ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8

இத்தொடரின் அனைத்து பகுதிகளையும் இங்கு வாசிக்கலாம்.

8 – சூரியன்

“மாயையில் இருந்து என்றும் நிலைத்து நிற்கும் உண்மையையும், இருளில் இருந்து ஒளியையும், இறப்பில் இருந்து பிறக்கும் தன்மையையும்” அறிவதே அறிவு. அதை அறியாமையில் இருந்து அறிவைத் தெரிந்துகொள்வது என்று கூறலாம். “அறிவும் அறியாமையும் யார்க்கு என்று அம்முதலாம் தன்னை அறியும் அறிவே அறிவு” என்று அதை விளக்கிக் கூறுவார் ரமணர். அறிவை ஒளியினுடனும், அறியாமையை இருளுடனும் தொடர்புபடுத்திக் கூறுவது வழக்கம். ஒளி என்றவுடன் நமக்கு முதலில் தோன்றும் எண்ணம் சூரியனைப் பற்றியதுதான். அது எந்தச் சூரியன் என்பதை விளக்கப் போகும் ரிக் வேத ரிஷிகள் குத்ஸ மற்றும் ஹிரண்யஸ்தூப ஆங்கிரஸர்கள், ஷ்யவஷ்வ, உருச்சக்ரி, மற்றும் அர்ச்சநான ஆத்ரேயர்கள், மைத்ரவாருணி வஸிஷ்டர், நபாக கன்வர், கதின விஸ்வாமித்ரர், பர்ஹஸ்பத்ய பரத்வாஜர், பதங்க ப்ரஜாபத்யர் ஆகியோர் ஆவார்கள்.

நாம் முன்பே கூறியபடி, பகலில் இயங்கும் சூரியன் மாலையில் மறைந்து, பின் அதிகாலையில் உதிக்கும் தினசரி நடவடிக்கைகளைக் கண்ட முனிவர்கள் அதை ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஏதோவொரு இருண்ட சக்தி அதை மங்கவைக்க முயற்சி செய்வதாகவும், அதை சூரியன் எதிர்த்துப் போரிட்டு, காலையில் தனது முழுத் திறமையுடன் மீண்டும் உதித்து, தன் இயக்கத்தைத் தொடர்வதாகவும் எண்ணினார்கள். அதற்கு உதவும் வகையில் “ஸவித்ர” எனும் ஒரு ஞான சூரியன் இருக்கவேண்டும் என்று அனுமானித்தனர்.

அந்த ஞான சூரியனையே கடவுளாகக் கருதினர்; நாம் பகலில் காணும் சூரியனை அல்ல. அதாவது மாலை வேளையே ஞான சூரியனின் விடியல் வேளை என்றாகும். “ரே” என்ற பெயருடன் இது போன்றதொரு சூரியக் கடவுள் எகிப்து நாகரிக வழக்கத்திலும் இருந்தது. உறக்கத்தில் வரும் அறியாமை எனும் இருள், பகலில் தெரியும் உலகத்தையும் மறைத்து, தான் எனும் நமது இயல்பான உணர்வையும் மறக்கடிப்பதால், ஞானம் எனும் சூரியனுக்கான தேவை இருக்கிறது.

மேலும், என்னதான் அறியாமை, இருள் என்று விவரிக்கப்பட்டாலும் அந்த உறக்கத்தில்தானே ஒவ்வொருவரும் ஆனந்த நிலையை அனுபவிக்கின்றனர்? அவ்வாறான இனிமையான அனுபவம் பகலிலும் இயல்பாக ஏற்படாமல் சலிக்கும் மனத்தையும், ஏதாவதொரு வகையில் துன்பத்தையும் நாம் அனுபவிப்பது போல் அல்லவா நம் வாழ்நாட்கள் கடந்து போய்க்கொண்டிருக்கின்றன? அதை மாற்றி உறக்கத்தில் நாம் காணும் ஆனந்தத்தைப் பகலிலும் காண்பதற்கே நமது உண்மை நிலையைப் பற்றிய ஞானம் நமக்குத் தேவையாகிறது. அதற்கு எதிர்மறைகள் அனைத்தையும் எதிர்த்துப் போராடி, தினம் தினம் உதிக்கும் வலிமை மிக்க சூரியன் போன்றதொரு சக்தியின் தேவை உணரப்படுகிறது.

பகலில் காணப்படும் சூரிய ஒளியாலேயே நாம் அனைத்தையும் காண்கிறோம்; தாவரங்கள் முதற்கொண்டு சகல விதமான உயிர்களின் பலவித இயக்கங்களும் காலம் காலமாக அதனாலேயே தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. அந்தச் சூரியன் மறைந்ததும், வேறெந்த ஒளியின் துணையும் இல்லாத நிலையில் இருள் இருக்கிறது என்றாலும், நாம் இருப்பதை தொடர்ந்து உணர்ந்துகொண்டுதானே இருக்கிறோம்?

ஆக ஒன்றை நம் கண்கள் மூலம் காண்பதற்கு சூரியனின் ஒளி தேவைப்படுகிறது. அப்போது நாம் ஒன்றை மிகவும் கூர்ந்து கவனிக்கும் போது, அங்கு இருப்பது இரண்டே இரண்டுதான்; ஒன்று நாம், மற்றது அந்தப் பொருள். அவ்வாறு இருந்தாலும் அந்தப் பொருள் இருப்பது நம் கவனத்தால் மட்டுமே என்பதால், அந்த இரண்டிலும் நாமே முக்கியம் என்பது தெளிவாகிறது. ஏனென்றால் அந்தப் பொருள் மீது நம் கவனம் இல்லாது போனால், அந்தப் பொருள் இருந்தும் நம் கவனம் இல்லாததால், அது நம்மைப் பொருத்தவரை இல்லாத ஒன்றே. ஆகவே நம் பார்வை முக்கியமானது. அதற்கு முதலில் நாம் இருப்பது அவசியம். உலகத்தைப் பொருத்தவரை, இருளிலும் அதே நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

பின் வரும் நம் ஆழ்ந்த உறக்கத்தில், நாம் இருப்பதை உணராவிட்டாலும் நமக்கு வரும் பெரும் அமைதியை நாம் அனுபவிக்கிறோம் என்றால், அனுபவிக்கும் அளவிற்கான ஞானம் நமக்கு அப்போது இருக்கிறது என்றுதானே அர்த்தம்? அதாவது பொருள் என்று ஏதும் இல்லாமல், அல்லது உணரப்படாமல், நமது இயல்பான ஆனந்த நிலையை நாம் அனைவருமே அப்போது உணர்கிறோம் . அங்கு எண்ணங்கள் ஏதுமில்லை; எண்ணக் குவியல்களான மனம் இல்லை என்பதால் எந்தவிதமான வாசனைகளும் அப்போது இல்லை. அதனால் அகங்காரமாகிய “நான்” இல்லாது, “தான்” இருந்தும் அதுவும் உணரப்படாது, ஆனந்த அனுபவம் ஒன்றே எஞ்சி நிற்கிறது. அதை ஞான சூரியன் எடுத்துக்கொண்டு, கண் விழிக்கும் நிலையில் கிளம்பும் “நான்” எனும் உணர்விற்குத் தருகிறான்.

அப்போது மனம், வாசனைகள் எல்லாமே திரும்பவும் வந்துவிட்ட நிலையில் நாம் இருக்கிறோம். அந்த நிலையில் நம் மனமோ, வாசனைகளோ அழிந்து போயிருந்தால் ஞான சூரியன் தொடர்ந்திருந்து, நம்மை ஆனந்த நிலையில் மட்டுமே தொடர்ந்திருக்கச் செய்யும் அல்லவா? அந்த நிலையில் நிற்பவர்களே ஞானிகள். அவர்களது இந்திர சக்தி புலன்களின் வழியாக உலகை நோக்காது, தன்னுள் நோக்கியே நிற்பதால் தொடர்ந்து ஞான சூரியனாகவே திகழ்வார்கள்.

அந்த நிலையை நம் முயற்சியால் மட்டுமே அடைய முடியும் என்று நினைப்பது தவறு. முன்பே கூறியது போல, நம் முயற்சியால் நம் எண்ணங்களைக் கட்டுப்படுத்தி, நம் வாசனைகளைக் குறைக்கலாம். அதற்கும் ஒரு தகுதி வேண்டும். அதற்குமேல் ஞானம் பெறும் பாக்கியத்தை நம்மைப் படைத்த இறைவனே அருளவேண்டும். அந்த நிலை சிற்றறிவு பெறுவது போல படிப்படியாக முயன்று பெறுவதல்ல. ஒரு மின்னல் போல ஞான சூரியன் நம் மனதை ஒளிர்வித்து, நம் வாழ்வின் பயனை நமக்கு அருள்வான்.

ஜனகர் சம்பந்தப்பட்ட நிகழ்வொன்றில் வருவது போல “குதிரை ஒன்றின் மேல் ஏறுபவன் தன் ஒரு காலை மேலே தூக்கிப்போட்டு விட்டான்; அவன் தன் அடுத்த காலைத் தூக்கி உட்கார்வதற்குள், அவனுக்கு யோகம் இருந்தால், அவன் ஞானம் பெறலாம்”. அந்த நிலையை அடைந்தவனது பார்வையே வேறுவிதமாக அமையும். அத்தகையவர்கள் நம்மை ஒரு முறை பார்த்தாலே போதும்; அவர்கள் பார்வையில் சிக்குண்ட எவரும் ஞானம் பெறாமல் தப்ப முடியாது.

“அம்மகத்துகட்கு இணை ஆகாவாம், அம்ம!
எண்ணில் நாளாம் தூய்மை எய்விப்ப சாதுக்கள் கண்ணால் கண்டிடவே காண்”
என்று ரமணர் கூறுவார். பல காலம் செய்த தவத்தினால் ஞானம் பெற்றவர்களின் அருட்பார்வையின் கீழ் வரும் மகத்துவத்திற்கு இணையானது வேறொன்றுமே இல்லை என்பதே அதன் அர்த்தம்.

ஆதி சங்கரர் அருளிய “ஏகஸ்லோகி” என்ற பாடலை ரமணர் தமிழில் ஒரு வெண்பாவாக மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார். அது ஒரு குருவின் கேள்விக்கு சீடன் பதில் கூறுவதுபோல் அமைந்திருக்கும்.

“ஒளி உனக்கு எது? பகலில் எனக்கு இனன், இருள் விளக்கு
ஒளி உணர் ஒளி எது? கண். அது உணர் ஒளி எது?
ஒளி மதி. மதி உணர் ஒளி எது? அது அகம்.
ஒளிதனில் ஒளியும் நீ என குரு. அகம் அதே.”

இதில் இனன் என்பது சூரியன்; மதி என்பது புத்தி; மற்றவை புரிந்திருக்கும். இறுதியில் எஞ்சியிருப்பது “தானே” என்கிறான் சீடன்.

விஞ்ஞானம் இன்று நமக்குக் கூறுவதன்படி, வானத்தில் நாம் காணும் சூரியனை விட்டு, இப்போது இருக்கும் இடத்தில் இருந்து இந்த பூமி 5% அருகில் இருந்திருந்தால் சூரியனின் வெப்பம் தாங்காமல் அனைத்தும் எரிந்து போயிருக்கும். அதேபோல 15% தள்ளிப்போயிருந்தால், வேண்டிய வெப்பம் இல்லாமல் அனைத்தும் உறைந்து போயிருக்கும். இவ்வாறு நம் பூமி வான்வெளியில் சரியான இடத்தில் நிலைகொண்டு இருப்பதாலேயே, பற்பல உயிர்களின் பரிணாம வளர்ச்சி ஏணியில் நாமும் உருவாகி வளர்ந்திருக்கிறோம். இதற்கு நாம் எவருக்கென்று நன்றி செலுத்துவது? அதனால் நாம் காணும் சூரியன் முதற்கொண்டு பல விவரங்கள் அடங்கிய பிரபஞ்சத்தையே நன்றியுடன் தொழுவது நல்லதே. அது காலம், இடம் என்ற கட்டுக்குள் வராது எங்கும் பரந்து, விரிந்து உள்ளது.

ஞானக் கண்ணால் மட்டுமே உணரக் கூடிய ஞானச் சூரியன், மற்றும் ஊனக் கண்ணால் காணக் கூடிய ஊனச் சூரியன் இரண்டையும், அவைகளின் தன்மைகளைக்கொண்டு, சூரியனின் இருவேறு முகங்களாக ரிக் வேதம் வர்ணிக்கிறது. ஊனச் சூரியன் உதிப்பதால் உலகின் பல வளங்கள் செழிப்பதற்குக் காரணமாய் இருப்பதாலும், அது இன்னார்க்குத்தான் என்றில்லாமல் எவர்க்குமே தன் சக்தியை அளிப்பதாலும், அதை அனைவரின் ஆப்த நண்பனாக உருவகித்து மித்ரன் என்றழைத்தனர். ஞான சூரியன் உதிக்கும்போது, அது அனைவர்க்கும் பரம ஆனந்தத்தை அளிப்பதுடன், ஓர் உயிருடன் வேறு உயிர்களைப் பிரித்துப் பார்க்கும் தன்மையையும் களைந்தெடுத்து, சீவராசிகள் அனைத்தும் பரவலான ஓரினமே என்று காட்டுவதால் அதை வருணன் என்றழைத்தனர். அவ்வாறு எங்கும் வியாபித்து விளங்கி, எட்டுவதற்கு இயலாத ஆனால் அனைத்து வளங்களையும் அளிக்கும் அதீத சக்தியை விஷ்ணு என்றும் கூறினர். அதேபோல தன்னளவில் மட்டுமே உணரப்பட்டாலும் பார்வைக்கு ஏற்றபடி, தானே உலகமாக விரிவதாகவோ அல்லது உலகே தன்னுள் அடங்குவதாகவோ, அனைத்தையும் அறிய உதவும் சக்தியை இந்திரன் என்றும் கூறினர்.

இவ்வாறாக இருக்கும் ஒரு பிரம்மத்தை, அவர்கள் கண்ட குணத்திற்கேற்ப, பல பெயர்கள் கொண்டு அறிந்தனர். ஆனாலும் அனைத்தும் ஒன்றே என்ற தெளிவு அவரவர் அனுபவத்தில் வரும் வரை, ஒவ்வொருவரும் தனக்கு இயல்பாக வரும் கடமைகளை மற்றவர்க்கு உதவும் வகையில் செய்துவர வேண்டும். அதுவொன்றே மனத்திருப்தி அளிப்பதோடு என்றும் நிலைத்து நிற்கக்கூடிய ஆனந்தத்தையும் ஒருவனுக்குக் கொடுக்கும்.

அதாவது தெய்வீக இயல் இல்லாமல் உலகவியல் இல்லை என்று ஒவ்வொருவரும் உணரும் நிலையே அது. சத்-சித்-ஆனந்தமும் உடல்-உயிர்-உள்ளமும் ஒன்றே என்பதை அனுபவிக்கும் நிலை அது. வேறெந்த நிலையிலும் பல உயிர்களிடையில் பொதுவாக நாம் காணும் வேற்றுமைகளைக் களைந்தெறிய முடியாது. இவ்வாறாகச் சிறிதுசிறிதாக நம் வாசனைகளை அழித்து, ஞான சூரியனை நம் விழிப்பு நிலையில் தரிசனம் செய்வதற்கே நாம் பிறந்துள்ளோம். அப்போது நாம் இருக்கும் நிலையே ஆனந்த நிலையாகும். இவ்வாறாக நாம் பிரம்மத்தின் நான்காவது முகமான ஆனந்த உருவான சோமனுக்கு வருகிறோம்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published.