கொலைகாரக் கிறிஸ்தவம் – 5

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.

தொடர்ச்சி…

இதற்கிடையே 1506-ஆம் வருடம் போர்ச்சுகலைப் பெரும் பஞ்சம் தாக்கியது. அதனுடன் பிளேக் நோயும் சேர்ந்து கொண்டது. போர்ச்சுகல் குடிமக்கள், பரமண்டலத்தில் இருக்கும் பிதாவின் கருணையை வேண்டி அங்கங்கிருந்த சர்ச்சுகளில் வந்து குவிந்தார்கள். லிஸ்பனில் இருந்த போம்-ஜீசஸ் சர்ச்சின் மேடையில் ஒரு பேழையில் மூடிவைக்கப்பட்டிருந்த சிலுவையின்மீது ஒரு விசித்திரமான விளக்கொளி பரவியது. அது கடவுளின் அற்புதம் என்று கருதிய கத்தோலிக்கர்கள், பெரும் பரவசத்திற்குள்ளானார்கள்.

பரமண்டலத்து பிதாவின் அற்புதம் போர்ச்சுகலெங்கும் பரவியது. ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் அந்தச் சர்ச்சிற்கு வந்து பிதாவின் அற்புத ஓளியைக் காணத் துடித்தார்கள். எனினும் அந்தக் கூட்டத்தில் இந்த “அற்புத” ஒளியைக் குறித்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அவர்களில் புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட ஒருவன் இந்த அற்புதம் போலித்தனமானது எனச் சொல்ல, கடவுளுக்கு எதிராகச் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைக் கேட்ட நம்பிக்கையாளர்கள் கூட்டம் அவனைப் பிடித்து தீவைத்து எரித்துத் தனது கோபத்தைத் தீர்த்துக்கொண்டது.

மேற்படி ஒளிவீசிய சிலுவையைக் கையில் தூக்கிக்கொண்டு சர்ச்சிலிருந்து வெளிவந்த இரண்டு கத்தோலிக்க சாமியார்கள், “பரமண்டலத்துப் பிதாவுக்கு எதிராகப் பேசியவர்களை விடாதீர்கள்! பரமண்டலத்துப் பிதாவுக்கு எதிராகப் பேசியவர்களை விடாதீர்கள்!” எனக் கூக்குரலிட்டார்கள். அதனைக் கேட்டு வெறிகொண்ட கூட்டம், கண்ணில் தென்பட்ட புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட மூன்று கிறிஸ்தவர்களைப் பிடித்துத் நெருப்பில் தூக்கியெறிந்து கொன்றார்கள். அன்றுமட்டும் லிஸ்பனில் 800-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள்.

அதற்கு மறுநாளும் போர்ச்சுகலெங்கும் வன்முறை தொடர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். சில பழைய கிறிஸ்தவர்களையும் புதிய கிறிஸ்தவர்கள் எனத் தவறுதலாக எண்ணி, அவர்களையும் கிறிஸ்தவ மதவெறிக் கும்பல் படுகொலைசெய்தது. புதிய கிறிஸ்தவர்கள் என்று அறியப்பட்டவர்களின் வீட்டுக் கதவுகளை உடைத்துக்கொண்டு உட்புகுந்த கிறிஸ்தவ மதவெறியர்கள் அங்கிருந்த ஆண், பெண், குழந்தைகள் என அனைவரையும் இரக்கமின்றி படுகொலை செய்தார்கள். அன்னையரின் மார்பில் பால் குடித்துக்கொண்டிருந்த மழலைகளைப் பிடுங்கி, பாறைகளில் அவர்களின் தலைகளை சுவற்றில் மோதிக் கொன்றார்கள்.

காணுமிடமெங்கும் கொலையும், கொள்ளைகளும் தலைவிரித்தாடின. ஆலயங்களுக்குள் பாதுகாப்பாகச் சென்று ஒளிந்தவர்களும் விடப்படவில்லை. அவர்களும் அங்குவைத்தே கொல்லப்பட்டார்கள். கன்னிகளும், திருமணமான பெண்களும் அங்கிருந்து இழுத்துச் செல்லப்பட்டுக் கற்பழிக்கப்பட்ட பின்னர், நெருப்பில் தூக்கிவீசிக் கொல்லப்பட்டார்கள். தொடர்ந்து பலநாட்கள் நிகழ்ந்த இந்தப் படுகொலைகளில் குறைந்தபட்சம் 2000 பேர்களுக்கும் மேலானவர்கள் படுகொலையானார்கள். பின்னர் போர்ச்சுகல் அரசாங்கத் தலையீட்டினால் இந்தக் கலவரங்கள் அடக்கப்பட்டன.

கொலைகாரக் கும்பல்களைத் தூண்டிவிட்ட இரண்டு பாதிரிகளும் கைது செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்கள். அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. லிஸ்பன் நகரின் சர்ச்சுகளில் இருந்த டொமினிகன் பாதிரிகள் நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக சிறிது நடுநிலையுடன் செயல்படுபவர்களிடம் அச்சர்ச்சுகள் ஒப்படைக்கப்பட்டன. கலவரங்களை நடத்தியவர்களின்மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

இந்தக் கலவரங்களினால் நிகழ்ந்த பயங்கரங்களைக் கண்ட போர்சுக்கீசிய அரசன் டி. மேனுவல் மிகவும் வருந்தினான். புதிதாக மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் கிறிஸ்தவ மதத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கான கால அளவு 1526-ஆம் ஆண்டுவரையிலும் நீடிக்கப்பட்டது. புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்களின் சொத்துக்களை விற்பதற்கும், வெளிநாட்டில் புகலிடம் தேடுவதற்குமான தடைகள் முழுவதும் நீக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 1521-ஆம் வருடம் மேனுவல் இறக்கும் வரையில் போர்ச்சுகல்லில் புதிதாக மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

மெனுவலின் மரணத்திற்குப் பிறகு அவனது மகனான மூன்றாம் டி. ஜோவவ் (Joao III) அரியணை ஏறுகிறான். மெனுவலைப் போலல்லாது, அவனது மகனான ஜோவவ் யூதர்களுக்கு எதிரான வெறுப்புகொண்டவன். தனது பதவியின் தொடக்ககாலத்தில் தனது தகப்பனான மேனுவல் புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு வழங்கிய சலுகைகளைத் தொடர்ந்து அளிக்கப்போவதாக உறுதியளித்தான் ஜோவவ். இருப்பினும் தனது அந்த உறுதிமொழிகளிலிருந்து பின்வாங்குவதற்கான அத்தனை வழிகளையும் அவன் தொடர்ந்து தேடிக்கொண்டிருந்தான்.

லிஸ்பனில் வாழும் புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் நடவடிக்கைகளை ரகசியமாகக் கண்காணித்துத் தனக்குக் தகவல் அனுப்புமாறு 1524-ஆம் வருடம் ஜார்ஜ் தெமுடோ என்பவனை நியமித்தான், ஜோவவ். அவர்கள் இன்னமும் தொடர்ந்து தங்களின் பூர்வமதமான யூதமதத்தையே பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற சந்தேகம் அவனுக்குள் இருந்தது. லிஸ்பனிலிருக்கும் சர்ச்சுகளில் இருக்கும் சாமியார்களிடம் விசாரித்தபின்னர் புதிதாக மதம்மாறிய கிறிஸ்தவர்கள் இன்னமும் தங்களின் பழைய வழக்கங்களைத் தொடர்வதாக ஜார்ஜ் தெமுடோ ஜோவவ்விற்குத் தெரிவித்தான்.

பின்னர் ஜோவவ், என்ரிக்கே ந்யூனஸ் என்பவனிடம் இதே வேலையை ஒப்படைத்து, தனக்குத் தகவல் தெரிவிக்குமாறு ஆணையிட்டான். என்ரிக்கே ந்யூனஸ் ஒரு கிறிஸ்தவ மதவெறியன் என்பது மட்டுமன்றி, ஸ்பெயினில் யூதர்களுக்கு எதிரான இன்குசிஷன் விசாரணைகளில் பங்கெடுத்துக்கொண்ட இன்னொரு மதவெறியனான இன்குசிடர் லூசேரோ என்பவனின் கீழ் பணிபுரிந்தவன். ஹென்றி நூனஸ் தந்திரமாகத் தன்னைப் புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுடன் இணைத்துக்கொண்டு, அங்கு அவர்களை ரகசியமாகக் கண்காணிக்கும் அவன், புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ சடங்குகளை வெளிப்புறம் செய்வதுபோல நடித்துக்கொண்டு தங்களின் யூதச் சடங்குகளை ரகசியமாகத் தொடர்ந்து நடத்துவதாக அரசன் ஜோவவ்விற்குத் தெரியப்படுத்தினான்.

இதனைக் கேட்டு மகிழ்ந்துபோகும் போர்ச்சுக்கீசிய அரசன் ஜோவவ், நூனசைப் பாராட்டி அவனுக்கும் உறுதியான மத நம்பிக்கையாளன் என்கிற பட்டத்தை அளித்தான். இருப்பினும் அவன் ஒரு உளவாளி என அறிந்துகொண்ட புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், அவனைக் கொலைசெய்தார்கள். இதனை அறிந்த போர்ச்சுக்கீசியக் கிறிஸ்தவர்கள் புதிதாக மதமாற்றம் செய்யப்பட்டவர்களின்மீது கோபம் கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து கிறிஸ்தவத்தை அவமானம் செய்வதாகக் குற்றம் சாட்டப்படும் மதம் மாற்றப்பட்டவர்கள்மீது வன்முறை கட்டவிழ்த்துவிடபட்டது.

யூத வெறுப்பாளர்கள் அரசி டி. காத்ரீனின் வலிமையான ஆதரவையும் பெற்றார்கள். அவள் ஸ்பெயினை ஆண்டுகொண்டிருந்த அரசன் ஐந்தாம் சார்லஸின் சகோதரி. ஸ்பெயினில் நிகழ்த்தப்பட்ட இன்குசிஷன் விசாரணைகளைக் கண்டு வளர்ந்தவளான அவள், உண்மையான கிறிஸ்தவ மதநம்பிக்கைகள் கட்டிக்காக்கப்படவேண்டும் என்பதில் உறுதியான நிலைபாடுடையவள். இந்தச் சூழ்நிலையில் மீண்டும் யூதர்களுக்கு எதிரான இன்குசிஷன் விசாரணைகள் போர்ச்சுகல்லில் நடத்தப்படவேண்டும் என்கிற எண்ணம் தலையெடுத்தது.

இதனைத் தொடர்ந்து போர்ச்சுக்கீசிய அரசன் தனது தூதுவரை அனுப்பும் ரோமிலிருக்கும் போப்பைச் சந்தித்து, மீண்டும் இன்குசிஷன் விசாரணைகளைத் துவங்குவதற்கான உத்தரவை அளிக்கும்படி ரகசியவேண்டுகோள் விடுத்தான். அதன்படி போப் அந்த உத்தரவை டிசம்பர் 17, 1531-ஆம் ஆண்டு போர்ச்சுகல் அரசனுக்கு வழங்கினார். இந்தச் செய்தி பல பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பெரும் துயரத்தைச் சந்தித்துவரும் — புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட –கிறிஸ்தவர்களின் மத்தியில் இடியாக இறங்கியது. நடக்கவிருக்கும் பயங்கரங்களை எண்ணி அஞ்சி நடுங்கினார்கள் அவர்கள். இதனைப் போப்பிடம் எடுத்துச் சொல்லித் தங்களைக் காப்பாற்றுமாறு அனுப்பிவைக்கப்பட்ட இன்னொரு புதிதாக மதமாற்றம்செய்யப்பட்ட கிறிஸ்தவனான டுராட்டே-டி-பாஸ் என்பவன், அதற்கு நேரெதிராக போப்பிடம் பேசி பரிதாபத்திற்குரிய தனது இனத்தை நட்டாற்றில் விட்டான்.

இருப்பினும், அவன்மீது சந்தேகம் கொள்ளும் போப் அவனைச் சிறையில்தள்ள உத்தரவிட்டார். அங்கிருந்து விடுதலையானபின்னர் துருக்கிக்குப் போன டுராட்டே, முஸ்லிமாக மதம்மாறி, அங்கேயே இறந்துவிட்டான். மிகுந்த துன்பத்துடனும், துயரத்துடனும் இன்குசிஷன் விசாரணை என்னும் பயங்கரத்தைத் தடுக்கமுயன்ற புதிய கிறிஸ்தவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை. அதற்கு மாறாக 1541=ஆம் ஆண்டு போர்ச்சுகலில் இன்குசிஷன் விசாரணைகள் துவங்குகின.

இதனைக் குறித்து எழுதும் போர்ச்சுக்கீசிய வரலாற்றாசிரியரான ஓலிவெரா மார்ட்டின்ஸ் கீழ்க்கண்ட தகவல்களைத் தருகிறார்,

இன்குசிஷன் விசாரணை என்கிற பெயரில் நிகழ்ந்த நிகழ்வுகளில், நீதியும் நல்லெண்ணமும் சிறிதும் இல்லை. புதிதாக மதம்மாற்றம் செய்யப்பட்டவர்கள்மீது குற்றம் சுமத்தியவர்கள், அவர்களின் மகன்களைத் தங்களின் பெற்றோர்களுக்கு எதிராகவும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு எதிராகவும் சாட்சிசொல்லவைத்தார்கள். குற்றம் சாட்டப்பட்டவன் தங்களின் வக்கீலுடன் பேசுவதற்கும் அனுமதிக்கப்படவில்லை.

தங்கள்மீது குற்றம் சுமத்தியவர்கள் யார், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்கிற விவரமும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தும் புகழப்பட்டன; அதற்கும் மேலாகப் புதிதாக மதம்மாற்றப்பட்டவர்களை உளவுபார்ப்பதும் புனிதச் செயலாகக் கருதப்பட்டது. உளவாளிகள் அந்தப் பரிதாபப்பட்ட ஜீவன்களின் குடும்பத்தில் பலவிதங்களிலும் உட்புகுந்தார்கள்.

ஒரு மருத்துவராக, அல்லது ஒரு உண்மைவிளம்பியாக, அல்லது மிகநெருங்கிய நண்பர்கள் என்கிற தோற்றத்தில், அல்லது அவர்களுக்கு அறிவுரை சொல்பவர்களாக அவர்களுடன் பழகி அவர்களின் ரகசியங்களை அறிந்துகொண்டார்கள். குற்றம்சாட்டப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டது.

[தொடரும்]

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *