கொலைகாரக் கிறிஸ்தவம் – 28

Image result for krishnadevaraya
கிருஷ்ணதேவராயர்

கிருஷ்ண தேவராயரின் மரணத்திற்குப் பிறகு அச்சுதராயனின் காலத்தில் போர்ச்சுகீசிய கவர்னரின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறிவிட்டன. 1544-ஆம் வருடம் போர்ச்சுகீசிய கவர்னரான மார்டின் டிசொசா 27 போர்ச்சுகீசிய கேப்டன்களின் தலைமையில் நாற்பத்தைந்து கப்பல்களை இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிக்கு அனுப்பி, திருப்பதிக் கோவிலில் இருக்கும் ஏராளமான தங்க, வைர ஆபரணங்களைக் கொள்ளையடிக்க உத்தரவிட்டான். தஎனினும் அவனது படைகள் அம்முயற்சியில் தோல்வியையே தழுவின.

போர்ச்சுகீசியர்களின் இந்த நடவடிக்கைகளைப் பற்றிக் கேள்விப்பட்ட ராமராஜா, அந்தப் படைகளைத் தாக்கித் தோற்கடித்து விரட்டினான். பின்னர் போர்ச்சுகீசியப் படைகள் திருவிதாங்கூரிலிருந்த சில கோவில்களைத் தாக்கிக் கொள்ளையடித்துக் கொண்டு கோவாவைச் சென்றடைந்தன. பின்னர் விஜயநகர அரசும், போர்ச்சுகீசியர்களும் சமாதான உடன்படிக்கைகளில் கையொப்பம் இட்டுக்கொண்டார்கள். இப்ராஹிம் அடில்ஷாவுக்கு எதிராக இரண்டும் படைகளும் போரிட்டதாகத் தெரிகிறது.

பின்னர் போர்ச்சுகீசிய கவர்னரான அல்ஃபோன்ஸோ டிசொளசா, பட்கல்லைத் தாக்கினான். பட்கல் அரசி நேரடியாக வந்து தனது படைவீரர்களை ஊக்குவித்தும் பட்கல் போர்ச்சுகீசியர் வசம் வீழ்ந்தது.  அங்கு கொள்ளையடித்த பொருட்களை அருகிலிருந்த குன்றில் வைத்து போர்ச்சுகீசியர்கள் பங்கு பிரித்துக் கொண்டிருந்ததைக் கண்ட பட்கல் அரசி அவர்களைத் திடீரெனத் தாக்கி அங்கிருந்து விரட்டியடித்தாள். கப்பலில் தப்பிச்செல்ல நினைத்த பலர் நீரில் மூழ்கி இறந்தார்கள். மேலும் பல போர்ச்சுகீசிய படைவீரர்கள் கொல்லப்பட்டனர். அதனால் கோபமடைந்த கவர்னர் மறுநாள் வெறிகொண்டு மீண்டும் பட்கல்லைத் தாக்கி அதனையும் அதன் சுற்றுப்புறத்தையும் தீயிட்டுக் கொளுத்தினான்.

பட்கல் அரசி 1548 வருடம் போர்ச்சுகீச்யர்களுடன் சமாதானம் செய்துகொண்டு அவர்களுக்குத் தேவையான அரிசி மற்றும் கப்பத்தொகையைத் தருவதாக ஒப்புக்கொண்டாள்

1550-ஆம் வருடம் போர்ச்சுகீசியரகள். தங்களுக்குத் தரவேண்டிய கப்பத்தொகையைத் தரவில்லை என்ற பொய்யான காரணத்துடன் உல்லாலைத் தாக்கி, மங்களூரைச் சூறையாடி அந்த நகரிலிருந்த பெரும் ஹிந்துக் கோவில் ஒன்றினை இடித்து அழித்தார்கள். உல்லால் அரசி சரணடைந்தாள்.

அதற்குப் பத்துவருடங்கள் கழித்து உல்லாலை ஆண்ட இன்னொரு ராணியான புக்காதேவியையும் தாக்கிய போர்ச்சுகீசியர்கள். மீண்டும் மங்களூரை அழித்தனர். அங்கிருந்து தப்பி அருகிலிருந்த மலைப்பகுதிக்குள் தப்பி ஒளிந்த புக்காதேவி இறுதியில் புக்காதேவி போர்ச்சுகீசியர்களுன் கோரிக்கைகள் அனைத்தையும் கடைப்பிடிக்க ஒப்புக் கொண்டாள்.

போர்ச்சுகீசியர்கள் 1566ல் மங்களூரில் ஒரு கோட்டையைக் கட்டிமுடித்தார்கள்.

1522-ஆம் வருடம் அவர்கள் மயிலாப்பூரைக் கைப்பற்றி அங்கு தங்களது குடியேற்றங்களை நிறுவ ஆரம்பித்தார்கள். அந்தக் குடியேற்றங்கள் இருந்த பகுதியே இன்றைக்கு செயிண்ட் தாமஸ் மலை என அறியப்படுகிறது. அன்றைய தினத்தில் மயிலாப்பூர் ஒரு பேரூராக அறியப்படாதிருந்தாலும் 1558-ஆம் வருடவாக்கில் பெரும் வியாபாரத்தலமாக மாறியிருந்தது.

அதே வருடம் ஃப்ரான்ஸிஸ்கன் பாதிரிகள் நாகப்பட்டினம் பகுதியிலிருந்த பல ஹிந்து ஆலயங்களை இடித்தும், அந்த ஆலயத்தின் சிலைகளை உடைத்தும் எறிந்தார்கள். அந்தக் கோவில்கள் இருந்த பகுதிகளில் பல சர்ச்சுகளைக் கட்டினார்கள். அவர்களைப் பின் தொடர்ந்த ஜெசுயிட் பாதிரிகளும் அதனையே தொடர்ந்தார்கள்.

இன்றைய வேளாங்கண்ணி மாதா ஆலயம் போர்ச்சுகீசியரகளால் இடிக்கப்பட்ட ஹிந்து ஆலயத்தின் மீது கட்டப்பட்ட ஒன்றே.

சென்னையில் இன்றிருக்கும் சாந்தோம் சர்ச்சும் அப்பராலும், சம்பந்தராலும் பாடல் பெற்ற தலமாக இருந்த ஹிந்து ஆலயமான கபாலீஸ்வரர் ஆலயத்தைத் தகர்த்துக் கட்டப்பட்ட ஒன்றே.. இன்றைக்கு இருக்கும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம் அதன் பின்னர் கட்டப்பட்ட ஒன்று.

கிருஷ்ணதேவராயர் காலத்திலிருந்தே போர்ச்சுகீசியர்களின் அட்டகாசம் ஆரம்பமாகிவிட்டதென்றாலும், தேவராயர் அதனைக் கண்டும் காணமலும் இருக்க வேண்டிய நிலையில் இருந்தார். ஏனென்றால் விஜயநகரப்படைகளுக்குத் தேவையான குதிரைகளைப் போர்ச்சுகீசியர்களிடமிருந்தே வாங்கியாக வேண்டிய நிர்பந்தம் அவருக்கிருந்தது. விஜயநகரத்திற்கென கப்பல்படை எதுவும் இல்லாத காலத்தில் அரேபியாவிலிருந்து, ஐரோப்பாவிலிருந்து குதிரைகளை வாங்கிக் கொண்டுவந்து கிருஷ்ணதேவராயருக்கு விற்றுக் கொண்டிருந்தார்கள் போர்ச்சுகீசியர்கள்.

இதே நிலைமைதான் கிருஷ்ணதேவராயரின் மரணத்திற்குப் பின்னரும் நீடித்தது. அவருக்குப் பின்னர் பதவியெற்ற அவரது மறுமகனான ராமராஜாவும் (ராமராயர்) போர்ச்சுகீசியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கினார். எனினும், நாகப்பட்டினத்தில் இடிக்கப்பட்ட ஆலயங்கள் விஜயநகர அரசின் கீழிருந்ததால் அங்கு படையெடுத்துச் சென்ற ராமராயர், இடிக்கப்பட்ட ஆலயங்களில் சிலவற்றை செப்பனிட்டார். சென்னையிலிருந்த ஒரு போர்ச்சுகீசிய காலனியைத் தாக்கி அங்கிருப்பவர்களைப் பிடித்துச் சென்ற ராமராயருக்கு ஒரு லட்சம் பகோடா பணம் கொடுத்து சமாதானம் செய்து கொண்டார்கள் போர்ச்சுகீசியர்.

இதற்குப் பின்னர் வழக்கம்போலவே போர்ச்சுகீசியர்களும், விஜயநகர சாம்ராஜ்யமும் நல்லுறவுடனேயே இருக்க ஆரம்பித்தது. சாந்தோம் பகுதி சதாசிவ ராயரின் காலத்திலும் ஒரு பெரும் வியாபார ஸ்தலமாக முன்னேறியிருந்தது. சோழமண்டலக் கடற்கரைப் பகுதிகளில் தயாரிக்கப்படும் துணிகள் போர்ச்சுகலில் பெரும் புகழடைந்திருந்தது. எனவே இங்கிருந்து கப்பல்கப்பலாக துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

ராமராயரின் சென்னை விஜயமும், அதே காலத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தினுள் காணப்பட்ட ரோமன் எழுத்துக்களுடன் கூடிய உடைபட்ட கல்லறைகளின் பகுதியும் குறித்தான சரியான விளக்கங்கள் எதுவும் இதுவரை வெளிப்படவில்லை. இந்த கல்லறைக் கற்களின் ஒன்றிரண்டு பகுதிகள் ஆலயத்தின் கருவறைக்கு மிக அருகில் காணப்பட்டன என்பதனையும் இங்கு குறிப்பிடவேண்டும் (Mysore Gazetteer – Medival Volii-Part-Iii, Page 2043). இந்த ஆலயம் 1564-ஆம் வருடம், சதாசிவராயரால் கட்டப்பட்ட பள்ளிகொண்ட பெருமாள் ஆலயத்திற்கு அருகில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அனேகமாக அந்தக் கல்லறைக் கற்கள் ராமராயர் தாக்கியழித்த போர்ச்சுகீசியல் காலனியிலிருந்து எடுக்கப்பட்ட கற்களாக இருக்கலாம்.

1549-ஆம் வருடம் கோர்ரியா என்பவரின் தலைமையில் போர்ச்சுகீசியர்கள் ராமேஸ்வரம் ஆலயப்பகுதிகளைக் (வேதாளை) கைப்பற்றினர். ஆலயத்திற்கு அருகில் பதுங்குகுழிகளைக் கட்டிக் கொண்டு அங்கு வணங்கவரும் ஹிந்துக்களை ஆலயத்திற்குள் நுழையவிடாமல் தடுத்தனர். பின்னர், வரி வசூலிக்கப்பட்டு அந்த வரியைச் செலுத்தியவர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனை எதிர்த்த விஜயநகரத்தளபதி விட்டலன் 6000 படைவீரர்களுடன் கோர்ரியாவின் படைகளைத் தாக்கினான். இந்தத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத கோர்ரியா அங்கிருந்த, கிறிஸ்தவர்களாக மதம்மாறிய மீனவர்களான பரதவர்களிடம் தஞ்சம் புகுந்தான்.

போர்ச்சுகீசியனான கோர்ரியாவைக் காப்பதற்காக பரதவர்களுக்குத் தலைமை தாங்கிப் போரிட்ட ஒரு கிறிஸ்தவ பாதிரி, விஜயநகரப்படைகளை நடத்திவந்த முஸ்லிம் ஒருவனின் ஈட்டியால் கொல்லப்பட்டான். ராமேஸ்வரத்தில் போர்ச்சுகீசியர் அங்கு கட்டிய கோட்டை தகர்க்கப்பட்டு, அவர்கள் கட்டியிருந்த பதுங்கு குழிகள் மண்ணிட்டு மூடப்பட்டன. ராமேஸ்வரத்தை மீட்ட இந்தப் போருக்கு அன்றைய மதுரையை ஆண்டுகொண்டிருந்த விஸ்வநாத நாயக்கர் உதவிசெய்தார் என வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

இருப்பினும் கிழக்கு, மேற்கு கடற்கரைப் பகுதிகள் பெரும்பாலும் போர்ச்சுகீசியர்களின் வசம் இருந்தன. விட்டலன், கள்ளிக்கோட்டையைச் சேர்ந்த அரசன் எரப்பாளியுடன் கூட்டுசேர்ந்து போர்ச்சுகீசியர்களைத் தரையிலும், கடலிலும் ஒரேசமயத்தில் தாக்கினான். புன்னைக்காயல் விட்டலனின் கப்பல் படைகளால் தாக்கப்பட்டது. பின்வாங்கி ஓடிய போர்ச்சுகீசியப் படைகளை விட்டலனின் படைகள் சிறைபிடித்தனர். புன்னைக்காயல் கோட்டையைப் பிடித்த எரப்பாளி அங்கு போர்ச்சுகீசிய ஆட்சி முடிவடைந்துவிட்டதாக அறிவித்தார்.

இந்தத் தகவல் கொச்சியை அடைந்ததும் அங்கிருந்த போர்ச்சுகீசியர்கள் புன்னைக்காயலை நோக்கிப் படையெடுத்தார்கள். அங்கு நடந்த போரில் இருபக்கமும் பெரும் சேதம் உண்டானாலும் எரப்பாளி அங்கு கொல்லப்பட்டார். போர்ச்சுகீசிய தளபதி நாகப்பட்டினம் சென்ற படகிலேறித் தப்பிச் சென்று, தமிழ்ப் பரதவர்களை அழைத்துக்கொண்டு மீண்டும் புன்னைக்காயலுக்கு வந்தான். மீதமிருந்த எரப்பாளியின் படைகளை அவர்கள் தோற்கடித்துக் கொலைசெய்தார்கள். விட்டலனைப் பிடித்த போர்ச்சுகீசியர்கள், அவனை அங்கிருந்து தூத்துக்குடிக்குக் கொண்டு சென்றார்கள். விஸ்வநாத நாயக்கருடன் சமாதானம் செய்துகொண்டு விட்டலனை விடுதலை செய்தார்கள்.

இருப்பினும் அந்த சமாதான நடவடிக்கைகள் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. புன்னைக்காயலின்மீது படையெடுத்த விஸ்வநாத நாயக்கர் அங்கிருந்த போர்ச்சுகீசியர்களைத் தோற்கடித்தார். எனவே, புன்னைக்காயலில் வாழ்ந்த அனைவறையும் மன்னார் தீவில் குடியேற்ற முயற்சிசெய்யப்பட்டது.

அச்சமயம் [1545] ஆரல்வாய்மொழி வழியாக திருவிதாங்கூர்மீது படையெடுக்கிறான் வித்தலன். அந்தப் படையெடுப்பைக் கண்டு அஞ்சிய, புதிதாக மதமாற்றப்பட்ட கிறிஸ்தவர்கள் வடக்கிலிருக்கும் காட்டுப் பகுதிகளை நோக்கி ஓடுகிறார்கள்.  அவர்களின் மதமாற்றத்திற்குக் காரணமான சேவியர் (“புனித” சேவியரேதான்) , திருவிதாங்கூர் அரசனான உண்ணி கேரளவர்மாவிடம் சென்று கிறிஸ்தவர்களைக் காக்கும்படி வேண்டினார்.

உண்ணி கேரளவர்மா அதற்குச் சம்மதித்துத் தன் படைகளை ‘புனித” சேவியருக்கு உதவ அனுப்பினார்.  நாகர்கோவில் அருகிலிருக்கும் கோட்டாருக்கு வரும் விட்டலனின் படைகள் அங்கு நின்றுகொண்டிருக்கும் சேவியரையும் அவருடனிருக்கும் கேரளவர்மாவின் படைகளையும் காண்கிறார்கள். பின்னர் என்ன காரணத்தோலோ அந்தப் படைகளைத் தாக்காமல் திரும்பிச் சென்ற. விட்டலன், சிறிது காலத்திற்குப் பிறகு

தூத்துக்குடியில் கிறிஸ்தவ பாதிரி சேவியருடன் சமாதானம் செய்து கொண்டான். சுசீந்திரம் வந்த விட்டலன் அங்கு ஸ்தாணுநாத ஆலயத்தில் தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடியதாகத் தெரிகிறது.

[தொடரும்]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *