனது பக்தன் என்றும் (ஆன்மீக) அழிவை அடையமாட்டான் என்றும் பகவான் சொல்வதன் தொடர்ச்சியாகவே இந்த சுலோகம் வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன். எனக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை. ஆனால் என்னை அன்புடன் தொழுவோர் – அன்னவர் என்னகத்தமர்ந்தார்; அவரகத்து நான் உளேன் (9.29)

மிகவும் கொடிய நடையோனாயினும் பிறிது வழிபடாதே என்னை வழிபடுவோன் நல்லோனென்றே கருதுக. ஏனெனில், நன்கு முயல்கின்றான் ஆதலின், (9.30)

அன்னவன் விரைவிலே அறவானாவான்,
நித்திய சாந்தியு மெய்துவான்.
குந்தி மகனே; குறிக்கொள்!
என தன்பன் சாகமாட்டான். (9.31)

இந்த சுலோகங்களுக்கான விளக்கங்களில் ஸ்ரீ அண்ணா கீழ்க்கண்ட அற்புதமான ஒப்பீட்டு மேற்கோள்களையும் கொடுத்திருக்கிறார்.

“விருத்திராசுரன், பிரகலாதன், விருஷபர்வா, பலி, பாணன், மயன், விபீஷணன், சுக்ரீவன், ஹனுமான், ஜாம்பவான், கஜேந்திரன், ஜடாயு, வியாதன் (தர்மாத்மாவான ஒரு இறைச்சி வியாபாரி – மகாபாரதத்தில் இவரது கதை வருகிறது), கோபிகைகள், யக்ஞபத்னிகள் (ரிஷிகளான தங்கள் கணவர்களின் சொல்லை மீறி கண்ணனுக்கு உணவளித்த அந்தணப் பெண்கள்) – இங்ஙனம் வெகுபேர்கள் அந்தந்த யுகத்தில் ஸாதுக்களின் சேர்க்கையினால் என் ஸ்தானமடைந்தார்கள். இவர்களில் பலர் வேதங்களை அத்யயனம் செய்தவர்களல்லர். பெரியோர்களை உபாஸித்தவர்கள் அல்லர். ஸாதுக்களின் சேர்க்கை மாத்திரத்தால் ஏற்பட்ட ப்ரீதியால் என்னை அடைந்தார்கள் ”

– ஸ்ரீமத்பாகவதம் 11, 12. 5-8.

“நெருப்புடன் சேர்ந்தால் கரி தன் கறுப்பை இழந்து ஒளிவிடத் தொடங்குகிறது” – துளசிதாசர்

(வ்யாத4ஸ்ய ஆசரணம் .. எனத் தொடங்கும் சுலோகத்தைக் கொடுத்திருக்கிறார். அதை மொழிபெயர்த்துக் கீழே தருகிறேன்)

“வியாதனுடைய ஆசாரம் தான் என்னே!
துருவனுடைய வயது முதிர்ச்சி என்னே!
கஜேந்திரனுடைய கல்வியறிவு தான் என்னே!
விதுரனுடைய சாதிப்பெருமை தான் என்னே!
யாதவபதி உக்ரசேனனுடைய ஆண்மையும் வீரமும் என்னே!
(மதுரா நகரத்து) கூனியின் அழகு ரூபம் தான் என்னே!
சுதாமாவிடம் இருந்த பணச்செழிப்பு தான் என்னே!
பக்திப்பிரியன் மாதவன்
பக்தியில் மட்டுமே அவன் மகிழ்கிறான்
இத்தகைய அந்தஸ்துகளில் அல்ல”

– ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம் (லீலாசுகர்)

“வித்யா கர்வமுள்ள ஜனங்கள் பிறருடைய பக்தியைப் பற்றி மூடபக்தி என்று கூறி அவர்கள் வழி தப்புவழி என்றும் கூறுவர். பக்தன் சிறுதுகாலம் அங்ஙனம் வழிதவறியே நடந்திருந்தாலும் பாதகமில்லை. அவனுக்கு என்ன வேண்டுமோ அதை ஈசுவரன் சீக்கிரமே கூட்டிவைப்பான்”  – ஸ்ரீராமகிருஷ்ணர்

“பாதியாய் அழுகிய கால்கையரேனும்
பழிகுலமும் இழிதொழிலும் படைத்தாரேனும்
ஆதியாய் அரவணையாய் என்பராகில்
அவரன்றோ யாம் வணங்கும் அடிகளாவார்!
சாதியால் ஒழுக்கத்தால் மிக்காரேனும்
சதுர்மறையால் வேள்வியால் தக்கோரேனும்
போதில் நான்முகன் பணியப் பள்ளிகொள்வான்
பொன்னரங்கம் போற்றாதார் புலையர் தாமே”

– பிள்ளைப்பெருமாள் ஐயங்கார், திருவரங்கக் கலம்பகம்

*****

மேற்கண்ட பதிவை எனது ஃபேஸ்புக் பக்கத்தில் நான் எழுதியிருந்தேன். அதற்கு  எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பின்வருமாறு எதிர்வினையாற்றியிருந்தார் –  “என்ன சொல்கிறார்? அரங்கனைத் தொழாதவர் எல்லோரும் புலையர்கள் என்கிறார். புலையர்கள் என்றால் பாபங்கள் பல செய்து மிகவும் கீழ்நிலையில் இருக்கும் மனிதர்கள். ஐயங்கார் கூற்றுப்படி யாரெல்லாம் புலையர்கள்? முஸ்லிம்கள், கிறித்துவர்கள், சைவர்கள், நாத்திகர்கள், சீனர்கள் போன்ற உலகின் 90% மக்கள். இதற்கும் கிறித்துவப் பிரசாரத்திற்கும் என்ன வித்தியாசம்? கிறித்துவ மதமாவது 50% மக்களை ஏற்றுக் கொள்கிறது”.

அவருக்கு  நான் கூறிய பதில்:

இந்தப் பாடலை நீங்கள் பொருள் கொண்டிருக்கும் முறைமையே முற்றிலும் தவறு. உடல் ரீதியாக அருவருப்புக்குரியவர் *ஆயினும்*, உலகியல் சார்ந்த குலம் தொழில் ஆகியவற்றால் கீழாகப் பார்க்கப் படுபவர் *ஆயினும்*, அவர் அரங்கனுக்கு ஆட்பட்டவர் (தத்துவ ரீதியாக, பிரம்ம சம்பத்தை உடையவர்) என்றால், அவர் வணங்கத் தக்கவர் என்கிறார். இந்த *ஆயினும்* என்கிற conditional phrase தான் முக்கியமானது. இங்கு “புலையர்” என்பது சிறிய / கீழான என்ற பொருளில் வருகிறது – புல்லறிவாண்மை என்று குறளில் உள்ளது போல, ‘புழுத்தலைப் புலையனேன் தனக்கு’ என்று திருவாசகத்தில் மணிவாசகர் தன்னையே கூறிக்கொள்வது போல. யார் புலையர் என்னும்போது முதல்பாதியில் சொன்னவற்றுக்கு நேரெதிரான conditional phrase வருவதைக் கவனிக்க வேண்டும். உலகியல் ரீதியாக குலத்தாலும் நடத்தையாலும் உயர்ந்தவர் *ஆயினும்*, ஏன் வேதங்களை ஓதியவர் *ஆயினும்*, வேள்விகளை செய்தவர் *ஆயினும்* அவர் அரங்கனைப் போற்றவில்லை எனில் (பிரம்ம சம்பத்து இல்லை எனில்), அவர் கீழானவர். இங்கு புலையர் என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரைக் குறிக்கவில்லை. சொல்லப்போனால், சமூக அந்தஸ்தின் அடிப்படையிலான மேல், கீழ் என்பதையே மறுதலிப்பது தான் இந்தப் பாடலின் கருதுகோள். “மேலிருந்தும் மேல் அல்லார் மேலல்லர்; கீழிருந்தும் கீழல்லார் கீழல்லவர்” என்ற திருக்குறளின் அதே கருத்தைத் தான் ஆன்மீகத் தளத்தில் தனக்கே உரிய மொழியில் இந்தப் பாடல் கூறுகிறது. தமிழறிந்தவர் இதற்கு இப்படித்தான் பொருள் கொள்வர். இந்தப் பாடல் தடாலடியாக விசுவாசி அசுவாசி என்று கிறிஸ்தவப் பாணியில் மக்களையே இரண்டு விதமாகப் பிரிவுபடுத்துகிறது என்பதாக நீங்கள் கூறுவது, வேண்டுமென்றே உங்களது இடக்கு வாதத்திற்கு வலு சேர்ப்பதற்காகப் பாடலின் பொருளைத் திரிப்பதன்றி வேறில்லை.

******

இப்பதிவு தொடர்பாக நண்பர் ஆர்.வி உடன் நடந்த  உரையாடல்:

ஆர்.வி.  – நான் சமஸ்கிருதம் அறியேன். ஆனால் மாதராக இருந்தாலும், வைசிய சூத்திரராக இருந்தாலும் கூட என் பாதம் பணிந்தால் முக்தி என்று பொருள் என்றால் – வைசிய சூத்திரர் மற்றும் பெண்கள் கீழானவர் என்றுதானே பொருள் வருகிறது? அது என்ன “இருந்தாலும் கூட” என்று கேட்கத் தோன்றாதா என்ன? பிராமண க்ஷத்ரியர்களை, ஆண்களை ஏன் குறிப்பிடவில்லை, வைசிய சூத்திரர் மற்றும் பெண்களை குறிப்பாக சொல்ல என்ன தேவை என்று கேள்வி எழாதா? பாவிகள் என்று அவர்கள்தான் சொல்லப்படுகிறார்கள் என்று பொருள் கொள்ளலாம் என்றுதான் தோன்றுகிறது.

ஜடாயு – சூத்திரர்களும், பெண்களும் வேதங்களைக் கற்க அதிகாரம் இல்லை என்று ஸ்மிருதிகள் கூறுகின்றன. வைசியர்களுக்கு வேதக்கல்வியில் அதிகாரம் இருந்தாலும் சமூக அந்தஸ்து பிராமண, க்ஷத்திரியர்களை விடக் குறைவு. இது அந்தக் காலகட்டத்திய சமூக யதார்த்தம்.எனவே இந்த உலகியல் காரணங்களால் ஆன்மீக ரீதியிலும் அவர்கள் குறைவு பட்டவர்களாவார்களா என்ற கேள்வி இயல்பாகவே எழும். அதற்கு இல்லை என்றும் விடைசொல்லும் முகமாக *அவர்களும்* என்று கீதை அழுத்தமாகக் குறிப்பிடுகிறது. அதற்குப் பொருள் அவர்கள் எல்லாரும் பாவம் செய்தவர்கள் என்பதல்ல. விவாதத்திற்கு வருவதற்கு முன் கீதையின் இந்த அத்தியாயத்தையாவது கொஞ்சம் புரட்டிப் பார்த்திருந்தால் // பிராமண க்ஷத்ரியர்களை, ஆண்களை ஏன் குறிப்பிடவில்லை // என்றெல்லாம் கேட்க மாட்டீர்கள். அடுத்த சுலோகத்திலேயே அவர்கள் குறிப்பிடப் படுகின்றனர்:

அப்படியிருக்கத் தூய்மை யார்ந்த
அந்தணரும் ராஜரிஷிகளும்
எனக் கன்பராயின், என்னே! ஆதலால்;
நிலையற்றதும் இன்ப மற்றதுமாகிய
இவ்வுலகப் பிறவி யெய்திய நீ
என்னை வழிபடக் கடவாய். (9.33)

ஆர்.வி – நான் கீதை எல்லாம் படித்ததில்லை,படிக்க பெரிதாக விருப்பமும் இல்லை.ஆனால் நீங்கள் படித்திருக்கிறீர்கள். சுலோகம் சுலோகமாக மேற்கோள் காட்டுகிறீர்கள். வைசிய சூத்திரராக ‘இருந்தால் கூட’என்று வருகிறது, அடுத்த சுலோகத்தில் ‘அப்படி இருக்க’-அதாவது வைசிய சூத்திரருக்கே (அந்த ஏகாரம் ரொம்ப முக்கியம்) முக்தி என்று இருக்க ‘தூய்மையார்ந்த அந்தணரும் ராஜரிஷி’யைப் பற்றி சொல்லவே வேண்டாம் என்று வருவதெல்லாம் உங்களுக்கு தவறாகத் தெரியவே இல்லையா? என்னதான் படித்தீர்கள்? இரண்டு சுலோகத்தையும் இணைத்துப் பார்த்தால் வைசிய சூத்திரரைபாவ ஜென்மங்கள் என்று சொல்வதாகத்தான் தெரிகிறது. கீதை வருவதால் அதற்கு வரிந்து கட்டிக்கொண்டு சப்பைக்கட்டு கட்டாதீர்கள். குறைந்தபட்சம் பிற்கால இடைச்செருகலாக இருக்கலாம் என்றாவது சமாளியுங்கள்..

ஜடாயு – உங்களது பிரசினை தான் என்ன? கீதையின் சுலோகங்கள் இன்றைய அரசியல்வாதிகள் அல்லது தளுக்கு எழுத்தாளர்களின் பதிவுகளைப் போல அரசியல் சரிநிலையுடன் (political correctness) இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? சூத்திரர்கள் சமூக அந்தஸ்தில் தாழ்ந்திருந்தார்கள் என்பதால் தான் *இருந்தும் கூட* என்று வருகிறது என்று நானே சொல்லியிருக்கிறேனே.. வேத அதிகாரம் இல்லாத இவர்களே பரகதியடைவார்கள் என்றால் சத்துவ குண சம்பன்னர்களான பிராமணர்களும், ராஜரிஷிகளாகவும் உள்ளவர்களைப் பற்றி என்ன சொல்வது என்பது அவர்கள் உயர்ச்சியைக் காட்டியது. அப்படி சொன்னதால் உடனே சூத்திரர்கள் பாவப்பிறபிகள் என்று ஆகிவிடாது (இதற்கு தர்க்க சாஸ்திரத்தில் நஹி நிந்தா நியாயம் என்று பெயர். உதாரணமாக, சந்திரனும் கூட இவ்வளவு ஒளிவீசுகிறது, அப்படியிருக்க சூரியன் எவ்வளவு ஒளிதரும்? என்றால் அது சந்திரனை நிந்திப்பதல்ல) பாவப்பிறவிகள் என்ற வாசகம் முன்பு சொல்லப்பட்டவர்களைத் தவிர்த்து வேறு ஒரு தரப்பினரைக் குறிப்பிடுகிறது என்று ஸ்ரீ அண்ணாவே தெளிவாக விளக்கியிருக்கிறார். எனவே இதில் சப்பைக்கட்டு எதுவுமில்லை. கீதை என்பது பிரம்ம வித்தை, உயர்ந்த சாஸ்திரம். நீங்கள் இங்கு “பரிந்துரைப்பது” போன்ற காமெடியான சப்பைக்கட்டுகள் (பிற்சேர்க்கை இத்யாதி..) எல்லாம் அதன் உன்னதத்தை நிலைநிறுத்துவதற்குத் தேவையில்லை.

******

15 Replies to “சூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா?”

  1. சரியான விளக்கம். வேண்டுமென்றே குதர்க்கம் பேசுபவர்கள் உண்மையை அறிய விரும்பார். 1907ல் முத்து ஐயர் இயற்றிய கீதை வெண்பா [ மொழிபெயர்ப்பு]வில் பின் வருமாறு காண்கிறது:

    9.31
    சிற்பொழுதில் அன்னான் அறத்திற் செறிந்தோனாய்
    எப்பொழுதும் சாந்தியினை எய்துவனால் – பொற்புறுமென்
    பத்தனென்றும் கேடு படானென்று நிச்சயமாய்ச்
    சித்திரவிற் சேவகநீ செப்பு.
    9.32
    பெண்டீரும் வாணிகரும் பீடுதவிர் சூத்திரரும்
    கொண்டிடுதி ஈனக் குலத்தினரும்- அண்டியெனை
    மிக்காரச் சேவித்து மேலான நற்கதியிற்
    புக்கார வாழ்ந்திடுவார் போந்து.
    இந்த (9.32) சுலோகத்திற்கு ஸ்வாமி ராம் ஸுக தாஸ் (கீதா பிரஸ்) தரும் விளக்கம்:
    “இந்த சுலோகத்தில் ‘பாபயோநய:’ என்னும் சொல் விரிந்த பொருள் படைத்தது.
    எனவே இதற்கு பெண்கள், வைசியர்கள், ஹரிஜனங்கள் ஆகியவர்களைக் குறிப்பதாகப் பொருள் கொள்ளக்கூடாது….பெண்கள் நான்கு வர்ணங்களிலும் இருக்கிறார்கள். இவற்றில் அந்தணர்,அரசர், வணிகர் ஆகிய குலத்தில் பிறந்த பெண்கள் தங்கள் கணவருடன் வேள்வி முதலியவற்றைச் செய்யத் தகுதிபெற்று விளங்குகிறார்கள். அவ்வாறிருக்க பெண்களைப் பாபயோனிகளில் பிறந்தவர் என்று எங்ஙனம் கூற இயலும்? இயலாது அல்லவா? நான்கு வர்ணத்திலும் இருந்தாலும் பகவான் பெண்களைத் தனியாகக் கூறுகிறார். எனவே இதன் கருத்து, பெண்கள் தங்கள் கணவரையே சார்ந்திருத்தல் வேண்டும், அதன் மூலமே பகவானை அடைதல் வேண்டும் என்னும் நியமங்கள் எதுவும் பரமாத்மப்ராப்திக்குக் கிடையாது. பெண்கள் சுதந்திரமாக பகவானை வழிபட்டு, அவரையே புகலாக அடைந்து பரமகதியை அடையலாம்….
    இந்த பாபயோநய: என்னும் பதத்திற்கு வைசியர்கள் எனப் பொருள்கொள்வதும் பொருந்தாது.ஏனெனில் வேதத்தின்படி வைசியர்கள் பாபயோனியில் பிறந்தவர்களல்லர்.(சாந்தோக்யம் 5/10/7). வைசியர்களும் வேதத்தைப் பயிலவும், வேள்வி முதலிய வைதிக கர்மங்களைச் செய்யவும் பூரண அதிகாரம் பெற்றவர்களாவர்.
    பாபயோநய: என்னும் இப்பதம் நான்காம் வர்ணத்தவருக்கும் பொருந்தாது. ஏனெனில் அவர்கள் இந்த நான்கு வர்ணத்தவரில் ஒருவராவர்.”
    [ ஸ்வாமி ராம் ஸுக தாஸ்: ஸாதக ஸஞ்ஜீவநி- ஸ்ரீமத் பகவத் கீதா விரிவுரை.
    கீதா பிரஸ், கோரக்பூர். முதல் பதிப்பு, 2002]
    (சாந்தோக்யம் 5/10/7 படி, தீய நடத்தை உள்ளவர்கள் நாய், பன்றி மற்றும் சண்டாளராகப் பிறக்கின்றனர்.)

  2. அருமையான பதிவு. நிறைய எழுதுங்கள்

  3. அன்புள்ள ஜடாயு,

    உரையாடலைத் தொடர்வதற்கு நன்றி!

    // கீதையின் சுலோகங்கள் இன்றைய அரசியல்வாதிகள் அல்லது தளுக்கு எழுத்தாளர்களின் பதிவுகளைப் போல அரசியல் சரிநிலையுடன் (political correctness) இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? // என்று கேட்டிருந்தீர்கள். அல்ல. கீதையில் இல்லாத அரசியல் சமநிலையை வலிந்து உள்ளே புகுத்துவதில் பொருளில்லை என்றுதான் சொல்கிறேன். கீதை பெண்களையும் வைசிய சூத்திரர்களையும் பாவிகள் என்று ஒரு சுலோகத்தில் சொல்லப்பட்டிருந்தால் அப்படி இல்லை என்று சப்பைக்கட்டு கட்டுவதை கண்ணன் போன்ற மஹா புத்திமான் இன்றிருந்தால் ஏற்கமாட்டான். அது அன்றைய சமூகநிலை, கொஞ்சம் அதீதமாக இந்த சுலோகத்தில் வெளிப்பட்டிருக்கிறது, மற்ற சுலோகங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் சரியான் நிலை.

    அமெரிக்க அரசியல் சட்டம் “We hold these Truths to be self-evident, that all Men are created equal, that they are endowed by their Creator with certain unalienable Rights, that among these are Life, Liberty, and the Pursuit of Happiness” என்று ஆரம்பிக்கிறது. பெண்கள் தாமஸ் ஜெஃபர்சனின் கண்ணில் ஆண்களுக்கு அடுத்த நிலையில்தான் இருக்கிறார்கள் என்பது வெளிப்படை, ‘All Men are created equal’ என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. கறுப்பர் இன அடிமைகளை வைத்து வேலை வாங்கிக் கொண்டிருந்த ஜெஃபர்சன் ”All Men’-இல் கறுப்பர்களை கணக்கில் கொள்ளவில்லை என்பது தெளிவு. அதனால் அமெரிக்க அரசியல் சட்டம் மானுடத்தின் பெரும் சாதனை அல்ல, அதுவும் இந்த வரிகள் பெரும் மானுட தரிசனம் இல்லை என்றாகிவிடுமா என்ன?

    கீதையை நான் படித்ததில்லை, படிக்க பெரிதாக விருப்பமும் இல்லை, ஏனென்றால் அதன் சாரமாக நான் புரிந்து கொள்ளும் நாலு வரியே எனக்குப் போதும். ஏதோ ஒரு சுலோகத்தின் ஏதோ ஒரு வரிக்கு வலிந்து சமாதானம் சொல்லி மாபெரும் தரிசனத்தை மலினப்படுத்தாதீர்கள். என்றாவது ஒரு நாள் படிக்கலாம் என்ற விழைவும் கொஞ்சம் அடிபட்டுப் போகிறது. Don’t lose sight of the magnificent forest by so closely focusing and justifying a discoloration of bark on one tree.

  4. நீங்கள் சமாளிக்கின்றீர்கள்,இந்த சுலோகத்தின் படி,பெண்கள்,வைசியர்கள்,சூத்திரர்கள், எல்லாரும் தாழ்ந்தவர்கள் என்றே பொருள்.

    கீதை,பகவான் கிருஷ்ணர் அருளியதெல்லாம் கிடையாது.உண்மையில் ஹிந்து மதத்தில் கடவுளின் சொல் என்று எதுவுமே கிடையாது.இங்கு கடவுளைப் பொறுத்தமட்டில் பின்பற்றுதல் என்றே ஒன்று இல்லை,உணர்தல் மட்டுமே.
    மேலும் நானும் சனாதன தர்மத்தை முழுமையாக நம்புகிறேன்.ஏற்றத்தாழ்வுகளெல்லாம் வெள்ளைத்தோல்க்காரர்களால் ஏற்படுத்தப்பட்டது.
    கடவுளுக்கும் சாதிக்கும் தொடர்பில்லை,உங்களுக்கு கடவுளைப் பற்றியும் தெரியவில்லை.

    இம்மாதிரிக் கட்டுரைகளைப் படிக்கும்போதுதான் எனக்கு கடவுள் நம்பிட்க்கையே இல்லாமல் போகிறது.இப்படியே சேவை செய்யுங்கள்.

  5. செய்யதெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்
    ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
    ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்
    வையகத்துள் மாந்தர்முன்னம் வாய்திறப்தில்லையே !!

    உங்களுடைய கட்டுரைகளையும்,சண்டைகளையும் பார்க்கும்போது துளசிதாசரும்,தேவாரமும்,திருவாசகமும்,காரைக்கால் அம்மையாரும்,ராம கதையும்,சித்தர்களும்,வள்ளலாரும்,வாசலில் கோலமிடுதலும் இல்லையென்றால் நான் ஹிந்து மதத்தை துறந்து நிம்மதியாக இருப்பேன்.

    புதுமைப்பித்தனின் ‘அன்று இரவு’,”கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ கதைகளைப் படித்துப் பாருங்கள் அந்தக் கதைகள் சொல்வதுதான் ஆன்மீகம். நீங்கள் இந்தத் தளத்தில் சொல்வதெல்லாம், ஹிந்து மதத்தை நிறுவனமாக்கும் முயற்சி.

  6. ஒரு சொல்லுக்கு இப்படித்தான் பொருள் செய்துகொள்வேன் என்று ஒருவர் சொல்லும்போது நாம் பேச எதுவும் இல்லை. ஆனால் ஒரு சொல் எந்தெந்த இடத்தில், எந்த சந்தர்ப்பத்திலெல்லாம் என்ன பொருளில் வருகிறது என்று பார்த்தால் உண்மை விளங்கும்.
    நான்கு வர்ணத்தவரும் ப்ரஜாபதியின் குழந்தைகளே. இதில் எவரும் பாபயோனியில் வந்தவர்கள் இல்லை. ஆனால் பின்னர் சிலர் பாபம் செய்யலாம். பாபம் ஏன் வருகிறது? “காம ஏஷ: க்ரோத ஏஷ:” 3.37 காமத்தினாலும் க்ரோதத்தினாலும் பாபம் வருகிறது. எனவே, சூத்திரராகப் பிறப்பவர்களெல்லாம் பாபயோனியர் அல்ல.
    சில மோசமான குணம், செயல் கொண்டவர்கள் திரும்பத்திரும்ப அசுர இயல்புள்ளவராக [அசுர யோனிகளில்], அதற்கும் கீழே பிறக்கிறார்கள். (16.19.20) இங்கு யோனி என்பது பிறவியிலேயே வந்த இயல்பு எனப் பொருள்படும். இத்தகைய இயல்புள்ளவர் எல்லா வர்ணத்திலும் இருக்கலாம். பிரம்ம ராக்ஷஸன் என்று இருக்கிறதல்லவா? “புல்லாகிப் பூடாய்…..கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
    வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்” வரும் பல பிறவிகளும் கர்மத்தினாலேயே வருவதன்றோ? [ இக்காலத்தில் ராக்ஷஸர் என வெளிப்பார்வைக்குத் தோன்றும் இனத்தினர் இல்லை. ஆனால் ராக்ஷஸ இயல்புள்ள மக்கள் இருக்கிறார்களல்லவா?] ஆக, பாபயோனி ஒவ்வொருவருடைய கர்மத்தினால் வருவதே யன்றி, அது ஒரு வர்ணத்தவர்/பாலர் முழுவதற்குமே பொருந்தாது. நான்கு வர்ணமும் கடவுள் சிருஷ்டி என்பது கீதை வாக்கு. எனவே, இதில் சில வர்ணத்தவர் மட்டும் பாபயோனியர் என்பதற்கு ஆதாரமில்லை. அப்படி இருந்தால் அதைக் காட்டவேண்டும். பாபம் செய்பவர்கள் நாய், பன்றி, சண்டாளராகப் பிறக்கின்றனர். அவர்களும் பக்திசெய்து உய்யலாம் என்பதே அத்யாயம் 9ல் சுலோகங்கள் 30-33ன் தாத்பர்யம். விலங்குகள் பக்தி செய்து உய்ந்த வரலாறுகளும் புராணத்தில் உண்டு.[தற்காலத்திலும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன: குருவாயூர் கேசவன் என்ற யானை, ஸ்ரீ ரமணர் சன்னிதியில் இருந்த பசு, காகம், குரங்கு, நாய் முதலியவற்றைச் சொல்லலாம்.] The emphasis here is not on birth, or state of merit or demerit, but devotion which saves. When the focus is on freedom or liberation through devotion, no matter what, why should we harp on the inessentials by an intentionally devious interpretation?

  7. வாசகர்கள் தங்களின் மனதில் உள்ள கருத்துக்களை வெள்ளமென அள்ளி பதிவு செய்யுங்கள். படிப்போம்.வளா்வோம்.
    5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பகவத்கீதையில் ஒரு சிறிய கருத்து இன்று தவறாக தெரிந்தால் அது கீதைக்கு தகுதி இழப்பு ஆகாது.
    . வேதம் புதியது செய்ய அது தூண்டுதலாக அமையலாம்.
    அமைய வேண்டும்.
    பகவத் கீதை இந்துமதத்தின் வேதம் அல்ல.
    வேதம் என்று சொல்ல தகுதி படைத்த புத்தகம் ஏதும் உலகில் இல்லை. ஸ்ரீகிருஷ்ணா் அர்ச்சுனனுக்கு சொல்லிய உபதேசம் அவ்வளவுதான்.

  8. //இந்த *ஆயினும்* என்கிற conditional phrase தான் முக்கியமானது. இங்கு “புலையர்” என்பது சிறிய / கீழான என்ற பொருளில் வருகிறது – புல்லறிவாண்மை என்று குறளில் உள்ளது போல, ‘புழுத்தலைப் புலையனேன் தனக்கு’ என்று திருவாசகத்தில் மணிவாசகர் தன்னையே கூறிக்கொள்வது போல. யார் புலையர் என்னும்போது முதல்பாதியில் சொன்னவற்றுக்கு நேரெதிரான conditional phrase வருவதைக் கவனிக்க வேண்டும். உலகியல் ரீதியாக குலத்தாலும் நடத்தையாலும் உயர்ந்தவர் *ஆயினும்*, ஏன் வேதங்களை ஓதியவர் *ஆயினும்*, வேள்விகளை செய்தவர் *ஆயினும்* அவர் அரங்கனைப் போற்றவில்லை எனில் (பிரம்ம சம்பத்து இல்லை எனில்), அவர் கீழானவர். இங்கு புலையர் என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரைக் குறிக்கவில்லை. சொல்லப்போனால், சமூக அந்தஸ்தின் அடிப்படையிலான மேல், கீழ் என்பதையே மறுதலிப்பது தான் இந்தப் பாடலின் கருதுகோள்.//

    பாரதியார் //ஈனப்பறையர்களேயாயினும் அவர் எம்மிடம் வாழ்பவரன்றோ//
    நம்மாழ்வார் // சண்டாள சண்டாளர்களேயாயினும்…”
    தொண்டரிப்பொடியாழ்வார்// குடிமையில் கடமைப்பட்ட குக்கரில் பிறப்பரேயாயினும்…,//

    இவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். இவையெல்லாம் இவ்வரிகளில் சொல்லப்பட்டவர்கள் பிறப்பினிலேயே இழிசனர்கள் என்றே கொள்கிறது. புலையர் என்பது ஒரு இழிசனர்களில் ஓர் குலம். அதில் பிறந்தவரே நந்தனார். பின்னாள் வந்த வரிகள் நேரெதிராக இருக்கின்றன. ஆனால் அந்த நேரெதிர்மை, முன்னால் சொல்லப்பட்ட மக்களைப் பற்றிச் சொன்னதை – அவர்கள் இழிபிறப்பை – மாற்றவேயில்லை. பிறப்பை எவராலும் மாற்ற முடியாது. நாம் யாருக்குப் பிறந்தோமென்பதை மாற்ற முடியுமா? ஆனால் பிறப்பினால் வரும் தொல்லைகளைக் களையலாம். அதை எப்படி செய்வது என்பதைக்காட்டுவதே இவ்வரிகளின் நோக்கம்.

    இப்பாடல்களில் பொருள் என் புரிதல்படி: சண்டாளர்கள் (கீழ்சாதியில் பிறந்த மக்களுக்கு சமஸ்கிருதம்) நம்மாழ்வார் பயனபடுத்துவது; பறையர்கள் (பாரதியார்); குக்கர்கள் (தொண்டரிப்பொடியாழ்வார்); புலையர்கள் – இவர்களெல்லாரும் பிறப்பினால் இழிந்தோரே. அவ்விழித்தன்மையிருந்தாலும் அவர்கள் பக்தர்களாயின் அவர்கள் தம் இழித்தன்மையை இழக்க வாய்ப்புண்டு. எப்படி எனபதை சொல்லவே எழுதப்பட்டவை இவை.

    இப்படிப்பட்ட சொல்லாடல்கள் ஏன் தேவையாயின? எழுதப்பட்ட காலத்தில் மேற்சாதியினருக்கு எடுத்த பாடங்களே இவை. நீங்கள் பிறப்பினால் உயர் ஜாதியினர். ஆனாலும் அப்பிற்ப்புயர்வு நாத்திகராயின் அல்லது ஒழுக்கங்கெட்டால் நீர்த்து விடும். அதே போல அவர்களை பிறப்பினால் கீழானவரே; ஆனால் அக்கீழ்மையை மாற்ற முடியும் எனவே என்றுமே அவர்களை இழிசனர்களாக நீங்கள் கொள்ள முடியாது. அவர்கள் பக்திமானகாக ஆயின் அவர்கள் உம்நிலையை அடைவர் என்ற கருத்தை உயர்ஜாதியினருக்கு ஊட்டவே இவைகள் எழுதப்பட்டன. மேலும், இழிசனர்கள் எனப்து சங்கப்பாடற்சொல். இழிசனர்கள் என்பவர் கீழ்பிற்ப்பாளர்கள். இப்பாடல்கள் எழுதப்பட்ட காலங்களில் கீழ்சாதி மக்களுக்கு எழுத்தறிவே கிடையாது. எனவே அவர்கள் இப்படிப்பட்ட பாடல்களைப்படிக்க முடியாது என்பது எழுதியவர்களுக்குத் தெரியும். உயர்ஜாதியினருக்காகவே இப்பாடம் எடுக்கப்பட்டது.

    இன்று கேள்விக்குறிகளாகக் காரணம் அன்றைய இழிசனர்களும் அவர்களுக்குச் சாதகம் பேசும் சூத்திரர்களும் கல்வி அறிவு பெற்றதனால் வந்த வினைகளே. தலித்துக்கள் இடையே முற்றிலும் கல்வி அறிவு பெருகினால், அவர்கள் முன்னால் நம்மைப் பற்றி என்ன சொன்னார்கள் என ஆராய்வார்கள். எப்படி தடுக்க முடியும்?

    That’ why I suggested that certain verses from the scriptures should be removed. For this suggestion, I was called names by Jatayu. This reformation should be undertaken immediately. Whatever justification you give – as this article attempts to do – won’t pass muster among dalits. Expunge is their only demand. Before they ask for it, remove. Remove means in future editions, such verses should not be there. After a century, people will forget these incendiary verses completely.

  9. RE:BSV. This suggestion to remove certain verses from the scriptures is worse than the problem.
    The modern age has lost the key to the scriptures- their understanding and interpretation. Every scripture reflects the conditions of the times in which it arose. Subsequent ages may not face those conditions. Hence the problem in understanding.
    The modern mentality is to interpret old ideas in new terms. The simplest example of this is to regard all references to God or man as ‘he’as expressions of male chauvinism. Even Bible, Shakespeare and Milton are interpreted today in terms of Marxism, feminism, Freudian psychoanalysis, modernism, post-modernism, etc. Where will this process of removal end, if we interpret old scripture and literature in terms of current fashion, theories and opinions which themselves keep changing?
    The problem with the Gita is that we tend to regard the chapter divisions as sacrosanct and distinct. We tend to forget that the Gita was a dialogue (Samvadam) and is one long argument. We tend to get stuck at a chapter, verse etc as if it is all. If we regard the whole poem as a single, long argument we can trace the main idea. The Gita is addressed to Arjuna- a very distinct personality raised in a given socio-cultural milieu. Hence Krishna addresses him in terms of ideas and concepts known to him, and gives new interpretations of all old terms and ideas like karma, yajna, yoga, etc. In this he enlarges their scope and application. The basic question of Arjuna is about Dharma ( about which his mind was confused) and his fear of committing sin ( by indulging in a war against kith and kin, and respectable elders.) Krishna’s final answer is not to bother about formal dharmas (which are endless) but to surrender to God unconditionally as the final refuge, and perform the action warranted or caused by his duty without hatred or attachment.. This is, without doubt, the final and ultimate message of the Gita. [18.66] All others are arthavada, leading up to this supreme moment and teaching. If we understand Gita and its message in this manner,why should we get stuck at any particular passage on the way? If we single out specific passages like this for removal, because it seems to offend our sensibility now, what will we be left with in course of time, when our very sensibilities will keep changing?
    A scripture contains permanent elements (otherwise it won’t be scripture) but it is clothed in language of its times. We compound the problem by attempting to interpret in accordance with our times.
    There is no doubt that every society has regarded some as not belonging to the social mainstream at some time on some ground. Hence we have notions such as mlechcha, barbarians, etc. There is no doubt that certain professions were regarded as filthy or unclean. For instance, in Japan, those working in abbattoirs were considered socially inferior, and people avoided mingling with them.The Japanese caste system was abolished in 1871, but even today such workers find it difficult to integrate with society fully.In the light of the modern changes, should we condemn the old divisions ? Well, we don’t agree with them today, there ends the matter.

    Let us just reflect a bit. Does the ruling elite/group even in a modern democracy deal with members of the opposition parties on equal terms? Does this not amount to some form of untouchability or at least inequality in practice? Prejudice or preference exists in some form or the other in all societies at all times. But history upsets all applecarts.

    The Gita’s supreme message is that no matter what one’s social background is, one is saved by devotion to God and the consequent good resolution and conduct. If this is so, where or what is the problem?

  10. BSV ஐயா தங்களுக்கு வணக்கம்.தங்கள் கருத்து சரியானதே.பண்டைய காலத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடு நோ்மையின்மை சமூக புறக்கணிப்பு என்று நிறையவே நடந்துள்ளது.சாதிகளற்ற வேதகால சமூகம் ஒரு வகையில் கால ஒட்டத்தில் பல சாதிகளாக பிரிந்து சுயநலன் பேராசை ஆதிக்க உணா்வு காரணமாக மனித வளமற்ற கருத்துக்களை பிடிவாதமாக கொண்டுள்ளது. இந்து மதத்திற்கு மட்டும் அல்ல.பொதுவாக மனித சமூகத்திற்கே உள்ள வியாதி.
    முஸ்லீம்களில் காதியானி முஸ்லீம்கள் தங்களை சீர்திருத்தவாதிகளாக காட்டிக் கொள்கின்றார்கள்.ஆனால் அவர்களை பிற முஸ்லீம்கள் வேட்டையாடுகின்றார்கள்.பாக்கிஸ்தானில் காபீர்கள் என்று அறிவிக்கப்பட்டு பெரும் இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றார்கள்.இந்து சமூகத்தில் உரிமைகள் மீறல் நடந்துள்ளது. அழிக்கப்படுவது குறிக்கோளாக இல்லை. ஆனால் கிறிஸ்தவ இசுலாமிய சக்திகள் வலுப்பற்ற இடங்களில் பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் அல்லது ஆதிக்க சக்திகளுக்கு இணக்கம் காட்டாதவர்களின் அழிவையே அவைகள் நாடும். நமது இந்திய சமூகம் நாசமாகப் போவதற்கு முக்கியக் காரணம் அரேபிய காடையர்களின் ஆட்சிதான். எப்படியோ இன்று ஒரு சமதர்ம ஜனநாயக அரசு அமைந்துள்ளது.நமது சமூகங்களில் உள்ள குறைகளை படிப்படியாக களையப்பட்டு வருகின்றது நிதர்சனமாக உண்மை. இந்து இயக்கங்கள் மக்களிடையே மனித வளத்தைகாண நிரந்தர திட்டங்களில் மனித வளங்கள் செலவு செய்யப்பட ஆவன செய்ய வேண்டும். தலீத இயக்கங்களும் சாதிப் பகையை காட்டி வெறுப்பை விதைத்து தங்களை பாதுகாவலா்களாக காட்டி ஆதிக்கம் செய்து வருகின்றன. சரியான திட்டம் இல்லை.பிற சாதி மக்கள் மீது வெறுப்பை வளா்த்து வருவது யாருக்கும் நன்மை இல்லை.

  11. ஆயிரம் குறைகள் இருந்தாலும் இந்து மதத்தில் இருக்கும் ஒரு நெகிழ்ச்சி தன்மை

    வேறு எந்த அமைப்பிலும் கிடையாது. சீர்திருத்தத்தை வெகு எளிதில் எற்றுக்

    கொள்ளும் குணம் இந்து சமூகத்தின் அற்புதமான சிறப்பு.இதை வேறு எங்கும் காண

    முடியாது. பழையன கழிதலும் புதியன சேர்தலும் பழிஇல்ல வாழும் வகை என்ற கருத்து நம்மிடையே அருமையான பிரசித்தி பெற்றுள்ளது.விளக்கை ஏற்றுங்கள்.இருளைப்ப ழிப்பதால் ஆவதென்ன.

    இயேசுவின் இரத்தத்தால் பாவம் தீராது என்ற கிறிஸ்தவா் சபையில் இருந்து நீக்கப்ட்டு கிறிஸ்தவர் என்ற தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டார்.

  12. The problem with “pseudo secularists” like BSV is that they take potshots at Hinduism & do not dare open their mouth against the atrocities committed in other religions.

    They criticize the ancient texts & puranas by reading the interpretations of the west without understanding its true essence. Hinduism has evolved over the ages whereas other religions still stick to their dogmatic faith.

    The triple talaq issue is a case in point. Even now, many in islam defend the practice.

    BSV & his ilk are maybe afraid, that thy will incur the wrath of muslims/christians if they talk otherwise. They know that hindus can be taken for granted.

    They fail to realize that society is homogeneous & when we talk of atrocities, inequality eyc., it needs to be viewed in totality.

    People like BSV are “graduated”, not “educated”.

    That’s the pity.

  13. Shri R Nanjappa
    BSV is a crypto christian and appears in various names and avatars in various sites. His aim is not to learn anything from our Dharma. Shri Krishnakumar had taken him to task and had laid him baron numerous occasions. But, he always returns, like a bad penny. Don’t waste your precious time on him. His intention is to disrupt and not to learn.

  14. அன்பர் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ

    \\ இன்று கேள்விக்குறிகளாகக் காரணம் அன்றைய இழிசனர்களும் அவர்களுக்குச் சாதகம் பேசும் சூத்திரர்களும் கல்வி அறிவு பெற்றதனால் வந்த வினைகளே. \\

    பெருமதிப்பிற்குரிய டாக்டர் க்ருஷ்ணஸ்வாமி அவர்கள் தமது ஜாதியினை பட்டியல் ஜாதியிலிருந்து விலக்க வேண்டும் என்று விக்ஞாபித்திருக்கிறார். இவர்களது குலம் அரசாண்ட குலம் என்று சொல்லப்படுகிறது.

    அப்படியானால் அப்படி அரசாண்ட குலத்தை தாழ்த்தியது யார்?

    ஒவ்வொரு ஜாதியாக ஆன்ம அறுவடை செய்வதை குறிக்கோளாகக் கொண்ட பரங்கிய க்றைஸ்தவ தேவாலயம்?…………. காசுக்கு விலை போகும் த்ராவிடக் கழிசடை அரசியல் வ்யாதிகளுடன் கூட்டு சேர்ந்து ஒவ்வொரு ஜாதியாகக் குறிவைத்து இழிவு செய்யும் வழமையைத் துவக்கியது இன்று தங்களது புளுகு மூட்டை வரை தொடர்கிறது.

    இருக்காதா பின்னே வாக்குதத்தமருளிய படிக்கு ஆன்ம அறுவடை ஜாபிதாவைத் தயார் செய்ய வேண்டாமோ?

    \\ தலித்துக்கள் இடையே முற்றிலும் கல்வி அறிவு பெருகினால், அவர்கள் முன்னால் நம்மைப் பற்றி என்ன சொன்னார்கள் என ஆராய்வார்கள். \\

    யார் தலித்துக்கள்? ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ தீர்மானம் செய்யும் ஜாதிகளா?

    தம் குலப்பெருமை அறிந்த ஒவ்வொரு ஜாதியும் தாங்கள் தாழ்ந்த அல்லது தாழ்த்தப்பட்ட ஜாதியே கிடையாது என்று சொல்லும் காலம் இது. ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ வாக்குதத்தமருளிய பரங்கிய க்றைஸ்தவ தேவாலயம் சுட்டும் தாழ்த்தப்பட்ட எனும் பட்டத்தை சுமக்கத் தயாராக இல்லை பட்டியலில் உள்ள பல ஜாதிகள்.

    \\ That’ why I suggested that certain verses from the scriptures should be removed. \\

    ஹிந்து மதத்தில் உள்ள நூற்களில் இருக்கும் பகுதிகளை நீக்க வேண்டும் என்று தாம் வாக்குதத்தமருளிய பரங்கிய க்றைஸ்தவ தேவாலயத்தின் திட்டங்களை அமல் செய்ய விழையும் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ அவர்கள்…………………..மதசார்பின்மை என்ற போர்வையில் க்றைஸ்தவத்தை பரப்ப விழையும் ஐயா அவர்கள்………….

    பீ எசு எனும் பெயரிலோ அல்லது இவரது முன்னாள் பெயர்களான ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ……..காவ்யா…….திருவாழ்மார்பன்………..ஐ ஐ எம் கணபதிராமய்யர்………..TAMIL…………….பால சுந்தரம் க்ருஷ்ணா…………. போன்ற பெயர்களிலோ…………….

    இந்த தளத்திலோ அல்லது மற்றைய தளத்திலோ இதே போன்று க்றைஸ்தவ மத அல்லது இஸ்லாமிய மத நூற்களில் உள்ள ஆக்ஷேபகரமான பகுதிகளை…………..அன்புராஜ் ஐயா அவர்கள் சுவனப்ரியன் மற்றும் பலருடனும் குரான்-ஏ-கரீமிலிருந்து சுட்டிக்காட்டி …………. இவை இழிவானவை என்று வாதாட விழையும் பகுதிகளை…………… நீக்க வேண்டும் என்று எங்காவது எப்போதாவது பகிர்ந்துள்ளாரா? என்று சொல்லட்டும்………..

    சில்சாமுக்கருளிய வாக்குதத்தம் எப்படியெப்படியெலாம் நிறைவேற்ற முனையப்படுகிறது. சுவனம் நிச்சயம் தான் போலே 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *