கொலைகாரக் கிறிஸ்தவம் – 7

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.

தொடர்ச்சி…

போர்ச்சுகலில் நடப்பதைப் போல இந்தியாவின் போர்ச்சுக்கீசிய பகுதியான கோவாவிலும் இன்குசிஷன் விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என “புனித” செயிண்ட் சேவியர் போர்ச்சுக்கள் அரசனான மூன்றாம் டி. ஜொகோவோவுக்கு அனுப்பிய கடிதத்தை அரசன் மதிக்காமல் மூலையில் எறிந்துவிட்டான். அவன் ஆட்சிக்காலத்தில் கோவாவில் இன்குசிஷன் விசாரணைகள் நடக்கவில்லை.

இருப்பினும், வேறுசில பகுதிகளிலிருந்து அரசனுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பி.எம். நூனஸ் பாரெட்டோ என்கிற கிறிஸ்தவசாமியார் ஜனவரி 5, 1551-ஆம் ஆண்டு ரோமிலிருக்கும் கிறிஸ்தவ உயரதிகாரி ஒருவருக்கு எழுதிய கடிதம் ஒரு உதாரணம்.

அந்தக் கடிதம், உலகின் எந்தப் பகுதியை விடவும் இந்தியாவில் இன்குசிஷன் விசாரணைகளை நடத்த அனுமதி அளிக்கவேண்டும். ஏனென்றால் இங்கு கிறிஸ்தவர்கள் பிறமதத்தவர்களான முஸ்லிம்கள், யூதர்கள் மற்றும் ஹிந்துக்களுடன் கலந்து வாழ்கிறார்கள். மேலும் இந்தப் பெரிய நாட்டில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் தங்களின் மதச் சம்பிரதாயங்களைச் சரிவரச் செய்யாமல் இருக்கிறார்கள். இதனைத் தடுத்து அவர்கள் நல்லதொரு வாழ்க்கை வாழவேண்டுமென்றால் இன்குசிஷன் விசாரணைகள் மட்டுமே சரியானதாக இருக்கமுடியும். எனச் சொல்கிறது.

போர்ச்சுகல் அரசன் மூன்றாம் ஜெகோவா 1557-ஆம் வருடம் மரணமடைந்த சிறிது காலத்திற்குள்ளாக கோவாவிலும் இன்குசிஷன் விசாரணைகள் துவக்கப்படவேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலித்தது. இதனடிப்படையில் 1560-ஆம் வருடம் கோவாவில் இன்குசிஷன் விசாரணைகள் துவங்க அனுமதியளிக்கப்பட்டு அதற்குத் தலைவராக அலெக்ஸியோ டயஸ் ஃபால்க்கோ என்கிறவர் நியமிக்கப்பட்டார்.  

உலகின் மிக இரக்கமற்ற கிறிஸ்தவப் படுகொலைகள் நிகழ்வதற்கு அச்சாரமிட்ட கோவா இன்குசிஷன் விசாரணைக்கான அனுமதி வழங்கபட்ட சூழ்நிலைகளைக் குறித்து வரலாற்றாசிரியரான எச். சி. லீ என்பவர் விளக்குகையில், போர்ச்சுகல் அரசன் மூன்றாம் ஜெகோவோ ஜூன் 11, 1557-ஆம் வருடம் இறந்தபிறகு அவனது மூன்று வயது பேரக்குழந்தையான டான் செபாஸ்டியன் என்பனுக்கு முடிசூட்டப்படுகிறது. அவன் வயதுக்கு வரும் வரையில் அரசியான காட்டலினா பொறுப்பெடுப்பாள் என அறிவிக்கப்படுகிறது. இருப்பினும் 1562-ஆம் வருடம் அரசி காட்டலினா கார்டினல் ஹென்றிக் என்பவரிடன் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து விலகிவிட்டாள். இந்த காடினல் இந்தியாவில் தூய கிறிஸ்தவம் பரவவேண்டும் என்கிற ஆவல் உடையவன்.

எனவே 1560-ஆம் வருடம் மேற்படி ஹென்றிக், கோவா இன்குசிஷன் விசாரணைகளை ஆரம்பிக்கும் எண்ணத்துடன் அலெக்ஸியோ டயால் ஃபால்க்கோவை இன்குசிடராக நியமித்து அவன் கீழ் பணிபுரியத் தேவையான கிறிஸ்தவ சாமியார்களையும் அனுப்பி வைக்கிறான். இப்படியாக கோவாவில் மிகக் கொடூரமான இன்குசிஷன் தொடங்குவதற்கான அச்சாரம் இடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளை இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம்.

கிறிஸ்தவ வரலாற்றாசிரியரான பாதிரி ஃப்ரான்ஸிஸ்கோ டிசொவுசா கீழ்க்கண்டதொரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.

“கோவா தீவில் ஹிந்துக்களையும், அவர்களது ஆலயங்களையும், மதச் சடங்குகளை ஒழிப்பதற்கான முயற்சிகள் மிகத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டன. இன்னொருபுறம் பாதிரிகள் கோன்ஸால்வோ-டா-ஸில்வெய்ரா மற்றும் பெல்சோய்ர் கார்னிரோ என்கிற இருவரும் கொச்சியிலிருக்கும் யூதர்களை ஒடுக்குவதற்குத் செல்கிறார்கள்.  ஏற்கனவே கூறியபடி கொச்சி பழங்காலம் தொட்டே யூதர்களுக்குப் புகலிடம் அளிக்கும் இடமாக இருந்தது. இந்தியாவில் வந்து தங்கி தங்களின் கடின உழைப்பினால் முன்னேறிப் பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்த கொச்சியின் யூதர்கள், தங்களின் மதச்சடங்குகளை தீவிரமாகப் பின்பற்றிக் கொண்டிருந்தார்கள். இவர்களுடன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே யூதர்களாக மதம்மாறிய ஹிந்துக்களும் வாழ்ந்து வந்தார்கள்.

கோவாவைப் போலல்லாது கொச்சிப் பகுதியில் இன்குசிஷன் விசாரணைகள் தொடங்குவதற்கான சூழ்நிலைகள் இல்லாததால் கொச்சி வாழ் யூதர்கள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இதற்கு எதிராக பாதிரி சில்வியெரா தனது பிரச்சாரங்களைத் துவக்கி நடத்த ஆரம்பித்தான். கிரேக்கமும், ஹீப்ருவும், பைபிளும் நன்கு அறிந்திருந்த இந்தப் பாதிரி ஏசு கிறிஸ்து ஒருவர் மட்டுமே உண்மையான கடவுள் எனப் பிரசங்கிக்க ஆரம்பித்தான். இந்தப் பேச்சுக்களால் எரிச்சலடைந்த கொச்சி யூதர்கள் தெருவுக்கு வந்து மேற்படி பாதிரியை எதிர்த்துப் பேச ஆரம்பித்தார்கள். சர்ச்சுகளில் வைக்கப்பட்டிருந்த ஆலோசனைப் பெட்டிகளில் கிறிஸ்துவுக்கு எதிரான வார்த்தைகள் எழுதப்பட்டு இடப்பட்டன.

யூதர்களை விடவும் எண்ணிக்கையில் அதிகமுள்ள கத்தோலிக்கப்பகுதியில் நிகழும் இந்த நிகழ்வுகளைக் கண்டு அதிர்ந்து போன பாதிரிகள் “புனித” செயிண்ட் சேவியரின் நண்பனான கவர்னர் பெரோ கோன்ஸால்விஸ் என்பவருக்குக் கடிதம் எழுதி இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடக்குமானால் அதனைத் தடுப்பதற்கு அதிகாரமுள்ள அமைப்பு எதுவும் இந்தியாவில் இல்லை. எனவே அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறார்கள்.

இந்தக் கோரிக்கையை ஏற்கும் பெரோ கோன்ஸால்விஸ் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தான். இது இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கையில் புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் முன்னாள் யூதர்கள். இந்தியாவிற்கு வந்து வணிகம் செய்து வசதியாக வாழ்ந்துவந்தவர்கள் அவர்கள். ஏசு கிறிஸ்துவைக் குறித்துக் கேவலமகப் பேசினார்கள் என்கிற குற்றச்சாட்டின் பேரில் அவர்களில் சிலர் கொச்சியில் கைது செய்யப்பட்டு கோவாவிற்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள். இவர்களே இந்திய இன்குசிஷன் விசாரணையில் தண்டனையளிக்கப்பட்டவர்களில் முதலானவர்கள். இவர்களைப் போலவே மேலும் பல புதிய மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவரக்ள் கோவாவிலிருந்து போர்ச்சுகல்லுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்கள் யூதர்களாக கருதப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டு தண்டனையளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதன் காரணமாக இந்தியாவில் நடப்பதனைப் புரிந்து கொள்ளும் கார்டினல் ஹென்றிக் இந்தச் சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்தித் தனது கிறிஸ்தவ பாதிரிகளை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்கிறார். இதனைத் தொடர்ந்த காலத்தில் கோவாவில் மேலும் பல புதிய கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள் எனக் கண்டறியப்பட்டு அவர்களும் தீயிட்டுக் கொளுத்திக் கொல்லப்படுகிறார்கள்.

கோவாவில் பல புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்களின் பூர்விக மதமான யூத மதத்தையே இன்னும் பின்பற்றுவதாகவும், அவர்களில் பலர் பெரும் பணக்காரர்கள் என்றும், அவர்களே யூத ஆல்யங்கள் பலவற்றையும் கட்டியவர்கள் எனவும், அதனை உறுதிப்படுத்தும் விதமாகக் கண்டறியப்பட்ட பல ஆவணங்களும் மேற்படி பாதிரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுத் தண்டனையளிக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள்.  இவ்விதமாக கோவாவிலும், கொச்சியிலும் ஏசு கிறிஸ்துவின் புனிதம் காக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அதனைக் குறித்து போப்பிற்கும் தகவலனுப்புகிறார்கள்.

கோவாவில் நடந்த இன்குசிஷன் விசாரணைகளைக் குறித்துக் கூறும் ஃப்ரான்ஸிஸ்கோ பையார்ட் என்னும் ப்ரெஞ்ச் பயணி கோவாவில் ஜூலை 1608-ற்கும் ஜனவரி 1610-ற்கும் இடையே நிகழ்ந்த இன்குசிஷன் விசாரணைகளைக் குறித்து விளக்கமாக எழுதியிருக்கிறார்.

“கோவா இன்குசிஷனை நடத்தியவர்களில் முக்கியமானவர்கள் இரண்டு பாதிரிகள். அங்கிருந்த போர்ச்சுக்கீசியர்கள் அந்த பாதிரிகளின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் இன்குசிஷன் மேஜர் என்று அழைக்கப்பட்டு பெரும் அதிகாரம் கொண்டவராக இருந்தார். அவர்கள் கடைபிடித்த நடவடிக்கைகள், தண்டனைகள் போர்ச்சுகல்லில் நிகழ்ந்ததைவிடவும் பலமடங்கு பயங்கரமானவை.  கையில் கிடைத்த யூதர்களையும் அவர்களில் புதிதாக மதமாற்றம் செய்யப்ப்ட்டவர்களையும்  எரித்துக் கொல்லுவதனை ஒரு சடங்காகவெ செய்தார்கள்.  அவர்களால் கைது செய்யப்படும் அப்பவி யூதனின் சொத்துக்களை உடனடியாகப் பறிமுதல் செய்தார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால் பணக்கார யூதர்களே இவர்களின் தண்டனைகளுக்கு முதல் பலியானார்கள்.

போர்ச்சுகல் அரசனிடமிருந்து இந்த இன்குசிஷன் விசாரணைகளைச் செய்வதற்கான உபகரணங்களும், உதவிகளும் பெறப்பட்டன.  கைது செய்யப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை உலகின் எந்த மொழியின் வார்த்தைகளாலும் விவரிக்கவே இயலாது.  ஒரு சிறிய சந்தேகம், ஒரு தவறான வார்த்தை அல்லது வேறேந்த சிறிய தவறு செய்தவர்கள் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் ஏன் குழந்தைகளாக இருந்தாலும் பிடித்துச் செல்லப்பட்டு தூக்கிலடப்பட்டார்கள்.

அவர்களால் சாட்டப்பட்ட குற்றங்கள் பலவும் சாதாரணமானவை என்றாலும் தண்டனை என்னவோ மரணம்தான். உதாரணமாக, தாங்கள் உட்காரும் மெத்தையின் மீது சிலுவையை வைத்ததற்க்காக கைது செய்யப்பட்டவர்கள் உண்டு. இன்னும் சில சமயங்களில் ஏதேனும் காய்கறிகளையோ அல்லது மாமிசங்களையோ ஓங்கி வெட்டுகையில் அங்கிருக்கும் ஏசு கிறிஸ்துவின் “புனித” படத்தின் மீது தவறுதலாக அடிபடுவது போன்ற குற்றங்களைச் செய்பவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் பரமண்டலத்தில் இருக்கும் பிதாவின் மதத்தைப் பின்பற்றாமல் தங்களின் பழைய மதத்தையே பின்பற்றுவதாகக் குற்றம் சாட்டப்பட்டார்கள்.

மேலே கூறியபடி, போர்ச்சுக்கீசியர்களான இவர்களில் பணக்காரர்களே பெரும்பாலும் கொல்லப்பட்டார்கள்.  போர்ச்சுக்கீசிய ஏழைகளுக்குப் பல சமயம் அபராதங்கள் விதிக்கப்பட்டன.  இதையெல்லாம் விடவும், ஒருவனைப் பிடிக்காத இன்னொருவன் அவனைக் குறித்து பல பொய்யான தகவல்களை இன்குசிஷன் கமிட்டியிடம் சொல்லி அவனைத் தண்டனை பெறச் செய்வது போன்றவையும் நடந்தேறின.  எவரேலும் கைது செய்யப்பட்டாலும் அவர்களை விடுவிக்க அவர்களது நண்பர்களோ அல்லது உறவினர்களோ எந்த முயற்சியும் செய்யவில்லை. தாஙகளும் அதில் சிக்க வைக்கபடலாம் என்கிற அச்சத்தால்.

எனவே தெருக்களில் அனைத்து போர்ச்சுக்கீசியர்களும் இன்குசிஷனைக் குறித்து மிகுந்த மரியாதை தொனிக்கும் வார்த்தைகளையே பேசினார்கள்.  ஏதேனும் சிறிய தவறான வார்த்தையும் பெரும் அழிவினைத் தேடித் தரும் என்பதால் அனைவரும் அதற்கு அஞ்சி வாழ்ந்தனர்.  போர்ச்சுகல்லிலும், இத்தாலியிலும், ஸ்பெயினிலும் நிகழ்ந்ததைப் போன்ற நடவடிக்கைகளே கோவாவிலும் மேற்கொள்ளப்பட்டன. சில சமயங்களில் தாங்கள் என்ன குற்றம் செய்தோம் என்பதை அறியாத அப்பாவிகள் பலரும் வருடக்கணக்கில் சிறையில் வாடினார்கள். அவர்களுக்கென வாதாட வக்கீல்களை அமர்த்திக்கொள்ளவும் அவர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.

இந்திய ஹிந்துக்களும், முஸ்லிம்களும், அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இன்குசிஷன் விசாரணை என்கிற பயங்கரத்திற்கு ஆட்பட்டார்கள். அதிலிருந்து அவர்கள் தப்ப ஒரேவழி அவர்கள் கிறிஸ்தவரகளாக மதம் மாறுவது மட்டும்தான் என அவர்களுக்குச் சொல்லப்பட்டது. ஏதேனும் ஒரு கோவா கிறிஸ்தவன் அங்கு வாழும் ஹிந்து அல்லது முஸ்லிமுக்கு எதிராகச் சொல்லப்படும் குற்றச்சாட்டிற்கு மிகுந்த முக்கியத்தும் அளிக்கப்பட்டு அவன் கிறிஸ்தவனாக மதம் மாறுவதாக அறிவிக்கும் வரையில் துன்புறுத்தப்பட்டான்.  இருப்பினும் அவர்களின் கலாச்சாரம், உடைகள் போன்றவற்றை மாற்றுவதற்கு போர்ச்சுக்கீசியர்கள் முயலவில்லை. “

[தொடரும்]

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *