சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்

லகில் மனிதர்களிடையே பல மதங்கள் காணப்படுகின்றன. வாழ்வின் நோக்கத்தை வரையறுத்துக் காட்டுவதே மதங்களின் நோக்கம். உலகம் என்பது என்ன? எப்படி வந்தது? மனிதர்களின் வாழ்க்கை நோக்கம் என்ன? உலகையும் உயிர்களையும் படைத்த கடவுள் எங்கிருக்கிறார்? எதற்காகப் படைத்தார்? மனிதனின் மரணத்திற்கு பிறகு நடப்பது என்ன? போன்ற உலகம், உயிர், இறைவன் குறித்த மெய்ப்பொருளைத் தெளிவுபடுத்துவதே மதம். இவற்றைப் பற்றி ஹிந்து மதம் எனப்படுகிற ஸனாதன தர்மம் சொல்வது சொல்வது என்ன?

பிறவிக்குக் காரணம் புண்ணிய பாபம் என்கிற வினைப்பயன். உயிர்களுக்குப் பல பிறவிகள் உள்ளன. புண்ணிய பாபங்கள் உள்ளவரை பிறவிகள் தொடரும். மரண காலத்தில் ஒருவன் எதை நினைத்து இறக்கிறானோ அதனடிப்படையிலேயே அவனது அடுத்த பிறவி அமையும். ‘சிவசிவ’ என இறப்பவர்கள் சிவகதியையும் ஹரிநாமத்தைச் சொல்பவர்கள் விஷ்ணு கதியையும், உலகியல் சிந்தனையிலேயே வாழ்ந்து, அதையே நினைத்து, அனைத்தையும் விட்டுப் போகிறோமே ‘ஐயோ,’ என்று இறப்பவர்கள் யமகதியையும் அடைவார்கள். பிரம்மத்தை அறிந்து பிரம்ம சிந்தனையில் உயிரிழப்பவர்கள் பிரம்மத்தை அடைவார்கள்.

இறைநிலையை (பிறவாநிலையை) அடைவதே பிறவியின் நோக்கம். அதையும் மனித பிறவியில் இருந்தே அடையமுடியும். தவத்தினாலும் தத்துவ ஞானத்தினாலும் ஒரு ஜீவன் பிறவியில் இருந்து விடுபட முடியும். அதுவே வீடுபேறு, மோக்ஷம், முக்தி, பிறவாநிலை, பரமபதம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

இந்த இறைநிலையை அடைய யமம், நியமம் என எட்டுப் படிகளைச் சொல்கிறது யோக மார்க்கம். ஸ்ரவணம் கீர்த்தனம் எனத் தொடங்கி ஒன்பது படிகளைச் சொல்கிறது பக்தி மார்க்கம். சரியை முதலிய நான்கு நிலைகளை சைவசித்தாந்தம் சொல்கிறது. யோகம் ஞானம் என இரு மார்க்கங்களை கீதையிலே பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகர்கின்றார்.

புலன்களையும் மனதையும் ஒருமுகப்படுத்தி இறைவனாகிய ஒன்றிலேயே மனதை நிறுத்துவதே சாதனை. எண்ணற்ற சாதனைகள் சொல்லப்பட்டாலும் எல்லா சாதனைகளுக்கும் முதன்மையாக அடிப்படையாக இருப்பது பிரம்மச்சரிய விரதம். மனதை அலைக்கழிப்பது காமம். காமத்தைக் கடந்தவனே கடவுளைக் காண முடியும். “உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து” என்பதும் “காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்” என்பதும் வள்ளுவர் வாக்கு. வேதாந்தம், சித்தாந்தம் சொல்வதுவும் இதுவே. காமத்தை வெல்லும் சாதனையே பிரம்மச்சரிய விரதம்.

வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து பிறவியிலிருந்து விடுபட விரும்புபவன், குருவை அணுகி பிறவியில் இருந்து விடுபடுவதற்கான உபாயங்களைக் கேட்டறிந்து, விரதம் தவம் முதலானவற்றைப் பின்பற்றியும் வேதாந்த தத்துவத்தை முறைப்படி ஐயம்திரிபறக் கேட்டறிந்தும் ஞானத்தைப் பெற வேண்டும். ஞானமே மோக்ஷம் தரும். மோக்ஷமே வாழ்வின் குறிக்கோள். தர்மம், அர்த்தம், காமம் என குறிக்கோள்கள் இருந்தாலும் மேலான இறுதியான குறிக்கோள் வீடுபேறு எனும் மோக்ஷமே.

இல்லறத்தில் இருப்பவர்கள் மோக்ஷமே வாழ்வின் இறுதியான நோக்கம் என்பதை மறவாமல் இருக்கவும், அதற்காக படிப்படியாகத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளவுமே ஐயப்ப தெய்வ வழிபாடு அமைக்கப்பட்டிருக்கின்றது.

ஐயப்பன் யோக நிலையில் அமர்ந்திருக்கும் குரு, சாஸ்தா. சாஸ்திரங்களை எடுத்து உபதேசிப்பவர், அதன்படி வாழ்பவர் சாஸ்தா. இதை உணர்த்தவே சபரிமலை ஐயப்பன் சன்னிதியில் பதினெட்டாம் படி ஏறியவுடன் மோக்ஷத்தைத் தரும் “தத்த்வமஸி” என்ற மகாவாக்கியம் பொறிக்கப்பட்டிருக்கிறது. 18 படிகள் 18 தர்ம தத்துவ நூல்களைக் குறிக்கின்றன.

ஆணும் பெண்ணுமாய், கணவன் மனைவியாய், தாயும் தந்தையுமாய் குடும்பமாய் இறைவன் எழுந்தருளியிருக்கும் கோலம் எல்லா கோயில்களிலும் நாம் காணுவது. அது ‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’ என்னும் இல்லற வாழ்க்கைத் தத்துவத்தைக் காட்டுவது. ‘ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்’ எனும் துறவியல் தத்துவத்தைக் காட்டுவது சபரிமலை ஐயப்பன் எழிற்கோலம்.

எல்லாக் கோயில்களும் ஆண், பெண் அனைவரும் செல்லும் விதமாகவே அமைந்திருக்கின்றன. இன்றைக்கு பல கோவில்களில் திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் சந்தித்துப் பொழுதுபோக்குவதைப் பார்க்கிறோம். கோவிலுக்கு வருபவர்களில் நோக்கம் பலவிதமாக இருக்கிறது. ஆனால் சபரிமலை ஐயப்பன் கோவில் ஒரே நோக்கத்தைக் கொண்டது. அதற்காகவே கண்டிப்பான விதிமுறைகளும் விரத முறைகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன.

அனைத்தையும் துறந்து இறைநிலையை அடைந்த ஞானிகளை, யோகிகளை, துறவிகளை சாமி, சாமியார் என்று இறைவனாகவே பார்ப்பது நமது பண்பாடு. தாற்காலிகமாக துறவிகளைப் போல் கடுமையாக விரதம் இருக்கும் ஐயப்ப பக்தர்களையும் சாமி என்று சொல்கிறோம். காமம் அனைத்து உயிர்களின் மனதிலும் பொதுவாய் இருப்பது. அதுவே உலகை இயக்குவது. முறைப்படுத்தப்பட்ட காமம் ஆக்கசக்தியாகிறது. கட்டுப்படுத்தப்படாத காமம் அழிவுசக்தியாகிறது. ஆண்கள் உடலையும் மனத்தையும் காமத்தையும் வெல்லும் பயிற்சியாகவே ஐயப்ப விரதம் இருக்கிறது. இது ஆண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டது.

(மாதவிடாயுள்ள பருவத்தில் இருக்கும்) கன்னிப் பெண்கள், சுமங்கலிப் பெண்களுக்கென விரதங்கள், வழிபாட்டு முறைகள் – விசேஷமாகப் பெண்களுக்கே உரியனவாக – நமது பண்பாட்டில் பல உள்ளன. அதுவே அவர்கள் மனக்கட்டுப்பாட்டுக்குப் போதுமானது.

பிறன்மனை நோக்காப் பேராண்மை கொண்ட ஆண்களே எதையும் சாதிக்கும் சக்தி படைத்தவர்கள். அதுவே அவர்களுக்குப் பெருமை. ஆண்கள் தர்மத்தைக் கடைபிடிக்க பெண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் அதுவே மனைத்தக்க மாண்பு.

இன்று பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சமூகத்தில் அதிகமாவதற்குக் காரணம் ஆண்களுக்கு பிரம்மச்சரிய ஒழுக்கம் வலியுறுத்தப்படாததே. தர்மம்-மோக்ஷத்தை விட அர்த்தம்-காமம் பிரதானம் ஆக்கப்பட்ட சீர்கெட்ட சமூகம் இது. மேலான, சிறந்த கலாச்சாரத்தைக் கொண்ட நம் பண்பாடு திட்டமிட்ட அந்நியப் படையெடுப்புகளால், சக்திகளால் தவறாக வழி நடத்தப்பட்டு அழிவை அடைந்து வருகிறது. இளைஞர்கள் தவறுதலாக வழி நடத்தப்படுகிறார்கள். ஆண் பெண் ஒழுக்கம் நாகரீகம், புதுமை, சுதந்திரம், உரிமை எனும் பெயரால் சிதைக்கப்படுகிறது.

பிரம்மச்சரியத்தின் முக்கியத்துவம் இன்று வலியுறுத்தப்பட வேண்டும். அதுவே மேலான சமூகத்தை, சமூக ஒழுக்கத்தை உண்டாக்கும். அதற்கு பிரம்மச்சாரி ஐயப்பன் முன்மாதிரி ஆக்கப்படவேண்டும். எல்லா மாநிலங்களிலும் மாவட்டங்களிலும் ஐயப்பன் கோவில் உருவாக்கப்படவேண்டும். “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்” என்ற வாழ்வின் உயர்ந்த நோக்கத்தை அறிந்து, உண்மையாக விரதமிருந்து சபரிமலை செல்லும் ஆண்களின் எண்ணிக்கை இன்னும் பெருக வேண்டும். பாரம்பரியத்தை மதிப்பவர்களாகவும் பாரதப்பண்பாட்டின்படி விரதம், பண்டிகை முதலானவற்றைக் கடைபிடித்து வாழ்பவர்களாகவும்‌ பெண்கள் வளர்க்கப்படவேண்டும். தர்மசாஸ்தா ஐயப்பன் அருளால் தர்மத்தையும் மோக்ஷத்தையும் மேலான லட்சியமாகக் கொண்டு வாழும் பாரத சமுதாயம் மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும்.

சரணம் ஐயப்பா!

ஸ்ரீ சுவாமி பூர்ணானந்த சரஸ்வதி அவர்கள் ஓர் இந்துத் துறவி. தேனி  வேதபுரீ  ஸ்ரீ சுவாமி சித்பவாநந்த ஆசிரமத் தலைவர் ஸ்ரீ சுவாமி ஓங்காராநந்த மஹராஜ் அவர்களின் சீடர். முறையாக அத்வைத வேதாந்த தத்துவம் பயின்று ஸந்நியாஸ தீக்ஷை பெற்று வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகிறார். தற்போது நாமக்கல் மாவட்டம், கொமாரபாளையம் எடப்பாடி சாலையிலுள்ள ஆநந்தாச்ரமத்தில் வசித்து வருகிறார்.

2 Replies to “சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்”

  1. அருமையான கட்டுரை. சுவாமிஜி அடிக்கடி எழுத வேண்டுகின்றேன்

  2. /////தத்த்வமஸி////////// அர்த்தம் சொல்லுங்க சாமி மொதல்ல……

Leave a Reply

Your email address will not be published.