தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1

(எஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அவர்கள் எழுதிய South India and her Mohammadan Invaders என்கிற புத்தகத்திலிருந்து இந்தக் கட்டுரையின் பகுதிகள் எடுத்தாளப்பட்டிருக்கிறன)

இத்தொடரின் மற்ற பகுதிகள் இங்கே.

பொதுயுகம் 1170-71 காலகட்டத்தில் இருவேறு பாண்டியர்கள் மதுரையின் அரியணைக்காக மோதல்களைத் துவக்கி நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்தநேரத்தில் ஆண்டுகொண்டிருந்த பராக்கிரம பாண்டியனுக்கு எதிராக குலசேகர பாண்டியன் மதுரையை முற்றுகையிட்டிருந்தான். இந்த முற்றுகையில் குலசேகர பாண்டியன் வலிமையுடன் இருந்தததால் எந்தேநேரத்திலும் தான் ஆட்சியை இழக்க நேரிடலாம் என்று அஞ்சிய பராக்கிரம பாண்டியன் தனக்கு உதவி செய்யுமாறு இலங்கையின் அரசனான பராக்கிரமபாகுவுக்கு வேண்டுகோள் விடுத்தான்.

அதற்குச் சிறிது காலத்திற்கு முன்புதான் இலங்கையின் உள்நாட்டுக் கலவரங்களை அடக்கி, எதிரிகளைக் கொன்று பராக்கிரமபாகு ஆட்சியைக் கைப்பற்றியிருந்தான். இலங்கையின் வரலாறு கூறும் மஹாவம்சத்தின்படி, அரியணை ஏறுவதற்காக பராக்கிரமபாகு ஏறத்தாழ பதினாறு ஆண்டுகள் தொடர்ந்து பல்வேறு எதிரிகளுடன் போரிட்டதாகக் கூறுகிறது. இந்த நேரத்தில் பாண்டிய நாட்டிலிருந்து உதவி கேட்டுவந்த தூதுவர்களின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக சிங்களப்படைகளை பராக்கிரம் பாண்டியனுக்கு உதவ அனுப்ப முடிவெடுத்தான் பராக்கிரமபாகு.

இந்த உதவி மதுரையை அடைவதற்கு முன்னர் பராக்கிரம பாண்டியன் போரில் தோற்கடிக்கப்பட்டான். அவனும், அவனது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்டார்கள். பின்னர் குலசேகர பாண்டியன் மதுரையில் பாண்டிய அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.

குலசேகர பாண்டியன் முடிசூடியதை அறியாத பராக்கிரமபாகு, புகழ்பெற்ற தனது தளபதியான லங்கபுர தண்டநாதவின் தலைமையில் ஒரு படையை அனுப்ப முடிவெடுக்கிறான். லங்கபுர தலைமையில் தலைநகரிலிருந்து புறப்படும் சிங்களப்படை இலங்கையின் மஹாதிட்ட (மாந்தோட்டம்) என்கிற இடத்தை வந்தடைகையில் குலசேகர பாண்டியன் மதுரையை வென்றதும் பின்னர் பராக்கிரம பாண்டியனுடன் அவனது மனைவி, பிள்ளைகள் கொலையுண்டதுமான செய்து வந்தடைகிறது. இருப்பினும் பராக்கிரமபாகு சிங்களைப்படைகளை மதுரையை நோக்கிச் செல்ல உத்தரவிடுகிறான். குலசேகரனிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி பராக்கிரம பாண்டியனின் தப்பிப் பிழைத்த பிள்ளைகளில் ஒருவனுக்கோ அல்லது அவனது நண்பர்களில் ஒருவனுக்கோ ஆட்சியை ஒப்படைப்பது அவனது நோக்கம்.

மஹாதிட்டவிலிருந்து புறப்படும் சிங்களப்படை தலபில்ல என்னும் துறைமுக நகரை வந்தடைந்து அங்கிருந்து கப்பல்களில் ஏறி ஒரு இரவும், ஒரு நாளும் பயணம் செய்து பாண்டியப்பகுதில் இருக்கும் தலபில்ல(!) என்னும் இடத்திற்கு வந்து சேருகிறார்கள்.

பாண்டியப்பகுதியில் இருக்கும் தலபில்ல என்னும் பகுதி ராமேஸ்வரத்தில் இருக்கும் இன்றையை புலியடிசாலை எனக்கூறுகிறார் ஐயங்கார். ராமேஸ்வரத்தின் கந்தமாதன பர்வதத்திற்கு வடகிழக்கே இரண்டு மைல்கள் தொலைவில் இந்த புலியடிசாலை இருப்பதகவும், அங்கிருக்கும் ஆலயம் கண்டியை ஆண்டதொரு அரசனால் கட்டப்பட்டதாகவும் விளக்கும் ஐயங்கார், அந்த ஆலயத்தினைக் கட்டத் தேவையான கற்கள் அனைத்தும் இலங்கையிலிருந்தே கொண்டுவரப்பட்டதாகவும் கூறுகிறார் இந்த கந்தமாதன பர்வத ஆலயத்தில் ராமரின் பாதச்சுவடுகள் இருக்கின்றன. அதேசமயம் அந்த இடத்தில் அதனை ஒரு பவுத்த ஆலயமாக தளபதி லங்கபுர கட்டியிருக்கக்கூடும் என எண்ணவும் வாய்ப்பிருக்கிறது. அந்த இடத்திலிருந்து சிறிது தொலைவில் லங்கபுர தனது அரசன் பராக்கிரமபாகுவின் நினைவாக பராக்கிரமபட்டணா அல்லது பராக்கிரமபுரா என்கிறதொரு ஊரை நிர்மாணித்ததாகத் தெரிகிறது. இன்றைக்கு அந்த இடம் குண்டுக்கல் என அழைக்கப்படுவதாகத் தெரிகிறது. பாம்பனிலிருந்து ஒன்றரை மைல் தென்புறம் இருக்கும் அந்த இடம் இன்றைக்குத் தென்னிந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஒருகாலத்தில் அது பராக்கிரமபுரா என அழைக்கப்பட்டதற்கான சுவடுகள் முற்றிலும் மறைந்துவிட்டன என்கிறார் ஐயங்கார்.

கந்தமாதன பர்வத ஆலயம், ராமேஸ்வரம்

இலங்கையிலிருந்து லங்கபுர தண்டநாத தலைமையில் ராமேஸ்வரத்தில் வந்திறங்கும் சிங்களப்படைகள் அங்கு பாண்டியப்படைகளுடன் போரிட்டு வெற்றிகொண்டு ராமேஸ்வரத்தைக் கைப்பற்றுகின்றன. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பாம்பனுக்கு மிக அருகில், ராமேஸ்வரக் கடலுக்கு நான்கு காத தொலைவிலிருக்கும் குண்டக்கல்லைக் கைப்பற்றுகிறார்கள்.

பின்னர் தொடர்ந்து பாண்டிய நாட்டிற்குள் நுழையும் சிங்களப்படைகள் வழியிலிருக்கும் கிராமங்களையும், நகரங்களையும் பாண்டியப்படைகளுடன் போரிட்டுக் கைப்பற்றுகிறார்கள். பின்னர் பராக்கிரமபுராவிலிருக்கும் தனது தலைமையகத்திற்குத் திரும்பும் லங்கபுர, வழியில் இருக்கும் வடலை என்கிற கிராமத்தைத் தாக்கி அதன் தலைவரான ஆளவந்த பெருமாள் என்பவனைக் கொல்கிறான்.

(குறிப்பு : இந்த வடலை கிராமம் இன்றைக்கு ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இரண்டு மைல்கள் தென்மேற்கே இருப்பதாகத் தெரிகிறது).

இதனையெல்லாம் கேள்விப்படும் குலசேகர பாண்டியன் மிகுந்த சிரமத்துடன் திருநெல்வேலி மற்றும் கொங்குப் பகுதியிலிருந்து படைகளைத் திரட்டிக் கொண்டு சிங்களப்படைகளை எதிர்ப்பதற்காகத் தலைமைதாங்கி வருகிறான். இருகோட்டை மற்றும் இடகலிசரை (?) என்னும் கிராமங்களில் தனது பாசறையை அமைக்கும் குலசேகர பாண்டியன், பராக்கிரமபுராவில் நிலைகொண்டிருக்கும் லங்கபுரவின் படைகளைத் தாக்குவதற்காக பெருமளவு பாண்டியப் படைகளை தரைவழியாகவும், கப்பலின் வழியாகவும் அனுப்பி வைக்கிறான்.

தரைவழியாகச் சென்ற படைகளுக்குத் தானே தலைமை தாங்கிச் சென்ற குலசேகரபாண்டியனுக்கும் லங்கபுரவின் படைகளுக்கும் பெரும்போர் நிகழ்கிறது. குலசேகரனின் குதிரை கொல்லப்பட்டதால் அவன் பின்வாங்கிச் செல்கிறான். தோல்வியடைந்த பாண்டியப்படைகளின் நிலைகளைக் கைப்பற்றும் சிங்களப்படை அவற்றைத் தீ வைத்துக் கொளுத்தி அழிக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து நகர்ந்து ஏற்கனவே கைப்பற்றிய வடலை என்னும் நகரில் நிலைகொள்ளுகிறது சிங்களப்படை.

பின்னர் அங்கிருந்து வடக்கே நகந்து தேவிபட்டணத்தைக் கைப்பற்றி சிறுவயலை நோக்கி முன்னேறுகிறார்கள். பின்னர் காளையார் கோவில் வழியாக பரமக்குடி சாலையில் செல்லும் சிங்களப்படை ஆனைவிலக்கியை வென்று, நெட்டூரைக் கைப்பற்றுகிறது. இந்த நெட்டூரே பின்னர் சிங்களப்படையின் தலைமையகமாகச் செயல்பட ஆரம்பிக்கிறது.

(குறிப்பு : இந்த நெட்டூர் இளையான்குடிக்கு அருகில், பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஏழு அல்லது எட்டுமைல்கள் வடமேற்கே இருக்கிறது. இதே நெட்டூரில்தான் பின்னாட்களில் மூன்றாம் குலோத்துங்க சோழன் அவனது எதிரியான வீரபாண்டியனை போரில் தோற்கடித்து அவனது தலையைத் துண்டித்துக் கொன்றான். ஆனைவிலக்கி இதற்கு அருகில்தான் இருக்கவேண்டும்).

நெட்டூரில் தனது தலைமையகத்தை அமைத்துக் கொண்ட தளபதி லங்கபுரவிற்கு கொலையுண்ட பராக்கிரம பாண்டியனின் உயிர்தப்பிய மகன் ஒருவன் கேரளத்தில் இருப்பதாகத் தெரிகிறது. அவனது பெயரும் வீரபாண்டியன். லங்கபுர உடனடியாக தன்னுடன் வந்து சேர்ந்து கொள்ளும்படி வீரபாண்டியனுக்குத் தகவல் அனுப்பி வைக்கிறார். பின்னர் இலங்கையில் இருக்கும் தனது அரசனான பராக்கிரமபாகுவுக்கு எல்லா விபரங்களையும் குறித்துத் தகவலனுப்பும் லங்கபுர நெட்டூரிலிருந்து கிளம்பி மேற்குத் தொடர்ச்சிமலைக்கருகிலிருக்கும் பெரியகுளம் பகுதிக்குச் செல்கிறார்.

பெரியகுளம் பகுதியிலிருக்கும் மேலமங்கலம் மற்றும் கீழமங்கலத்தைக் கைப்பற்றும் லங்கபுர பின்னர் அந்தப் பகுதியை ஆண்டவர்களிடமே அவற்றை ஒப்படைத்துவிட்டு ஆனைவிலக்கிக்குத் திரும்புகிறார். பின்னர் அங்கிருந்து மானாமதுரையை நோக்கிப் படையெடுத்து அந்தப்பகுதியையும் கைப்பற்றுகின்றன சிங்களப்படைகள். பின்னர் அங்கிருந்து வடகிழக்கே நகர்ந்து திருவாடனைக்கருகிலிருக்கும் அஞ்சுகோட்டை, பாசிப்பட்டனம், குறுந்தங்குடி, திருவேங்கைப்பட்டு போன்ற பகுதிகளும் சிங்களப்படைகளிடம் வீழ்கின்றன.

இருப்பினும் அந்தப் பகுதியை ஆண்டுகொண்டிருந்த மாலவச் சக்கரவர்த்தி என்பவர் சிங்களப்படைகளுக்குச் சரணடைய மறுத்து புதுக்கோட்டைக்கு அருகிலிருக்கும் செம்பொன்மாரி என்கிற இடத்திலிருக்கும் கோட்டையில் சென்று பதுங்கிக் கொள்கிறார். வெல்லவே முடியாததாகக் கருதப்பட்ட அந்தக் கோட்டையைச் சோழர்கள் இரண்டு ஆண்டுகாலம் முற்றுகையிட்டும் வெல்ல இயலவில்லை என லங்கபுரவிற்குத் தெரியவருகிறது. எனவே அதனை நோக்கிச் செல்லும் சிங்களப்படைகள் வெறும் அரை நாட்களிலேயே அந்தக் கோட்டையைக் கைப்பற்றி உள்ளே நுழைகிறார்கள். எனினும் சிறிது நேரத்திலேயே பாண்டியப்படைகள் அந்தக் கோட்டையைச் சூழ்ந்து இலங்கைப்படையை முற்றுகையிடுகிறார்கள். பெரும் போருக்குப் பின்னர் அந்த முற்றுகையை உடைக்கின்றன சிங்களைப்படைகள்.

சோழ நாட்டின் எல்லையை ஒட்டியிருந்த அந்தப்பகுதியை லங்கபுர கைப்பற்றிய பின்னர் அங்கிருந்த வைசியர்களும், யவனர்களும் (முஸ்லிம்கள்) பரிசுப்பொருட்களைக் கொண்டுவந்து அவருக்கு அளிக்கிறார்கள். செம்பொன்மாரியை மீண்டும் மாளவச் சக்கரவர்த்திக்கு அளிக்கும் லங்கபுர, திருவேங்கம் மற்றும் கருத்தங்குடி வழியாக மீண்டும் ஆனைவிலக்கிக்குச் சென்று சேர்கிறார். அதற்குள் இன்னொரு தமிழ்ச் சிற்றரசன் மாலவச் சக்கரவர்த்தியிடமிருந்து செம்பொன்மாரியைக் கைப்பற்றியதுடன் சிறுவயல் பகுதியையும் பிடித்துக் கொண்ட தகவல் அவரை வந்தடைகிறது. இவர்கள் இருவருக்கிடையே சமாதானம் பேசிச் சரிப்படுத்தும் லங்கபுர நெட்டூரை அடைகிறார். பின்னர் ராஜசிங்கமங்கலம் மற்றும் வலந்தைவிளையிலிருந்த இரண்டு குளங்களைச் செப்பனிடுகிறார் லங்கபுர.

(தொடரும்)

இத்தொடரின் மற்ற பகுதிகள் இங்கே.

2 Replies to “தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *