தமிழ் மரபின் தலைமைப் பண்புகளும் திராவிடக் கட்சிகளும்

தலைமைத்துவம் தமிழ் மரபில் நான்கு குணங்களைக் கொண்டது. இவற்றையே தமிழ் இலக்கியங்கள் அனைத்தும்
தலைமைப் பண்புகள் என்று குறிப்பிடுகின்றன.

1. அஞ்சாமை

2. ஈகை

3. விவேகம்

4. செயலூக்கம்

திராவிட இயக்க அரசியல் இந்த நான்கையும் எப்படி சித்தரிக்கிறது என பார்க்கலாம்.

1. அஞ்சாமை

திராவிட அரசியல் என்பது தேச பிரிவினை , மக்கள் புலபெயர்வு, அந்நியர் தாக்குதல் ஆகியவற்றை அதன் நிலபரப்பில் பெருமளவு சந்திக்கவில்லை. ஒட்டு மொத்த பொது எதிரி என எதுவும் பெரிதாக இல்லை. ஹைதராபாத் ராசாக்கர்கள், மாப்பிளா கலவரம், இந்திய பாகிஸ்தான் பிரிவினை , நேரடி முகலாயர் ஆட்சி , போர்சசுகீசியர் ஆட்சி என எந்த பொது நியாபகமும் இல்லை. தமிழகம் முழுதும் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்தது ஒட்டு மொத்தமாக தொகுக்கப்பட்ட நேரேட்டிவ் ஆகவில்லை. ஆகவே அஞ்சாமை என்பதை பெரிய குறியீடாக ஆகவில்லை. சுதந்திரத்துக்கு பின்னரே மத்திய அரசை சீண்டுதல் அஞ்சாமை என பழக்கப் படுத்தப்பட்டது. மக்களிடம் தலைமைத்துவ பண்பான அஞ்சாமை குறித்து இயல்பான எதிர்பார்ப்பு உண்டு. யார் ஒன்றுமே செய்ய மாட்டார்களோ அவர்களுக்கு நேராக செய்வது நல்லது என்ற நோக்கில் திராவிடம் மத்திய அரசை நோக்கி புஜம் மடிப்பது மோஸ்தரானது. பொதுவாக திருப்பி்அடிக்கும் தரப்புகளிடம் குனிந்தும், ஒன்றும் செய்யாதென உறுதி படுத்தப்பட்ட தரப்பிடம் கொந்தளிப்பதும் திராவிட மரபு.

புதிதாக உள்ளே வரும் கட்சிகள் (எ.கா: பா.ஜ.க) தங்களது அஞ்சாமை குணங்களைக் காட்ட வேண்டுமெனில் அஞ்சக்கூடிய எதிரி யார் என்பதை நிறுவி மக்களின் பொதுமனதில் கொண்டு சேர்க்கவேண்டும்.

2. ஈகை

ஈகை தமிழ் மன தொல் தொன்மம். வறியவருக்குப் பொருள் கொடுக்கக் கூடிய மனநிலை குறித்து மக்களிடம் எதிர்பார்ப்பு உண்டு.

திராவிட கட்சிகள் இந்த எதிர்பார்ப்பினை பூரணமாக உணர்ந்தவை. ரூபாய்க்கு மூன்று படி அரிசி முதல், அம்மா உணவகம் வரை அதைக் காணலாம். திராவிட கட்சிகள் ஈகை என்பதை கொச்சையாக்கி , ஊழலுக்கு அதை மக்களின் பலவீனமான பேராசையை நோக்கி திருப்பினார்கள். பிறர் பொருளை விரும்புதல் குற்றமில்லாத அறிவு என்பதை விரித்து, கிடைப்பதை எடுப்பது புத்திசாலித்தனம் என ஆக்கினர். அதை ஈகை என நிறுவினர்.

புதிதாக உள்ளே வரும் கட்சிகள் தங்களது ஈகையை நிரூபிக்க வேண்டும். அதை targeted ஈகை என மாற்றுவது அவசியம்.

தன் பொருள் அல்லாதது ஆக்கம் தரும் என்றாலும் விரும்பாது இருக்கும் குணத்தினை சமூகத்தில் மீட்டெடுக்க வேண்டும். சர்க்கார் படம் நினைவுக்கு வரலாம்.

3. விவேகம்

எது தேவை , எது தேவையில்லை என அறிந்து ஆற்றும் விவேகம் வேண்டும்.

திராவிட கட்சிகளின் விவேகம் என்னவெனில். தமிழரை ஜாதிக்குழுக்களாய் சேராது நிர்வாகம் செய்தல். பின்னர் சேராது இருப்பதையே தாங்கள் ஆள்வதற்கான காரணமாக சொல்லுதல். ஆட்சியை கைக்கொள்ள எது தேவை, எது தேவையில்லை என அறிவர்.ஆழமுள்ள நீரில் முதலை வெல்லும், ஆனால் நீரை நீங்கினால் முதலையை பிற உயிர்கள் வெல்லும். ஜாதிக்குழுக்களாக சிதறடிக்கும் இடத்தில் தங்களை வைத்துக்கொண்டு அதிகாரத்தை தக்க வைக்க வேண்டுமென்ற விவேகம் திராவிட கட்சிகளுக்கு உண்டு.

பொருளாதார முன்னேற்றம் என்பது முன்னேற்றம் இல்லை என நிறுவுதல் இன்னொரு திராவிட இயக்க ஸ்பெஷல் அம்சம். அவர்களுக்கு அதுவே தேவை. சமூக முன்னற்றம் என்பதும் 500 முதல் 5000 ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்ட ஒன்றாகவும் நிறுவி உள்ளார்கள். திராவிட கட்சிகளின் இந்த விவேகம் அசர வைப்பது. மார்க்கெட் (சந்தை) பொருளாதாரம் உலகெங்கும் பரவலாக உள்ள சூழலில், “பொருளாதார முன்னேற்றம் முன்னேற்றம் ஆகாது” என சித்தாந்தம் உருவாக்குதல் எளிதல்ல.

அதானாலேயே அவர்கள் புதிதாக வரும் கட்சிகளையும் தாங்கள் பலம் கொண்ட விவாத வடிவில்தான் அணுகுவார்கள்.

புதிதாக வரும் கட்சிகள் தாங்கள் பலம் கொண்ட இடத்துக்கு திராவிட கட்சிகளை இழுக்கும் விவேகம் கொண்டால் விவாதம் (நேரேட்டிவ்) சூடு பிடிக்கும். வேல் ஏந்திய வீரர்களை தாக்கும் யானையும் சேற்றில் சிக்கினால் நரிக்கு இரையே.

4. செயலூக்கம்

பல வருடம் பதவி சுகம் இல்லாத பொழுதும் ஊக்கத்தினை இழக்காது சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையிலும், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையிலும் அடித்தளத்தில் செயலை நிலைக்கொள்ள செய்தல் தலைமை பண்பாகும். திராவிட தலைமைகள் விரிவான தொண்டர் படையை கொண்டவை. இணையத்துக்கு வெளியேயான அவர்களது சமூக வலைத்தளம் (சோசியல் நெட்வொர்க்) செயல்படும் விதம் படு திறமையானது. இதனை, இதனால், இவன் முடிக்கும் என ஆய்ந்து செயல்படுவர். தேமுதிக, மதிமுக என போட்டிக்கு வந்த கட்சிகளை உடைத்த பாங்கு மற்ற கட்சிகளிடத்து அந்த திறமை இல்லை என்பதை காட்டும். மீடியா, நீதித் துறை, போலீஸ் , அரசூழியர் என எல்லா இடத்திலும் ரிஸ்க் எடுத்து செயல்படும் ஆட்களை உருவாக்கி உள்ளனர்.

புதிதாக வரும் கட்சிகள் மிகப்பெரிய களப்பணி (க்ரவுண்ட் வொர்க்) இல்லாத வெறும் இரண்டாம் மட்ட, மூன்றாம் மட்ட தலைமைகளோடு் திராவிட கட்சிகளிடம் சென்றால் எளிதில் கரைய வாய்ப்புண்டு. அடிமட்ட தொண்டர்களிடத்து நீடித்த செயலூக்கம் உருவாக்குதல் எளிதல்ல. திராவிட கட்சிகளுக்கும் சமீபத்தில் இந்த சவால் உண்டு . ஆகவேதான் அவர்கள் சர்ச், ஜமாத் என ஓட்டு வங்கிகளை அணுகுகிறார்கள். அந்த இடத்தில் செயலூக்கத்தை திராவிட கட்சிகள் விதைக்க வேண்டியது இல்லை. அதை அந்த மத அமைப்புகளே பார்த்துக் கொள்ளும். திராவிட கட்சிகள் மொத்த பேரம் பேசினால் போதும். வாக்குகளுக்கு திராவிட கட்சிகள் காசு தருவதும் அவர்கள் உருவாக்கிய செயலூக்க வடிவத்தையே காட்டுகிறது. இப்போதைக்கு வாக்குக்கு காசு விநியோகம் செய்பவரின் செயலூக்கம் போதும், காசு வாங்குபவரின் செயலூக்கம் நிர்வாகத்துக்கு வெளியேயானது என்ற நிலையை பரிசீலிக்கின்றனர்.

ஒருமித்த சமுதாய நோக்கம் (Shared purpose) என்பதன் வழியே செயலூக்கம் உருவாக்குவது எளிதல்ல. புதிய கட்சிகளுக்கு இது அவசியமாக இருக்கலாம். ஆனால் திராவிட கட்சிகள் இருப்பதை நிர்வாகம் செய்து அடுத்தவர் வளராமல் பார்க்கவே முயல்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *