ஆசிரியர் போராட்டம் குறித்து சில எண்ணங்கள்

ஆசிரியர் போராட்டம் குறித்து சில விஷயங்களை ஆசிரியர்களும் அவர்களுக்கு ஆதரவு தருவோரும் உணர வேண்டும்.

  • சம்பள உயர்வு மட்டுமே சிக்கல் அல்ல. ஓய்வூதிய முறைதான். மக்களுக்குப் புரியவில்லை என்கிறீர்களே, கடந்த 15 ஆண்டுகால போராட்டங்கள் அனைத்திலும் இதே கோரிக்கையை வைத்திருக்கிறீர்கள். போராட்டம் வெற்றி எனக் கூறி வாபஸ் வாங்கினீர்கள். எனில் இந்த ஓய்வூதியம் குறித்த கோரிக்கை வெற்றி பெற்றதா முன்பு? இப்போது திரும்ப வந்துவிட்டதா? ஒவ்வொரு போராட்டத்துக்கும் இதே கோரிக்கைகள் வரும், அதில் சம்பள உயர்வு வந்துவிட்டால் பிற அனைத்தும் அடுத்த போராட்ட “அம்ச ” கோரிக்கைகளுக்கு வெட்டி ஓட்ட பயன்படும். இதில் மக்களுக்குப் புரியவில்லை என்று குற்றம் சுமத்துவது வேறு.
  • ஓய்வூதியம் என்பது பணியாளர்களின் சம்பளத்தில் ஒரு பகுதி. உலகமெங்கும் அதுவே நடைமுறை. இந்தியாவில் அரசு ஊழியர் தவிர பிற அனைவருக்கும் அதுவே நடைமுறை. ஆனால் அரசு ஊழியர்களின் முந்தைய முறை அவர்கள் சம்பளம் தனி, ஓய்வூதியம் தனி என இருந்தது. அவர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கும் வரக்கூடிய ஓய்வூதியதிற்கும் மலை மடு வேறுபாடு. இப்போது அய்யாக்கள் கேட்பதென்ன? என் சம்பளத்திலும் பிடித்தம் செய்யாமல், எனக்கு ஓய்வூதியமும் தர வேண்டும் …. இது எவ்வளவு நியாயம்?
  • கல்வித் தரம் சரியில்லை எனில் கேள்வி கேளுங்கள் என்கிறீர்கள் சரி….யாரைக் கேட்பது ? இதுவரை பள்ளியின் மோசமான தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த தியாக செம்மலான ஆசிரியர்களை காட்டுங்களேன் பார்ப்போம்… ஊரில் நண்பர்கள் கேட்டால் நான் அரசுக்கு பதில் சொல்ல வேண்டியவன் , உனக்கல்ல என்பதும் ஓசியில் படிக்கும் மாணவனுக்கு இவ்வளவு போதாதா என்று பதிலளிப்பதும் தான் பெரும்பான்மை ஆசிரியப் பெருமக்கள். இதில் நல்லோர் இல்லையா என்றால் காவல்துறையிலும் , ஆட்டோ ஒட்டுனர்களிலும், திருடர்களிலும் என அனைத்திலும் ஒரு நல்லவர்களின் எண்ணிக்கையைக் காட்ட முடியும். பெரும்பான்மை எப்படி என்பது குறித்தே பேச்சு. 4 நல்ல ஆசிரியர்களை முன்னால் காட்டி 40 வெட்டி வேலை ஆசிரியர்கள் ஒளிந்து நிற்பதை எப்படி ஒரு வாதமாக வைக்கிறீர்கள்? இதோ, இந்தக் கேள்வியையே பொறாமையால் வந்த வயிற்றுப்பொருமல் என்று சொல்வீர்களானால் உங்களை எல்லாம் கல்விமுறை குறித்து கேட்டால் என்ன பதில் கிடைக்கும்?
  • எம்.எல்.ஏ.வுக்குப் பார், எம்.பி.க்கு பார் என்று ஒப்புநோக்க உங்களுக்கு கூசுவதில்லை. ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்களைப் பார் , தனியார் துறை ஊழியர்களைப் பார் என்று சொன்னால் சொல்பவர் மரமண்டை, தேசபக்தாள், பொறாமைப் பிண்டங்கள் , வயிறெரிவோர் என்று “பாராட்டு மழை” …. உங்கள் வாதங்கள் போலவே தான் நீங்கள் பாடம் நடத்துவதும் இருக்குமானால் இப்போதைய சம்பளத்தையும் தர யோசிக்க வேண்டும்.
  • ஆசிரியப் பணி குறித்து உனக்கு என்ன தெரியும்? வெளியில் இருந்து பேசுவோருக்கு உள்குத்துகள் தெரியுமா ? ஆசிரியப்பணியில் இல்லாமல் கருத்து சொல்லக்கூடாது….. எல்லா பொங்கல்களும் சரி. சபரிமலை பெண்கள் அனுமதிப்பில் ஆசிரியச் சங்கம் தனது தீர்மானத்தில் கருத்து தெரிவித்ததே, அது என்ன வகைப் புரிதல்? கேரள தாந்த்ரீக மரபில் பயிற்சி பெற்று பணியாற்றிய பின் வந்தவர்களா சங்க ஆட்கள்? ஆசிரியர் சமூகத்தின் முக்கியமான ஆள்…அவர் எல்லாம் தெரிந்தவர் என்று சொன்னால் பணியிடை தகுதித் தேர்வுகளுக்கு ஏனய்யா எதிர்ப்பு?
  • ஆசிரியப்பணி மட்டுமா செய்கிறோம் என்றொரு வாதம். அய்யா… ஆசிரியப்பணிக்கு சம்பளமும் வாங்கிக் கொண்டு அதுபோக ஒவ்வொரு தனிப்பணிக்கும் தனிச் சம்பளம் பெற்றுக்கொண்டும் இப்படிப் பேச எப்படி மனம் வருகிறது ? சரி, தேர்தல் மற்றும் கணக்கெடுப்புப் பணிகள்தாம் வேறு பணிகள், அதற்காக தனிப்பணம் என்று சொன்னாலும் கூட கேள்வித்தாள் தயாரிக்க தனிப்பணம், விடைத்தாள் திருத்த தனிப்பணம் என்பதையெல்லாம் எப்படிப் பிற பணி என்பது? விடைத்தாள் திருத்த ஒரு தாளுக்கு இவ்வளவு என அரசிடம் ஒவ்வொரு முறையும் போராடி உயர்த்திக் கொள்கிறீர்களே அது மாணவனின் செலவில்தான் அடங்கும் எனத் தெரியாதா?
  • மாணவன் படிப்பு குறித்த அக்கறை உள்ள ஆட்கள் எனில் தேர்வு முடியும்வரை காத்திருந்து கோடை விடுமுறையில் போராடி இருக்கலாம். உங்கள் போராட்டம் எப்படியானாலும் மறியல் தானே அய்யா? அதை சாலையில்தானே செய்யப்போகிறீர்கள். படிப்பு பாழாகாமல் விடுமுறையில் செய்திருக்கலாமே ?
  • நல் ஆசிரியர்களாய் நீங்கள் இருக்கலாம். உங்கள் மாணவர்களுக்கு நீங்கள் அருமையாய் பாடம் எடுக்கும் திறமையாளர்களாக இருக்கலாம். ஆனால் நல்ல சமூக உறுப்பினராக இருக்கிறீர்களா ? உங்களுக்கு இன்று தரப்படும் சம்பளம் பெரும்பான்மை கிராமங்களில் உங்களையே அதிகம் சம்பாதிக்கும் ஆளாக மாற்றவில்லையா ? ஒரு தாலுகாவின் கடைக்கோடி கிராமத்தில் ஐம்பதாயிரம் சம்பளம் பெறும் ஆசிரியர் அந்தப் பகுதியிலேயே அதிக வருவாய் உடையவர். ஏன் உங்களுக்கு இவ்வளவு சம்பளம்? அங்கு ஒரு வேளை உணவுக்காக பள்ளிக்கு வந்து கல்வி பயிலும் தரத்தில் இன்னும் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதே. அவர்கள் நிலையே உங்களுக்கும் எனில் மாற்றம் வராது என்பதால்தானே உங்களை நல்ல நிலையில் அரசு வைத்திருக்கிறது . ஆனால் அதை பேராசையாக அணுகுவது சரியா என உங்களைச் சுற்றி இருக்கும் மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் ஒருமுறை திறந்த மனதுடன் பார்த்துவிட்டு சிந்தியுங்கள்.
  • ஆசிரியப்பணி புனிதமானது என்று எப்போதும் ஒரு பாட்டு. ஒரு மருத்துவர் பணமின்றி சிகிச்சை அளிக்க மறுத்தால் பொங்கும் கூட்டத்தில் நீங்களும் ஒருவர்தானே அய்யா ? எந்தப் பணி புனிதம் என்று சொல்லப்படுகிறதோ அந்தப்பணி தன் நலத்தை சிலபொழுதுகள் தியாகம் செய்யும், லாப நோக்கற்று செயல்படும், கூடுதல் முயற்சிகளை விடாமல் செயல்படுத்தும் ஊக்கமும் கொண்ட மனநிலை யைக் குறிக்கும். உங்கள் பணியின் செயல்பாடுகளைக் குறித்து பேசுகையில் இப்புனிதப் பணியின் வரையறைகளை உங்களுக்கான தேர்வு முறைகளாகக் கொள்வீர்களா ? ஆனால் சம்பள உயர்வு கேட்கையில், உங்களை பிறர் விமர்சிக்கையில் “புனிதப்பணி” கேடயமாக ஆவதில் ஒரு உறுத்தல் இல்லையா உங்களுக்கு?
  • உங்கள் தரப்பின் நியாயம் என்ன? ஓய்வூதிய பிடித்தம் என்னவாயிற்று எனத் தெரியவில்லை என்கிறீர்கள். பள்ளிகளை மூடுவதை தடுக்கிறீர்கள் .. இக்கோரிக்கைகளை நான் சரி என்பேன். நிச்சயம் அரசு இவற்றுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் நீங்கள் இவற்றை ஒப்புக்கு சப்பாணியாய் வைத்துக்கொண்டு சம்பளஉயர்வு , பழைய ஓய்வூதியம் என்று பாடுகிறீர்கள். உங்கள் முக்கியக் கோரிக்கை அதுவானால் அரசும் அதையே விளக்கும், அதில் தன் நிலைப்பாட்டை பொதுவில் வைக்கும். அப்படி செய்தால் அரசு மக்களை எங்களுக்கு எதிராகத் தூண்டி விடுகிறது , அரசின் சதிவேலை என்கிறீர்கள். சம்பள உயர்வு, பழைய ஓய்வூதிய கோரிக்கைகள் இரண்டும் இன்றி நீங்கள் இப்போராட்டத்தில் இறங்கி இருந்தால் ,,,, அய்யாமாரே, அரசாங்கம் எதை பொதுவில் சொல்ல வேண்டியிருந்திருக்கும் ? முந்தைய பிடித்தங்கள், மூடப்படும் பள்ளிகளின் நிலை என்னவாயின என்பதைத்தானே …. அதை அரசு சொல்லாமல் தப்பித்துக்கொள்ள காரணமே நீங்கள் வைத்த முதன்மைக் கோரிக்கைகள்தானே …..

இறுதியாக ஒரு வேண்டுகோள்…. தயவு செய்து சிந்தியுங்கள்…. உங்களது சில நியாயங்கள் காரணாமாக உங்களுக்கு அநியாய கோரிக்கைகள் வைக்க நியாயமே இல்லை. என்னை ஒருவன் கிள்ளி வைத்தான் என்பதற்காக அவன் கையை வெட்டுவதை நான் நியாயப்படுத்திவிட முடியாது.

(ராஜகோபாலன்.ஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

2 Replies to “ஆசிரியர் போராட்டம் குறித்து சில எண்ணங்கள்”

  1. மிக நடுநிலையாக எழுதப்பட்ட அற்புதமான பதிவு திரு ஜா. ராஜகோபாலன் அவர்களுக்கு நமது நன்றிகள்

  2. At Thoothukkudy dt. satankulam taluk sundankottaiT NTDA primary school-private aided

    Managed by Church of South India – the total number of students studying is 1- 5

    classes is 5-five only. Two teachers, one Noonmeals Organiser, and one cook – a great

    burden on the government-a expenses incured per month is more than 1.30 lakshs.The governmentneither has no gut to close this Minority christian school nor government primary school which has student strength of 50 pupils. In he same village there is one Government High school with less than 200 pupils . Just 50 meters away there is one Private Hindu aided Middle school with 90 pupils on roll. What a waste of government funds ? The government can at best close the Hindu Middle and the christian Primary schools and allow the Government primary and High school to serve the pupils. Instead the government is trying to transfer the teachers of Govt.Primary school into Anganvadi Schools.
    In Tinnelvely, Thoothukkudy dt, in Private aided schools enrolment has done down and teachers of all grade are in surplus. The government has no guts to transfer teachers of Minority sschools.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *