ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 1

நன்றி : ராவ் சாகிப் தேஷ்பாண்டே

குறிப்பு: ரங்க்ஸிப்பைச் சந்திக்க ஆக்ரா சென்று, பின்னர் அவரால் வமானப்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட சத்ரபதிபதியும் அவரது மகன் சாபாஜியும் அங்கிருந்து தப்பிய வரலாற்றுப் பின்னனித் தகவல்களை, ராவ் சாகிப் தேஷ்பாண்டே அவர்கள் ஆராய்ந்து The Deliverance or the Escape of Shivaji the Great from Agra என்னும் புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதிலிருந்து சில பகுதிகள் இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

ஆக்ராவில் சிவாஜி மகராஜாவுக்கு நிகழ்ந்த அவமானங்கள் என்னவென்பதனைப் பற்றி ஆளாளுக்கு எழுதி வைத்திருக்கிறார்கள் (இந்தியர்கள், ஐரோப்பியகர்கள் இருநாட்டவரும்). சிறிது சலிப்பும், குழப்பமும் ஊட்டக்கூடிய அந்தக் குறிப்புகளிலிருந்து உண்மையில் நடந்தவற்றை ராவ் சாகிப் நமக்குப் படிக்க அளிக்கிறார். வரலாற்று ஆர்வலர்களுக்கு இது நிச்சயம் துணைபுரியும் என்று நம்புகிறேன்.

***

ஒரு அரசாங்கம் நன்றாகச் செயல்படவேண்டுமானால், அந்த அரசை ஆளுகிறவன் தனது ராஜ்ஜியத்திற்குள் நடக்கும் எல்லாச் சிறிய, பெரிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்தவனாக, அதன்படி எதிர் நடவடிக்கை எடுக்கிறவனாக இருக்கவேண்டும். அதில் நிகழும் ஒரே ஒரு சிறிய சுணக்கம்கூட அந்த அரசாங்கத்திற்கு வருடக்கணக்கில் அவமானத்தை வரவழைப்பதாக இருக்கும். உதாரணமாக என்னுடைய சிறிய கவனமின்மை காரணமாகத் தப்பியோடிய மராட்டிய ஈனன் சிவாவுடன் போர்புரிய என் வாழ்நாளின் கடைசி நாள்களைச் செலவிடவேண்டியதாயிற்று.” எனக் கசப்புடன் தன்னுடைய உயிலில் எழுதினார், இந்தியாவின் இறுதிப் பேரரசனான ஔரங்கஸிப். தன்னிடமிருந்த ஏராளமான படையணிகளைக்கொண்டும், பணத்தைக்கொண்டும் சிவாஜியைக் கொன்று, தக்காணத்தைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவர இயலாமல்போன இயலாமையும், வருத்தமும் அந்த வார்த்தைகளில் தெறிப்பதனை நாம் காணவியலும்.

1683-ஆம் வருடம் துவங்கி 1707-ஆம் வருடம் வரைக்குமான ஏறக்குறைய 24 நீண்ட வருடங்களில் ‘சபிக்கப்பட்ட’ மராத்தாக்களைத் தோற்கடிக்க இயலாமல் மனமுடைந்து இறந்தார் ஔரங்கஸிப். தொடர்ந்த போர்களினால் அவரது படையணிகள் நிலைகுலைந்து, களைத்துப்போயிருந்தார்கள். முக்கியமான படைத்தலைவர்கள் பலர் கொல்லப்பட்டிருந்தார்கள். அதனையும்விட முகலாய கஜானா காலியாகியிருந்தது.

இது அத்தனையும், “கேடுகெட்ட” சிவாஜியைத் தான் தப்பவிட்ட ஒரு சிறிய தவறால் மட்டுமே நிகழ்ந்தது என்கிற உண்மை, ஔரங்கஸிப்பை அரித்துத் தின்றது. மராட்டாக்களை அழிக்கவந்த அசைக்கமுடியாத வலிமையுடைய முகலாய சாம்ராஜ்யம் இறுதியில் மராட்டாக்களை அழிக்க இயலாமல் தன்னுடைய சாம்ராஜ்யம் சிதறிப் போய்க்கொண்டிருப்பதனையும் கண்ணால் பார்த்துவிட்டே மறைந்தார் ஔரங்கஸிப்.

இரவு நேரங்களில் சாலைகளில் சென்றுகொண்டிருக்கும் முகலாயப்படைகளைத் திடீரெனத் தாக்கியழிப்பதிலிருந்து, முக்கியமான மலைப்பாதைகளில் ஒளிந்திருந்து தாக்கி, ஏராளமான படைவீரர்களையும், விலங்குகளையும் கொன்றும், காயப்படுத்தியும், கொள்ளையடித்தும் செல்லும் சபிக்கப்பட்ட குள்ளர்களான மராத்தாக்கள் ஔரங்கஸிப்பின் மனதில் பெரும் துயரத்தை விதைத்தார்கள். சந்தேகமில்லாமல் ஔரங்கஸிப் தைமூர் குடும்பத்து Chagtai பரம்பரையில் வந்த இந்தியாவின் பேரரசன். அவர் இந்தியாவை அவரது முன்னோர்களிடமிருந்து ஸ்வீகரித்தார். சிவாஜியோ, அவரது மூதாதையர்கள் இழந்ததைப் பெறப் போர்புரிந்தார். இந்திய ஹிந்துக்களை “நாய்கள்” எனக் கேவலமாகப் பேசிய, நடத்திய ஔரங்கஸிப்பினை வெறுத்த பூர்வகுடிகளான ஹிந்துக்கள், சிவாஜியை தங்களை விடுதலைசெய்ய வந்தவராக நோக்கினார்கள். ஔரங்கஸிப்பிற்கு எதிரான போரில் வெற்றிபெற ஒவ்வொரு இந்துஸ்தானத்து ஹிந்துவும் மனப்பூர்வமாக இறைவனை வேண்டிக்கொண்டிருந்தான்.

இந்தச் சூழ்நிலையில், ஆக்ராவுக்கு சமாதானம்பேசச் சென்று, அங்கு சிறைவைக்கப்பட்ட சிவாஜி, ஔரங்கஸிப்பின் பிடியிலிருந்து தப்பிவந்தது ஒரு பெரும் சரித்திர நிகழ்வேயன்றி வேறில்லை (ஆகஸ்ட்17, 1666). ஏனென்றால் ஔரங்கஸிப்பிடம் சிக்கிய எவரும் உயிருடன் திரும்பியதில்லை — அவரது சொந்த சகோதரர்கள் உட்பட. ஒருவேளை சிவாஜி அந்தச் சிறையிலேயே இறந்திருந்தால் இந்திய வரலாறே முற்றிலும் மாறியிருக்கும். முகலாய ஆட்சியேகூட இன்றுவரை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

எனவே, முதலில் சிவாஜி ஆக்ராவுக்குச் செல்ல வேண்டிய சூழல் எப்படி உருவாகியது, அதற்குமுன்னர் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளை சுருக்கமாகப் பார்க்கலாம்.

Related imageதனது தந்தை ஷாஜஹானைப் பதவியிலிருந்து இறக்கி, ஹிந்துஸ்தானத்து பாதுஷாவாக முடிசூட்டிக்கொள்ளும் வரைக்கும் (ஜுலை 23, 1658) ஔரங்கஸிப் சிவாஜியைக் குறித்து கவலை எதுவும்கொண்டதாகத் தெரியவில்லை. அதற்கு ஒருவருடம் கழித்து (நவம்பர் 10, 1659), சிவாஜி பிஜப்பூரைச் சேர்ந்த தளபதி அப்துல்லாகான் என்கிற அஃப்சல்கானை தற்காப்பிற்காகக் கொன்றுவிட்ட செய்தி ஔரங்கஸிப்பை எட்டுகிறது. பிஜப்பூரையும், கோல்கொண்டாவையும் அழிக்க நினைத்து மனதிற்குள் கறுவிக்கொண்டிருந்த ஔரங்கஸிப்பிற்கு அந்தச் செய்தி தேனாக இனிக்கிறது. அஃப்சல்கானைக் கொன்ற சிவாஜி பிஜப்பூர் படைகளைத் தாக்கி அவர்களைத் தோல்வியுறச் செய்து விரட்டியடிக்கிறார்.

ஆப்பிரிக்க சித்திக்களின் (Siddis) எளிதில் தப்பமுடியாத முற்றுகையை பன்ஹலா கோட்டையிலிருந்து வீரத்துடன் முறியடிக்கும் சிவாஜி, அங்கிருந்து தப்பிச் செல்கிறார் (1660). சிவாஜியால் கொல்லப்பட்ட அஃப்சல்கானின் மகனான ஃபசல்கான், சித்திக்களுடன் கூட்டணி அமைத்துச் செய்த முற்றுகை அது. சிவாஜியின் வீரம்செறிந்த வாழ்வின் ஒரு பெரும் மைல்கல்லாகக் கருதப்பட்ட ஒன்று.

இதனைக் கேள்விப்படும் ஔரங்கஸிப் இதற்குமேலும் சிவாஜியை விட்டுவைப்பது ஆபத்து என்கிற முடிவுக்குவந்து, அவரது தாய்மாமனான சைஸ்டாகானின் (அமிர்-உல்-உம்ரோ சைஸ்டாகான்) தலைமையில் ஒரு பெரும்படையை தக்காணத்தைநோக்கி அனுப்பிவைக்கிறார். சைஸ்டாகான் பல போர்களின் அனுபவமும், பெரும் வீரர் எனவும் பெயரெடுத்தவர். அவருடன் ஜஸ்வத்சிங்கின் படைகளும் வருகின்றன. ஜஸ்வந்த்சிங், ஷாஜஹான் காலத்திலிருந்தே அவருக்கு விசுவாசமாகப் பணிபுரிந்தவர். அவரும் வீரத்தில் குறைந்தவரில்லை.

இருவரும் ஜனவரி 1660-ஆம் வருடம் தங்கள் படைகளுடன் ஔரங்காபாத்தில் முகாமிட்டு, சிவாஜிக்கு எதிரான நடவடிக்கைகளைத் துவக்குகின்றனர். ஆனால், சிவாஜியின் படைகள் சைஸ்டாகானுக்கு எண்ணவே இயலாத அளவிற்குத் தொல்லைகள் தருகின்றன. இரவுநேரத்தில் திடீரென குதிரைகளில்வரும் மராட்டாக்கள், சைஸ்டாகானின் முகாமைத் தாக்கி கைக்குக் கிடைத்ததையெல்லாம் தூக்கிக்கொண்டு செல்கிறார்கள்.  குதிரைகள், மனிதர்கள் என எதுகிடைத்தாலும் விடுவதில்லை. எனவே வேற வழியில்லாமல் சைஸ்டாகான் கூடாரத்தைக் காலிசெய்துகொண்டு பூனாவுக்குச் செல்கிறார்.

பின்னர் அங்கிருந்து சங்க்ராம் துர்க்கிற்குச் சென்று, அங்கிருக்கும் கோட்டையை முற்றுகையிடுகிறார். இரண்டுமாதகால முற்றுகைக்குப் பிறகு, சங்க்ராம் துர்க் வீழ்கிறது. தீரத்துடன் போரிட்ட சிவாஜியின் படைத்தலைவரான பிரங்கோஜி நார்சலே பிடிபடுகிறார். அவரது வீரத்தை முகலாயர்கள் அறிவார்களாதாலால், சிவாஜியை நிராகரித்துத் தங்களுடன் சேர்ந்துகொள்ளக் கோருகிறார் சைஸ்டாகான். பிரங்கோஜி அதனை மறுத்து, தான் சிவாஜியின்கீழ் மட்டுமே பணிபுரிய விருப்பமுடையவனாக இருப்பதனைத் தெரிவிக்கிறார். பிரங்கோஜி என்னவானார் என்கிற விபரம் தெரியவில்லை.

பின்னர் சைஸ்டாகான் பூனாவுக்குத் திரும்புகிறார். 1663-ஆம் வருடம் வரைக்கும் மராட்டாக்களுக்கு எதிராக அவர் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிவடைகின்றன. ராஜா ஜஸ்வந்த்சிங்கின் படைகளும் அவரருகே முகாமிட்டிருக்கின்றன. மராட்டாக்களைப் பற்றித் தெளிவாக அறிந்திருந்த சைஸ்டாகான், தன்னுடைய, மற்றும் தன்னுடைய படைகளின் பாதுகாப்பிற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைக்கிறார். இருப்பினும், தன்னுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான மராட்டாக்கள் சிலருடன் திடீரென ஒருநாள் நடுஇரவில் (ஏப்ரல் 5, 1663), சைஸ்டாகானின் முகாமுக்குள் நுழையும் சிவாஜி, பெரும் கலவரத்தை மூட்டுகிறார். அன்றைக்கு நிகழ்ந்த பயங்கரங்களை சைஸ்டாகான் அவர் வாழ்நாளின் இறுதிவரை மறக்கவில்லை.

முகலாயப் பேரரசரின் தாய்மாமனும், பெரும்போர்களில் வெற்றிகண்டவருமான சைஸ்டாகான் அசந்து உறக்கத்தில் இருக்கையில், அவரது இருப்பிடத்திற்குள் நுழையும் சிவாஜியால் சைஸ்டாகானின் மகனும், வேறு சிலரும் கொல்லப்படுகிறார்கள். இறுதிநேரத்தில் தப்பியோடும் சைஸ்டாகான், ஜன்னல் வழியே குதிக்கும் நேரத்தில் சிவாஜியின் வாள்வீச்சில் விரல்களை இழந்து தப்பியோடுகிறார். சைஸ்டாகான் தப்பிவிட்ட செய்தி எக்காளத்தின் (trumpet) வழியே தொலைவில் நின்றுகொண்டிருந்த மராத்தாக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

மாடுகளின் கொம்புகளில் பொருத்தப்பட்ட தீப்பந்தங்களுடன் மலைச் சரிவுகளில்  நின்றுகொண்டிருக்கும் சிவாஜியின் ஆட்கள், அந்தத் தீப்பந்தங்களைக் கொளுத்தி மாடுகளை மலைகளைநோக்கி விரட்டுகிறார்கள். சிவாஜி மலையின்மீது தப்பிச்செல்வதாக எண்ணும் சைஸ்டாகானின் ஆட்கள் அந்தத்  தீப்பந்தங்களைத் துரத்திக்கொண்டு வேகமாகச் செல்ல, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட சிவாஜியும், அவரது ஆட்களும் வேறொரு பாதை வழியாக தப்பிச்சென்றுவிடுகிறார்கள்.

நடந்ததை அறிந்த ஔரங்கஸிப் அவமானத்தால் துடித்தார். மொகலாயப்படைகளுக்கு இதுபோன்றதொரு அவமானம், சபிக்கப்பட்ட ஹிந்து சிவாஜியால் நிகழ்த்தப்பட்டதை அவரால் பொறுத்துக் கொள்ளமுடியாமல் உடனடியாக சைஸ்டாகானை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்குகிறார். பழிக்குப்பழி வாங்கவேண்டும் என்று சைஸ்டாகான் கெஞ்சியும், ஔரங்கஸிப் அசைந்துகொடுக்கவில்லை.

சிவாஜியின் தாக்குதல்கள் அத்துடன் நின்றுவிடவில்லை. மராட்டாக்கள் அவர் தலைமையில் முகலாயப்பகுதிகளிலும் தாக்குதல்கள் நடத்த ஆரம்பித்தார்கள். அன்றைக்குப் பெரும் வணிக நகரமாக, முகலாயப் பேரரசிற்கு ஏராளமான வருமானம் அள்ளித்தந்த சூரத் நகரம் தாக்கப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்டது. அடுத்து அகமத்நகர் சூறையாடப்பட்டது. அவுரங்காபாதைச் சுற்றியிருந்த பகுதிகளும் தாக்குதலுக்கு உள்ளாயின. திடீரென கொங்கன் பகுதிக்கு வந்த சிவாஜியின் படைகள், அங்கிருந்த பீஜப்பூர் படைகளை துவம்சம் செய்தன.

ஔரங்கஸிப் கோபத்துடன் தன் மகன் முகமது முவ்வாஸத்தை சிவாஜிக்கு எதிராகப் போரிடப் பெரும்படையுடன் அனுப்பிவைத்தார். அனுபவமற்ற முவ்வாஸத்தின் படைகள் மராட்டாக்களால் அலைக்கழிக்கப்பட்டு பட்டினியாலும், குடிக்க நீரில்லாமலும் செத்து வீழ்ந்தார்கள். ஏறக்குறைய இறக்கும் தருவாயில் முவ்வாஸம் மீட்கப்பட்டார். ஔரங்கஸிப், ஜெய்ப்பூர் அரசர் ராஜா ஜெய்சிங் தலைமையில் இன்னொரு பெரும்படையை சிவாஜிக்கு எதிராக அனுப்பிவைத்தார்.

ராஜா ஜெய்சிங் சாதாரணமானவரில்லை. சைஸ்டாகானைப் போலவே மிகப் பெரும் வீரர். அவருடன் இன்னொரு பெரும் திறமைசாலியெனப் பெயர்பெற்ற தில்தார்கானையும் ராஜா ஜெய்சிங்குடன் அனுப்பி வைத்தார், ஔரங்கஸிப். ஜெய்சிங் போர்வீரர் மட்டுமல்லாமல் சாணக்கிய தந்திரங்கள் தெரிந்தவர் என்கிற காரணமும் அவரை தக்காணத்திற்கு அனுப்பி வைக்க முக்கிய காரணம். அதையும்விட அவரரொரு ஹிந்து. இன்னொரு ஹிந்துவான சிவாஜியின் மனோபாவம் அவர் நன்றாக அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஜெய்சிங் மெல்லமெல்ல சிவாஜியின் மராட்டாக்களை வெல்ல ஆரம்பித்தார். அவருக்குப் பணிய மறுத்தவர்கள் விலைகொடுத்து வாங்கப்பட்டார்கள். கோட்டைகள் ஒவ்வொன்றாக ஜெய்சிங்வசம் செல்ல ஆரம்பித்தன. மராட்டாக்கள் பேரதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் உள்ளானார்கள். அதையும்விட, சிவாஜியின் மனைவியும், பிள்ளைகளும் ஜெய்சிங்கின் பிடியில் சிக்கினார்கள். புரந்தர் கோட்டைக்கு எதிரான போரில் தான் தோற்பது உறுதி என்கிற நிலையில், அதற்கு மேலும் தனது படையினர்கள் உயிர் இழப்பதனைச் சகிக்க முடியாத சிவாஜி, ஜெய்சிங்குடன் சமாதானம் பேச கடிதம் எழுதினார்.

ஜெய்சிங் பிஜப்பூரின் மீது படையெடுத்தால் அதற்கு உதவத் தான் தயாராக இருப்பதாகவும், அப்படி ஒருவேளை ஜெய்சிங் தன்னுடன் சமாதானமாகப் போக மறுத்தால் தானும், தன்னுடைய மராட்டாக்களும், அடில்ஷாவுடன் சேர்ந்துகொண்டு முகலாயப்படைகளுக்கு எதிராகப் போராடுவோம் எனவும் சிவாஜி எழுதிய கடிதத்தைப் படிக்கும் ராஜா ஜெய்சிங், சிவாஜியுடன் சமாதானம் பேச சம்மதம் தெரிவித்தார். ஆனால் தில்தார்கான் அதனை எதிர்த்துக் கூறினாலும், ஜெய்சிங் அதனைப் பொருட்படுத்தாமல் ஔரங்கஸிப்பிற்குத் தகவல் தெரிவித்தார்.

சமாதானத்தின் ஒரு பகுதியாகத் தான் வென்றெடுத்த அத்தனை பகுதிகளையும் தன்னிடமே விட்டுக் கொடுக்கவேண்டும் எனவும், அத்துடன் தக்காணத்தின் முழுப் பொறுப்பையும் தன்னிடமே ஒப்படைக்கவேண்டும் என்றும் கூறினார், சிவாஜி. ஜெய்சிங் அதனையெல்லாம் ஔரங்கஸிப்பிற்குத் தெரிவித்துவிட்டதாகவும், சிவாஜியை ஆக்ராவுக்குச் சென்று ஔரங்கஸிப்பிடம் நேரடி அறிமுகம்செய்துகொள்ளவும் வேண்டினார்.

தனது குடும்பம், மற்றும் படைவீரர்களது மரியாதையைக் காப்பாற்றியே தீரவேண்டிய கட்டாயத்திலிருந்த சிவாஜி, சிறிது தயக்கத்திற்குப் பிறகு அதற்கு ஒப்புக் கொண்டார்.

அதேசமயம், இந்தியாவைநோக்கிப் படையெடுத்துவரும் பாரசீக இரண்டாம் ஷா-அப்பாஸை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயம் ஔரங்கஸிப்பிற்கு ஏற்பட்டது. தக்காணத்திலும், காபூலிலும் இரண்டு போர்களை எதிர்கொள்ளத் தயாராக இல்லாத காரணத்தால், சிவாஜியைச் சந்திக்க சம்மதித்தார் ஔரங்கஸிப்.

Image result for raja jaisingh and sivaji
ராஜா ஜெய்சிங்கும், சிவாஜியும்

ஜுன் 12, 1665-ஆம் வருடம், சிவாஜி ஜெய்சிங்கிடம் முறைப்படி சரணடைய ஒப்புக் கொண்டார். அதன்படி, பன்னிரண்டு கோட்டைகளை சிவாஜி வைத்துக் கொள்வதாகவும், தக்காணத்தின் ஆட்சிப்பொறுப்பு அவருக்கு அளிக்கப்படுவதாகவும், முகலாய அரசவையில் சிவாஜியின் மகனான சாம்பாஜி (8 வயது) மராட்டாக்களின் பிரதிநிதியாக இருப்பார் எனவும், அவருக்கு ஐயாயிரம் குதிரைப்படைகளின் தலைமை அளிக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கைவைக்கப்பட்டு, அந்த கோரிக்கை ஏற்கப்பட்டது.

ஆக்ராவிற்குப் புறப்படுவதற்குமுன்னர், சிவாஜி தனது முக்கியஸ்தர்களுடன் ராய்காட்டில் ஆலோசனை நடத்தி, பொறுப்புகளைப் பிரித்து ஒப்படைத்தார். தான் திரும்பி வருவதற்கான உறுதி எதுவும் இல்லாத காரணத்தால், நடப்பதனை விதியின் கையில் விட்டுவிட்டு, தன்னுடைய தாயான ஜீஜாபாயிடம் உத்தரவுபெற்று, ஆக்ராவுக்குப் பயணமாகிறார்.

அதன்படி, மார்ச் 5, 1666 அன்று ராய்கட்டிலிருந்து ஆக்ராவுக்குப் பயணத்தைத் துவக்குகிறார் சிவாஜி.

[தொடரும்]

இத்தொடரின் பகுதிகள் அனைத்தையும் இங்கு வாசிக்கலாம். 

One Reply to “ஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 1”

  1. சிவாஜியின் வரலாற்றை முழு வடிவில் படிக்க விரும்புகின்றேன்.தமிழ மற்றும் ஆங்கில மொழியில் இருந்தால் விபரம் தொிவிக்க கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *