அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல் – 5

5.  அமெரிக்காவுக்கு ஏற்பட்ட அவலம்

எழுத்தாளன் குறிப்பு:  அன்புள்ள வாசகப் பெருமக்களுக்கு, இந்தப் பகுதியில் நான் எழுத நினைத்ததை எழுதப் போவதில்லை.  அதைப் பின்னால் எழுத முடிவுசெய்துள்ளேன்.  காரணம்: அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே 1812ல் நடந்த போரில் சட்டப் பேரவையை (capitol building) முற்றுகையிட்டு பிரித்தானியர் அத்துமீறி உட்புகுந்தபின், இதுவரை நடக்காத அவல நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணிவாக்கில் மீண்டும் (ஜனவரி, 6, 2021) நடந்தேறியது.  அமெரிக்க சட்டப் பேரவைக்குள் அதிபர் டானால்ட் டிரம்ப்பின் ஆதரவு ஆர்ப்பார்ட்டக்காரர்கள் – போக்கிரிகள் — காவலர்களையும் மீறிக்கொண்டு ஆயுதக் கைகலப்புசெய்து, நூற்றுக்கணக்கில் உள்நுழைந்தனர்.  துணை அதிபர் மைக் பென்ஸ், ஸ்பீக்கர் (சபாநாயகர்) நான்சி பலோசி, மற்றும் பல அரசுப் பிரதிநிதிகள் உயிருக்குப் பயந்து சுரங்கப்பாதைமூலம் வெளியேற நேர்ந்தது.  குடியரசுக்கு ஒரு ஒளிவிளக்காக விளங்கிவரும் அமெரிக்காவில் இப்படிப்பட்ட முறைகேடு நிகழ்ந்ததை நேரில் கண்டு உலகமே திகைத்துச் செயலிழந்தது.  பின்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற்றப்பட்டு, இரவு மீண்டும் வாக்குகளை எண்ணி அங்கீகரிக்கும் பணி இரவில் தொடர்ந்தது.

    எனவே, இது எப்படி இங்கு நடந்தது, இது நடக்க என்ன காரணம் என்பதை என்னால் இயன்றவரை விளக்குகிறேன்.

    பொய்யாகப் பிரசாரம்செய்பவர்களுக்குச் செவிமடுத்தால், அவர்கள் சொல்வது உண்மையென்று நம்பிச் செயல்பட்டால் — இன்று அமெரிக்காவில் நடந்தது, நாளை இந்தியாவிலும் நடக்கலாம்,.  உலகிலேயே மக்கட்தொகை மிகுந்த, ஆன்மீக வழிகாட்டியான, உலகின் மிகப் பழைமையான நாடான பாரதத்தில் அப்படி நடக்காமலிருக்க வேண்டும், மக்கள் எத்தர்களின் பிதற்றலுக்கு மயங்காமல் மெய்ப்பொருள் கண்டு ஒற்றுமையுடன், செயலாற்றவேண்டும் என்ற பிரார்த்தனையுடன் மேலே எழுதுகிறேன்.  எக்கருத்துகளையும், கேள்விகளையும் பதிந்தால் என்னால் இயன்ற அளவுக்குப் பதிலளித்து விளக்குகிறேன். — ஒரு அரிசோனன், ஜனவரி 6, 2021

உலகம் இதுவரை காணாத காட்சி!  கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சிப் பெட்டியில் விரியும் அந்த நம்பமுடியாத காட்சியைக் கண்டு திகைத்துநின்றனர்.  அவர்களின் கண்களையே அவர்களால் நம்பமுடியவில்லை.  அமெரிக்காவிலா இது நடக்கிறது?  2001ல் நவம்பர் 11ம் தேதி மூன்று விமானங்கள் நியூயார்க் நகரத்தில் இரட்டைக் கோபுரங்களையும் (twin towers), பென்ட்டகன் கட்டிடத்தையும் தாக்கியபோது ஏற்பட்ட அந்த அதிர்ச்சி மீண்டும் ஏற்பட்டது.  அதைச் செய்தது அமெரிக்காவின் எதிரிகள்!  ஆனால் ஜனவரி 6, 2021ல் நிகழ்ந்த அந்த நிகழ்ச்சி அமெரிக்கப் போக்கிரிகளால் நிகழ்த்தப்பட்டது.  செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷூமர், “பெர்ல் துறைமுகம் ஜப்பானியரால் தாக்குண்டபோது, அந்நாள் அதிபர் ஃபிராங்க்லின் ரூஸ்வெல்ட இந்நாள் ஒரு இழிவான நாள் என்றார்.  இன்று நடந்ததைச் சொன்னால், இந்நால் ஒரு இழிவான நாள் என்றே சொல்லவேண்டும் என் வருத்தத்துடனும், ஆத்திரத்துடனும் முழங்கினார். அதுதான் என்ன இழிவு?

அமெரிக்க சட்டப் பேரவைக்குள் 208 ஆண்டுகள் கழித்து அத்துமீறிப் போக்கிரிகள் நுழைந்து, மக்கள் பிரதிநிதிகளைத் தாக்க முற்பட்டனர்.    

தடுக்க முயன்ற பதினான்கு காவலர்கள் தாக்கப்பட்டுக் காயமடைந்தனர்[i] ஈராக் போரில் எதிரியை எதிர்த்துப் போராடி மீண்ட அமெரிக்க மாஜி ராணுவ வீரரான ப்ரையன் சிக்னிக் என்ற 42 வயதான சட்டப் பேரவைக் காவலர், போக்கிரிகளின் தாக்குதலால் வீரமரணமடைந்தார்[ii]

நிலைமை முற்றுவதற்குள் துணை அதிபர் மைக் பென்சையும், சபாநாயகர் நான்சி பெலோசியையும், உடனே இரகசியப் போலிசார் பாதுகாப்பான இடத்திற்குக் கூட்டிச் சென்றனர்.  கலகம் விளைவிக்க முயலும் போக்கிரிகளுக்கும், இரகசியப் போலிசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது.  அதில் கலகம்செய்ய முயன்ற ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் மூன்று போக்கிரிகள் வெளியில் மற்ற காரணங்களால் இறந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி ஜெரால்ட் ஃபோர்டின் சிலையின் பீடத்தில் ஒரு குண்டன் ஏறிநின்று, தனது பேஸ்பால் தொப்பியை சிலையின் தலையில் வைத்து, டிரம்ப் கொடியை அதன் கையில் செருகினான், சிலைக்கு அருகில் நின்று, சிலையின் தோளில் கைவைத்து வெற்றிபெற்ற வீரனைப்போலப் ‘போஸ்’ கொடுத்தான்.  மற்றொரு போக்கிரி அங்கு சிறுநீர் கழித்தான். இன்னொருவன், கருப்பரை அடிமைசெய்யும் சின்னமான கன்ஃபெடரேட் கொடியுடன் உலவினான்.  மற்றுமொருவன், சபாநாயகர் நான்சி பெலோசியின் தனி அலுவலகத்திற்குச் சென்று, அவருடைய நாற்காலியில் அமர்ந்து, கால்களை மேஜையில் அமர்க்களமாக வைத்துப் படமெடுத்து, அதைப் ஃபேஸ்புக்கில் வெளியிட்டான். மேலும், சபாநாயகருக்கு மிரட்டல் குறிப்பையும் விட்டுச் சென்றான்.  வேறொரு போக்கிரி துணை அதிபர் மைக் பென்சின் இருக்கையில் அமர்ந்து வெறிப்புன்னகை புரிந்தான்.

சட்டப்பேரவைக்குள் கன்ஃபெடரேட் கொடியுடன் போக்கிரி

ஆர்ப்பாட்டக்காரர்கள் காவலர்களுடன் கைகலந்து சட்டப் பேரவையின் சன்னல் கண்ணாடிகளை உடைத்து உட்புகுந்தனர்.  இதை விவரிக்கும் ‘வாஷிங்டன் எக்சாமினர்’ என்னும் பத்திரிகை, “சட்டப் பேரவையை முற்றுகையிடுவது, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் செனட்டர்களை வெளியேற்றுவது ஆகியவை வெளிநாடுகளில் உள்ள போர்க்களங்களீல் நிகழக்கூடியது. இது நம் நாட்டில் நடப்பது, பொறுத்துக்கொள்ள வேண்டிய ஒன்றல்ல. நாம் கண்டது ஏற்றுக்கொள்ளவே முடியாத உயிருக்கு அச்சுறுத்தல் மட்டுமல்ல, மக்களாட்சிச் சட்டத்தின் மீதான மூர்க்கத்தனமான தாக்குதலும்கூட.”[iii] என்று வன்மையாகக் கண்டனம் செய்துள்ளது..

“ஆரம்பமாக இருப்பினும், இதுவரை நடந்த கருத்துக் கணிப்புகளின்படி அமெரிக்கர்களில் பெரும்பான்மையானவர்கள் வாஷிங்டன் நகரில் நடந்த கலவரத்தை எதிர்த்தனர் என்று தெரிகிறதுகுற்றமிழைத்த போக்கிரிகளை உள்நாட்டு பயங்கரவாதிகள் என்றே கருதவேண்டும் என்று 59% அமெரிக்கர்கள் நினைக்கிறார்கள்.  சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ளவர்களின் தீவிரவாதக் கருத்துகள், போக்கிரிக் கும்பல் அமெரிக்கச் சட்டப் பேரவையை முற்றுகையிட்டுத் தாக்குவதற்கு டிரம்பு உதவினார்,” என்று ஃபைவ்-தர்ட்டிஎய்ட்.காம் என்ற கருத்துக் கணிப்பு இணையம் கருத்து வெளியிட்டது.[iv]

இதையடுத்து சமூக வலைத்தளமான் ட்விட்டர் டிரம்ப்பை அவரது ஆயுள்காலத்திற்கும் கருத்துப்பதியத் தடைசெய்துள்ளது.[v],[vi] இப்படிப்பட்ட அவலநிலை எந்த அமெரிக்க அதிபருக்கும் இதுவரை ஏற்பட்டதில்லை.

1812ல் என்ன நடந்தது?  பிரித்தானியர்களுடன் நடந்த போரில், அவர்களின் படை அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் புகுந்து அதைத் தீக்கிரையாக்கி, சட்டப் பேரவையில் நுழைந்து அதைச் சேதப்படுத்தியது.  இப்பொழுது அதை பிரிட்டன் மட்டுமல்ல, வேறெந்த நாட்டாலும் அதைச் செய்ய நினைத்துக்கூடப் பார்க்க இயலாது. அப்படியிருக்கையில், இந்த நிகழ்ச்சி ஏன் அரங்கேறியது?  இதற்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் என்ன தொடர்பு…?

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக நவம்பர் 3, 2020ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்றார். அமெரிக்க மக்களால் இப்பொழுதைய அதிபர் டானல்ட் டிரம்ப் தோல்வியடைந்தார்.  அமெரிக்கத் தேர்தல் வேறுவிதமானது.  ஒவ்வொரு மாநிலத்திலும், அங்குள்ள மக்கள் எந்த அதிபர் வேட்பாளருக்கு வாக்களித்தாலும், அந்த வேட்பாளர்களின் தேர்வாளர்களைத்தான் (electors) தேர்ந்தெடுக்கின்றனர்.  இதுதான் அமெரிக்க அரசியல் அமைப்பு.

வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதும், ஒவ்வொரு மாநிலத்தின் செயலரும் யார் வென்றார் என்றும், இவர்கள்தான் தேர்வாளர்கள் என்றும் தெரிவிப்பார்.  அத்தேர்வாளர்கள் தங்கள் வேட்பாளருக்கு வாக்களிப்பர்.  ஒரு விநோதம் என்னவென்றால், அந்தத் தேர்வாளர்கள் தங்கள் வேட்பாளருக்குத்தன வாக்களிக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை.  மாற்று வேட்பாளருக்கும் வாக்களிக்கலாம்.  ஆனால், சில மாநிலங்கள் அதைத் தடைசெய்துள்ளன.  அவர்களின் எண்ணிக்கை எத்தனை என்றும், எந்த வேட்பாளருக்கு அவர்கள் வாக்களித்தனர் என்றும், மாநிலச் செயலர் சான்றுப் பத்திரத்தை சட்டப் பேரவைக்கு அனுப்புவார். 

தேர்தல் நடந்து முடிந்த மறு ஆண்டு ஜனவரி 6ம் தேதியில் சட்டமன்றம் கூடும்.  அதற்குத் துணை அதிபர் தலைமை தாங்குவார்.  ஒவ்வொரு மாநிலத் தேர்வாளர் எண்ணிக்கையும், அத்தேர்வாளர்கள் எவருக்கு வாக்களித்தனர் என்றும் அறிவிக்கப்படும்.  துணை அதிபர் யாராவது இதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார்களா என்றும் கேட்பார்.  ஏதாவது ஒரு செனட்டரும், அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மக்கள் பிரதிநிதியும் (தேர்வாளர் அல்ல, அவரது வேலை தனது வேட்பாளருக்கு வாக்களித்தவுடனேயே முடிந்துவிடும்.)  அதை எதிர்த்துக் கையொப்பமிட்டு அதைத் துணை அதிபருக்குத் தெரிவித்தால், அவர், மக்கள் பிரதிநிதி சபையையும், செனட்டையும் இரண்டு மணிநேர்ம அதைப் பற்றி விவாதித்து, வாக்களைத்து முடிவுக்கு வரும்படி சொல்வார். வாக்கெடுப்பில் அந்த மறுப்பு தோற்றால், தேர்வாளர் வாக்கு ஏற்றுக்கொள்ளபடும்.  இல்லாவிடில், அந்த வாக்குகளை மக்கள் மன்றம் முடிவுசெய்யும்.

இது வெறும் நெறிமுறைதான்.  இதுவரை இது வெறும் சாதாரணமான நிகழ்வாகத்தான் இருக்கும்.  எவரும் இதைப்பற்றிக் கவலைப்படவே மாட்டார்கள்.  தோற்றவர் தான் தோற்றதாக அறிவித்து, வெற்றிபெற்றவருக்கு வாழ்த்துச் சொல்வார்.  அதிகார மாற்றல் தேர்தலுக்குப் பிறகு கழியும் இரண்டு மாதங்களில் நடந்தேறும். 

இத்தடவைதான் இங்கு சிக்கல் விளைந்தது. 

தேர்தல் நடப்பதற்கு முன்னரே, அதிபர் டிரம்ப் ஜோ பைடன் வெல்வது வாக்குப் பதிவு மோசடியினால்தான் மட்டுமே சாத்தியமாகும் என்றும், அது நிகழ்ந்தால், தான் தோல்வியை ஒப்புக்கொள்ளமாட்டேன், அதன் முடிவை உச்ச நீதிமன்றம்தான் தீர்மானிக்கும் என்றும் பல நாள்களில் பலவேறுமுறை சொல்லியிருந்தார்.[vii]

தேர்தலும் நடப்பதற்குமுன் தனது ஆதரவாளர்களை வராதோர் வாக்குப் பதிவில் கலந்துகொள்ளவேண்டாம், தேர்தல் நாளன்று நேரில்சென்று வாக்களிக்கவேண்டும் என்றும் பலமுறை கூறினார்.  எதிர்க்கட்சியினர் தமக்கு எதிரான வராதோர் வாக்குகளை எண்ணமாட்டார்கள், மறைத்துவிடுவார்கள் என்றேல்லாம் பிரச்சாரம்செய்தார்.

அதன்படி அவருக்கு வாக்களித்தவரில் பெரும்பாலானோர் தேர்தல் தினத்தன்று வாக்களித்தனர். பெரும்பாலான மாநிலங்கள் நேரில் அளித்த வாக்குகளை முதலில் எண்ணும்.  பிறகுதான் வாராதோர் வாக்குகளை எண்ணூம்.  எனவே, அம்மாநிலங்களில் டிரம்ப்புக்கு லட்சத்திற்கும் மேலாக முன்னிலை இருந்து, பின் வாராதோர் வாக்குகள் எண்ணப்பட்டவுடன் அந்த முன்னிலை குறைந்து ஜோ பைடன் முன்னைலை பெற்று விஸ்கான்சின், மிஷிகன், பென்சில்வேனியா, ஜார்ஜியா மானிலங்களில் வென்றார்.  அரிசோனாவில் ஜோ பைடன் இலட்சம் வாக்குகளுக்கு மேல் முன்னிலையில் இருந்தாலும், எல்லா வாக்குகளும் எண்ணி முடிந்ததும், பதினோராயிரம் வாக்குகள் அதிகமாகப் பெற்று அரிசோனாவையும் வென்றார். காரணம், அரிசோனா வாராதோர் வாக்குகளைத் தேர்தல் நாள் காலையிலிருந்து எண்ணத் துவங்கியது.  தேர்தல் முடிந்தவுடன் அந்த எண்ணிக்கையை அறிவித்தது.

ஜோ பைடன் வெற்றி பெற்ற மாநிலங்களில் – டிரம்ப், தான் போன தேர்தலில் வெற்றிபெற்று, இப்பொழுது தோற்ற மாநிலங்களில் நடந்த தேர்தல் செல்லாது, வாக்களிப்பில் மோசடி நடநதுள்ளது என்று கிளிப்பிள்ளை மாதிரித் தான் முன்பே சொன்னபடி திரும்பத் திரும்பச் சொல்லத் தொடங்கினார்.  அவரது ஆதரவாளர்களும் அதையே சொன்னார்கள். பலரும் ஒருவேளை டிரம்ப் சொல்வதில் உண்மை இருக்குமோ என்று சந்தேகப்பட ஆரம்பித்தனர்.

எனவே, இதுபற்றி ஆராய்ந்த நவார்ரோ நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டது.  அதில் நிவாடா மாநிலத்தில் வாக்கு நிராகரிப்பு 2016ல் 1.6%லிருந்து 2020ல் 0.58%ஆகக் குறைந்துள்ளது.  இதுவே பென்சில்வேனியா மாநிலத்தில் 2016ல் 1%லிருந்து 2020ல் 0.28%ஆகவும், ஜார்ஜியாவில் 0.34%ஆகவும் குறைந்துள்ளன என்று தெரிவித்திருந்தது.  அதை எள்ளி நகையாடிய த அமெரிக்கன் கன்சர்வேடிவ் என்ற டிரம்ப் ஆதரவு இணையம் இதைத் திரித்து, அதிபர் டிரம்ப்புக்குச் சேரவேண்டிய வாக்குகளை டெமக்ராடிக் கட்சியைச் சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் வேண்டுமென்றே நிராகரித்துவிட்டார்கள் என்று எழுதியிருந்தது.[viii]

அதாவது பென்சில்வேனியாவில் எண்ணப்பட்ட வாக்குகள் 69,17,583.  நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 0.28% என்றால், கிட்டத்தட்ட 19,400.  ஆனால் ஜோ பைடன் பென்சில்வேனியாவில் 81660 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றார்[ix]. நிராகரிக்கப்பட்ட அனைத்து வாக்குகளும் டானால்ட் டிரம்ப்புக்கே என்று வைத்துக்கொண்டாலும், ஜோ பைடன் 62260 வாக்குகள் அதிகம் பெற்றிருப்பதாகத்தானே ஆகிறது.  இதிலிருந்தே, டிரம்ப்புக்கு ஆதரவான ஊடகங்களும் பொய்யைத்தானே உண்மை என்று கூறுகின்றன.  இந்தப் பத்தியில் நான் விளக்கியிருக்காவிட்டால், அமெரிக்கன் கன்சர்வேடிவ் எழுதுவது அனைத்தும் உண்மை என்றுதானே நீங்களும் நினைப்பீர்கள்!  இப்படியேதான் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் இப்படிப்பட்ட ஊடகங்கள் சொல்வதை மட்டும் கேட்டு/பார்த்துவிட்டு, மெய்ப்பொருள் காணாதவர்களாக ‘வாக்கு மோசடி” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.  இன்னும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

ஜார்ஜியாவில் டிரம்ப் கிட்டத்தட்ட 11800 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.  மூன்று முறை வாக்குகள் திரும்பத் திரும்ப எண்ணப்பட்டும் (இருமுறை ஒளிப்பதிவு எந்திரங்கள், ஒருமுறை கையினால்), டிரம்ப்புக்கும் பைடனுக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் 11000க்கு குறையவில்லை.  இத்தனைக்கும் ஜார்ஜியாவின் மாநிலச் செயலர், ஆளுநர் இருவருமே ரிபப்லிகன் கட்சியைச் சேர்ந்தவர்கள்.  அப்படியும் டிரம்ப் விடவில்லை.  ஏதோதோ சொல்லிப்பார்த்தர், மிரட்டிப் பார்த்தார்.  இறுதியில் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் எப்படி ஓட்டுகள் எண்ணிக்கையை மாற்றவேண்டும் என்றும் தொலைபேசி மூலம் ஜார்ஜியா மாநிலச் செயலர் பிராட் ராஃபென்ஸ்பெர்கருக்கு (Brad Raffensperger) மிரட்டல் விடுத்தார்.  இருப்பினும், ராஃபென்ஸ்பர்கர் அதற்கு மசியாமல் ஏன் அப்படித் தான் வாக்கு எண்ணிக்கையை மாற்றமுடியாது என்று டிரம்ப்புக்குச் சொன்னதுடன், தொலைபேசிப் பேச்சுப் பதிவையும் ஊடகங்களுக்கு அனுப்பிவிட்டார். அந்தப் பதிவில் டிரம்ப் ஜார்ஜியா தேர்தல்முடிவைப் புரட்டிப்போடும் அளவுக்கு வாக்குகளைக் கொண்டுவராவிட்டால் ராஃபென்பெர்கர்மீது குற்றநடவடிக்கை எடுப்பதாகவும் மிரட்டியிருந்தார்.  ஊடகங்கள் அதை வைத்துக்கொண்டு ஒருநாள் முழுவதும் இப்படியா செய்வது, இது அமெரிக்கத் தேர்தல் சட்டப்பிரிவு 52ன்படி இது ஐந்தாண்டு சிறைத்தண்டனைக்குட்பட்ட குற்றம்,என்று டிரம்ப்பின்மீது குற்றம்சாட்டின. [x]

இது போதாதென்று, அதிபர் டிரம்ப்பின் தேர்தல் பிரச்சாரக் குழு நீதிமன்றத்தில் அரிசோனா, மிஷிகன், பென்சில்வேனியா, ஜார்ஜியா, விஸ்கான்சின் மாநிலங்களில் அம்மாநில வாக்குப் பதிவு முடிவுகள் செல்லாது, அதில் மோசடி நடந்திருக்கின்றன என்று 60க்கும் மேலான வழக்குகளைப் பதிந்தன.[xi]  இதில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்திலும் ஒருவழக்கு பதிவு செய்யப்பட்டது.  இவை அத்தனையையும், மோசடிக்கான சான்றுகள் காட்டப்படவில்லை என்று அத்தனை நீதிமன்றங்களும் தள்ளுபடி செய்தன.[xii] இந்த நீதிமன்றங்களில் டிரம்ப்பினால் அமர்த்தப்பட்ட நீதிபதிகளும் இருந்தார்கள்.[xiii] 

அப்படியும் விட்டாரா என்றால், டிரம்ப் விடவில்லை; தான் தோற்கவில்லை, டெமக்ராட்கள் மோசடி செய்துவிட்டார்கள், பதவியைவிட்டு விலகமாட்டேன், கடைசிவரை போராடுவேன் என்று ட்விட்டரிலும், ஊடகங்களிலும் தகவல் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

வாக்குப் பதிவு எந்திரங்களைத் தயாரித்த டொமினியன் ஓட்டிங்க் ஸிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் ஊழல்செய்து பைடனுக்கு அதிகமான் வாக்குகள் வரும்படி செய்துவிட்டது என்ற பொய்யான தகவலைத் டிரம்ப்பின் பிரச்சாரக்குழு வழக்கறிஞர் சிட்னி பவல் பரப்பிக்கொண்டே இருந்ததால், தங்கள்மீது ஏமாற்றும் வணிகமுறையை மேற்கொண்டதாகப் பொய்யுரைத்துஅவதூறு செய்ததற்காக அந்த நிறுவனம், சிட்னி பவல் 10 கோடியே முப்பது லட்சம் டாலர்கள் (93 ஆயிரத்து 574 கோடியே 65 லட்சம் ரூபாய்கள்) நஷ்டஈடு தரவேண்டும் என வழக்குப் பதிவுசெய்துள்ளது.[xiv]

இருந்தபோதிலும், டிரம்ப்பும், அவரது ஆதரவாளர்களும் தேர்தல் முடிவு திருடப்பட்டது என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.  ஒவ்வொரு மாநிலமும், அங்கு நடந்த தேர்தல் செல்லும், எந்தவிதமான மோசடியோ, குழப்பமோ நடக்கவில்லை என்று தேர்வாளர் முடிவையும் அறிவித்துவிட்டது. 

அதையும் ஒப்புக்கொள்ளாத டிரம்ப், ஆறு மாநிலங்களில் முடிவை ஏற்க மறுத்துப் பேசிவந்த சில சட்டப்பேரவைப் பிரதிநிதிகளுடன் டிரம்ப் ஆலோசனை நடத்தினார்.  அவர்களுடன் ஒரு செனட்டராவது கலந்துகொண்டு, சட்டப் பேரவைக் கூட்டத்தில் மறுப்பை எழுப்பினால் முடிவை மாற்றலாம் என்று அறிவுரை வழங்கினார்.[xv]

இதை செனட் பெரும்பான்மைத் கட்சித் (ரிபப்ளிகன்) தலைவரான மிட்ச் மக்கானல் உள்படப் பலரும் விரும்பவில்லை.  மக்கள் முடிவை மாற்றினால் மக்களிடம் கெட்டபெயர் ஏற்படும். எனவே, செனட்டில் மறுப்பு தோற்றுவிடும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.

இருப்பினும், முதலில் மிசௌரி மாநில யுஎஸ் செனட்டரில் ஒருவரான் ஜாஷ் ஹாலி மறுப்பை எழுப்புவேன் என்று அறிவித்தார்.  உடனே, டெக்ஸாஸ் மாநில யுஎஸ் செனட்டர் டெட் குரூஸ் உட்பட் மேலும் பதினோரு பேரும் மறுப்பு எழுப்பப்போவதாக அறிவித்தனர்.[xvi] இதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 140 யுஸ் பிரதிநிதிகளும் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

பெரும்பாலான ஊடகங்களும் பத்திரிகைகளும் சட்டப்பேரவையில் மறுப்பு கொண்டுவருவது தவறு என்றே வற்புறுத்திவந்தன.

எதுவும் டிரம்ப்பின் காதில் ஏறவில்லை.  தன் ஆதரவாளர்களும், முக்கியமாக துணை அதிபர் மைக் பென்ஸும் தன் விருப்பப்படி செயல்படுவர்கள் என்றே முடிவுகட்டினார்.  ஜனவர் 6, 2021ல் நடக்கவிருக்கும் இறுதித் தேர்வாளர் உறுதிப்படுத்தும் நாளில் துணை அதிபர் மைக் பென்ஸ் (Mike Pence), முடிவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று முழங்கினார்.   ட்விட்டரில், “துணை அதிபர் நமக்காகச் செயல்பட்டால், நாம் தலைமையை வென்றுவிடுவோம்,” என்றும் பதிவிட்டார்.

மைக் பென்ஸின் நிலைமை இருதலைக்கொள்ளி எறும்பாக இருந்தது.  கடந்த நான்கு ஆண்டுகளும் டிரம்ப்பின் இடக்கையாகக் செயல்பட்டு வந்தார்.  இப்பொழுது அவரைச் செய்யச் சொல்வது அரசியல் சட்ட அமைப்புக்கு எதிரானது என்றும் நினைத்தார். இதற்கிடையில் ஃபாக்ஸ் தொலைக்காட்சியில் டிரம்ப் மைக் பென்ஸ் தம் விருப்பப்படி தேர்வாளர் வாக்குகள் செல்லாது என்று அறிவித்துவிடுவார் என்றும் கூறினார்.  மேலும், பென்ஸ் செயல்படாவிட்டால், “உன்னைப்பற்றி ஏமாற்றமடைவேன்!” என்றும் மறைமுகமாக மிரட்டினார்.[xvii]

அத்தோடு விடவில்லை.  ஜனவரி 6ம் தேதி, தேர்வாளர் கணக்கு மைக் பென்சின் தலைமையில் நடக்கும் முன்பு சில மணி நேரத்தில், பல்லாயிரக் கணக்கில் சட்டப் பேரவை முன் கொடிகளுடனும், துப்பாக்கிகளுடனும் திரண்டிருந்த தன் ஆதரவாளர்களுக்கு முன் மேடையில் ஏறி மைக் பென்ஸுக்கு அழுத்தம் கொடுக்கும் வரையில் சொற்பொழிவாற்றினார்.[xviii]

அதே சமயத்தில் ஜார்ஜியா மாநிலத்தில் நடந்த இரட்டை செனட்டர் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சி வேட்பாளர்களான பர்ட்யூவும், லாஃப்லரும், முறையே டெமொக்ரடிக் வேட்பாளர்களான ஜான் ஆஸாஃபிடமும், ராஃபேல் வார்னாக்கிடமும் தோல்வியடைந்தனர், ஜோ பைடன் பக்கம், செனட்டும் திரும்பியது என்ற செய்தியும் வந்தது.  டிரம்ப்பும், அவரது வழக்கறிஞரான ரூடி ஜூலியானியும் மக்களை அணிவகுத்துச் சண்டையிடுமாறும், தாங்கள் உடன் வருவதாகவும் உசுப்பேத்தினர்.

சட்டப்பேரவைக் கூட்டமும் துவங்கியது.  அதைத் துவங்கிவைத்து அறிமுக உரையாற்றிய துணை அதிபர் பென்ஸ், “அரசியலமைப்பை ஆதரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் நான் எடுத்துக்கொண்ட உறுதிமொழி, எந்தத் தேர்தல் வாக்குகளை எண்ண வேண்டும், எது செய்யக்கூடாது என்பதை தீர்மானிக்க ஒருதலைப்பட்ச அதிகாரம் கோருவதில் இருந்து என்னைத் தடுக்கிறது. இறைவன் எனக்குத் துணைநிற்பாராக!”[xix] என்று தேர்வாளர் ஓட்டுகள் எண்ணிக்கையைத் துவங்கிவைத்தார்.

முதலில் அலபாமா மாநிலம் தன் ஓட்டைத் தெரிவித்தது.  அதற்கடுத்தபடி அலாஸ்கா; இரண்டின் ஓட்டுகளும் டிரம்ப்புக்கு அளிக்கப்பட்டிருந்தன.  மைக் பென்ஸ் மறுப்பு ஏதாவது இருக்கிறதா என்று கேட்டதும், எவரும் முன்வரவில்லை.  அடுத்தபடி அரிசோனா.  அதன் ஓட்டுகள் ஜோ பைடனுக்கு என்றதும் அரிசோனாவின் யுஎஸ் பிரதிநிதி பால் கோஸார் மறுப்பு தெரிவித்தார்.  அதற்கு செனட்டர் டெட் குரூஸ் ஆதரவு தெரிவித்தார்.

ஆகையால், துணை அதிபர் மைக் பென்ஸ், செனட்டையும், பிரதிநிதி சபையையும் தனித்தனியாகக் கூடி அதிகபட்சம் இரண்டு மணி நேரம் விவாதம் செய்து ஓட்டெடுத்து முடிவைத் தெரிவிக்குமாறு பணித்தார்.  செனட்டுக்கு அவரும், பிரதிநிதி சபைக்கு சபாநாயகர் நான்ஸி பெலோசியும் சென்றனர். 

இடதுபுறம் மிட்ச் மக்கானல் வலப்புறம் சக் ஷூமர்

செனட்டில் தனது உரையைத் தொடங்கிய பெரும்பான்மைத் தலைவர் மிட்ச் மக்கானல் உருக்கமாக, “நான் இதுவரை 36 ஆண்டுகள் செனட்டாராகப் பணியாற்றியுள்ளேன்.  இதுதான் நான் போட்டதிலேயே மிகவும் முக்கியமான் வாக்காக இருக்கும்.  நான் அதிபரின் (டிரம்பின்) சட்டத்தைத் துணைக்கொள்ளும் உரிமையை ஆதரித்தேன்.  பல டஜன் வழக்குகள் நாட்டின் பலவேறு நீதிமன்றங்களில் பெறப்பட்டு, கேட்கவும் பட்டன.  ஆனாலும், திரும்பத் திரும்ப – அதிபர் நியமித்த மிகச்சிறந்த நீதிபதிகள் உள்பட, அனைத்து நீதிமன்றங்களும் இந்தக் கூற்றுகளை மறுத்துவிட்டன,…  அரசியல் அமைப்பு இங்கு நமக்கு சட்டப்பேரவையில் வரையறுக்கப்பட்ட பங்கையே அளித்திருக்கிறது…  அமெரிக்க வாக்காளர்களை மதிப்பிழக்கவைத்து,, நீதிமன்றங்களையும், மாநிலங்களையும் மீறிச் செயல்படுவது தவறு.  நான் மக்களின் முடிவையும், இதுவரை நாமறிந்த நமது அரசுமுறையையும் மதித்து வாக்களிக்கிறேன்,” என டிரம்ப்பின் விருப்பத்திற்கு மாறாக வாக்களித்தார்.[xx], [xxi] 

அதையடுத்து டிரம்ப்புக்கு ஆதரவாக டெட் குரூசும், எதிராக அரிசோனா செனட்டர் கிரிஸ்டன் சினெமாவும் பேசினர். 

அச்சமயம், டிரம்புக்கு ஆதரவாகத் திரண்டிருந்த மாபெரும் கூட்டத்திலிருந்த பலநூற்றுக்கணக்கான போக்கிரிகள், சட்டப் பேரவைக்குக் காவலாக நின்றிருந்த காவலர்களை அடித்துநொறுக்கிக்கொண்டு சட்டப் பேரவைக்குள் நுழைந்தனர்.  கதவை மூடமுயன்ற காவலர்களுல் ஒருவரான ப்ரையன் சிக்னிக் என்ற காவலரைத் தலையில் அடித்து கதவுக்கு இடுக்கில் நசுக்கிப் படுகாயப் படுத்தினர்.  சிக்னிக், நாட்டுக்காக போர்புரிந்து திரும்பிய இராணுவ வீரர்.  கடைசியில் தாய்நாட்டின் எதிரிகளுடன் போராடிப் படுகாயத்தினால் மறுநாள் வீரமரணமடைந்தார்.

(கட்டுரையாளன் குறிப்பு:  அவரது அந்திமச் சடங்குகள் ஜனவரி 10ம் தேதி நிகழ்ந்தன)

காவலர்கள் பின்வாங்கவே, போக்கிரிகள் தாங்கள் கொணர்ந்த கொடியின் கம்பத்தினால் காவலரைக் குத்திக் குத்திப் பின்னேற்றினர்.  சபையின் உட்கதவுகள் மூடப்ப்ட்டன.  துப்பாக்கிக் குண்டுகளாலும் துளைக்கமுடியாத அக் கதவுகளின் கண்ணாடிகளை தீயணைக்கும் இரும்பு உருளைகளாலும், இன்னபிற ஆயுதங்களாலும் தாக்கி உடைத்தனர். 

தேர்வாளர் வாக்குப் பெட்டிகள்

நிலைமை முற்றுவதை அறிந்த் இரகசியப் போலிசார், துணை அதிபர், சபாநாயகர் இவர்களை உடன் அழைத்துக்கொண்டு சுரங்கப்பாதை வழியாக வெளியேறினர். தேர்வாளர் வாக்குகள் வைத்த பெட்டிகளைப் போக்கிரிகள் கைப்பற்றி அழிக்கக்கூடாதென்று, அவையும் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டன.

மற்ற இரகசியப் போலீசார முன்னேறுபவர்கள் துப்பாக்கியால் சுட ஆரம்பிக்கவே, திருப்பிச் சுட்டனர்.  அதில் ட்ரம்ப் ஆதரவாளரும், போக்கிரிகளுடன் உள்நுழைந்தவரும், விமானப்படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவருமான ஒரு பெண் இறந்த்தார். 

ஒரு இராணுவ வீரர் சட்டப் பேரவையைக் காக்க உயரீந்தார்.  இன்னொருவர், நாட்டுக்கெதிரான பயங்கரவாதத்தில் ஈடுபட்டுக் குண்டடியட்டுச் செத்தார்.

உயிரிழந்த காவலர் ப்ரையன் சிக்னிக்

இரண்டும் இறப்பே!  அதில்தான் எத்தனை வேறுபாடு!

எழுத்தாளன் குறிப்பு:  இதற்குமேல் எழுதமுடியாமல் நெஞ்சை அடைக்கிறது.  மற்றவற்றை அடுத்த பகுதியில் எழுதுகிறேன்.

(இன்னும் வரும்)


[i] https://www.cnn.com/2021/01/07/us/capitol-mob-deaths/index.html  Jan 7, 2021

[ii] U.S. Capitol Police officer Brian D. Sicknick, 42, died Thursday from injuries he suffered during the pro-Trump riot that breached the U.S. Capitol. https://www.usatoday.com/story/news/nation/2021/01/08/capitol-police-officer-brian-sicknick-who-died-veteran-war-critic/6595549002/ , Jan 8, 2021

[iii] catastropic Capitol Security Failure by Tom Rogan, Washington Examiner, Jan 6, 2021, https://www.washingtonexaminer.com/opinion/a-catastrophic-capitol-security-failure

[iv] Trump Helped Take Extremist Views From the Fringes of Society to a Mob Attacking the Capitol by Nathaniel Rakich, Kaleigh Rogers and Geoffrey Skelley, Fivethirtyeight.com, Jan 8, 2021, https://fivethirtyeight.com/features/trump-helped-take-extremist-views-from-the-fringes-of-society-to-a-mob-attacking-the-capitol/ 

[v] Twitter suspended Presidet Donald Trump’s Account Permanently Business Insider, Jan 8, 2021, https://www.msn.com/en-us/news/politics/twitter-suspended-president-donald-trumps-account-permanently/ar-BB1cAUEp

[vi] President Trump permanently banned from Twitter over risk could incite violence, by Jessica Guynn, USA Today, Jan 8, 2021, https://www.usatoday.com/story/tech/2021/01/08/twitter-permanently-bans-president-trump/6603578002/

[vii] A list of the times Trump has said he won’t accept the election results or leave office if he loses by Kevin Liptak, CNN, Sep 24, 2020, https://www.cnn.com/2020/09/24/politics/trump-election-warnings-leaving-office/index.html

[viii] Lies, Damned Lies, and Insane Statistics by Daniel Oliver, The American Conservative, Dec 31, 2020, https://www.theamericanconservative.com/articles/lies-damned-lies-and-insane-statistics/ 

[ix] President – PA – General, total votes cast in Pensylvania – Bing  

[x] Trump’s ‘less-than-perfect’ call to Georgia officials could also be a crime by David Knowles, Yahoo News, Jan 3, 2021, https://www.yahoo.com/news/trumps-lessthanperfect-call-to-georgia-officials-could-also-be-a-crime-221455096.html

[xi] Here are all the Lawsuits the Trump Campaign Has Filed Since Election Day by Alana Abramson and Abigail Abrams, Time magazine, Dec 18, 2020, https://time.com/5908505/trump-lawsuits-biden-wins/

[xii] Election 2020: A look at Trump campaign election lawsuits and where they stand by Meridith Eliso, Catherine Thorbecke and Marc Nathanson, abc News, Dec 12, 2020,  https://abcnews.go.com/Politics/election-2020-trump-campaign-election-lawsuits-stand/story?id=74041748

[xiii] Republican U.S. judges choose Constitution over Trump as election fraud cases keep failing, by Crystal Hill, Yahoo News, Dec 3, 2020

[xiv] Voting machine company executive sues Trump allies for defamation, By Veronica Stracqualursi, CNN, December 23, 2020, https://www.cnn.com/2020/12/23/politics/dominion-voting-executive-defamation-lawsuit/index.html

[xv] Congressional GOP grapples with ‘unhinged’ Trump, By Lauren Fox, Jeremy Herb and Phil Mattingly, CNN, December 23, 2020, https://www.cnn.com/2020/12/23/politics/congress-gop-trump-veto/index.html

[xvi] Nearly a dozen Republican senators announce plans to vote against counting electoral votes by Jake Tapper, Lauren Fox and Veronica Stracqualursi, CNN, January 2, 2021, https://www.cnn.com/2021/01/02/politics/senate-republicans-electoral-college/index.html

[xvii] Trump says he will ‘never concede’, pressures Pence to send election ‘back to the states’, Brooke Singman | Fox News, https://www.foxnews.com/politics/trump-never-concede-pressures-pence-election

[xviii] ‘Do it Mike”: Trump leans on Pence to reject Biden’s Electroral College certification, by Quint Forge, POLITICO, Jan 6, 2021, https://www.politico.com/news/2021/01/06/do-it-mike-trump-leans-on-pence-to-reject-bidens-electoral-college-certification-455319

[xix] Mike Pence tells congress he will not reject electoral college votes, by Charlie Spiering, Breitbart News, Jan 6, 2021, https://www.breitbart.com/politics/2021/01/06/mike-pence-tells-congress-he-will-not-reject-electoral-college-votes/

[xx] 7 Big Moments in Congress’ Debate of Electoral College Vote for President, by Fred Lucas, The Daily Signal, January 06, 2021, https://www.dailysignal.com/2021/01/06/7-big-moments-in-congress-debate-of-electoral-college-vote-for-president/

[xxi] Full text of Mitch McConnell”s Speech ‘Before Most Important’ Vote of His Career, by Jenni Fink, Newsweek, Jan 6, 2021, https://www.newsweek.com/full-text-mitch-mcconnells-speech-before-most-important-vote-his-career-1559426

4 Replies to “அமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல் – 5”

  1. A one eyed version here. BLM caused more deaths and destructions than one invasion of Capitol Hill by 50-100 people for few hours. Twitter and FB banned Trump but not the account of Mahatir Mohamed who encouraged killing of French citizens by millions by Muslims!
    Tamil Hindu is going the way of leftist, communist, Islamic MSM who unfortunately are in the majority and who decides the contents and the discourse for the public.

  2. Dr. Rama Krishnan, sir,

    //Twitter and FB banned Trump but not the account of Mahatir Mohamed who encouraged killing of French citizens by millions by Muslims!//

    So, whose fault it is? Is it French government’s or US Government’s?

    When a terrorist was directing activities from Pakistan when the great Taj Hotel was seiged by a few non-descrept guys who walked all the way from Victoria Terminus killing cops in Mumbai, how the wireless of that terrorist from Pakistan could not be jammed? Attack on Capitol Hill was a well-planned activity by local Neo-Nazi terrorists. It was nothing to do with law abiding left or right or moderates.

    How, by publishing this article, Tamil Hindu is leaning leftist, communist, Islamic MSM?

    Are you not behaving the same way as President Donald Trump, by falsely branding ‘Tamil Hindu’? Where is the difference between him and you?

  3. Dear Sri அரிசோனன்
    The MSM has been running anti Trump propaganda from the time he won the elections. Remember the “Not my president” processions after processions by the same Democrats 4 years ago? The Democrats and the mainstream media, run by the leftists( yes, 90% of leftist are running MSM including NYT, Washington Post, BBC) ( and toeing the Islamic agenda) have been running a campaign against Trump from day one. Russian interference, electoral frauds and everything under the sun have been thrown at Trump because, like Modi’s win, the leftist Democrats could not stomach the unpalatable truths. A right wing candidate won fair and square! Almost 48% of the electoral population voted for Trump and a fair majority of the Trump voters do feel cheated because of a lousy( corrupt?) electoral system . Vote counting stopped for no good reasons when Trump was leading and magical Biden turnaround happened when the counting restarted.Maybe, just maybe, there could be fraud here in spite of courts throwing out a lot of cases? Yes, I have read about it all. Reminds me of one P Chiddy’s win!!
    None of the MSM ever highlighted the good stuff Trump had done.Not a word, zip, zilch. No war in Trump’s term but Obama who initiate war all over gets Nobel prize! The middle class USA prospered better under Trump than under any recent Democrats.
    My whinge is about the unfairness of treatment Trump has received from media. He is a clown, a joker and a war monger racist has been the picture the media has been portraying for the last 4 years.
    Trump at least has friendly relations with India and Modi (which the Left liberals hate) and he is with India against the expansionist and belligerent China. Democrats on the other hand is anti Hindu, anti India and Kamala Mami openly threatened India with regards to article 370. We are watching, she thundered and we will not be ruling out of interfering in Kashmir over the rights of Kashmiris said dear Kamala. FB, Twitter don’t delete accounts of terrorists like ISIS but are happy to delete Trump’s account. Farmers who threatened to kill Modi still have active social media accounts. Where is the sense of fairness here? Tamil Hindu publishing an article that demonizes Trump ONLY,who btw is a supporter of India and Hinduism, should be seen for it truly is.Yes, you are free to disparage and I am not going lose my sleep on silly assertions. Yes Trump is loud, had said a lot of rubbish but blaming him for Capitol riots takes the cake. I did not see articles in TH on BLM and the killings and looting that went on for considerable time.Main supporter this crazy riots were the Democrats. No different to Congress and Commies who support Farmers( ??) strike in India.
    What is good for goose should be good for the gander. Twitter and FB who are supposed to be neutral, should have banned all anti Hindu, Hinduphobic sites. Never happens. This is called rotten bias. Free speech is ok as long as one babbles the leftist’s garbage. This unilateral bashing of Trump is uncalled for especially in TH.
    Enough said. I won’t respond.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *