திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவதரித்த ஊர். இங்கு பாடல் பெற்ற திருத்தலம் உள்ளது. சுவாமி பெயர் பக்த ஜனேஸ்வரர். கோயிலுக்கு அருகில் ஓர் இடம் சுந்தரர் அவதரித்த இல்லம் இருந்த இடம் என்று பாரம்பரியமாகக் கருதப் படுகிறது. 1960 களில் இந்த இடத்தையும் இதன் அருகில் இருந்த காலி மனையையும் ஆதிசைவர்கள் (குருக்கள்) எனப்படும் சிவாச்சாரியர்கள் வேறு யாருடைய உதவியையும் பெறாமல் விலைக்கு வாங்கி ஒரு சிறிய மடத்தை கட்டி அங்கு சுந்தரரின் உருவச் சிலையை ஸ்தாபித்து குருபூஜை செய்து வரத்தொடங்குகின்றனர் (சுந்தரர் ஆதிசைவ குலத்துதித்த அருளாளர் என்பது சைவர்கள் அனைவரும் அறிந்ததே) . ஆடி மாதம் சுந்தரர் குருபூஜையும் ஆவணி மாதம் அவதாரத் திருநாள் வழிபாடும் நடக்கிறது. பல இடங்களிலிருந்தும் ஆதிசைவ பெருமக்கள் வந்து கலந்துகொள்கின்றனர். பின்பு பக்கத்திலுள்ள காலி மனையை ஒரு சிவாச்சாரியர் வாங்கி தானம் செய்ய, மடம் கட்ட தமிழகம் எங்கும் உள்ள சிவாச்சாரியர்கள் தங்களாலியன்ற சிறுசிறு தொகைகளை வழங்குகின்றனர் (1960 களில் தான் பத்திர பதிவு நடந்தது என்றாலும் உண்மையில் பல காலமாகவே சுந்தரர் மனை இடம் ஆதி சைவர்களது பொறுப்பிலேயே இருந்து வருகிறது). நித்திய பூஜை உள்ளூர் சிவாச்சாரியர் வசம் ஒப்படைக்கப்படுகிறது. . 1975ல் கூனம் பட்டி ஆதினம் கும்பாபிஷேகம் செய்து வைக்கிறது.

இடையில் இம்மடம் அறநிலைத்துறையினரால் பக்த ஜனேஸ்வரர் கோவிலின் கீழ் வரும் சொத்து என்று கணக்கு காண்பிக்கப் பட்டு கையகப்படுத்தப்படுகிறது . மேலும் உள்ளூர் ஆதி சைவ அர்ச்சகருக்கும் ஊர் முக்கியஸ்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட சிறு உரசல்கள் 1999ல் இம்மடம் சம்மந்தமான விஷயங்களிலும் எதிர் ஒலிக்கிறது. 2000ல் உள்ளூர் சிவாச்சாரியர் தமிழகம் எங்கும் உள்ள ஏனைய ஆதி சைவர்களிடம் நன்கொடை பெற்று மடத்தை சீர் செய்ய முயல்கிறார் .ஆனால் இது ஒழுங்காக நடக்கவில்லை. மடம் பராமரிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இந்நிலையில் 2009 ல் விருத்தாச்சலத்தை சேர்ந்த சைவ அமைப்பு ஒன்று திருப்பணி செய்ய முன்வருகிறது . அவர்கள் மீதுஆதி சைவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் தடையாணை பெறுகிறார்கள். 2012ல் வேறு அறக்கட்டளை ஒன்று குரு பூஜையை நடத்துவதாக கூறி உள்ளே வருகிறது. அவ்வாறு வந்த அறக்கட்டளை 2013ல் மடத்தை சீர் செய்கிறேன் என்று உத்தரவாதம் தர, பழைய மடம் இடிக்கப் படுகிறது. ஆனால் இவர்களால் ஒரு அளவுக்கு மேல் பொருள் திரட்ட முடியாததால், பவானியைச் சேர்ந்த வேறு ஒரு சைவ அமைப்பு ஒன்றை உள்ளே கொண்டு வருகிறார்கள். ஆனால், இந்த பவானி அமைப்பு வைதீக நெறியான சைவசமயத்திற்கு முற்றிலும் விரோதமாக, தமிழ்த்திருமுறையைக் கொண்டு சடங்குகளையும், கோயில் குடமுழுக்குகளையும் செய்து கொண்டிருக்கும் ஒரு கோஷ்டியைச் சார்ந்தது. வேதாகம விரோதம், சம்ஸ்கிருத வெறுப்பு, அந்தணர்கள் மீதான வெறுப்பு ஆகியவையே இந்த கோஷ்டியினரின் முக்கிய கொள்கைகள். சைவம் என்ற போர்வையில் துவேஷத்தைப் பரப்பி, படிப்படியாக உண்மையான சைவநெறியை அழித்து வருபவர்கள் இந்தக் கோஷ்டியினர். இச்சூழலில், நிலைமை அத்துமீறிப் போய்க் கொண்டிருப்பதைக் கண்டு அர்ச்சகர்கள் அமைப்புகள், பாரம்பரிய சைவ மெய்யடியார்கள் சிலர் தலையிட்டு நிலவரத்தை சீர் செய்ய முயல்கின்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஊர்ப்பிரமுகர்களும் அறநிலையத் துறையும் புதிதாக வந்த பவானி கோஷ்டிக்கு ஆதரவாக இருக்கின்றனர். ஒரு கட்டத்தில், திருப்பணியை மட்டுமே அவர்கள் செய்வார்கள் என்று குடமுழுக்கில் தலையிட மாட்டார்கள் என்றும் வாக்குறுதி அளிக்கப்படுகிறது. ஆனால் தொடர் நீதிமன்ற விடுமுறையை பயன்படுத்தி தந்திரமாக தீபாவளி அமாவாசை என்பதையும் கணக்கில் கொள்ளாமல் ஆகம விரோதமாக அசுப முஹூர்த்தத்தில் நவம்பர்-7 புதன் அன்று திருமுறை திருக்குடமுழுக்கு செய்வதாக அதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு அறிவிக்க படுகிறது. இதற்கு எதிராக பாரம்பரிய சைவர்களும் சிவாசாரியார்களும் பரவலாக எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இது அனைத்தையும் மீறி, முற்றிலும் வேதாகம விரோதமாக ஒரு சமய, கலாசார அழிப்பு குடமுழுக்கு என்ற பெயரில் நடந்தேறியிருக்கிறது.

தம்பிரான் தோழர் என்றும் வன்றொண்டர் என்றும் போற்றப்படும் ஆதிசைவ குலதீபமான ஸ்ரீ சுந்தரரின் திருக்கோயிலுக்கே சிவாகம வழியிலான கும்பாபிஷேகமும் பூஜையும் முடக்கப் பட்டிருக்கிறது என்பது எத்தகைய கொடுமை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழகம் முழுதும் இருக்கும் ஆதி சைவர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக சில ஆயிரங்களுக்குள் தான் வரும் . மிகவும் சிறுபான்மையிைைனரான அவர்களது பாரம்பரிய வழிபாட்டு இடங்களையும், வழிபாட்டு மரபுகளையும் அழிப்பது இன அழிப்பு, கலாசார ஒழிப்பு என்றே ஆகும். இந்தக் கண்டனத்திற்குரிய அத்துமீறல் திருத்தப்படவேண்டும். இந்த விஷயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு திருநாவலூர் மடத்தின் மீது ஆதிசைவர்களுக்கு உள்ள நில உரிமைகளும், வழிபாட்டு உரிமைகளும் சட்டபூர்வமாக உறுதி செய்யப் படவேண்டும்.

இப்பிரசினையின் முழு பின்னணியையும் குறித்த இக்கட்டுரையை வெளியிடுகிறோம். கட்டுரையாசிரியர் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள சிவாலயத்தில் அர்ச்சகராக உள்ள ஆதிசைவ குருக்கள் ஆவார். ‘ஆதிசைவர் வரலாறு’ என்ற நூலையும் எழுதியிருக்கிறார்.

– ஆசிரியர் குழு

(1)

வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி.

அடியேன் இக்கட்டுரையில் திருநாவலூர் சுந்தரர் மடம் பற்றி கீழ்க்கண்ட விபரங்களை வெளிப்படுத்தவுள்ளேன்.

1) திருநாவலூரில் ஸ்ரீ சுந்தரர் மடத்தின் தோற்றம் பற்றியது.

2) அம்மடத்திற்க்கும் ஆதிசைவர்களாகிய சிவாச்சாரியார்களுக்கும் உள்ள தொடர்பு பந்தம்.

3) சிவாச்சாரியார்கள் அம்மடத்தை எழுப்பி 50 ஆண்டுகள் முன்பு கும்பாபிஷேகம் செய்த விபரம்.

4) சிவாச்சாரியார்கள் அம்மடத்திற்கு கடந்த ஐம்பது ஆண்டுகள் செய்த தொண்டு உழைப்பு.

5) சிவாச்சாரியார்கள் திருப்பணி செய்ய முயன்ற விபரங்கள்.

6) இடையில் அனுகூல சத்ருக்கள் எவ்வாறு பசுத்தோல் போர்த்திய புலியாக மடத்தின் திருப்பணியில் நுழைந்தார்கள் என்ற விபரம்.

7) சைவ வேடதாரிகள் இன்று திருப்பணி செய்கிறோம் என்ற பெயரில் செய்யும் அட்டூழியங்கள். அராஜகங்கள்.

8) இதை எதிர்த்து சிவாச்சாரியார்கள் செய்த சட்ட போராட்டங்கள் விபரம்.

9) நல்லவர்கள் போல் நடிக்கும் சைவ வேடதாரிகள், உள்ளூர் முக்கியஸ்தர்கள் மூலம் ஒன்றும் உலக விபரம் அறியா உள்ளூர் குருக்களை குண்டர்கள் போல் மிரட்டும் விபரம்.

10) அரசிடம் உபயத்திருப்பணிக்கு அனுமதிபெற்று விட்டு கோடி கோடியாக வசூல் செய்யும் விதம். மடத்தை சொந்தம் கொண்டாடும் வகையில் செயல்படும் நரிதந்திர விபரம்.

11) சைவ ஆதினங்களும், சைவப்பெரியோர்களும் எடுத்து கூறியபொழுதும் அவர்கள் வாக்குகளை துச்சமாக எடுத்தெறிந்து செயல்படும் சைவவேட குண்டர்களை பற்றிய விபரம்.

12) சிவாச்சாரியார்கள் மிக மிக மிக இன சிறுபான்மையினர் என்பதால் அவர்களை, அவர்களின் மரபுகளை அழிக்க துடிக்கும் நயவஞ்சக செயல்களின் விபரம்.

13) திருப்பணி என்ற விதத்தில் திருமுறை வியாபாரத்தை, திருமுறை புரோகிதத்தை அவ்விடத்திலேயே பிரமோட் செய்யும் விதம்

14) அடையாளமற்றவர்கள் தங்கள் திருமுறைவியபாரத்தை அடையாளப்படுத்துவதற்க்காக, திருமுறை புரோகிதத்தை மேலும் வியபாரப்படுத்த சுந்தரர் மடத்தை அடையாளப்படுத்தும் விதம்.

15) பெரிய அளவில் மடம் எழும்பினாலும், முற்றிலும் ஆகம விரோதமாக கட்டப்படுவதாக ஆதினமே கூறியும் வசூல் ஆர்வத்தில் ஆணவத்தோடு செயல்படும் விபரம்.

16) சைவ வேட குண்டர்களைக் கொண்டு மடம் சார்ந்த உரிமையை கேட்கும் சிவாச்சாரியார்களையும், அவர்கள் குடும்பபெண்களையும் மிரட்டும், ஊருக்கு நல்லவர்கள் போல் நடக்கும் நயவஞ்சகர் பற்றிய விபரம்,

இவ்வாறு தொகுத்து எழுதவுள்ளேன். இது முழுக்க முழுக்க சுந்தரர்மடம் பற்றி சைவ உலகம் தெரிந்துகொள்ளவேண்டும். உண்மை வெளிவர வேண்டும். சிவாச்சாரியார்கள் சார்ந்த தவறு இருந்தால் அதையும் சீர்தூக்கி பார்த்து உண்மை நியாயம் எது என்பது இவ்வுலகம் அறியவேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை.

திருப்பணிகளை தடைசெய்வேண்டும் என்பது நோக்கமல்ல. சைவ மரபுகளை காலில் போட்டு மிதித்து, சிவாச்சாரியார்களை குண்டர்களை வைத்து மிரட்டு முற்றிலும் சிவாச்சாரியார்களுக்கும் மடத்திற்கும் உள்ள தொடர்பை அறுக்கவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுபவர்களை அம்பல்பபடுத்தவேண்டும் என்பதே கட்டுரையின் மையம்.

எனவே சைவசமத்தார்களே, அடியார்களே, பக்தர்களே, கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். உண்மை நியாயம் எது என்பதை நீங்கள் உணருங்கள். கூறுங்கள்.

(2)

நமது சைவசமய அருளாளர்களாகிய நால்வர் பெருமக்கள் மற்றும் 63 நாயன்மார்களுக்கு அவர்கள் அவதரித்த தலங்களில் கோயில்கள் கட்டி மரபாக வழிபாடுகள் செய்யப்பட்டு வந்துள்ளன.பொதுவாக இவைகள் எளிமையான முறையில் நாயனாரை சித்திரமாகவோ சிறு உருவமாகவோ வைத்து வழிபட்டுவந்துள்ளார்கள்.

சீர்காழியில் குலோத்துங்கசோழ மன்னன் பெரியகோயிலில், தனிப்பிரகாரம் கொண்ட பெரிய கோயிலாகவே சம்பந்த பெருமானுக்கு ஆலயம் அமைத்துள்ளான். இவ்வகையில் நால்வர் அவதரித்த இல்லங்கள், திருமடமாக பூஜைகள் செய்துவழிபட்டுவந்தன.

சீர்காழியில் சம்பந்தபெருமான் அவதரித்த இல்லம் சம்பந்தர் மடமாகவும், திருவாமூரில் அப்பர் பெருமான் அவதரித்த இல்லம் நமது தருமை ஆதினம் முயற்ச்சியால் அப்பர் கோயிலாகவும், மாணிக்கவாசகருக்கு அவர் அவதரித்த திருவாதவூர் இல்லம் கற்கோயிலாகவும் காட்சி அளிக்கின்றன. அவ்வகையில், ஸ்ரீசுந்தரர் அவதாரம் செய்த திருநாவலூர் இல்லம் ஆதிகாலத்தில் பஜனை மடமாக இருந்துள்ளது. அங்கு சுந்தரர் படம் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்துள்ளது. கிராமத்திற்கே உரிய வகையில் மற்ற சாமி படங்களும் வைத்து வழிபட்டு வந்துள்ளனர். இந்த சுந்தரர் அவதார இல்லம், திருநாவலூர் பாடல் பெற்ற ஸ்தலமாகிய பக்தஜனேஸ்வரர் கோயிலுக்கு வடபாகத்தில், சிவாச்சாரியார்கள் இல்லத்திற்கு முன்பு இருந்து வருகின்றது.

பல்நெடுங்காலம் அத்தலத்து சிவாச்சாரியார்களே, தங்கள் சக்திக்கு உட்பட்டு பஜனை மடத்தில் இருந்த சுந்தரர் திருவுருவத்திற்க்கு வழிபாடுகள் செய்து வந்தள்ளனர். ஒரு விதத்தில் பஜனை மடம் வரலாற்று காலத்தில் முன்பு சடையனார் என்ற சிவாச்சாரியார் வாழ்ந்த இல்லமே. இவ்வாறு சுந்தரர் திருவுருவ படமாக வழிபட்டு வந்த நிலையில், நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கோயில்கள் சார்ந்த அறநிலையத்துறைச் சட்டம் 1951 ல் மாற்றி அமைக்கப்பட்டது. அந்நிலையில் பல கோயில்களின் நிர்வாகங்கள் சரிசெய்யப்பட்டு வந்தன.

இக்காலத்தில் கொங்குதேச ஆதிசைவதிருமடம் அப்பொழுது இருந்த ஸ்ரீ கூனம்பட்டிஆதினம் சுவாமிகள் பிரசங்கமணி கோவைசேக்கிழார் என்று அழைக்கப்பட்டவர்கள். பெரியபுராணத்தை தேனினும் இனிய அமுதமாக பிரசங்கம் செய்யக்கூடியவர்கள் .இவர்கள் திருநாவலூர் மீது தனிப்பற்றுக்கொண்டு ஸ்ரீ சுந்தரர் அவதரித்த இல்லத்தை திருமடமாக செப்பனிட ஆவல் கொண்டார்கள்.

அக்காலத்தில் திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயிலுக்கும், சுந்தரர் அவதார இல்லத்திற்க்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், அறநிலையத்துறை ஆதரவு தேவைப்பட்டது. அவ்வகையில் முதலில் பக்தஜனேஸ்வரர் கோயிலானது, ஊர்பொதுமக்கள் ஒத்துழைப்போடும், ஸ்ரீ கூனம்பட்டிஆதினம் சுவாமிகள் தலைமையில் திருப்பணிக்கமிட்டி அமைக்கப்பட்டு, திருவண்ணாமலை T.K. மணி குருக்கள் அவர்களை அறங்காவலராக இருந்த நிலையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, சுந்தரர் திருமுறை பதிகம் கல்வெட்டு 03-03-1965 அதாவது இன்றைக்கு சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் திறந்துவைக்கப்பட்டது.

இங்கு சற்றே சிந்திக்கவேண்டியது திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில் அறங்காவரும் ஒரு ஆதிசைவர். திருப்பணிக்கமிட்டிதலைவரும் ஒரு ஆதிசைவதிருமடத்தின் தலைவர். எதற்காக இதை இங்கு கூறுகின்றேன் என்றால் பல்லாண்டுகளாக திருநாவலூருக்கும், தமிழக சிவாச்சாரியார்களுக்கும் உள்ள தொடர்பை தெரிந்துக்கொள்ளவே. அதாவது திருநாவலூர் கோயிலுக்கு ஒரு குருக்கள் தர்மகர்த்தாவாக இருக்கும் அளவிற்க்கு அக்காலத்தில் நல்ல ஒரு உறவு இருந்துள்ளது .

திருநாவலூர் கிராமபொதுமக்களும் அன்று நன்கு சிவாச்சாரியார்களுக்கும், கூனம்பட்டி ஆதினம் சுவாமிகளுக்கும் ஒத்துழைப்பு தந்துள்ளனர். இந்நிலையில் கோயிலின் வடபுறம் உள்ள சுந்தரர் அவதார இல்லத்தை திருமடமாக அமைக்க தமிழக சிவாச்சாரியார்கள் முயற்சி மேற்கொண்டனர்.

தொடர்புடைய படங்கள் இங்கே:

https://facebook.com/story.php?story_fbid=851265248414316&id=359756944231818

(3)

அந்த பஜனை மடம் சிறியதாகவும் ஆக்ரமிப்புக்கு உள்ளாகும் நிலையிலும் இருந்து. எனவே இடத்தை சரிசெய்து, 1965 ஆம் ஆண்டு, கூனம்பட்டி ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள் தலைமையில் திருப்பணிக்குழு உருவாக்கப்பட்டு, திருவண்ணாமலை T.k.மணிகுருக்கள், புதுவை மணக்குளவிநாயகர் கோயில் உ.நா.மணிகுருக்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல ஆதிசைவர்கள் ஒன்று சேர்ந்து திருமடம் அமைக்க கிராம பெரியோர்கள் ஒத்துழைப்போடு முயன்றனர். அப்பொழுது அறநிலையத்துறை ஆணையாரக இருந்த திரு. உத்தண்டராம பிள்ளை அவர்கள் இதற்கு தூண்டுகோலாக இருந்தார்.

1965 காலகட்டத்தில் போக்குவரத்துகள் அவ்வளவாக இல்லாத சூழலில், குருக்கள் எல்லோருமே மிகக் கொடுமையான வறுமைக்குரிய நிலையில் வாழ்ந்த காலகட்டத்தில், அதாவது வெற்றிலைபாக்கில் ரூ 2 வைத்தாலே அதிசயப்படும் காலத்தில், இவ்வாறு சிவாச்சாரியார்கள் மடம் அமைக்க முயற்சித்தது உண்மையில் இறையருளே.

ஆண்டி ஒன்று கூடி மடம் அமைத்த கதை என்று ஒரு பழமொழியை கிண்டலாகக் கூறுவார்கள். ஆனால் அக்கால சிவாச்சாரியார்கள் தங்கள் வறுமையையும் பொருட்படுத்தாது ஒரு ரூபாய் இரு ரூபாய் என சேகரித்தும், போக்குவரத்து இல்லாததால் பல பொருட்களை கெடிலம் கூட்ரோடில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தலையில் சுமந்தும் பல பொருட்களை சேகரித்து திருமடம் திருப்பணிகளை தொடங்கினார்கள். அக்காலத்தில் குருக்கள் நித்யபடி வாழ்க்கையே கஷ்டமானது. அந்த கஷ்டத்திற்க்கும் நடுவில், ஊருக்கு ஒரு குடியாக உள்ள குருக்கள் எல்லாம் சேர்ந்து திருப்பணி செய்வது அசாத்யமானது. ஆனால் ஸ்ரீ சுந்தரர் பெருமான் மீது கொண்ட பக்தியும் அன்பும், சுவாமி திருவருள் துணை ஒன்றையே நம்பி திருப்பணி செய்தார்கள்.

1965 ல் ஆரம்பித்த திருப்பணி கிட்டதட்ட 10 வருடங்களாக நடைபெற்று, 1975 ல் பூர்த்திபெற்றது. இவ்வளவு காலதாமதம் ஆக காரணம், அக்கால குருக்களின் வறுமை நிலையே. இருப்பினும் தங்கள் வறுமை நிலையிலும் பல கஷ்டங்களுக்கும், சிரமங்களுக்கும் நடுவில் சுந்தரர் மீது கொண்ட பக்தி ஒன்றன் காரணமாக திருப்பணியை பூர்த்தி செய்து, ஆனந்த வருஷம் பங்குனிமாதம் 17 ம் தேதி, (31-03-1975) அன்று ஸ்ரீ சுந்தரர் மடாலயம் கும்பாபிஷேகம் திருவருள் குருவருள் துணையோடு செய்தார்கள். இக்காலகட்டத்தில் அன்று இருந்த திருநாவலூர் மக்களின் ஆதரவு அளப்பரியது. எனவே, சிவாச்சாரியார்களே திருப்பணிசெய்த போதிலும், கிராம மக்களின் ஒத்துழைப்பை மதிக்கும் வண்ணம், கும்பாபிஷேகம் பத்திரிக்கையிலும், கல்வெட்டுகளிலும் கிராம முக்கிய பிரமுகர்களின் பெயர்களை பதிந்து மரியாதை செய்தார்கள். (பார்க்க படம் 1,2)

கும்பாபிஷேகம் பத்திரிக்கையில் இப்படிக்கு என்ற இடத்தில் கூனம்பட்டிஆதினம் சுவாமிகள் பெயரும் மற்றும் அகில இந்திய ஆதிசைவர்கள் என்று அச்சிடப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.

இவ்வாறு ஸ்ரீ சுந்தர் மடாலய கும்பாபிஷேக திருப்பணியில் பங்குபெற்ற தமிழக சிவாச்சாரியார்கள் பெயர்கள் கல்வெட்டில் உள்ளவாறு,

தலைவர் -கூனம்பட்டி ஆதினம்.
1)T.k.மணிகுருக்கள் -திருவண்ணாமலை.
2)A.உமாபதிகுருக்கள் -திருவண்ணாமலை.
3)A.நடேச குருக்கள் -நார்த்தாம்பூண்டி
4)அ.சுப்பிரமணியகுருக்கள் -புளிச்சப்பள்ளம்.
5)அகதீஸ்வரகுருக்கள் -திருப்பாச்சனூர்.
6)மாணிக்க குருக்கள் -T.இடையார்.
7)ம.கா.சுந்தரேச பட்டர் -மதுரை
8)சுவாமிதாத சிவாச்சாரியார் -தருமபுரம்
9)விஸ்வநாத சிவாச்சாரியார்- அல்லூர்
10)விஸ்வநாத குருக்கள் -சேலம்
11)இஷ்டசித்தி ஏகாம்பர குருக்கள் -காஞ்சிபுரம்.
12)உ.நா.மணி குருக்கள் -பாண்டிச்சேரி.
13)நா.குமாரசாமி குருக்கள் -மயிலாப்பூர்
14)பாபு குருக்கள் -திருவான்மியூர்
15)V.சுந்தர குருக்கள் -வடபழனி
16)S.r.சுவாமிநாத குருக்கள் -சுவாமிமலை.
17)S.விஸ்வநாத குருக்கள் -ராம்பாக்கம்
18)சுவாமிநாத குருக்கள் -திருப்புறம்பயம்.
19)K.A.சபாரத்ன குருக்கள் -கோயம்பேடு.
20)S.சாம்பசிவகுருக்கள் -விருத்தாஜலம்.
21)D.சுந்தரேச குருக்கள் -திருவண்ணாமலை.
22)தா.மந்திரமூர்த்தி குருக்கள் -அன்னியூர்.
23)V.K.ஈஸ்வர குருக்கள்.-வேலூர்
24)தியாகராஜ குருக்கள்.-சித்தலிங்க மடம்.
25)சிதம்பர குருக்கள் -சேந்தமங்கலம்.
26)கா.சுவாமிநாத சிவாச்சாரியார்-திருவாவடுதுறை.
27)அய்யாமணி சிவாச்சாரியார்-திருவாடானை.
28)பட்டம் ராமலிங்கசிவாச்சாரியார் -திருவண்ணாமலை.
29)தியாகராஜ குருக்கள் -திருக்கழுக்குன்றம்.
30)A.கணேச குருக்கள் -தஞ்சை
31)சாம்பமூர்த்தி சிவாச்சாரியார-சென்னை.
32)N.அய்யாசாமி குருக்கள் -குந்தம்பாக்கம்.
33)C.சாமிநாத குருக்கள் -சென்னை.
34)V.பாலசுப்பிரமணிய குருக்கள் -மைலம்.
35)T.சுவாமிநாத குருக்கள் -அன்னியூர்.
36)உ.ஷண்முக சுந்தர பட்டர் -மதுரை.
37)பரசுராம குருக்கள் காளஹஸ்தி.
38)N. ஹாலாயஸ்யம் குருக்கள் -சென்னை.

என தமிழகத்தின் பல சிவாச்சாரியார்கள் ஒன்று சேர்ந்து சுந்தரர் திருமடம் அமைத்தார்கள்.

இவர்கள் அன்று அவ்விடத்தில் திருமடம் அமைக்கவில்லை என்றால், காலப்போக்கில் பல கோயில் இடங்கள் மாயமானது போன்று, ஸ்ரீ சுந்தரர் அவதார பூமியும் மயமாகி மறைந்தே இருக்கும். ஆனால், இன்றோ சுந்தரர் பூமியை அடையாளப்படுத்திய சிவாச்சாரியார்களை அவ்விடத்திற்கு வரவிடாமல் குண்டர்களை வைத்து மிரட்டும் சைவவேடதாரிகளை திருமுறை வியாபாரிகளை என்னவென்று சொல்வது.? மேலும் கீழ்கண்ட படத்தில் காணும் கல்வெட்டு பழையமடம் இடிக்கும் பொழுது பாதுகாப்பாக எடுத்துவைக்கப்பட்டதா? அல்லது அழித்துவிட்டார்களா? இப்பொழுது திருப்பணி நடைபெறும் இடத்தில் சிவாச்சாரியார்கள் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்த இந்த விபரங்களை அளிக்கும் இந்த பழைய கல்வெட்டு மீண்டும் பதிக்கப்படுமா? என்பது அந்த சுந்தரருக்கே வெளிச்சம்.

இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிப்பான் என்ற பழமொழிபோல, சிவாச்சாரியார்கள் உரிமையில் இருந்த சுந்தரர் மடத்தை, அவர்களை மிரட்டி வெளியேற்றி சுயநல லாபத்திற்ககாக, அடையாள அரசியலுக்காக திருப்பணி செய்யும் ருத்திராட்ச வேடதாரிகளை அந்த இறைவன் மன்னிக்கவே மாட்டார். மேலும் இப்பொழுது நடைபெற்றுள்ள திருப்பணி பல உண்மையான சிவாச்சாரியார்களின் மனவேதனையில், மன துக்கத்தில் எழும்பும் ஒரு ஆகம விதியற்ற மாயக் கட்டிடம். ஒரு மரபிடம் இருந்து பிடுங்கி அவர்களை மிரட்டி வெளியேற்றி செய்யும் இந்த திருப்பணி கண்டிப்பாக இறை திருப்பணி அல்ல. இத்தகைய திருப்பணிக்கு உதவுவோருக்கு, தட்சன் செய்த யாகம் போன்று புண்ணியத்திற்க்கு பதில் பாபமே மிகும். தண்டனையும் கிட்டும்.

தொடர்புடைய படங்கள் இங்கே:

https://facebook.com/story.php?story_fbid=1991116057868622&id=100009107423631

(4)

தமிழக சிவாச்சாரியார்கள் ஸ்ரீலஸ்ரீ கூனம்பட்டி ஆதினம் தலைமையில் சுந்தரர் மடாலய மஹாகும்பாபிஷேகத்தை 1975 ல் நடத்தியபின்னர், உள்ளூர் குருக்கள் அவர்களிடம் திருமடம் நிர்வாகத்தை ஒப்படைத்து, வருடம் தோறும் முக்கிய விழா நாட்களில் சுந்தரர் மடாலயத்தில் ஒன்று சேர்ந்து விழா செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி உள்ளூர் குருக்கள் மடத்தை நிர்வாகித்து, நித்ய பூஜை செய்து வருவது என்று தீர்மானிக்கப்பட்டது. திருநாவலூர் பெரியகோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் கோயில் குருக்கள், சுந்தரர் கோயிலின் நித்ய பூஜைகள் செய்து வந்தார் . தமிழகத்தில் இருந்து பல சிவாச்சாரியார்களும், மாதந்தோறும் தங்கள் குடும்பத்தோடு வந்து மடத்தில் வழிபாடு செய்தனர். முக்கியமாக கொங்கு தேசத்து ஆதிசைவர்கள் சுந்தரர் திருமடத்தில் அதிக பற்றும் பக்தியும் கொண்டு விளங்கினார்கள்.

இந்நிலையில், திருநாவலூர் ஸ்ரீ சுந்தரர் அவதாரத் தலம் என்பதால், சுந்தரர் அவதாரதினமாகிய ஆவணிஉத்திரமும், குருபூஜை விழாவாகிய ஆடிசுவாதியும் வருடம்தோறும் தமிழக சிவாச்சாரியார்கள் சார்பாக செய்வது என்று கூனம்பட்டிசுவாமிகள் தலைமையில் முடிவெடுக்கப்பட்டது. இதில் ஆடிசுவாதி குருபூஜை ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் கோயிலில் அக்காலத்தில், அதாவது 1975 வாக்கில் சிறப்பாக நடத்தப்பட்டுவந்ததால், கோயிலோடு இனைந்து மடத்திலும் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. அதாவது கோயிலில் புறப்படும் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளை, சுந்தரர் மடத்தில் அழைத்து, சிவாச்சாரியார்கள் சார்பாக மண்டகப்படி பூஜை, உபசாரம், மரியாதை செய்வது என்றபடி செய்யப்பட்டது.

திருநாவலூர் ஸ்ரீ சுந்தரர் அவாதரத்தலம் என்பதால், சுந்தரர் அவதாரதினமாகிய ஆவணிமாதம் உத்திரம் நட்சத்திரம் அன்று ஜனனோத்ஸவம் சிவாச்சார்யார்கள் சார்பாக செய்யப்பட்டது. இந்த அவதாரவிழா பெரியகோயிலில் உள்ள ஸ்ரீ சுந்தரர் மற்றும், மடத்தில் உள்ள ஸ்ரீ சுந்தரர் என இரு இடங்களிலுமே செய்யப்பட்டது.

ஸ்ரீ சுந்தரர் மடாலய கும்பாபிஷேகம் ஆண்டுமுதல், அதாவது 1975 ல் இருந்து 2006 வரை சுமார் 60 ஆண்டுகள், தமிழக சிவாச்சாரியார்கள் ஒன்றுசேர்ந்து சீரும் சிறப்புமாக செய்துவந்தார்கள். (பார்க்க -படம் 1,2,3,4)

2006 க்கு பின் மடம் திருப்பணி சார்ந்த சில முயற்ச்சிகள் மேற்கொண்டதால், அவதாரவிழா மற்றும் குருபூஜை எளிமையாகக் கொண்டாடப்பட்டுவந்தது. இவ்வாறு திருநாவலூர் ஸ்ரீ சுந்தரர் மடாலயத்தோடு, கும்பாபிஷேகம் முன் ஐம்பதுஆண்டுகள், கும்பாபிஷேகம்பின் சுமார் ஐம்பது ஆண்டுகள் என ஒரு நூற்றாண்டுகள் தொடர்பும் கொண்ட சிவாச்சாரியார்களை, மேலும், சுந்தரர் அவதரித்தது முதல் 1500 ஆண்டுகள் வரலாற்று ரீதியான தொடர்பும் கொண்ட சிவாச்சாரியார்களை, முற்றிலும் வெளியே மிரட்டி தள்ளுவதற்கு முயற்சித்து, மேற்படி மடத்தை அபகரிக்கவும், சொந்தமாக்கவும் முயற்ச்சிக்கும் துர்செயல் சைவவேடம் கொண்டவர்களுக்கு தகுமோ? இப்படியான துர்மனம் கொண்டிருப்பது சைவ அடியாருக்கான இலக்கணம் ஆகுமோ? ஆவணம் ரீதியாக 100 ஆண்டுகள் தொடர்பும், பந்தமும் கொண்ட தமிழக சிவாச்சாரியார்களை, ஒதுக்கும் செயலை ஆதினங்களும், சைவவுலகமும் பார்ப்பதுதான் அழகோ?

மெய்யடியார்களே, அடியேன் இந்த தொடரை ஆவணங்களோடு, உரிய ஆதாரத்தோடே எழுதி வருகிறேன். கற்பனையோ, கட்டுக்கதையோ இல்லை. எனது ஒவ்வொரு எழுத்திற்கும் ஆதாரங்களை படமாக பதிவிட்டுவருகிறேன்.

இதை படியுங்கள். சிந்தியுங்கள் .உண்மையை சீர்தூக்கி பாருங்கள்.

வரலாற்று ரீதியாகவும், ஆவணங்கள் ரீதியாகவும் பந்தம் தொடர்பு கொண்ட சிவாச்சாரியார்களை ஒதுக்கி,மிரட்டி ஆணவத்தில் திருப்பணி செய்யும் சைவவேடதாரிகளின் இச்செயல் சைவசமயத்திற்க்கு தகுமோ? சிந்தியுங்கள்.

தொடர்புடைய படங்கள் இங்கே:

https://facebook.com/story.php?story_fbid=1992075371106024&id=100009107423631

(5)

தமிழக ஆதிசைர்களாகிய சிவாச்சாரியார்கள் ஒன்று சேர்ந்து எழுப்பிய திருநாவலூர் சுந்தரர் மடத்தில் விசேஷ பூஜைகள், குருபூஜைகள் குறைவின்றி கும்பாபிஷேகத்திற்கு பின் நடந்துவந்தன. இந்நிலையில், ஸ்ரீ சுந்தரர் மடத்திற்க்கு என்று தனி வருமானம் கிடையாது. தனிப்பட்ட நிலங்களால், பூமியால் வருமானமும் கிடையாது.அறநிலையத்துறையும் பொருளாதார ரீதியாக ஆதரவு கிடையாது என்ற நிலை இருந்தது. இந்நிலையில் பல ஊர்களில் இருந்து ஆண்டுக்கொருமுறை சிவாச்சாரியார்கள் வந்து ஆடிசுவாதி குருபூஜை, மற்றும் ஆவணி உத்திரம் அவதார விழா செய்துவந்தபோதிலும், திருமடத்தில் எழுந்தருளியுள்ள சுந்தரர் பெருமானுக்கு நித்யபூஜை எவ்வித குறைவின்றி நடைபெறவேண்டுமே என்ற எண்ணம் ஆதிசைவர்களிடம் ஏற்பட்டது.

அந்நிலையில் மிகச்சிறந்த ஆகமவித்வானும், வயதில் பெரியவருமாகிய திருக்கோலக்கா சிவஸ்ரீ இராமநாதசிவாச்சாரியார் அவர்களிடம் நித்யபூஜை பற்றிய கருத்து சென்றது. சிவஸ்ரீ.திருக்கோலக்கா சிவாச்சாரியார் திருநாவலூர் மீதும், சுந்தரர் மீதும் அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டவர்கள். 1975 ல் நடைபெற்ற சுந்தரர் மடாலய கும்பாபிஷேகத்தில் பிரதான ஆச்சார்யமாக இருந்து கும்பாபிஷேகம் செய்தவர்கள். எப்பொழுதும் எண்ணம் செயலகளால், சுந்தரர் சுவாமியின் திருவருளிலேயே திளைத்திருப்பவர். (அடியேன் உபதேசக் குரு இவர்களே).இன்று மிகவும் வயது முதிர்ந்த நிலையில் ஸ்ரீ சுந்தரர் மடம் அடாவடிகளை நினைத்து கவலையும் வருத்தமும் கொண்டவராக உள்ளார்கள். இவ்வாறு திருநாவலூர் சுந்தரர் மடம் சார்ந்த நித்யபூஜா கோரிக்கை இவர்களிடம் சென்றபொழுது, இயற்க்கையாகவே சுந்தரர் மீது கொண்ட பக்தியின் காரணமாகவும், சுந்தரர் கும்பாபிஷேகத்தில் பிரதான ஆச்சார்யமாக இருந்த குருபக்தியின் காரணமாகவும், நித்யபூஜை சார்ந்த செலவுகளை நாமே ஏற்றுக்கொள்கிறோம் என்று உறுதியளித்து, அதன்படி, 1980 ல் திருநாவலூர் ஸ்ரீசுந்தமூர்த்திசுவாமிகள் நித்யபூஜா டிரஸ்ட் என்று ஆரம்பித்து, 1980 முதல் கிட்டத்தட்ட சுமார் 2011 வரை சுந்தரர் மடத்தில் நித்யபூஜைகள் குறைவின்றி செய்வதற்க்காக நிதி உதவிதனை தம் டிரஸ்ட் மூலம், சுந்தரர் மடத்தின் பூஜகராகிய சம்பந்த குருக்களிடம் தந்து வந்துள்ளார்கள்.(பார்க்க, படம் 1,2,3,4.)

கிட்டதட்ட 35 ஆண்டுகள் நித்யபூஜைக்கு உதவி செய்துள்ளார்கள் திருக்கோலக்கா சிவாச்சாரியார்.இங்கு ஆதாரத்திற்க்கு சில படங்களை மட்டுமே பதிவு செய்துள்ளேன்.

1970, 1980 காலகட்டத்தில் ஒரு ரூபாய் என்பது குருக்களை பொருத்தவரை பெரியவிசயம். எங்கள் கோயிலில் 1986, 87 வாக்கில் நவக்கிரக சன்னதியில் ஒன்பது கிரஹத்திடமும் ஐந்து பைசா வைத்துவிட்டு செல்வார்கள். 9×5=45 பைசாவை வைத்து என் தந்தை வீட்டுக்கு தேவையான காய்கறி வாங்குவார்கள். சிவராத்திரி கட்டளைக்கு தட்சணை ரூ 2 அன்றைய தேதியில். இதை எதற்க்காக கூறுகிறேன் என்றால், அக்காலத்தில் ஐந்துபைசா, இருபதுபைசா, ஒரு ரூபாய்க்கு அவ்வளவு மரியாதை. இதை இக்கால இளைய தலைமுறை தெரிந்துகொள்ளவே இவ்விசயத்தை எடுத்துக்கூறினோம்.

இப்படியான சூழலில் திருக்கோலக்கா, ராமநாதசிவாச்சாரியார் சுந்தரர் பெயரில் ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து, தன் பணத்தை ரூ10000 முன் பணமாக செலுத்தி, மேலும் சில ஆதிசைவர்களிடமும் பணம் பெற்று அதை டிரஸ்டில் செலுத்தி, அதன்மூலம் வந்த வருவாய் மூலம், ஸ்ரீ சுந்தரர் மடம் நித்ய பூஜைக்கு அளித்துள்ளார்கள்.

படத்தில் 1987 ஆம் ஆண்டு நவம்பர்மாதம், நித்ய பூஜைக்காக ரூ 250 அளித்துள்ளார்கள்.அக்காலத்தில் 250 என்பது எவ்வளவு பெரிய பணம் என்பதை அன்றைய பெரியவர்களிடம் கேட்டால் கூறுவார்கள். இவ்வாறு ரத்தமும், சதையுமாக உழைத்து பல சிவாச்சாரியார்கள் அன்றைய கஷ்டமான காலங்களில் போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் நடைபயணம் கொண்டே நடந்து சென்று, சுந்தரர் மடம் பூஜைகள் குறைவின்றி நடக்க உதவியுள்ளார்கள். இவ்வாறெல்லாம் கடந்த நூறு ஆண்டுகளாக ஸ்ரீ சுந்தரர் மடத்தை போற்றி, பாதுகாத்து கட்டி காப்பாற்றி வந்த சிவாச்சாரியார்களை குண்டர்களை கொண்டு மிரட்டி, சுந்தரர் அவதார இடம் என்றால் கோடி கோடியாக வசூலாகும் என்ற காரணத்திற்காகவும், சுந்தரர் மடம் என்ற அடையாள அரசியலுக்காவும், இந்த சைவ வேடதாரிகள் எளியவர் இடத்தில் புகுந்து அடாவடி செய்யும் அரசியல்வாதிகளைப் போல், இனசிறுபான்மையினராகிய சிவாச்சாரியார்களை மிரட்டியும், மறைமுக வஞ்சகங்களை செய்து, சிவாச்சாரியார்கள் உரிமையில் இருந்த சுந்தரர் மடத்தை திருப்பணி என்ற பெயரில் முத்தநாதன் போல் வஞ்சகம் செய்ய நினைப்பது சரியோ? தகுமோ?

உண்மை என உங்கள் மனம் கூறினால் சைவசமயத்தில் இப்படியான ஒரு கொடுரம் நடைபெறுவதை அவசியம் கண்டியங்கள். குற்றங்களை தகுந்த காலத்திலேயே கண்டித்து முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவேண்டும். இல்லையேல் வேடதாரிகள் விஷமாக பரவி சைவசமயத்தையே சீர்குலைத்துவிடுவார்கள்.

தொடர்புடைய படங்கள் இங்கே:

https://facebook.com/story.php?story_fbid=1993025167677711&id=100009107423631

(6)

1990 ஆம் ஆண்டு சிவாச்சாரியார்களுக்கு ஒரு சோதனை ஏற்ப்பட்டது. அது என்னவெனில் சுந்தரர் மடம் நிர்மாணம் செய்த இடத்தில், தங்கள் நிலம் சேர்ந்துள்ளது என்று திருநாவலூர் கிராமத்தை சேர்ந்த ஒருவர் ஆட்சேபம் செய்துள்ளார். ஸ்ரீ சுந்தரர் மடம் அமைந்துள்ள இடம் சுமார் 18 சென்ட் அளவுடையது. இதில் சுமார் 8 சென்ட் தங்கள் பாகத்தில் உள்ளது என்று அந்த கிராம நபர் ஆட்சேபம் தெரிவிக்க சிவாச்சாரியார்கள் கலக்கமுற்றனர். காரணம் ஆக்காலத்தில் சிவாச்சாரியார்கள் மிகவும் சிரமப்பட்டே, தங்களுக்கு பூரணமான வருமானம் இல்லாத நிலையில், ஸ்ரீ சுந்தரர் மீது கொண்ட அன்பின் காரணமாக மடத்தை எவ்வித பூஜைகள் குறைவின்றியும் ஒன்று சேர்ந்து நடத்திவந்தார்கள். இந்நிலையில், ஸ்ரீ சுந்தரர் மடமாக எழுப்பியுள்ள பூமியில் ஆட்சேபம் எழுந்துள்ளது என்றபொழுது இதை எவ்வாறு தீர்ப்பது என்ற கையறுநிலையில் தவித்தனர்.

இந்நிலையில் ஊர்பெரியவர்கள் முன்னிலையில், ஆட்சேபம் தெரித்தவரிடம் சிவாச்சாரியார்கள் சமாதானம் பேசினார்கள். பேச்சுவார்த்தை முடிவில் ஆட்சேபம் தெரிவித்தவர் நிலம் எந்தளவுக்கு உள்ளதோ, அதற்க்கு சமமான தொகை அவரிடம் கொடுப்பது என்று முடிவானது. தேங்காய் மூடியில் ஐந்தும், இரண்டும் தட்சணை பெறும் சிவாச்சாரியார்கள், எவ்வாறு பணம் கொடுத்து நிலத்தை மீட்பது என்று கலங்கிய நிலையில், ஸ்ரீ சுந்தரர் பெருமான் திருவருளால், கோவை செட்டிப்பாளையம் வேலுச்சாமிகுருக்கள் உதவ முன்வந்தார். பொதுவாகவே திருநாவலூர் சுந்தரர் மடத்தின் மீது கொங்கு தேச ஆதிசைவர்களுக்கு அளவற்ற பக்தி உண்டு. அவர்களில் இவர் சிவஸ்ரீ வேலுச்சாமி குருக்கள் சுந்தரர் என்றால் உருகிவிடுவார்கள். அப்படிப்பட்டவர் சுந்தரர் மடம் பூமியில் பிரச்சனை என்ற உடன், பெரும்பான்மை தம் பணத்தோடு கொங்கு ஆதிசைவர்கள் சிலரிடமும் வசூல் செய்து ரூ 7000 ஆட்சேபம் செய்த நபரிடம் தரப்பட்டது.

ஆட்சேபம் தெரிவித்தவரும் சிவாச்சாரியார்கள் படும் துன்பத்தைக், கஷ்டத்தைக் கண்டு பெரிய அளவிற்கு பேரம் பேசாமல், தன்மையோடு சிவாச்சாரியார்கள் சேர்த்து தந்த பணத்தை பெற்றுக்கொண்டு, 24/04/1992 ஆண்டு, கொண்டாடும் பாகபாத்திய விடுதலை ஆவணம் எழுதி பத்திரப்பதிவு திருநாவலூர் சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் பதிவு செய்யப்பட்டது.

பத்திரத்தின்படி, கோவை செட்டிப்பாளையம் சந்திரசேகர குருக்கள் குமாரர் வேலுச்சாமி குருக்கள் அவர்கள் தந்த ரூ 7000 தொகை பெற்றுக்கொண்டு இந்த பத்திரம் எழுதிக்கொடுக்கின்றோம்.இன்று முதல் இந்த நிலத்திற்க்கும் எங்களுக்கும் உரிமை இல்லை. இந்நிலம் ஸ்ரீ சுந்தரர் மடத்திற்க்கு உரிமையானது என்றபடிக்கு அவர்கள் குடும்ப வாரிசுதாரர்கள் அனைவரும் கையெழுத்திட்டு பத்திரம் பதிவு செய்யப்பட்டது.(பார்க்க படம் 1,2,3,4)

திருநாவலூர் உளுந்தூர்பேட்டை தாசில்தார் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால், 15/03/2013 அன்று உளுந்தூர்பேட்டை தாசில்தார் அவர்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் அடியேன் சுந்தரர்மடம் நிலம் சார்ந்த தகவல்கள் கேட்டபொழுது, சுந்தர் மடம் கூட்டுப்பட்டாவில் உள்ளது என்றும், சுந்தரர் பெயரிலேயே 4.50 ஏர்ஸ் அதாவது சுமார் 11சென்ட் நிலமும், கோவை வேலுச்சாமிகுருக்கள் பெயரில் 3,50 ஏர்ஸ் நிலம் அதாவது சுமார் 8 சென்ட் நிலமும் உள்ளதை அரசு வருவாய் பதிவேடுகளின்படி தாசில்தார் பதிலாக தந்துள்ளார்கள். (பார்க்க படம் -5)

அதாவது சுந்தரர் மடத்தில் கிட்டத்தட்ட பாதி நிலம் வேலுச்சாமிக்குருக்கள் என்ற ஆதிசைவர் பெற்றுத்தந்த நிலம். இது 2013 ஆம் ஆண்டு நிலவரம். இன்றைய நிலை என்னவோ. இவ்வாறு வேலுச்சாமி குருக்கள் என்ற ஆதிசைவர் அக்காலத்தில் பல கஷ்டத்திலும், நெருக்கடியிலும் பெற்று தந்த நிலம்.

பத்திரத்தின் நகல் மற்றும் தொடர்புடைய படங்கள் இங்கே:

https://www.facebook.com/permalink.php?story_fbid=1994048910908670&id=100009107423631

(தொடரும்)

அடுத்த பகுதி >>

One Reply to “திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1”

  1. இன்றைய தமிழ்நாட்டு நிலவரத்தில் இந்த விஷயம் நீதி மன்றத்திற்குப் போனாலும் சாதகமான தீர்ப்பு வரும் எனச் சொல்ல முடியாது. மேல் முறையீடு என்று போனாலும் இறுதித் தீர்ப்பு வர எத்தனை ஆண்டுகள் ஆகும், எவ்வளவு பணம் செலவாகும் எனச் சொல்லவியலாது. சிதம்பரம் கோவில் விஷயத்தில் தமிழக அரசே அடாவடி செய்தது, உயர்நீதி மன்றமே அத்துமீறியது. உச்ச நீதி மன்றத்தில் தான் உய்வு பிறந்தது.ஸ்ரீ சுந்தரர் மடாலய விஷயத்திலும் சிவாசாரியார்கள் இப்படிப் பொருள் செலவும் கால விரயமும் செய்யப்போகிறார்களா?

    கற்றறிந்த இவர்களுக்கு நாம் சொல்லவேண்டியது எதுவுமில்லை. “குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே”. இவர்கள் சுந்தரர் நினைவாக வேறு ஒரு தகுந்த இடத்தில் மடம் நிறுவி தங்கள் மரபுப்படி பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து நடத்துவதுதான் சிறந்தது. கோர்ட்டு,கச்சேரி என்று முழு நேரமும் அலைந்து அலைந்து வீண் சிரமப்படவேண்டாம். துஷ்டரைக் கண்டால் துர விலகத்தானே வேண்டும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *