தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2

(எஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அவர்கள் எழுதிய South India and her Mohammadan Invaders என்கிற புத்தகத்திலிருந்து இந்தக் கட்டுரையின் பகுதிகள் எடுத்தாளப்பட்டிருக்கின்றன)

இத்தொடரின் மற்ற பகுதிகள் இங்கே.

இந்தச் சூழ்நிலையில் குலசேகர பாண்டியன் மீண்டும் கொங்கு மற்றும் திரு நெல்வேலி படைகளுடன் அங்கு படையெடுத்து வருகிறான் என அறியும் இலங்கை அரசன் பராக்கிரமபாகு அவனை எதிர்க்க ஜகத் விஜய என்பவனின் தலைமையில் இன்னொரு படையை பாண்டிய நாட்டுக்கு அனுப்பி வைக்கிறான். அந்தப் படையும் சிங்களத் தளபதி லங்கபுர இருக்கும் ஆனைவிலக்கிற்கு வந்து சேருகிறது. இருவரும் நெட்டூர் மற்றும் ஆனைவிலக்கியில் தங்கள் முகாம்களைத் தனித்தனியாக அமைத்துக் கொள்கிறார்கள். பின்னர் லங்கபுர அங்கிருந்து முன்னேறி மங்கலம் என்கிற (வல்லுடி வால்மங்கலம், காளையார் கோவிலுக்கும் திருப்பத்தூருக்கும் இடையில் இருப்பதாகத் தெரிகிறது) இடத்தில் பாண்டியப் படைகளுடன் போர் புரிகிறான்.

பின்னர் அங்கிருந்து மீண்டும் சிறுவயலுக்குச் சென்று ஊர்த்தலைவனான புண்கொண்ட நாடாள்வார் என்பவனையும் அவனது நட்புப் படைகளையும் வென்று, நாடாள்வாரின் இரண்டடுக்கு கொண்ட மாளிகையைத் தீக்கிரையாக்குகிறான். லங்கபுர பின்னர் அங்கிருந்து காளையார் கோவிலுக்குச் சென்றுவிட, இன்னொரு சிங்களத் தளபதியான ஜகத் விஜய மானாமதுரையையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பிடித்துவிட்டு மீண்டும் நெட்டூருக்குத் திரும்புகிறான்.

பின்னர் ஒண்றிணைந்த சிங்களப்படைகள் குலசேகரப் பாண்டியனைத் தேடி திருப்பாலூருக்குச் செல்கின்றன. இந்த நேரத்தில் குலசேகரப் பாண்டியன் ரஜினா என்கிற நகரத்திற்கு (அது எந்த இடம் என்று தெரியவில்லை) வந்து தங்கியிருக்கிறான். ரஜினா நகரத்தில் பாண்டிய மற்றும் சிங்களப்படைகளுக்கு இடையே போர் நடக்கிறது. போரில் தோல்வியுறும் குலசேகரப்பாண்டியன் அங்கிருந்து தப்பி தொண்டமான் நாட்டிற்கு (புதுக்கோட்டை) தப்பிச் சென்று அங்கிருந்து சோழர்களின் உதவியைக் கோருகிறான்.

தமிழ்நாட்டில் சிங்களப் படைகள் (இலங்கை ஓவியம்)

வெற்றி பெற்ற சிங்களப்படை பின்னர் மதுரையை நோக்கிச் சென்று அதனைக் கைப்பற்றுகிறது. கொலையுண்ட வீரபாண்டியனின் மகனை பாண்டிய நாட்டுக்கு பொறுப்பாளனாக்குகிறது சிங்களப்படை. அதனைத் தொடர்ந்து, குலசேகர பாண்டியனுக்கு உதவிகள் செய்த பாண்டிய நாட்டுத் தலைவர்கள் சிங்களப்படைகளுக்கு அடிபணிகிறார்கள்.

இலங்கை அரசன் பராக்கிரமபாகுவின் ஆணையை நிறைவேற்றிய சிங்களத் தளபதி லங்கபுர பின்னர் குலசேகரனைப் பிடிக்கும் எண்ணத்துடன் மதுரைச் சாலை வழியாக திருப்பத்தூரை நோக்கிச் செல்கிறார். திருப்பத்துரைக் கைப்பற்றிய பின்னர் பொன்னமராவதியை நோக்கிச் செல்லும் லங்கபுர, பொன்னமராவதியையும் கைப்பற்றி பின்னர் அங்கிருந்த மூன்றடுக்கு மாளிகையைத் தீக்கிரையாக்குகிறார். அதற்கு அருகிலிருந்த பல வீடுகளும், வைக்கோற் போர்களும், நெற்களஞ்சியங்களும் அதனுடனேயே எரிந்து சாம்பலாகின்றன.

அதனைத் தொடர்ந்து அச்சத்துடனிருந்த பொன்னமராவதி குடிமக்களைத் தான் ஒன்றும் செய்யப்போவதில்லை என்றும் அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பேன் என்றும் தண்டோரா போட்டு அறிவிக்கும் லங்கபுர பின்னர் அங்கிருந்து மதுரைக்குத் திரும்புகிறார். மதுரையில் வீர பாண்டியன் மகன் முடி சூட்டுவிழாவைத் தடபுடலாகக் கொண்டாட ஆயத்தங்கள் நடக்கின்றன. மாலவ சக்கரவர்த்தி, மாலவராயர் மற்றும் தலையூர் நாடாள்வார் போன்ற பாண்டிய முக்கியஸ்தர்களை அந்தக் காரியத்தில் ஈடுபடுத்துகிறார் லங்கபுர.

பின்னர் பாண்டிய நாட்டு சிற்றரசர்கள், ஊர்த் தலைவர்கள், பிற முக்கியஸ்தர்கள் அனைவரும் வீரபாண்டியனின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கிறார். அதனைத் தொடர்ந்து மதுரைக் கோட்டையின் வடக்கு வாயிலில் இருந்ததொரு ஆலயத்தில் வீரபாண்டியனுக்கு முரசுகள் ஒலிக்க முடிசூட்டி, அரியணை ஏற்றுகிறார். வீரபாண்டியன் மதுரை நகரிலும், பாண்டிய நாட்டிலும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்டுகிறான்.

இதற்கிடையே புதுக்கோட்டைப் பகுதியில் பதுங்கியிருக்கும் குலசேகரப் பாண்டியன், புதுக்கோட்டை தொண்டமான் அரசரின் (அறந்தாங்கியாக இருக்கலாம்) உதவியுடன் மங்கலம் நகரை மிக விரைந்து கைப்பற்றிக் கொள்கிறான். ஆனால் பாண்டிய நாட்டின் பல்வேறு மங்கலங்களில் இது எந்த மங்கலம் என்று உறுதியாகத் தெரியவில்லை. சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கையில் இது சாத்தூர் தாலுக்காவிலிருந்த மங்கலமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. பின்னர் அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்துரைக் கைப்பற்றும் குலசேகர பாண்டியன், திருநெல்வேலியைச் சேர்ந்த இரண்டு கொங்குகளிடம் படையுதவி கேட்டுப் பெறுகிறான். சாத்தனேரியும் குலசேகர பாண்டியனிடம் வீழ்கிறது.

இரண்டு சிங்களத் தளபதிகளும், லங்கபுர மற்றும் ஜகத் விஜய, குலசேகரனின் இருப்பிடத்தைச் சூழ்ந்து அவனைத் தாக்குகிறார்கள். குலசேகரன் அங்கிருந்த ஒரு பெரிய ஏரியின் கரைகளை இடித்து அவர்களைத் தோற்கடிக்க முயல்கிறான். இருப்பினும் சிங்களத் தளபதிகள் அந்த ஏரியின் கரைகளை விரைவாகச் சரிசெய்து குலசேகரனை அங்கிருந்து விரட்டியடிக்கிறார்கள். சிரிமலக்கா மற்றும் குற்றாலம் பகுதிகள் அவர்களிடம் வீழ்கின்றன.

சிரிமலக்கா என்கிற இடத்தில் வைத்தே குலசேகர பாண்டியன், பராக்கிரம பாண்டியனையும் அவனது மனைவி, குழந்தைகளையும் கொன்றதால் அந்த ஊரில் இருந்த அரண்மனையைத் தீ வைத்து எரிக்க உத்தரவிடுகிறார் லங்கபுர. பின்னர் அங்கிருந்து சென்று சோழகுலந்தகம் என்னும் இடத்தைக் கைப்பற்றுகிறார்.

குலசேகர பாண்டியனுக்கு சோழ நாட்டிலிருந்து படையுதவி கிட்டுகிறது. பல்லவ ராயரின் கல்வெட்டுக்களின்படி இந்தப் படைகள் புதுக்கோட்டைக்குத் தெற்குப்பகுதியிலிருந்து வந்தவை எனத் தெரிகிறது. அவர்களுடன் இணையும் குலசேகர பாண்டியன் பாண்டு நடுக்கோட்டை மற்றும் உரியேரியைத் தனது தலைமையிடமாகக் கொள்கிறான். இருப்பினும் அவனை அங்கும் தோற்கடிக்கும் இரண்டு சிங்களத்தளபதிகளும் பாளையைம்கோட்டையை அடைந்து அங்கு ஒளிந்திருந்த குலசேகரனை விரட்டுகிறார்கள்.

குலசேகர பாண்டியன் அங்கிருந்து மதுரையை நோக்கிப் படையெடுத்துச் செல்வதாகக் கேள்விப்படும் சிங்கள தளபதிகள் உடனடியாக மதுரையை நோக்கி வர, அங்கிருந்து தப்பும் குலசேகரன் சோழ நாட்டிற்குத் தப்பிச் சென்று சோழர்களின் உதவியை நாடுகிறான். பாடநல்லூரில் ஜகத் விஜயனை நிறுத்திவிட்டு லங்கபுர திருக்கண்ணப்பருக்குச் செல்கிறார். இதே வேளையில் சோழ நாட்டிலிருக்கும் குலசேகர பாண்டியனின் வேண்டுகோளை ஏற்கும் சோழ அரசர் அவனுக்கு உதவியாக பல்லவராயரின் தலைமையிலும், பிற சோழ படைத்தளபதிகளின் தலைமையிலும் ஒரு படையைத் தரைவழியாகவும், தொண்டி துறைமுகம் வழியாகவும் அனுப்பி வைக்கிறார்.

இதனைக் கேள்விப்படும் லங்கபுர தனது படையணியில் ஒருபகுதியினரை மதுரையைப் பாதுகாப்பதற்காக வைத்துவிட்டு இன்றைய திருப்பத்தூர் தாலுக்காவிலிருக்கும் கீழாநிலை என்கிற இடத்திற்குச் செல்கிறார். இங்கு நடக்கும் போரில் சோழ, பாண்டிய கூட்டுப்படைகளைத் தோற்கடிக்கும் லங்கபுர, மணமேக்குடி மற்றும் வட மணமேக்குடி என்னும் ஊர்களைக் கைப்பற்றுகிறார். இந்த இடம் வெள்ளாற்றின் முகத்துவாரத்தில் இருகிறது. இந்த இரண்டு ஊர்களையும் தீக்கிரையாக்கிவிட்டு மஞ்சக்குடி என்கிற ஊரையும் எரித்து அழிக்கிறார் லங்கபுர.

குலசேகர பாண்டியனுக்கு உதவிய சோழர்களைப் பழிவாங்கும் பொருட்டு சோழப்பகுதிகளில் ஏழு காத தூரம் நுழையும் சிங்களப்படைகள் அந்தப்பகுதிகளைத் தாக்கி அழிக்கின்றன. பின்னர் குலசேகரனுக்கு உதவச் சென்ற நிகலதராயரின் ஊரான வேளான்குடிக்குச் செல்கின்றன சிங்களப்படைகள். ஆனால் நிகலதராயர் வேறுபல தமிழ் சிற்றரசர்கள், தளபதிகளின் உதவிகளைப் பெறுவதில் வெற்றி பெறுகிறார். அவரது படைகளுடன் குலசேகரப்பாண்டியனுடன் வந்த திருநெல்வேலி, கொங்குப் படைகளும் ஒன்று சேர, பொன்னமராவதியில் லங்கபுரவை எதிர்த்து நிற்கிறான் குலசேகரபாண்டியன். அங்கும் அவனைத் தோற்கடித்து விரட்டுகிறார் லங்கபுர.

பாண்டிய நாட்டில் வீரபாண்டியனின் எதிரிகளை வீழ்த்தி விரட்டிவிட்டதாக எண்ணும் லங்கபுர பின்னர் தனது தலைமையகத்திற்குத் திரும்புகிறார். பின்னர் தனது அரசனான இலங்கையின் பராக்கிரமபாகுவை கவுரக்கும் வகையில் பராக்கிரமபாகுவின் படம் பொறித்த இலங்கைப் பணத்தை (கஹபண) பாண்டிய நாட்டில் தயாரிக்க உத்தரவிடுகிறார். வீரபாண்டியனுக்குப் பொறுப்புகளை ஒப்படைத்த பின்னர் பாண்டிய நாட்டில் கைப்பற்றிய கைதிகள், யானைகள், குதிரைகள் போன்றவற்றை இலங்கைக்கு அனுப்பி வைத்துவிட்டுத் தானும் இலங்கை திரும்புகிறார் லங்கபுர.

லங்கபுரவின் மாபெரும் வெற்றியைக் கவுரவிக்கும் பொருட்டு பராக்கிரமபாகுவே நேரில் வந்து அவரை வரவேற்கிறான். அவரது நினைவாக பண்டுவிஜயக என்கிற கிராமம் நிறுவப்பட்டு ஏராளமான பொன்னும், பொருளும் பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப்படுகிறது. இப்படியாக இலைங்கைப் போர் வெற்றிகரமாக முடிந்ததாகக் கூறுகிறது இலங்கை மஹாவம்ச வரலாறு.

*
எனினும், இந்த வரலாறு முழுமையான ஒன்றல்ல. இலங்கையரின் நோக்கில் எழுதப்பட்ட ஒருதலைப்பட்சமான இந்த வரலாறு ஒரு பெரும் காதையைப் போல எழுதப்பட்ட ஒன்று. அதனைக் குறித்து தொடர்ந்து காண்போம்.

(தொடரும்)

இத்தொடரின் மற்ற பகுதிகள் இங்கே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *