குழவி மருங்கினும் கிழவதாகும் – 7

அன்னை தெய்வம் மீதான பிள்ளைத்தமிழ் நூல்களை இயற்றிய அடியார் பலரும் சக்தி உபாசகர்களாகவும் இருந்துள்ளனர். தஞ்சை சரசுவதிமகால் நூல்நிலையத்தினர் சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ் எனவொரு நூலை வெளியிட்டுள்ளனர். இயற்றியவர் பெயர் தெரியவில்லை. இவர் ஐயத்திற்கிடமின்றி சக்தி உபாசகர். ஏனெனில், வாரானைப் பருவத்துப் பாடலொன்றில் ஸ்ரீசக்கரத்தில் உறையும் அம்பிகையான அவளைப் போற்றுகிறார். அம்பிகையின் ஸ்ரீசக்கர வருணனை விரிவாகத் தரப்பட்டுள்ளது.

‘முச்சதுர மூவட்டம் ஈரெட்டும் ஓரெட்டு

                   முளரியிதழ் சூழ்ந்ததற்குள்

              முகனையிற் பதினான்கு பத்துடன் பத்தெட்டு

                   முக்கோண நடுவிந்துவாய்…..’ என ஸ்ரீசக்கரத்தின் அமைப்பை விவரித்து,

  ‘சச்சபுட முதலான தாளங்கள் தாள்பொரச்

                   சதகோடி திருமாதரார்

               சந்ததம் நடம்புரியும் நாற்பத்து முக்கோண

                   சக்கர நாயகி வருகவே’ எனப்போற்றுகிறது.

இவையனைத்தும் சக்தி உபாசகர்களின் துதிகள்தாமே? இது கிடக்க, வேறொரு இனியகாட்சியைக் காணச் செல்லலாமா?

பிடிவாதம்செய்யும் ஒரு சிறு பெண்குழந்தை. அதனிடம் பொய்யாகச் சினம்கொண்டு பேசும் தாய்!

“வா கண்ணே! முகம்கழுவி, உன்னைச் சிங்காரிக்கிறேன்,” என ஆசையாகத் தாய் அழைக்கிறாள்.  குழந்தைக்கோ விளையாட்டு மும்முரம். சிறு செப்புகளில் மண்சோறு சமைக்கிறாள். இலைகளைப் பறித்துப் பொரியல்செய்கிறாள். “அம்மா வா, நான் சமைத்த சோற்றைச்சாப்பிடு,” என்று மழலையில் அன்னைக்கும் கொஞ்சம் தருகிறாள்.

கையில் பட்டுப்பாவாடை, கழுத்திற்கான அணிகலன்கள், மை, திலகம் முதலானவற்றை ஏந்தியபடி தாயின் அருகில் பணிப்பெண் நிற்கிறாள். குழந்தையின் புழுதிபடிந்த உடைகளையும் கைகால்களையும் கண்ட தாய் சலித்துக்கொள்கிறாள்.

“நான் அழைக்கஅழைக்க நீ வராமலே இருந்தால், நான் இங்கிருந்து போய்விடுவேன். உனக்கு முகம், கைகால் கழுவி, உனது அழகான வேல்போலும் விழிகளுக்கு மைதீட்டமாட்டேன். பிறைமதிபோன்ற நெற்றியில் அழகிய திலகத்தையும் எழுதமாட்டேன். அழகான மணிகளால் செய்யப்பட்ட இந்த ஆபரணத்தை உனக்கு அணிவிக்கமாட்டேன்.”

குழந்தைக்கு அலங்காரம் செய்துகொள்ள ஆசை; பெண்குழந்தையல்லவா? அலங்காரப்பிரியை அவள்! தனது விளையாட்டை விட்டுவிட்டுவர மனமில்லாமல் தாயை ஏக்கத்தோடு பார்க்கிறாள். இதுதான் வாய்ப்பெனத் தாய் தனது அச்சுறுத்தல்களைத் தொடர்கிறாள்.

“உன்னிடம் அன்பாகப் பேசவும் மாட்டேன் குழந்தாய்! புழுதிபடிந்த உன் முகத்தையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டேன் போ! அலங்காரம் செய்தபின் எனது முலைப்பாலையும் ஊட்டமாட்டேன். ஆசையாக எனது இடுப்பில் உன்னைத் தூக்கிவைத்துக்கொண்டு தேரோடும் வீதியில் சென்று நித்தமும் வேடிக்கை காட்டுவேனல்லவா? அதையும் செய்யமாட்டேனடி பெண்ணே!”

குழந்தைக்குத் தாளவில்லை! இவையனைத்தும் அன்னையிடம் அவளுக்குண்டான தினசரி சலுகைகள். எப்படி அவற்றை இழக்கமுடியும்? குழப்பத்துடன் அன்னையைப் பார்க்கிறாள்.

அன்னையோ விடுவதாயில்லை! விரலால் எச்சரித்தபடி, “உனது சிவந்த கனிவாயில் முத்தமிட்டு உன்னைக் கொஞ்சமாட்டேனடி பார்த்துக்கொள்! அழகான மணிகள் குலுங்கும் தொட்டிலில் படுக்கவைத்து, உன்னை உறங்கவைக்கப் பாராட்டிச் சீராட்டித் தாலாட்டும் பாடமாட்டேன் தெரியுமா?” என்கிறாள்.

இதற்குமேல் குழந்தைக்குத் தாங்கவில்லை. தனது சிறுசோற்றுச் செப்புக்களை வீசியெறிந்து விட்டு உதடுகள்நெளிய அழுகைபொங்கிவர ஓடோடிவந்து தாயின் சேலையில் முகம் புதைத்துக்கொண்டு அவளை அணைத்துக்கொள்கிறாள்.

தாயும் தனது பொய்க்கோபத்தினை விட்டொழித்து, குழந்தையை இறுக அணைத்துக்கொள்கிறாள். பார்க்கும் நம் முகங்களில் புன்னகை அரும்புகிறது இல்லையா?

இவள் இமவானின் அகன்றமார்பில் (விசாலமான இமயமலையில்) தவழும் குழந்தையல்லவோ? இவளையா கோபிப்பது?

‘வருக வருக என் குழந்தையே! சாலிப்பதி எனப்படும் நெல்லையில்  வாழ்கின்ற காந்திமதித்தாயே, விரைந்து வருகவே!’ என நாமும் பாடியவாறே குழந்தையை எண்ணத்தில் அணைத்துக் கொள்கிறோம்.

வாரா திருந்தா லினிநானுன் வடிவேல்

                             விழிக்கு மையெழுதேன்

                   மதிவாள் நுதற்குத் திலகமிடேன் மணியால்

                             இழைத்த பணிபுனையேன்

          பேரா தரத்தி னொடுபழக்கம் பேசேன்

                             சிறிதும் முகம்பாரேன்

                   பிறங்கு முலைப்பா லினிதூட்டேன் பிரிய

                             முடனொக் கலையில் வைத்துத்

          தேரார் வீதி வளங்காட்டேன் செய்ய

                             கனிவாய் முத்தமிடேன்

                   திகழு மணித்தொட் டிலிலேற்றித் திருக்கண்

                             வளரச் சீராட்டேன்

          தாரார் இமவான் தடமார்பிற் றவழுங்

                             குழந்தாய் வருகவே

                   சாலிப் பதிவாழ் காந்திமதித் தாயே

                             வருக வருகவே.

பேராதரம்- மிகுந்த அன்பு; ஒக்கலை- இடை.

(நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம் – அழகிய சொக்கநாதப்பிள்ளை)

அன்னைத் தெய்வத்தைக் குழந்தையாக்கி இவ்வாறு வருந்தியும், வேண்டியும், உரிமையுடன் கோபித்தும், பின் கொஞ்சியும் அழைத்தால் அவள் வந்து அருள்செய்யாமல் இருப்பாளா?

Image result for முருகனும் பார்வதியும்   திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில் பகழிக்கூத்தரும் இதுபோன்றே தாய் குழந்தை முருகனிடம் பொய்யாகச் சினம் கொள்வதாகப் பாடியுள்ளார்.

‘உன் அரைஞாண் இறுக்கமாக உள்ளது. அதனை வாகாக தளர்த்திப் பூட்ட மாட்டேன். இலங்கும் மகர குண்டலத்தை எடுத்துக் குழைமீது அணிவிக்க மாட்டேன்; நெற்றியில் திலகம் தீட்ட மாட்டேன்,’ எனவெல்லாம் தாயின் பலவிதமான பொய்யானஅச்சுறுத்தல்கள்!

இது போன்றே பழனி முருகனின் தாய்மாரும் பலவிதமாகக் கூறி, கொஞ்சி, அவனை வருமாறு அழைக்கின்றனர். சீர்காழி கோவிந்தராஜனின் இனிய தெய்வீகக் குரலில் இப்பாடலைக்கேட்டு ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.

பொன்னே வருக பொன்னரைஞாண் பூட்ட வருக சிறுசதங்கை

                   புனைய வருக மணிப்பதக்கம் பூண வருக தவழ்ந்தோடி

          முன்னே வருக செவிலியர்கண் முகத்தோ டணைத்துச் சீராட்டி

                   முத்த மிடற்கு வருகஎதிர் மொழிகள் மழலை சொலவருக

          தன்னே ரில்லா நுதல்திலகம் தரிக்க வருக விழியினில்மை

                   சாத்த வருக மேலாகத் தானே வருக தேவர்தொழு

          மன்னே வருக மாமாலின் மருகா வருக வருகவே

                   வளஞ்சேர் பழனிச் சிவகிரிவாழ் வடிவேல் முருகா வருகவே!

(பழனி பிள்ளைத்தமிழ் – வருகைப்பருவம்- சின்னப்ப நாயக்கர்)

இங்கு புலவர் முருகனின் தெய்வத்தன்மையைப் பாடுகிறார்; ஆயினும் அவனுடைய குழந்தை வடிவிற்கு அலங்காரம் செய்து, பொன்னும் மணியும் புனைவித்து, முகத்தோடணைத்துச் சீராட்டி மகிழ விரும்பும் தாயினது பேராவலையும் பதிவு செய்துள்ளார்.

இங்கு மெய்யடியார்களின் ஒரு அருமையான சிந்தனைத்துளியை எண்ணிப்பார்க்கலாம். தன் பிரியத்துக்குரிய தெய்வக்குழந்தை காலில் தண்டையும் சதங்கையும் கொஞ்ச அருகே வந்தால் எவ்வாறிருக்கும் எனும் எண்ணமே அவர்களை இன்புறுத்துகிறது. பக்தியில் நெகிழவைத்தும் அன்பில் மகிழ வைத்தும் சிலிர்ப்பூட்டுகின்றது.

‘தண்டையணி வெண்டையம் கிண்கிணிச தங்கையும்

                   தண்கழல்சி லம்புடன் கொஞ்சவே…’ எனும் அருணகிரிநாதரின் திருப்புகழின் சந்தநயத்தில் மகிழாதவர்கள் இல்லை.

‘அந்தகன் வரும்தினம்’ எனும் மற்றொரு திருப்புகழில் அருணகிரிநாதர் கால்களின் சதங்கை கொஞ்சிடத் தம்மிடம் வந்தருளுமாறு முருகனை அழைப்பதும் மிகவழகான சந்தநயமும் கருத்துச் செறிவும் கொண்ட பாடல்.

‘தந்தன தனந்தனந் தனவெனச்

                   செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்

                   தண்டைகள் கலின்கலின் கலின்எனத்     திருவான

          சங்கரி மனங்குழைந் துருகமுத்

                   தம்தர வரும்செழுந் தளர்நடைச்

                   சந்ததி சகந்தொழும் சரவணப்       பெருமாளே,’ என்பன பாடலின் ஈற்றடிகள்.

[தொடரும்]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *