நம்பிக்கை – 8: பக்தி

மூலம்: T.V.ஜெயராமன் ஆங்கிலத்தில் எழுதிய Belief தொடர்
தமிழில்: பி.ஆர்.ஹரன்

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம். 

“நான் வட இந்திய சாப்பாடு சாப்பிடப் போகிறேன். உனக்கு என்ன வேண்டும் மஹாதேவன்?” என்று கேட்டார் சங்கர்.

“சரவண பவனில் குஜராத்தி சாப்பாடு நன்றாக இருக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். நான் அதையே சாப்பிடுகிறேன்” என்றார் மஹாதேவன்.

“எனக்கு இலை சாப்பாடு” என்று தன்னுடைய தேர்வைச் சொன்னார் சௌம்யா.

“எனக்கு மஞ்சௌ சூப், பன்னீர் டிக்கா, பட்டர் நான், ஆலூ பாலக்…. அதன் பிறகு ஸ்நேஹா வருவிப்பதிலிருந்தும் கொஞ்சம் எடுத்தும் கொள்வேன். எப்படியுமே அவள் முழுவதுமாகச் சாப்பிடப் போவதில்லை” என்று அவளை விளையாட்டாகச் சீண்டினான் கௌசிக்.

“அப்பா! எனக்கு சாம்பார் சாதமும், தயிர் சாதமும் போதும். கௌசிக்குடன் நான் எதையும் பகிர்ந்துகொள்ளப் போவதில்லை” என்றாள் ஸ்நேஹா.

“சொன்னவற்றைச் சரியாகக் குறித்துக்கொண்டீர்கள் அல்லவா? ஒரு முறைச் சொல்ல முடியுமா?” என்று பரிமாறுபவரைக் கேட்டார் சங்கர்.

“ஒரு வட இந்திய சாப்பாடு, ஒரு குஜராத்தி சாப்பாடு, ஒரு தமிழ்நாடு இலைச் சாப்பாடு, ஒரு மஞ்சௌ சூப், பன்னீர் டிக்கா, பட்டர் நான், ஆலூ பாலக், சாம்பார் சாதம், தயிர் சாதம். எத்தனை பட்டர் நான்கள் வேண்டும்?” என்று கேட்டார் பரிமாறுபவர்.

“இரண்டு தட்டுகள் கொண்டுவாருங்கள். மேலும் வேண்டுவதைப் பிறகு சொல்கிறேன்” என்றான் கௌசிக்.

“15 நிமிடங்களில் எடுத்து வருகிறேன். சாப்பாடுகளுடன் கூட பூரி வேண்டுமா, அல்லது சப்பாத்தியா?” என்று கேட்டார் பரிமாறுபவர்.

“சப்பாத்தியே கொண்டு வாருங்கள், நன்றி”.

பழச்சாறு ஏதும் வேண்டுமா?”

“ஆம். எல்லோருக்கும் தர்பூஷணி பழச்சாறு கொடுங்கள். கூடவே வெஜிடபிள் சாலட்டும், கொஞ்சம் சிப்ஸும் கொண்டு வாருங்கள்” என்றாள் சௌம்யா.

“அம்மா! நீ ஏன் மாங்காடுக்கு அடிக்கடி வருமாறு திட்டமிடக் கூடாது?” என்று சிறப்பான சாப்பாட்டை மனதில் வைத்துக்கொண்டு கேட்டான் கௌசிக்.

“ஆஹா! என்ன ஒரு பக்தி உனக்கு!!!” என்று சொல்லிச் சிரித்தார் சௌம்யா.

உடனே சங்கர், “மஹாதேவன்! நீ இன்று காலை சொன்ன விஷயம் நினைவுக்கு வந்து என்னை ஈர்க்கிறது. உண்மையில் கௌசிக்கும் ஸ்நேஹாவும் உன்னிடம் அத்தனைக் கேள்விகள் கேட்டதில் எனக்குச் சந்தோஷமே. உன் பதில்களை நன்றாகப் புரிந்துகொண்டு உள்வாங்கிக்கொண்டார்கள் என்று நம்புகிறேன். என்னிடமும் ஒரு கேள்வி உண்டு. இவ்விஷயங்களில் பக்தி என்பது எங்கே வருகிறது?” என்று கேட்டார்.

“பக்தி என்பது என்னவென்று நீ நினைக்கிறாய்?”

“என்னைப் பொறுத்தவரை பக்தி என்பது முழுமையான இறைப்பற்று. இறைவனிடம் சரண் அடைதலே பக்தி” என்றார் சௌம்யா.

“உண்மை. சௌம்யா சொல்வதை நான் ஆமோதிக்கிறேன். மேலும், பூஜைகள் செய்வது, யாத்திரை செல்வது போன்றவைகளும் பக்தியே. என்னுடைய கேள்வி என்னவென்றால், இதுவரை நீ பிரார்த்தனை போன்றவற்றைப் பற்றிச் சொன்னாலும் பக்தியைக் குறித்துச் சொல்லவில்லை. அதற்கு ஏதானும் காரணங்கள் உண்டா?” என்று கேட்டார் சங்கர்.

“பக்தி என்பது ஒரு பாதை. பூஜைகள் செய்வது, யாத்திரைகள் செல்வது போன்றவையெல்லாம் அந்தப் பாதையில் செல்ல மேற்கொள்ளும் பயிற்சிகள், அல்லது பழக்க வழக்கங்கள். பக்தியின் குறிக்கோளே, எந்தவிதமான வேறுபாடுகளும் காணமுடியாத முழுமையான இறைப்பற்று கொண்ட நிலையை அடைவதுதான். ஆகையால், ஒருவர் எதனிடத்தும், யாவரிடத்தும் கடவுளைக் காண்கிறார். இதுவே உண்மையான பக்தி” என்றார் மஹாதேவன்.

“மேலும் விளக்க முடியுமா?” என்று கேட்டார் சௌம்யா.

“பக்தி என்பது வெறும் செயல்களுக்கு அப்பாற்பட்டது. கௌசிக்! சென்ற முறை, பிரார்த்தனைப் பற்றி என்ன பேசினோம் என்பதை உன்னால் நினைவுகூர முடியுமா?” என்று கேட்டார் மஹாதேவன்.

“கண்டிப்பாக. நம்முடைய பயபக்தியும், நம்முடைய தற்போதைய ஆற்றல் வரையறைக்கு உட்பட்டது என்று ஏற்றுக்கொள்வதும், இறைவனின் ஒப்புயர்வற்ற சக்தியை ஒத்துக்கொள்வதும் தான் பிரார்த்தனை. அதைத்தான் கீதையிலும் பகவான் கிருஷ்ணர் வலியுறுத்துகிறார், என்று நீங்கள் சொன்னீர்கள்.” என்றான் கௌசிக்.

“எந்த ஸ்லோகமோ, ஸ்தோத்திரமோ, பாடலோ கேட்டாலும், அவை ஒவ்வொன்றிலும் இறைவனின் ஒப்புயர்வற்ற தன்மை விளக்கமாகப் போற்றப்படுவதைக் காணலாம். எந்த ஸ்தோத்திரத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அது இறைவனின் ஆற்றல்களைப் போற்றுகிறதாக இருக்கும்; அதே நேரத்தில், நம்முடைய குறைபாடுகளை ஏற்றுக்கொண்டு, இறைவனிடத்தில் ஆற்றல், வீரம், அறிவுக்கூர்மை, அச்சமின்மை போன்றவற்றை வேண்டுவதாகவும் இருக்கும்” என்றார் மஹாதேவன்.

“ஒத்துக்கொள்கிறேன். அது பக்தி இல்லையா?” என்றார் சௌம்யா.

சௌம்யாவின் கேள்வியைப் புன்னகைத்தவாறு ஆமோதித்த மஹாதேவன், ஸ்நேஹாவின் பக்கம் திரும்பி, “நேற்று இரவு கடவுளைப் பற்றி என்ன சொன்னோம் எபதை உன்னால் நினைவுகூர முடிகிறதா, ஸ்நேஹா?” என்று கேட்டார்,

“நிச்சயமாக. ‘கடவுள் ஒன்றே’ (Only God) என்பதே நமது நம்பிக்கை என்று சொன்னீர்கள். கடவுள் மட்டுமே இருக்கிறார் என்றும் நாம் காணும் அனைத்தும் அவரே என்றும் அதற்கு அர்த்தம் என்றும் கூறினீர்கள்” என்றாள் ஸ்நேஹா.

“இருக்கும் அனைத்திலும், அனைத்து உயிரினிடத்தும் இறைவனைக் காணும் மனப்பான்மையே பக்தி” என்றார் மஹாதேவன்.

“எப்படி?” என்று கேட்டார் சௌம்யா

“அனைத்தையும் கடவுளாகவோ அல்லது கடவுளின் படைப்பாகவோ பார்த்தால் அவற்றில் எதையுமே உன்னால் வெறுக்க முடியாது. அவைகளின் வடிவிலும், நிறத்திலும், அளவிலும் வித்தியாசங்களைப் பார்த்தாலும், சாரத்தில் அவை யாவும் இறைவனின் படைப்பே. களிமண்ணில் செய்த வடிவங்களைப் போல் தான்; ஒன்று குதிரையைப் போல் தெரியும், மற்றொன்று வண்டியைப் போலும், பூனையைப் போலும், புலியைப் போலும் தெரியும். வடிவிலும், அளவிலும் அவை வித்தியாசமாக இருந்தாலும் அவையெல்லாமே களிமண்தான்”

“அதனால்?”

“அவற்றின் அடிப்படைத் தன்மையில் எந்த வித்தியாசத்தையும் நீ பார்க்காததால், எதன் மீதும் உனக்கு வெறுப்பு ஏற்படுவதில்லை. அதுவே பக்தி. எதையும், எந்த உயிரினத்தையும் வெறுக்காமல் இருப்பதே பக்தி அல்லது இறைப்பற்று”

“இது உன்னுடைய பொருள் விளக்கமா? இதற்கு ஏதாவது ஆதாரமோ சான்றோ இருக்கிறதா?” என்று கேட்டார் சங்கர்.

“இதுவரை என்னுடைய கருத்தாக நான் எதையுமே சொல்லவில்லை. நான் சொல்வது எதுவுமே, என்னுடைய குருமார்கள் கற்றுக்கொடுத்த நம்முடைய ஆன்மிகப் பிரமாண நூல்களை நான் புரிந்துகொண்டதன் அடிப்படையிலும், என்னுடைய சொந்த அனுபவங்களின் அடிப்படையிலும் தான்”.

“அப்படியென்றால் இறைப்பற்றுக்குப் பொருள் விளக்கம் கூற உன்னுடைய ஆதாரம் எது?” என்று கேட்டார் சங்கர்.

“ஒரு பக்தனை வர்ணிக்கக் கிருஷ்ண பகவானே சிறந்தவர் என்று நான் சொன்னால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா?”

“கண்டிப்பாக நான் ஒத்துக்கொள்வேன்” என்றார் சௌம்யா.

“எவன் ஒருவன் எந்தப் படைப்பையுமே வெறுக்காமல் இருக்கிறானோ அப்பேர்பட்டவனே சிறந்த பக்தன்; அவனே எனது அன்புக்கு உரியவன், என்று சொல்லித்தான் ஒரு பக்தனை வர்ணிக்கத் தொடங்குகிறார் பகவான் கிருஷ்ணர்”

உரையாடலுக்கிடையே வந்த பரிமாறுபவர், “மஞ்சௌ சூப் யாருக்குத் தரவேண்டும்?” என்று கேட்டார்.

“எனக்கு” என்றான் கௌசிக்.

“மஹாதேவன்! உணவைச் சுவைத்து உண்டுவிட்டுப் பிறகு வீட்டிற்குச் சென்று நம்முடைய உரையாடலைத் தொடர்வோம். உன்னுடைய விளக்கம் எனக்கு மிகவும் வசீகரமாக இருக்கிறது. இப்படி இருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை” என்றார் சங்கர்.

“கண்டிப்பாக” என்றார் புன்னகையுடன் மஹாதேவன். அதனைத் தொடர்ந்து அனைவரும் உணவருந்திவிட்டு வீட்டுக்குச் சென்றனர்.

“மஹாதேவன்! குஜராத்தி சாப்பாட்டை அனுபவித்து உண்டாய் என்று நம்புகிறேன்” என்றார் சங்கர்.

“கொஞ்சம் தென்னிந்தியச் சுவையுடன் இருந்தாலும் நன்றாக இருந்தது; அவர்களால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்துள்ளார்கள். அதில் எந்தக் கேள்விக்கும் இடமில்லை” என்று புன்னகைத்தபடியே பதிலளித்தார் மஹாதேவன்.

“அண்ணா! கிருஷ்ணர் ஒரு பக்தனை எப்படி வர்ணிக்கிறார் என்று சொல்லிக்கொண்டிருந்தீர்கள். தயவு செய்து அதைத் தொடர்ந்து சொல்லுங்கள்” என்றார் சௌம்யா.

“மேலும் எந்த ஆதாரத்தின் மீது அப்படிச் சொல்கிறாய் என்பதையும் நீ பகிர்ந்துகொள்ள வேண்டும்” என்றார் சங்கர்.

“அவசியம் பகிர்ந்துகொள்கிறேன். அப்படி ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்ததே இறையருள் தான். கௌசிக்! நீ ஒரு உதவி செய்ய வேண்டும். பகவத் கீதைப் புத்தகத்தைக் கொண்டு வா. அதன் மூலம் நான் சொல்வதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்”.

”கண்டிப்பாக மாமா. இதோ, ஒரு நிமிடத்தில் வருகிறேன்”.

“சரி. 12வது அத்தியாயத்தில் 13வது ஸ்லோகத்திலிருந்து 20வது ஸ்லோகம் வரை பகவான் கிருஷ்ணர் பக்தனை வர்ணிக்கிறார். அதைப் பார்ப்போம். ‘இவ்வுலகில் எவனொருவன் எந்த உயிரினிடத்தும் வெறுப்பில்லாமல் இருக்கிறானோ, அவன் என் அன்புக்கு உரியவன், அவனே என் உண்மையான பக்தன்’ என்று ஆரம்பிக்கிறார் கிருஷ்ணர்”.

“அந்த ஸ்லோகத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில் அது உள்ளது” என்றான் கௌசிக்.

“அனைத்து உயிர்களிடத்தும் வேறுபாடுகளைக் காணாமல் அவைகளை ஒன்றாகக் கருதினாலொழிய, இம்மாதிரியான கருத்தை ஒருவர் எப்படிக் கொள்ள முடியும்? வெவ்வேறு வடிவங்களையும் அளவுகளையும் பார்க்கின்ற வரை இத்தகையக் கருத்தைக் கொள்ள இயலாது. நான் ஏற்கனவே கூறியதைப் போல, பானை, வண்டி, குதிரை போன்றவை எல்லாமே வெவ்வேறு வடிவங்களாக இருக்கலாம்; ஆனால் அவற்றின் சாரம் களிமண் தான். அதைப் போலவே, ஒவ்வொரு உயிரினமும் வடிவத்திலும், அளவிலும், நிறத்திலும் வேறுபட்டிருக்கும்; அனால் அவை எல்லாமே ‘அவனின்’ படைப்புகள் என்பதே அவற்றின் சாரம். ஆகவே, எந்த உயிரினத்தையும் வெறுக்காமல் இருப்பவனே உண்மையான பக்தன்” என்று விளக்கினார் மஹதேவன்.

“தொடர்ந்து சொல் மஹாதேவா. கிருஷ்ணர் வேறு எதாவது குணாம்சத்தைச் சொல்கிறாரா?” என்று கேட்டார் சங்கர்.

“அனைத்து உயிரினிடத்தும் எவன் ஒருவன் நட்பும், கருணையும் கொண்டிருக்கிறானோ, அவனே பக்தன், என்கிறார் கிருஷ்ணர். இதை, ‘கடவுள் மட்டுமே இருக்கிறார்’ என்கிற எளிமையான உண்மையின் புறச்செருகல் (Extrapolation) என்றுகூடச் சொல்லலாம். மனிதர்களோ மற்ற உயிரினங்களோ கடவுளின் படைப்புகளாக மட்டுமே இருப்பதால், அவற்றை உன்னுடைய விருப்பு வெறுப்புகளுக்கு எற்றவாறு வேறுபடுத்திப் பார்க்காமல் இருந்தால்தான், உன்னால் நட்புடனும் கருணையுடனும் இருக்க முடியும்”.

“பூஜையைப் பற்றி?” என்று கேட்டார் சௌம்யா.

“பக்தி என்று வருகின்ற போது, கிருஷ்ணர் பூஜை பற்றியோ யாத்திரை பற்றியோ குறிப்பிடவில்லை. அவருடைய படைப்புகளில் இருக்கும் ஒற்றுமையை, ஐக்கியத்தைக் காண்பதைப் பற்றித்தான் இவையெல்லாம். அவர் மேலும், ‘எவன் ஒருவன் மற்றவர் யாவருக்கும் துன்பம் ஏற்படுத்தாமல் இருக்கிறானோ, மற்ற எவராலும் துன்பம் அடையாமல் இருக்கிறானோ, மகிழ்ச்சி, கோபம், அச்சம் மற்றும் கவலை ஆகியவற்றிலிருந்து விடுபட்டவன் எவனோ, அவனே என் அன்புக்குரியவன்; உண்மையான பக்தன்’ என்கிறார். இதை மேலும் பகுத்தாய்வு செய்தால், இந்த குணங்களும் கூட நாம் ஏற்கனவே சொன்ன ‘கடவுள் மட்டுமே இருக்கிறார்’ என்கிற எளிமையான உண்மையின் கருத்தாக்கம் தான் என்பது புரியும்.

“இந்தப் பாதையில்தான் நான் முன்னேறிச் செல்கிறேன் என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது?” என்று கேட்டார் சங்கர்.

“மற்றவர்களை, அவர்களுடைய குறைபாடுகளையும் தவறான புரிதல்களையும் மீறி, ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு இடங்கொடுத்து, அன்பு செலுத்தும் வல்லமை உனக்கு அதிகரிக்கும். அவர்களுடைய நடத்தை மற்றும் குணாதிசயங்களின் ‘காரணமாக’ அல்லாமல், அவை ‘இருக்கின்ற போதும்’ அவர்கள் மீது அன்பு செலுத்துவாய்”.

“அது நமிடையே உள்ள போட்டித்தன்மையை அபுறப்படுத்திவிடாதா? எல்லாமே அவனின் படைப்புகள் என்றால், நாம் என்ன செய்கிறோம்? நாம் செய்வதற்கு என்ன இருக்கிறது?” என்று கேட்டாள் ஸ்நேஹா.

“நல்ல கேள்வி. நான் விளக்கிச் சொல்கிறேன். உனக்கு ஒரு வேலையைச் செய்து தருவதாக வாக்களித்த உன்னுடைய தோழி ஒருத்தி, தான் அளித்த வாக்குறுதியை மீறிவிட்டால் அவள் மீது நீ கோபப்படமாட்டாயா?”

“கண்டிப்பாகக் கோபப்படுவேன், அதை அவளிடம் காண்பிக்கவும் செய்வேன்”.

“நல்லது. நீ அப்படிச் செய்யத்தான் வேண்டும். ஆனால், உன் கோபமானது அவள் மீது அல்ல, அவளின் செயல்பாட்டின் மீதுதான் என்பதை நீ நினைவில் கொள்ள வேண்டும்”.

“அதன் அர்த்தம்….?”

“நீ யாரிடம் கோபம் கொண்டாலும், அந்த நபரின் செயல்பாட்டின் மீதுதான் கோபம் கொள்கிறாயே ஒழிய, அந்த நபரின் மீது அல்ல. அவனோ அவளோ செய்யாதது தான் உனக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறதே ஒழிய, அந்தக் குறிபிட்ட நபர் அல்ல. ஒத்துக்கொள்கிறாயா?”

“ஆம்”.

“நாம் அடிக்கடி இவ்விரண்டையும் சேர்த்துக்குழப்பிக்கொண்டு, அந்தக் குறிப்பிட்ட நபரின் மீதே கோபம் கொண்டு, சகோதர சகோதரிகளானாலும், கணவன் மனைவியனாலும், பெற்றோர்களானாலும், நண்பர்களனாலும், அவர்களுடனான உறவு அறுந்துபோகும் அளவுக்குச் சில சமயங்களில் சென்று விடுகிறோம்; இவற்றை நீ கேள்விப்பட்டதில்லையா?”

“நிச்சயமாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சில சமயம் அம்மாதிரியான கதைகளைக் கேட்கும்போது மிகவும் விரக்தியாக இருக்கும்.” என்றார் சங்கர்.

“கோபமானது மற்றவரின் செயல்பாட்டின் மீதுதான், அந்த நபரின் மீது அல்ல என்பதை ஒருவர் சரியாகப் புரிந்துகொண்டால், உறவு முறியும் அளவுக்கு அவர் மீது எப்படி வெறுப்பு ஏற்படும்?”

“புரிந்தது. ஒரு நபரை வெறுக்கவே முடியாது. அவர் செய்த செயலுக்கு வருத்தமோ கோபமோ கொள்ளலாம்; அவ்வளவு தான் முடியும். சரிதானே மாமா?” என்று கேட்டான் கௌசிக்.

“மிகவும் சரி. நம் அனைவரையும் பிணைக்கும் கண்ணுக்குத் தெரியாத சக்தி தான் தூய்மையான அன்பு. தவறான புரிதலால் நாமாக உருவாக்குவது தான் வெறுப்பு. ஸ்நேஹா, உன் கேள்விக்குப் பதில் சொல்லவேண்டுமென்றால், போட்டித்தன்மை, வேலை, பிழைப்புத்தொழில் எல்லாமே, அவை உன் வாழ்வில் தவிர்க்க முடியாத பரிவர்த்தனைகள் என்பதால், அப்படியேதான் இருக்கும். கடுமையாகப் படிக்க வேண்டுமென்றால், நீ அவ்வாறு படிப்பது தான் நல்லது; உன் பிழைப்புத் தொழிலில் உழைத்து முன்னேற வேண்டுமென்றால் உன் வசமிருக்கும் அனைத்துத் திறமைகளையும் பயன்படுத்து. ஒரே மாற்றம் உலகை நோக்கிய உன் மனபான்மையில் தான். அதுதான் பக்தி அல்லது இறைப்பற்று”.

“அது நம்மைச் செயலற்றவராக, பலவீனமானவராக, மென்மையானவராக ஆக்கிவிடாதா?” என்று கேட்டான் கௌசிக்.

“அதற்கு மாறாக அது உன்னை வலிமையானவனான ஆக்கவேண்டும். அத்தகைய மனப்பான்மைக்கு மிகச்சிறந்த உதாரணம் காந்தி. அவரைப் புறந்தள்ளுவது ஆங்கிலேயருக்கு எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்! அவர் வலிமையான ஆன்மிக நம்பிக்கைக் கொண்டிருந்ததால், அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை”.

“காந்தி முற்றிலும் வேறுபட்ட நிலையில் இருந்தார்” என்றார் சங்கர்.

“உண்மையில் நாம் ஒவ்வொருவரும் சுலபமாக அவ்வாறு இருக்க முடியும். நம்முடைய நம்பிக்கையை மறுவரையறை (Redefine) செய்துகொள்ள வேண்டும்; அவ்வளவு தான்”.

“எப்படி?” என்று கேட்டார் சௌம்யா.

“வேறுபாடுகளைப் பார்க்காமல் ஒற்றுமைகளைப் பாருங்கள்; அதிகமாக விரும்புவதற்குப் பதிலாக அதிகமாக அளியுங்கள்; செல்வமாக இருந்தாலும், அறிவுச்செல்வமாக இருந்தாலும், பதுக்கிக்கொள்ளாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்; இதில் நீங்கள் நஷ்டம் அடையவே முடியாது”.

“அத்தகைய மனப்பான்மைக் கண்டிபாக ஒருவரை மென்மையானவராகவும், தாழ்ந்து போகின்றவராகவும் ஆக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதற்குக் கிருஷ்ணர் எதுவும் சொல்கிறாரா?” என்று கேட்டான் கௌசிக்.

“பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் தரும் அடித்தளச் செய்தியே ‘தீயதைச் சகித்துக்கொள்ளாதே’ என்பது தான். ஒரு போர் வீரன் செய்ய வேண்டிய காரியமான போர் புரிதலைக் கைவிட்டு ஓட முயன்ற அர்ஜுனனை, அவனுடைய கடமையான போர் புரிதலை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறார் கிருஷ்ணர். உண்மையில், தன் கடமையிலிருந்து நழுவப்பார்க்கும் அர்ஜுனனைப் பரிகசிக்கிறார். தீயவர்களைக் கொல்லுமாறு அர்ஜுனனை உந்துகிறார்; அது வெறுப்பினால் அல்ல; தீமைகளை, தீய செயல்களைத் தடுப்பதற்காகவே!”

“கிருஷ்ணர் இருந்தார் என்பதை நாம் எப்படித் தெரிந்துகொள்வது? கீதை வயதானவர்களுக்காகத்தான் என்று தான் நான் எப்போதும் நினைத்திருந்தேன்”. என்றான் கௌசிக்.

“நாம் இங்கே படைக்கப்பட்ட உயிரினங்களாக இருக்கிறோம். ஆகவே, படைப்பாளி என்கிற ஒருவன் இருந்தாக வேண்டும். கிருஷ்ணர் சொல்கின்ற எதுவுமே அவருடைய பார்வையிலிருந்து சொல்கின்ற கருத்துக்கள் ஆகும். அவற்றை உள்வாங்கி, பகுத்தாய்வு செய்ய முயன்ற பிறகு, ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் உன் இஷ்டம். அப்படி எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் கீதையைப் நிராகரிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. மேலும், ஒருவரின் வாழ்நாளின் ஆரம்ப காலத்திலேயே கீதையின் செய்தியை அறிந்துகொள்வது மிகவும் நன்மை பயக்கும். குறைந்த வயதிலேயே கீதையைக் கற்று, அது தரும் அறிவையும் திறன்களையும் பெற்று, அவறை உன் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தி, உன் செயல்பாடுகளில் திறமைக் காட்டிப் பயன்பெறவேண்டும்”.

“அண்ணா! நான் கீதையைக் கற்க வேண்டும் என்று ரொம்ப நாளாக விரும்பிக்கொண்டிருந்தேன். நல்ல வேளையாக நீங்கள் இப்போது அதைப் பற்றிச் சொன்னீர்கள்” என்றார் சௌம்யா.

“மஹாதேவன்! உன்னுடைய பயணத்திட்டம் என்ன?” என்று கேட்டார் சங்கர்.

“நான் இப்போது என் ஊருக்குக் கிளம்புகிறேன். மீண்டும் அடுத்த மாதம் வர முயற்சி செய்கிறேன். அடுத்த முறை ஸ்நேஹாவுடனும் கௌசிக்குடனும் கல்ந்துரையாடுவது மகிழ்ச்சியான அனுபவத்தைத் தரும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று சிரித்தபடியே சொன்னார் மஹாதேவன்.

“இன்னும் ஒரு கேள்வி ரொம்ப நேரமாக மனதில் தொங்கிக்கொண்டிருக்கிறது. ‘நீங்கள் யார்?’ என்று கேட்டிருந்தேன்” என்றான் கௌசிக்.

“இதை ஒரு தலைப்பாகப் பின்னர் வைத்துக்கொள்ளலாம். அது வரையில் ‘உங்கள் சுயத்தைத் தேடுங்கள்’ ((Find your SELF). உங்கள் அனைவரையும் அடுத்த முறை சந்திக்கிறேன்” என்று சொல்லிக் கிளம்பினார் மஹாதேவன்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *