காந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வை

பாராளுமன்றத் தேர்தல் கடைசிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு நடுவில் காந்தி – கோட்சே விவகாரத்தைக் கிளப்பி விட்டிருக்கிறார் கமல். முஸ்லிம் தாஜாவாதமும் இந்துவிரோதமும் அவருக்குள் ஊறிய கொள்கைகள் தான் என்றாலும், இந்த நேரத்தில் இதைப் பேசியதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மோதி விரோத, இந்து விரோத சக்திகளின் வீட்டு நாயாகவும், ஏவல் நாயாகவும் அவர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயல்கிறார் என்பது தெளிவு. அதாவது,

  • “தேர்தல் விதிமுறை” “அரசியல் கண்ணியம்” போன்ற சமாசாரங்களால் தேசியக் கட்சிகளோ திருணாமுல் போன்ற மானிலக் கட்சிகளோ கூட பேசத் தயங்கும் மலினமான, வக்கிரமான வெறுப்பு பிரசாரத்தைக் கூட தன்னால் முன்னெடுக்க முடியும்.
  • கலைஞன் – முற்போக்குவாதி – நாத்திகன் என்ற முகமூடிக்குள் ஒளிந்து கொண்ட முடியும்
  • தமிழ்நாட்டிற்கு உள்ளே தேசியத்தையும் இந்துமதத்தையும் வழக்கம்போலவே எப்படி இழிவு செய்தாலும் எவனும் கேட்கமாட்டான். எனவே வழக்கம் போல தப்பித்துக் கொள்ள முடியும்

இத்தகைய எண்ணப்போக்குடன், கணக்குகளுடன் தான் அவர் அப்படி பேசினார். ஆனால், இது ஏடாகூடமாக இரண்டு பக்கத்தையும் பற்ற வைத்து விட்டது.

1) இந்துமதத்தை பயங்கரவாதத்துடன் தொடர்புறுத்தி அவர் பேசியதற்கு எதிராக நாடு முழுவதும் நீதிமன்ற வழக்குகள் தில்லி, மும்பை என்று பல இடங்களிலும் போடப்பட்டுள்ளன. அவர் மன்னிப்பு கேட்டு விட்டால் அதோடு போகும். இல்லையென்றால் இதை இப்படியே விடாமல் இன்னும் அதிக அளவில் செய்து, எம்.எஃப்.ஹுசேன் சரஸ்வதி ஓவியம் விவகாரத்தில் நீதிமன்ற சம்மன்களுக்குப் பயந்து நாட்டை விட்டே ஓடிப்போனது போல கமலை அலைந்து திரிய வைக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். அப்படி செய்ய முடிந்தால் அது எல்லாவித இந்து விரோதிகளுக்கும் ஒரு நல்ல பாடமாக அமையும்.

2) அதிகாரபூர்வ பாஜக, ஆர் எஸ் எஸ் தரப்புகள் கமலுடைய ஹிந்து மத அவதூறுக்கு கண்டனம் தெரிவித்து விட்டு, அதே வீச்சில் காந்தி கொலையையும் கோட்சேயையும் தாங்கள் ஒரு போதும் ஆதரிக்கவில்லை என்று சந்தேகமின்றி தெளிவுபடுத்தியுள்ளன. காந்தி மகத்தான தேசியத் தலைவர் (அவர் மீதான விமர்சனங்களுடன் சேர்த்து), கோட்சே மரணதண்டனை பெற்ற கொலைக் குற்றவாளி – இதுவே தங்கள் கண்ணோட்டம் என்பதை உறுதிபடக் கூறியுள்ளன. பாஜக கோட்சேவை புகழும் வகையில் பேசிய தனது கட்சித் தலைவரை உடனடியாக எச்சரித்து மன்னிப்பும் கோர வைத்துள்ளது. இது முக்கியமான, மிகச் சரியான, நிலைப்பாடு.

3) ஆனால் கமலுக்கு எதிர்வினையாற்றுகிறோம் என்ற பெயரில் இந்து போராளிகளாகவும், செயல்வீரர்களாவும், பாஜக ஆதரவாளர்களாகவும் தங்களை சமூக ஊடகங்களில் முன்னிறுத்திக் கொண்டிருக்கின்ற சிலபல உதிரி நபர்களும், உருப்படியாக வரலாறு தெரியாத அனைத்து வகை காந்தி வெறுப்பாளர்களும், களத்தில் இறங்கி கோட்சே புகழுரைகளையும், காந்தி குறித்து பொய்யான ஆதாரமற்ற துவேஷ பிரசாரங்களையும் சகட்டுமேனிக்கு பரப்ப ஆரம்பித்து விட்டார்கள். இப்படித்தான் நடக்கும், இதை வைத்து இது தான் மோதி – ஆர் எஸ் எஸ் – பாஜக தரப்பின் குரல் என்று எதிர்மறை பிரசாரம் செய்யலாம் என்பது தான் இந்து விரோத அரசியல் தரப்பின் முக்கியக் கணக்கும் கூட. ஆனால், முந்தைய பாயிண்ட்டில் கூறிய நடவடிக்கைகளால், அந்தக் கணக்கு பெருமளவு பொய்யாகி விட்டது. சமூக வலைத்தளங்களில் இதைப்பற்றிய கூச்சலும் இன்னும் இரண்டு நாளில் ஓய்ந்து விடும்.

மங்களம் சுபம்.

பி.கு: காந்தி மகாத்மா தான், ஆனால் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. கோட்சே பயங்கரவாதியுமல்ல, புனிதருமல்ல. தண்டனைக்குரிய கொலைகாரர். அவர் செய்து தெளிவான அரசியல் கொலை. அந்தக் குற்றத்திற்கான தண்டனையும் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. எனவே “மானசீக கொள்ளுப் பேரன்கள்” தடாலடியாக முஸ்லிம் ஏரியாவுக்குள் நுழைந்து அதற்காக “நீதி கேட்பது” எல்லாம் மரண காமெடி. மூன்றாந்தர கமல் படங்களில் வரும் சில நான்காந்தர காமெடிகளை விட மோசமான காமெடி 🙂


கமல்ஹாசன் என்ற புது அரசியல்வாதிக்கு வண்டிவண்டியாக இந்து துவேஷம் தான் இருக்கிறதே அன்றி, எந்தவிதமான உருப்படியான பண்பாட்டு அறிவும், வரலாற்றுப் புரிதலும் கிடையாது என்பதை அவரது சமீபத்திய அபத்தப் பேச்சு மீண்டும் உறுதி செய்கிறது. “ஹிந்து என்ற பெயர் நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடல்களில் உள்ளதா? வியாசரோ விஸ்வாமித்திரரோ சொல்லியிருக்கிறாரா?” என்றெல்லாம் மேதாவித்தனமாக, என்னவோ புதிதாக இவர்தான் முதன்முதலாகக் கேட்பதாக எண்ணிக் கொண்டு இந்த 2019ல் இவர் உறுமுவதைப் பார்த்தால் வழித்துக் கொண்டு சிரிக்கத் தோன்றுகிறது. உண்மையில் 19,20ம் நூற்றாண்டுகளிலேயே இதுகுறித்த மாபெரும் விவாதம் பல்வேறு தளங்களில் பல்வேறு விதங்களில் நிகழ்ந்திருக்கிறது. நூற்றுக்கணக்கான பக்கங்கள் எழுதப் பட்டிருக்கின்றன. இதன் முடிபாக, நமது சான்றோர்களும் தலைவர்களும் பெரியோர்களும் ஹிந்து என்ற பெயரை தங்களது அடையாளமாக ஏற்றுப் போற்றியிருக்கிறார்கள். சுவாமி விவேகானந்தர் முதல் சுவாமி சின்மயானந்தா வரை, மகாகவிகள் பாரதி, தாகூர் முதல் மகாத்மா காந்தி, மஹாமனா மாளவியா வரை, தங்களை ‘பெருமிதமிக்க ஹிந்து’ என்று குறிப்பிட்டிருப்பது அவர்களது பேச்சில், எழுத்துக்களில் உள்ளது. மேலும், சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் ஹிந்துமதம் என்பது அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பட்டு, இந்த தேசத்தின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் பின்பற்றும் மதமாகவும் இருக்கிறது. எனவே, ஹிந்துமதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்றெல்லாம் வெறுப்பைப் பரப்புவது சட்டவிரோதம் மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிக்கும் செயலும் கூட.

நிற்க. தொட்டதெற்கெல்லாம் காந்தி, காந்தி என்று குசுவிட்டுக் கொண்டிருக்கும் இந்த நபருக்கு “ஹிந்து என்ற பெயர் அன்னியன் கொடுத்தது, அதை ஏற்கலாமா?” என்று பெனாத்துவதற்கு முன்பு, காந்திஜியின் கீழ்க்கண்ட மிகப் பிரபலமான மேற்கோள்கள் பற்றி நினைவு கூட வரவில்லை என்பது தான் நல்ல முரண்நகை. இந்த ஒவ்வொரு மேற்கோளிலும் “ஹிந்து” என்ற சொல்லையே காந்தி நேரடியாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

“சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு பெருமிதம் மிக்க இந்துவாகவே என்னை அடையாளப் படுத்திக் கொள்கிறேன். ஏனெனில், வேதங்கள், உபனிஷதங்கள், புராணங்கள் மற்றும் இந்து சாஸ்திரங்களின் பெயரில் எவை உண்டோ அவற்றின் மீதும் மற்றும் அவதாரங்கள், மறுபிறவி மீதும் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். இப்பொழுது வழக்கில் உள்ள திரிக்கப் பட்ட மோசமான வடிவில் அல்லாமல், வேதங்களின் அடிப்படையில் மட்டும் உள்ள வர்ணாசிரம தர்மத்தை நான் மதிக்கிறேன். உருவ வழிபாட்டிலும் நம்பிக்கை இல்லாமல் இல்லை. பசுப் பாதுகாப்பிலும் முழுமையான ஈடுபாடு காண்பித்து வருகிறேன்.” (யங் இந்தியா, ஜூன் 10, 1921)

“கிறித்தவத்தின் சில விஷயங்களைப் போற்றினாலும், என்னால் கிறித்துவத்துடன் அடையாளப் படுத்திக் கொள்ள முடியாது. நான் அறிந்த இந்துமதம் முழுவதுமாக என் ஆன்மாவைத் திருப்தி செய்கிறது. என் இருப்புக்கு முழுமை தருகிறது. மலைப்பிரசங்கத்தில் கிடைக்காத ஆறுதல் கீதையிலும், உபநிஷதங்களிலும் எனக்குக் கிடைக்கிறது.. ” (யங் இந்தியா, 6-8-1925, p274.)

[மேலும் மேற்கோள்களுக்கு: இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி]

துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களுடைய பண்பாட்டு, வரலாற்று அறிவும் கூட கமல்ஹாசன் அளவுக்கோ, அல்லது அதைவிட சிறிதே சற்று மேலாகவோ தான் இருக்கிறது என்று தோன்றுகிறது. அதனால் தான், அவரது கேள்வி அடிப்படையிலேயே அபத்தமானது என்பதைக் கூட அழுத்தமாகக் கூறி அதை நிராகரிக்காமல் அதைவைத்து மாய்ந்து மாய்ந்து முட்டாள்தனமான “விவாதங்களை” நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விநோதமான மீம்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இது குறித்து ஆதாரபூர்வமான தரவுகளுடன் நான் எழுதிய ஹிந்து என்னும் சொல் (2011) என்ற எனது கட்டுரையிலிருந்து ஒரு பகுதியைக் கீழே தருகிறேன்.

“வரலாற்று ரீதியாக, சிந்து நதிக்கு அப்பால் இருந்த பிரதேசத்தையும் அங்கு வாழும் மக்களையும், அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையும் குறிக்க, அந்த பூகோளப் பிரதேசத்திற்கு வெளியே இருந்த பண்டைய சுமேரியர், பாரசீகர், கிரேக்கர் ஆகிய மக்களால் தான் ஹிந்து என்ற பதம் முதன்முதலில் பயன்படுத்தப் பட்டது. ஆனால் இது அந்த அன்னிய மக்கள் உருவாக்கிய பதம் அல்ல. ரிக்வேத ரிஷிகள் தாங்கள் வாழ்ந்த பிரதேசத்தை ஸப்த ஸிந்து என்றே அழைத்தனர். அந்தச் சொல்லே ஹப்த ஹிந்து என்று பாரசீக மொழியில் உருமாற்றம் அடைந்தது. சரஸ்வதி = ஹரஹ்வதி, அஸுர் = அஹுர் என்று பல சம்ஸ்கிருதச் சொற்கள் இதே ரீதியில் பண்டைய பாரசீக மொழியில் உருமாற்றம் பெற்றுள்ளன. இந்த சொல் உருமாற்றத்திற்கான அகச்சான்றுகள் நமது புராணங்களிலேயே உள்ளன…

சம்ஸ்கிருத நூல்களில் தொடங்கிய ஹிந்து என்ற சொல்லின் பயன்பாடு 9-10ம் நூற்றாண்டுகளில் வட இந்திய பிரதேச மொழிகளின் இலக்கியத்தில் அழுத்தமாக இடம் பெற்று விட்டது. இவ்வாறு, 6ம் நூற்றாண்டு தொடங்கி 18ம் நூற்றாண்டு வரை பாரதத்தின் பல மொழிகளிலும், பல பகுதிகளிலும் ஹிந்து என்ற சொல் ஏற்கனவே ஒட்டுமொத்த ஹிந்து மதத்தையும், அதைப் பின்பற்றும் சமுதாயத்தையும் குறித்திருக்கிறது…

பரம்பொருளைப் போன்றே வரம்பு கடந்த தங்கள் மதத்திற்கு இப்படி ஒரு பெயரிட்டு அழைப்பதை 20ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் கூட பல இந்து சமயப் பெரியோர்களால், அறிஞர்களால் முழுதாக உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. பல நூற்றாண்டுகளாக அறுபடாத பண்பாட்டுத் தொடர்ச்சி கொண்டிருந்த இந்து சமுதாயம், பல்வேறு அன்னிய ஆக்கிரமிப்புகளுக்கு ஆட்பட்டு, பின்னர் நவீன காலகட்டத்தில் தனக்குரிய பொது அடையாளத்தைத் தேடிக் கண்டடைவதில் உள்ள சிக்கல்களை சமன்வயப் படுத்தும் முயற்சியாகவே அந்த விவாதங்கள் அமைந்தன. நவீன இந்திய தேசிய மறுமலர்ச்சியின் ஊடாக, ஹிந்து என்ற அடையாளத்தை உலகின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்து வந்த ஹிந்துக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இன்று வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு இவைகளை நாம் படிக்கும்போது தான் இந்த விஷயம் நமக்குத் தெளிவாகத் தெரிய வருகிறது.

ஒரு மனிதனுக்கு பெயர் என்று ஒன்று இருப்பது எதற்காக? பிறர் அழைப்பதற்காகத் தானே? தன்னைத் தானே அறிந்து கொள்வதற்கு அவனுக்குப் பெயர் அவசியமில்லையே. உலகளவில் தன்னைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் கொள்ளுதல் என்ற அடிப்படையிலேயே நமது மதத்திற்கு ஹிந்து என்ற பெயர் உருவாயிற்று (ஆராய்ந்து பார்த்தால், எல்லா மதங்களுக்கும், தேசங்களுக்கும் பெயர்கள் இந்த வகையில் தான் உருவாகியுள்ளன, இந்து மதம் மட்டும் இதில் விதி விலக்கு அல்ல). ஆனால் அதனாலேயே அந்தப் பெயர் ஆசாரக் குறைவானதாகவோ, அல்லது ஒட்டாததாகவோ ஆகி விடாது. அப்படி எண்ணுவது ஒரு குருட்டுத் தனமான, நடைமுறைக்கு ஒவ்வாத தூய்மைவாதம் அன்றி வேறில்லை. மாறாக, வரலாற்றின் போக்கில் உருவாகி, வளர்ந்து, திரண்டு வந்த ஹிந்து என்ற பெயரே இயல்பானதும், வேர்கொண்டதும் ஆகும்…”

இதன் தொடர்ச்சியாக அப்போது நான் எழுதிய கீழ்க்கண்ட இரண்டு கட்டுரைகளும் முக்கியமானவையே. இவை ‘காலம்தோறும் நரசிங்கம்’ என்ற எனது கட்டுரைத் தொகுப்பிலும் வெளிவந்துள்ளன.

ஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்

ஹிந்துத்துவம் ஒரு கண்ணோட்டம்

இந்தக் கட்டுரைகள் வெளிவந்தபோது இவற்றை வைத்து எத்தகைய தீவிரவான, காத்திரமான விவாதங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை இக்கட்டுரைகளின் மறுமொழிகளிலேயே நீங்கள் பார்க்கலாம். இப்போது கமல் சொன்ன கேனத்தனமான கருத்தை வைத்து நடக்கும் கமல்த்தனமான விவாதங்கள் எத்தனை ஏணிகள் வைத்தாலும் இவற்றிற்குப் பக்கத்தில் கூட வர முடியாது.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

4 Replies to “காந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வை”

  1. “HIMALAYAM SAMARAPYA YAVATH HINDHU SAROVARAM

    DHAM DEVNIRMIDHAM DESAM HINDUSTHANAM PIRASAKSHADHE”
    Indha varigal pandaya vedha noolgalil ulladhaga nan face bookl parthen. idhil hindusthan endra varthai 1700 BC kalathirkutpattadhu ena arindhen. seidhi thavarai irundhal mannikkavum

  2. கமலகாசன் மற்றும் அவரது சகோதர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக மாறி அநேக காலம் ஆச்சுது. சுகாசினியின் மகன் கிறிஸ்தவ போதகராக பயிற்சி பெறுகின்றான் எனறு வாட்ஸ் அப்பில் பல செய்திகள் வருகின்றது. வீடியோவும் உள்ளது.
    காந்தி இறந்து 70ஆண்டுகள் கழிந்து விட்டது. இன்று அந்த பிரச்சனையை எழுப்ப வேண்டிய அவசியம் இந்த முட்டாள் ஹாசனுக்கு ஏன் ஏற்பட்டது. வம்பு.

  3. அன்புள்ள தமிழ்ஹிந்து குழுவினருக்கு,

    உங்கள் தளத்தில் வரும் மறுமொழிகளை மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுவதா சொல்கிறீர்கள். தனிப்பட்ட முறையில் தாக்கும், ஏளனம் செய்யும் மறுமொழிகளை தவிர்த்துவிடுவதாகவும் சொல்கிறீர்கள். அப்படியிருக்க இந்தக் “கட்டுரை(!?)”யே தனிப்பட்ட வகையில் தாக்கி ஏளனமாக எழுதப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் உணரவில்லையா? “காந்தி காந்தி என்று ##விடும்” என்பதெல்லாம் என்ன தரத்திலான மொழி? இம்மாதிரி பத்திகளை வெளியிட்டு ஆனால் அதன் கீழே மறுமொழி எழுதுபவர்களுக்கு இப்படி எச்சரிக்கை விடுவது என்ன விதத்தில் தர்க்கத்தில் அடங்குகிறது?

    ஃபேஸ்புக் பதிவுகளையெல்லாம் கட்டுரைகளாக வெளியிடுவதை தயவுகூர்ந்து தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஜடாயுவிடம் தரமான வார்த்தைகள் அடங்கிய கட்டுரைகள் கிடைக்குமா என்று கேட்டு பார்க்கலாம். ஹிந்து கடவுளரின் படங்களுக்கு கீழே இம்மாதிரி வார்த்தைகள், வசவுகள் அடங்கிய எழுத்துகள் வருவது என்ன விதத்தில் ஹிந்து மதத்திற்கு மரியாதை சேர்க்கிறது?

    அன்புடன்,
    கணேஷ் பெரியசாமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *