கொலைகாரக் கிறிஸ்தவம் – 4

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.

தொடர்ச்சி..

ஸ்பெயினில் வாழ்ந்த யூதர்கள்மீது ஆரம்பத்தில் இரக்கப்பட்டுப் பின்னர் அவர்களை ஸ்பெயினிலிருந்து விரட்டியத்தவர்களான ஸ்பெயின் அரசர் ஃபெர்டினெண்டும் அவரது மனைவி இஸபெல்லாவும் போர்ச்சுகல்லின் புதிய அரசனான மெனுவலை மணந்த அவர்களது மகளின் கோரிக்கையை இன்னும் ஒருபடி மேலே எடுத்துச்சென்றார்கள். அதன்படி ஸ்பெயினிலிருந்து போர்ச்சுகலில் குடியேறிய யூதர்களுடன் அங்கேயே காலம் காலமாக வசித்த, அந்த நாட்டுக் குடிமக்களான, யூதர்களையும் அங்கிருந்து விரட்டியடிக்கவேண்டும் எனக் கோரிக்கவிடுத்தார்கள். அந்த அளவிற்குக் கிறிஸ்தவ அடிப்படைவாதம் அவர்களின் கண்ணை மறைத்தது.

எனவே அரசன் மேனுவல் அந்தக் கோரிக்கையை ஏற்று, 1446-ஆம் வருடம் போர்ச்சுகலில் குடியிருக்கும் அத்தனை யூதர்களும் அங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டும், அல்லது கிறிஸ்தவ மதத்தைத் தழுவவேண்டும் என உத்தரவிட்டான். அந்த உத்தரவை மீறுபவர்கள் உடனடியாகக் கொல்லப்படுவார்கள் எனவும், அவர்கள் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. நாட்டை விட்டுச்செல்ல விரும்பும் யூதர்கள் அனைவரும் தங்களின் உடமைகளைத் தங்களுடன் எடுத்துச்செல்லலாம் எனவும், அதற்குத் தேவையான வாகனப் போக்குவரத்துச் சாதனங்களும் அவர்களுக்கு அளிக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

மேற்படி உத்தரவு போர்ச்சுகலில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கும் பொருந்தும் என ஆரம்பத்தில் கூறப்பட்டாலும், பிற இஸ்லாமிய நாடுகளின் கோபத்தை அது சம்பாதிக்கும் என்பதால், பின்னர் கைவிடப்பட்டதாகவும் தெரிகிறது.  மேனுவலின் உத்தரவைக் கேட்ட யூதர்களில் பெரும்பகுதியினர் கிறிஸ்தவர்களாக மதம்மாறுவதனை விரும்பவில்லை. அதற்கு மாறாக அந்த நாட்டைவிட்டுச் சென்றுவிடவே விரும்பினர்.  

போர்ச்சுகல்லைவிட்டுச் செல்லவிரும்பும் யூதர்களின் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அனைவரும் அவர்களின் பெற்றோர்களிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கிச் செல்லப்பட்டு கிறிஸ்தவர்களாக வளர்க்கப்படுவார்கள் என, தொடர்ந்து விதிக்கப்பட்ட இன்னொரு உத்தரவு அறிவித்தது. இந்த உத்தரவுகள் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கையில், போர்ச்சுகலிலிருந்து தப்பிச்செல்ல நினைக்கும் யூதர்களைக் கசக்கிப் பிழியும் வெவ்வேறு அரசு உத்தரவுகளும் தொடர்ந்து வெளியிடப்பட்டன.

முதன் முதலாக வெளியிடப்பட்ட அரசு உத்தரவானது, போர்ச்சுகலைவிட்டுச் செல்லநினைக்கும் யூதர்கள் அனைவரும் ஒபார்ட்டோ, லிஸ்பன் மற்றும் அல்கார்வே துறைமுகங்களை உபயோகித்துக் கொள்ளலாம் என அறிவித்தது. பின்னர், அனைவரும் லிஸ்பன் துறைமுகம் வழியாக மட்டுமே நாட்டைவிட்டுச் செல்லவேண்டும் என அது மாற்றம் செய்யப்பட்டது. மேலும் துறைமுகங்களில் கப்பல்கள் கிடைப்பதற்கு மிகுந்த சிரமமேற்பட்டதால் அவர்கள் தங்களுடன் ஆடைகளையும் பிற அத்தியாவசியச் சாதனங்களையும் மட்டுமெ எடுத்துச் செல்லப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த இரக்கமற்ற செயல்களைப் பற்றிக் குறிப்பிடும் எ. ஹெர்குலானோ என்னும் வரலாற்றாசிரியர், சிறிதும் மனிதாபமற்ற, குக்ரூரமான இந்த உத்தரவுகள் செயல்படுத்தப்படுகையில் ஏற்படும் வேதனைகளை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். யூதத் தாய்மார்களின் கைகளிலிலிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கிச் செல்லப்பட்ட குழந்தைகளில் அழுகுரலும், அந்த யூதத் தாய்மார்களின் ஓலமும் போர்ச்சுகல் எங்கும் ஒலிக்க ஆரம்பித்தது. அதனைத் தடுக்க முயன்ற அந்தக் குழந்தைகளின் தந்தையர்களும், அன்னையர்களும் மிகக் கடுமையான முறையில் தாக்கப்பட்டார்கள். தங்களின் குழந்தைகளை பிரிவதற்கு மறுத்த யூத அன்னையர்களும், தந்தையர்களும் அந்தக் குழந்தைகளைத் தங்களின் கைகளினால் கழுத்தை நெருக்கிக் கொன்றார்கள். கிணற்றில் தூக்கியெறிந்து அவர்களை மூழ்கடித்துக் கொன்றார்கள், என விளக்குகிறார்.

இந்தியாவின் கோவாவில் போர்ச்சுக்கீசியர்கள் ஆண்ட பகுதியில் ஹிந்துக்களுக்கு இதே நிலைமை ஏற்பட்டது என்பதினையும் இங்கு நாம் நினைவில்கொள்ளவேண்டும்.

போர்ச்சுகலில் முதலில் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மட்டுமே அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் கிறிஸ்தவர்களாக வளர்க்கப்படவேண்டும் என்கிற உத்தரவு மாற்றப்பட்டு, பின்னர் 20 வயதிற்கு உட்பட்ட யூதக் குழந்தைகள் அனைவரும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவேண்டும் என மாற்றம் செய்யப்பட்டது.

யூதர்கள் போர்ச்சுகலை விட்டுச்செல்லக் குறிப்பிட்ட காலகட்டம் நெருங்கிவருகையில், அங்கு செல்வாக்குடன் வாழ்ந்து வந்த யூதக் குடும்பங்கள் தாங்கள் அங்கிருந்து வேறு நாடுகளுக்குத் செல்வதற்குத் தேவையான கப்பல்களை அரசாங்கம் தரவேண்டுமென அரசன் மேனுவலிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். அவ்வாறு இல்லாத கட்டத்தில் தங்களுக்குத் தேவையான கப்பல்களைத் தாங்களே பணம் கொடுத்து ஏற்பாடு செய்து கொள்வதாகவும் கூறினார்கள். அதற்குச் செவி சாய்க்கும் அரசன் மேனுவல் அவர்கள் அனைவரையும் லிஸ்பன் நகரில் வந்து கூடுமாறும் அங்கு அவர்களுக்குத் தேவையான பயண ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றும் உறுதியளிக்கிறான்.

இதனை நம்பிய ஏறக்குறைய 20,000 யூதர்கள் லிஸ்பனிலிருக்கும் எஸ்டோஸ் என்கிற இடத்தில் வந்து கூடினார்கள். ஆனால் அங்கு அவர்களுக்கு மிகவும் கொடூரமான விதி காத்துக்கொண்டிருந்தது.  அவர்களைச் சூழும் போர்ச்சுகல் அதிகாரிகள் அங்கிருந்த அனைத்து யூதக் குழந்தைகளையும் ஆண், பெண் வயது வித்தியாசமின்றி கட்டாயமாகப் பிடித்துக்கொண்டு சென்று அவரகளைக் கத்தோலிக்கர்களாக ஞானஸ்னானம்செய்வித்து, கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்தார்கள்.

இதனைக் குறித்துக் எ. ஹெர்குலானோ இவ்வாறு கூறுகிறார்: சிறுவர், சிறுமிகளையும் மற்றும் இருபதுவயதிற்கு உட்பட்டவர்களையும் கட்டாயமாக கிறிஸ்தவரகளாக மதமாற்றம்செய்ததுடன் இது நின்றுவிடவில்லை. அதனைத் தொடர்ந்து வயதுவந்த ஆண், பெண், முதியோர்களும் இவ்வாறு கட்டயாமாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள். வரமறுத்தவர்களின் தலைமுடியைப் பிடித்துத் தெருக்களில் இழுத்துச்சென்று அவர்களுக்குச் சர்ச்களில் ஞானஸ்நானம் செய்துவைக்கப்பட்டது. நாட்டைவிட்டு வெளியேறமுடியாத நலைக்குத் தள்ளப்பட்ட பெரும்பாலான இந்த பரிதாபத்திற்குரிய யூதர்கள் கண்ணீர்விட்டுக் கதறி அழுதார்கள்.

தங்களைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே தங்களுக்கு எதிராக இந்தக் கொடுமைகளைச் செய்ததால், தங்களின் துயரங்களிலிருந்து எவரும் பாதுகாக்க இல்லாத நிலைமையை எதிர்கொள்ள நேரிட்டது. மதம்மாற மறுத்தால் மரணம் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்ட யூதர்களில் பெருமளவினர் கிறிஸ்தவர்களாக மதம்மாறச் சம்மதித்தார்கள். இருப்பினும் அதனை எதிர்த்துநின்ற சிலர் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டுக் கொலைசெய்யப்பட்டார்கள். இன்னும் சிலர் ஆப்பிரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டார்கள்

இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற செயல்கள் கிறிஸ்தவத்தின் கோரமுகத்தின் அடையாளம் என்றாலும், நடந்த நிகழ்வுகள் அரசன் மேனுவலின் மனதில் பெரும் ரணத்தை உண்டாக்கின. புதிதாக மதமாற்றம் செய்யப்பட்டவர்களைச் சிறிது மென்மையாக நடத்தும் உத்தரவை மே 30, 1497-ல் பிறப்பித்தான், மேனுவல். அதன்படி புதிதாக மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் புதிய மதத்தைக் குறித்து அறிந்துகொள்ள இருபதாண்டுகால அவகாசம் தரப்பட்டது. அந்த இருபதாண்டுகாலத்திற்குப் பின்னரும் தங்களின் மதத்தைத் தொடர்ந்து வழிபடும் யூதர்களின் சொத்துக்கள் பறிமுதல்செய்யப்பட்டு அரசாங்க கஜானாவில் சேர்க்கப்படவேண்டும் எனவும் அந்த உத்தரவு விளக்கியது. இனிமேலும் யூதர்களைக் கொடுமைசெய்யும் சட்டங்களைத் தான் கொண்டுவரப் போவதில்லை எனவும் உறுதியளித்தான் மேனுவல்.

எனினும், புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மிகவும் அதிருப்தியான மனநிலையுடன் வாழ்ந்துவந்தார்கள். வெளிப்புறம் தங்களின்மீது திணிக்கப்பட்ட கிறிஸ்தவச் சடங்குகளைப் பின்பற்றுவதுபோல நடித்தாலும் அவர்களின் வீடுகளில் தங்களின் பூர்விக மதமான யூதமதத்தின் சடங்குகளை ரகசியமாகப் பின்பற்றியே வந்தார்கள். இஸ்ரேலின் யூதக்கடவுள் ஏன் தங்களைக் கைவிட்டுவிட்டது என ஏங்கி அழுதார்கள். இவ்வாறு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டவர்களைப் போர்ச்சுக்கீசிய கிறிஸ்தவர்கள் சந்தேகத்துடனேயே பார்த்தார்கள். அவர்களின்மீது காட்டுமிராண்டித்தனமான வன்முறைகளைப் பிரயோகித்தார்கள்.

எனவே, அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும், தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் கடுமையான விசாரணைகளை (இன்குசிஷன்) கொண்டுவரவேண்டும் எனவும் போர்ச்சுக்கீசிய கிறிஸ்தவர்கள் ஆவலுடன் இருந்தார்கள். இதனை உணர்ந்து கொண்ட பல புதிதாக மதம்மாறிய (மாற்றப்பட்ட) கிறிஸ்தவர்கள், அங்கிருந்து தப்பி அருகாமை நாடுகளான இத்தாலி, ஃப்ளாண்டர்ஸ் போன்ற நாடுகளுக்குச் செல்லத் தலைப்பட்டார்கள். எனவே, அவர்கள் போர்ச்சுகலில் இருக்கும் தங்களின் அசையாச் சொத்துக்களை ரகசியமாக விற்றுப் பணமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்கள்.

மதம்மாற்றப்பட்ட கிறிஸ்தவர்கள், ரகசியமாக சொத்துக்களை விற்பதனைத் தடுக்க போர்ச்சுக்கீசிய அரசாங்கம் வன்முறை நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தது. போர்ச்சுகலின் மதம்மாற்றப்பட்ட கிறிஸ்தவர்களின் சொத்துக்களை வெளிநாட்டினர் வாங்கக்கூடாது, அவர்களுக்குப் பணம் தரக்கூடாது எனவும், அவ்வாறு தங்களை அணுகுகிற மதம்மாற்றப்பட்ட கிறிஸ்தவனைக் குறித்து உடனடியாக எட்டு நாட்களுக்குள் அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தவேண்டும் எனவும் ஒரு உத்தரவு ஏப்ரல் 22, 1499-ஆம் வருடம் பிறப்பிக்கப்பட்டது. அதனால், கிறிஸ்தவனாக மதம் மாற்றப்பட்ட யூதன் தன்னுடைய மனைவி, மக்களுடன் வெளி நாடுகளுக்குப் போவதும் தடை செய்யப்பட்டதோடுமட்டுமன்றி, அரசனின் தனிப்பட்ட உத்தரவில்லாமல் வெளிநாடு செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

இதனை ஏற்கமறுத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டதுடன், அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

[தொடரும்]

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.

One Reply to “கொலைகாரக் கிறிஸ்தவம் – 4”

  1. Please cover Christian atrocities in other parts of the globe only briefly and come to our shores quickly. There is so much to write about their atrocities in India particularly south India. It will make reading more interesting.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *