வைகாசி அனுஷமே திருவள்ளுவர் பிறந்த நாள் – பேரா. சாமி. தியாகராஜன்

பேராசிரியர் சாமி தியாகராஜன் தினமலரில் எழுதிய கட்டுரை. நன்றி: தினமலர்

பிரிட்டிஷ் ஆட்சி இருந்த காலத்திலும், பின் சுதந்திரம் பெற்று காங்கிரஸ் ஆட்சி இருந்த காலத்திலும், அதன்பின், தி.மு.க., ஆட்சியில் அண்ணாதுரை முதல்வராக இருந்த காலத்திலும், கிறிஸ்துவ ஆண்டே தமிழக அரசால் பின்பற்றப்பட்டு வந்தது.

கடந்த, 1969ல் அண்ணாதுரை மறைந்தார். கருணாநிதி முதல்வரானார். அவர் முதல்வரான பின், திருவள்ளுவராண்டு என்ற ஒன்றை, 1971 முதல் தமிழக அரசு நாட்குறிப்பிலும், 1972 முதல் தமிழக அரசிதழிலும் நடைமுறைப்படுத்தினார்.திருவள்ளுவராண்டு குறிக்கப் பெற்று, அதற்கு நேரேதிரே கிறிஸ்துவ ஆண்டு குறிக்கப் பெற்றது.

உதாரணத்திற்கு திருவள்ளுவர் ஆண்டு, 2039 தைத்திங்கள், 9ம் நாள் – 2008ம் ஆண்டு ஜனவரி திங்கள், 23ம் நாள் என்பதைச் சொல்வோம்.அண்ணாதுரை முதல்வராக இருந்த காலம் வரை வராத திருவள்ளுவர் ஆண்டு, கருணாநிதி காலத்தில் எப்படி வந்தது? அண்ணாதுரைக்கு திருவள்ளுவரை தெரியாதா? அவரை மதிக்காதவரா? திருவள்ளுவர் ஆண்டு என்ற ஒன்றை கொண்டு வர வேண்டும் என, அண்ணாதுரை கருதவில்லையா? அவரிடம் கருணாநிதி அதுபற்றி விவாதித்ததுண்டா? இந்த கேள்விக்கெல்லாம் சுவாரஸ்யமான பதில் ஒன்றை சொல்கிறார், கருணாநிதி.

அதுபற்றி பார்ப்போம்.’பெரும்புலவரும், தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்தவருமான மறைமலை அடிகளார் தலைமையில், 500க்கும் மேற்பட்ட புலவர்கள், 1921ல் சென்னை, பச்சையப்பன் கல்லுாரியில் ஒன்று கூடி, தமிழர்களுக்கென்று ஒரு தனி ஆண்டு தேவை எனக் கருதி, அய்யன் திருவள்ளுவர் பெயரில், தொடர் ஆண்டு ஒன்றை பின்பற்றுவதென்றும், அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு., 31 என்றும், அதையே தாம் ஏற்று நடைமுறைப்படுத்தியதாகவும் பதில் சொல்கிறார்.- (பக் 39, 2008ம் ஆண்டு தமிழக கவர்னர் சட்டசபை உரை)

வரலாற்று திரிபு

கடந்த, 1921ல் மறைமலை அடிகள் தலைமையில், 500க்கும் மேற்பட்ட புலவர்கள் கூடி எடுத்த திருவள்ளுவர் ஆண்டு பற்றிய முடிவு, அண்ணாதுரைக்கு தெரியாமல் போனது விந்தையே! அந்த அளவிற்கு தான், அண்ணாதுரைக்கு தமிழ் உணர்வு இருந்தது என, எடுத்துக் கொள்ளலாமா? முடியாது. ஏனெனில், மறைமலை அடிகள் தலைமையில் கூடிய கூட்டத்தை அண்ணாதுரை முழுமையாக அறிந்திருந்தார்; ஆதரித்தார். கருணாநிதி அதுபற்றி அறியவில்லை. கருணாநிதி அந்தக் காலத்திலேயே பலர் அறியாதவராகவே இருந்தார்.

இங்கே தான், கருணாநிதி தம் கைவண்ணத்தை காட்டி, அண்ணாதுரையை ஒரு பொருட்டாகவே கருதாமல், அவர் பெயரில் ஆட்சி செய்கிறேன் என்று சொல்லி, வரலாற்று திரிபு ஒன்றைச் செய்கிறார். வாசகர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய இடம் இது.

கடந்த, 1921ல் மறைமலை அடிகள் தலைமையில், பச்சையப்பன் கல்லுாரி மண்டபத்தில், 500க்கும் மேற்பட்ட புலவர்கள் கூடி, திருவள்ளுவர் ஆண்டு பற்றி முடிவெடுத்தனர் என்பது உண்மைக்கு புறம்பானது; பொய் எனவும் கூறலாம்.கடந்த, 1921 ஜனவரி மாதத்தில் அடிகளார், இலங்கை பயணத்தில் இருந்தார் என, அடிகளார் மகன் மறை திருநாவுக்கரசு கூறுகிறார். இதை விடுத்து, நடந்த வரலாற்றை பார்ப்போம்.

உலகறியச் செய்தவர்

திருவள்ளுவருக்குப் பிறந்த நாள் கொண்டாடும் நோக்கில், 1935ம் ஆண்டு, ஜனவரியில், பேராசிரியர் கா.நமச்சிவாய முதலியார் தலைமையில், பத்மஸ்ரீ வ.சுப்பையா பிள்ளையும், காழி.சிவக்கண்ணு பிள்ளையும், இன்னும் சிலருடன் சேர்ந்து, ‘திருவள்ளுவர் திருநாட் கழகம்’ அமைப்பை தோற்றுவித்தனர்.திருவள்ளுவர் இந்த ஆண்டில், இந்த மாதத்தில், இந்த நாளில் பிறந்தார் என்பது அவர்களுக்கு தெரியுமா என்ற கேள்விக்கு சரியான பதில் அவர்களுக்கு தெரியாது. மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவிலில் கொண்டாடப்படும் நாளைப் பின்பற்றி, பிறந்த நாள் கொண்டாட முடிவு செய்தனர்.கோவில், 400 ஆண்டுகளாக இருக்க வேண்டும் என, தொல்லியல் துறை வல்லுனர்கள் கூறினர்.

கடந்த, 1810 – 1819 சென்னை ஆட்சியராகவும், பண்டாரச் சாலையின் தலைவராகவும் இருந்த, சர் பிரான்சிட் ஒயிட் எல்லிஸ், திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளையும் கற்றார்.எல்லிஸ் தான், திருவள்ளுவரை உலகறியச் செய்தவர். ராயப்பேட்டை, பெரிய பாளையத்தம்மன் கோவில் கிணற்றின் கைப்பிடி சுவரில், இவர் வெட்டி வைத்த கல்வெட்டில், மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவில் பற்றிய குறிப்பு உள்ளது.’சென்னை பட்டணத்து எல்லீசு என்பான்பண்டார காரியம் பாரம் சுமக்கையில்புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான்தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்திருக்குறளினில் திருவுளம் பற்றி’ என்ற கல்வெட்டில், மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவில் செய்தி காணப்படுவதை அறியலாம்.

எல்லிஸ் காலத்தை மட்டும் கொண்டால் கூட, 210 ஆண்டுகளுக்கு முன்பாகிறது. எல்லிஸ் காலத்தில் திருவள்ளுவர் கோவிலில், திருவள்ளுவர் அவதார தினமாக வைகாசி அனுஷ நட்சத்திர நாளும், அவர் அடைந்து போன நாளாக, மாசி உத்திர நட்சத்திர நாளும் கடைப்பிடிக்கப் பட்டிருக்கிறது. எல்லிஸ் வருவதற்கு, 100 ஆண்டுகளுக்கு முன், திருவள்ளுவர் கோவில் கட்டப்பட்டது என வைத்துக் கொண்டால், 300 ஆண்டுகளாக அக்கோவில் உள்ளது.

திருக்கோவில் ஆவணத்தில் திருவள்ளுவராண்டு காணப்படவில்லை. கோவில் பூஜை முறை களும், நடைமுறைகளுமே கோவில் ஆவணத்தில் இருக்கும். ஆண்டு முதலான கல்வெட்டு சான்றுகளை கொண்டு கணக்கிடுவர்.தற்போதும் மயிலை திருவள்ளுவர் கோவிலில், திருவள்ளுவர் அவதார தினம் வைகாசி அனுஷம் என்றும், அடைந்து போன நாள், மாசி உத்திரம் என்றும் கொண்டே, பூஜா காரியங்கள் நடைபெறுகின்றன.

இந்த நடைமுறையையே திருவள்ளுவர் திருநாட் கழகத்தினர் ஏற்று, 1935ம் ஆண்டு மே திங்கள், 18, 19 ஆகிய இரு நாட்களில், சென்னை பச்சையப்பன் மண்டபத்தில், தமிழகத்தின் பெரும்புலவர் களை வரவழைத்து, மறைமலை அடிகள் தலைமையில் பெரும் கூட்டம் கூட்டி, திருவள்ளுவரின் பிறந்த நாளை கொண்டாடினர். மே, 18 வைகாசி அனுஷ நாள்.

ஆண்டு பற்றி குறிப்பிடவில்லை

இந்த கூட்டத்தை தான், 1921ல் கூடிய கூட்டம் என பிறகு உணர்ந்து கொண்டார் கருணாநிதி. மேலும், இந்த கூட்டத்தில் தலைமையேற்ற மறைமலை அடிகள், தன் பேச்சின் ஊடே, ‘திருவள்ளுவர், கிறிஸ்துவுக்கு, 31 ஆண்டுகள் முன் தோன்றியவர் என, ஆய்வு செய்துள்ளேன்’ என்று சொல்லிச் சென்றார்.தாம் கூறிய ஆண்டு பற்றி, மறைமலை அடிகள் விவாதிக்கவில்லை; வலியுறுத்தவும் இல்லை. போகிற போக்குச் செய்தியாக தான் சொன்னார். திருவள்ளுவர் திருநாட் கழகத்தினர் இயற்றிய தீர்மானங்களில் ஆண்டு பற்றி குறிப்பிடவில்லை.

மறைமலை அடிகள் வைகாசி அனுஷத்தை, திருவள்ளுவர் பிறந்த நாளாக பெற்றுக் கொண்டவர். அதனால் தான், அந்த கூட்டத்திற்கு தலைமையேற்றார்.மறைமலை அடிகளை தவிர, அக்கால தமிழ்ச் சான்றோர் அனைவரும், வைகாசி அனுஷ நட்சத்திர நாளை ஏற்றுக் கொண்டனர். அவ்வாறு ஏற்றுக் கொண்ட பெருமக்களில் சிலர் பெயர்களை தருகிறேன்.டாக்டர் உ.வே.சா., சிவ கவிமணி சுப்பிரமணிய முதலியார், திரு.வி.க., வையாபுரி பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார், கி.வா.ஜ., அ.ச.ஞானசம்பந்தம், சி.இலக்குவனார், கா.பொ.ரத்தினம், டாக்டர் மு.வ., ஆகியோர்.

தவறான செய்தி

மேலும், தவத்திரு குன்றக்குடி மகாசன்னிதானம், திருவாவடுதுறை சன்னிதானம், தருமபுர சன்னிதானம், காஞ்சி பெரியவர், ஓமந்துாரார், மா.பொ.சி., சி.சுப்பிரமணியம், எம்.பக்தவத்சலம், அமைச்சர் முத்தையா முதலியார், ஈ.வெ.ரா., ஆகியோரும் அடங்குவர்.இதில், ஒரு சுவாரஸ்யமான செய்தி உண்டு. பச்சையப்பன் மண்டபத்தில் நடந்த கூட்டத்தன்றே, சென்னை ஏழு கிணறு, வாலிபர் சங்கம் சார்பில், அறிஞர் அண்ணாதுரை தலைமையில், திருவள்ளுவரின் அனுஷ நாள் கொண்டாடப்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் அறியாத கருணாநிதி, யாரோ சொல்லிய தவறான செய்தியைக் கொண்டு, 1921 எனக் குறித்துள்ளார். எது எப்படியோ, கருணாநிதியால் திருவள்ளுவராண்டு அறிமுகப்படுத்தப் பட்டது; நாம் அனைவரும் அதை ஏற்றுக் கொண்டோம். இன்றும் தமிழக அரசும், தமிழ் உணர்வாளர்களும் திருவள்ளுவராண்டை கடைப்பிடித்து வருகின்றனர்.

திருவள்ளுவர் ஆண்டை அறிமுகப்படுத்திய கருணாநிதி, என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அண்ணாதுரை, மறைமலை அடிகள் முதலான அனைவரையும் துாக்கி எறிந்து, 300 ஆண்டு வழக்கத்தையும் துச்சமென மதித்து, தை மாதம் இரண்டாம் நாள், மாட்டுப் பொங்கல் அன்று திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படும் என்றும், இதுவே தமிழ்ப் புத்தாண்டு துவக்கம் எனவும், 2008ல் அறிவித்தார்.

பெரிய குழப்பம்

மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தினார். புத்தாண்டு துவக்கம் பற்றி வழக்கு போடப்பட்டது. நீதிமன்றம் கேட்ட மூன்று கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க முடியாமல், ‘வாய்தா’ வாங்கிய படியே சென்றது.இந்நிலையில், ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றார். உடனடியாக கருணாநிதியின் தை மாதம் ஆண்டு பிறப்பு என்பதை நீக்கி, பழையபடி சித்திரையே, தமிழ் ஆண்டு பிறப்பு என அறிவித்தார்.

திருவள்ளுவர் தினத்தையும் மாற்றுகிறேன் என்று சொன்னார். சொல்லியதை செயல்படுத்த முடியாமல் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அது பெரும் குறையே! அதிகாரம் இருக்கிறது என்பதாலேயே மரபுகளை மீறினால், சட்டம் மற்றும் சம்பிரதாய முறைகளை மீறினால், அது சமூக கேட்டையே விளைவிக்கும் என்பதை, கருணாநிதியின் செயல் மூலம் அறியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *