கொலைகாரக் கிறிஸ்தவம் – 10

பிரெஞ்சு மருத்துவர் டெல்லோன் எழுதிய கோவா இன்குசிஷன் குறித்த புத்தகங்கள் போலியானவைகளாக இருக்கலாம் என பின்னாட்களில் வந்த வரலாற்றாசிரியர்கள் மதிப்பிடுகிறார்கள். எனினும் இன்குசிஷன் குறித்து அவர் குறிப்பிடும் விஷயங்கள் மறுக்கவியலாதவை. டெல்லோன் உண்மையிலேயே கோவாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாரா (1674-76) என போர்ச்சுக்கீசிய ஆவணங்களுடன் ஒப்பிட்டாலேயே உண்மை விளங்கிவிடும் என்றாலும், அந்த ஆவணங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதால் அதனைக் குறித்து மேலும் விசாரணை நிகழ்த்தவியலாத நிலையே இன்றைக்கு உள்ளது.

அதேசமயம், டெல்லோன் இன்னொரு ஃப்ரெஞ்சுப் பயணியான அப்பே கார்ரே (Abbe Carre) தன்னை வந்து சிறையில் சந்தித்ததாகக் கூறுவதனையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

டாமனிலிருந்து செயிண்ட் தாமஸ் தீவுக்குப் பயணம் செய்யும் வழியில் கோவாவிற்கு வந்த அப்பே கார்ரே மிகுந்த சிரமத்துடன் அனுமதிகளைப் பெற்று என்னைச் சிறையில் சந்தித்தார். ஒரு கிறிஸ்தமஸ் நாளுக்கு முந்தைய நாளாகும் அது. அதன் பின்னர் அவர் சூரத்திற்குச் சென்றுவிட்டார் என்கிறார்.

மேற்கண்ட அப்பே கார்ரே மராட்டிய சத்ரபதி சிவாஜி மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தவர். அவரைக் குறித்தான பல குறிப்புகளைத் தனது பயணக் கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார். அதே அப்பே கார்ரேதான் டெல்லானைச் சந்தித்தது குறித்தும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுபிருப்பதால், டெல்லான் கோவா இன்குசிஷனைக் குறித்துக் கூறும் விவரங்கள் சரியானவையாகவே இருக்கும் என நம்பலாம்.

போர்ச்சுகலில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்குசிஷன் விசாரணைகள் யூதர்களை மதம்மாற்றுவதற்கும், அவ்வாறு மதம் மாற்றப்பட்ட புதிய கிறிஸ்தவர்கள் அவர்களின் பூர்விக மதத்திற்குத் திரும்பாமலிக்க அவர்களைக் கண்காணிப்பதற்கும் உபயோகிக்கப்பட்டது என நாம் முன்பே பார்த்தோம். இதுவே போர்ச்சுக்கீசியர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த இந்தியாவின் கோவாவில், வசித்த யூத, ஹிந்து மற்றும் முஸ்லிம்களைக் கிறிஸ்தவர்களாக கட்டாய மதமாற்றம்செய்வதற்கும் உபயோகிக்கப்பட்டது.

கோவாவின் கிறிஸ்தவர்களல்லாதவரை மதம்மாறச் செய்வதற்குச் சாம, தான, பேத, தண்டங்கள் உபயோகிக்கப்பட்டன. அவ்வாறு மதம்மாற்றப்பட்டவர்கள் போர்ச்சுகல் யூதர்களைப்போல வெளியில் கிறிஸ்தவர்களாக நடித்தாலும் உள்ளுக்குள் தங்களின் பூர்விக மதங்களையே பின்பற்றினர். இதன் பின்னனியில் கோவாவின் இன்குசிஷன் விசாரணை மதமாற்றங்கள் எவ்வாறு நிகழ்ந்தன என்பது குறித்துச் சிறிது பார்க்கலாம்.

அதனைக் குறித்து விளக்கும் வரலாற்றாசிரியன் பென்ரோஸ் (Penrose), இன்குசிஷன் விசாரணையால் தூண்டப்பட்ட கிறிஸ்தவ அடாவடித்தனமும், அதனுடன் இணைந்த கட்டாய மதமாற்றவெறியும், போர்ச்சுகீசிய ராஜ்யமெங்கும் ஒரு விஷத்தைப்போலப் பரவி, அதன் காரணமாகக் கிளர்ந்தெழுந்த கிறிஸ்தவ பயங்கரவாதம் பிறமதத்தினவரின்மேல் பெருந்துயராகச் சூழ்ந்தது.

இந்தக் கொடூரம் ஆரம்பமானதொரு முக்கிய தினம் என நாம் ஒருநாளைக் குறித்து எண்ணுவோமானால் அது பாதிரி ஃப்ரன்ஸில் சேவியர் கோவாவில் காலடி எடுத்துவைத்த தினமான மே 6, 1542-ஐச் சொல்லலாம். பாதிரி சேவியர் காலடி எடுத்த நாள் முதல் கோவா பாதிரிகள் பிறமதத்தவர்களான ஹிந்துக்கள், யூதர்கள், முஸ்லிம்கள் மீது கொடூரமாக நடக்க ஆரம்பித்தனர். மதம்மாறுவதற்கு லஞ்சம் கொடுப்பது, மிரட்டுவது, அடிபணிய மறுப்பவர்களைப் பிடித்துக் கொண்டுசென்று சித்திரவதைகள்செய்வது என நெஞ்சம் நடுங்கும் காரியங்களைச் செய்யத் துணிந்தனர். என்றெழுதியுள்ளார்.

வரலாற்று ஆய்வாளர் பர்ட்டன், கோவாவில்  நெருப்பும், இரும்பும், பாதாளச்சிறையும், துன்புறுத்துதலும், அரிசியும், ரூபாயும் உபயோகிக்க கோவா பாதிரிகளுக்கு அனுமதியளிக்கபட்டது. அதனை அந்தப் பாதிரிகள் மிகச் சிறப்பாகவே உபயோகித்துக்கொண்டனர்,’ என்கிறார். மேலும், அங்கிருந்த கிறிஸ்தவ பாதிரிகள் அனைவரும் அடிப்படைவாத மதவெறியர்கள். அந்த மதவெறியர்கள் அங்கிருந்த மக்களுக்கு மீளவே முடியாத துயரத்தை அள்ளித்தந்தார்கள் எனச் சொல்கிறார்.

கோவாவில் நடக்கும் கொடுமைகளை அறிந்த போர்ச்சுகீசிய அரசர் அவ்வப்போது பாதிரிகளிடம் பிறமதத்தவர்கள் தங்களுடைய சுய ஆர்வத்தின் பேரிலேயும், கிறிஸ்துவின்மீது உண்மையான பற்றின் பேரிலேலும் மட்டுமே மதமாற்றம்செய்யப்பட வேண்டுமேயன்றி அவர்களை வற்புறுத்தி ஒருபோதும் மதமாற்றம்செய்யக்கூடாது என வலியுறுத்தினார். ஆனால் இது வேளாவேளைக்கு மாறிக் கொண்டிருந்தது. மேலும் இந்தியாவிலிருந்த கிறிஸ்தவ பாதிரிகள் இந்த உத்தரவை மீறத் தயங்கவில்லை.

பாதிரிகள்/ஆர்ச் பிஷப்களின் கூட்டமைப்பான The Concilio Provincial 1567-ஆம் வருடம் பிறப்பித்த விதிகளின்படி எந்தவொரு மாற்றுமதத்தவனும் வற்புறுத்தலால் மதமாற்றம் செய்யப்படக கூடாது என்கிறது.

ஒருவனை பயமுறுத்தியோ அல்லது கட்டாயப்படுத்தியோ எந்தவொருவனையும் கிறிஸ்தவனாக ஞானஸ்னானம் செய்யக்கூடாது. ஏனென்றால் ஏசுகிறிஸ்துவின் அருமை, பெருமைகளை அறிந்த எவரும் அவர்களாகவே, தங்கள் மனதில் எழுந்த அன்புணர்ச்சியுடன் மதம்மாறுவதுதான் சரியானது. நம்பிக்கையற்ற பிறமதத்தவர்கள் நமது மதத்திற்கு வருவதற்கு நாம் ஒரு முன்னுதாரனமாக வாழ்ந்து காட்டவேண்டுமேயன்றி பொய்களாலும், புரட்டுக்க்களாலும், பித்தலாட்டங்களாலும் அவர்களை ஏமாற்றி மதம் மாற்றுதல் தவறானது… எனப் பலவாறும் விளக்குகிறது.

எனினும் கோவா இன்குசிஷ்ன் விசாரணைகள் அதற்கு நேரெதிராக நடந்தன. பிரெஞ்சுப் பயணியான ஃப்ரன்கோ பையார்ட், கோவா மதமாற்றங்களை நிகழ்த்திய பாதிரிகள் மதமாற்றப்பட்டவர்கள் தாங்களே முழு சுதந்திரத்தோடு அவரகளிடம் வந்து கிறிஸ்தவர்களாக ஞானஸ்னானம் செய்துகொண்டார்கள் எனக் காட்டுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளைக் குறித்து கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்…

பாதிரிகள் இருந்த இரண்டாவது சர்ச்சிற்கு அருகில் இன்னொரு வீடு இருந்தது. அதனைப் புதிய கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவ மதத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்குப் பாடம் நடத்துமிடம் [Cathecumenos] என அழைத்தாரகள்.  ஞானஸ்னானம் நடக்கும் நாள் வரும்வரைக்கும் அந்த வீட்டில் பிறமதத்தவர்கள் அடைத்து வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவும், உடையும் கொடுத்து அவர்கள் தப்பிச் சென்றுவிடாதபடி  பாதுகாத்து வைத்திருந்தார்கள்.

செயிண்ட் பால் மதமாற்ற விருந்துநாளன்று இந்த வீட்டிலிருந்து சுமார் 1,500 இந்திய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பலரும் கிறிஸ்தவமுறைப்படி இரண்டிரண்டு பேர்களாக வரிசையில் ஊர்முழுக்க ஊர்வலமாக நடந்து வந்தார்கள். ஏற்கனவே ஞானஸ்னானம் செய்யப்பட்ட கிறிஸ்துவர்களிலிருந்து பிரித்துக்காட்டும் பொருட்டு அவர்களின் கைகளில் குருத்தோலையால் செய்யப்பட்ட சிலுவைகள் அளிக்கப்பட்டிருந்தன. இறுதியில் செயிண்ட் பால் சர்ச்சிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஒவ்வொருவராக ஞானஸ்னானம் செய்யப்பட்டு கிறிஸ்தவர்களாக்கப்பட்டார்கள். அவர்களில் ஏழைகளாக இருந்தவர்களுக்கு பாதிரி பணம் கொடுத்தார். பின்னர் அவர்கள் உயிர் போனாலும் தாங்கள் கிறிஸ்தவ மதத்தைவிட்டு விலகமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.

இதே ஊர்வலங்களும், மதமாற்றங்களும் ஒவ்வொரு வருடமும் பலமுறைகள் நடத்தப்பட்டன. கிறிஸ்துமஸ் நாட்களில் பலமுறை ஃப்ரான்ஸிஸ்கன் சர்ச்சில் இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.

அவ்வாறு மதம் மாறியவர்கள் அனைவரும் தாங்களாக முன்வந்து மதம் மாறிக் கொண்டார்கள் என்பது ஒரு பெரும் பொய்யே. டாக்டர் நூரன்ஹா இதனை இன்னொரு விதமாக விளக்குகிறார்,

ராச்சோல் கோட்டைக்குள் 1560-ஆம் வருடம் வரையில் ஒரே ஒரு சர்ச் மட்டுமே இருந்தது.  ஆனால் அடுத்த 50 வருடங்களில் அந்தப் பகுதியில் இருந்த பெரும்பாலோர் கிறிஸ்தவர்களாகிவிட்டார்கள். ஏறக்குறைய 28 புதிய பெரும் சர்ச்சுகள் தோற்றுவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு மதம்மாற்றப்பட்டவர்களில் பெரும்பாலோர் கடுமையான மிரட்டல்களாலும், பாதிரிகளை எதிர்த்துநிற்கத் துணிவில்லாததாலும் மதம்மாறியவர்கள். தங்களின் மதத்தின்மீதும், தேசத்தின்மீதும் பற்றுகொண்டு மதம்மாற மறுத்தவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.  இன்னும் சிலருக்கு நிலமும், பணமும், வேலைகளும் கொடுக்கப்பட்டது. எனவே அங்கு மதம்மாறியவர்களில் பெரும்பாலோர் கிறிஸ்தவத்தின்மீதுள்ள பிடிப்பால் மதம் மாறவில்லை. அந்தப் பிடிப்பு பிற்காலத்தில் வந்தது.

எப்படிப்பட்டவர்களெல்லாம் மதம்மாறினார்கள் என்பதனை விளக்கும் கடிதம் ஒன்று அக்டோபர் 10, 1547-ஆம் வருடம் பாதிரி நிகாலோ லாண்சிலோட்டே என்பவரால் பாதிரி இக்னேஷியோ லொயோலா எனபவருக்கு எழுதப்பட்டது.  லாண்டிசிலோட்டே, புதிதாக மதம்மாறியவர்கள் கிறிஸ்தவத்தின்பால் இருந்த ஈர்ப்பினைவிடவும் பிற காரணங்களுக்காகவே மதம்மாறினார்கள் என்கிறார்.

இந்த நாட்டில் மதம்மாறியவர்கள் யாவரும் தங்களின் சுயநலத்திற்காக, அடிமைத்தனத்திலிருந்து தப்புவதற்காக மதம்மாறியவர்கள் மட்டுமே.  முஸல்மான்களிடமும், ஹிந்துக்களிடமும் அடிமைகளாக இருந்து, பின்னர் போர்த்துக்கீசியர்களின் தயவை நாடிநின்றவர்களும், ஒரு சாதாரண தலைப்பாகை, சட்டை, வேறொரு விரும்பிய சிறுபொருளுக்காகவும், தூக்குத்தண்டனையிலிருந்து தப்புவதற்காகவும், எவளாவது கிறிஸ்துவச்சியின்மீது கொண்ட காதலுக்காகவும், இன்னபிற சிறிய காரணங்களுக்காகவும் மதம்மாறியவர்களே அதிகம். அவ்வாறானவர்கள் மதம்மாற விருப்பம்தெரிவித்தவுடன் உடனடியாக எந்தக் கேள்வியும் கேட்கப்படாமல், கிறிஸ்தவமதத்தைப் பற்றித் தெரிவிக்காமல் உடனடியாக ஞானஸ்னானம் அளிக்கப்பட்டார்கள்.

இன்னும் சில பிராமணர்கள் தங்களின் சாதியைவிடவும் கீழான சாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காகவும் மதம்மாறிய சம்பவங்களும் உண்டு.

[தொடரும்]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *