கொலைகாரக் கிறிஸ்தவம் — 14

Related image

கோவாவின்  ஹிந்துக்களுக்குத் தலைவனாக இருந்த கிருஷ்ணா என்பவன் அடில்ஷாவால் சிறைப்பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அவனது மகனான தாதாஜி என்பவன் ஹிந்துக்களுக்குத் தலைவனானான். எனினும் அவன் கோவா ஹிந்துக்களை மதம்மாற்ற நினைக்கும் போர்ச்சுக்கீசியர்களுக்கு உதவ மறுத்து அவர்களை எதிர்த்தான். எனவே அவனை அந்தப் பதவியிலிருந்து நீக்கிய போர்ச்சுக்கீசியர்கள் அவனுக்கு பதிலாக லக்‌ஷ்மன் என்பவனை நியமித்தார்கள். அந்த லக்‌ஷ்மன் போர்ச்சுக்சியர்களின் அத்தனை நிபந்தனைகளுக்கும் உட்பட்டுத் தனது குடும்பத்துடன் கிறிஸ்தவனாக மதம்மாறினான்.

நவம்பர் 28, 1548-ஆம் வருடம் ஜொகோவோ-டெ-அல்புகர்க்கி போர்சுக்கீசிய அரசன் மூன்றாம் ஜொகோவோவிற்கு எழுதிய கடிதம் இது,

“நேற்றைக்கு நமது பாதிரிகள் லோக்குவை (லக்‌ஷ்மண்) கிறிஸ்தவனாக மதம்மாற்றம் செய்து அவனுக்கு லோக்குதாஸ்-டி-சா எனப் பெயர் சூட்டினார்கள். கோவாவின் ஹிந்து தலைவர்களில் அவன் இரண்டாம் இடம் வகித்தவன். மேலும் ஹிந்துக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன். மிகப் பெரிய விவசாயியும், பணக்காரனுமான லோக்கு மேன்மைதங்கிய அரசரருக்கு விசுவாசமாக இருந்து நெடுங்காலம் தங்களின் கீழ் பணிபுரிவான் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு முன்னர் அவனும் ஹிந்துக்களுக்கு எல்லா உதவிகளும் செய்து அவர்களைக் கிறிஸ்தவர்களாக மதம் மாறுவதிலிருந்து தடுத்தவன் என்றாலும் கிருஷ்ணாவிற்குப் பிறகு அவனுக்குப் பொறுப்புகள் வருவதற்காகத் தன்னைக் கிறிஸ்தவனாக மதம் மாற்றிக் கொண்டான்.

“லோக்குவுடன் அவனது மனைவியும், இரண்டு உதவியாளர்களும், இன்னொரு சொந்தக்காரனும் மற்றுமொரு உறவுப் பெண்ணும் கிறிஸ்தவர்களாக மதம்மாற்றம் செய்யப்பட்டார்கள். இவனது உதவியுடன் நானும் மற்ற பாதிரிகளும் சேர்ந்து இந்தத் தீவை இன்னும் இரண்டுவருடங்களுக்குள் முழுமையாக கிறிஸ்தவர்கள் நிறைந்த பகுதியாக ஆக்குவேன் என உறுதியளிக்கிறேன்”.

லோக்குவின் மதமாற்ற விழா பெரிதும் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டாடப்பட்டது. கோவாவின் கவர்னர் கலந்துகொண்ட அந்த விழாவில் கவர்னரே அவனுக்கு மதத்தைக் குறித்துக் கற்றுக்கொடுக்கும் பொறுப்பாளராக (Godfather)  இருந்தார். லோக்குவுக்கும், அவனது மனைவிக்கும், மருகனுக்கும் லூகாஸ், இஸபெல், அண்டோனியோ எனப் பெயரிடப்பட்டது. அவர்கள் குதிரைகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கோவாவின் பல முக்கியஸ்தர்களும் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

வைசிராய் ஜெனரலான பாதிரி மின்குல் வாஸ் கோவாவில் ஹிந்துக்களிடையே கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப பெரும் சிரத்தையும், முயற்சிகளும் மேற்கொண்டார். செயிண்ட் பால் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு, அதனைப் பராமரிக்க, இடிக்கப்பட்ட ஹிந்துக்கோவில்களின் வருமானம் உபயோகப்படுத்தப்பட்டது. எனினும் ஹிந்துக்களின் வழிபாட்டைத் தடுப்பது அத்தனை எளிதான ஒன்றாக இருக்கவில்லை. எனவே கடுமையான நடவடிக்கைகள் எடுத்தாலன்றி கோவா ஹிந்துக்களை மதம் மாற்றுவது என்பது நடக்கப் போவதில்லை என்பதனை போர்ச்சுக்கீசிய ஆட்சியாளர்கள் உணர்ந்துகொண்டனர்.

அந்தக் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு போர்ச்சுக்கீசிய அரசரின் சம்மதம் தேவையாக இருந்தது. அதனைப் பெறுவதற்காக பாதிரி மின்குல் வாஸ் போர்ச்சுக்கலுக்குச் சென்று, கோவாவை கிறிஸ்தவப் பகுதியாக மாற்றுவதற்குத் தேவயான 41 கருத்துகளை எழுதி, போர்ச்சுக்கல் அரசரின் பார்வைக்கு அனுப்பிவைத்தார். கோவாவில் ஹிந்துக்களை மதம்மாற்றுகையில் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளின் பின்னணியில் இருந்த 41 சட்டங்களிலிருந்து சில பகுதிகளை இங்கு காண்போம்,

“3. சிலை வழிபாடு செய்வது கடவுளுக்கு எதிரான மிகப்பெரும் குற்றம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. எனவே கோவா உட்பட, கிறிஸ்து வழிபாட்டினைத் தவிர்த்து எந்தவொரு கோவிலோ அல்லது ரகசிய வழிபாடுகளோ இல்லாமல் தடை விதிக்கவேண்டும். அவ்வாறு வழிபடுகிறவர்களுக்கு கடுமையான தண்டனைகளை அளிக்க வேண்டும். கோவாவின் எந்தவொரு அதிகாரியும் சிலைகளை எந்த ரூபத்திலும் செய்யக்கூடாது. அதனைத் தடை செய்ய வேண்டும்.  கோவா தீவின் எந்தப் பகுதியிலும் ஹிந்துத் திருவிழாக்கள் நடைபெறுவதினைத் தடைசெய்ய வேண்டும். பிராமணப் பூசாரிகள் தீவுப்பகுதியிலிருகும் எந்தவொரு ஹிந்துவின் வீட்டிற்குள்ளும் நுழையாதிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு ஹிந்துவின் வீட்டில் சிலைகள் இருப்பதாகச் சந்தேகம் இருந்தல் செயிண்ட் பால் சர்ச்சில் இருக்கும் பாதிரிகளும் மற்ற ஊழியர்களும் அந்த ஹிந்துக்களின், பிராமணர்களின் வீடுகளுக்குள் நுழைந்து அவர்களின் வீட்டைச் சோதனையிடும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.

“4. இந்தத் தீவுப்பகுதிகளில் சன்னியாசி பிராமணர்கள் என்கிற ஒருபிரிவினர் கிறிஸ்துவர்களாக மதம்மாறுவதற்கு மறுப்பது மட்டுமன்றி, அங்கிருக்கும் ஹிந்துக்களும்  கிறிஸ்துவர்கள் மதம்மாறுவதற்குத் தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முஸ்லிம்களுக்கு நம்பகமானவர்களாகவும் இருப்பதால், பிரச்சினைக் காலங்களில் நம்முடைய அரசாங்கத்திற்குச் சாதகமானவர்களாக நடந்துகொள்வார்கள் என்பது சந்தேகமே. துரோகிகளான முஸ்லிம்கள் நூனோ-டி-குன்ஹா காலத்தில் நடந்துகொண்ட முறையை நான் இங்கு நினைவூட்டுகிறேன். எனவே நமது மதமாற்ற முயற்சிகளுக்குத் தடையாக இருக்கும் இந்த சன்னியாசி பிராமணர்களும் அவர்களது தலைவர்களும் கோவா பகுதியைவிட்டு வெளியேற்றப்படவேண்டும். அவர்கள் மீண்டும் உள்ளே நுழைவதற்கும் தடைகள் விதிக்கவேண்டும்.

“5. கடவுளுக்கும், அரசருக்கும் நன்மைபயக்கும் விதமாக, கோவா நகரத்திலிருக்கும், நமது மதமாற்ற விவகாரங்களுக்குப் பெரும் தடையாக இருக்கும் ஹிந்து பிராமணனான அனு சைனாய் என்பவனை நமது பொருட்களுக்குத் தரகனாக இருப்பதிலிருந்து உடனடியாக விலக்கவேண்டும்.

“6. அரசரின் ராஜ்ஜியத்திற்குள் வரும், வெளியே செல்லும் கடிதங்கள் அனைத்தையும் மொழிபெயர்க்க அரசாங்க மொழிபெயர்ப்பாளர்களை உடனடியாக நியமிக்கவேண்டியது அவசியம். போர்ச்சுக்கீசிய கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான விஷயங்கள் எதுவும் ஹிந்துக்களின் கையில், முக்கியமாக கிறிஸ்தவ எதிர்ப்பாளனான கிருஷ்ணாவின் மகனின் கையில் சிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

“7. பரமண்டலத்திலிருக்கும் பிதா நமது பகுதிகளான சால்செட்டே மற்றும் பார்டெஸ் பகுதிகளை அடில்ஷாவிடமிருந்து காத்துநிற்கிறார். எனவே நமது பிதாவுக்குச் செய்யும் மரியாதையாக மேற்கண்ட பகுதிகளிலும் சிலை வழிபாடுகளையும், வழிபாட்டிடங்களையும் அடையாளம் தெரியாமல் அழித்தொழிக்கவேண்டும் எனவும் அரசரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

“9. கோவாவில் யாரேனும் இறந்துவிட்டால் அவனது சொத்துக்கள் அனைத்தும் அவனது மகனோ அல்லது மகளுக்கோ சேராமல் முழுமையாக அரசரின் வசமே வந்துவிடுகிறது. இது சரியான ஒன்றல்ல என நான் கருதுகிறேன். கவர்னர் மார்ட்டின் அல்போன்ஸோ சமீபத்தில் இட்ட உத்தரவின்படி அசையும் சொத்துக்களைப் பிள்ளைகளும் அசையா சொத்துக்களை அரசருக்கும் பிரிக்க உத்தரவிட்டிருக்கிறார். அதற்குப் பதிலாக அந்தப் பிள்ளைகள் கிறிஸ்தவர்களாக மதம்மாறினால் அந்தச் சொத்துக்கள் அனைத்தையும் அவர்களே அனுபவிக்கலாம் என உத்தரவிடுவது நல்லதென நான் எண்ணுகிறேன்.”

போர்ச்சுக்கீசிய அரசன் மூன்றாம் ஜெவாவோ உடனடியாக இந்துக்கள்மீதும், பிராமணர்களின் மீதும் மின்குல் வாஸ் சிபாரிசுசெய்த நடவடிக்கைகளை எடுக்கும்படி மார்ச் 8, 1547-ஆம் ஆண்டு உத்தரவிட்டான்.

ஹிந்துக்களின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்படி பணித்த மின்குல் வாஸ் பாதிரி விஷம்வைத்துக் கொல்லப்பட்டதாக வரலாற்றாசிரியர் ஃப்ரான்ஸிஸ்கோ-டி-சூசா, “போர்ச்சுக்கீசிய அரசருக்கு மிக நெருக்கமானவரான பாதிரி மின்குல் வாஸ், போர்ச்சுக்கல்லுக்குச் சென்று திரும்பிய சிறிது காலத்திற்குள்ளாகவே ஹிந்துக்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார். அரசனிடமிருந்து பெற்றுவந்த அளப்பரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி கோவாவிலிருந்த ஹிந்துக் கோவில்களை இடித்தும், ஹிந்துக்களைத் துன்புறுத்தியும் வந்ததால் ஹிந்துக்களின் கோபத்தைச் சம்பாதித்திருந்த மின்குல் வாஸ் இறுதியில் ஹிந்துக்களால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார்,” எழுதியிருக்கிறார்.

அல்பர்கர்க்கினால் வெல்லப்பட்ட பகுதிகள் கோவா தீவும் மற்றும் அதன் அருகாமைப் பகுதிகளான திவார், சோரோ மற்றும் ஜுவா ஆகியவையாகும். அந்த பகுதியிலிருந்த அத்தனை ஹிந்து ஆலயங்களும் 1540-ஆம் ஆண்டுவாக்கில் இடித்துத் தகர்க்கப்பட்டன.  1543-ஆம் வருடம் இப்ராஹிம் அடில்கான் பார்டெஸ் மற்றும் செலெஸ்டெ பகுதிகளை போர்ச்சுக்கீசியர்களின் வசம் ஒப்படைத்தான். அந்தப் பகுதிகளில் இருந்த ஆலயங்களையும் இடித்துத் தகர்க்கவேண்டும் எனக் கூறிய மின்குல் வாஸ் எல்லா ஆலயங்களும் இடிக்கப்படுவதற்கு முன்னர் 1547-ஆம் வருடம் இறந்து போனான். எனவே, செலாட்ஸ், பார்டெஸ் பகுதிகளிலிருந்து ஆலயங்களும், ஹிந்து திருவிழாக்களும் அழிவிலிருந்து தற்காலிகமாகத் தப்பின.

இருப்பினும் ஆகஸ்ட் 29, 1566-ஆம் வருடம், வைசிராய் அண்டோ-டி-நூரன்ஹா மேற்கண்ட பகுதிகளில் புதிதாக ஹிந்து ஆலயங்கள் கட்டுவதற்கும், இடிந்த ஆலயங்களைச் செப்பனிடுவதற்கும் தடை விதித்து, அப்படிச்செய்தால் அவை இடிக்கப்படும் எனவும், அதற்கு ஆகும் செலவினை ஹிந்துக்களே தரவேண்டும் எனவும் உத்தரவிட்டான்.

[தொடரும்]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *