நம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக?

மூலம்: T.V.ஜெயராமன் ஆங்கிலத்தில் எழுதிய Belief தொடர்
தமிழில்: பி.ஆர்.ஹரன்

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம். 

“காலை வணக்கம் சங்கர், நன்றாகத் துங்கினீர்கள் என்று நம்புகிறேன்” என்று கேட்டபடியே கூடத்திற்கு வந்தார் மஹாதேவன்.

“ஆமாம். நேற்று இரவு பெய்த தொடர்மழை உங்கள் தூக்கத்தைப் பாதிக்கவில்லை என்றும் நம்புகிறேன்” என்றார் சங்கர்.

“பாதிக்கவில்லை. ஒரு கட்டையைப் போலக் கிடந்து உறங்கினேன்”.

பதிலுக்குப் புன்னகைத்த சங்கர், “தன்னுடைய டென்னிஸ் பயிற்சியை முடித்துக்கொண்டு கௌசிக் எந்த நிமிடமும் திரும்பலாம். காலை உணவாக என்ன வேண்டும் உங்களுக்கு?” என்று கேட்டார்

“நீங்களெல்லாம் என்ன சாப்பிடுகிறிர்களோ அதுவே தான் எனக்கும்”.

“அண்ணா! தானியங்களும் பழச்சாறும்; கஞ்சி; பாலாடைத் தடவிய வாட்டிய ரொட்டி; இட்லி-வடை என்று இங்கே ஒவ்வொருவர் ஒவ்வொருவிதமான உணவைக் கொள்வார்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டபடியே வந்தார் சௌம்யா.

“எந்த நாளுக்கும் இட்லி-வடை நல்லதே”.

“சௌம்யா! உடனடியாக இட்லி-வடையை ஒரு தாக்கு தாக்கலாமா?” என்று சிரித்தபடியே கேட்ட சங்கர், “இன்று சௌம்யாவுக்குப் பிறந்தநாள்” என்ற தகவலையும் தந்தார்.

“ஓ! அப்படியா? வாழ்த்துக்கள் சௌம்யா! இன்று போல் என்றும் மகிழ்ச்சி நிலவட்டும்” என்று வாழ்த்தினார் மஹாதேவன்.

“நன்றி அண்ணா!”

“அப்பா! நாம் அனைவரும் இன்று மதிய உணவுக்கு வெளியே போகலாமா?” என்று கேட்டபடியே உள்ளே வந்தான் கௌசிக்.

“அருமையான யோசனை. சௌம்யாவே முடிவு செய்யட்டும். நீ என்ன சொல்கிறாய் சௌம்யா?”

“முதலில் நாம் ஒரு கோவிலுக்குச் செல்லவேண்டும்” என்றார் சௌம்யா.

“அம்மா! நாம் வீட்டிலேயே பிரார்த்தனையை முடித்துக்கொண்டு மதிய உணவுக்கு வெளியே போகலாமே? மாமா! நேற்று நீங்கள் பிரார்த்தனை என்பது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பமும் செயலும் என்று சொன்னீர்கள் அல்லவா? பிறகு எதற்காகக் கோவிலுக்குச் செல்லவேண்டும்?” என்று கேட்டாள் ஸ்நேஹா.

“நான் ஒரு கேள்வி கேட்கிறேன்” என்று கூறிய மஹாதேவன், “தனிப்பட்ட டியூஷன் வகுப்புகளில் நம்முடைய அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் என்கிற போதும் நாம் ஏன் பள்ளிக்கூடத்திற்குச் செல்கிறோம்? TVயிலும் DVD மூலமாகவும் சினிமா பார்க்க முடியும் என்கிற போது நாம் ஏன் தியேட்டருக்குச் சென்று பார்க்கிறோம்?” என்று கேட்டார்

“எளிமையான பதில் உண்டு. பள்ளிக்கூடத்துக்கும் தியேட்டருக்கும் வருபவர்கள் ஒரே நோக்கத்துடன் வருகிறார்கள். அவர்கள் அனைவரின் கவனமும் ஒரே இடத்தில் குவிந்திருக்கும். ஆகவே, அவ்விடங்களுக்கும் நமக்கும் ஒருவிதமான தொடர்பு இருக்கின்ற உணர்வு ஏற்படும்; நம்முடைய கவனம் சிதறுவது குறைவாக இருக்கும்; அந்த இடங்கள் அளவில் மிகவும் பெரியதாக, குறிப்பிட்ட நோக்கத்துக்காக வடிவமைக்கப்பட்ட வசதிகளுடன், நம்முடைய கவனம் அதிகமாகக் குவிகின்ற இடங்களாக இருக்கும். அங்கு வருகின்ற அனைவரும் சேர்ந்து இருக்கின்றபோது, நம் செயல்பாடு ஒரு குழுமச் செயல்பாடாக, மகிழ்ச்சி தரும் அனுபவமாக இருக்கும்.” என்று பதில் சொன்னாள் ஸ்னேஹா.

“நீ வீட்டிலேயே படித்தாலோ அல்லது சினிமா பார்த்தலோ என்ன நடக்கும்?”

“கவனம் அடிக்கடிச் சிதறும்; நிறைய இடயூறுகள் ஏற்படும்; நாம் அணுகுவதற்குத் தேவையான வசதிகள் குறைவாக இருக்கும்”.

“பார்த்தாயா? வீட்டில் செய்வதற்கும் வெளியே செய்வதற்குமான வித்யாசம் அதுதான். அது ‘அமைப்பில்’ (Settings) இருக்கிறது; ‘மனநிலை அமைப்பு’ (Mood Settings) என்கிற வார்த்தையைக் கூடப் பயன்படுத்தலாம். வீட்டில் சினிமா பார்க்கும்போது, சமையல் வேலை, நண்பர்களோ உறவினர்களோ வருவது, தொலைபேசி அழைப்புகள், என்று நீ சொல்லக்கூடிய அனைத்து விதமான இடையூறுகளும் கவனச்சிதறல்களும் ஏற்படும். சினிமா பார்த்தல் என்கிற ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டிற்கான அமைப்பு வீட்டில் வடிவமைக்கப்படவில்லையாதலால் நீ பல்வேறு இடையூறுகளையும் கவனச் சிதறல்களையும் சந்திப்பாய். ஆனால் ஒரு தியேட்டரில் இருக்கும்போது, இந்த மாதிரியான கவனச் சிதறல்கள் இருக்காது; உன்னுடையத் திரைக்காட்சி அனுபவத்தை மேம்படுத்தக்கூடிய அனைத்து வசதிகளும் வடிவமைக்கப்பட்டிருப்பதால், நீ திரைப்படத்தை முழுமையான மகிழ்வுடன் அனுபவிப்பாய்”.

“உண்மை தான் மாமா. கோவில்களில் உள்ள அமைப்புகள் நான் பிரார்த்தனை செய்வதற்கு ஏற்றதாய் இருப்பதை எப்போதும் கண்டிருக்கிறேன். ஆனால் கோவில்கள் மேலும் கொஞ்சம் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்”.

“மணியோசைகள், மலர்களின் நறுமணங்கள், கற்பூர வாசனை, அற்புதமான அலங்காரங்கள் போன்ற பல விஷயங்களால் நம்முடைய மனநிலை மேம்பாடு அடைகிறது. இவை அனைத்தும் கூட்டாகச் சேர்ந்து ஏற்படுத்தும் உற்சாகம் நம்முள்ளே இருக்கும் பக்தியை மேன்மேலும் ஊக்குவிக்கின்றது. அதன் பெருக்கும் செயல்திறன், கடவுள் பற்றிய நம் விழிப்புணர்வு, அவர் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை, மரியாதை மிகுந்த பக்தி போன்ற பலவிஷயங்களை மேலும் உயர்த்துகிறது. ஆலயம் ஆண்டவனின் அரண்மனை; அவரின் இருப்பிடம். வீட்டில் பூஜை செய்யும்போது அவரை நம்முடைய இருப்பிடமான வீட்டிற்கு அழைப்பதைப்போல, பதிலுக்கு அவருடைய இருப்பிடமான கோவிலுக்கு நாம் செல்கிறோம்”.

“இது சுவாரஸ்யமாக இருக்கிறது. அம்மா! எந்தக் கோவிலுக்குப் போகலாம்?” என்று கேட்டான் கௌசிக்.

“மாங்காடு காமாக்ஷி அம்மன் கோவிலுக்குப் போகவேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் விருப்பம்”.

“எதுக்கு அவ்வளவு தூரம் போகவேண்டும் அம்மா? பக்கத்திலேயே இருக்கும் வடபழனி முருகன் கோவிலுக்குப் போகலாம். அவர் எப்பேர்பட்ட அழகான நாயகர்!” என்றாள் ஸ்நேஹா.

“நீங்கள் இருவரும் விளையாடுகிறீர்களா என்ன? இப்போதிருக்கும் இந்தப் போக்குவரத்தில் மாங்காடுக்கோ வடபழனிக்கோ நான் வண்டி ஓட்ட முடியாது. பக்கத்தில் இருக்கும் அடையாறு அனந்த பத்மநாபஸ்வாமி கோவில் தான் என் விருப்பம். அங்கே வண்டியை நிறுத்த இடப் பிரச்சனையும் இல்லை.” என்றார் சங்கர்.

“இது நிரந்தரப் பிரச்சனை மாமா! நமக்குப் பல கடவுள்களும், பல கோவில்களும் உண்டு. இது எனக்குப் புரிவதேயில்லை” என்றான் கௌசிக்.

“உண்மையில் அப்படியில்லை. நாம் ‘பல கடவுள்கள்’ என்கிற கோட்பாட்டை நம்புவதில்லை (We do not believe in many Gods); உண்மையில் நாம் ‘ஒரு கடவுள்’ என்கிற கோட்பாட்டையும் நம்புவதில்லை (We also do not believe in one God)” என்றார் மஹாதேவன்.

“பிறகு எதுதான் உண்மை?”

“உண்மை என்னவென்றால் ‘கடவுள் ஒன்றே’ என்பது தான் நமது கோட்பாடு. We believe in Only God. நாம் பார்க்கும், கேட்கும், உணரும், நுகரும், சுவைக்கும் போன்ற அனைத்தும் அந்த ஒருவருடைய படைப்பே என்று நம்புகிறோம். ஆகையால் அனைத்திலும் அவர் ஒருவரையே நாம் காண்கிறோம். அவரே அதியுயர்ந்த சக்தி!”

“அப்படியென்றால், விஷ்ணு, சிவன், அம்மன், முருகன் போன்ற பல தெய்வங்கள்?”

“உண்மையில் அந்த அதியுயர்ந்த சக்திக்குப் பெயரோ உருவமோ கிடையாது. இந்தப் பெயரற்ற, உருவமற்ற, அதியுயர்ந்த சக்தியைக் கண்கள் மூடிய நிலையில் உன்னால் சில நிமிடங்களாவது நினைத்துப்பார்க்க முடியுமா?”

“இல்லை, முடியாது. நான் எதை நினைப்பது, என்னவென்று நினைப்பது?”

“மிகச்சரி! மனிதர்களாக நாம், நம் வசம் இருக்கும் உடல் (Body), மனம் (Mind), அறிவு (Intellect) ஆகிய கருவிகளைக் கொண்டு அந்த அதியுயர்ந்த சக்தியைத் தேடவேண்டும். இந்தக் கருவிகளால் பெயரும் உருவமும் கொண்ட பொருட்களை மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அதற்காகத்தான் நாம் இந்த மாதிரியானப் பல்வேறு பெயர்களையும் உருவங்களையும் கொண்ட தெய்வங்களைக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவை அனைத்தும் அந்த அதியுயர்ந்த சக்தியையே குறிக்கின்றன”.

“நல்லது. அப்படியிருக்கும் பக்ஷத்தில், பெயரும் உருவமும் கொண்ட ஒரே ஒரு கடவுளை மட்டும் நாம் கொண்டிருக்கலாமே! எதற்காகப் பல தெய்வங்களை வைத்துக்கொண்டு மிகவும் குழப்பங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்?”

“நான் நேற்று இரவு சொன்னதைப்போல, நீ கடவுளிடம் ஏற்படுத்திக்கொள்ளும் தனிப்பட்ட உறவைச் சார்ந்திருப்பது பிரார்த்தனை. சிலர் சிவன், விஷ்ணு போன்ற உருவங்களில் பலமான, பாதுகாப்பு அளிக்கக் கூடிய தகப்பனார் போன்ற உருவையும் உறவையும் காண்கிறார்கள். சிலர் அன்பும், இரக்கமும், அக்கறையும் கொண்ட தாய் போன்ற உருவை அம்மனிடம் காண விரும்புகிறார்கள். வேறு சிலர் வீரம் மிக்க கதாநாயகனை முருகனிடத்தில் காணலாம். மற்றும் சிலருக்கு கிருஷ்ணரின் குறும்புத்தனம் மனதைக் கவரலாம். பெரும்பாலும் குழந்தைகளுக்கு பலசாலியானவராகவும், வீரம் மிகுந்தவராகவும், அச்சமற்றவராகவும், புத்திசாலியானவராகவும் ஹனுமான் இருக்கிறார். எந்த தெய்வத்திடம் மிகவும் உறுதியான நெருக்கமான உறவைக் காண்கிறோமோ, அதன்படி நம் உள்ளுணர்வின் மூலம் நம் இஷ்ட தெய்வத்தை நாம் தேர்ந்தெடுத்துக்கொள்கிறோம்”.

“அப்படியென்றால் நம்முடைய புராணங்கள் எல்லாம் என்ன? அவையாவும் வெறும் கறனையா?” என்று கேட்டாள் ஸ்நேஹா.

“இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். எப்படியிருந்தாலும், அது ஒரு விஷயமா?”

“விஷயம் இல்லையா? ஏன்?” என்று கேட்டார் சங்கர்.

“சரி, விளக்குகிறேன். ஸ்நேஹா! உனக்குப் பிரியமான நடிகர் யார்?” என்று கேட்டார் மஹாதேவன்.

“ரஜினிகாந்த்”.

“அவரைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள உனக்கு ஆர்வம் உள்ளதா? அவர் எங்கே வளர்ந்தார்? அவருடைய நண்பர்கள் யார், யார்? அவருக்குப் பிடித்தமான உணவுகள், அவருடைய பொழுதுபோக்குகள் போன்ற விஷயங்கள் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள உனக்கு ஆர்வமா? சொல்!”

“நிச்சயமாக. அவரைப் பற்றிய அனைத்தையும் படிப்பேன்.”

“ஏன்?”

“அவர் எப்பேர்பட்ட நபர் என்பதை நன்றாக அறிந்துகொள்ள அது எனக்கு உதவுகிறது.”

“சரி, ஸ்நேஹா. கிருஷ்ணரைப் பற்றிச் சில நிமிடங்கள் நினைத்துக்கொள் என்று நான் சொன்னால், நீ அவரைப் பற்றி என்ன நினைத்துக்கொள்வாய்?”

“ம்…… அழகான கருமை நிறம் கொண்ட சிறுவன்; அவன் தாய் யசோதாவால் மிகவும் போற்றப்படுபவன்; வெண்ணை தின்ன விருப்பமுள்ளவன்; புல்லாங்குழல் வாசிப்பவன்; கம்ஸனைக் கொன்றவன்; பாண்டவர்களுக்கு, குறிப்பாக அர்ஜுனனுக்கு நெருங்கிய நண்பன்; என்று போய்க்கொண்டே இருக்கலாம் மாமா. கிருஷ்ணனைப் பற்றி நினைக்க அவ்வளவு இருக்கிறது”.

“இவை அனைத்தும் கிருஷ்ணரின் உருவத்தை பார்த்து மட்டும் தெரிந்துகொண்டாயா?”

“நிச்சயமாக இல்லை. கிருஷ்ண லீலாவைப் படித்ததன் மூலமாகத்தான் இவைகளைத் தெரிந்துகொண்டேன்.”

“மிகச்சரி! நம்முடைய தெய்வங்களின் பின்னணியில் உள்ள அனைத்து விஷயங்களையும் புராணங்கள் தான் நமக்குத் தருகின்றன. நமக்குப் பிரியமான, இஷ்டப்பட்ட தெய்வங்கள் அனைவரின் சிறப்பியல்புகளையும் புரிந்துகொள்ள அவை உதவுகின்றன. இந்தத் தகவல்கள் நம் தெய்வங்களின் பிம்பத்திற்குக் கூடுதல் வண்ணம் சேர்த்து, மேலதிக நேயத்துடன் நம்மை அவர்களுடன் நெருங்கச் செய்கின்றன. பின்னர் கடவுளைப் பற்றி எண்ணும்போது, இவை அனைத்தையும் நாம் நினைவுகூர்கிறோம். எனவே, புராணங்கள் வரலாற்று உண்மைகளா இல்லையா என்று விவாதிப்பது வெறும் கலாசாலைச் செயற்பாடே ஒழிய, கடவுளை நாடுவதற்கு உனக்கு எந்தவிதத்திலும் உதவாது”.

“ஆகவே, வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு விருப்பங்கள் கொண்டுள்ளதால் நாம் பல்வேறு தெய்வங்களைக் கொண்டுள்ளோம். எந்த உருவத்தில் பார்க்கும்போது நம் மனதை மிகவும் கவர்கிறதோ அந்த உருவத்தை நம்முடைய பிரியமான இஷ்ட தெய்வமாகக் கொள்ளலாம். அப்படித்தானே?” என்று கேட்டான் கௌசிக்.

“ஆமாம். ஆயினும், நாம் எந்த தெய்வத்தைத் தேர்ந்தெடுத்து வழிபடுகிறோமோ, அந்தத் தெய்வம் இறுதியாக அதியுயர்ந்த சக்தியையே குறிப்பிடுகிறது என்பதை நாம் எப்போதும் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்”.

“அற்புதம்! என்னுடைய பிறந்தநாள் என்பதால், எனக்குப் பிரியமான, என் இஷ்ட தெய்வமான காமாக்ஷி அம்மனைத் தரிசிக்க மாங்காடு கோவிலுக்கே செல்வோம்” என்றாள் சௌம்யா.

“அருமை! காமாக்ஷி அம்மனைத் தரிசித்த பிறகு சரவண பவனில் சாப்பிடுவோம்” என்றார் சங்கர்.

(தொடரும்)

2 Replies to “நம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக?”

  1. பொது மக்கள் -இந்துக்கள் மீது நமக்கு கட்டுப்பாடு அதிகாரம் கிடையாது.அவனவன் தனக்கு பிரயமான வற்றை செய்து கொள்கின்றான்கோவில்களின் முக்கியத்துவத்தை குறைப்பது நமக்கு நோக்கமல்ல.வருங்காலங்களில் கோவில்களின் அமைப்பு மாற்றப்பட வேண்டும்.பொது மக்களுக்கு அது குறித்து தக்க விழிப்புணா்ச்சின ஏறபடுத்த வேண்டியது படித்த இந்துக்களின் கடமை. எது எப்படியிருந்தாலும் சுவாமி சித்பவானந்தா் ஏற்படுத்திய ” அந்தா் யோகம்” தெருவிற்கு தெரு கோவில் தோறும் நடத்தபட வேண்டும். இந்து சமூகம் வலிமை பெற அது சிறந்த வழி.

  2. பிற மதங்கள் நமக்கு ஆபத்தான எதிரிகள்தாம் என்றாலும் அவைகளை் நமக்கு அளிக்கும் ஆபத்துக்களில் இருந்து நம்மை காக்க வேண்டுவதும் முக்கியம்தான்.ஆனால் நாம் ஒவ்வொரு இந்துவும் ஒரு இந்துவாக எப்படி வாழ்கின்றோம் என்பது அனைத்திலும் முக்கியமானது. நம்மிடம் மனிதநேயம் தனி மனித ஒழுக்கம் போன்ற சீலங்கள் குறைந்தாலோ இல்லாது போனாலோ நாம் மாக்களாகவே இருப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *