நம்பிக்கை – 3: நான் யார்?

மூலம்: T.V.ஜெயராமன் ஆங்கிலத்தில் எழுதிய Belief தொடர்
தமிழில்: பி.ஆர்.ஹரன்

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம். 

“அதனால் என்ன?” என்று நினைத்தான் கௌசிக். மஹாதேவனிடம் இறைந்து கத்தவேண்டும் போலிருந்தது அவனுக்கு.

“அதனால் என்ன? கடவுளுக்கு உருவம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் தான் என்ன? அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” ஸ்நேஹாவிடம் தன் உணர்வுகளைக் கொட்டினான். “கடவுள் மீதான என்னுடைய நம்பிக்கையும் அவநம்பிக்கையும் என் வாழ்வை எப்படி பாதிக்கும்? என்னுடைய படிப்பையும் வேலைகளையும் நான் ஒழுங்காகச் செய்து வருகிறேன். மதிப்பில்லாததாக நான் கருதும் ஒன்றை ஏன் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்? என் பிரார்த்தனை நான் பரீட்சைகளில் தேர்ச்சி பெறவோ அல்லது என்னுடைய தொழிலில் வெற்றி பெறவோ உதவுமா? முழுமையான முட்டாள்தனம்! இப்பொழுது மாமா இங்கு இருந்திருக்க வேண்டும்… அவரைத் திக்குமுக்காடச் செய்திருப்பேன்”.

கௌசிக் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கொதித்துக்கொண்டு இருக்கிறான் என்பது ஸ்நேஹாவுக்குத் தெரியும். தன் மீது சுமத்தப்படும் எதையுமே எதிர்க்கும் மனோபாவம் கொண்டவன் அவன். அவன் மீண்டும் மஹாதேவனைச் சந்தித்து கடவுள் நம்பிக்கைப் பற்றி விவாதிப்பதில் தீவிரமாக இருக்கிறான் என்கிற விஷயத்தை அவள் சங்கரிடம் மெதுவாகச் சொல்லிவிட்டாள். மஹாதேவன் உண்மையிலேயே இவ்விஷயத்தைத் தூண்டிவிட்டார் என்பதில் சங்கருக்கு மகழ்ச்சி. மஹாதேவனின் அடுத்த வருகைக்காகக் காத்திருந்தார் அவர்.

சில மாதங்கள் கழித்து, தான் சென்னை வருவதாகவும், சங்கர் வீட்டில் அவர்களுடன் ஒரு நாள் தங்க விரும்புவதாகவும் தெரிவித்தார் மஹாதேவன். இந்தச் செய்தி கௌசிக்கைக் கிளர்ச்சி அடையச்செய்தது. அவன் ஆவலுடன் மஹாதேவன் வரவை எதிர்பார்த்திருந்தான்.

மஹாதேவன் சென்னைக்கு வந்த அன்று மாலை, பக்கோடாவும் தேநீரும் சப்பிட்ட பிறகு, “யாரேனும் என்னுடன் காலார சிறிது தூரம் நடக்க வருகிறீர்களா?” என்று கேட்டார். அதைக் கேட்டுத் துள்ளிக்குதித்த கௌசிக் அவருடன் சேர்ந்துகொண்டான். இருவரும் அந்தக் குடியிருப்பைச் சுற்றிக்கொண்டு போய் பக்கத்தில் இருக்கும் பூங்காவுக்குள் சென்றனர்.

“என்ன இளைஞனே! எல்லாம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது?”

“நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது மாமா. ஆனால், நீங்கள் தான் சென்ற முறை என்னை நிறைய கேள்விகளுடன் விட்டுச் சென்றீர்கள்”.

“அருமை! ம்… ஆகட்டும்… உன் கேள்விக் கணைகளால் என்னைத் தாக்கு”.

“மாமா, உருவமில்லாத கடவுளை அடையாளம் கொடுத்து, உருவப்படுத்தி, அவன் சக்தி வாய்ந்தவன் என்று அறிந்து, நம் திறமைக்கு அளவு உண்டு என்று புரிந்து, பக்தியுடன் வழிபடுவதே பிரார்த்தனை என்று சொன்னீர்கள். அதனால் நான் என்ன லாபம் அடைகிறேன்?”

“நல்ல கேள்வி. இதில் லாபமோ நஷ்டமோ இல்லை”.

“பின் எதற்காக நான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்? நான் இப்போது இருப்பது போன்றே என் வாழ்வை நடத்திக்கொள்கிறேன். லாபமோ நஷ்டமோ இல்லாத வழக்கங்களை நான் ஏன் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்?”

“இதை இப்படிப் பார்ப்போம். (ஒரு நாற்காலியைக் காட்டி) அங்கே என்ன பார்க்கிறாய்?”

“நாற்காலி. தெளிவாகவே தெரிகிறது”.

“நிச்சயமாக அது நாற்காலி தானா?”

“ஆமாம்”.

“இது என்ன?”

“ரோஜாப்பூ”.

“நிச்சயமாக?”

“ஆம். முழுமையாக”.

“ரோஜாப்பூ என்பதற்குப் பதிலாக அதற்குக் கோஜாப்பூ என்று பெரிட்டிருந்தால் என்ன செய்திருப்பாய்? அப்படியும் ரோஜாப்பூ என்றே அழைப்பாயா?”

“ம்ம்ம்… இல்லை… கோஜாப்பூ என்று தான் இருக்கும். அப்படியே தான் அழைப்பேன்”.

“ஆகவே?”

“ஆகவே என்ன?”

“நீ பார்க்கின்ற ஒவ்வொரு பொருளுக்கும் அதன் உருவத்தின் பேரில் ஒரு பெயர் கொடுக்கப்படுகின்றது என்பதை நீ ஒத்துக்கொள்கிறாய்”.

“கண்டிப்பாக”.

“பெயரில்லாத ஒரு பொருளை நினைத்துப்பார்”.

“வாய்ப்பே இல்லை”.

“சரி. உருவமே இல்லாத ஒரு பெயரை எண்ணிப்பார்”.

“அப்படி ஒரு கருத்தே இல்லை. இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்?”

“இந்த பெஞ்சில் உட்காருவோம். இங்கே பார்; நீ பார்ப்பதாகச் சொல்லும் எதுவுமே ஒரு உருவமோ பெயரோ அன்றி வேறில்லை. உண்மையில் அவை அந்தப் பெயரே அல்ல, ஒத்துக்கொள்கிறாயா?”

“இதை விளக்க முடியுமா?”

“இந்த மேஜையை எடுத்துக்கொள்வோம். மேஜை என்கிற பெயர் கொண்ட உருவத்தைப் பெற்றிருப்பதால் இதை மேஜை என்று நீ அழைக்கிறாய். சரியா?”

“ஆமாம்.”

“உண்மையில், இது மரம் தானே தவிர வேறொன்றுமில்லை. மேஜை இல்லை”.

“எப்படி?”

“அது உடைந்தால், நீ ‘மேஜை உடைந்துவிட்டது, இப்போது வெறும் மரக்கட்டை தான் இருக்கிறது’ என்று சொல்கிறாய்”.

“அதனால்?”

“மேஜை உருவத்தில் இருந்த மரம், மேஜையாக இருப்பது முடிந்தவுடன் மீண்டும் மரமாகிவிட்டது”.

“அப்படியென்றால், நான் உண்மையிலேயே மேஜையைப் பார்க்கும்போது அதை மரம் என்று அழைக்க வேண்டுமா என்ன?”

“தேவையில்லை. ஆனால், அதை ஏன் மேஜை என்று அழைக்கிறோம் என்று உன்னால் சொல்ல முடியுமா?”

“கண்டிப்பாக மாமா. பெயர் கொடுக்கப்பட்டால் தான் அடையாளப்படுத்தவும், கண்டு பிடிக்கவும், நடைமுறைப்படுத்தவும் சௌகரியமாக இருக்கும். இல்லாவிட்டால் குழப்பம் தான் மிஞ்சும்”.

“மிகச் சரியாகச் சொன்னாய். உண்மையில் அதுதான் சாரம். நீ பார்ப்பதாகச் சொல்லும் அனைத்துப் பொருட்களும், நீ நடைமுறப்படுத்துவதற்காகப் பயன்படுத்தும் உருவங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயர்களே அன்றி வேறில்லை. அதற்கு மேல் அவற்றுக்கு மதிப்பில்லை”.

“உண்மையாகவா?”

“ஆம். நாம் என்ன செய்கிறோம் என்றால், அதையும் தாண்டிச் சென்று, அந்தப் பொருட்கள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். பொருட்களாக, நபர்களாக, உறவுகளாக, சொத்துக்களாக, நமது சொந்த உடலாக, நமது சாதனைகளாக, என்று எதுவாக இருந்தாலும், அவைகள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், இல்லையா?”

“இருக்கலாம். ஆனால், அதற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்?”

“சிறிது நேரம் கழித்துக் கடவுளிடம் செல்வோம். பொருட்கள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் நாம் மகிழ்ச்சியைத் தேடுகிறோம். அந்தப் பொருட்கள் மாறும்போதோ அல்லது அவற்றை நாம் இழக்கும்போதோ நாம் வருந்துகிறோம்”.

“அப்படியில்லை. என்னைப் பொறுத்தவரை, அவற்றை இழப்பதும் அவை மாற்றம் பெறுவதும் ஒரு பிரச்சனையே அல்ல. ஆனால், விஷயங்கள் குறித்த நேரத்தில் நடக்கவில்லையென்றால்தான் நான் கட்டுப்பாடற்றவனாக ஆகிவிடுகிறேன்”.

“சரி. ஆனால் எதுவுமே, குறிப்பாக நேரம், உன் கட்டுப்பாட்டில் இல்லை”.

“நிரந்தரத்தை எதிர்பார்ப்பது தான் நம் வருத்தங்களுக்குக் காரணம் என்பதை நான் ஒத்துக்கொள்வதாக, ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். கடவுள் நம்பிக்கை இதைத் தீர்க்குமா?”

“கடவுளைக் கொஞ்சநேரம் தனியாக விடு. நாம் உன்னைப் பற்றிப் பேசுவோம். நீ யார்?”

“நான் கௌசிக்”.

“அது உன் பெயர்”.

“நான் மேலாண்மை படிக்கிறேன்”.

“அது உனது செயற்பாடு”.

“நான் சங்கரின் மகன்”

“அது உன் உறவு”.

“நான் ஒரு பையன்; என்னால் பாட முடியும்; எனக்குத் தோசைப் பிடிக்கும்; எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். எனக்குக் கத்திரிக்காய் பிடிக்காது. நிறைய நேரம் தூங்கப் பிடிக்கும்….”

“அவையெல்லாம், “உனக்குப் பிடித்ததும் பிடிக்காததும்; நீ செய்வதும் செய்யாததும்”. நீ யார்?”

“எனக்கு 20 வயது”.

“மீண்டும் அதே பேச்சு. அது உன் வயது. நீ யார் என்பதை மட்டும் எனக்குத் தெரிவி”.

“நான் சற்று முன்னர் சொன்ன அனைத்தும், மேலும் சில விஷயங்களும் சேர்ந்து தான் நான்”.

“உண்மையாகவா?” என்று கேட்ட மஹாதேவன் புன்னகைத்தபடியே, “உண்மையில், நீ யாரென்று நீ நினைக்கிறாயோ அது நீ கிடையாது” என்றார்.

“மடத்தனமாக இருக்கிறது. நான் மேலே சொன்னது தான் நான்!”

“உண்மையில் இல்லை. உன் பெயர் கௌசிக் என்றும், நீ படித்துக்கொண்டிருக்கிறாய் என்றும், உன் தந்தை சங்கர் என்றும், உனக்கு 20 வயது ஆகிறது என்றும், நீ அறிந்து கொண்டிருக்கிறாய். மேஜை உருவத்தை அடைந்த மரம் மேஜை என்கிற பெயரைப் பெற்று, உடைந்து போன பிறகு அந்தப் பெயரை இழந்தது போலத்தான் நீயும் கௌசிக் என்கிற பெயரைப் பெற்றிருக்கிறாய். உனக்கு அபிஷேக் என்று பெயர் வைத்திருந்தால், நீ உன்னை அபிஷேக் என்று சாதித்திருப்பாய், சரியா?”

“ஆமாம். சரிதான்”.

“நடைமுறைப்படுத்தல் காரணமாகத்தான் நீ ஒரு பெயர் கொண்டுள்ளாய்; மக்களும் உன்னை அடையாளப்படுத்தி உன்னுடன் தொடர்பு கொள்கிறார்கள். உன்னுடைய தகுதியின் அடிப்படையில் உன்னை அடையாளப்படுத்தி உன்னைப் பயன்படுத்தியும் கொள்கிறார்கள்”.

“அதனால்?”

“உண்மையில் நீ யார் என்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். நீ முன்னதாகச் சொன்னவைதான் நீ என்று நினைத்துக்கொண்டுள்ளாய்”.

“ஒத்துக்கொள்கிறேன். நாம் கடவுளிடம் திரும்பச் செல்லலாமா? இதில் பிரார்த்தனை எனக்கு எப்படி உதவும்?”

“முதலில் நீ யார் என்பதை நாம் முடிவு செய்வோம். பிறகு கடவுளிடம் செல்வோம். முதலில் நீ யார் என்று கண்டுபிடி”.

“என்னை நானே எப்படி கண்டுபிடிப்பது? இது முட்டாள்தனமாகத் தெரிகிறது”.

“உண்மையாக முட்டாள்தனம் இல்லை. இதில் நீ மட்டும் தான் என்றில்லை. கிட்டத்தட்ட உன்னைச் சுற்றியுள்ள அனைவரும், இதே நிலையில்தான் இருக்கிறார்கள்”.

“நீங்கள் சொல்வது கொடூரமாக இருக்கிறது. என்னைச் சுற்றியிருக்கும் அனைவரும் குழம்பிப்போய் தங்களைத் தாங்களே தேடிக்கொண்டு திரிகிறார்கள் என்றா சொல்கிறீர்கள்? அபத்தம்!”

“சரி. போய் எவரை வேண்டுமானாலும் அவர்கள் யார் என்று கேட்டுப்பார். அவர்கள் பதில்கள் நீ சொல்லியவற்றிலிருந்து வேறுபட்டு இருக்காது. அதே போல்தான் இருக்கும்”.

“மாமா, நாம் கடவுளைப் பற்றி விவாதிப்போம் என்று நினைத்தேன். நீங்கள் என்னை சிக்க வைக்கிறீர்கள். உண்மையில் நீங்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?”

“நல்லது, இளைஞனே! நீ இதைக் கேட்பாய் என்று எதிர்பார்த்தேன். நாம் வீட்டிற்குத் திரும்பி நடப்போம். இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, இந்த விவாதத்தைத் தொடர்வோம். சரியா?”

“ம்ம்ம்ம்… சரி” என்றான் கௌசிக். இருவரும் வீட்டிற்குத் திரும்பவும் நடக்கத் தொடங்கினார்கள். கௌசிக் யோசனையில் ஒன்றும் பேசாமல் நடக்க, மஹாதேவன் புன்னகையுடன் நடந்தார்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *