ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 6

2015, ஏப்ரல் 10ம் தேதி, பாரதப் பிரதமர் நரேந்திர மோதி பாரிஸ் நகரில், “நான் அதிபரை [பிரான்ஸ்வா ஹாலன்ட்] பறக்கும் நிலையுள்ள 36 ராஃபேல் போர்விமானங்களை வழங்கும்படி கேட்டிருக்கிறேன். [ I have asked President (Francois Hollande) to supply 36 ready-to-fly Rafale jets to India.]” என்று தனது பிரெஞ்சுப் பயணத்தின் முதல்நாளில் செய்திக் கூட்டத்தில் அறிவித்தார்.

நூற்று இருபத்தாறு விமானங்களை வாங்கப்போவதாகச் சொல்லிவிட்டுத் திடுதிப்பென்று முப்பத்தாறு விமானங்கள்தான் வாங்குவோம் என்று பாரதம் எப்படிச் சொல்லலாம், அது டசோல் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறுவதாகாதா, முதன்முதலில் எச்.ஏ.எல். நிறுவனம் நூற்றெட்டு விமானங்களை உற்பத்திசெய்யும் என்பதும் என்னவாயிற்று, ‘இந்தியாவில் தயாரியுங்கள்’ என்பது வெறும் வாய்ப்பந்தல்தானா என்ற கேள்வியும் பலர் மனதில் எழலாம்.

அதற்கு விடையளித்துவிட்டு[1] மேலே தொடருவோம்:

  • முதலில் டசோல் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் இறுதியாக்கப்படவில்லை.
  • நாற்பதாண்டுகள் போர்விமானங்கள் நல்லபடியாக இயங்குவதற்குத் தேவையான விவரங்கள் அதில் சேர்க்கப்படவில்லை.
  • விமானங்களைப் பாரதத்தில் உருவாக்க டசோல் நிறுவனம் கொடுத்த வேலை நேரத்தைவிட் {man-hours} எச்.ஏ.எல். நிறுவனம் கிட்டத்தட்ட இரண்டேமுக்கால் அளவு அதிகநேரம் கேட்டது. அதாவது, 3,10,00,000 மணிகளுக்குப் பதிலாக, 8,37,00,000 மணிநேர உழைப்பு வேண்டும் என்று வாதிட்டது. அதை டசோல் ஒப்புக்கொள்ளவில்லை.
  • இன்னொரு மிகவும் முக்கியமான, மிகவும் வருந்த்ததக்க விஷயம் எச்.ஏ.எல். நிறுவனத்தின்மீதிருந்த தரக்கட்டுப்பாடு அவநம்பிக்கைதான்.  அமேரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் காலத்தில் டிமத்தி ரோமர் [Timothy Romer] என்பவர் அமெரிக்க அரசுக்குக் கொடுத்த இரகசிய அறிக்கையில் போயிங்/லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனங்களுடன் கூட்டுச்சேர்ந்து இயங்கத் திறமையற்றது என்று எச்.ஏ.எல். நிறுவனத்தைப்பற்றி தெரிவித்திருந்தது.  ஏனெனில் அவ்விரு அமெரிக்க நிறுவனங்களும் தத்தம் விமானங்களைப் பாரதத்திற்கு விற்கமுயன்றுகொண்டிருந்ததை முன்னமேயே கண்டிருக்கலாம்.
  • இந்த அறிக்கை எப்படியோ டசோல் நிறுவனத்தின் கைக்குக் கிட்டியவுடன், அப்பொழுது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஏ.கே. அந்தோனியின் அனுமதியுடன் நாசிக்கிலுள்ள எச்.ஏ.எல். நிறுவனத்தைத் தரக்கட்டுப்பாடுச் சோதனை நடத்தப்பட்டது.
  • டசோலின் அறிக்கையைப் படித்த பிரெஞ்சு அரசு, ராஃபேல் விமானம் எச்.ஏ.எல். நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டால் தரமாக இருக்கமுடியாது என்ற தனது அதிருப்தியைத் தெரிவித்தது.
  • அதற்குக் காரணம் எச்.ஏ.ஏல். நிறுவனம் சுகோய் எஸ்.யு-30 போர்விமானங்களை தயாரிக்கும்போது நேரும் இடர்பாடுகள்தான்.  இப்படியிருக்கும்போது தங்களது போர்விமான உற்பத்தியில் தாங்கள் பெற்றிருக்கும் உலகப் புகழை இழக்கத் தயாராக இல்லை என்று 2014 துவக்கத்தில் டசோல், பிரஞ்சு அரசுக்குத் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.
  • இதில் மிகவும் அவமானமான சொற்றொடர் என்னவென்றால், “அவர்களின் [எச்.ஏ.ஏல்] உற்பத்திக்கூடம் ஒழுங்கற்றமுறையில் [கசாப்புக்கடைபோல] இருக்கிறது” என்று குறிப்பிட்டதுதான்.
  • இப்படிக் குறிப்பிட்டது அமைச்சர் அந்தோணிக்குப் பிடிக்காததால் அவர் காட்டமாகப் பதிலளித்தார்.  இருப்பினும் பிரெஞ்சு அரசு ராஃபேல் விமான உற்பத்தியில் (எச்.ஏ.ஏல் நிறுவனத்தில்) தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

ஆக, டசோல் நிறுவனம் [அதுமட்டுமல்ல, அமெரிக்க விமான நிறுவனங்களும்கூட] பாரதத்தில் — எச்.ஏ.ஏல் நிறுவனத்துடன் இணைந்து விமான உற்பத்திசெய்ய முடியாது என்று தெரிவித்தபின்னர் பாரதத்தின்முன் நின்ற பெரும் பிரச்சினை இதுதான்:

  • டசோல் நிறுவனத்துடன் ஓப்பந்தம் இழுபறியாக இருக்கும்போது — 2001லிருந்து 2014வரை பாரத விமானப்படைக்குப் புது தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட புது போர்விமானங்கள் வராத நிலையில் என்ன முடிவை எடுக்க முடியும்?

எப்படியாவது முழுதாக, பறக்கும் நிலையிலுள்ள, பாரதம் விரும்பும் தொழில் நுட்பங்களுள்ள, தாக்கும் திறனுள்ள, தளவாடங்களுள்ள, பாரத விமானப்படைத் தலைமை விரும்பும் போர்விமானமான ரஃபேலை உடனே பெறவேண்டும் என்றால் – அதைப் பிரெஞ்சு அரசின் மூலம்தான் அடையமுடியும் என்ற நிலைமை பாரதத்திற்கு ஏற்பட்டது.

டஎப்பொழுது பிரெஞ்சு அரசு மறுத்துவிட்டதோ, அப்பொழுது ராஃபேல் விமானம்தான் வாங்கவேண்டுமா, யூரோஃபைட்டர் டைஃபூன் விமானத்தை வாங்கியிருக்கலாமே என்ற கேள்வி எழலாமல்லவா?

ஆகவே, இந்த இரு விமானங்களையும் ஒப்பிடலாமா?

மேலே இருப்பது டைஃபூன்; கீழே ராஃபேல்
  • ராஃபேலின் ராடார் தொழில்நுட்பத்திறனில் யூரோஃபைட்டர் டைஃபூனைவிட உயர்வானது,  அது ஒரேசமயத்தில் நாற்பது விமானங்களைக் கண்டுபிடித்து, எட்டை எதிர்த்துத் தாக்கவல்லது.  விண்ணிலிருந்து தரையிலிருக்கும் ராணுவ அமைப்புகளைத் தாக்கியழிப்பதில் வல்லமை படைத்தது.
  • வெறும் விமானத்தின் விலையைமட்டும் நோக்கினால், ராஃபேல் டைஃபூனைவிட 2 கோடியே 52 லட்சம் டாலர்கள் [73 கோடி ரூபாய்கள்] விலை [2009 விலை]  குறைவானது.[2]
  • ராஃபேல் விமானத்தின் குறுக்குப் பரப்பளவு சிறிதாக இருப்பதால், ராடார்மூலம் அதை முன்னமே கண்டுபிடிப்பது சிரமம்.
  • தரைப்படைக்குப் தந்திரமாகப் பாதுகாப்புக் கொடுத்துத் தாக்குவதில் ராஃபேல் சிறந்த்து.
  • டைஃபூன் விமானத்தின் உற்பத்தி 2020ல் நிறுத்தப்படும் என்றும், தொழில்நுட்பச் சிக்கல்கள் உள்ளன என்றும் தெரிகிறது.
  • குண்டுவீசுவதில் ராஃபேல் சிறந்தது.  மேலும், டைபூஃன் பறக்கும்போது ராஃபேலைவிட நிலையற்றது. இது டைஃபூனின் ஒரு குறையாகும்.[3]
  • ஒலியைவிட அதிகவேகத்தில் [சூப்பர்சானிக்] அதிக தளவாட எடையில்லாதபோது திறன்படச் செலுத்துவதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டது யூரோஃபைட்டர் டைஃபூன்.  ஆனால், எல்லா வேகத்திலும், அதிக எடையை ஏற்றிக்கொண்டு எழும்பும் திறன்வாய்ந்தது ராஃபேல் விமானம்.[4]
  • டைஃபூன் அதிவேகமாகச் செல்லும் திறமை வாய்ந்ததால், நேருக்குநேர் தாக்குதல் நடத்துவதில் ரஃபேலைவிடத் திறமைவாய்ந்தது.
  • ராடார் மூலம் பல்வேறு தொலைவு/உயரங்களில் அதிகமான இலக்குகளை அடிக்க ராஃபேல் விமானம் சிறந்த ஒன்றாகும்.
  • பராமரிக்கவும், பறந்து தாக்கும் திறனைத் தக்கவைத்துக்கொள்ளவும், இரண்டுக்குமே அதிகச் செலவாகும்.
  • டைஃபூன் அதிகபட்சம் 1550 மைல்[2500 கிமீ] வேகத்திலும், ராஃபேல் 1190 மைல் [1915 கிமீ] வேகத்திலும் செல்லவல்லவை.[5]
  • டைஃபூன் 1800 மைல் [2900 கிமீ] தூரமும்,  64990 அடி [19810 மீட்டர்] உயரமும், ராஃபேல் 1150 மைல் [1850 கிமீ] தூரமும், 49984 அடி [15235 மீட்டர்] உயரமும் செல்லும்.

ஆகவே, சில விஷயங்களில் டைஃபூன் விமானம் ரஃபேலைவிட அதிகத் திறன் வாய்ந்ததாக இருக்கிறது.  மொத்தமாகப் பார்த்தால், டைஃபூன் விமானமே சிறந்தது, அதையே பாரத விமானப்படைத் தலைமை தேர்ந்தெடுத்திருக்கவேண்டும் என்று தோன்றும்.

ஏன் அது தேர்ந்தெடுக்கப்படவில்லை?

ராஃபேல் விமானத்தில் பொருத்தப்படும் மீட்டியார் [Meteor] என்னும் தளவாடம் கண்ணுக்குத்தெரியும் 60 மைல் [100 கிமீ] தூரத்திற்கும் மேலாகச் சென்று எதிரியைத் தாக்கவல்லது.  பாகிஸ்தானிடமிருக்கும் அமெரிக்கத் தளவாடம் அம்ராமைவிட [AMRAAM] ஐந்து மடங்கு கொல்லும் திறன் படைத்தது.

யூரோஃபைட்டர் டைஃபூன் நான்கு நாடுகளால் உற்பத்திசெய்யப்படுகிறது, அமெரிக்கத் தளவாடங்கள் பொருத்தப்பட்டது.  போர்சமயத்தில் எந்த ஒரு நாடு பிணங்கிக்கொண்டாலும், டைஃபூன் கிடைப்பதிலோ, பராமரிப்பதிலோ, தளவாடங்கள் கிடைப்பதிலோ சுணக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறாது.  அச்சமயத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் கொடுத்து வாங்கிய விமானத்தை உபயோகிக்க முடியாமல் அழகுபார்க்கத்தான் முடியும்.[6]

எல்லாவற்றிற்கும் மேலாக, பாரத விமானப்படை விமானிகள் பிரெஞ்சுத் தயாரிப்பான மிராஜ் விமானத்தை விரும்புகிறார்கள். இதுவரை அந்த விமானத்தைப் பாகிஸ்தானின் போர்விமானங்களால் வீழ்த்த இயலவில்லை.  கர்ஜில் போரிலும் அவை வெற்றிவாகை சூடியிருக்கின்றன. 2030வரை அவற்றின் தொழில்நுட்பம் சிறந்து விளங்கும். [7],[8]  ஆகையால், ராஃபேல் போர்விமானம் பாரதப் படைத் தலைமையால் விரும்பப்படுகிறது.

[தொடரும்]


[1]   Rafale Deal — In’s and Out’s (Complete Story), The Factual Indian, Sep 17, 2018, https://medium.com/@thefactualindian2/rafale-deal-ins-and-out-s-complete-story-7d100c85540b

[2]   Is Rafale superior to Eurofighter? Let’s find the answer by Surendra Singh, The Times of India Blogs, Feb 18, 2012

[3]   Dassault Rafale vs Eurofighter Typhoon, Aviatia, https://aviatia.net/rafale-vs-eurofighter/

[4]   Typhoon versus Rafale: The final word, Hush Kit, December 2015, https://hushkit.net/2015/12/18/typhoon-versus-rafale-the-final-word/

[5]   Compare Aircraft Results – Eurofighter Typhoon (EF2000) vs Dassault Rafale, Militaryfactory.com, https://www.militaryfactory.com/aircraft/compare-aircraft-results.asp?form=form&aircraft1=55&aircraft2=60&Submit=COMPARE

[6]   Dassault Rafale v/s. Eurofighter Typhoon :- Why Government Ignored Offer From Eurofighter by Indian Defence Update, dec 3, 2017, https://defenceupdate.in/dassault-rafale-v-s-eurofighter-typhoon-government-ignored-offer-eurofighter/

[7]   Rafale deal: The controversy and some unanswered questions By Manu Pubby, Aug 23, 2018, The Economic Times

[8]   Indian Air Force Mirage-2000:  All You Need to Know About the Fighter Jet Used for Surgical Strikes 2.0 by Arjit Garge, February 28, 2019, News18.com, https://www.news18.com/news/auto/indian-air-force-mirage-2000-all-you-need-to-know-about-the-fighter-jet-used-for-surgical-strikes-2-0-2049837.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *